Thursday, 23 July 2015

எரிப்பதா? புதைப்பதா?



அண்மையில் ஒரு பெரியகாரியம். வழக்கம் போல அங்கே பந்தலில் இருந்தவர்களுக்கு, தமிழ் மக்களுக்கே வரும் சந்தேகங்களில் ஒன்றைப் பற்றிய பேச்சு. “இறந்தவரை எரிப்பதா? புதைப்பதா? என்பதுதான்.  இந்த கேள்வியை அடிப்படையாக வைத்து, தமிழ் சினிமாவில் கவுண்டமணி நகைச்சுவை காட்சி ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழர் மரபு:

தமிழர்கள் ஓரிடத்திலேயே தங்கும் இயல்பினராக இருந்தனர். முல்லை (காடும் காடு சார்ந்த பகுதி), குறிஞ்சி  ( மலையும் மலை சார்ந்த பகுதி), மருதம் (வயலும் வயல் சார்ந்த பகுதி), நெய்தல் ( கடலும் கடல் சார்ந்த பகுதி) என்று நான்கு வகை நிலங்களில் அவர்களது வாழ்க்கை அமைந்தது. அரேபிய பாலைவனம் போன்ற அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. பாலை என்பது முல்லை நிலமோ, குறிஞ்சி நிலமோ அதிக வெப்பம் (வெயில்) காரணமாக வறட்சி காரணமாக மாறுபாடு அடையும்போது மட்டும் அமைவது.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
                                          (
சிலப்பதிகாரம், காடுகாண் காதை, 64-66)

நம்நாட்டு பாலை நிலம் மீண்டும் பெரும் மழை பெய்தால் பழைய நிலைக்கு வந்து விடும் தன்மையது..

இந்த நால்வகை நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் நிலையாக ஓரிடத்தில் இரு்ந்தபடியினால் அதற்கு ஏற்றவாறு தமது பழக்க வழக்கங்களை அமைத்துக் கொண்டனர். இயற்கை தெய்வங்களை ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ப வழிபட்டனர். இறந்தவர்களது உடலை தாங்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே புதைத்து இறந்தவர்களை வழிபட்டனர். அதிலும் பல இடங்களில் புதைப்பதற்கு தாழிகள் எனப்படும் பெரிய மண்பாண்டங்களை பயன்படுத்தி இருக்கின்றனர். புதைத்த இடத்தில் அடையாளத்திற்காக நடுகற்களையும் நட்டு வைத்தனர்.

தெற்கே குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அப்போது நிகழ்ந்த கடல்கோளின் (அந்நாளைய சுனாமியின் ) போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்தனர். எனவே  இறந்த மூதாதையர்கள் நினைவாகவும் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும்,  இறந்தவர்களைப் புதைக்கும் போது, அவர்களது தலையை தெற்கு திசையில் இருக்குமாறு வைத்து (தெற்கு வடக்காக) புதைத்தனர். சிலர் இந்த முறையை கைலாயமலை வடக்கில் இருப்பதால் வடக்கு நோக்கி முகம் இருப்பதாக புதைக்கின்றனர் என்று சொல்லுகிறார்கள். தூங்கும்போது தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கலாம். காரணம் மேலே இறந்தவர்களை புதைக்கும் முறைமைதான். அறிவியல் முறைப்படியும் சரி என்று சொல்கிறார்கள். என்னைக் கேட்டால் நமக்கு எது சவுகரியமோ அந்த பக்கம் தலையை வைத்து தூங்கிக் கொள்வேண்டியதுதான். (தமிழ் கிறிஸ்தவர்கள் அவர்களது மதத்தின் வழக்கப்படி இறந்தவர்களது உடலை கிழக்கு மேற்காக புதைப்பார்கள்.)

அக்கினி வழிபாடு

வடவர்கள் கலாச்சாரமும் இந்தியர்கள் கலாச்சாரமும் கலந்ததன் விளைவாக உண்டான இந்தோ ஆரிய நாகரிகம், தமிழகத்திலும் பரவியது இதன் விளைவு அக்கினி வழிபாடு.  பொதுவான ஒரு கருத்து என்னவெனில் ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக  நாடோடிகளாக வாழ்ந்தவர்கள்.. அவர்கள் அக்னியை வழிபட்டவர்கள். அக்னியை எங்கு சென்றாலும் ஒரு மண்சட்டியிலோ அல்லது பாத்திரத்திலோ  எடுத்துச் சென்றார்கள். அவர்கள் ஓரிடம் விட்டு ஓரிடம் நகரும்போது கூட்டத்தில் யாரேனும் இறந்தால் புதைப்பதில்லை. அவ்வாறு புதைத்தால் இறந்தவர்களது உடலை எதிரிகளோ அல்லது விலங்குகளோ தோண்டி வெளியில் வீசக்கூடும். மேலும் இறந்த உடலைப் புதைத்த இடத்திலேயே அவர்கள் அதிக நாள் தங்கி இருந்து காத்துக் கொண்டு இருக்க முடியாது. எப்போதும் வேறு இடம் பெயரும் சூழ்நிலை. எனவே அவர்கள் இறந்த உடலை அந்த இடத்திலேயே  எரித்தார்கள். தாங்கள் வழிபடும் அக்னி கடவுளுக்கு சடங்குகளைச் செய்தார்கள். இது அவர்களுடைய வழக்கமாக இருந்தது. ( இங்கு ஆரியரையும், பார்ப்பனர் எனப்படும் பிராமணரையும் ஒன்றாகக் கருதக் கூடாது. ஆரியர் வேறு; பிராமணர்கள் வேறு.  ஆரியர்களின் பழக்க வழக்கங்களை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள் பிராமணர்கள் என்று சொல்லலாம் – இது எனது கருத்து.)

(ஒரு மாறுதலுக்காக, த.கலையரசன் என்ற வலைப்பதிவர் எழுதிய ”யார் இந்த ஆரியர்கள்? http://kalaiy.blogspot.in/2013/01/blog-post.html என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இதுவே முடிந்த முடிபு அல்ல)

வடக்கிலிருந்து தமிழகத்தின் மீது எடுக்கப்பட்ட பண்பாட்டு படையெடுப்புக்கள், புராண மதங்களின் கலப்பு மற்றும் பௌத்தம், சமண மதங்களின் வருகை போன்றவற்றால் இந்தோ - ஆரியர் கலாச்சாரம், முக்கியமாக அக்கினி வழிபாடு,  நாளடைவில் தமிழர்களின் வாழ்வியலிலும் நுழைந்தது. தமிழரின் பல பழக்க வழக்கங்கள் மாறுபட்டன. சிலர் முழுக்க முழுக்க இந்தோ -ஆரியர் பழக்க வழக்கங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு தமிழர்களிடமிருந்து  வேறு பட்டவர்களாக காட்டிக் கொண்டனர்.  சிலர் தங்களை ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தமிழர்களில் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ள, அக்னி புத்திரர்கள் என்று அழைத்துக் கொண்டனர். அவ்வாறு வந்த ஒரு பழக்கங்களில் ஒன்றுதான் தமிழர்கள் இறந்தவர்களை எரிப்பது என்பது.

எனவே இறந்தவர்களை எரிப்பது என்பது தமிழர் வழக்கம் இல்லை. இறந்தவரை புதைப்பதுதான்  தமிழர் மரபு. இறந்தவர்களை எரித்த இடம் சுடுகாடு. இடுகுழியில் இட்டு புதைத்த இடம் இடுகாடு. இரண்டும் ஓரிடத்திலேயே உள்ளது. ஆனால் இப்போது சூழ்நிலையின் காரணமாக, மயானத்தில் இடப்பற்றாக் குறை காரணமாக எரிக்கவும் செய்கின்றனர். (இடப்பற்றாக் குறைக்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகளே.)

புறநானூற்றில் இரு வேறு காட்சிகள்:

சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் இறந்து விடுகிறான். அவனை புதைப்பதற்காக மண்தாழி ஒன்று செய்யப்படுகிறது. அப்போது அங்கே வந்த அவனுடைய நண்பர் புலவர் ஐயூர் முடவனார் “ கலம் (மண் தாழி) செய்பவரே! கலம் செய்பவரே! சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை அடக்கம் செய்ய அவன் உடம்புக்கு நீங்கள் தாழி ஒன்றை செய்து விடுவீர்கள். ஆனால் அவனது புகழ் உடம்பினை அடக்கம் செய்வதற்கான  பெரிய மண் தாழியினை உங்களால் செய்திட முடியுமோ? “ என்று கேட்கிறார். அதாவது அவனது புகழினை மறைக்க முடியாது என்பது கருத்து.

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

                      -  பாடியவர் ஐயூர் முடவனார் (புறநானூறு . 228 )

இந்த பாடலில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், தமிழர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள் என்பதே. இதில் மன்னர்களைத் தாழியில் இட்டு புதைக்கும் வழக்கம் இருந்ததை தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு பாடல். நம்பி நெடுஞ்செழியன் ஒரு குறுநில மன்னன். அவன் மரணம் அடைகின்றான். அவனது உடலை எரிப்பதா அல்லது  புதைப்பதா என்ற விவாதம் அப்போதும் நடந்து இருக்கிறது போலிருக்கிறது. அந்த விவாதத்தினை மையப்படுத்தி பேரெயின் முறுவலார் என்ற புலவர், அந்த மன்னனின் பெருமைகளோடு பாடிய பாடல் இது.

தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்குகியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.

                         - புறநானூறு 239

பாடியவர் : பேரெயின் முறுவலார்
பாடப்பட்டவர்: நம்பி நெடுஞ்செழியன்

இந்த பாடலில் புலவர், நீங்கள் புதைத்தாலும் சரி அல்லது எரித்தாலும் சரி, என்னவோ பண்ணிக் கொள்ளுங்கள் என்று வெறுத்து பேசுவது தெரிகிறது.

இந்த இரு புறநானூற்று பாடல்களையும், கால ஆராய்ச்சி செய்தால், இதில் எது பிந்தியது என்று தெரிய வரும். நெருப்பின் பயன்பாட்டை அறியும் முன்னர் மனித இனத்தில், இறந்தவர்களை நிச்சயம் புதைத்துதான் இருப்பார்கள். 

எரித்தால் என்ன? புதைத்தால் என்ன?

எது எப்படி இருப்பினும், உடம்பில் உயிர் இருக்கும் வரைதான, ஆட்டமும் பாட்டும் கொண்டாட்டமும். இறந்த பின்பு அந்த உடம்பினை, நன்றாகத் தூய்மை செய்து அடக்கம் செய்தால் என்ன? அல்லது கண்ட இடத்திற் போட்டால் என்ன? ஒன்றுமே இல்லை. இந்தக் கருத்தைச் சொல்லும் நாலடியார் பாடல் இது

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
                             - நாலடியார் ( பாடல் எண்.26 )

(பொருள்) உடம்பு என்னும் தோல் பையில் இருந்து கொண்டு தனது தொழில்களைச் செய்து வரும் கூத்தன் ( உயிர் ), அவ்வுடம்பினை விட்டு வெளியேறிய பின்பு, அந்த உடலை நாரினால் கட்டி இழுத்தால் என்ன? நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால என்ன? அல்லது கண்ட இடத்தில் போட்டால்தான்   என்ன?  அதனால் பலரும் பழித்தால்தான் என்ன ? அதனால் வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமிlல்லை

                      xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



42 comments:

  1. நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
    பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
    அருமை ஐயா அருமை
    நாலடியாரைத் தேடித் தந்தமைக்கு
    நன்றி ஐயா
    தம 1

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துக்கு நன்றி.

      Delete
  2. நமது நாட்டில் பார்சிஇன மக்கள் - The Tower of Silence (மும்பை) எனும் இடத்தில் சடலங்களை கழுகுகளுக்கு இரையாக்கி விடுகின்றனர்.

    என்றாலும் - சக மனிதனின் சடலம் என்ற அடிப்படையில் முறை செய்யவேண்டியது அவசியமே!..

    ReplyDelete
    Replies
    1. மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை நடத்தப்படும் ஒவ்வொரு சடங்கும் அவனுடைய மதம் மற்றும் இனக்குழு அடிப்படையிலேயே நடைபெறுகின்றன என்பதையே பார்சிகளின் செயல் காட்டுகின்றது.

      கருத்துரை தந்த சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. ...பருத்தொந்தி
    நம்மதென்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
    தம்மதென்று தாம் இருக்குந்தான்..

    - என்று பட்டினத்தடிகள் கூறுவதும் - இங்கு கவனிக்கத் தக்கது..

    தமிழர்களும் பார்சிகளைப் போல - நாய் நரிகளுக்குப் போட்டிருப்பார்களோ?..

    ஆனாலும் - பட்டினத்தடிகள் - தமது அன்னைக்குத் தகனக் கிரியை செய்கின்றார்..

    இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.. வேறொரு பொழுதில் பேசுவோம்!..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. இங்கு நீங்கள் குறிப்பிடும் பட்டினத்தர் பாடலின் மையக் கருத்து மயான சடங்கைப் பற்றியது அல்ல. வாழ்வின் நிலையாமையப் பற்றியது.

      ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு குடிக்கும் என்று சில சடங்குகள் உண்டு. தமிழர்கள் ஆரம்பத்தில் இறந்தவர்களைப் புதைத்தனர். பின்னர் எரியூட்டலுக்கு மாறிவிட்டனர் என்பது எனது கருத்து.

      /// இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.. வேறொரு பொழுதில் பேசுவோம்!.. ///

      பேசுவோம் அய்யா! நீங்களே ஒரு பதிவு எழுதினாலும் சரி.

      Delete
    2. ஐயா வணக்கம்.

      “இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி மடநெஞ்சே
      ஒறுத்தார்க்கும் தீங்கினை ஒண்ணாதே“

      என மதிப்பிற்குரிய தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்கள் சொல்லுகின்ற வழக்கமும் தமிழரிடையே இருந்திருக்கின்றது.

      “நரிநாய் பேய் பாறொடு கழுகுகள் கூகை தாமிவை
      புசிப்பதானபாழ் உடலெடுத்து வீணி லுழல்வேனோ“

      என்றிதனைச் சொல்வார் திருப்புகழில் அருணகிரிநாதர்.

      “சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும்
      சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடம துடைந்தால்
      நாயும் நரியும் பேயும் கழுகும்
      நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே”

      என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

      “ விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண
      மென்மேலும் முகம்மலரும் மேலோர் போலப்
      பருந்தினமும் கழுகினமும் நெருங்கி உண்ணப்
      பதுமமுகம் மலர்ந்தாரைக் காண்மின் காண்மின் “

      என்று சொல்லும் கலிங்கத்துப் பரணி. பரணியில் இது பற்றிய குறிப்புகள் இன்னும் உண்டு.

      நிற்க,

      பொதுவாகப் பண்டைத் தமிழரிடை ஐந்து வகையான ஈமச்சடங்கு முறைகள் நடந்திருக்கின்றன.

      1) எரித்தல்

      2) பிணத்தை நாயும் நரியும் கழுகும் பேயும்( இவர்கள் பிணத்தைத் தின்பதை இயல்பாகக் கொண்ட ஒரு குடி என்பதாக ஒரு குறிப்பு உண்டு) கழுகும் உண்ண விடுதல்.

      3) புதைத்தல்.

      4) கல்லறை போன்ற அறைகளிலே அடைத்து வைத்தல். ( இது எகிப்திய பிரமிடுகளோடு ஒத்தது. மன்னர்களின் பள்ளிப்படைகள் இவ்வாறான அமைப்பின்மேல் கட்டப்பட்ட கோயில்களாகும். )

      5) தாழிகளில் கவிழ்த்தல். ( தாழிகளில் கவிழ்த்தல் என்பது, இறந்தோரை மட்டுமன்று. உடல்நலம் குன்றிய வயதினோரின் மேலும், உடல் சுமையென்று கருதித் தவம்செய்வோரின்மேலும் தாழி கவிழ்த்துப் போதல் உண்டு.)

      “சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
      தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் “

      என்றிவ்வைவகைக் கருமங்களைக் காட்டும் மணிமேகலை.

      மேற்காட்டிய கல்லறை போன்ற பண்டைய பிணக்குழிகள் இன்றும் மக்களால், பாண்டக்குழி, பாண்டியவீடு, குரங்குப் பட்டறை என வழங்கப்படுவதைக் காணலாம்.

      இலக்கியங்கள் இதனைப் போன்ற அமைப்பொன்றை ‘உவலிடு பதுக்கை’ என்று குறிக்கின்றன..


      இவ்வைந்தினுள்ளும், நீங்கள் கூறுவதுபோல புதைத்தல் என்பதுதான் பண்டைத் தமிழரின் வழக்கமாக இருந்திருக்கிறது.

      ஆழந்த கருத்துகளை அழகுறச் சொல்லிச்செல்கின்றீர்கள்.

      தஞ்சையம்பதி ஐயாவின் பதிவிற்குக் காத்திருக்கிறேன்.

      தொடர்கிறேன்.

      நன்றி.

      Delete
    3. அன்பு வணக்கங்கள்..

      மாதுளையின் முத்துக்களைப் போல நிறைந்த விஷயங்கள்..

      முதற்பாடலிலேயே - போர்க்களத்தில் வீழ்ந்த உடலுக்காக - கூகைகளின் கூச்சலைப் பதிவு செய்திருப்பார் அருணகிரியார்..

      பாம்பாட்டி சித்தர் பாடலை அறிந்திருக்கின்றேன்.. ஆனால் அதில் பெரிதாக சிந்திக்கவில்லை..

      சுத்தப்படுத்தாத களத்திலேயே தினமும் போர் நடக்கும்.. வேறு வழியே இன்றி சடலங்கள் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரையாகின.. என்று கலிங்கத்துப் பரணியைக் காட்சிப்படுத்துவார் - எங்கள் தமிழ் ஐயா..

      இலக்கியங்களில் ஆழ்ந்து விடும் சூழ்நிலை அமையவில்லை..

      பட்டினத்தர் பாடலின் மையக் கருத்து வாழ்வின் நிலையாமையைப் பற்றியது என்றாலும் சடலங்களை விலங்குகளுக்கு இடும் பழக்கம் இருந்ததையும் பட்டினத்தடிகள் குறிக்கின்றார்...

      நிறைந்த விஷயங்களை அள்ளித் தரும் ஊமைக் கனவுகள் தளத்தினுக்கு எனது வணக்கங்கள்..

      வாழ்க நலம்!..

      Delete
    4. பல்வேறு பணிகளுக்கு இடையிலும், அருணகிரிநாதர், பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், கலிங்கத்துப் பரணி, மணிமேகலை – என்று பல இலக்கிய மேற்கோள்கள் தந்த ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்களுக்கு நன்றி.

      மேலும் அவரது கருத்துரைக்கு நன்றி சொன்ன சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கும் நன்றி.

      Delete
  4. நாலடியார் பாடலே சரி என்று தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. பட்டினத்தார் பாடலைப் போன்றே இந்த நாலடியார் பாடலும் நிலையாமை பற்றியது; சமயச்சடங்கு பற்றியது அல்ல.

      Delete
  5. ஆஹா! இப்படி வலையுலகம் எங்கும் சங்கப்பாடல் ஆய்வுகள் கொட்டிகிடப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது! அதிலும் இந்த பாடல் இப்படியான ஆராய்ச்சிகள் என்னைப் போன்றோரும் புரிந்துகொள்ளும் விதம் தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி! நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி மகிழ்நிறை அவர்களின் கருத்துரைக்கு நன்றி சங்க இலக்கியம் என்றாலே, படித்தவர்களுக்கு எங்கேயும் எப்போதும் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே.

      Delete
  6. உடலில் உயிர் இருக்கும் வரையே அதற்கு பெயர், மதிப்பு எல்லாம்! போன பின் வெறும் பிணம் தானே! நாலடியார் பாடலே சரி என்று தோன்றுகிறது! ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து பதிவிட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி
      ஆறு மாதத்திற்கு முன்பே எழுதி வைத்த கட்டுரை இது. வெளியிடுவதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்து விட்டேன்.

      Delete
  7. வேறு கேள்வி?
    தவில் வசிப்பவர்கள் பெரிதும் சட்டை அணிவதில்லை. ஆனால் மிருதங்கம் வசிப்பவர் சட்டை இல்லாமல் பார்த்தது இல்லை ஏன்? இன இழிவு உண்டா இதிலும்?

    ReplyDelete
    Replies
    1. வசிப்பவர்கள் > வாசிப்பவர்கள்.

      இதில் கூடவா ஜாதி நுணுக்கம் பார்க்க முடியும்? வலைத்தளம் மாறி வந்த கேள்வி என்று நினைக்கிறேன். இருந்தாலும் எனக்குத் தெரிந்த கருத்தைச் சொல்லுகிறேன்.

      தவில், மிருதங்கம் இரண்டுமே தோற்கருவிகளே என்றாலும், அவைகளை கையாளும் விதம் வேறு வேறு. தவில் அடிக்கும் போது இரண்டு கைகளுக்கும் , கை விரல்களுக்கும் உழைப்பு அதிகம். சட்டை போட்டுக் கொண்டால் கிழிந்து விடும். மிருதங்கத்தை கை விரல்களால் லாவகமாக தட்ட வேண்டும். சட்டை போட்டுக் கொள்வதனால் பாதிப்பு இல்லை. (என்னுடைய அனுமானம் இது)

      Delete
  8. எங்கள் பக்கத்தில் தலைச்சன் பிள்ளையை எரிப்பதும் அதற்கடுத்து பிறந்தவர்களை புதைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. நான் தலைப்பிள்ளை, என்னை மட்டும் எரிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தைரியமானவர்தான் நீங்கள். உங்கள் பதிலே இதனைச் சொல்லுகிறது. உங்கள் வழக்கம் அவ்வாறுதான் என்றால் என்ன செய்ய முடியும்? கருத்துரை தந்த சகோதரர் கலிங்கநகர். கவிப்பிரியன் அவர்களுக்கு நன்றி.

      Delete
    2. ஐயா வணக்கம்.

      திரு, கவிப்ரியன் கலிங்கநகர் ஐயா கூறியுள்ள குறிப்பு நாட்டார் வழக்காற்றியலின் மந்திரவாத நம்பிக்கையோடு தொடர்புடையது.
      தலைச்சன் பிள்ளையின் உடல் உறுப்புகளையும், எலும்புகளையும் எடுத்து, மந்திரதந்திரங்களுக்குப் பயன்படுத்துவர் என்கிற நம்பிக்கை இன்றும் மக்களிடையே உண்டு.
      தலைச்சன் பிள்ளையை எரிப்பது அதன் காரணமே!

      நன்றி.

      Delete
    3. சகோதரர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக்கனவுகள்) அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நல்லவேளை என் வலைத்தளம் வந்தீர்கள். என்மீது உங்களுக்கு வருத்தம் ஏதும் இருக்குமோ என்று நேற்று இரவு யோசனையாகவே இருந்தேன். நட்பு தொடரட்டும்.

      Delete
  9. இறந்த உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற கேள்விக்கான பல பதில்கள் சிந்த‌னையைத் தூண்டுகின்றன. இன்று காலை நுரையீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட உறவினர் இறந்து போனதும் இந்தத்தலைப்பும் எத்தனை சோகம்! நோய்வாய்ப்பட்டு மரணித்த உடலை எரிக்கத்தான் செய்கிறார்கள். பட்டிணத்தாருமே " தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்? " என்று தான் பாடியிருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களே! இறந்து போன உங்கள் உறவினரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். மேலும், தங்களுக்கும் தங்கள் உறவினர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      மரணித்த என்பது, வடசொல் இலக்கணப்படி (ஜனித்த என்பது போல) புதிதாக இப்போது பத்திரிகையாளர்கள் புகுத்தியது. மரணித்த > மரணமடைந்த என்பதுதான் சரி. (நானும் சில சமயம் எனக்கு தெரியாத, இதுபோன்ற வழக்கத்தில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தினால் சுட்டிக் காட்டும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். திருத்திக் கொள்வேன்)

      பட்டினத்தார் பிற்காலப் புலவர். அவர்காலத்து சடங்குகளில் அவர் குடும்ப வழக்கப்படி சடங்குகளை செய்து இருக்கிறார்.

      சகோதரி அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. உண்மைதான். சமுதாயச் சுகாதாரம் தவிர்த்து வேறெதற்கும் முக்கியத்துவம் தரக்கூடாது - நாலடியார் சொன்னதைப்போல.
    God Bless You

    ReplyDelete
    Replies
    1. அய்யா வேதாந்தி (வெட்டிப் பேச்சு) அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இங்கே நான் குறிப்பிட்ட நாலடியார் பாடலின் உண்மையான நோக்கம், உடல் நிலையானது அல்ல, உயிர் பிரிந்த பின் அதற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதனை சுட்டிக் காட்டத்தான். மேலும் அந்த பாடல் மயானச் சடங்கைப் பற்றியது அல்ல. (எல்லோருக்கும் தெரிந்த கருத்துதான் என்றாலும் இங்கு நினைவூட்டவே சொன்னேன்)

      Delete
  11. ஆம்! எரிப்பது பின்னர்தான் வந்திருக்கின்றது. இறந்தவருக்குத் தெரியவா போகின்றது என்றாலும் ஒரு ஒழுங்கு வேண்டும் அல்லவா, அவரவர் வீட்டு மூதாதையர் எதைச் செய்தனரோ அதைப் பின்பற்றி வருகின்றனர் மக்கள். கேரளத்தில் பெரும்பாலும் நிலம் உள்ளவர்கள் வீட்டின் பின் புறமே புதைக்கவோ எரிக்கவோ செய்கின்றனர். பார்சி மக்கள் கழுகிற்கு எறிகின்றார்கள். சிலர் புதைத்து மணிமண்டபம் அமைக்கின்றார்கள் இப்படி நாளடைவில் பழக்கங்கள் பல கலப்புகளினால் மாறி வருகின்றதுதான்...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். தாங்கள் ஆசிரியர் அல்லவா? அதனாற்றான் வரிசைக் கிரமமாகவும், சுருக்கமாக அதேசமயம் விளக்கமாகவும் சொன்னீர்கள்.

      Delete
  12. Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete
  13. நல்ல விவாதத்தை முன்வைத்துள்ளீர்கள். எது எப்படியாயினும் இறந்தவர் உடலுக்கு உரிய மரியாதை தருவதே சிறந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக தேசியக்கொடியை அனைவரும் பயன்படுத்தலாம் என்ற வகையில் விவாதம் வந்தபோது பேசப்பட்ட ஒரு கருத்து முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்பதே. கிழிந்ததையும் பயன்பாடற்றுப் போனதையும் என்ன செய்வது என்ற வினா வந்தபோது அரசின் தரப்பில் கூறப்பட்ட மறுமொழி "Give them a decent burial".

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கும் சிறந்த உதாரணம் ஒன்றை எடுத்துக் காட்டியமைக்கும் நன்றி. இறந்தவர் உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

      Delete
  14. // தூங்கும்போது தெற்கில் தலை வைத்து படுக்காதே என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கலாம்.//

    வடக்குபக்கம் தான் தலைவைத்து படுக்காதே என்பார்கள்.அதற்கு அறிவியல் காரணம் உண்டு. காந்த ஈர்ப்பு இயல்புப்படி வடக்கு பக்கம் நேர் மின்னோட்டமும் தெற்கு பக்கமும் எதிர் மின்னோட்டமும் உள்ளன. மனிதனின் தலை நேர்மின்னோட்டமும் கால் எதிர்மின்னோட்டமும் கொண்டவை. நாம் தெற்கே தலைவைத்து வடக்கே கால் நீட்டி படுத்தால் பூமியின் நேர்மின்னோட்டம் மனிதனின் எதிர்மின்னோட்டத்துடனும் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சீராக இருக்கும். மாற்றிப் படுத்தால் காந்த ஈர்ப்பு விசையால் சக்தி குறைய வாய்ப்புண்டு என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி. நான் சிறு வயதில் கேள்விப்பட்ட ஒன்றை எழுதினேன். உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன். மேலே பதிவிலும் கீழ்க்கண்டவாறு கருத்து மாற்றம் செய்துள்ளேன்.

      /// தூங்கும்போது தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கலாம். காரணம் மேலே இறந்தவர்களை புதைக்கும் முறைமைதான். அறிவியல் முறைப்படியும் சரி என்று சொல்கிறார்கள். ///

      தங்களுக்கு மீண்டும் நன்றி.

      Delete
  15. நல்லதொரு அலசல் நாலடியார் பாடலுடன் சிறப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. இத்தனைப் பின்னூட்டங்களுக்குப்பின் நான் சொல்ல விரும்புவது, எது முறை ,வழக்கம் என்பது பற்றியல்ல. ஆதிகால மனிதர்களைப் பற்றி நாம் அறிய ஏதுவாயிருப்பது, அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் எலும்பு மிச்சங்களே ஆகவே இறந்த மனிதரைப் புதைப்பதே பிற்கால சந்ததியினருக்கு உதவியாய் இருக்கும் . சுகாதார முறை என்று பார்த்தால் எரிப்பதே சிறந்தது,

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. யாரும் சிந்திக்காத மாற்றுக் கோணத்தில் சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்.

      /// ஆதிகால மனிதர்களைப் பற்றி நாம் அறிய ஏதுவாயிருப்பது, அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் எலும்பு மிச்சங்களே ஆகவே இறந்த மனிதரைப் புதைப்பதே பிற்கால சந்ததியினருக்கு உதவியாய் இருக்கும் ///

      உங்கள் கருத்தை அப்படியே நானும் வழிமொழிகின்றேன்.

      Delete
  17. இன்றும் கூடவடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்று மிரட்டுகிறார்கள எங்கள்பகுதியில் சுடுகாடு இடுகாடு இருந்த இடமெல்லாம் வீடுகளாக மாறிவிட்டது.இடப்பற்றாக் குறைக்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகளே என்பது முற்றிலும் உண்மை அய்யா....

    ReplyDelete
    Replies
    1. தோழர் வலிப்போக்கன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  18. அருமையான ஆய்வு!
    நான் நாலடியார் பாடலுடன் ஒத்துப்போகிறேன்---ஒன்றைத் தவிர!
    ஆம்! உயிர் என்று ஒன்றும் கிடையாது! காத்து (மூச்சு) நின்றால் ஆள் காலி. உயிர் என்பது மூச்சு மட்டுமே.இது என் கருத்து.

    இப்ப அமெரிக்காவில் இட நெருக்கடியால் பிணத்தை படுக்க வைக்காமல் நிற்க வைத்தே புதைக்கிறார்கள்!. எந்த திசையும் கிடையாது. தலை வானை நோக்கி இருக்கும்.

    தமிழ்மணம் 7

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. விடுபட்டுப் போன தாமதமான இந்த மறுமொழிக்கு மன்னிக்கவும்

      Delete