Thursday, 3 December 2015

இன்றைய தேவை: சோலார் செல்போன்கள் / சார்ஜர்கள்



சென்னையில் புயல், மழை,வெள்ளம் காரணமாக, இப்போது (2015) ஏற்பட்டு இருக்கும் அழிவை சொல்ல வார்த்தைகள் இல்லை. விடிய விடிய நாள் முழுவதும் மழை; ஏரிகளில், ஆறுகளில் உடைப்பு. குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர். மின்சாரம் கிடையாது; தகவல் தொடர்பு இல்லை. சென்னைக்கு பஸ், ரெயில் போக்குவரத்து கிடையாது. வரலாற்றில் முதன்முறையாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. சென்னை தனித் தீவானது.

தகவல் தொடர்பு:

இந்த இடர்ப்பாடில் சென்னையில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்ள போனிலும் செல்போனிலும் முயற்சி செய்தேன். பலரிடம் தொடர்பே கொள்ள முடியவில்லை. காரணம் சென்னையில் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது ; ஆனால் அவர்கள் செல்போன் பேட்டரியில் சார்ஜ் இல்லை; சார்ஜ் செய்யலாம் என்றால், அவர்கள் ஏரியாவில் மின்சாரம் துண்டிப்பு. (அதுவுமல்லாமல் தரைதளத்தில் அமைக்கப்பட்டு இருந்த, செல்போன் கோபுரங்களின் ஜெனரேட்டர்கள், தண்ணீரில் மூழ்கி அவையும் செயல் இழந்து விட்டதாக டீவியில் செய்தி வாசித்தார்கள்}

சோலார் கால்குலேட்டர்கள்:

ஆரம்பத்தில் பாக்கெட் கால்குலேட்டர்கள் எனப்படும் சிறிய கால்குலேட்டர்கள் வந்த புதிதில் அவை பேட்டரியில் இயங்கக் கூடியவைகளாக இருந்தன. உபயோகத்தைப் பொறுத்து அடிக்கடி பேட்டரிகள் மாற்ற வேண்டியது இருந்தது. அப்புறம் சோலாருடன் பேட்டரியும் உள்ள பாக்கெட் கால்குலேட்டர்கள் வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இன்று செல்போனிலேயே கால்குலேட்டர் வசதி இருந்தாலும், கடைகளில், சிறு வியாபார நிறுவனங்களில் இந்த வகை கால்குலேட்டர்கள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன.

சோலார் செல்போன்கள்:

நமதுநாட்டில் செல்போனின் அத்தியாயம் தொடங்கி பல  வருடங்கள் ஆகின்றன.. இன்னும் அதே பேட்டரி முறைதான் நடைமுறையில் உள்ளது. அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியது உள்ளது. ஸ்மார்ட் போன்களும் வந்து விட்டன. இந்தவகை போன்களில் சார்ஜ் அடிக்கடி தீர்ந்துவிடும். எனவே எப்போதுமே சில சமயம் தொடர்ச்சியாக சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஸ்மார்ட் போன்களுக்கு என்று தனியாக பவர் பேங்க் (Power Bank) எனப்படும் சேமிப்பு பேட்டரி முறை வந்து விட்டது. வெளியூர் பயணம் அடிக்கடி செல்பவர்களுக்கு நல்ல துணை.

எந்த செல்போனாக இருந்தாலும் சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. ஆனால் நம்நாட்டில் மின்வெட்டு சமயங்களில் செல்போனில் முன்கூட்டியே சார்ஜ் செய்யாவிடில் படும் அவஸ்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) முறையிலும் சார்ஜ் இருந்தால்தான் போச்சு; இல்லையேல் கஷ்டம்தான்.

இந்த குறையைத் தவிர்க்க சூரிய ஒளியில் இயங்கும் சோலார் செல்போன்கள் வந்து விட்டன. உலகின் முதல் சோலார் செல்போன் –  (Samsung Guru E1107 ) 2009 ஆம் ஆண்டு சாம்சங் (SAMSUNG) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வகை செல்போன்கள் இந்தியாவில் இன்னும் சரியான பயன்பாட்டுக்கு வரவே இல்லை. அதே போலத்தான் பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) முறையும். இதற்கு முக்கிய காரணம் செல்போன் விற்பனையில் ஒளிந்து கிடக்கும் சுயநலம் மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததுதான். எங்கே இந்த சோலார் செல்போன்கள் வகை போன் வந்தால் தங்கள் வியாபாரம் போய் விடுமோ என்ற எண்ணம்தான் முக்கிய காரணம்.

இப்போது சென்னையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக ஏற்பட்ட, தகவல் தொடர்பு இன்மைக்கு முக்கிய காரணம் செல்போனில் உள்ள சார்ஜிங் முறைதான் காரணம். எனவே இந்த குறையைப் போக்கிட நாட்டில் சோலார் செல்போன்கள் (ஸ்மார்ட் போன் உட்பட)  உற்பத்தியை எல்லா செல்போன் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செல்போன்களுக்கு சோலார் சார்ஜர்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


39 comments:

  1. அவசியப் பதிவு.
    தற்போதைய சூழலுக்கு மிகவும் ஏற்ற பதிவு. சோலார் செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அனைவருக்கும் நல்லது.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கையாளர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. அருமையான அலசல் கட்டுரை. தற்போதைய பிரச்சனைகளுக்கு இது நல்லதொரு தீர்வாக இருக்கும். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள VGK அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. செல்போன் டவர்களே செயலிழந்த நிலையிலும் இந்த சோலார் சார்ஜர்கள் உதவியாக இருக்குமா.?

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள GMB அவர்களே வணக்கம்! நீங்கள் எதனையும் ஒரு வித்தியாசமான, விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர். அந்த வகையில் உங்கள் மாற்று சிந்தனைக் கருத்தை வரவேற்கிறேன். ராவுத்தரே கொக்காய் பறக்கிறார்; இதில் குதிரை கோதுமை ரொட்டி கேட்ட கதைதான். செல்போன் டவர்களே இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்? இனி வருங்காலத்தில் சாட்டிலைட்டு டவர்கள் அமைத்திட ஆலோசனை நடைபெறலாம். (தொழில்நுட்பம் என்பதே அடுத்த கட்ட நகர்வுதானே.)

      Delete
  4. வயிற்று வலி வந்தால் தானே மருந்தை தேடுகிறோம் :)

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. நல்ல தீர்வு....ஆனாலும் ஆட்சியாளர்களும் கார்பரேட் நிறுவனங்களும் மக்கள் பயன்படுத்த கொண்டுவரப்படாது என்பது தி்ண்ணம்...எனென்றால் இரண்டும் மக்களுக்கு சேவை செய்பவை இல்லை..

    ReplyDelete
    Replies
    1. தோழர் வலிப்போக்கன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆட்சியாளர்களும், கார்ப்பரேட் நிறுவனர்களும் ஆதாயத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுகின்றனர்.

      Delete
  6. நல்லதொரு தீர்வு. செல்ஃபோன் டவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதாவது பயன்படுத்தமுடியும்.....

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. அருமையான யோசனை ஐயா
    இன்றைய தேவையும் இதுதான்
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. Replies
    1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) நான் வைத்து இருக்கிறேன். சார்ஜ் செய்யமுடியாத இடத்தில் உதவுகிறது. சோலார் செல்போன் நல்ல யோசனை.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் Power Bank எனப்படும் சேமிப்பு பேட்டரியை பயன்படுத்தி வருகிறேன். வெளியூர் பயணத்தின்போது மிகவும் பயன்படுகிறது.

      Delete
  10. வணக்கம்
    ஐயா

    தாங்கள் சொல்வது உண்மைதான் தகவலை பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. Solar technology for mobile phones are yet to catch up .
    http://www.phonearena.com/news/Did-you-know-that-Samsung-launched-the-first-solar-powered-cell-phone_id67493
    Two hours of solar charging reportedly serves ten minutes of talk. Power Banks are helpful.. If invertors are used in homes then that can be used (during power cuts) to cater to mobile phone charging needs.
    Presently solar power is not such a viable solution.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் பொன்மலை (பொன்மாலை?) பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஒருமுறை உறவினர் வீட்டு பெரிய காரியம் ஒன்றிற்கு ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தபோது, நான் வைத்து இருந்த ஸ்மார்ட் போனில் சார்ஜ் செய்ய முடியவில்லை. (சார்ஜரை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்) ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டேன். அன்றிலிருந்து நானும் ஒரு Power Bank வாங்கி வைத்துக் கொண்டேன். இதுவும் சோலார் வசதி இணைந்ததாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்ற மனதின் எதிரொலிதான், இந்த மழைக்கால கட்டுரை. நீங்கள் சொல்வது போல,

      // Presently solar power is not such a viable solution. //

      என்று இருக்கலாம். இதுபற்றிய முழு தொழில்நுட்பம் எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் இதுபற்றி ஒரு பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.

      Delete
  12. சரியான நேரத்தில் தேவையான பதிவு. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பொதுவாக தமிழ்மணத்தில் வரும் உங்களது கட்டுரைகளை படித்து விடுவது வழக்கம். இப்போது எங்கள் பகுதியில் BSNL BROADBAND விட்டு விட்டு கிடைப்பதால் எந்த பதிவுக்கும் உடனுக்குடன் கருத்துரை எழுத முடிவதில்லை. இதுதான் காரணம்.

      Delete
  13. வணக்கம்!நலமாக இருக்கிறீர்களா?

    சரியான நேரத்து தகவல் பகிர்வு.

    ஜப்பான் கேசியோ சோலார் கால்குலேட்டர் பல வருடங்கள் உபயோகித்து வந்தேன். ஒரு தடவை வாங்கினால் பாட்டரி பற்றிய கவலையே இல்லை.

    பிரதர்,தொஷிபா போன்ற பொருட்களின் விற்பனை அனுபவத்தில் ஒரு பொருளை வாங்கிய பின் அதன் உபரி பொருட்களின் விற்பனையில் அடங்கி இருக்கிறது வியாபார தந்திரம். உதாரணமாக ஒரு HP பிரிண்டர் சல்லிசு விலையென்று நினைத்து வாங்கினால் அதற்கு இங்கு கார்ட்ரிட்ஜ் வாங்க பொருளின் விலையை விட அதிகம் செலவாகி விடும்.

    டெஸ்லா பேட்டரி காரை அமெரிக்க நிறுவனம் கொண்டு வந்ததுள்ளது.ஆனால் செவர்லே ஜி எம் நிறுவனம் அதற்கு முன்பே பேட்டரி காரை முயற்சி செய்து வியாபார சாத்தியங்கள் குறையும் என்ற கணக்கில் உருவாக்கிய கார்களனைத்தையும் இரும்பு சாமான் கடைக்கு அனுப்பி விட்டது.

    தமிழகத்திலேயே தனியார் நிறுவனம் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்து இ.பி அரசு நிறுவனத்திற்கு மின்சாரம் அனுப்பும் திட்டங்கள் உள்ளன.எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ராஜ நடராஜன் அவர்களின் தகவல்களுக்கு நன்றி.

      Delete
  14. சோலார் கால்குலேட்டர் பற்றிய ஒரு சிறு விளக்கம் மீண்டும். இது சூரிய ஒளியில் இயங்குவதல்ல.வெளிச்சம் இருக்குமிடத்தில் உபயோகமாகும் பெயர் மறந்து விட்ட தொழில் நுட்பம். வெளிச்சத்தைக் கண்டால் உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் கைபேசி தொழில் நுட்பம் மட்டுமே பேரிடர் காலத்தில் உதவும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ராஜ நடராஜன் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி.

      Delete
  15. காலத்தால் செய்த பதிவு....அத்தனையும் உண்மை....
    உங்கள் எண்ணங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் புதுக்கோட்டை செல்வகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. காலத்துக்கு தகுந்த யோசனை நன்று நண்பரே
    தமிழ் மணம் 8

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. காலத்திற்கேற்ற அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி! நான்கு நாட்களாக தொலைபேசி, கைப்பேசி, மற்றும் இணையத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டதால் வலைப்பக்கமே வர இயலவில்லை. அதனால் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டத்திற்கு பதில் அளிக்க இயலவில்லை. இங்கு நான் நலமே. Car Shed இல் மட்டும் தண்ணீர் நுழைந்து இன்னும் வடியவில்லை. வீட்டிற்குள் வர இருந்த வெள்ளம் நல்ல வேளை வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அய்யா VNS அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. சென்னையில் இருக்கும் உங்களோடும் பிற பதிவர்களோடும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், ஒன்றிரண்டு பேருடன் மட்டுமே பேச முடிந்தது. நீங்கள் இந்த புயல்,வெள்ளத்தில் சிக்கி மீண்டமைக்கு வாழ்த்துக்கள்.

      Delete
  18. நாங்கள் செல்ஃபோனை சோலார் யூனிட் ஒன்று எங்கள் வீட்டில் வைத்திருப்பதால் அதில் சார்ஜ் செய்ய முடிந்தது ஆனால் நெட்வொர்க் இல்லை சுத்தமாக. சார்ஜ் செய்வது என்றால் சோலார் சக்தியை சேமித்து வைத்திருக்கும் பேட்டரியில் அதிக நேரம் இணைத்து வைத்து இருந்தால் கொஞ்ச நேரம்தான் வரும் ஐயா.

    அதைப்பற்றி எழுதுகின்றேன் ஐயா. பதிவு எழுத கொஞ்சம் அவகாசம் வேண்டும். நான் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கின்றேன். தமிழாக்கம் செய்து எழுத. எங்கள் வீட்டு மருமகள் ஒருவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு உலக அளவில் இதைத்தான் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் செய்துவருகின்றார். இந்தத் தொழில் நுட்பம் வளர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் தோன்றுகின்றது. இந்தியா, இலங்கை, நேபால், ஆஃபிரிக்க நாடுகளில் அவருடன் இணைந்து அந்தந்த நாட்டைச் சேர்ந்த பெண்கள் செய்துவருகின்றனர்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு நன்றி. உங்கள் தமிழாக்கக் கட்டுரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இடையில் கம்யூட்டரிலும், இண்டர்நெட் இணைப்பிலும் மறுபடியும், மறுபடியும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மறுமொழி உடன் எழுத இயலவில்லை.

      Delete
  19. தமிழ் இளங்கோ சார்... நான் செல்போன் சார்ஜர் சோலார் வசதியுடன் கூடியது, முன்னமேயே பார்த்திருக்கிறேன். பெரும்பாலான நாடுகளில், அதுவும் இதனைத் தயாரிக்கும் சைனாவில், பவர் பிரச்சனை இல்லாததால் இன்னும் இந்த எண்ணம் வலுவாகத் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். பவர் பேங்க் பயன்படுத்தினாலும், ஒரு ஒழுங்குமுறையோடு முழுமையா சார்ஜ் பண்ணிவைக்கணும். எப்போவுமே முழு சார்ஜில் இருக்கணும். அப்போதான் அவசரத்துக்கு உபயோகப்படும் (அவசரத்துக்கு 200 ரூ இன்னொரு பையில் வைத்துக்கொள்வதுபோல). பவர் பேங்க் நல்ல பிராண்டா வாங்கணும். நிறைய தரமில்லாத பவர் பேங்குகள் நம் நாட்டுச் சந்தையில் இருக்கின்றன. சைனாக்காரன் பண்ணுவதே 'காப்பி'வேலை. அதிலயும், 1,2,3 தரம்லாம் உண்டு.

    இன்னொன்று, பயணத்துக்கு என்று (அதாவது டிராவல் பண்ணும்போது, பக்கத்து தெரு என்றாலும்) ஒரு பர்ஸ் மாதிரி ஒன்று வைத்திருப்போம். அதில் ஒரு சார்ஜரை கண்டிப்பா போட்டுவைக்கணும். (சார்ஜிங் கேபிள் 100 ரூபாய்க்குக் கிடைக்கும். அதனால கூட இரண்டு வாங்கிவைப்பது நல்லது).

    கீழ்த்திருப்பதில, பஸ்ஸ்டாண்ட் கடைகள்ல, சார்ஜ் பண்ணித் தரதுக்கு 10 ரூபாய் வாங்கினான். அதுமாதிரி கடைகள் இல்லைனா நாமதான் முன்னேற்பாடா இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின், மேல் அதிக தகவல்களுடனான அன்பான கருத்துரைக்கு நன்றி. நான் வைத்து இருப்பது சாதாரண பவர் பேங்க் தான். வேறு ஒன்று நல்லதாக வாங்க வேண்டும்.

      Delete