Sunday, 22 May 2016

வங்கிக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?



’கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் தார்வேந்தன் இலங்கை இராவணன்’ என்று சொல்லுவார்கள். கம்பர் இவ்வாறு பாடவில்லை; இது ஒரு தனிப்பாடல் வரி என்பார்கள். நிற்க. இப்போதெல்லாம் கடன் கொடுத்தவர்கள்தான் கலங்கி நிற்கிறார்கள் என்பது புதுமொழி. ஆனாலும் வங்கிக் கடன் என்றாலே கொடுத்தவரும் கலங்குவதில்லை; வாங்கியவர்களில் கலங்காதவர்களும் உண்டு.

இருபது அம்சத் திட்டம்:

நான் வெளியூரிலிருந்து உள்ளூர் நகரக் கிளைக்கு பணிமாற்றல் பெற்று வந்த நேரம். பாரதப் பிரதமரின் 20 அம்சத் திட்டத்தின் கீழ்,சுயவேலை வாய்ப்பு என்ற பெயரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரையின்படி அரசு வங்கிகளில் கடன் தொகை வழங்கிக் கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல அவரவர் ஏரியாக்களுக்கு ஒதுக்கப்பட்ட வங்கிகளுக்கு மக்கள் படையெடுப்பு. விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்து தருவதற்கென்றே கடைவீதியில் சிலர் கடை போட்டு, கூடவே ஸிராக்ஸ் மெசினும் வைத்து நல்ல வியாபாரம். சில சமயம் வங்கி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாவிடில் வங்கி ஊழியர்களிடம் கேட்டு விண்ணப்ப பாரங்களில் எழுதுவார்கள். . இதில் அரசியல்வாதிகள் சிபாரிசுக் கடிதங்களும் உண்டு. வேலை வாய்ப்பு அலுவலகம், தாலுகா அலுவலகம், கட்சி ஆபிஸ், வங்கிகள் என்று அலைந்ததன் பலனாக, கிட்டத் தட்ட எல்லோருக்குமே கடன் தொகை கிடைத்தது எல்லாம் முடிந்து கடன் வாங்கிய ஒருவர் என்னிடம் கடைசியாக கேட்ட கேள்வி “ சார்! வங்கியில் வாங்கிய இந்தக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?” என்பதுதான்.

விவசாயி என்றால்..

இந்திய விவசாயி என்றால் நிறையபேரின் மனக்கண்ணில் வருவது ஏர் கலப்பையும், மேலாடை அணியாத விவசாயியும்தான். ஆனால் நடைமுறையில், வங்கிக்கடன் பெறுபவர்கள் அனைவருமே வசதியான விவசாயிகள்தான். இவர்கள் இலவச மின்சாரம், உர மான்யம், விதை மான்யம், கடன் தள்ளுபடி என்று எல்லா சலுகைகளும் பெறுவார்கள். அவர்கள் விவசாயத்திற்கு என்று டிராக்டர் வாங்குவார்கள். தாங்கள் வைத்து இருக்கும் நிலங்களில் பயன்படுத்துவது மட்டுமன்றி, மற்ற விவசாயிகளுக்கும்  இந்த டிராக்டரை மணிக்கு இவ்வளவு என்று வாடகைக்கும் விடுவார்கள்.. ஆனால் கடன் வசூல் என்று போனால் பணத்தை ஒழுங்காக கட்டுவது இல்லை.  காரணம் என்றேனும் ஒருநாள் ஆட்சியில் இருக்கும் அல்லது ஆட்சிக்கு வர இருக்கும் அரசியல் கட்சிகள், இந்த விவசாயக் கடனை எல்லாம், தள்ளுபடி செய்துவிடும் என்ற எதிர்பார்ப்புதான். ஒரு சாதாரண விவசாயியும், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் இந்த விவசாயியும் ஒன்றா? என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஒருமுறை நாளிதழ் ஒன்றில் நான் கண்ட விளம்பர வாசகம் ‘இலவச மின்சாரம் மற்றும் பம்புசெட்டுடன் கூடிய விவசாய பண்ணைத் தோட்டம் விற்பனைக்கு’

விஜயமல்லையாக்கள்:
                                                                                                                                                                  
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், ப்ளாக் – என்று விஜயமல்லையாவைப் பற்றி விமர்சனம் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு செய்தி பரிமாற்றம் இருந்தது. ஒருவிதத்தில் வங்கி நடைமுறைச் சட்டத்தில், கடன் வழங்குவதில் உள்ள அரசியலையும், வசூல் விஷயத்தில் உள்ள பலவீனத்தையும் இவர்களால்தான் மக்கள் தெரிந்து கொண்டனர் எனலாம். இதில் குறிப்பாக சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோன்ற மல்லையாக்கள் உருவாக எல்லா அரசியல் கட்சிகளுமே காரணம் என்பதுதான். இது போன்ற ஆட்களிடம் கட்சி பேதமின்றி நன்கொடை தாராளமாக இருக்கும். எனவே இந்த விஜயமல்லையாக்கள் வங்கிக்கடன் பெறுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளுமே உதவும். இவர்களும் கிடைத்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு, சட்டத்தில் இருக்கின்ற, சந்து பொந்துகளில் நுழைந்து, வங்கிக் கடனை, வாராக் கடனாக (NPA) மாற்றி விட்டு ’பெப்பே’ காட்டி விடுகின்றனர். சிறிய கடன்காரர்கள் வகை தெரியாமல் முழிக்கிறார்கள். இவர்களிலும் மல்லையாக்கள் இருக்கிறார்கள். வங்கிகளில் வாராக்கடன் என்பது நாட்டிற்கு பொருளாதாரக் கேடு.

                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

44 comments:

  1. வங்கிகளில் வாராக்கடன் என்பது நாட்டிற்குப்பெரும் சீர்கேடுதான்
    சந்தேகமே இல்லை ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  2. திருப்பி செலுத்த முடியும் நிலையில் இருந்தும் செலுத்தாமல் இருப்பது அரசியல் வாதிகளை நம்பித்தான்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த நண்பருக்கு நன்றி.

      Delete
  3. //வங்கிகளில் வாராக்கடன் என்பது நாட்டிற்கு பொருளாதாரக் கேடு. //

    ஆம். தகுந்த உதாரணங்களுடன் கூடிய நல்ல அலசல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. எல்லோரும் மல்லையாக்களாக இருந்தால் உங்க கதி? எல்லாமே காந்தி கணக்காக இருந்தால் வங்கிகள் என்ன ஆகும்? உங்களுக்கு சம்பளம்? பொருளாதாரம்...இந்தியா அவுட்!

    ReplyDelete
    Replies
    1. என்ன ஆகும்? பெரும்பாலும் இவ்வாறு நிகழ வாய்ப்பில்லை. ஏனெனில் R.B.I வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வங்கிக்கும் டெபாசிட் மற்றும் கடன் – ஆகியவற்றில் ஒரு வரை (Limit) உண்டு. அப்படியும் ஏதாவது நிகழ்ந்தால் ஒரு வங்கியை இன்னொரு வங்கியுடன் இணைத்து விடுவார்கள்; அல்லது ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரணத்தை சட்டப்படி கொடுத்து விடுவார்கள். அரசு நலத் திட்டங்களுக்கு அரசு வங்கிகள் மட்டுமே கடன் தருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வாராக்கடன்கள். (இப்போதும் விஜயமல்லையா போன்றோரின் சொத்துக்கள் வங்கிகளின் பிடியில்தான் உள்ளன; அவற்றில் வந்தவரை லாபம்தான்)

      Delete
  5. நல்ல அலசல்! இங்கே, வங்கிக்கடன்கள் கட்ட முடியாமல் யாருக்கும் சொல்லாமல் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு இந்தியாவிற்கு விமானமேறுவது அடிக்கடி நடந்து கொன்டிருக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. டிராக்டருக்காக வங்கிக் கடன் வாங்கிய பெருவிவசாயி (!)
    - 2006ல் ஆட்சி மாற்றத்தின் போது கடன் தள்ளுபடியாகியதில்

    ஊரான் வீட்டு நெய்யே!.. என் பெண்டாட்டி கையே!..

    - என்று விழா கொண்டாடி மகிழ்ந்ததைக் கண்டேன்..

    இன்னும் அந்த அதிர்ச்சி நீங்கவில்லை - எனக்கு..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. வராது என்று தெரிந்தும் ,மல்லையாக்களுக்கு கடனை வாரி வழங்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் !

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களே! இவர் போன்ற பெரும் புள்ளிகளுக்கு கடன் கொடுக்கும்போதே, இது வராத கடன் என்று எப்படி சொல்ல முடியும். வங்கிக் கடனுக்குத் தேவையான சொத்துக் கணக்கு, பத்திரங்கள், பான் எண், ஜாமீன் - என்று எல்லாமே சட்டப்படி கொடுத்துதான் கடன் பெறுகிறார்கள். மேலும் நிச்சயம் ஒரு பெரிய அரசியல் கட்சியின் சிபாரிசும் இருக்கும்.

      Delete
  8. எந்தக் கடனுக்கும் ஈடு surety இருக்கும் அல்லவா வாராக் கடன்களுக்கு அவற்றை ஈடாக எடுத்துக் கொள்ளலாம் தானே . என்ன விஜய மல்லையாக்களுடன் மல்லுக் கட்டித்தான் ஈடு பெற முடியும் வங்கிகள் இல்லாதோரைத் தான் நெருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான். காத்திருந்து, காத்திருந்து காலங்கள் ஓடிவிடும். மரியாதைக்குரிய G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. இன்னைக்கு விவசாயக் கடன் தள்ளுபடி பண்ணி இருக்காங்க அம்மா! பெரும்பாலும் இந்த கடன் தள்ளுபடியில் பெரிய விவசாயிகளே லாபம் அடைகின்றனர். இப்படிப்பட்ட பொதுப்படையான கடன் தள்ளுபடி தவிர்க்கலாம்! ஆனால் ஓட்டுக்காக இதையெல்லாம் செய்து வங்கிகளை போண்டியாக்கிவிடுகின்றன அரசுகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நானும் செய்தியைப் படித்தேன். எல்லாமே அரசியல்தான். வங்கிகள் இதனால் போண்டியாகாது. அரசாங்கக் கணக்கிலிருந்து வங்கிகளுக்கு ஒரு Paper Transaction மூலம் வரவு வைக்கப்பட்டு விடும். (கூட்டுறவு வங்கிகள் நடைமுறை எப்படி என்று தெரியாது)

      Delete
  10. உண்மையை நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  11. கீழ்க்கண்ட இழையைப் பாருங்கள். இது விஷயத்தில் நிறைய தகவல்கல் கொட்டிக் கிடக்கு!

    http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=157&t=18620&start=15

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சுட்டிக் காட்டிய ’சுக்ரவதனீ’ இணையதளத்தில் உள்ள கே.எஸ். ரமேஷ் அவர்கள் எழுதிய ‘வியக்க வைக்கும் KING FISHER கதை !!!’ என்ற கட்டுரையை நேற்று இரவு படித்தேன். அதில் நிறைய புதிய செய்திகளைத் (குறிப்பாக தனது நிறுவன பங்குகளை வைத்தே வங்கிகளிடம் மல்லையா செய்த கில்லாடித்தனத்தை) தெரிந்து கொண்டேன். சுட்டிக் காட்டிய தங்களுக்கு நன்றி.

      Delete
  12. நூற்றுக்கு நூறு உண்மை

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. இந்திய விவசாயி என்றால் நிறையபேரின் மனக்கண்ணில் வருவது ஏர் கலப்பையும், மேலாடை அணியாத விவசாயியும்தான். ஆனால் நடைமுறையில், வங்கிக்கடன் பெறுபவர்கள் அனைவருமே வசதியான விவசாயிகள்தான். இவர்கள் இலவச மின்சாரம், உர மான்யம், விதை மான்யம், கடன் தள்ளுபடி என்று எல்லா சலுகைகளும் பெறுவார்கள். அவர்கள் விவசாயத்திற்கு என்று டிராக்டர் வாங்குவார்கள். தாங்கள் வைத்து இருக்கும் நிலங்களில் பயன்படுத்துவது மட்டுமன்றி, மற்ற விவசாயிகளுக்கும்  இந்த டிராக்டரை மணிக்கு இவ்வளவு என்று வாடகைக்கும் விடுவார்கள்.. ஆனால் கடன் வசூல் என்று போனால் பணத்தை ஒழுங்காக கட்டுவது இல்லை.  காரணம் என்றேனும் ஒருநாள் ஆட்சியில் இருக்கும் அல்லது ஆட்சிக்கு வர இருக்கும் அரசியல் கட்சிகள், இந்த விவசாயக் கடனை எல்லாம், தள்ளுபடி செய்துவிடும் என்ற எதிர்பார்ப்புதான். ஒரு சாதாரண விவசாயியும், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் இந்த விவசாயியும் ஒன்றா? என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஒருமுறை நாளிதழ் ஒன்றில் நான் கண்ட விளம்பர வாசகம் ‘இலவச மின்சாரம் மற்றும் பம்புசெட்டுடன் கூடிய விவசாய பண்ணைத் தோட்டம் விற்பனைக்கு’



    இத்தனையும் உண்மைதான் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  14. வணக்கம் ஐயா.வாராக்கடன் ஒரு நட்டம் என்பது உண்மையே.பயனுள்ள பதிவு ஐயா.

    எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது ஐயா.விவசாயி கடன் பற்றி தாங்கள் கூறினீர் அல்லவா,அதில் இருந்து தான் கேள்வி ஐயா.சில நாட்களுக்கு முன்னர் 62 விவசாயிகள் தனது கடனை திருப்ப கட்டயியலாமல் மாண்டனர்.விவசாயிகளுக்கு மின் கட்டணம் இல்லை.அது போல ஏன் விவசாயிகளுக்கு கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்யக் கூடாது..?? வட்டிக்கு பதிலாக அசல் தொகையை மட்டும் கட்டினால் போதாதா ஐயா..??வட்டி கட்ட முடியாமல் தானே விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் ஐயா.

    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. // எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது ஐயா.விவசாயி கடன் பற்றி தாங்கள் கூறினீர் அல்லவா,அதில் இருந்து தான் கேள்வி //

      சகோதரி வைசாலி அவர்களின் நியாயமான கேள்விக்கு நன்றி. இந்த கேள்விக்கு ஒரு பெரிய பதிவே எழுதலாம். நான் பொருளாதார அல்லது விவசாய நிபுணர் இல்லை என்றாலும், நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில், எனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லுகிறேன்.

      // ஐயா.சில நாட்களுக்கு முன்னர் 62 விவசாயிகள் தனது கடனை திருப்ப கட்டயியலாமல் மாண்டனர்.விவசாயிகளுக்கு மின் கட்டணம் இல்லை.அது போல ஏன் விவசாயிகளுக்கு கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்யக் கூடாது..?? வட்டிக்கு பதிலாக அசல் தொகையை மட்டும் கட்டினால் போதாதா ஐயா..??வட்டி கட்ட முடியாமல் தானே விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் ஐயா.//

      இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை என்பது வருத்தமான விஷயம்தான். ஆனால் வங்கிக் கடனை, வட்டியை கட்ட முடியாததற்காக எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் அரசு வங்கிகளில் நிரம்ப கெடுபிடிகள் ஏதும் கிடையாது; சட்டப்படியான நடவடிக்கைகள் மட்டுமே. அதுவும் செய்யவில்லை என்றால் வங்கி நிர்வாகம், வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும். (அரியலூர் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு தனியார் நிதி நிறுவனம் ஒன்றுதான் காரணம் என்று தெரிய வருகிறது. தனியார் பற்றி சொல்ல வேண்டியதில்லை.)

      நாட்டின் வளர்ச்சி மற்றும் லாப நோக்கம் இவற்றிற்காக தொடங்கப்பட்ட வங்கிகள், மற்ற சமூக நிறுவனங்கள் போன்று செயல்பட முடியாது எனவே விவசாயிகள் வாங்கிய கடனுக்கு அவைகள் தங்கள் இஷ்டப்படி கடன் தள்ளுபடி அல்லது வட்டியில்லாக் கடன் என்று எதுவும் செய்து விட முடியாது. இவற்றிற்கான அதிகாரம் அரசாங்கத்தின் (நிதி அமைச்சகம்) கையில்தான் இருக்கிறது. (கடந்தமுறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேர்தல் நெருங்கிய சமயத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக்கடன் வட்டி தள்ளுபடி என்று அறிவிப்பு செய்ததை இங்கு நினைவு கூர்க. அதேபோல் இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசு, தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்துள்ளதையும் அறிவீர்கள். இந்த பட்டியலில் யார் யார் எந்த விவசாயத்திற்கு என்ன வாங்க விவசாயத்தின் பேரில் கடன் வாங்கினார்கள் என்ற பட்டியலும் இருந்தால் உண்மை நிலவரம் தெரிய வரும். )

      எனவே மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்தான் இதற்கான குரலை எழுப்ப வேண்டும். எத்தனை பேர், எத்தனை முறை குரல் எழுப்பி இருக்கிறார்கள்? குரல் எழுப்பி இருந்தால் ஏன் ஆளுங் கட்சிகள் செய்யவில்லை?

      Delete
    2. தங்களின் பதிலுறைக்கு மிக்க நன்றிகள் ஐயா.உண்மை தான் ஐயா மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்பினால் இந்நிலை மாறுவதற்கு வாய்ப்புள்ளது.இப்பொழுது புரிந்துக் கொண்டேன் ஐயா.நன்றி.

      Delete
  15. பெரிய கடன்காரர்கள் தப்பிவிடுகின்றார்கள்,தப்பவிடப்படுகின்றார்கள். சிறிய கடன்காரர்கள் தொல்லைபடுத்தப்படுகிறார்கள். வேதனையே.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. வங்கிகள் என்பவை பணத்தை உற்பத்தி செய்யும் கேந்திரங்கள் அல்ல.
    பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று அவர்களுக்கு வட்டி கொடுத்து பொது மக்களீடமிருந்து பெற்ற பணத்தை தேவையானவர்களுக்கு கடன் கொடுத்து அவர்களிடமிருந்து வட்டியைப் பெற்று லேவாதேவி செய்யக் கூடிய நிருவங்களே வங்கிகள். பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெறும் பொழுது அவர்களுக்கு கொடுக்கும் வட்டிப் பணத்தை விட ஒன்றரை அல்லது இரண்டு சதவிகிதம் அதிகமாக நிர்ணயித்து பணம் தேவையானவர்களுககு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. இந்த வட்டி விகிதங்களையெல்லாம் நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வங்கிகளின் தலைமை பீடமான இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானிக்கிறது.

    அது சரி, வங்கிக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது?

    1. பணம் தேவையானவர்களுக்கு கடன் கொடுக்கும் பொழுது வரும் அதிக வட்டியான ஒன்றரை அல்லது இரண்டு சத்விகித வட்டிப் பணம்.

    2. நகைகளை அடமானமாகப் பெற்று அதற்கு ஈடாக பணம் தருவதில் வரும் வட்டி.

    3. வங்கிக்கு வங்கி பண மாற்றல்கள் மற்றும் DD போன்ற பலவகை பண பரிமாற்றல்களில் கமிஷனாக வரும் பணம்.

    இவையெல்லாம் கூட்டிக் கழித்து மொத்தத்தில் வருவது தான் ஒரு வங்கிக்கு கிடைக்கும் ஆண்டு நிகர லாபம்.

    இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த பொழுது தனியார் வசமிருந்த வங்கிகளை பொதுத்துறையின் கீழ கொண்டு வந்து வங்கிகளை அரசு உடைமை ஆக்கினார். அன்றையிலிருந்து பொதுத்துறை வங்கிகளின் லாபமும் நஷடமும் அரசுக்கானது. அரசு மக்களின் அரசாக இருப்பதால் கறாராக கணித்தால் பொதுத்துறை வங்கிகளின் லாபமும் நஷ்டமும் மக்களுக்கானது.

    இந்த மாதிரி தேசத்தின் சொத்து நம் சொத்து என்கிற கான்சப்ட்டும் அதற்கான உணர்வும் வெகுவாக பொதுமக்களின் மனதில் படியாத ஒன்றாக இருப்பது தான் நம் நாட்டின் சிக்கல்.

    விஜய் மல்லையா போன்றவர்கள் கடனாகப் பெற்றது அரசின் பணமும் அல்ல, வங்கிகளின் பணமும் அல்ல. மக்களின் பனம். இந்த awareness மக்களுக்கு ஏற்பட்டு விடாதபடிக்கு எல்லா மட்டங்களிலும் எல்லா காரியங்களும் நடக்கின்றன.






    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கும் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் மறு வருகைக்கும், நீண்ட எளிமையான விளக்கத்திற்கும் நன்றி.

      Delete
  17. என்றைக்கு வங்கிகள் அரசியல்வாதிகளின் பிடியில் அகப்பட்டனவோ அப்போதே வங்கிகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியனவாகிவிட்டன என்பதை எல்லோரும் அறிவார்கள்.
    1969 ஆம் ஆண்டு பெரிய வங்கிகளை பணக்காரர்களின் பிடியிலிருந்து விடுவித்து நலிந்தோருக்கு உதவும் நோக்கத்தில் வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அந்த வங்கிகள் அரசியல்வாதிகளின் விருப்பப்படி செயல்படும் நிறுவனங்களாக மாறியதுதான் கொடுமை.
    எந்த வசதி படைத்தவர்களின் பிடியிலிருந்து வங்கிகள் மீட்கப்பட்டதாக சொல்லப்பட்டதோ அந்த வசதி படைத்தவர்களுக்கே பொது மக்களின் பணத்தை வாரி வழங்கி வாராக்கடனை தக்கவைத்துக் கொண்டன.
    என்று வங்கிகளின் நடமுறைகளில் அரசியல்வாதிகள் தலையீடு அறவே ஒழிகிறதோ அன்றுதான் தேவைப்பட்டோருக்கு கடன் கிடைக்கும். இல்லாவிடில் மல்லையாக்களுக்கும், மக்களை ஏமாற்றும் ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் கடன் கிடைக்கும். நாமும் இது பற்றி பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் தான் இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. //நலிந்தோருக்கு உதவும் நோக்கத்தில் வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும்.. //

      சொல்லப்பட்டாலும் என்ன, சார்?.. தேசியமயமாக்கப பட்ட காலகட்டத்தில் நலிந்தோருக்கு உதவுவதில் எந்தக் குறைச்சலும் இல்லை.. நோக்கம் உன்னதமானது. நாளாவட்டத்தில் நடந்த அலங்கோலங்களுக்கு ஆரம்பமே சரியில்லை என்றால் எப்படி சார்?..

      Delete
  18. வங்கிகளில் யார் முதலீடு செய்கிறார்கள்?

    பெரும்பாலும் முதியவர்கள். தங்கள் பென்ஷன், வீட்டு வாடகை போன்ற வருமானங்களை பிக்செட் டிபாசிட்டாக முதலீடு செஊகிறார்கள்.

    எதற்காக வங்கிகளில் பணத்தைப் போட்டு வைக்கிறார்கள்?..

    மருத்துவ செலவுகள் போன்ற எதிர்பாராத பேரிடிகளை சமாளிப்பதற்காக.
    பிறரை, மகன், மகள் போன்ற பெற்றவர்களைக் கூட எதிர்பார்க்காத ஒரு கெளரவ வாழ்க்கைக்காக.

    வரும் வருமானத்தை பலமடங்காகப் பெருக்குவதற்கு நாட்டில் பல வழிகள் இருக்கின்றன. அதனால் செயல்பட முடிந்தவர்கள் வங்கிகளை நாடுவதில்லை. வங்கிகள் தரும் வட்டி விகிதம் குறைவு என்பதாலும் கூட. செயல்பட முடிந்தவர்கள் முடிந்தால் வங்கிகளில் கடன் வாங்கவே முயற்சிப்பார்கள்.

    முதியவர்கள் வங்கிகளை நாடுவதும் முழுக்க முழுக்க போட்ட பணம் ஏமாறமல் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களுக்கும், எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கும் நன்றி.

      Delete
  19. அடுத்து சேமிப்பும் பணவீக்கமும் பற்றி.

    சொல்லப் போனால் பணமாக சேமிக்கும் எதுவும் பொய்யான சேமிப்பே. குறிப்பிட்ட கால டிபாசிட்டுகளுக்கு வங்கி அளிக்கும் வட்டி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் இப்படி என்று யூகித்தால் வேடிக்கையாக இருக்கும்.

    வங்கிகளில் கடன் வாங்கும் பெருந்தனக்காரர்களுக்கு, வி.ம. போன்று வங்கிகளில் பெரும் கடனை திருப்பிச் செலுத்துவதில் 'உறுதியாக' இருப்போருக்கு குறைந்த வட்டியில் கடன் தரவேண்டும் என்ற ஒரே லட்சியத்தில், அதற்கு ஒன்றரை அல்லது இரண்டு சதவீதம் குறைவாகவே
    பணத்தை டிபாசிட் செய்வோருக்கு வட்டி தீர்மானிக்கப்படுகிறது.

    பணவீக்கம் என்றால் என்ன?..

    இன்று நான் வாங்கும் ஒரு பீரோவின் விலை ரூ.5000/- என்றால் அடுத்த வ்ருடம் அதே பீரோவின் விலை ரூ.7500/- என்றால அதிகமாகப் போன அந்த ரூ.2500/- அளவுக்கு பணம் அந்த ஒரு வருடத்தில் தன் மதிப்பை இழந்திருக்கிறது. இப்படி ஒவ்வொன்றிலும் ஏறும் பண மதிப்பிழ்த்தல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பணவீக்கமாக மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் வங்கி முதலீடுகளும் மூலதன இழப்பே தான். இருந்தால் ஓடி ஆடி செயல்பட முடியாத முதியோருக்கு வங்கிகளில் போட்ட பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையே
    பெரும் ஆசுவாசமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி. நான் வி.ஆர்.எஸ்சில் வந்து கிடைத்த பணத்தை வங்கியிலும், மியூச்சுவல் பண்டிலும் போட்டேன். மியூச்சுவல் பண்டில் போட்டு எதிர்பார்த்த லாபம் ஒன்றும் இல்லை. தொல்லைகள்தான். எனவே கணக்கை முடித்து விட்டேன். வங்கி டெபாஸிட்டுகளில் பாதுகாப்பு மட்டுமே; அதிலும் வரிப் பிடித்தம் செய்து விடுகிறார்கள். எனவே சேமிப்புக் கணக்கில் மட்டுமே (வட்டி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை) வைத்து இருக்கிறேன்.

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. வாராக் கடன் என்பது நாட்டின் முதுகெலும்பை முறித்து விடும் விஷயம். ஒவ்வொரு அரசியல்வாதியும்/அரசும் சொந்த நலனுக்காக கடன் தள்ளுபடி செய்வது நிச்சயம் நிறுத்தப் பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  22. "விவசாயி என்றால்" பாரா அத்தனையும் உண்மை. கொடுமையான விஷயம் அது. ஹர்ஷத் மேத்தா போன்ற புத்திசாலிகளும் விஜய் மல்யா போன்ற சந்தர்ப்பவாதிகளும் தங்களுடைய அறிவை தவறான வழிக்கே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    வங்கிகளில் வாராக் கடன் என்பது பெரும் தொகையா, அன்கிளயிம்ட் பணம் என்பது அதிகத்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நன்றி. ஹர்சத் மேத்தா செய்த ஊழல் பற்றி இப்போதுள்ள இளைஞர்களில் பல பேருக்கு தெரியாது. உங்கள் கருத்துரை முற்றுப் பெறவில்லை.

      Delete