Tuesday, 28 July 2015

பவுனுக்கு மூன்று மூட்டை நெல்



அந்த காலத்து பெரியவர்கள், அப்போது சிறுவனாக இருந்த என்னிடம் பேசும்போது “அந்த காலத்திலே பவுனு விலை …. … ” என்று இழுத்து அவர் காலத்து பெருமைகளை எல்லாம் பேசுவார்கள். அதில் பவுனு (தங்கத்தின்) விலை இந்த காலத்தை விட குறைவாக இருந்ததாகவும், விலைவாசிகள் எல்லாம் ரொம்பவும் குறைந்து மக்கள் எல்லோரும் சுபிட்சமாக இருந்ததைப் போலவும் சொல்லுவார்கள். அன்று சிறுவனாக இருந்த நான் இன்றுள்ள சிறுவர்கள் மத்தியில் பெரிசு ஆகி விட்டேன். எனக்கும் ’அந்தக் காலத்திலே’ என்று அவ்வப்போது சொல்லத் தோன்றும். எனது காலத்தில் 10 காசுக்கு ஒரு டீயும். (இங்கு காசு என்றால் பைசாவைக் குறிக்கும்) 15 காசுக்கு ஒரு தோசையும் சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

தங்கத்தின் விலை:

அந்த காலத்து பெரியவர்கள் அந்த காலத்து தங்கம் விலை குறைவாக இருந்தது என்று சொன்னாலும் நாளுக்கு நாள் அதன் விலை, இன்று வரை உயர்ந்து வருவதைக் காண்கின்றோம். இதனை கருத்தில் கொண்டு ” http://tthamizhelango.blogspot.com/2012/10/86.html தங்கம் விலை – 86 வருட பட்டியல். “ என்று ஒரு பதிவினை எழுதினேன். அப்போது கூகிளில் (GOOGLE) கிடைத்த ஒரு பட்டியலை இணைத்தேன்.
 ( அதற்கப்புறம் அதைப் பார்த்த பலர் , தங்கள் பதிவுகளிலும் வெளியிட்டுக் கொண்டனர் என்பது வேறு விஷயம் ). அந்த பதிவினைப் பார்க்காதவர்களுக்காக மீண்டும் அந்த பட்டியல் கீழே.
 
தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம்


இவரைப் பற்றி இந்த காலத்து பிள்ளைகளுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அறுபதிற்கு முன்பு பிறந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பு அதிகம். அந்தக் கால தமிழறிஞர். நான் இருக்கும் திருச்சிக்காரர். பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் நண்பர். பெரியாரைப் போன்றே சிக்கனமானவர். முத்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்பட்ட இவர் இந்தி எதிர்ப்பு கொள்கையில் தீவிரமானவர்; பெரியாரோடு சேர்ந்து போராட்டம் செய்தவர். சித்த மருத்துவம் தெரிந்தவர்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய நூல்கள் பலவற்றை எனது அப்பா வைத்து இருந்தார். பள்ளிப் பருவத்தில் எல்லாவற்றையும் படித்து இருக்கிறேன். அவற்றுள் ”ஆறு செல்வங்கள்“  என்ற நூலும் ஒன்று. அதில்தான், அவர் ”எந்தப் பொருளும் விலை ஏறவில்லை. விலைவாசி அப்படியேதான் இருக்கிறது ‘ என்ற கருத்தினை முன் வைக்கிறார். அவர் சொல்வதை கேளுங்கள்.
(ஆறு செல்வங்கள், பக்கம் 31 – 33) நூலில் இருப்பதை அப்படியே தட்டச்சு செய்துள்ளேன். 



/// முன் வெள்ளியிலும் தங்கத்திலும் அச்சிடப்பெற்ற நாணயங்களின் உள் மதிப்பும் வெளி மதிப்பும் ஒன்றாகவே இருந்தன. காகிதப் பணம் அப்படியல்ல.அது பெருகப் பெருக அதன் மதிப்புக் குறையும். மதிப்புக் குறைய குறைய ஒரு பொருளுக்கு அதிக காகிதப் பணம் கொடுக்க வேண்டி வரும். அதைக் காண்பவர் பொருள்களின் விலை ஏறி விட்டதாகக் கூறுவர். இது தவறான கருத்து.

உண்மை என்னவெனில் 1931 முதல் இன்று வரை கடந்த 30 ஆண்டுகளாக எந்தப் பொருளும் விலை ஏறவில்லை என்பதே. அன்றைக்கும் பவுனுக்கு 3 மூட்டை நெல், இன்றைக்கும் பவுனுக்கு 3 மூட்டை நெல். பவுன் 15 ரூபாயாக இருந்த போது நெல் மூட்டை 5 ரூபாயாக இருந்தது. பின் பவுன் 30 ரூபாய் ஆனபோது நெல் ரூபா 10. பவுன் 45 ரூபா ஆனதும் நெல் ரூபாய் 15. பவுன் ரூபாய் 60 ஆனதும் நெல் ரூபாய் 20. இப்போது பவுன் 90 ஆனதும் நெல் ரூபா 30. பவுனுக்கு மூன்று மூட்டை நெல் அன்றும் விற்றது. இன்றும் விற்கிறது. இனியும் விற்கும். ///

அவர் கணக்குப்படி இன்று ஒரு பவுன் என்ன விலை என்பதையும், இன்று ஒரு பவுனுக்கு எத்தனை மூட்டை நெல் வாங்கலாம் என்பதையும் கணக்கிட்டுப் பாருங்கள்.  அவர் காலத்தில் அவர் போட்ட கணக்கு இன்று இல்லை எனத் தெரிய வரும். நியாயமாக அவர் கணக்குப்படி, மற்ற பொருட்களின் விலை உயர உயர நெல்லின் விலையும் உயர வேண்டும்: ஆனால் நெல்லின் விலையில் மட்டும் ஒரு தேக்கம். அதாவது குண்டூசி முதல் எந்த பொருட்களின் விலை உயர்ந்தாலும் , விவசாயத்தில் விளைந்த நெல் மட்டும் அந்த பொருட்களின் அளவுக்கு விலை உயரவில்லை. ஆனால் நெல் போன்ற உணவுப் பொருட்கள் விவசாயிகளிடமிருந்து , கை மாறிய பின் உணவகம் வந்து உணவாக விற்கப்படும்போது கொள்ளை விலையில் விற்கப் படுகின்றது. 

தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் சொல்லும் மேலும் சில புள்ளி விவரக் கணக்கை பாருங்கள்.

/// ஓர் ஏக்கர் நிலம் உள்ள உழவன் தன் நிலத்தில் 30 மூட்டை நெல் விளைவித்து, 15 மூட்டையைத் தன் செலவிற்கு வைத்துக் கொண்டு, மீதி 15 மூட்டை நெல்லை விற்று எல்லாப் பொருள்களையும் வாங்கினான். இன்றும் வாங்குகிறான், எது விலை ஏறியது? நெல்லையோ தங்கத்தையோ இணைத்துப் பார்க்கும் போது எப்பொருளும் விலை ஏறியதாகத் தெரியாது. காகிதப் பணத்துடன் இணைக்கும் போதுதான் எல்லாப் பொருளும் விலை ஏறியதாகத் தோன்றும். இது பொய்த் தோற்றம். உண்மை என்னவெனில் காகிதப் பணத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்பதே. அன்று நமது நாட்டில் 150 கோடி ரூபாய்க்குத் தங்கம் இருக்க, 300 கோடி ரூபாய்க்குக் காகிதப் பணம் இருந்து வந்தது. இன்று அதே தங்கத்திற்கு 2100 கோடி காகிதப் பணம் இருந்து வருகிறது. காகிதப் பணம் 1 க்கு 8 ஆகப் பெருகி விட்டதால் ஒரு காசுப் பொருளுக்கு 7 காசும். 1 அணாவுக்கு 7 அணாவும், 1 ரூபாய்க்கு 7 ரூபாய் காகிதமும் கொடுக்க வேண்டி இருக்கிறது. ///

கி.ஆ.பெ.வி. அவர்கள் தன் காலத்தில் இருந்தது போன்றே வரும் காலத்திலும் விவசாயத்திற்கு உரிய மரியாதை இருக்கும் என்ற நல்ல நம்பிக்கை காரணமாக சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகப் போய் விட்டது. விவசாய தொழில் நுட்பங்களும் மாறி விட்டன.

காரணம் என்ன?

 Chennai Gold Rate (Courtesy : http://www.livechennai.com/gold_silverrate.asp)

Date
Pure Gold (24 k)
Standard Gold (22 K)
1 grm
8 grms.
1 grm.
8 grms.
27/July/2015
2543.00
20344.00
2378.00
19024.00
26/July/2015
2542.00
20336.00
2377.00
19016.00
25/July/2015
2542.00
20336.00
2377.00
19016.00
24/July/2015
2507.00
20056.00
2344.00
18752.00
23/July/2015
2545.00
20360.00
2380.00
19040.00
22/July/2015
2522.00
20176.00
2358.00
18864.00
21/July/2015
2551.00
20408.00
2385.00
19080.00
20/July/2015
2569.00
20552.00
2402.00
19216.00
19/July/2015
2603.00
20824.00
2434.00
19472.00
18/July/2015
2603.00
20824.00
2434.00
19472.00

ஒரு குவிண்டால் ( QUINTAL ) என்பது 100 கிலோ கிராம் கொண்டது. இப்போது நெல்லிற்கு மத்திய அரசு கொள்முதல் விலை ஒரு மாதிரியாகவும் வெளி மார்க்கெட் விலை வேறு விதமாகவும் உள்ளது வெளிமார்க்கெட் நிலவரப்படி ஒரு மூட்டை (62 கிலோ)  ரூ 1250 ஆகும். இன்றைய நிலவரப்படி 22 காரட் - ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ 19024/= ஆகும். அதாவது கி.ஆ.பெ.வி காலத்தில், மூன்று மூட்டை நெல் கொடுத்து ஒரு பவுன் வாங்கிய விவசாயி இன்று 15 மூட்டை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமையில் இருக்கிறான். அப்படியானால் தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் சொன்ன ” பவுனுக்கு மூன்று மூட்டை நெல் அன்றும் விற்றது. இன்றும் விற்கிறது. இனியும் விற்கும்.” என்ற கணக்கு தவறா? அல்லது  நான் ஏதேனும் கணக்கில் தப்பு செய்து விட்டேனா என்பதை அன்பர்கள் தெரிவிக்கவும்.  

எனவே பொருட்களின்  விலைவாசியில் உயர்வு என்பது கண்கூடாகத் தெரிகிறது. எல்லா பொருட்களும் ஏறி விட்டது என்ற நிலையில், விவசாயிக்கு மட்டும் அவன் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை இந்தியாவில் இல்லை. அரசியல் ( அரிசி விலை உயர்ந்தால் ஓட்டு வங்கி வீழ்ந்து விடும் என்ற அச்சம் ) காரணமாக நெல்லின் விலையை ஏற்ற மறுக்கிறார்கள். எனவே இந்தியாவில் விவசாயம் என்பது லாபகரமான தொழில் இல்லை. விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டில் பிளாட்டுகளாக மாறிக் கொண்டு வருகின்றன. (இங்கேயும் விவசாயியின் நிலத்திற்கு உரிய விலையை ரியல் எஸ்டேட்  புரோக்கர்கள் தருவதில்லை ) எனவேதான் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகம் நடைபெறுகிறது.

                                              (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)





38 comments:

  1. முத்தமிழ்க் காவலர் அவர்கள் கூறியது அந்த காலகட்டத்திற்கு சரி!..

    இன்றைக்கு விவசாயிகளை ஏறி மிதித்துக் கொண்டு தான் அரசுகள் அமைகின்றன..
    எதையெதையோ பேசிக்கொண்டு உழவனின் குலையை அறுத்தார்கள்..

    ஓட்டு வங்கியைக் குறி வைத்து - நெல் விலை ஏறாமல் பார்த்துக் கொண்டார்கள்.. உழவனை நிரந்தரக் கடனாளியாக்கினார்கள்.. அவனுடைய விதைகளும் பறி போயின!.. (!..)

    பள்ளிப் பிள்ளைகளுக்கு முட்டை கொடுக்க முன்வந்தவர்கள் ஒரு குவளை பால் கொடுக்க முன்வரவில்லை..

    சிலைகளில் பாலை ஊற்றுவதை ஏளனம் செய்தவர்கள் - தார்ச் சாலைகளில் பாலை ஊற்றும் போது மௌன சாமியார்களாகி விடுகின்றனர்..

    கடைசி கட்டமாக - ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் விவசாயியின் குருதியைக் குடித்தார்கள்..

    மிச்சமுள்ள கோவணத்தையும் உருவிக் கொள்ளக் காத்திருக்கின்றன - ஜனநாயக அரசுகள்!.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் அன்பான வருகைக்கும் குமுறலான கருத்துரைக்கும் நன்றி.

      /// முத்தமிழ்க் காவலர் அவர்கள் கூறியது அந்த காலகட்டத்திற்கு
      சரி!.. ///
      அந்த காலத்தில் பவுனும் நெல்லும் என்ன விலைக்கு விற்றன என்பதிற்கு ஒரு ஆவணமாக, கி.ஆ.பெ.வி அவர்களின் கருத்துக்களை மேற்கோளாகக் கையாண்டேன். அவரே இன்று இருந்திருந்தால் தனது கருத்தை தானே மறுத்து இருப்பார்.

      விவசாயிக்கு நெல்லுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உங்களைப் போலவே எனக்கும் அய்யா.

      Delete
  2. //” பவுனுக்கு மூன்று மூட்டை நெல் அன்றும் விற்றது. இன்றும் விற்கிறது. இனியும் விற்கும்.” என்ற கணக்கு தவறா? //

    இந்த கணக்கு கி.ஆ.பெ அவர்கள் ‘ஆறு செல்வங்கள் ‘என்ற நூலை எழுதியபோது வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம்.இன்றைக்கு அது சரியாக இருக்காது.

    ‘’எல்லா பொருட்களும் ஏறி விட்டது என்ற நிலையில், விவசாயிக்கு மட்டும் அவன் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை இந்தியாவில் இல்லை.’’ என நீங்கள் சொல்வது சரியே. .

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இங்கு அரசியலுக்காக நெல்லின் விலையில், விற்பனையில் கட்டுப் பாடுகள் அதிகம்.

      Delete
  3. விவசாயிகள் நிலையை எடுத்துக்காட்ட விவசாயிகள் தினம் செய்து கொள்ளும் தற்கொலைகளே போதும் . தினமும் ஆறிலிருந்து பத்துவரை தற்கொலைகள் பத்திரிக்கைகளில் செய்தியாக வருகிறது. நெல்லைத் தவிர்த்த கிஆபெ வின் கணக்கு எப்படி என்று ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      // நெல்லைத் தவிர்த்த கிஆபெ வின் கணக்கு எப்படி என்று ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும் //

      மெய்யாலுமே அய்யா! பிற பொருட்களைப் பற்றிய கணக்கீட்டையும் கணித்து இங்கு நான் கூறி இருக்க வேண்டும்.

      Delete
  4. விவசாயத்தையும் ஒரு தொழிலாக அங்கீகரித்தாலொழிய மாற்றம் நடக்காது. மேலும் குறு விவசாயிகள் ஒன்றினைந்து கூட்டு விவசாய முறைக்குத் தாவ வேண்டும்.
    மற்றொன்று விவசாயத்தில் dependency அதிகம். இதைக் குறைக்கவேண்டும். உதாரணமாக பருவமழை. நீர் அரிதாய்க் கிடைக்கும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் பின்பற்றும் புதிய முறைகளை பின்பற்ற வேண்டும்.

    ம்ம்.. இதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது?.

    ReplyDelete
    Replies
    1. வேதாந்தி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் ஆசை நிறைவேறினால் நாட்டுக்கு நல்லதுதான். உங்கள் கருத்துரையைப் படித்தவுடன் “நாட்டுக்கு பொருத்தம், நாமே நடத்தும், கூட்டு பண்ணை விவசாயம் “ - என்ற சினிமா பாடல் நினைவுக்கு வந்தது.

      Delete
  5. நல்ல விரிவான
    அருமையான அலசல்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Replies
    1. அன்றிலிருந்து இன்றுவரை எனது வலைத்தளம் வந்து, ஊக்கம் தரும் கவிஞர் அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  7. சிறப்பாக அலசி உள்ளீர்கள்! பவுனுக்கு மூன்று மூட்டை அன்றைய காலகட்டத்தில் சரியாக இருந்திருக்கலாம்! இப்போதைய பொருளாதாரச் சூழலில் சரிபட்டு வராது. மேலும் நெல்- அரிசி அன்றாட உணவு. இது விலையுயர்ந்தால் ஏழைகள் உணவுக்கு என்ன செய்வார்கள்? இப்போதே அரிசிவிலை தாறுமாறாக இருக்கிறது! விவசாயிகளை காப்பாற்ற நெல் விலை ஏற்றுவதை தவிர்த்து பொருளாதாரத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே அரசு முயல வேண்டும் என்று என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. திருச்சியில் ஒரு விவசாயக் கல்லூரி ஆரம்பிப்பதற்காக வெள்ளோட்டம் பார்ப்பதற்காக என்னை அனுப்பியிருந்தார்கள். அப்போது கி.ஆ.பெ.அவர்களைச் சந்தித்திருக்கிறேன். பின்பு ஒரு முறை திருச்சியில் டவுன் பஸ்சில் போகும்போது அவரும் அதே பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். கி.ஆ.பெ.வி. அவர்கள் ரொம்பவும் சிக்கனமானவர். திருச்சி தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு சைக்கிள் ரிக்‌ஷாவில் வருவதைப் பார்த்து இருக்கிறேன்.
      Delete

      Delete
  9. ஆஹா வித்தியாசமான அலசல். அந்த காலத்து பவுன் விலையை பார்த்து பெரும்மூச்சு விடத்தான் முடியும் புள்ளிவிவரங்களை எப்படித்தான் சேகரித்தீர்களோ
    அருமை

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பவுனு பவுனுதான்.

      Delete
  10. குண்டூசி உருவாக்கி விற்பனைக்கு அனுப்பும் போது உரிய விலையை அவன்தான் வைக்கிறான்! ஆனால் விவசாயின் விளை பொருளுக்கு விலை வைப்பது வியாபாரி தானே! எப்படி விவசாயி வாழமுடியும்!!!!?

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்ன கருத்தினை இன்னும் விவரமாக யோசித்துப் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

      Delete
  11. ஏரோட்டம் நின்று போனால் எல்லா ஓட்டமும் நின்று போகும் - வருங்காலத்தில் நடக்கப் போவது உறுதி...

    விளக்கமான பட்டியலுக்கும், தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பற்றிய தகவலுக்கும் நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டில் இனி விவசாயமே இருக்காது என்ற உங்கள் கணிப்பு எதிர்காலத்தில் நடந்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. No worry. due to non availability of agri resources, soon all the rice/ padi items will go high it will reach the old stage of 3 :1.

    but people condition.......

    ReplyDelete
    Replies
    1. அனானிமஸ் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் மக்கள் (இதில் ஏழைகளும் அடக்கம்) அர்சி விலையை மட்டும் ஏற்றினால் கோபம் அடைவதில் அர்த்தம் இல்லை. அல்லது விவசாயிக்கு நெல்லுக்குத் தகுந்த விலையை அரசாங்கம் கொடுத்து வாங்கி, ரேஷனில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும்.

      Delete
  13. புள்ளி விபரங்களுடன் அழகாய் இந்தப்பதிவை இட்டு இருக்கிறீர்கள் ஐயா.
    தம 5

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. ஐயோ! இந்த கணக்கைப் படித்தால் அநியாயமாய் இருக்கே! உழவன் கணக்குப் பார்த்தால் உலக்குகூட மிஞ்சாதுன்னு சும்மாவா சொன்னாங்க!:((

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களே! உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது உண்மைதான். விவசாயிக்கு வேறு வேலை தெரியாது; அதனால் கணக்கு பார்த்தாலும் வேறு வழியில்லாது அங்கேயே இருக்கிறார்கள். தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  15. புள்ளி விவரங்களை முறைப்படி தொகுத்து புரியும்படி பகிர்ந்துள்ள விதம் அருமையாக இருந்தது. ஒரு புறம் வியப்பாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. தமிழறிஞரைப் பற்றிய பல அரிய செய்திகளையும் உங்கள் பதிவு தந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. விவசாயிகளின் நிலையினை இதைவிட எளிமையாக உணர்துவது இயலாது ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. நல்லதொரு பதிவு.
    பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். அதை விட்டு அனைவருக்கும் தேவையான . அத்யாவசிய பொருட்களின் விலையை கூட்டுவது என்பது தீர்வு அல்ல.
    வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்த சேமிப்பும் பண வீக்கத்தால் நலிந்து அன்றாட செலவினங்களை எதிர் கொள்வதே பெரும் பாடா யிருக்கிறது.

    /இந்தியாவில் விவசாயம் என்பது லாபகரமான தொழில் இல்லை. /

    திரு வேதாந்தி (வெட்டிபேச்சு) கூறியது போல் சில "dependacy factors" விவசாயின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளது. முக்கியமாக Proper Crop Insurance, Exploitation in marketing etc .
    விவசாயம் லாபகரமானது என்று சில நாட்டு நடப்புகளையும் கீழ்க்கண்ட தளங்களின் மூலம் அறியலாம்.

    http://senthilmsp.blogspot.com/2015/05/blog-post_29.html

    http://www.thehindu.com/features/metroplus/society/punjab-farmers-greening-dry-tracts-in-ramanathapuram/article7408040.ece

    vinnagarathan.blogspot.com/2015/07/the-punjabi-feat.html

    விவசாயிகளின் தற்கொலை மிகவும் வருந்த வேண்டியதும், அதை முற்றிலும் தவிர்க்க தகுந்த தீர்வைக் காண வேண்டும் என்பதும் மிகவும் இன்றி அமையாதது .

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களுக்கு நன்றி. நீங்கள் கொடுத்த இணையதள முகவரிகளுக்கு நன்றி. விண்ணகரம் வரதன் வலைத்தளம் மட்டும் எனக்கு புதிது. எல்லோருக்கும் குடிவாடா நாகரத்தினம் நாயுடு போல வாய்ப்பு அமைந்தால் நல்லதுதான். அவர் ஒரு முன்னோடி என்பதில் அய்யம் இல்லை. அதே போல வலந்தை கிராமத்தில் (ராமாநாதபுரம்) ஹிந்து சுட்டிக் காட்டிய பஞ்சாப் விவசாயிகளும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

      Delete
  18. கி ஆ பெ.வி அவர்கள் தீர்க்கதரிசி ,அவர் அன்று சொன்னது இன்று மிகவும் பொருந்துதே :)

    ReplyDelete
    Replies
    1. அன்று அவர் சொன்ன கணக்கு இன்று பொருந்தவில்லை என்பதுதான் கட்டுரையின் மையக் கருத்து. நீங்கள் மாற்றி சொல்லி விட்டீர்கள். பரவாயில்லை. சகோதரர் பகவான்ஜீயின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      Delete
  19. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் யாழ்பாவாணன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. மன்னிக்கவும். ஒரு சின்ன திருத்தம். இது இலக்கிய கட்டுரை இல்லை.

      Delete