நண்பர் ஆசிரியர் ஜோசப் விஜூ (http://oomaikkanavugal.blogspot.com
ஊமைக்கனவுகள்)
அவர்களது வலைத்தளத்தினை முதன்முதல் கண்டபோது, அங்கு முகப்பில் " யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால்" – என்ற வரியைக் கண்டவுடன், இதை எங்கோ படித்த நினைவுக்கு வந்தது. ஆனால் சட்டென்று எதில் என்று நினைவில் வரவில்லை. அப்புறம், கூகிள் தேடலுக்குப் பின்தான், நான் பி.ஏ (தமிழ் இலக்கியம்) படிக்கும்போது இலக்கண வகுப்பில் படித்த ‘யாப்பருங்கலக் காரிகை” என்ற இலக்கண நூலின் பாயிரம் என்று நினைவுக்கு வந்தது.
பாயிரம்
இப்போது நூலாசிரியர்கள், நூலின் முன்னுரையாக எழுதுவது போல, அக்காலப் புலவர்கள் தாம் படைத்திட்ட (செய்யுள் வடிவ) நூல்களுக்கு முன்னுரையாக செய்யுள் ஒன்றை வைப்பது வழக்கம். அது பாயிரம் எனப்படும்.
யாப்பருங்கலக்காரிகை
என்ற இலக்கண நூலின் ஆசிரியர் அமுதசாகரர். இவர் ஒரு சமணத் துறவி. இவர் அவையடக்கமாக,
தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீரருவிக்
கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா வறிவின வர்கட்கென் னாங்கொலெ னாதரவே!
என்று சொல்லுகிறார். இதன் சுருக்கமான பொருள் – “அகத்தியன் சொல்ல பாண்டிய மன்னன் கேட்ட கன்னித்தமிழ் இலக்கண நூலை நான் சொல்லுகிறேன் என்பது எனக்கே நகைப்பாக இருக்கிறது” என்பதாகும். ‘யானா நடத்துகின்றேன்’ என்பதற்கு, ”நானா இதனைச் செய்கின்றேன் ; எல்லாம் அவன் செயல்; அதுவாகவே நடக்கின்றது” - என்றும் பொருள் கொள்ளலாம்.
அவையடக்கம்:
கம்பராமாயணத்தில்,
கம்பன் தன்னடக்கமாக,
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!
என்று (கம்பராமாயணம் - பால காண்டம் (அவையடக்கம்) சொல்லுவார். ”பாற்கடலை நோக்கிய ஒரு பூனை அதனை ஆசையுடன் நக்கியது போன்றே நானும் இராமன் கதையை எனது ஆசையின் காரணமாக சொல்லுகிறேன்” என்பது இதன் பொருள்.
ஜோசப் விஜூ:
நண்பர் ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்கள் தனது வலைத் தளத்தில் ”யானா நடாத்துகின்றேன்” என்று தன்னடக்கமாகச் சொன்னாலும், அவர் பல கடினமான விஷயங்களை எளிதாக மற்றவர்களுக்கு சொல்லும் விதம் பாராட்டத்தக்கதே ஆகும்.
பாடல் புனைவது அதிலும்
வெண்பா பற்றி ஆசிரியர் சொன்ன விளக்கம் வலைப்பதிவில், பலரை மரபுக் கவிதை
எழுத வைத்தது. யாப்புச்
சூக்குமம்
என்ற இந்த பதிவை
மறக்க முடியுமா?
’ப்ளாக்’ எனப்படும் வலைப்பதிவிற்கு பின்னூட்டம் எழுதுவதற்கு ஏதேனும் விதிமுறைகள் உண்டா என்று ஒருவர் வினவ, நமது ஆசிரியர் பின்னூட்டம்
இடுவோர்
கவனத்திற்கு…!
என்ற பதிவினுள்
”எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் … …” என்று தொடங்கும் நன்னூல் விதியினைப் பொருத்தி திறம்பட விளக்குகிறார். நன்னூலின் இந்த சூத்திரத்திற்கு விளக்கமாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
’ங
ப்போல் வளை” என்ற ஆத்திச்சூடி வரிக்கு,
இவர் சொன்ன விளக்கம் (‘ங்‘ சொல்வது
என்ன?)
போன்று வேறு யாராலும் சொல்ல இயலாது. இதனைப்
பாராட்டி விடை
தெரியாத
கேள்விக்கு
விடை என்று நானே ஒரு பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன்.
இவ்வாறு பல இலக்கிய இலக்கண மேற்கோள்களை, அவர்தம் வலைப்பதிவிலிருந்து எடுத்துக் காட்டலாம்.
படிக்காசு புலவர் எனப்படும் படிக்காசு தம்பிரான் என்ற புலவருக்கு, தம் காலத்தில் இருந்த காப்பி – பேஸ்டு புலவர்கள், போலிப் புலவர்கள், அரைகுறை இலக்கணப் புலவர்கள் மீது தீராத கோபம். இந்த புலவர்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் யாரும் இல்லையே என்ற ஆதங்கத்தில் அவர் ஒரு பாடல் எழுதி வைத்து iஇருக்கிறார்.
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய
னிங்கில்லை
குரும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை
இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்த னில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே!
குரும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை
இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்த னில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே!
என்ற அவரது பாடலில் வரும் பாண்டியன் போல, தமிழ் வலையுலகில் தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிய பதிவுகளில் எதேனும் குற்றம் இருப்பின் சுட்டிக் காட்டுவது ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களது இயல்பு.
தொடரட்டும் அவர் தமிழ்த் தொண்டு.
தொடரட்டும் அவர் தமிழ்த் தொண்டு.
ReplyDeleteதங்களது முடிவுரை கருத்தையே
எனது முன்னுரை கருத்தாய் பதித்து
முதல் தமிழ் மண வாக்கினை அளித்து
வாழ்த்துகிறேன்!
வாழ்க வளமுடன்!
நட்புடன்,
புதுவை வேலு
நண்பர் யாதவன் நம்பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எல்லா வாழ்த்துக்களும் அவருக்கே.
Deleteவளரட்டும் ஜோசப் விஜூ அவர்களின் தமிழ்த் தொண்டு!..
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete//வெண்பா பற்றி ஆசிரியர் சொன்ன விளக்கம் வலைப்பதிவில்,பலரை மரபுக் கவிதை எழுத வைத்தது.//
ReplyDeleteஇதில் நானும் அடக்கம். மிக எளிதாக வெண்பா புனைய அவர் சொல்லியிருக்கும் சூக்குமங்கள் இதுவரை யாராலும் சொல்லப்படாதவை.
திரு ஜோசப் விஜூ அவர்களின் பதிவு அறிமுகமானது தங்களின் பதிவின் மூலம் என்பதால் தங்களுக்கு நன்றிகள் பல!
தங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் தொடரட்டும் அவரது தமிழ்த் தொண்டு என்று.
அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் கருத்துரையைப் படித்ததும் உங்களோடு செல் போனில் உரையாடிய மகிழ்வான நினைவலைகள் நினைவுக்கு வந்தன.
Deleteவணக்கம் அய்யா,
ReplyDeleteதங்கள் விளக்கம் மிகச்சரியே, வியந்து நோக்கினேன் அவரை,,,,,,,,,, பாடல் வரிகள் துறைச்சாரா ஒருவர் எடுத்தாலும் திறம் கண்டு வியந்து போனேன்,
நான் நிறைய எழுதனும் என்று வலையூலகில் நினைத்த இடங்கள் எல்லாம் அவர் தொட்டு,,,,,,,,,,,
அவர் போல் சொல்ல மடியுமா என்ற பயம் இப்போ,,,,,,,
அவரின் அலசல்கள் இன்னும் என்னை ஆச்சிரியத்திலே,, வைத்துள்ளது,
தங்கள் பார்வை அருமை,
வாழ்த்துக்கள், நன்றி.
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் அவர் போல எழுத வேண்டாம். எழுதுவதில் உங்களுக்கென்று ஒரு பாணியில் எழுதுங்கள். (இயல்பாகவே வந்து விடும்)
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘ஊமைக்கனவுகள்’ அய்யா பற்றி தாங்கள் ஆராய்ந்து சொல்லியதெல்லாம் உண்மை.
-மிக்க நன்றி.
த.ம.2
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களே! உடலும் உள்ளமும் நலந்தானா? கருத்துரை தந்தமைக்கு நன்றி.
Delete''..தமிழ் வலையுலகில் தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிய பதிவுகளில் எதேனும் குற்றம் இருப்பின் சுட்டிக் காட்டுவது ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களது இயல்பு...'''
ReplyDelete''...தமிழ் வலையுலகில் தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிய பதிவுகளில் எதேனும் குற்றம் இருப்பின் சுட்டிக் காட்டுவது ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களது இயல்பு...''
ReplyDeleteதங்கள் இந்தப் பதிவின் மூலம் இவரின்
3 பதிவுகள் வாசித்துக் கருத்திட்டேன்.
நான் எத்தனை நல்ல பதிவுகளைத் தவற விடுகிறேன் என்பது புரிந்தது.
மிக்க நன்றி அந்த இணைப்புகளைத் தந்ததற்கு.
சகோதரி கவிஞர் அவர்களின் கருத்துரைக்கும், ஆசிரியர் அவர்களது பதிவுகளில் கருத்துரை தந்தமைக்கும் நன்றி!
Deleteஅவரின் ஒவ்வொரு தேடலும் வியக்க வைக்கிறது... குறள் விளக்கத்திற்கான உரைக்கு உரை விளக்கம், அதில் மிகவும் சிறப்பு... ஜோசப் விஜூ ஐயா அவர்களின் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துகள்...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
Deleteவிஜூ அண்ணாவை பற்றிய உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் அட்சர லட்சம் பெறும் அண்ணா! அவருக்குத்தான் என்னவொரு தமிழ்த் தேடல்!!! இப்படி ஒருவர் தமிழாசிரியரும் இல்லை என்பதும், அவர் ஆங்கில ஆசிரியர் என்பது எப்பேர்பட்ட வியப்பு!!
ReplyDeleteசகோதரி மகிழ்நிறை அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteஅழகான தமிழ்த்தொண்டு செய்யும் ஜோசப் விஜூ அவர்களைப் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் தந்து, அவருடைய வேட்கையை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. அவருடைய இவ்வாறான வேட்கைக்குக் காரணம் அவர் தமிழாசிரியர் இல்லாததால்தான் என்று நான் நினைக்கிறேன்.
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த பதிவினில் ஆசிரியர் ஜோசப் விஜு அவர்களை ஆங்கில ஆசிரியர் என்பதனை சொல்ல மறந்து விட்டேன். புதுக்கோட்டையில் அவரோடு எடுத்த குரூப் போட்டோவும் இருக்கிறது. ஆனாலும் அவர் அதனை விரும்ப மாட்டார் என்பதால் வெளியிட வில்லை.
Deleteஐயா,
ReplyDeleteதங்கள் தளத்தில் என்னைப் பற்றிய பதிவிடும் அளவிற்கு என் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பினை நினைந்து உணர்வு வயப்படுகிறேன். தலை வணங்குகிறேன்.
அதே நேரம் அச்சமும் கூச்சமும் ஒருங்கே என்னைப் பீடிக்கின்றன.
இணையத்தில் இத்துணைப் பெரும்புலமையோர் இருக்கிறீர்கள், பல்துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள்.. எல்லாரையும் பார்க்க நான் மிகச் சிறியவன்.
அவர்களைப் போன்றோர்களிடமிருந்து இப்பிறவியில் நிறைவுறா அளவிற்குக் கற்க எவ்வளவோ இருக்கின்றன. இது ஒருபோதும் தன்னடக்கமன்று.
இது போன்று பெரும் வாசகப்பரப்பை ஈர்த்திருக்கக் கூடிய தங்களின் தளத்தில் முகமில்லாதவனுக்கான முகவரியாய், என்னைப் பற்றி எழுதியதை நானே படிக்க உண்மையிலேயே எனக்குக் கூச்சமாய் இருக்கிறது.
“யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகைதருமால்“ என்ற முகப்பு வாசகம்,
‘இந்தப் பணியைச் செய்யப் போவது நானா என நினைக்க எனக்கே சிரிப்பு வருகிறதே...
கற்றறிந்தவர்கள் இதைப் படிக்க அவர்களுக்கு எப்படி இருக்கும்?’
என்னும் பொருள் கருதி காரிகை வரிகளை அமைத்துக் கொண்டதுதான்.
பிள்ளைப் பாண்டியன் என்றெல்லாம் இப்போது போய்த் தலையில் குட்டிட முடியாது ஐயா.
பெரும்பாலும் மிகத் தெரிந்தவர்கள் தளத்திலும், பிழைகள் சுட்டுமாறு தெரிவித்திருக்கும் தளத்திலும எனக்குத் தெரிந்ததை எப்போதேனும் கூறியிருக்கிறேன்.
தவிர,
காணுமிடத்தில் எல்லாம் பிழைதிருத்திப் போவதில்லை.
என் பதிவிலும் பிழைகள் இருக்கின்றன என்பது எதார்த்தம். ஆயினும் என் மொழியைத் தவறில்லாமல் பயன்படுத்துபவனாய் இருக்க வேண்டும் எனவே பெரிதும் விரும்புகிறேன்.
உங்களுக்கும் இங்கு வந்து பின்னூட்டமிட்ட அத்துணை பேருக்கும் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.
மனம் கனக்கச் சொல்கிறேன். இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.
வாருங்கள்.
என்னை நெறிப்படுத்துங்கள்.
உங்களின் கருத்துகள் எதுவானாலும் அது என்னை என்றும் மேம்படுத்தும்.
அதுவே நீங்கள் எனக்களிக்கும் ஊக்கமும் உதவியும்.
என்றும் நன்றியுடன் இருப்பேன்.
வணக்கம்.
>>> ஆயினும், என் மொழியைத் தவறில்லாமல் பயன்படுத்துபவனாய் இருக்க வேண்டும் எனவே பெரிதும் விரும்புகிறேன்.<<<
Deleteசிறப்பு.. வெகு சிறப்பு.. என் நெஞ்சில் இருப்பதுவும் அதுவே!..
வாழ்க நலம்!..
கருத்துரை தந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி!
Deleteஇப்போது நிறைய வலைப்பதிவு நண்பர்கள் ”பேஸ்புக்கில்’ முகத்தை புதைத்துக் கொண்டு வலைப்பக்கம் வருவதே இல்லை. சிலர்தான் அடிக்கடி எழுதுகிறார்கள். பயனுள்ள கருத்துக்களை சுவையாகச் சொல்பவர்களில் (குறிப்பாக தமிழ் உணர்வோடு) நீங்களும் ஒருவர். உங்களைப் போன்றவர்களை உற்சாகப் படுத்த வேண்டும், மற்றவர்களையும் எழுதச் சொல்ல வேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கம். தொடர்ந்து மற்றவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.
// என்னை நெறிப்படுத்துங்கள்.
உங்களின் கருத்துகள் எதுவானாலும் அது என்னை என்றும் மேம்படுத்தும்.
அதுவே நீங்கள் எனக்களிக்கும் ஊக்கமும் உதவியும். //
நிச்சயமாக! மூத்தவர்களும் மற்றவர்களும் உங்களுக்கு உற்சாகம் தருபவர்களாகவே இருக்கிறார்கள்.
//மனம் கனக்கச் சொல்கிறேன். இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.//
Deleteசரி சகோ, நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்கின்றோம் பல ...அதற்கு என்ன கைமாறு செய்ய?!! கணக்கு சரியாகிவிட்டதல்லவா சகோ!! நம் எல்லோருக்குள்ளும், ஒருவருக்கொருவர் அறிவும், அன்பும் பரிமாறப்பட்டு வலையுலகம் தமிழை உயிர்ப்பித்து, ஒற்றுமையுடன் ஓங்கட்டும்! சகோ! நீங்கள் தொடருங்கள் உங்கள் பணியை. நாங்கள் எல்லோருமே உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தருவோம்....எங்கள் எல்லோரது அன்பான ஆதரவும் உண்டு சகோ!
மனதார வாழ்த்துகின்றோம் இளங்கோ ஐயாவுடன் சேர்ந்து!
புத்தகம் ஆர்வம் கொண்டு படிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு ஆனாலும் படிப்பதில் உள்ள நல்ல கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லும் ஆசிரியரின் பாங்கு பாராட்டுக்குரியது. என் போன்றவர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
ReplyDeleteகருத்துரை தந்த சகோதரி கவிஞர் – ’தென்றல்’ சசிகலா அவர்களுக்கு நன்றி. ஆசிரியரின் வலைத்தளம் சென்று அவர்களுக்கு பாராட்டு தெரிவிங்கள்.
Deleteஅரைகுறையாய்த் தமிழறிந்து
ReplyDeleteஎழுத்து என எதை எதையோ பினாத்திக் கொண்டிருக்கும்
எனக்கு அவரின் பதிவினைப் போல
சில பதிவர்களின் வலைத் தளங்கள் தான்
வழிகாட்டும் விளக்குகள்
அற்புதமாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 9
ReplyDeleteகவிஞர் அய்யாவின் ஆழமான கருத்துரைக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
உமைக்கனவுகள் ஐயா பற்றி சொல்லிய ஒவ்வொரு தகவலும் உண்மைதான் ஐயா தேடலின் சிகரம் என்றுதான் சொல்லமுடியும் தங்களின் பார்வையில் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
Deleteஉண்மைதான் இளங்கோ! தொடரட்டும் அவர் தமிழ்த் தொண்டு.நாமும் தொடர்வோம்!
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteஊமைக் கனவுகள் என்பதைவிட நான் காண விரும்பும் உண்மைக் கனவுகள் அய்யா ,அவரின் எளிமையாய் புரிய வைக்கும் தமிழ்ப் புலமை !
ReplyDeleteஊமைக்கனவுகள் > உண்மைக் கனவுகள் என்று அருமையாகச் சொன்னீர்கள். ’ஜோக்காளி’ பகவான்ஜீ கே.ஏ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteதோழர் விஜு அவர்களின் தமிழ்ப்பதிவுகளின் ரசிகன் நான்! அவரது ஆழ்ந்த தேடல் மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கும் அதை அவர் எளிமைப்படுத்தி நம்மிடம் தருகையில் தமிழ் எல்லோருக்கும் இனிக்கிறது!
ReplyDeleteசகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteஊமைக் க்ன்வுகள் தளத்தை என் டாஷ் போர்டில் வருமாறு இணைத்திருப்பவன் நான் நன்றாக எழுதுபவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் நானா நடாத்துகின்றேன் என்பது எனக்கென்னவோ தேவையில்லாத தன்னடக்கம் என்றே தோன்றுகிறது,எனக்கென்னவோ ஒருவரது செயல்கள் அனைத்துக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்தான் தேடுகிறார், வாசிக்கிறார் பகிர்கிறார். குணங்களுக்கும் குற்றங்களுக்கும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் . அது ஜோசப் விஜு அவர்களுக்கும் தெரியும்/ இது யாப்பருங்கலக் காரிகையில் வரும் வாசகம் என்று இப்போது தெரிந்து கொண்டேன் . நன்றி.
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி
Delete// ஆனால் நானா நடாத்துகின்றேன் என்பது எனக்கென்னவோ தேவையில்லாத தன்னடக்கம் என்றே தோன்றுகிறது,//
அவர் ரொம்ப ரொம்ப தன்னடக்கம் மிகுந்தவர் என்பதில் சந்தேகமே வேண்டாம். சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற இணையப் பயிற்சிக்கு வந்திருந்தார்; அவரோடு அதிகம் பேச முடியவில்லை. எனக்கு அவர் வந்ததும் தெரியாது பயிற்சி முடிந்ததும் திரும்பியதும் தெரியாது.
//எனக்கென்னவோ ஒருவரது செயல்கள் அனைத்துக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்தான் தேடுகிறார், வாசிக்கிறார் பகிர்கிறார். குணங்களுக்கும் குற்றங்களுக்கும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் அது ஜோசப் விஜு அவர்களுக்கும் தெரியும்///
நானா நடாத்துகின்றேன் என்பது பேச்சு வழக்கில் எல்லாம் அவன் செயல் என்று சொல்வதைப் போல ஒரு மரபுதான். எல்லோருடைய கருத்துக்களுக்கும் அவரவர்தான் பொறுப்பு. அவர் இதுபற்றி ஏதும் சொன்னதாக நினைவில் இல்லை.
ஐயா வணக்கம்! ஊமைக்கனவுகள் சகோதரர் குறித்துத் தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. யாப்பு சூக்குமம் படித்து நான் கூட வெண்பா இலக்கணம் கற்றுக்கொண்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!. அத்துணை எளிமையாய் விளக்கியிருந்தார். அது என்னால் முடியவே முடியாது என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆழமும் அகலமும் கொண்ட அவர் வாசிப்புத்திறன் கண்டு வியந்து போகிறேன், சின்ன வயதில் இவ்வளவு ஆழமான தேடலா என்று. தொடர்ந்து அவர் பதிவுகளை வாசிக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை. நம் தமிழின் பெருமைகள் பற்றி அவர் எழுதும் பதிவுகள் இன்னும் பலரைச் சென்றடையவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவர் தளங்குறித்துத் தனிப்பதிவு போட்டிருக்கும் உங்களுக்கு நன்றி.
ReplyDeleteசகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
Delete// ஐயா வணக்கம்! ஊமைக்கனவுகள் சகோதரர் குறித்துத் தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. யாப்பு சூக்குமம் படித்து நான் கூட வெண்பா இலக்கணம் கற்றுக்கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!. அத்துணை எளிமையாய் விளக்கியிருந்தார். அது என்னால் முடியவே முடியாது என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன்//
நல்லது சகோதரி. இதுபோன்ற பல பதிவுகளை அவர் எழுத வேண்டும் என்பது எனது அவா.
வணக்கம் சகோதரரே ! நலம் தானே ? viju அவர்கள் ஒரு நிறைகுடம் அது தான் தளம்பாமல் இருக்கிறார். அவர் பதிவுகளை பார்க்க பார்க்க தமிழ் பற்று அதிகமாகிறது. அவர் மீது அன்பும் மரியாதையும் மிகுகிறது. நாம் காலத்தில் இப்படி ஒருவரை நாம் சந்திதிக்கும் வாய்ப்பு கிடைத்ததை யி ட்டு பெரு மகிழ்ச்சியே அவர் புகழ் ஓங்கட்டும். இப்பதிவை இட்ட தங்கள் பெரும் தன்மை கண்டு மிகவும் நெகிழ்கிறேன் மகிழ்கிறேன். பதிவுக்கு நன்றி சகோ ! வாழ்க வளமுடன் ....!
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு வணக்கம்! நலமே! தங்களின் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
Deleteஅத்தனையும் மிக மிகச் சரியே! நிறைகுடத்தைப் பற்றி தாங்கள் இங்குப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி! அவரைப் பற்றி இத்தனை பேர் சொல்லிய பிறகு, நாங்கள் சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை! அவர் ஆங்கிலத்திலும் கெட்டிக்காரர் ....தமிழைப் போல்...அவர் நமக்குக் கற்றுத் தருவதற்குத் தேடலைத் தொடர்வது போல் நாம் அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளைத் தேடவேண்டும்....நாங்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கின்றோம்...நாம் எல்லோருமேதான்.....இணையத்தில் ஒரு நல்ல ஆசிரியரைப் பெற்றோம் இல்லையா?!!! அதுவும் நமது காலகட்டத்தில், நாம் அவருடன் தொடர்பு கொள்ளும் நிலையில்...நாங்கள் அவரது ரசிகர்களும் கூட...அவர் வாழ்வாங்கு வாழ்ந்து நம் எல்லோரையும் அவரது பதிவுகளால், அறிவால், தமிழால், அன்பால் நம்மை மகிழ்விக்க வாழ்த்துவோம்.!! தங்களுக்கும் வாழ்த்துகள் ஐயா!
ReplyDelete// இணையத்தில் ஒரு நல்ல ஆசிரியரைப் பெற்றோம் இல்லையா?!!! அதுவும் நமது காலகட்டத்தில் //
Deleteஆம் சகோதர சகோதரியரே! உண்மைதான். இருவருக்கும் நன்றி!