Tuesday, 2 July 2013

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்



எனது சின்ன வயதினில் எனது தந்தை பெற்ற தாய்தனை மக மறந்தாலும், பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் எனத் தொடங்கும் வள்ளலாரின்  பாடலை அடிக்கடி பாடக் கேட்டு இருக்கிறேன். அதன்பிறகு வள்ளலாரின் அடியார்கள் நடத்தும்  தைப்பூசத் திருவிழா சமயங்களில் ஒலிபெருக்கியில் கேட்டு இருக்கிறேன்.
ஒருசமயம் திருச்சி சென்ட்ரல் தியேட்டரில் பாதகாணிக்கை படம் பார்த்தேன். அந்த படத்தின் கதையில் மூத்தமகன் (அசோகன்) மாமனார் (எம்.ஆர்.ராதா) பேச்சைக் கேட்டுக் கொண்டு மாமனார் வீட்டில் (எதிர் வீடு) இருப்பான். அங்கிருந்து கொண்டு தனது தந்தை (எஸ் வி சுப்பையா) மீது சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடுத்து கோர்ட்டுக்கு இழுப்பான். கோர்ட்டுக்கு இருவரும் புறப்படுகின்றனர். கோர்ட்டுக்கு கிளம்பும் முன், தந்தை (எஸ் வி சுப்பையா) சாமி கும்பிடுவார்.அப்போது  இந்த பாடலை மனம் உருக பாடுவார். அந்த பாடல் காட்சி இன்றும் எனக்கு மறக்க முடியாத ஒன்றாயிற்று.

வள்ளலார் அந்த பாடலில் சில நுணுக்கமான விஷயங்களை சொல்லி இருக்கிறார். முதலில் தாய்ப்பாசம். எங்காவது பெற்ற தாயை பிள்ளை மறக்குமா? அதேபோல தான் பெற்ற பிள்ளையையே எந்த தாயாவது மறப்பாளா? தாய்ப்பாசம் அத்தகையது. ஆனால் வள்ளலார் இருவருமே மறக்கக் கூடியவர்கள் என்கிறார். இது உண்மையாவதை இப்போது செய்தித் தாள்களில் பார்க்கிறோம். பெற்ற குழந்தையை தாயே வறுமையின் காரணமாக விற்கிறாள்.  அதே போல பெற்ற தாயையே சொத்துக்காக மகனே கொலை செய்கிறான்

அடுத்து உடல் உயிர் இடையே உள்ள நட்பு. இத்தனை நாள் நாம் இருந்த, இந்த உடலை விட்டு பிரிவதா என்று உயிர் நினைப்பதில்லை. அதே போல தன்னை இத்தனை நாள் இயக்கிய உயிர் பிரிகிறதே என்று உடலும் கவலைப் படுவதில்லை.. இந்த கருத்தினை

      குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
      யுடம்போ டுயிரிடை நட்பு.. திருக்குறள் (338)

(உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது டாக்டர் மு.வ உரை )

என்கிறார் திருவள்ளுவர் இதனையும் வள்ளலார் சொல்கிறார்

அடுத்து கலைஞனின் வித்தை. ஒவ்வொரு கலைஞனும் தான் கற்கும் வித்தைகளை மனதாரக் கற்கின்றனர். அவற்றை நெஞ்சினில் ஏற்றி வைக்கிறார்கள்.  சிலசமயம் அந்த நெஞ்சம் மனதாரக் கற்ற அந்த வித்தையையே மறந்துவிடுகிறது. கர்ணனுக்கு தான் கற்ற வித்தை சாபம் காரணமாக சமயத்தில் மறந்து போகும்.

அடுத்து கண்ணும் இமையும். கண்ணன் பாட்டில் பாரதியார் “கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்என்று சொல்கிறார். கண்களை மூடிமூடி திறக்கும் இமைகள் கூட அந்த தொழிலை சிலசமயம் மறந்துவிடுகிறன. இதனையும் வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

 இவ்வாறு இயற்கையிலேயே சில விதி விலக்குகள் நடைபெறுகின்றன. இவ்வாறு நடைபெறுவதையெல்லாம் குறிப்பிட்ட வள்ளலார், எது நடந்தாலும் நான் மட்டும் நமச்சிவாயத்தை மறக்கவே மாட்டேன். என்று சொல்கிறார். இதோ அந்த பாடல்


பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
      
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
      
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
      
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
      
நமச்சி வாயத்தை நான்மற வேனே!
                              -இராமலிங்க அடிகளார்

( திருவருட்பா, இரண்டாம் திருமுறை 23. நமச்சிவாயப் பதிகம் )
 

இதன் பொருள்; (எளிமையாக்கப் பட்டது)

தன்னைப் பெற்ற தாயை அந்த குழந்தையானது மறந்தாலும்,
தான் பெற்ற பிள்ளையை அந்த தாயே மறந்தாலும்தான் நின்று இயங்குதற்கு அமைந்த தேகத்தை யிர் மறந்தாலும்,  
தன்னை இயக்குகின்ற உயிரின் தன்மையை உடல் மறந்தாலும்,   
தன்னை நன்கு கற்று நெஞ்சில் நிலை பெறக்கொள்ளும் கலையுணர்வு அந்த நெஞ்சை மறந்தாலும்,
ண் பார்வைக்குக் காவலாய் அமைந்து மேலும் கீழும் சென்று இமைக்கும் இமைகளைக் கண்கள் மறந்தாலும்,
நல்ல தவத்தர்களான சான்றோர் திருவுள்ளத்திலிருந்து ஓங்கும் நமச்சிவாயம் என்ற திருப்பெயரை நான் மறக்கமாட்டேன்.

32 comments:

  1. எளிமையான விளக்கம் அருமை...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பாடலும் விளக்கமும் பயனுள்ளதாய் இருந்தது.நன்றி

    ReplyDelete
  3. பாடலும், எளிமையாக்கப்ப்ட்டுள்ள கருத்து விளக்கங்களும் மிகவும் அருமையாக உள்ளன.

    ஆங்காங்கே தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள உதாரணங்களும் மிக அருமை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  4. வல்லாளாரின் பாடல்கள் எளிமையும் இனிமையும் வாய்ந்தவை என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன். அதை தங்கள் தெளிவான விளக்கம் மூலம் மெய்ப்பித்து விட்டீர்கள்

    ReplyDelete
  5. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    திரு VGK அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  9. அருமையான பாடல் ..சிறப்பான விளக்கப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. எளிமையான விளக்க்ம்

    ReplyDelete
  11. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    பாராட்டு சொன்ன ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > ராஜி said...
    கருத்துரை தந்த காணாமல் போன கனவுகளைச் சொல்லும் சகோதரி ராஜிக்கு நன்றி!

    ReplyDelete
  13. வள்ளலாரின் வரிகள் திரைப்படத்தில் இடம்பெறும் சூழலைச் சுட்டி, திருக்குறள், இதிகாசம், பாரதியின் பாடல் போன்றவற்றோடு ஒப்புமைப்படுத்தி எளிமையாகவும் மனந்தொடும் வகையிலும் எடுத்துரைத்தமைக்கு நன்றியும் பாராட்டும் ஐயா.

    ReplyDelete
  14. சிறப்பான பகிர்வு. வள்ளலாரின் வரிகள் மனதில் நின்ற ஒன்று.

    ReplyDelete
  15. மறுமொழி > கீத மஞ்சரி said...
    இலக்கிய ஆசிரியை கீதமஞ்சரியின் கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  17. வள்ளலார் பிறந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால், அவரது பாடல்களை சிறுவயதிலேயே கேட்டு அவைகளால் ஈர்க்கப்பட்டவன் நான். அவரது பாடலை எளிமையாக யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கம் தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  18. தமிழ் அழியாமல் காத்துக்கொண்டிருக்கும் உங்களைப்போன்றவர்களின் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  19. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    வங்கி உயர் அதிகாரி திரு வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > கலியபெருமாள் புதுச்சேரி said...
    ஆசிரியர் புதுவை கலியபெருமாள் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  21. பாடலும், விளக்கங்களும் அருமை...

    ReplyDelete
  22. பள்ளிக்கூடத்தில் படித்த செய்யுள். என் தமிழ் ஆசிரியர் இந்தப் பாட்டுக்கு கண்களில் நீர் மல்க விளக்கம் சொல்லுவார். நாங்களும் எங்களை மறந்து கேட்டுக் கொண்டிருப்போம்.
    மிகவும் அர்த்தம் செறிந்த பாடல்.
    பழைய நினைவுகள் கொண்டு வந்தது இந்தப் பாடல்.
    உங்கள் விளக்கம் படிக்க சுவையாக இருக்கிறது.
    படித்த பாடல் என்றாலும் உங்கள் விளக்கத்துடன் படிக்க மிக அருமையாக இருந்தது.

    ReplyDelete
  23. அருமையான விளக்கத்துடன்
    அருமையான அனைவரும் அவசியம்
    அறியவேண்டிய பாடலை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. மறுமொழி > கோவை2தில்லி said...
    // பாடலும், விளக்கங்களும் அருமை... //

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > Ranjani Narayanan said...
    // பள்ளிக்கூடத்தில் படித்த செய்யுள். என் தமிழ் ஆசிரியர் இந்தப் பாட்டுக்கு கண்களில் நீர் மல்க விளக்கம் சொல்லுவார். //
    உண்மைதான். ராகத்தோடு மனம் நெக்குருக பாடும்போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வரும்.

    // படித்த பாடல் என்றாலும் உங்கள் விளக்கத்துடன் படிக்க மிக அருமையாக இருந்தது. //
    சகோதரி அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    கவிஞர் ரமணியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  27. திரைப்பாடலென்றே நினைத்திருந்தேன். இல்லை வள்ளாலாரின் பாடலெனத் தெரிந்தேன். தெளிந்தேன்.

    ஆனால், இறைவனைப்பெரிதாகக் காட்டிக்கொள்ள இவ்வளவு சொல்லியிருக்க வேண்டுமா என்பதுதான் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

    அனைத்து வரிகளையும் நாத்திகர்கள் ஏற்றுக்கொள்வர். ஏனெனில் அனைத்தும் வாழ்க்கை உண்மைகள்தானே? நீங்களூம் அவற்றைத்தான் அப்படித்தான் விளக்கி எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?

    பின்? அனைத்தையும் ஒப்புக்கொண்டு ஒரு நாத்திகர் இறுதிவரியை எப்படி முடிப்பார்?

    எஃது எதை மறந்தாலும், நான்...................மறக்க மாட்டேன்.

    காலியிடத்தை எப்படி நிரப்புவார்கள் என்பதை கற்பனைக்கு விடுகிறேன்.

    ஏன் இவற்றை நான் எழுதுகிறேனென்றால், நம் தமிழ் ஆத்திகப்பெருமக்கள் (ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார், பாரதியார், பட்டணத்தார் போன்ற சித்தர்கள்) சொன்ன வாழ்க்கை உண்மைகள் ஏராளம். மலைக்கவைப்பவை. எனினும் என்ன செய்ய? இறுதியில் அவர்கள் அனைத்தையும் இறைவன் முன்னால் வைத்துவிடுவார்கள். அவ்வுண்மைகளிலிருந்து வேறு செகுலர் பேருண்மைக்கு வழிகாட்டுவதே இல்லை. Their thinking did not cross beyond that. Or, they refused to cross that. If only they had !

    வள்ளலாரின் இப்பாடலும் அப்படியே. Deeply dissatisfying !

    ReplyDelete
  28. மறுமொழி > Anonymous said...

    // திரைப்பாடலென்றே நினைத்திருந்தேன். இல்லை வள்ளாலாரின் பாடலெனத் தெரிந்தேன். தெளிந்தேன். //

    பல நல்ல இலக்கியப் பாடல்கள் திரைப்படம் மூலமே மக்களை சென்று சேர்ந்தன. அந்த வகையில் அந்த திரைப்படத் துறையினருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    // ஆனால், இறைவனைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள இவ்வளவு சொல்லியிருக்க வேண்டுமா என்பதுதான் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. //

    .வள்ளலார் இறைவனை எல்லாவற்றிலும் பெரியவன் என்று நினைக்கிறார். எப்போதுமே பாடலுக்கு விளக்கம் என்பது பெரிதாகவே இருக்கும்

    // அனைத்து வரிகளையும் நாத்திகர்கள் ஏற்றுக்கொள்வர். ஏனெனில் அனைத்தும் வாழ்க்கை உண்மைகள்தானே? நீங்களூம் அவற்றைத்தான் அப்படித்தான் விளக்கி எழுதியிருக்கிறீர்கள் அல்லவா? பின்? அனைத்தையும் ஒப்புக்கொண்டு ஒரு நாத்திகர் இறுதிவரியை எப்படி முடிப்பார்? //

    நானும் எனது மாணவ பருவத்தில் நாத்திகனாக இருந்தவன்தான். வயது மற்றும் அனுபவம் காரணமாக நமக்கும் மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது, வழி நடத்திச் செல்கிறது என்பதை உணர்ந்தவன். கடவுள் உண்டா இல்லையா என்ற தர்க்கம் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்து இருக்கிறது. எல்லாமே அனுமானம், உவமானம் உவமேயங்கள்தான். முடிவு கிடையாது. இங்கு நான் நாத்திகர்கள் யாரையும் வாதுக்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை.

    // இறுதியில் அவர்கள் அனைத்தையும் இறைவன் முன்னால் வைத்துவிடுவார்கள். அவ்வுண்மைகளிலிருந்து வேறு செகுலர் பேருண்மைக்கு வழிகாட்டுவதே இல்லை. Their thinking did not cross beyond that. Or, they refused to cross that. If only they had ! //

    அவர்கள் அதற்குமேல் ஒன்றும் இல்லை, முடிவு அதுதான், பேருண்மை இறைவன்தான் என்று முன்னால் வைத்து விடுகிறார்கள். அதற்கும் அப்பாலும் இருந்தால் தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

    // வள்ளலாரின் இப்பாடலும் அப்படியே. Deeply dissatisfying ! //

    விமர்சனம் யார்மீதுதான் இல்லை? என்றோ அவர் பாடிய ஒரு அமைதியான தமிழ்ப்பாடலுக்கு இவ்வளவு வீரியம்.

    தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
    சிலையென்றால் அது சிலைதான்
    தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
    சிலையென்றால் அது சிலைதான்
    உண்டென்றால் அது உண்டு
    உண்டென்றால் அது உண்டு
    இல்லையென்றால் அது இல்லை
    இல்லையென்றால் அது இல்லை

    - பாடல்: கண்ணதாசன் (படம்: பார்த்தால் பசி தீரும்)

    இன்றைய காலைப் பொழுதை ஒரு நல்ல சிந்தனையோடு துவக்கி வைத்த ANONYMOUS அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  29. மிகவும் அருமை

    ReplyDelete
  30. நல்ல விளக்கம்

    ReplyDelete
  31. அய்யா நல்ல விளக்கம் உங்களின் வாழ்க்கை அனுபவமே நல்ல உதாரணம் கடைசியில் சேரவேண்டி இடம் அதான்.

    ReplyDelete