Sunday, 12 June 2016

மனித்தப் பிறவியும் வேண்டுவதே



பசியேப்பம் விடுபவன் ஆனாலும் சரி, புளியேப்பம் விடுபவன் ஆனாலும் சரி இருவருக்குமே சிலசமயம் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. என்னடா பொல்லாதா வாழ்க்கை என்றோ அல்லது ஏண்டா பிறந்தோம் என்றோ ஒரு அங்காலய்ப்பு மனதிற்குள் உண்டாகி விடுகிறது. அதிலும் தொடர் சோதனைகள் வந்தால் ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று நினைத்து மனம் படாதபாடு படுகிறது.

மனித்தப் பிறவி:

இலக்கியங்களையும், அறிஞர்கள் பொன்மொழிகளையும் வைத்துப் பார்க்கும்போதும், மற்ற உயிரினங்களின் வாழ்க்கை முறையை ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் இந்த பிறவி சிறந்த ஒன்றாகவே சொல்லப் படுகிறது.

அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடுநீங்கிப் பிறத்தல் அரிது

என்று பாடுகிறார் அவ்வையார்.

அதிலும் இந்த மனிதப் பிறவியை அடைவதற்கு முன்பு எத்தனை, எத்தனை பிறவியோ எடுக்க வேண்டி இருக்கிறது என்பது ஆன்மீக நம்பிக்கை. ஒரு உயிரானது, புல்லாக, பூண்டாக, புழுவாக , மரமாக, பல்வேறு மிருகங்களாக, பல்வேறு பறவைகளாக, பாம்பாக, கல்லாக என்று பிறவிகள் பல எடுத்து உழலுவதை

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந் திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
-                                               - மாணிக்கவாசகர் (திருவாசகம்)

என்று சலித்து, இறுதியில் இறைவன் அடிகளைக் கண்டு வீடுபேறு அடைந்ததாக விவரிக்கிறார் மணிவாசகப் பெருமான் என்று அழைக்கப்பெறும். மாணிக்கவாசகர். 

மனித்தப்பிறவியின் துன்பங்கள்:

இவ்வாறெல்லாம் பெருமை வாய்ந்த மனித்தப் பிறவியில் வாழ்க்கை என்பது இன்பமயமாக இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இல்லற வாழ்விலும், வாணிபத்திலும் சிறந்தவராக இருந்த பட்டினத்தார் துறவியாக மாறிய பின்னர், இந்த உடம்பைப் பற்றி சொல்லும் வாசகங்கள் இவை.

கள்வர்ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்;
சலமலப் பேழை,                                                 
இருவினைப் பெட்டகம், 
நாற்றப் பண்டம்,                        
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்,
ஓயா நோய்க்கு இடம்,                                       
சோற்றுத் துருத்தி,
காற்றில் பறக்கும் பட்டம்.

எனவே, வாழ்க்கை துன்ப மயமாகவே இருக்கிறது. இதன் எதிரொலிதான், கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன சில சலிப்பான வார்த்தைகள்.. குசேலபாக்கியானம் என்று ஒரு நூல். இதனை எழுதியவர் வல்லூர் தேவராச பிள்ளை என்பவர். கிருஷ்ணாவதாரத்தின் போது, கண்ணனின் நண்பனாக இருந்த ஏழைக் குசேலனின் கதை சொல்லும் செய்யுள் நூல் இது. அதில் ஒரு பாடல் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, அவர்களை ஆளாக்கும் வரை படும் துன்பத்தைச் சொல்லுகிறது.

 மதலையைப் பெறுநாள் துன்பம்
          
வளர்த்திடும் நாளும் துன்பம்
 
விதலைநோ யடையின் துன்பம்
          
வியன்பரு வத்துந் துன்பங்
 
கதமுறு காலர் வந்து
          
கைப்பற்றிற் கணக்கில் துன்பம்
 
இதமுறல் எந்நாள் சேயால்
          
எற்றைக்குந் துன்ப மானால்.
                                             - குசேலபாக்கியானம் ( 118 )

( பாடலுக்கான தெளிவுரை )  ஒரு குழந்தையைப் பெறுகின்ற காலத்திலும் துன்பம், அதனை , வளர்க்கின்ற  ஒவ்வொரு நாளும் துன்பம், அந்த குழந்தைக்கு பயப்படும்படியான  நோய்கள்  ஏதேனும் வந்தாலும் துன்பம் ,  வாலிப வயதை அடையும்போதும் துன்பம், ஏதேனும் ஆகி விட்டாலும் துன்பம், எனவே குழந்தையால் எக்காலத்தும் துன்பமே என்றால், குழந்தையைப் பெற்று  நிம்மதியாக இருக்கும் நாள்  எந்நாளோ?  

மனித்தப் பிறவியும் வேண்டுவதே:

இவ்வாறெல்லாம் மனிதப் பிறவியில் துன்பங்கள் அடைந்தாலும் இந்த மனிதப் பிறவியும் வேண்டும் என்கிறார் ஒருவர். அவர் அப்பர் பெருமான் எனப்படும் திருநாவுக்கரசர். இவர் தனது இளம் வயதினில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர். அப்போது சமண சமயத்தில் இருந்தார். அவரது தமக்கையார் திலகவதியார்  இவரை சைவ சமயத்தில் சேரச் சொல்லி, வயிற்றுவலியை குணப்படுத்தியதாகச் சொல்வார்கள். அதன் பிறகு அவர்  ஒவ்வொரு சிவத்தலத்திற்கும் சென்று இறைவனைப் பாடுகிறார். அவ்வாறு செல்கையில், தில்லை நடராசர் கோயிலில் இறைவனின் திருமேனி குறித்து பரவசம் ஆனவராய்ப் பாடுகின்றார்.  

                                                                                                                                                         
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே
                                                                                        -திருநாவுக்கரசர்

( இதன் பொருள் ) வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே தோன்றும் புன்னகையையும், பனியின் ஈரம் படர்ந்த சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்ற திருநீற்றீனையும், , இனித்தமுடன் தூக்கிய திருவடிகளையும் காணும் பேறு பெற்றால், இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் வேண்டும்தான்.

கவிஞர் வாலி தனது திரைப்படப் பாடல் ஒன்றில் ( ராக்கம்மா கையைத் தட்டு – படம்: தளபதி ) இந்த தேவாரப் பாடலை, இணைத்து எழுதியுள்ளார். இந்த தேவாரப் பாடல் வரிகள் மட்டும் உள்ள வீடியோ இங்கே. நன்றி: செல்வகுமார் / https://www.youtube.com/watch?v=6478pdqRjw8                 


 

48 comments:

  1. பொது புத்தியில் சொல்வதானால் மனுஷ உடம்பு இல்லாவிட்டால் உலகத்தில் நல்லது கேட்டது எதையுமே அனுபவிக்க முடியாது எனவே மானிடப் பிறவி அவசியம் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரியே. மனிதனாகப் பிறந்த பிறகு மனித உடம்பை நேசிக்கத்தானே வேண்டும்.மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. மனிதப் பிறவியும் வேண்டுவதே!..

    வானுலக தேவர்களும் மண்ணுலகில் பிறக்க வேண்டும் என, வரம் கேட்கின்றனர்..

    அப்படியிருக்க -
    மனித்தப் பிறவியும் வேண்டுவதே - இம்மாநிலத்தே!..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. இலக்கியத்திலிருந்து சிறந்த மேற்கோள்களோடு சிறப்பான பகிர்வு. பட்டினத்தார் பாடல் வெகு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த பதிவினில் மேற்கோளாகச் சொல்லப்பட்ட பட்டினத்தார் வாசகங்கள் கொண்ட பாடல் மிகவும் நீளமானது; எனவே ஒன்றிரண்டு வாசகங்கள் மட்டுமே எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.

      Delete
  4. அழகிய விளக்கவுரைகளுடன் பகிர்வு நன்று நண்பரே...
    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  5. தத்துவப்பதிவு என்றாலும் வாழ்க்கையின் உண்மைகளை அழகாகச் சொல்லும் பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களுக்கு நன்றி.தத்துவப் பதிவுதான். எனக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள் இவ்வாறு எழுத வைத்து விட்டன.

      Delete
  6. ஆஹா, ஒரே பதிவினில் எத்தனைச் செய்திகள் ... அத்தனையும் அழகாகக் கோர்வையாக ... தங்கள் பாணியில் தனிச்சிறப்பாக ... பாராட்டுகள். வாழ்த்துகள்.

    குசேலபாக்கியானம் ... பாடல் மிகச்சிறப்பாக உள்ளது. என் பழைய பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

    ReplyDelete
    Replies
    1. http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html
      தலைப்பு: ”மழலைகள் உலகம் மகத்தானது”

      மேற்படி பதிவு .....

      அமைதிச்சாரல் + மணிராஜ் + முத்துச்சிதறல்

      ஆகிய முப்பெரும் தேவியினரின் அழைப்புக்களை ஏற்று தொடர் பதிவாக என்னால் எழுதி வெளியிடப்பட்டது.

      2011ம் ஆண்டே அது மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. :)

      இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      Delete
    2. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிக்க, நானே உங்களுக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள். உங்களது அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      நீங்கள் இங்கு சுட்டிக் காட்டிய ”மழலைகள் உலகம் மகத்தானது” என்ற http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html உங்களுடைய பதிவினைப் படித்தேன். திருக்குறள் வரிகளுடன் சுவாரஸ்யமான செய்திகள். நீங்கள் சொன்ன குசேலர் கதையைக் கேட்டவுடன், பள்ளிப் பருவத்தில் நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் இந்த கதையினைச் சொன்ன ஆசிரியர் (பெயர் நினைவில் இல்லை) முகம் நினைவுக்கு வந்தது. குசேலருக்கு 27 குழந்தைகள் என்பதனைக் காட்ட 3 x 9 = 27 குழந்தைகள் படங்கள். இதுபோல் புதுமையான சிந்தனை வலைப்பதிவர்களில் உங்கள் ஒருவருக்கே தோன்றும். உங்களிடம் கதை கேட்ட குழந்தைகளே, உங்களது மருமகள்கள் என்பது மகிழ்வான செய்தி.

      சாந்தி மாரியப்பன் (ஆமைதிச் சாரல்), ஆன்மீகப் பதிவர் ராஜேஸ்வரி (மணிராஜ்), மனோசாமிநாதன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்பதிவு என்றதும் அன்றைய இவர்களது பழைய பதிவுகள் நினைவுக்கு வந்தன. அதிலும் மறைந்த சகோதரி ராஜேஸ்வரி (மணிராஜ்) அவர்களது பெயரைக் கண்டதும், அம்மட்டோ இவ்வாழ்வு என்று கண்ணீர் வந்து விட்டது.

      Delete
  7. அருமையான பதிவு ஐயா
    பாடல்கள் கண்டு மகிழ்ந்தேன்
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. Replies
    1. அது என் தந்தை விரும்பிய பாடல் .

      அது காலை வேளையில் திருச்சி தாயுமானவர் சன்னதியில்
      ஓதுவார் பாடும் தேவாரப்பாடல்களில் ஒன்றாம்.
      அவர் பாடும் பண் காந்தாரத்தில் நான் இன்று
      என்னால் இயன்ற வரை பாடுவேன்.

      Delete
    2. நன்றி அய்யா! உங்கள் வலைத்தளம் வந்து நீங்கள் பாடிய இந்த தேவாரப் பாடலைக் கேட்டு ரசித்தேன்.

      Delete
  9. சிலநேரங்களில் நீங்கள் சொல்வது போல் நமக்கு மட்டும் ஏன் துன்பங்கள் தொடர்கதை என்று எண்ணம் வரும். நாம் யாருக்கும் துன்பம் அளிக்கவில்லையே அப்புறம் ஏன் இந்த துனபம் வருகிறது என்ற எண்ணம் வரும். அதற்கு பூர்வ ஜன்ம வினை என்று சொல்லிவிடுவார்கள் . அடித்தாலும் திட்டடினாலும் குழந்தை அம்மா காலை கட்டிக் கொள்வது போல் இறைவனிடம் தான் சரண்யடைய தோன்றுகிறது.

    அருமையான பாடல்களுடன் வாழ்க்கையை கூறும் பதிவு அருமை.
    வாழ்த்துக்கள். எனக்கும் மன ஆறுதல் கிடைத்தது.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் பண்பட்ட நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. //கவிஞர் வாலி தனது திரைப்படப் பாடல் ஒன்றில் ( ராக்கம்மா கையைத் தட்டு – படம்: தளபதி ) இந்த தேவாரப் பாடலை, இணைத்து எழுதியுள்ளார்//

    திரைப்படம் என்றாலே டீம் ஒர்க் தான். அநேகமாக இளையராஜாவின் யோசனையாக இருக்கும் என்று நினைக்கிறேன். திருவாசகம், தேவாரம் எல்லாமே ராஜா சாருக்கு நெருக்கமானவை. எந்த நேரத்தில் எது அவரது யோசனையில் உதித்து இசைக்காவியம் ஆகும் என்று சொல்வதற்கில்லை அப்படியான ஒரு ஜீனியஸ் அவர்!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. திரையுலக ‘டீம் ஒர்க்’ பற்றி நன்றாகவே எடுத்துரைத்தீர்கள்.

      Delete
  11. நமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம் ஈன இப்படி என்று வருத்தப்படுவதுண்டு. அப்பொழுதெல்லாம் ஞாநிகள் எழுதி வைத்துள்ள பாசுரங்களில் இளைப்பாறலாம்.
    அருமையான ஆன்மிகம் கலந்தப் பதிவு.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இசை, அதிலும் தமிழ் இசையைக் கேட்கும்போது உண்டாகும் லயிப்பு எந்த சோகத்தையும் வென்று விடும்.

      Delete
    2. இந்த இடத்தில் பாரதிதாசனாரை நினைவு கொள்ளலாமா?..

      'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ...'

      Delete
    3. எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. இந்தப் பிரச்சினை சகல வீடுகளிலும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் சுருக்கமான கருத்திற்கு நன்றி அய்யா.

      Delete
  13. மிக அருமையாக பல்வேறு மேற்கோள்களை காட்டி எழுதப்பட்ட பதிவு! சில சமயம் சலிப்பு எழுந்தாலும் மனிதப்பிறவி எடுப்பது மகத்தானது என்றே தோன்றுகிறது. எத்தனை எத்தனை மகான்களை இந்த மனிதப்பிறவி உலகிற்கு ஈந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மனித்தப் பிறவியும் வேண்டுவதே.

      Delete
  14. மனித பிறவியும் வேண்டுவதே என்றாலும் பிறப்பு என்பது எல்லாம் விபத்தே என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் ஆழமான சிந்தனை கொண்ட கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது முக்காலும் (எக்காலமும்) உண்மையானதே. யார்தான் இந்த பிறப்பை கேட்டார்கள். வந்து பிறந்து விட்டதனால் வாழ்கின்றோம்.

      Delete
  15. ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
    அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
    மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
    வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
    சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
    தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
    கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
    குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!// விவேக சிந்தாமணிப் பாடல், என்ன தான் துன்பமும் சலிப்பும் வந்தாலும் வாழ்க்கையை நம்மில் பலர் ஓட்டுகிறோம். கொடுத்த பாடல்கள் அருமை!
    நாவுக்கரசர் தேவாரமொத்த ஒரு பிரபந்தப்பாடல் -
    பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
    அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

    ReplyDelete
    Replies
    1. நண்பர் யோகன் பாரிஸ் அவர்களின் இலக்கிய மேற்கோள்களுடன் கூடிய கருத்துரைக்கு நன்றி.

      நீங்கள் குறிப்பிட்ட ‘ஆவீன மழை பொழிய’ என்று தொடங்கும் பாடல் விவேக சிந்தாமணி கிடையாது. இந்த பாடல் ’தனிப்பாடல்கள்’ என்ற வரிசையில், இராமச்சந்திர கவிராயர் பாடியதில் வரும். சிலசமயம் எல்லோருக்கும் ஏற்படும் குழப்பம்தான் இது. நானும் அடிக்கடி படித்து இருக்கிறேன்.

      ’பச்சை மாமலை போல் மேனி ‘ (தொண்டரடிப் பொடியாழ்வார்) என்ற பாசுரமும் எனக்குப் பிடித்தமான ஒன்று.

      Delete
  16. நான் அதிகம் ரசித்த பாடல்களில் ஒன்று நாவுக்கரசரின் இப்பாடல்.தற்போது சுந்தரர் தேவாரம் படித்துவருகிறேன். இவை போன்ற பாடல்கள் மனதிற்கு அமைதியைத் தருகின்றன. அருமையான பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. மாணிக்கவாசகர் பாடலை மனனம் செய்துவிட்டேன் ... பதிவு அருமை ...

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லா பிறப்பும் பிறந் திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    - - மாணிக்கவாசகர் (திருவாசகம்)... ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தம்பி ஸ்ரீராம் அவர்களின் மனனப் பயிற்சிக்கு பாராட்டுக்கள். நமது தமிழ் இலக்கியப் பாடல்களை எவ்வளவுக்கு எவ்வளவு தெரிந்து வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு வாழ்க்கைக்கும் பயன்படும். மனனமான பாடல்கள் மேடைப் பேச்சுக்கும் உதவும்.

      Delete

  18. மனிதப்பிறவி படும்பாட்டை 4 பாட்டுகளை மேற்கோள் காட்டி கடைசியில் மருணீக்கியார் பாடலைச் சொல்லி மனிதப்பிறவி வேண்டும் என்று என்பதை வெகு அழகாய் சொல்லிவிட்டீர்கள்! ஒரே பதிவில் 5 பாடல்களை இணைத்த அற்புதத்தை என்னவென்று சொல்ல! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய அய்யா V.N.S அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  19. அருமையான இலக்கிய அலசல்பாடல்கள் .மனித பிறவி மேல் என்பேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தனிமரம் - சிவநேசன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  20. https://youtu.be/h3epa83tBDk, நம்பள்கி என்பவர் பதிவில் பார்த்தேன். உங்கள் பார்வைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் யோகன் பாரிஸ் அவர்களுக்கு நன்றி. நம்பள்கியின் வாசகர்களில் நானும் ஒருவன். உங்கள் கருத்துரையைக் கண்டதும், அவர் பதிவிற்குப் போய் கருத்துரையையும் தந்து விட்டேன். மீண்டும் நன்றி.

      Delete
  21. முகநூலில் இருந்து வந்தேன். :) மனிதப் பிறவியும் வேண்டுவது தான் எனினும் துன்பங்கள் தொடருகையில் ஏன் இந்தப் பிறவி என்றே அனைவருக்கும் தோன்றும். ஆனாலும் உங்கள் பதிவு விளக்கமான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  22. அருமையான தத்துவப் பதிவு அதுவும் தேவாரம், பட்டினத்தார் பாடலுடன். விளக்கங்களும் அருமை. மனிதப் பிறவி நல்ல பிறவிதான் வரும் இடர்களை எதிர்க்கொண்டு நேர்மறையுடன் வாழக் கற்றுக் கொண்டுவிட்டால் இப்பிறவியும் சுகிக்கும். இல்லை என்றால் என்னடா பொழப்பு என்ற ஒரு அலுப்பு வரும்...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete