இந்த ஆண்டு (2015) டிசம்பரில், சென்னையில் அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்
பெருக்கினையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பினையும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும்
பார்த்தோம். அந்நாளில் மதுரையில் வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைப் பற்றியும்,
அப்போது மதுரையைக் காப்பாற்ற பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பரஞ்சோதி
முனிவர் எழுதிய ’திருவிளையாடற் புராணம்” சொல்லுகிறது.
(மண்சுமந்த படலம்) ஏதோ ஒரு காலத்தில் வைகையில் வெள்ளம் அளவு கடந்து வந்திட, அதனை ஒட்டி
எழுந்த புராணம் என்று எடுத்துக் கொள்ளலாம். கதை சொல்லப்பட்டது புராணத்தில் என்றாலும், ஒரு
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு, உடைப்பு ஏற்பட்டபோது பழந் தமிழர்கள் என்ன செய்தார்கள்
என்பதனை தெரிந்து கொள்ளவே இந்த கட்டுரை.
மன்னன் உத்தரவு:
வானத்தை தொட்டுவிடுவது போன்று வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடுகிறது. கரியகடல் ஒன்றின் அலைகள் இடையே தத்தளிக்கும் மரக்கலம் போன்று மதுரை மாநகரம்
தத்தளிக்கிறது. உடனே பாண்டிய மன்னன் தனது அமைச்சர்களை அழைத்து, ” கரையை நோக்கிவரும்
வெள்ள நீரைக் கட்டுப்படுத்த ஆவன செய்யுங்கள் “ என்று உத்தரவு பிறப்பிக்கின்றான்.
அமைச்சர்கள் பணி:
உடனே அமைச்சர்கள் வேறு வேறாக உள்ள பல குடிகளையும் குறிப்பிட்டு,
யார் யார் ஆற்றின் கரையை எப்படி அடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, அடைக்க வேண்டிய
பகுதிகளையும் வைகைக் கரையில் அளவுகோலால் அளந்து, கோடிட்டு காட்டியும் உத்தரவு செய்தனர்.
அதன்படி மதுரை நகரம் முழுக்க ‘அவரவர் பங்கை அடையுங்கள்” என்று பறையறிவிக்கப்பட்டது.
உடனே நகர மக்களும் ‘என்னே மதுரைக்கு வந்த சோதனை” என்று , வைகைக் கரையில் அவரவர் பங்கை
அடைக்க குவிந்தனர். உடல் வலிவுள்ளவர்கள், அவர்களே களத்தில் இறங்கி மண்ணை வெட்டிப் போட்டு வேலை செய்தனர். முடியாதவர்களோ கூலிக்கு ஆள் வைத்து
இந்த காரியங்களைச் செய்தனர்.
கூலியாட்கள் உடைப்பை சரிசெய்தல்:
கூலிக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றவுடன் , மண்வெட்டியும் கூடையும்
கொண்டு வருபவர்கள், மரங்களைச் சுமந்து வருபவர்கள், விரிந்த அகலமான பசுந்தழையை சுமந்து
வருபவர்கள், வைக்கோலை சுமந்து வருபவர்கள் என்று வைகைக் கரையில் கூலியாட்கள் நிரம்பத்
தொடங்கினர். இவர்களால் அந்த பகுதி முழுக்க ஒரே ஆரவாரம்; இரைச்சல்.
நீண்ட நெடிய மரங்களை நெடுக்காகவும் நெருக்கமாகவும் நடுகின்றனர்.
குதிரை பாய்வது போன்று வேகம் வேகமாக, சட்டென்று நிறுத்துவதால் இவற்றிற்கு ‘குதிரை மரம்’
என்று பெயர். அந்த குதிரை மரங்களின் கீழ், வைக்கோலைப் பாம்புபோல் பிரி பிரியாகச் செய்து,
உருட்டி கிடத்துகிறார்கள். அவற்றின் மீது பசுந்தழைகளைப் போட்டு, வெட்டிய மணலையும் நிரப்புகிறார்கள்.
அப்போது எல்லோரையும் அதட்டி ” சீக்கிரம், சீக்கிரம்” என்று வேலை வாங்குகின்றனர்; இருந்தும்
சிலசமயம் அடைக்கப்பட்ட பகுதிகளில் உடைப்பு ஏற்பட “ அன்னையே! வைகையே அளவிடமுடியாத கோபம்
எதற்கு? சினம் ஆறுவாயாக” என்று ஆற்றினை வணங்கி விட்டு, மீண்டும் மீண்டும் மணலைக் கொட்டி
சரி செய்கின்றனர். உடைப்பு அடைபட்டவுடன் சீழ்க்கை ஒலி, பறை ஒலி, குரவைப் பாடல்கள் என்று
ஒரே அமர்க்களம் செய்கிறார்கள். இவ்வாறு அவரவர்
பங்கை , கூலியாட்களின் மூலம் வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட உடைப்பை
சரி செய்கின்றனர்.
PICTURE COURTESY : GOOGLE IMAGES
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் – மண்சுமந்த படலம்
கருங்க டற்றிரை யிடைக்கி டந்துசுழல்
கலமெ னககன முகடளாய்
வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர்
மறுகி யுட்கமற வேலினான்
ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை
சுமந்தொதுக்கிவரு மோதநீர்ப்
பொருங்க தத்தினை யடக்கு வீரென
வமைச்சருந் தொழுது போயினார். 2
வெறித்த டக்கைமத யானை மந்திரிகள்
வேறு வேறுபல குடிகளுங்
குறித்தெ டுத்தெழுதி யெல்லை யிட்டளவு
கோல்கி டத்திவரை கீறியே
அறுத்து விட்டுநக ரெங்க ணும்பறை
யறைந்த ழைத்துவிடு மாளெலாஞ்
செறித்து விட்டவ ரவர்க்க ளந்தபடி
செய்மி னென்றுவரு வித்தனர். 3
மண்டொ டுங்கருவி கூடை யாளரு
மரஞ்சு மந்துவரு வார்களும்
விண்டொ டும்படி நிமிர்ந்து வண்டுப டு
விரிபசுந் தழைப லாலமுங்
கொண்ட திர்த்துவரு வாரும் வேறுபல
கோடி கூடிய குழாமுநீர்
மொண்ட ருந்தவரு மேக சாலமென
வருபு னற்கரையின் மொய்த்தனர். 4
கிட்டு வார்பரி நிறுத்து வாரரவு
ருட்டு வாரடி கிடத்துவார்
இட்டு வார்தழை நிரப்பு வார்விளி
யெழுப்பு வார்பறை யிரட்டுவார்
வெட்டு வார்மண லெடுத்து வார்செல
வெருட்டு வார்கடிது துடுமெனக்
கொட்டு வார்கரை பரப்பு வாருவகை
கூரு வார்குரவை குழறுவார். 5
கட்டு வார்கரை யுடைப்ப நீர்கடுகல்
கண்டு நெஞ்சது கலங்குவார்
மட்டி லாதமுனி வென்னை யன்னையினி
யாறு கென்றெதிர் வணங்குவார்
கொட்டு வார்மண லுடைப்ப டங்கமகிழ்
கொள்ளு வார்குரவை துள்ளுவார்
எட்டு மாதிரமு மெட்ட வாயொலி
யெழுப்பு வார்பறை யிரட்டுவார். 6
இந்நிலை யூரி லுள்ளார் யாவர்க்குங் கூலி யாளர்
துன்னிமுன் னளந்த வெல்லைத் தொழின்முறை மூண்டு செய்வார் 7
அந்நாளில் வெள்ளம் வரப்போவது மன்னருக்குத் தெரிந்திருக்கிறது
ReplyDeleteஇந்நாளில்
அரசுக்கும்
நமக்கும் தெரியவில்லையே
தம +1
அன்புள்ள ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteகாட்சியை கண்முன் நிறுத்திய பகிர்வுகள்..!
ReplyDeleteசகோதரி அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.
Deleteமிக்க நன்றி!
ReplyDeleteஇது உண்மையோ பொய்யோ...ஆனால் உணமை[யாகத்]தான் இருக்கும் என்று ரசிக்கும்படி எழுதின உங்களுக்கு...
என் வாழ்த்துக்கள!
நம்பள்கி அவர்களுக்கு நன்றி! சங்க இலக்கியங்களான அகம்,புறம் இரண்டும் சமயக் கலப்பற்றவை. எனவே அவை உள்ளதை உள்ளபடி உரைத்தன. ஆனால் பிற்காலச் சமய இலக்கியங்களை அவற்றின் சமயச் சார்பின் காரணமாக, அவை சொல்வதில் எது மெய் அல்லது கட்டுக்கதை என்பதனை ஆராய்ந்தே சொல்ல வேண்டி உள்ளது.
Deleteஇந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட வைகை ஆற்று வெள்ளம், கரை உடைப்பு, வெள்ளப் பாதுகாப்பு இப்போதும் உண்டு. ஆனால் இக்கட்டுரையில் சொல்லப்படாத திருவிளையாடற் புராணத்தில், மண்சுமந்த படலத்தில் வரும் மீதிக்கதை ( சிவன் பிட்டுக்காக மண் சுமத்தல், அரசன் பிரம்படி கொடுத்தல் முதலானவை) புராணக்கதை. எனவே தேவையான செய்திகளை மட்டுமே இங்கு எடுத்து சொல்லி இருக்கிறேன்.
அருமையாக படம் பிடித்து காட்டியதுபோல் தெளிவாக இருந்தது பதிவு. வைகை வெள்ளம் பற்றியும் அன்றைய நடைமுறையையும் அறிய முடிந்தது.
ReplyDeleteத ம 2
பத்திரிக்கைத்துறை நண்பர் S.P.S அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.
Deleteஅருமையான காலத்துக்கேற்ற பதிவு
ReplyDeleteநண்பர் புதுக்கோட்டை செல்வக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநமது முன்னோர்கள் தீர்கதரிசிகள் எதையும் முன்கூட்டிய அறியும் ஆற்றல் உள்ளவர் என்பதை உங்கள் பதிவு உணர்தியது!
ReplyDeleteபுலவர் அய்யாவிற்கு நன்றி.
Deleteஅன்றைய வைகை வெள்ளத்தையும் இன்றைய சென்னை வெள்ளத்தையும் எண்ணி எழுதிய பதிவு . இண்டெரெஸ்டிங்
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete‘கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
ReplyDeleteஅருவினையும் மாண்டது அமைச்சு.’
என தெய்வப்புலவர் சொன்னதுபோல் அக்கால அமைச்சர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை,மண்சுமந்த படலம் பாடலும், தங்களது விரிவான பதிவும் எடுத்துரைப்பதைப் பார்க்கும்போது அந்த காலம் திரும்புமா என்ற ஏக்கமே வருகிறது. பதிவுக்கு வாழ்த்துக்கள்!
வைகை வெள்ளமும் சென்னை வெள்ளமும் - சரியான நேரத்தில் சிறப்பான பகிர்வு. நன்றி.
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநான் இக்கட்டுரையைப் படிக்கும் போது அந்த மன்னர் ஆட்சியில் மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும்,ஒற்றுமையாகவும் இருந்தனர்..ஆனால் இன்று ஏன் இத்தனை பிரிவு..??
ReplyDeleteஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நினைவு வருகிறது..அருமையான பகிர்வு ஐயா..நன்றி..
தங்களின் கருத்துக்கள் என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது ஐயா..நன்றி..
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சகோதரர் ராஜ நடராஜன் அவர்கள் , உங்களுக்காக கீழே சொன்ன கருத்தினையே, இங்கு எனது மறுமொழியாகத் தருகிறேன்.
Delete// யார் சொன்னது அந்தக் காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்ததென்று. சோழனுக்கு பாண்டியனை பிடிக்காது பாண்டியனுக்கு சேரனை பிடிக்காது.மன்னன் வழி மக்களும். இப்பவும் சேர நாட்டு கேரளத்தவர்கள் நம்மை பாண்டி என்றே அழைக்கிறார்கள்://
புதிய விடயம் அறிந்து கொண்டேன் நண்பரே பதிவில் நன்றி
ReplyDeleteதம்+ 1
தேவகோட்டை நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
வெள்ளம் வருர முன் அனைகட்டுகட்டுவோம்... அற்புதமான தகவலை பகிர்ந்துள்ளீர்கள்
த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!
Deleteநீங்கள் கொடுத்த விளக்கவுரையால் கவிதை ஓரளவுக்கு புரிகிறது.கவிதைக்கு இணையான படத்தை எங்கிருந்து பிடித்தீர்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசகோதரர் ராஜ நடராஜன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இங்கே மேற்கோளாக உள்ள திருவிளையாடற் புராண பாடல்களை, எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக பிரித்து எழுதாமல் போய் விட்டேன். மன்னிக்கவும். பிற்பாடு எடிட் செய்து விடுகிறேன்.
Deletewww.hindukidsworld.org என்ற தளத்தினுள், இந்துசமயக் கதைகள் என்ற பிரிவில் இன்னும் படங்கள் உள்ளன. அவர்களுக்கு எங்கிருந்து இந்த படங்கள் கிடைத்தன என்று அறியக்கூடவில்லை. இந்துமத ஆர்வலர்களுக்கு பயனுள்ள தளம்.
@வைசாலி! ஸ்மார்ட்டாக இருக்க வேண்டாமோ:) யார் சொன்னது அந்தக் காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்ததென்று. சோழனுக்கு பாண்டியனை பிடிக்காது பாண்டியனுக்கு சேரனை பிடிக்காது.மன்னன் வழி மக்களும். இப்பவும் சேர நாட்டு கேரளத்தவர்கள் நம்மை பாண்டி என்றே அழைக்கிறார்கள்:)
ReplyDeleteசொல்ல வந்த முக்கியமான ஒன்று தவறி விட்டதால் இன்னுமொரு பின்னூட்டம்.
ReplyDeleteபேரிடர் மேலாண்மை என்ற சொல்லை நான் பதிவுலகில்தான் கற்றுக்கொண்டேன்.அதற்காக உங்களுக்கும் பதிவர் கந்தசாமிக்கும் நன்றிகள்.
சகோதரர் ராஜ நடராஜன் அவர்களின் மூன்றாம் வருகைக்கு நன்றி. National Disaster Response Force (NDRF) தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் – என்ற ஒன்று உள்ளது. அதற்கென்று ஒரு இணையதளம் உள்ளது. அங்கிருந்துதான் இந்த பெயரினையும், அந்த ஆணையத்தைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
Deleteபேரிடர் மேலாண்மை குறித்த அந்நாளையப் பாடலை எளிய விளக்கத்துடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி ஐயா.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமிக மிக அருமையான பதிவு ஐயா. எவ்வளவு அழகாகச் செய்துள்ளார்கள்! அதுவும் ஒர்றுமையாக எல்லா மக்களும் இணைந்து..அருமையான பகிர்வு ஐயா..
ReplyDeleteபேரிடர் மேலாண்மை குறித்த அந்நாளையப் பாடலை எளிய விளக்கத்துடன் பகிர்ந்துகொண்டு காட்சிகளைக் கண் முன் நிறுத்தி சிறப்பித்துள்ளீர்கள்.
ReplyDeleteபடத் தேர்வு மிக அழகு ! பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் VGK
மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போதுதான் பார்த்தேன். காலதாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.
ReplyDelete