முன்பெல்லாம் நான் பஸ்ஸில் பயணம் செய்யும்போது அடிக்கடி
சாலையில் குறுக்கிடும் சமாச்சாரம் ”ரயில்வே
கேட்”தான். இதனை ரயில்வே லெவல் கிராஸிங்
என்றும் சொல்வார்கள். ஆனாலும்
அதிலும் சுவாரஸ்யம் இருக்கிறது. நடுவில் சிவப்பு வட்டம் போட்ட தகடு பதிதத பழைய ரயில்வே
கேட்டை, நம்மில் பலர் மறந்தே இருப்பார்கள். இந்தகாலத்துப் பிள்ளைகள் பலருக்கு
பார்க்க வாய்ப்பே இருக்காது. ஏனெனில் இப்போது கௌபாய் படத்தில் வருவதுபோல்
இருபக்கமும் இரும்புக் குழாயில் சங்கிலிகள் கோர்த்த கேட். இது பழைய கேட் போன்று
உறுதியானது இல்லை. ரயில்வே கேட்டில் ரயில் கடக்கும் வரை காத்திருக்க சிலருக்கு பொறுமை
இருக்காது. சர்க்கஸ் வேலை செய்வார்கள். உடம்பை வளைத்து நெளித்து இருசக்கர வண்டியை
கேட்டுக்கு அடியில் நுழைத்து தாண்டுவார்கள். பழைய ரயில்வே கேட்டில் இப்படி எல்லாம்
செய்ய முடியாது. இப்போது பல ரயில்வே கேட்டுக்கள் இல்லை. பெரும்பாலும் அவை இருந்த எல்லா இடத்திலும் நான்கு வழிச்சாலை
மேம்பாலங்கள்.
சின்னச்சின்ன
வியாபாரம்:
பஸ் போய்க் கொண்டு
இருக்கும்.. திடீரென்று பஸ் நின்றுவிடும். எட்டிப் பார்த்தால் வரிசையாக பஸ்கள்,
லாரிகள், மாட்டு வண்டிகள். காரணம் ரயில்வே கேட்டை மூடி இருப்பார்கள்.. சார்
வெள்ளரி,
சார் பலாப்பழம்,
சார் முறுக்கு,
சார் மோர், அம்மா மல்லி பூ என்று ஒரே குரல்கள். கொஞ்சநேரம் மூடுவதால்
சிலர் வாழ்வில் கொஞ்சம் வருமானம். இந்த வியாபாரமும் அந்த பகுதியில் விளையும்
பொருட்களை குறைந்த விலையில் விற்பதாக இருக்கும். எங்கள் வங்கியின் SAVINGS BANK
BALANCING SQUAD –
இல் இருந்தபோது
தினமும் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் பயணம். புதுக்கோட்டைக்கு
சற்று முன்னால் இருக்கும் ரயில்வே கேட்டில் வெள்ளரி பிஞ்சு வியாபாரம் நன்றாக
இருக்கும். (இப்போதும் புதுக்கோட்டை சென்றால்
பஸ்நிலையத்தில் அந்த இளம் வெள்ளரி
பிஞ்சுகளை ஆசையாக வாங்கி பழைய நினைவுகளோடு சாப்பிடுவதுண்டு) திருச்சி மணப்பாறை சாலை
ரயில்வேகேட்டில் மணப்பாறை முறுக்கு. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில்
லாலாபேட்டை ரயில்வேகேட் என்றால் வாழைப்பழம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு ரயில்வே
கேட ஒரு பொருளுக்கு விஷேசம். இப்போது எல்லா இடத்திலும் ரெயில்வே மேம் பாலங்கள்.
பஸ் பயணிகள்
சிலர் பஸ்
ஏறியதிலிருந்து பஸ் ஒரு பத்துநிமிஷம் எங்காவது நிற்காதா என்றே வருவார்கள். அவர்கள்
பஸ் நின்றதும் ஒரே ஓட்டமாக ஒரு ஒதுக்குப்புறம் சென்றுவிட்டு அப்பாடா என்று
வருவார்கள்.. அப்போதெல்லாம் சாலை ஓரம் வரிசையாக பெரிய பெரிய புளிய மரங்கள். தம்
போடும் நண்பர்களுக்கு இழுக்க இழுக்க , கேட் திறக்கும்வரை இன்பம் என்பார்கள். ரயில்வே
கேட் திறக்க எப்படியும் கால்மணி நேரம் ஆகும். சிலசமயம் பக்கத்தில் ரயில் நிலையம்
இருந்தால் இரண்டு வண்டிகள் வந்து செல்லும்வரை மூடி இருக்கும்.
கோடம்பாக்கம் ரயில்வே
கேட்:
பழைய
பத்திரிகைகளில் கோடம்பாக்கம் ரயில்வேகேட் பற்றி நிறைய ஜோக்குகள், கார்ட்டூன்கள்
வரும். காரணம் அந்த கேட் வழியாகத்தான் சினிமா நட்சத்திரங்கள் கார்களில் கோடம்பாககம்
ஸ்டுடியோக்களுக்கு சென்று வருவார்கள். கோடம்பாககம் ரயில்வேகேட் போட்டதும்
கார்களில் கருப்புக் கண்ணாடிகளுக்கு உள்ளே இருப்பது யார் என்று பார்ப்பதற்கென்றே
சில ரசிகர்கள் (பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள்) அந்த பக்கம் சுற்றிக் கொண்டு
இருப்பார்கள். ஒரு ரயில்வே லெவல் கிராஸிங்கில் நடந்த கொலையை கண்டுபிடிப்பதுதான்,. நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் நடித்த “புதிய பறவை “ திரைப்படத்தின் சஸ்பென்ஸ்.
“ இளையராஜாவின் பகவதிபுரம் ரயில்வேகேட் “ என்று ஒரு திரைப்படம் கூட வந்தது.
“குசேலன்” என்ற படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றில், வடிவேலு லெவல்கிராசில், பஸ் பயணிகளுக்கு கட்டிங் ஷேவிங்
செய்வார்.
ரயில்வே கேட் கீப்பர்கள்:
இப்போதெல்லாம்
ரயில்வே கேட்கீப்பர்கள் பற்றி தூங்கிவிட்டார் என்றோ, போதையில் இருந்தார் என்றோ
செய்திகள் வருகின்றன. அப்போதெல்லாம் அப்படி கிடையாது. காக்கி பேண்ட் சட்டை போட்டுக்
கொண்டு கழுத்தில் ஒரு சிவப்பு துண்டு போட்டுக் கொண்டு
உஷாராக இருப்பார்கள். பெரியவர்களாக இருந்தால் வாயில் பீடித் துண்டோ அல்லது
சுருட்டோ புகைந்தபடி இருக்கும். கேட் கீப்பர் ரூமிற்கு வெளியில் அவசரத்திற்கு ஒரு
சைக்கிள். ரோட்டோரத்தில் நிழலில் அவரது நண்பர்கள் தாயம் அல்லது ஆடுபுலி ஆட்டம்
ஆடிக் கொண்டு இருப்பார்கள்.
கையசைக்கும் குழந்தைகள்
ரயில்வே கேட்டை
ரெயில் நெருங்கும் போது திடீரென்று அதிக சப்தம். நீராவி என்ஜின் இணைத்த ரயில்
குப்குப் என்று வேர்த்தபடி செல்லும். பஸ்ஸில் இருக்கும் பிளளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. ரயிலுக்கு டாட்டா சொல்வார்கள். அதேபோல
ரயிலில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க பஸ்ஸில் இருப்பவர்களுக்கு கையசைப்பார்கள். சில குழந்தைகள் ஒன்னு,
ரெண்டு என்று ரெயில் பெட்டிகளை எண்ணும். கூட்ஸ் ரெயில் என்றால் வெறும் எண்ணுதல் மட்டும்தான். நான் இதுமாதிரி சமயங்களில் கையசைக்கும்
குழந்தைகளைப் பார்த்து நானும்
கையசைப்பேன். இதிலும் ஒரு மகிழ்ச்சி
இருக்கத்தான் செய்கிறது.
.
(
PICTURES : THANKS TO “ GOOGLE ” )
ஆகா அற்புதம். இது போன்ற எவரும் தொடாத ஆனால் அத்தனை பேருக்கும் தெரிந்த விசயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்த சங்கதி உங்களுக்கு எட்டி விட்டது போலிருக்கே. இந்த ரயில் நிலைய கேட் படத்தை பார்க்கும் போது பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வருகின்றது.
ReplyDeleteசிறப்பான பதிவு.
அவை நாம் மகிழ்ந்த அற்புதமான நினைவலைகள். அருமையாகக் கோர்வையாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
1970 இல் நான் BHEL இல் பணியில் சேர்ந்தேன்.
ReplyDelete1975-1980 வரை அரியமங்கலம் + திருவெறும்பூர் ஆகிய இரண்டு ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்படவில்லை.
காலை 8 மணிக்குள் போய் வருகையைப்பதிவு செய்ய வேண்டும், அலுவலகத்தில். 8.10 வரை க்ரேஸ் டைம் உண்டு. 8.11 முதல் 8.15 வரை கால் மணி நேரம் சம்பளம் கட் ஆகும். 8.16 முதல் 9.00 வரை ஒரு மணி நெரம் சம்பளம் இழக்க நேரிடும். 9.01 என்றால் அரை நாள் லீவ் போட வேண்டும்.
>>>>>
இப்போதுபோல அப்போதெல்லாம் நிறைய பஸ் வசதியும் கிடையாது. காலை 6.15 க்கு [சத்திரம் பஸ் ஸ்டாண்டும் அப்போது கிடையாது] இப்போதுள்ள சென்னை சில்க்குக்கு எதிர்புறம் ஏற வேண்டும். அரியமங்கலம் + திருவெறும்பூர் இரண்டு கேட்டிலும் 15 + 15 நிமிடம் தாமதமாகும். சமயத்தில் இன்னும் தாமதமாகும்.
ReplyDeleteபலகஷ்டங்கள் பட்டாச்சு. அப்போது 1970 இல் பஸ் கட்டணம் 35 காசுகள் மட்டுமே. இப்போது 6 ரூபாய்.
>>>>>
//ஒரு ரயில்வே லெவல் கிராஸிங்கில் நடந்த கொலையை கண்டுபிடிப்பதுதான்,. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த “புதிய பறவை “ திரைப்படத்தின் சஸ்பென்ஸ். //
ReplyDeleteஆஹா, மிகவும் அருமையான படமாச்சே !
நிறைய முறை பார்த்திருக்கிறேன்.
>>>>>
நீராவி எஞ்சின்கள், கேட் கீப்பர், ரெயில்வே கேட்டுக்கள், அங்கு பஸ் நிற்பதால் சிலருக்கு ஏற்படும் சந்தோஷங்கள், வியாபாரிகள், டாட்டா காட்டுவது என எல்லாவற்றையும் அழகாக எழுதியுள்ளீர்கள். மிகவும் ரஸித்தேன்.
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா. மிக்க நன்றி.
அந்தக் கால இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது... நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteபார்த்த ஞாபகம் இல்லையோ...?
பருவ நாடகம் தொல்லையோ...?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ...?
மறந்ததே இந்த நெஞ்சமோ...?
பசுமையானநினைவால்நானும்மகிழ்ந்தேன்
ReplyDeleteசிதம்பரம் – சீர்காழி பாதையில் குறுக்கிடும் இரயில் பாதையில் உள்ள இரயில் கேட் மூடப்பட்டிருக்கும்போது இறங்கி இளநீர் குடித்த ஞாபகம் வருகிறது தங்கள் பதிவைப்படித்ததும். இப்போது அங்கு மேம்பாலமும் கட்டப்பட்டுவிட்டது. மேலும் புறவழிப்பாதை போடப்பட்டுவிட்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய அவசியமும் இப்போது இல்லை. இரயில் கேட் அருகே காத்திருந்த அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை. சில சௌகரியங்கள் வரும்போது சில சந்தோஷங்களையும் இழக்க வேண்டியிருக்கிறது என்பதை உங்கள் பதிவு நினைவூட்டியது. நன்றி!
ReplyDeleteமறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// ஆகா அற்புதம். இது போன்ற எவரும் தொடாத ஆனால் அத்தனை பேருக்கும் தெரிந்த விசயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்த சங்கதி உங்களுக்கு எட்டி விட்டது போலிருக்கே. //
ஜோதிஜி சார்! உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒருவித தொலைவிலுணர்தல் (TELEPATHY) என்ற உணர்வு இருக்கும் போலிருக்கிறது.
// இந்த ரயில் நிலைய கேட் படத்தை பார்க்கும் போது பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வருகின்றது.
சிறப்பான பதிவு. //
தங்களின் அன்பான பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
ReplyDelete// அவை நாம் மகிழ்ந்த அற்புதமான நினைவலைகள். அருமையாகக் கோர்வையாக எழுதியுள்ளீர்கள். //
திரு VGK அவர்களின் அன்பான பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 ) ( 3 )
ReplyDelete// 1970 இல் நான் BHEL இல் பணியில் சேர்ந்தேன்.
1975-1980 வரை அரியமங்கலம் + திருவெறும்பூர் ஆகிய இரண்டு ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்படவில்லை.
காலை 8 மணிக்குள் போய் வருகையைப்பதிவு செய்ய வேண்டும், அலுவலகத்தில். 8.10 வரை க்ரேஸ் டைம் உண்டு. 8.11 முதல் 8.15 வரை கால் மணி நேரம் சம்பளம் கட் ஆகும். 8.16 முதல் 9.00 வரை ஒரு மணி நெரம் சம்பளம் இழக்க நேரிடும். 9.01 என்றால் அரை நாள் லீவ் போட வேண்டும். //
// இப்போதுபோல அப்போதெல்லாம் நிறைய பஸ் வசதியும் கிடையாது. காலை 6.15 க்கு [சத்திரம் பஸ் ஸ்டாண்டும் அப்போது கிடையாது] இப்போதுள்ள சென்னை சில்க்குக்கு எதிர்புறம் ஏற வேண்டும். அரியமங்கலம் + திருவெறும்பூர் இரண்டு கேட்டிலும் 15 + 15 நிமிடம் தாமதமாகும். சமயத்தில் இன்னும் தாமதமாகும்.
பலகஷ்டங்கள் பட்டாச்சு. அப்போது 1970 இல் பஸ் கட்டணம் 35 காசுகள் மட்டுமே. இப்போது 6 ரூபாய். //
எனக்கும் அந்தநாளில் இருந்த அரியமங்கலம், திருவெறும்பூர் ரயில்வே கேட்டுகள், சாலை ஓர புளிய மரங்கள் ஞாபகம் இருக்கின்றன.
உங்கள் வருகைப் பதிவேட்டில் ரயிவேகேட்டால் ஏற்பட்ட சிரமம், நான் மணப்பாறையில் பணிபுரியும்போது எனக்கு அடிக்கடி நேரும். WHY LATE? BUS LATE? - கதைதான்.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4 )
ReplyDelete// ஆஹா, மிகவும் அருமையான படமாச்சே !
நிறைய முறை பார்த்திருக்கிறேன். //
காதிற்கினிமையான பாடல்கள் கொண்ட சிவாஜி நடித்த
” புதியபறவை” படத்தை மறக்க முடியுமா?
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 5 )
ReplyDelete// நீராவி எஞ்சின்கள், கேட் கீப்பர், ரெயில்வே கேட்டுக்கள், அங்கு பஸ் நிற்பதால் சிலருக்கு ஏற்படும் சந்தோஷங்கள், வியாபாரிகள், டாட்டா காட்டுவது என எல்லாவற்றையும் அழகாக எழுதியுள்ளீர்கள். மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா. மிக்க நன்றி. //
பதிவு முழுவதையும் ரசித்த உங்கள் அன்பிற்கு நன்றி!
உங்களைப்போல தொடர் கருத்துரைகளை பதிவர்களை ஊக்குவிக்க யாராலும் எழுதமுடியாது.
வசந்த கால நினைவலைகளில் மூழ்கி, அனுபவித்து எழுதியுள்ளீர்கள். புகையினைக் கக்கியவாறு வரும் நீராவி இஞ்சின்கள், பார்த்து பல காலம் ஆகிவிட்டது.
ReplyDeleteநன்றி
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// பார்த்த ஞாபகம் இல்லையோ...?
பருவ நாடகம் தொல்லையோ...?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ...?
மறந்ததே இந்த நெஞ்சமோ...? //
அந்தக் கால இனிய பாடலை நினைவுபடுத்திய தங்களுக்கு நன்றி!.
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDelete// பசுமையான நினைவால் நானும் மகிழ்ந்தேன் //
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// சிதம்பரம் – சீர்காழி பாதையில் குறுக்கிடும் இரயில் பாதையில் உள்ள இரயில் கேட் மூடப்பட்டிருக்கும்போது இறங்கி இளநீர் குடித்த ஞாபகம் வருகிறது //
//இரயில் கேட் அருகே காத்திருந்த அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை. சில சௌகரியங்கள் வரும்போது சில சந்தோஷங்களையும் இழக்க வேண்டியிருக்கிறது என்பதை உங்கள் பதிவு நினைவூட்டியது. நன்றி! //
வங்கி உயர் அதிகாரி அவர்களின் நல்ல கருத்துரை! நன்றி!
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDelete// வசந்த கால நினைவலைகளில் மூழ்கி, அனுபவித்து எழுதியுள்ளீர்கள். புகையினைக் கக்கியவாறு வரும் நீராவி இஞ்சின்கள், பார்த்து பல காலம் ஆகிவிட்டது. நன்றி //
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்! பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDelete// ரசித்தேன். //
ரசித்”தேன்” – என்ற அந்த ஒற்றைச் சொல்லிலேயே தேன் போன்ற விமர்சனம். நன்றி!
பேருந்து பயணங்களில் பல முறை கேட்ட ஒரு குரல் - “கேட்டு போட்டுட்டானா!” இனிமையான நினைவுகளை மீட்டு எடுத்த பகிர்வு.
ReplyDeleteலாலாப்பேட்டை - கோவை செல்லும்போதெல்லாம் இங்கே நின்று இருக்கிறேன்! வாழைப்பழம் வாங்கி இருக்கிறேன்.
சமீபத்தில் கூட காசி செல்லும்போது வழியில் ஒரு ரெயில்வே கேட்.... நின்றுகொண்டிருந்தபோது நண்பரும் நானும் சேர்ந்து ரயிலில் சென்ற குழந்தைகளுக்கு டாட்டா காண்பித்து மகிழ்ந்தோம்! :) அங்கே சில புகைப்படங்களும் எடுத்தோம்..
மறுமொழி >வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// சமீபத்தில் கூட காசி செல்லும்போது வழியில் ஒரு ரெயில்வே கேட்.... நின்றுகொண்டிருந்தபோது நண்பரும் நானும் சேர்ந்து ரயிலில் சென்ற குழந்தைகளுக்கு டாட்டா காண்பித்து மகிழ்ந்தோம்! :) அங்கே சில புகைப்படங்களும் எடுத்தோம்.. //
அங்கே எடுத்த புகைப்படங்களோடு உங்கள் அனுபவங்களையும் ஒரு பதிவாக எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteமாற்றங்கள் ஒன்றே மாறாதது. ரெயில்வே க்ராஸ்ஸிங்கில் கேட் இருந்து மூடுவதும் அதற்காகக் காத்திருப்பதும் அரிய செயலாகி வருகிறது. இங்கு என் மகன் வீட்டருகில் ஒரு ரெயில்வே க்ராஸ்ஸிங் உண்டு. ரயில்போக்குவரத்தும் கணிசம். காத்திருத்தலும் அதிகம். என்ன ஒரு வித்தியாசம். பொருட்கள் விற்பனையோடு திரு நங்கைகளின் தொந்தரவும் உண்டு. காத்திருத்தல் மேல். ரெயில்வே கேட் இல்லாமல் ரயில் வரும் நேரத்தில் விபத்துக்கள் பற்றிய செய்திகளும் பார்த்திருப்போமே. இந்தப் பதிவு என்னென்னவோ எண்ணங்களைக் கிளருகிறது. பகிர்வுக்கு நன்றி.
திருச்சி செல்லும் போதெல்லாம் முசிறியில் நெருக்கமாக தொடுத்த அடுக்குமல்லி பூச்சரங்களும் , வாழைப்பழங்களும் வெள்ளரிப்பிஞ்சுகளும் வாங்கிய மலரும் நினைவுகள்...
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
உங்களுடைய ரயில்வே கேட் அனுபவத்தை படித்ததும் எனக்கும் எனக்கு ஏற்பட்ட ருசிகரமான நிகழ்வு ஒன்று
ReplyDeleteநினைவுக்கு வருகிறது.
1979ம் வருடம். தூத்துக்குடியில் என்னுடைய திருமணம். நான்கு நாட்கள் கழித்து என்னுடைய புது மனைவியுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கு ரயில். ஆனால் விட்டிலிருந்து புறப்படும்போதே மணி காலை 8.45! ஒரு கி.மீ.க்கும் குறைவுதான் என்றார்கள். ஆனால் இடையில் ஒரு ரயில்வே கேட் இருப்பதை அனைவருமே மறந்துவிட்டனர். ரயில் நிலையத்திற்கு அருகில் வந்துவிட்டோம். குறுக்கே ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் கேட்டின் மறுபுறம் இருந்து பிளாட்பாரத்தில் நிற்கும் ரயிலைக் காண முடிந்தது. ஆனால் கேட் திறந்தால் ஒழிய போக வழியில்லை. நல்லவேளையாக கேட்டில் நின்றுக்கொண்டிருந்த பணியாளர் என்னுடைய மாமனாருக்கு மிகவும் பழக்கமானவர். எங்களுடைய அவசர நிலையை புரிந்துக்கொண்டு எங்களுக்கு மட்டும் கதவை திறந்து சீக்கிரம் போங்கள் என்று அனுப்பி வைத்தார். நாங்கள் ஓடிச் சென்று கண்ணில் பட்ட பெட்டியிலேயே ஏறிவிட்டோம். அடுத்த நிமிடமே ரயில் புறப்பட்டுவிட்டது. அங்கிருந்து அடுத்த நிலையம் மணப்பாறைதான். அதுவரை ரிசர்வ் செய்யப்படாத பெட்டியிலேயே பயணித்து மணப்பாறை வந்ததும் எங்களுடைய பெட்டியில் ஏறி பயணத்தை தொடர்ந்தோம். அன்று மட்டும் அந்த பயணாளி கேட்டை திறக்காமல் இருந்திருந்தால் திருமணம் முடிந்த பின் புறப்பட்ட முதல் பயணமே முடங்கிப் போயிருக்கும். இன்றும் தூத்துக்குடியில் இதே பிரச்சினைதான். ஒன்னாம், ரெண்டாம், மூனாம் என மூன்று ரயில்வே கேட்டுகள். நகரையே இரண்டாய் கூறு போடும் ரயில்வே இருப்புப்பாதையில் நாளும் தொல்லைதான். என்றைக்குத்தான் விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை.
என்னுள்ளும் அந்த நினைவுகள்
ReplyDeleteவேகம் எடுத்தது
சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteமறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDelete// மாற்றங்கள் ஒன்றே மாறாதது. //
GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஒரு காலத்தில் ஒரு மாற்றம் நிகழ ஒரு நூறாண்டு ஆனது. இப்போது நவீன மயத்தில் எல்லாம் உடனுக்குடன் நடைபெறுகிறது.
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி!
ReplyDeleteமறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
// உங்களுடைய ரயில்வே கேட் அனுபவத்தை படித்ததும் எனக்கும் எனக்கு ஏற்பட்ட ருசிகரமான நிகழ்வு ஒன்று
நினைவுக்கு வருகிறது. //
நல்ல சுவையான அனுபவத்தைச் சொல்லிய வங்கி மேலாளர் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > Ramani S said... (1, 2 )
ReplyDelete// என்னுள்ளும் அந்த நினைவுகள், வேகம் எடுத்தது //
அந்த வேகத்தை உங்கள் நடையில் ஒரு பதிவாக எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.
எங்களுக்கு இன்னும் இந்த ரயில்வே கேட் அனுபவம் தொடர்கிறது. மகளின் வீட்டிற்குப் போகும்போது இங்கு நின்றுவிட்டுத்தான் போக வேண்டும். அதேபோல காலைவேளையில் பேரன்களின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இந்த கேட் இருப்பதால் இது திறந்தவுடன் தான் பேருந்து வரும் என்று காத்திருப்போம்.
ReplyDeleteரயில் பயணிகளுக்கு டாடா சொல்வதும் தொடருகிறது!:))
முன்னைப்போல் இப்போது ஐந்தே கேட்டில் மணி அடிப்பதில்லை. அலாரம் சத்தம் வருகிறது. என் சின்னப் பேரம் அதேபோல வாயால் செய்து காண்பிப்பான்.
ரயில்வே கேட் பற்றிய அத்தனை தகவல்களையும் (புதிய பறவை சினிமாவை உட்பட) கொடுத்திருக்கிறீர்கள்.
உங்களின் பின்னூட்டம் மூலம் telepathy என்கிற வார்த்தைக்கு தொலைவிலுணர்தல் என்ற தமிழ் சொல்லையும் கற்றுக் கொண்டேன்.
நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில தமிழ் அகராதி பெயர் சொல்லுங்கள், ப்ளீஸ். ஆன்லைனில் கிடைக்குமா?
//முன்னைப்போல் இப்போது இந்த கேட்டில் // என்று வாசிக்கவும். பிழைக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteமறுமொழி > Ranjani Narayanan said... ( 1, 2 )
ReplyDelete// ரயில் பயணிகளுக்கு டாடா சொல்வதும் தொடருகிறது!: //
ரயிலில் அல்லது ரயிலுக்கு டாடா சொல்லும் குழந்தைகள் எதிரில் நமக்கு யாரும் திருப்பி டாடா சொல்லுகிறார்களா என்று பார்ப்பார்கள். நாம் திருப்பி சொன்னதும் அவர்களுக்கு வரும் சந்தோஷம் சொல்ல முடியாது.
// முன்னைப்போல் இப்போது இந்த கேட்டில் மணி அடிப்பதில்லை. அலாரம் சத்தம் வருகிறது. என் சின்னப் பேரனும் அதேபோல வாயால் செய்து காண்பிப்பான். //
உங்கள் பேரனுக்கு சுற்றியுள்ள பொருட்களை நுணுக்கமாக கவனிக்கும் ஆர்வம் இருக்கிறது. வாழ்த்துக்கள்!
// உங்களின் பின்னூட்டம் மூலம் telepathy என்கிற வார்த்தைக்கு தொலைவிலுணர்தல் என்ற தமிழ் சொல்லையும் கற்றுக் கொண்டேன். //
மறைமலையடிகள் அவர்கள் “ தொலைவிலுணர்தல்” என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். எனது அப்பாவிடம் இருந்த அந்த நூலை பள்ளி மாணவனாக இருந்தபோது படித்தது. TELEPATHY என்பதற்கு அவர் கையாண்ட தமிழ்ச் சொல்லைத்தான் இந்த பதிவில் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்குச் சொன்ன மறுமொழியில் எழுதினேன்.
// நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில தமிழ் அகராதி பெயர் சொல்லுங்கள், ப்ளீஸ். ஆன்லைனில் கிடைக்குமா? //
எங்கள் வீட்டில் நான் அடிக்கடி பயன்படுத்துவது MEGA LIFCO DICTIONARY ( ஆங்கிலம் – ஆங்கிலம் - தமிழ் ) , மற்றும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
ஆன்லைனில் http://www.lifcobooks.com/tamildictionary/default.aspx என்ற தளத்தில் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் இருப்பதாக அறிகிறேன்.
ரயில்வே கேட்டில் இவ்வளவு விஷயங்களா? எரிச்சலூட்டக் கூடியது என்று நினைத்திருந்த இதன் பின்னணியில்தான் எவ்வளவு சுவாரசியங்கள்.
ReplyDeleteசிறப்பான பதிவு
அகராதி பற்றிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொண்டேன். நன்றி!
ReplyDeleteமறுமொழி > T.N.MURALIDHARAN said...
ReplyDeleteசகோதரரின் வருகைக்கு நன்றி!
மறுமொழி > Ranjani Narayanan said...
ReplyDeleteசகோதரி அவர்களின் நன்றிக்கு ஒரு நன்றி!
மறுமொழி 2 > Ranjani Narayanan said... ( 1, 2 )
ReplyDeleteசகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு,
தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy) ஆன் லைனில் ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் மற்றும் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் அகராதிகளை தங்கள் இணைய தளத்துள் வைத்துள்ளனர். ( www.tamilvu.org/library/dicIndex.htm ) - ஒரு தகவலுக்காக
வணக்கம்
ReplyDeleteஇன்று உங்கள் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/4_22.html?showComment=1377137237917#c1900917022381054794
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மறுமொழி> 2008rupan said...
ReplyDelete//வணக்கம் இன்று உங்கள் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும்//
சகோதரர் கவிஞர் ரூபனுக்கு வணக்கம்! சகோதரி அகிலா ” வலைச்சரம்” ஆசிரியை அவர்கள் எனது பதிவுகளை அறிமுகப்படுத்திய தகவலை (கோவையிலிருந்து அகிலா – 4 ) தெரியப்படுத்தியமைக்கு நன்றி! இனிமேல்தான் வலைச்சரம் சென்று பார்க்க வேண்டும்.
அன்பின் தமிழ் இளங்கோ - இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து படித்து இரசித்து மகிழ்ந்து மறு மொழி இடுகிறேன்.
ReplyDeleteபடங்கள் அக்காலத்தினை நினைவூட்டும். நாம் எவ்வளவு ஆண்டுகள் ஆயினும் மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கும் வழக்கம் உடையவர்களாய் இருக்கிறோம்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மறுமொழி> cheena (சீனா) said...
ReplyDelete//அன்பின் தமிழ் இளங்கோ - இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து படித்து இரசித்து மகிழ்ந்து மறு மொழி இடுகிறேன். //
அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி அகிலா அவர்களுக்கும் நன்றி!
//படங்கள் அக்காலத்தினை நினைவூட்டும். நாம் எவ்வளவு ஆண்டுகள் ஆயினும் மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கும் வழக்கம் உடையவர்களாய் இருக்கிறோம்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
பழைய மலரும் நினைவுகளை அசை போடுதல், வலைப் பதிவில் எழுதுதல், வலைப்பதிவில் மற்றவர்கள் எழுதியதைப் படித்தல் என்பது என்றும் ஆனந்தமே! தோழமையோடு நீங்கள் சொல்லியதும் ஆனந்தமே! நன்றி!