கடந்த ஒரு மாத காலமாக திருச்சியில் தொடர்ந்து மேகமூட்டம் மற்றும்
அவ்வப்போது நல்ல மழை. அதிலும் நாங்கள் இருப்பது புறநகர் பகுதி. எங்கு பார்த்தாலும்
சுற்றி சுற்றி தண்ணீர்; அங்கங்கே ரோடுகளில் வாய்க்கால் போன்று நீரோட்டம். வெளியில்
எங்கும் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே அடைபட்டு கிடக்க வேண்டியதாயிற்று.
நேற்று (13.12.15 – ஞாயிறு) திருச்சிக்கே உரிய வெயில் பளீரென்று
அடித்தது. தொடர் மழை காரணமாக வானத்தில் காற்று வெளியிடையே தூசி தும்பட்டை இல்லை; உடம்பில்
வெயில் பட்டதும் சுளீர் என்று உறைத்தது. திருச்சி டவுன் கடைவீதிப் பக்கம் போய் ரொம்ப
நாளாகி விட்டது. எனவே நேற்று டவுனுக்கு பஸ்ஸில் சென்று வந்தேன். அந்த முற்பகல் வேளையிலும்
(11 மணி) பஸ்ஸில் நல்ல கும்பல்; பஸ் மத்திய பேருந்து நிலையம் வந்தபோதும் அங்கும் நல்ல
மக்கள் வெள்ளம். திருச்சி டவுனுக்கு வந்து, பஸ்ஸை விட்டு இறங்கியதும் மாவட்ட மைய நூலகம் சென்று வந்தேன். கடைவீதிக்கு சென்றால்,
அங்கும் திருவிழாக் கூட்டம் போல மக்கள் வெள்ளம். பத்தாதற்கு தெப்பக்குளம் – மலைக்கோட்டை
செல்லும் என்.எஸ்.பி ரோட்டில் அய்யப்ப பக்தர்கள் சீசன் காட்சிகள்.
அப்போது திருச்சி தெப்பக்குளம் நடுவே மண்டபத்தில், கறுப்பாக நூற்றுக்
கணக்கான பறவைகள் தங்கி இருப்பதையும், எ3ல்லோரும் வேடிக்க பார்ப்பதையும் கவனித்தேன்.
முன்பு தெப்பக்குளத்தில் இரண்டு முதலைகள் கிடந்தபோது எந்த பறவையும் வந்ததில்லை. அவற்றை
அப்போதே பிடித்து விட்டார்கள். மேலும் இப்போது திருச்சி மலைக்கோட்டை கும்பாபிஷேகத்தை
முன்னிட்டு அண்மையில்தான் சுத்தம் செய்து இருந்தனர்; குளத்தில் நிறைய நீர். எனவே அந்த
கறுப்பு பறவைகள் சுதந்திரமாக இருந்தன. அந்த பறவைகளைப் பார்த்தால் நீர்க்கோழிகள் போன்று
தெரியவில்லை. கிழக்குக் கரையில், கம்பிவேலி வழியாக, சில இளைஞர்கள் படம் எடுத்துக் கொண்டு
இருந்தனர். இந்த கரையில் படம் எடுத்தால் (எதிர் வெயில் காரணமாக) சரியாக விழாது என்பதற்காக
, தெப்பக்குளத்தின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில் எடுத்த படங்கள் கீழே.
(மேலே) தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும்போது போடப்பட்ட மிதவை, வைக்கோல்,
கழிகள் அப்படியே கிடக்கின்றன. (வாழ்க தூய்மை திருச்சி)
(இரண்டு வாரமாக BSNL BROADBAND இணைப்பு இல்லை; இதனால் வலைப்பக்கம்
தொடர்ந்து வர இயலவில்லை. எனது மகனிடம் இருக்கும் TATA Photon வயர்லெஸ் நெட் இணைப்பு
மூலம் (அவ்வப்போது வாங்கிக் கொள்வேன்) இந்த பதிவை வெளியிட முடிந்தது)
அருமையான காட்சிகளைப் பெருமையாக வெளியிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இவற்றை ஓரிரு நாட்கள் முன்பு நேரில் கண்டு மகிழ்ந்தேன். ஏனோ தங்களைப்போல படம் எடுத்து பதிவாக வெளியிடணும் என எனக்குத் தோன்றவே இல்லை.
ReplyDeleteபாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அடுத்தமுறை திருச்சி டவுன் பக்கம் வந்தால் ஃபோனில் சொல்லிவிட்டு வாங்கோ. உங்களைப்பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளது.
அன்புடன் VGK
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நேற்று இரவுதான் எங்களுக்கு BSNL BROADBAND சரியானது. நானும் இந்த பறவைகளைப் பற்றி பதிவாக எழுதுவதாகவே இல்லை. அப்புறம், இண்டர்நெட் இணைப்பு பிரச்சினையினால் எழுதி ரொம்பநாள் ஆயிற்று; மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதால் எழுதினேன். தங்களுடைய அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteஇப்பதிவை வாசிக்கையில் திருச்சி தெப்பக்குளத்தைச் சுற்றிநடந்த அந்நாளைய நினைவுகளும் சார்ந்த பல சம்பவங்களும் மீளத்தோன்றி மகிழ்விக்கின்றன. மண்டபத்தில் கூடியுள்ள பறவைக்கூட்டத்தைப் பார்த்தால் cormorant எனப்படும் நீர்க்காகங்களைப் போன்று உள்ளது. நீர்வரத்து நிறைந்த அமைதியான சூழலும் நீர்நிலைக்கு மத்தியில் பாதுகாப்பாய்க் கூடுகட்ட மரங்களும் அவற்றுக்குத் தேவை. ஆனால் இங்கே கூடுகட்ட மரங்கள் இல்லாத காரணத்தால் அவை சில நாட்களில் வெளியேறிவிடக்கூடும் என்று தோன்றுகிறது
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி. உங்கள் மூலம் இந்த பறவைகள் நீர்க்காகங்கள் என்பதனைத் தெரிந்து கொண்டேன். ( இந்த பறவைகள் உயரமாகவும், கழுத்து கறுப்பு பருந்து போன்று நீண்டும், உள்ளன). தெப்பக்குளத்திற்கு மேற்கே உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நிறைய மரங்கள் உள்ளன. இரவில் அங்கே சென்றுவிடும் என்று நினைக்கிறேன்.
Deleteஎப்போதும் கேமரா கையில் இருக்குமா! படங்கள் அருமை!
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களுக்கு நன்றி. எப்போதும் எங்கு வெளியில் சென்றாலும் எனது பையில் பெரும்பாலும் கேமரா இருக்கும்.
Deleteஅருமையான படங்கள் ஐயா...
ReplyDeleteஉங்களின் ஆர்வத்தை என்னவென்று சொல்வது...? பாராட்டுக்கள் ஐயா...
சகோதரரின் பாராட்டிற்கு நன்றி.
Deleteஅழகான படங்களுடன் அருமையான பதிவு. எங்கள் வீட்டருகில்கூட இப்போது வித விதமான பறவைகள் எங்கெங்கோ இருந்து வந்திருக்கின்றன. பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கிறது.
ReplyDeleteத ம 3
பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி! ஏதோ கால மாற்றத்தால் அவை இங்கு வந்து இருக்கின்றன என்று நினைக்கிறேன். .
Deletesuசுற்றுச்சூழல் சிந்தனையைத் தூண்டுகிறது உங்கள்பதிவு. பறவைகள் எந்த நிறத்தில், வடிவிலிருந்தாலும் கண்முன்னே தோன்றினால் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது.அவை கூட்டமாக அமர்ந்திருந்தாலோ, பறந்தாலோ கொள்ளை அழகு. அருகே மரங்கள் இல்லாததால், கீதமஞ்சரி சொல்வதைப்போல், பறவைகள் இடத்தை விரைவில் காலிசெய்யக்கூடும்.
ReplyDeleteதெப்பக்குளத்துக்கருகில் மரங்கள் சிலவாவது வளர்த்திருக்கவேண்டும். அதற்கெல்லாம் நகராட்சிக்கு நேரமேது? சிந்தனை செய்வோர் ப்ளாக் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். செயல்படுத்த அதிகாரம், வசதி உடையோர் ஒன்று அலட்சியமாக இருக்கிறார்கள் அல்லது பணம் சேர்ப்பதில் குறியாக இருப்பதால் இதற்கெல்லாம் நேரமில்லை அவர்களுக்கு. திருச்சியின் மட்டுமல்ல, நம் நாட்டின் துர்பாக்யம் இது.
அய்யா ஏகாந்தன் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.
Deleteஅய்யா, தாங்கள் எந்த ஊரில் இருந்து டவுனுக்கு வந்தீர்கள்... கே.கே.நகரா ? சமயபுரமா ? மண்ணச்சநல்லூரா ? ஜீயபுரமா ?
ReplyDeleteசிவபார்க்கவி
சிவபார்கவி அவர்களின் அன்பான வருகைக்கு நன்றி. நாங்கள் இருப்பது திருச்சி K.K.நகர் பக்கம். (நான் பிறந்ததிலிருந்து சிந்தாமணி பகுதியில் முன்பு குடியிருந்தோம்) நீங்கள் திருச்சி என்று நினைக்கிறேன். தங்கள் பெயரை வைத்து, என்னால் நீங்கள் சகோதரரா அல்லது சகோதரியா என்று அறியக்கூடவில்லை. கொஞ்சம் விளக்கினால் நல்லது.
Deleteபதிவில் மீண்டும் உங்களைப் படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறதுசுட்டெரிக்கும் வெயிலில் இளைப்பாற வந்த பறவைகளாய் இருக்கும் . பறவை பற்றிய செய்திகளுக்கு அதாரிடி கீத மஞ்சரி. எனக்கு அவை ஏதோ பறவைகள் அவ்வளவே
ReplyDeleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. BSNL BROADBAND இணைப்பில் இரண்டு வாரமாக பிரச்சினை; என்னுடைய மகன் வைத்திருக்கும் TATA PHOTON வயர்லெஸ் அவ்வப்போது கைகொடுக்கும். இதனால் வலைப்பக்கம் அதிகம் வர இயலவில்லை. நேற்று இரவுதான் எங்களுக்கு BSNL BROADBAND சரியானது.
Deleteநீங்கள் சொல்வது சரிதான். சகோதரி கீதமஞ்சரி அவர்கள் பறவைகள் பற்றிய பதிவுகளை அதிகம் எழுதி இருக்கிறார்; நானும் படித்து இருக்கிறேன்.. அவருடைய பின்னூட்டம் மூலம் இந்த பறவைகள் நீர்க்காகங்கள் என்பதனைத் தெரிந்து கொண்டேன்.
உங்கள் தெப்பக்குள வர்ணனை படித்தபின் அந்தக்குளத்தின் ஒரு கரையில் இருந்த குறுகிய சந்து ஒன்றில் ( மாரியம்மன் கோவிலையும் நந்தி கோவில் தெருவையும் இணைக்கும் சந்து ) புடவைக்கு வர்ணம் அடிக்கும் வீடு ஒன்றும் அதில் வசித்து என்னோடு பள்ளி, கல்லூரி யில் படித்த நண்பரின் நினைவு வந்தது. இப்போதும் படகு சவாரி இருக்கிறதா? பர்மா கடைகள் இருக்கின்றனவா? மாரியம்மன் கோவிலில் மந்திரிக்கும் பூசாரி எப்படி இருக்கிறார்? வாணப்பட்டறை வீதியில் மாயவரம் லாட்ஜில் இன்னும் டிபன் உண்டா ? லாட்ஜ் மட்டும் தான? ஆண்டார் தெருவில் ரமா கேப் இன்னமும் இருக்கிறதா?
ReplyDeleteகறுப்பண்ணா சாமி கோவிலில் வருடா வருடம் ஆடு வெட்டி ஆண்டு க்கு ஒரு தரம் திருவிழா இப்பொழுது நடைபெறுகிறதா?
பித்துக்குளி முருகதாஸ் வருடப்பிறப்பன்று மலைக்கொட்டையைஸ் சுற்றி ஊர் வலம் வந்து மலைப்படிகள் ஏறுவார்.
ஆண்டார் தெரு துவக்கத்தில் மாவடு விற்கும் கிழவி இருக்க சாத்தியம் இல்லை. இப்போது இருந்தால் 100க்கு மேல் இருக்கும்.
மலைக்கொட்டையைச் சுற்றி நாலு வீதிகள். அன்றும் இன்றும் என்று ஒரு பதிவு எழுதுங்களேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
வணக்கம் சுப்புத்தாத்தா...!
Deleteஇடைச்செருகலாய்நான்.
இது பற்றி நீங்கள் பதிவிட்டால் இன்னும் சுவாரசியமாய் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட தாழ்மையான கருத்து..!
செய்வீர்களா?
நீங்கள் செய்வீர்களா?
நன்றி.
அன்புள்ள சுப்பு தாத்தாவிற்கு வணக்கம். உங்களது. அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.
Delete// உங்கள் தெப்பக்குள வர்ணனை படித்தபின் அந்தக்குளத்தின் ஒரு கரையில் இருந்த குறுகிய சந்து ஒன்றில் ( மாரியம்மன் கோவிலையும் நந்தி கோவில் தெருவையும் இணைக்கும் சந்து ) புடவைக்கு வர்ணம் அடிக்கும் வீடு ஒன்றும் அதில் வசித்து என்னோடு பள்ளி, கல்லூரி யில் படித்த நண்பரின் நினைவு வந்தது. //
இந்த ரணகளத்திலும் (சென்னை வெள்ளத்தின் பாதிப்பு) உங்களுக்கு இந்த வலைப்பதிவுகள் மீதும், வலைப்பதிவர்கள் மீதும் இருக்கும் ஆர்வத்தைப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
// இப்போதும் படகு சவாரி இருக்கிறதா? பர்மா கடைகள் இருக்கின்றனவா?
//
ஆரம்பத்தில் தெப்பக்குளம் சுத்தமாக இருந்தது. அப்புறம் குளக்கரையச் சுற்றி இருக்கும் கடைக்காரர்கள் புண்ணியத்தில் குப்பைகள் சேர, படகுச்சவாரியை நிறுத்தி விட்டார்கள். திருச்சி தெப்பக்குளம் (மேற்கு கரை) மற்றும் சிங்காரத் தோப்பில் பழைய பர்மாபஜார் கடைகள் இருக்கின்றன. இப்போது பர்மாபஜார் சாமான்கள் வாங்க வேண்டும் என்றால், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியசாமி டவர்ஸ் அல்லது NSB ரோட்டிலிருந்து குறுக்கே உள்ள, சூப்பர் பஜார் செல்லும் சந்தில் அமைந்துள்ள காம்ப்ளெக்ஸ் (பழைய வாசன் மெடிகல்ஹால் பின்புறம்) செல்ல வேண்டும்.
//மாரியம்மன் கோவிலில் மந்திரிக்கும் பூசாரி எப்படி இருக்கிறார்? வாணப்பட்டறை வீதியில் மாயவரம் லாட்ஜில் இன்னும் டிபன் உண்டா ? லாட்ஜ் மட்டும் தான? ஆண்டார் தெருவில் ரமா கேப் இன்னமும் இருக்கிறதா? //
நாங்கள் திருச்சி டவுனை விட்டு வெளியேறி புறநகர்ப் பக்கம் வந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனவே நீங்கள் சொல்லும் மாரியம்மன் கோயில், பழைய பூசாரி பற்றி தெரியவில்லை. மாயவரம் லாட்ஜில் டிபன் உண்டு கேள்வி. ஆண்டார்தெரு ராமா கபேவில் அன்றைய பழைய நிர்வாகம் இல்லை; இப்போது டிபனோடு சாப்பாடு போட ஆரம்பித்து விட்டார்கள்.
// கறுப்பண்ணா சாமி கோவிலில் வருடா வருடம் ஆடு வெட்டி ஆண்டு க்கு ஒரு தரம் திருவிழா இப்பொழுது நடைபெறுகிறதா? பித்துக்குளி முருகதாஸ் வருடப்பிறப்பன்று மலைக்கொட்டையைஸ் சுற்றி ஊர் வலம் வந்து மலைப்படிகள் ஏறுவார். //
இந்த செய்திகள் யாவையும் முன்பு பேப்பரில் படித்ததுதான்.
// ஆண்டார் தெரு துவக்கத்தில் மாவடு விற்கும் கிழவி இருக்க சாத்தியம் இல்லை. இப்போது இருந்தால் 100க்கு மேல் இருக்கும். //
நீங்கள் குறிப்பிடும் அந்த மாவடு விற்கும் பாட்டியை நானும் பார்த்து இருக்கிறேன். இப்போது அவர் இல்லை.
// மலைக்கொட்டையைச் சுற்றி நாலு வீதிகள். அன்றும் இன்றும் என்று ஒரு பதிவு எழுதுங்களேன்.//
நீங்கள் மேலே கேட்ட எல்லா கேள்விகளுக்கும் , மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்0 அவர்கள் மட்டுமே சுவாரஸ்யமாக பதில் சொல்ல இயலும். மேலும் அவர் “ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!!” என்ற அவரது பதிவில் http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html திருச்சியைப் பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார்.
’ஊமைக்கனவுகள்’ ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்கள் சொல்வதைப்போல, உங்கள் திருச்சி – தஞ்சாவூர்க் கால மலரும் நினைவுகளை நீங்களே எழுதினால் சுவாரஸ்யமாக இருக்கும். (ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களுக்கு நன்றி)
புகைப்படங்கள் அனைத்தும் அழகு நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 4
நண்பர் தேவகோட்டையாருக்கு நன்றி.
Deleteஐயா வணக்கம்.
ReplyDeleteநலம் தானே?
“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்“ என்று இலக்கியச் சொல்லாடல் ஒன்று உண்டு.
உங்கள் பதிவையும் படங்களையும் பார்த்ததும் நினைவிற்றோன்றியது,
“ உற்ற குளத்தின் உறுநீர்ப்பறவைகள் ” என்பது.
உங்கள் நாட்குறிப்பொன்றின் இன்றைய பக்கங்களை வாசிக்கத் தந்தது போன்ற தோன்றல்.
த ம
நன்றி
ஆசிரியர் ஜோசப்விஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பதிவிற்குப் பொருத்தமான பாடலை நினைவூட்டியமைக்கும் நன்றி. இக்கால அரசியல்வாதிகள் பலரும் ‘அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்” என்றால் மிகையாகாது.
Deleteபடங்களைப் பார்த்ததும் அந்த நாள் (1960-61) ஞாபகம் வந்தது நண்பரே! பழைய நிகழ்வுகளை அசை போட வைத்த தங்களுக்கு நன்றி!
ReplyDeleteஅய்யா V.N.S. அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களது செயிண்ட் ஜோசப் கல்லூரி நாட்களைப் பற்றிய நினைவலைகளில், மேலே படத்தில் உள்ள கிளைவ்ஸ் ஹாஸ்டல் பற்றி சொன்னது நினைவுக்கு வருகிறது.
Deleteபறவைகள் நீந்தும் காட்சி கண்கொள்ளாக் காட்சி
ReplyDeleteசகோதரர் அவர்களுக்கு நன்றி.
Deleteஇவை கீத மஞ்சரி குறிப்பிட்டதுபோல் நீர்க்காகங்களே!, இவை தொடர்ந்து இங்கு இருக்க ஏதுவான அயற்சூழல் இல்லை எனக் கருதுகிறேன். குளத்துள் போதிய அளவு மீன், அயலில் மரங்கள், மனித சஞ்சாரம்.
ReplyDeleteஒரு பெரு நகரில் இவ்வளவு கூட்டமாக நீர்ப்பறவைகள், ஒரு அரிய காட்சி. பகிர்ந்ததற்கு நன்றி!
இவற்றைப் பழக்கி மீன் பிடிக்கும் பழக்கம் சீனா, தாய்லாந்து, கம்பூச்சியா, வியட்நாம், லாவோஸ் போன்ற நாடுகளில் உண்டு. இத் தொடுப்பில் பார்க்கலாம்.https://www.youtube.com/watch?v=XJ4Fujsr274
சகோதரர் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட சுட்டியைப் (the china chronicle)பார்த்தேன். மனிதர்களோடு நீர்க்காகங்கள், நம்நாட்டு கோழிகள் போன்று பழகுவது ஆச்சரியமான விஷயம்.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
அற்புதமான காட்சியை படமாக பிடித்து பதிவாக போட்டமைக்கு நன்றி ஐயா. த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்கொள்ளாக் காட்சி
ReplyDeleteதிருச்சி தெப்பக் குளத்தினைக் கண்டு நீண்ட காலமாகிவிட்டது
இன்று தங்களால் கண்டேன்
நன்றி ஐயா
தம +1
ஆசிரியர் கரந்தையார் அவர்களுக்கு நன்றி.
Delete#இந்த கரையில் படம் எடுத்தால் (எதிர் வெயில் காரணமாக) சரியாக விழாது என்பதற்காக , தெப்பக்குளத்தின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில் எடுத்த படங்கள் கீழே.#
ReplyDeleteபடங்கள் அழகு ,உங்களின் மெனக்கெடலுக்கு நன்றி :)
தோழர் ’ஜோக்காளி’ வலைப்பதிவர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.
Deleteஆஹா தெப்பக்குளத்தில் இவ்வளவு தண்ணீர் பார்த்து மகிழ்ச்சி.... கூடவே பறவைகளும். புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபறவைகளை அழகாய் படம் பிடித்து, பதிவாய் வெளியிட்டீர்கள்.
ReplyDeleteநன்று!
சகோதரர் மயிலாடுதுறை அ. முகம்மது நிஜாமுத்தீன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅருமையான படங்களின் தொகுப்பு
ReplyDeleteசிறந்த பகிர்வு
தொடருங்கள்
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.
Deleteதெப்பக் குளங்களில் நீர் இருப்பதே அரிய காட்சி.
ReplyDeleteசகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. திருச்சி தாயுமானசுவாமிகள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அண்மையில்தான், இந்த தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்தார்கள். சுத்தநீராக இருப்பதால் இவ்வளவு பறவைகள். மறுபடியும், குளக்கரை வியாபாரிகள் குப்பையைக் கொட்டி குளத்தை அசுத்தப்படுத்தாமல் இருந்தால், இந்த பறவைகள் இங்கேயே தங்கும்.
Deleteகவிஞருக்கு நன்றி.
ReplyDeleteநீரின்றி அமையாது உலகு
ReplyDeleteஎன்பது மட்டுமல்ல
நீரின்றி அமையாது அழகும்
படங்களுடன் பகிவு அருமை
வாழ்த்துக்களுடன்...
கவிஞர் ரமணி அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.
Deleteதெப்பக்குளங்களில் நீர்க்காகங்கள் நீந்துவது அருமையான காட்சி. பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசகோதரி அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.
Deleteதங்களின் கலை ரசனைக்கும் புகைப்பட நேர்த்திக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteதிருச்சியின் கண்கள்.....
ReplyDeleteசகோதரருக்கு நன்றி.
Delete