Monday, 28 December 2015

இந்து – தீபாவளி மலர் 2015



இந்த வருட (2015) புயல்,மழை,வெள்ளம் காரணமாக தமிழ் வலைப்பதிவில் ’தி இந்து – ‘தீபாவளி மலர் 2015’ பற்றி, உடனே எழுத இயலாமல் போயிற்று. எப்போதும் எழுதும் அன்பர்களும் எழுதவில்லை. கடந்த ஒரு வார காலமாக இந்த மலரை அவ்வப்போது படித்து வந்தேன். ‘உள்ளே” என்று பொருளடக்கத்துடன் தொடங்கும் இந்த புத்தகம், அழகிய வண்ணப் படங்களுடன் சிறந்த வடிவமைப்புடன் உள்ளது.  

ஊர்மணம்:

இந்த தலைப்பினில் - ஒரு பக்கக் கட்டுரைகள் அந்தந்த ஊரின் சிறப்பான ஒன்றைப்பற்றி பேசுகின்றன. இவற்றைப் படைத்திட்ட அனைவரும் வெவ்வேறு படைப்பாளிகள்; சுருங்கச் சொல்லி படங்களுடன் விளங்க வைத்து இருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

// சீமைக் கருவேல மரங்கள் தொடர்பான வெறுப்பு இப்போது அதிகரித்திருக்கிறது. ஆனால், சீமைக் கருவேல மரங்களை எதிர்ப்பவர்கள் அது தரும் பொருளாதாரப் பலன்களுக்கு மாற்றாக எதையும் பரிந்துரைக்கவில்லை //  

என்று சொல்லி, சீமைக்கருவை மர கரியினால் வளர்ந்த தொழில்கள் பற்ரி விவரிக்கிறது ‘விளாத்திக்குளம் கரி’ என்ற கட்டுரை. (பக்கம்.14)

// சென்னையின் அடையாளமான நடுத்தர, சிறிய உணவுக்கடைகளின் காலை நேரத்தை மணக்க வைக்கிறது வடகறி. இதற்குப் பாடல் பெற்ற தலம் சைதாப்பேட்டை! காலை நேரத்தில் சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெரு வழியாகம் போக முடியாத அளவிற்கு வாகனங்களும் மனிதர்களும் மாரி ஓட்டலின் முன்பாக நெருக்கியடித்து நிற்கிறார்கள். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வடகறி விற்பனையால் இவர்களுடைய கொடி உச்சத்தில் பறக்கிறது //

என்று ‘சைதாப்பேட்டை வடகறி” மகாத்மியம் படிக்கும் போதே சாப்பிடும் ஆர்வத்தைத் தூண்டுகிறது (பக்கம்.26)

ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களை தமிழ்நாட்டில் திரையிடுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் பலகாலமாக தமிழகத்தில் இருந்துவரும் சௌராஷ்டிர மக்களுக்காக, அவர்கள் மொழியில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட, மதுரையில் வெளியிடப்படும், ‘கையைக் கடிக்காத சௌராஷ்டிர சினிமா’ பற்றி ஒரு கட்டுரை விவரிக்கிறது. (பக்கம்.38)

இன்னும்  மதுரை விவேகாநந்தா நாட்காட்டி, காங்கேயம் காளைகள், நாச்சியார்குளம் குத்து விளக்கு, தைக்கால் பிரம்பு, விளாச்சேரி பொம்மைகள், ஆரணி நாடகக் குழுக்கள், பணகுடி ஆர்மோனியம், செல்லூர் மிட்டாய் கடைகள், மருதமலை இலந்தை வடை, வாடிப்பட்டி மேளம், ஆனைக்கட்டி இருளர் இசை, மெட்ராஸ் கானா, சுங்குடி சேலைகள், சிறுமுகைப் பட்டு, நைட்டி நகரம் தளவாய்புரம், விக்டோரியா மகாராணி அரசுப்பள்ளி (பெரியகுளம்), வாலாஜாப்பேட்டை ‘காந்தி மிஷன் வித்யாலயம்’, ‘கோகோ’ மேலப்பட்டி, மதுரை வண்டியூர் தெப்பக்குளம், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், பல்லாவரம் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சந்தை, தஞ்சாவூர் வீணை – என்று பல பக்கங்கள் ஊர் மணம் பரப்புகின்றன.

சினிமா, இலக்கியம்:

வழக்கம் போல சினிமா என்றால், எம்ஜிஆர் – சிவாஜி. என்று ஆகிய இருவரைப் பற்றியும், அன்றைக்கு இளம் கதாநாயகர்களாக நுழைந்த முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார், ஏ.வி.எம்.ராஜன், விஜயகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் பற்றியும், கதாநாயகிகளான லட்சுமி, மஞ்சுளா, ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி, ஆகியோர் பற்றியும் சில செய்திகள்.

இன்னும் சிறுகதைகள், புதுக்கவிதைகள் என்று ஏராளமான தகவல்கள்.

// அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனை (1815 – 1892 ) பின்பற்ரி உலகெஙும் புதுக்கதிதை இயக்கம் தோன்றியது. இது மொழிகளில் வெறுமனே புறத்தில் நிகழ்ந்த மாறுதல் என்பதை விட சமூகத்திலும் மனோநிலைகளிலும் நிகழ்ந்த மாறுதல் என்றே சொல்ல வேண்டும். நல்லதோ கெட்டதோ, ஆனால் பழமை ஒரு சுமை என்றெண்ணி உலகெங்கும் பழமையை விடுத்துப் புதுமையை, நவீனத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்ததின் பிரதிபலிப்புதான் புதுக்கவிதை. யாப்பறிந்தவர்கள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற ஒரு ஜனநாயக இயல்பைக் கொண்டிருந்ததால் புதுக்கவிதை முதலில் வழக்கமான கண்டனங்களையும் பின்னர் வரவேற்பையும் பெற்றது. இதன் சாதகபாதங்களைப் புதுக்கவிதை இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. // - ( பக்கம்.225 புதுக்கவிதையின் வேர்கள்)

அம்மாவின் பொய்கள் என்ற தலைப்பில், கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய வரிகள் இவை ---
தவறுகள் செய்தால் சாமி                                                                              
கண்களைக் குத்தும் என்றாய்                            
தின்பதற்கேதும் கேட்டால்                                 
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்                             
ஒருமுறை தவிட்டுக்காக                                  
வாங்கினேன் உன்னை என்றாய்                             
எத்தனைப் பொய்கள் முன்பு                                 
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு                                
என்னிடம் சொன்ன நீ எதானிலின்று                        
பொய்களை நிறுத்திக் கொண்டாய்.

கட்டுரைகள்:

// தமிழக விழாக்களில் செய்யப்படும் உணவு வகைகளில் அசைவம் முழுவதும் இடம் பெறாத நிலையில் தீபாவளியில் மட்டும் ஏன் அசைவம் ஒட்டிக்கொண்டது. மரபுவழியாக சைவ உணவை உண்பவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே இந்த விழாவில் மட்டும் அசைவ உணவைச் சேர்ப்பதில் முனைப்புக் காட்டுவது ஏன்? //

என்று கேள்வி கேட்டு கட்டுரையில் (காலந்தோறும் தீபாவளி) விடையளிக்கிறார் அ.கா.பெருமாள்.

“ ஒரு கிராமத்தின் கதை” யில் அன்றைய கிராமத்து நினைவுகளைக் கொண்டு வருகிறார் ப.கோலப்பன்.

ஆன்மீக வரிசையில், கவுதம புத்தர், ஆதிசங்கரர், ஸ்ரீமத்வாசாரியர்,, மகாவீரர், என்று பல மகான்களைப் பற்றிய கட்டுரைகள். ”புரட்சித் துறவி” என்ற தலைப்பில் ஸ்ரீ ராமானுஜர் பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ளார். கட்டுரையின் முடிவில்

// அவர் சமாதி அடைந்த பிறகு, அவர் திருவரங்கம் கோயிலிலேயே புதைக்கப்படுகிறார். இதை இன்னொரு புரட்சி என்றும் குறிப்பிடலாம். இந்து மதக் கோயில் எல்லைக்குள் புதைக்கப்பட்டவர் இராமானுஜர் ஒருவரே! “ (பக்கம் 103)

என்று குறிப்பிடுகிறார்.

’பெண் இன்று’ என்ற வகையின் கீழ், விரியும் பெண்களின் எல்லை (பிருந்தா சீனிவாசன்), கர்னாடக இசைப் பாடகர் மும்பாய் டாக்டர் வசுமதி பத்ரிநாத் பற்றி வா.ரவிக்குமார், ஹாரிபாட்டர் கதையினை உருவாக்கிய ‘ஜே.கே.ரவுலிங்’ பற்றி எஸ்.சுஜாதா, இடுகாட்டில் மயானகாரியங்களைப் பார்க்கும் ‘பிதாமகள்’ கிருஷ்ணவேணி (புதுச்சேரி துப்ராயப்பேட்டை) பற்றி செ. ஞானபிரகாஷ், ஃபேஸ்புக் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் பற்றி எஸ்.சுஜாதா, ஆசை என்பவர் எழுதிய, காட்டுரியல் துறையில் சிறந்த ‘யானைகளின் தோழி’ எனப்படும் டி.என்.சி.வித்யா பற்றிய கட்டுரை, கணிதராணி எனப்படும் மரியம் மிர்ஸாகவி பற்றி எஸ்.சுஜாதா, இந்தியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து இந்திக்கும் நூல்களை மொழிபெயர்த்து இருமொழிகளுக்கும் இடையில் பாலமாக இருப்பவர் சாரு ரத்னம்; இவரைப் பற்றி எழுதி இருக்கிறார் ஆசை. இன்னும் எடிட்டர் மோனிகா ( யுகன் எழுதிய கட்டுரை), டி.கார்த்திக் அவர்களின் வான்மதி (கண்டெய்னர் தொழில்) ஆகிய கட்டுரைகளும், சிறப்பு நேர்காணல்களும் உண்டு. ”வெறுமனே பிரிஸ்கிரிப்ஷன் எழுதுவதல்ல மருத்துவம்” என்று சொல்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.  எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் ‘தாயல்ல அவள் தோழி” என்ற தலைப்பில் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவின் பெருமைகள் பற்றி பேசுகிறார்.


இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். விரிப்பின் பெருகும். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

( அட்டைப்படம் நன்றி: தி இந்து (தமிழ்) / மற்ற படங்கள் யாவும் ” தி இந்து – தீபாவளி மலர் 2015” இலிருந்து Canon PowerShot A800 Camera வினால் எடுக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டவை, தி இந்து (தமிழ்) பத்திரிகைக்கு மீண்டும் நன்றி!)


17 comments:

  1. என்னைப்போல் தீபாவளி சிறப்பிதழ் படிக்க முடியாதவர்கள் எதை மிஸ் செய்கிறோம் என்பதைக்காட்டும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  2. நானும் படித்ததில்லை, தங்கள் பதிவு வழி அறிய முடிந்தது. முடிந்தால் படிக்கனும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  3. நல்ல அருமையாக இருக்கின்றதே! நீங்கள் தொகுத்து விவரித்த விதமும் அருமையாக இருக்கின்றது ஐயா. நல்ல பதிவு..கோலப்பன் எழுதியதை வாசித்த போது நான் முதுகலை படித்தது நாகர்கோவில் என்பதால் அந்தக் கிராமம் கண் முன் விரிந்தது.

    கீதா: கோலப்பன் அவர்களின் ஒரு கிராமத்தின் கதை எங்கள் ஊர் பற்றியதுதான். அதாவது நாகர்கோவிலில், சுசீந்திரம் பக்கம் இருக்கும் பறக்கை எனும் கிராமத்தைப் பற்றியது. அருமையாக இருக்கும். நானும் பறக்கைக்குப் பல முறை சென்றிருக்கின்றேன். அருகில்தான் எங்கள் ஊரும்...பறக்கை, சுசீந்திரம், எங்கள் ஊர் எல்லாமே நீரினால் இணைந்திருக்கும் அத்தனை அழகான கிராமங்கள். ஆனால் இப்போது...எங்கள் ஊரும் மாறிவருகின்றது...நான் எங்கள் ஊரைப் பற்றி எங்கள் கிராமத்தின் கதை என்று எழுத நினைத்து ஆரம்பித்த போது இதை வாசிக்க நேர்ந்ததில் அப்படியே விட்டுவிட்டேன்...கோலப்பன் மிக அழகாக எழுதியிருந்தார்...

    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சகோதர சகோதரி இருவருக்கும் நன்றி!

      Delete
  4. ‘தி இந்து’ –தீபாவளி மலர் 2015 ஐ கடையில் வாங்காமலேயே படித்துவிட்டேன் உங்கள் பதிவின் மூலம்! மிக அருமையாக, சுருக்கமாக மலர் முழுவதையும் உங்கள் பதிவில் தந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S. அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த தீபாவளி மலரைப்பற்றிய எனது பார்வை எப்படி இருந்தபோதும், நீங்களும் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.

      Delete
  5. தங்கள் மூலமாக மலரின் ஒட்டுமொத்தப் பார்வை கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  6. தங்களால் தீபாவளி மலரினைப் படித்த உணர்வு
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தையாருக்கு நன்றி.

      Delete
  7. வணக்கம்
    ஐயா
    தீபாவளி சிறப்பு மலரை வேண்டி படிக்கா விட்டாலும் தங்களின் பதிவுவழி அறியக்கிடைத்தது மகிழ்ச்சி ஐயா.. சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!

      Delete
  8. சிறுபான்மை மொழியினமான ,சௌராஷ்டிரா மொழி திரைப் படத்தைப் பற்றியும் கட்டுரை இருப்பது அறிந்து மகிழ்ச்சி,அதைக் குறிப்பட்டு சொன்ன உங்களுக்கும் நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. திருச்சியில் குறிப்பிட்ட அளவில் சௌராஷ்டிர மக்கள் இருக்கிறார்கள். திருச்சியில் எனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பின் போதும், கல்லூரிப் படிப்பின் போதும் என்னோடு கல்வி பயின்றவர்கள்: மற்றும் வங்கியில் என்னோடு பணிபுரிந்தவர்கள் என்று எனக்கு சௌராஷ்டிர நண்பர்கள் உண்டு. எனவே இந்த வருட இந்து தீபாவளி மலரில், அவர்கள் மொழி பற்றிய சினிமா கட்டுரையைப் படித்தவுடன், நண்பர்கள் நினைவாகக் குறிப்பிட்டேன்.

      சகோதரர் கே.பஹவான்ஜீ. அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  9. உங்கள் பதிவின் மூலம், ‘தி இந்து’ –தீபாவளி மலர் 2015 ஐ காசுகொடுத்துக் கடையில் வாங்காமலேயே படித்து அறிய முடிந்தது.

    மிக அருமையாக, சுருக்கமாக மலர் முழுவதையும் உங்கள் பதிவில் உங்கள் பாணியில் மிகச்சிறப்பாகத் தந்துவிட்டீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete