Tuesday, 18 August 2015

சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015)



பத்து நாட்களுக்கு முன்னர் நண்பர் சங்கர் அவர்களிடமிருந்து செல்போன் அழைப்பு (இவரும் நானும் ஒன்றாக பணிபுரிந்தோம்) “ இந்த ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி சமயபுரத்தில் அன்னதானம். காலையிலேயே வந்து விடுங்கள்.” என்று தகவல் சொன்னார். நானும் “சரி வழக்கம் போல வந்து விடுகிறேன்” என்றேன். எப்போதும் தினமும் காலையில் 5 மணிக்கு உறக்கத்திலிருந்து எழுவது வழக்கம். அன்றைக்கு (17.08.2015, ஞாயிறு) 4 மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்து விட்டு சமயபுரம் செல்ல கே.கே.நகர் (திருச்சி) பஸ் ஸ்டாண்ட் வந்தேன். இதற்கு முன்னர்  எனது TVS மொபெட்டில் செல்வேன். இப்போது எங்கு சென்றாலும் பஸ் பயணம்தான். மக்களோடு மக்களாய் சிறுபிள்ளை போல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பஸ் பயணம் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

சத்திரம் பஸ் நிலையம் வந்தேன். சமயபுரம் பஸ் நிற்கும் இடத்தில் மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் கூட்டம். முன்பெல்லாம் சமயபுரத்திற்கு சில சிறப்பு தினங்களில் மட்டும் செல்வார்கள். இப்போது வருடம் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.  காலியாக நின்ற பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்ந்தேன். காவிரிப் பாலம் வந்தது. ஆடி  பதினெட்டிற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைந்து அரை ஆறாக காவிரி சலசலத்துக் கொண்டு இருந்தது. காவிரி பாலத்திலிருந்து சமயபுரம் வரை நிறைய பக்தர்கள் நடை பயணமாக சென்று கொண்டிருந்தார்கள். பக்தர்களின் அடையாளமாக மஞ்சள் ஆடை, துண்டு அணிந்து இருந்தார்கள். பல பெண்கள் தலை முடியில் வேப்பிலையை சூடி இருந்தனர்.  எல்லோரும் தனித்தனி குழுவாக சென்று கொண்டிருந்தார்கள். சமயபுரத்திற்கு முன்னர் உள்ள வாய்க்கால் எப்போதும் ஆறுபோல் இருக்கும். பெரும்பாலான நடை பக்தர்கள் அதில்தான் குளியல் போடுவார்கள். இன்று வாய்க்காலில் தண்ணீரே இல்லை. எல்லோரும் வழியில் கிராமங்களில் இருந்த தண்ணீர் தொட்டி குழாய்களிலும் அடி பம்புகளிலும் குளியல் போட்டுக் கொண்டும் துணிகளை பிழிந்து கொண்டும் இருந்தனர்.

பஸ் சமயபுரம் நெருங்கியதும் காலை நேரம் என்பதால் கடைத்தெருவில் எல்லா கடைகளிலும் ஊதுவத்தி சாம்பிராணி மணத்தோடு பக்திமணம் நிரம்பிய பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாதபடியினால், சமயபுரம் கோயில் குளத்திலும் கட்டணக் குளியல் இடங்களிலும்  குளிக்க கும்பல் அலை மோதியது.

நண்பர்கள் அன்னதானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன் காலை நேரம் என்பதால் பக்தர்களுக்கு பன்னும் டீயும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கப்புறம் இட்லியும் சாம்பாரும் சுடச்சுட கொடுக்கப்பட்டன.

இந்த வருடமும் வழக்கம் போல,  இன்று அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி (கவிஞர் கண்ணதாசன் ஊர்) அருகே உள்ள அரிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இவரோடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மற்றும் ஓய்வு பெற்ற நண்பர்கள் சிலரும் இணைந்துள்ளனர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த நண்பர்களோடு இணைந்துள்ளேன். இந்த நற்பணியில் என்னை இணைத்து வைத்தவர் என்னோடு பணிபுரிந்த திரு V சங்கர் (ஸ்ரீரங்கம்) மற்றும் மேலே சொன்ன செல்வம் இருவரும்தான். நேற்றைய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.


















இதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம்.
சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013)
சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014)


30 comments:

  1. நல்ல காரியம் வாழ்க வளமுடன் கடந்த வருடமும் இதனைப்பற்றி எழுதி இருந்தீர்கள் என்று நினைவு
    இணைப்புகளும் அதையே உறுதி படுத்துகின்றன பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. கடந்த மூன்று வருடங்களாக (2012 இலிருந்து வருடம் ஒரு பதிவாக ) இந்த அன்னதானம் பற்றி நண்பர்களுக்காக எழுதி வருகிறேன்.

      Delete
  2. எங்கள் குல தெய்வங்களுள் ஒன்று சமயபுரம் மாரியம்மா ஆகும்.
    ஒரு வயது முடிந்த உடன் குழந்தைகளுக்கு மொட்டை போடுவது
    எங்கள் வீட்டு வழக்கம்.

    பல பழைய நினைவுகள் தங்கள் பதிவு படித்தபின் வந்தன.

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அய்யா சுப்பு தாத்தா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களது குலதெய்வம் சமயபுரம் மாரியம்மன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. (உங்களது சொந்த ஊர் திருச்சி பக்கம் உள்ள ஆங்கரை என்று முன்பு ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டதாக நினைவு.) எங்கள் குலதெய்வம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுர காளியம்மன்.

      Delete
  3. நல்லதொரு நற்பணி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி!

      Delete
  4. சிறப்பான செயல் ஐயா... வாழ்த்துகள்... படங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!

      Delete
  5. தானத்தில் சிறந்தது அன்னதானம்;கர்ணனே செய்யத் தவறியது
    நலந்தானே?

    ReplyDelete
    Replies
    1. குட்டன் அவர்களுக்கு நன்றி! நலமே அய்யா!

      Delete
  6. அன்னதானம் வழங்க அனுமடி பெற வேண்டும் என்னும் உத்தரவு இருப்பதை முன்பு உங்கள் பதிவொன்றில் படித்தநினைவு, இன்னுமந்த உத்தரவு அமலில் இருக்கிறதா. சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ( NATIONAL FOOD SECURITY BILL )என்பது மத்திய அரசு கொண்டு வந்தது. இன்றும் அமுலில் உள்ளது. சமயபுரம், ஸ்ரீரங்கம் போன்ற திருக்கோயில் உள்ள பெரிய ஊர்களில் அன்னதானம் செய்யும் போது எல்லாமே சட்டப்படிதான் செய்கிறார்கள்

      Delete
  7. வருடா வருடம் தொடர்ந்து
    மிகச் சிறப்பாக நடைபெறுவது மகிழ்வளிக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

      Delete
  8. தொடர்ந்து இவ்வ்று செய்துவருவது பாராட்டத்தக்கது. தாங்கள் கலந்துகொண்டதோடு மட்டுமன்றி எங்களோடு பகிர்ந்த வகையில் எங்களுக்கும் மன நிறைவே. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. அருமையான அன்னதானம்.. சிறப்பான பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களே நலமா? இறைவன் அருளால் மீண்டும் வலைப்பக்கம் வந்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பக்கம் வந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கருத்துரைகள் உடன் எழுத இயலவில்லை. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு மீண்டும் நன்றி.

      Delete
  10. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!..

    இறைபணியில் ஈடுபட்ட அனைவருக்கும்
    அன்னை எல்லா மங்கலங்களையும் அருள்வாளாக!..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. தங்கள் பிரார்த்தனை எங்களுக்கு நல்லது பயக்கும் அய்யா!

      Delete

  11. அன்னதானம் வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் !படமும்
    பகிர்வும் மனதிற்கு மகிழ்வைக் கொடுத்தது வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

      Delete

  12. ஆண்டு தோறும் ஆரவாரமின்றி அன்னதானம் வழங்கிவரும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆண்டுதோறும் நடந்து வருவதால், இந்த அன்னதானம் பற்றி தொடர்ந்து பதிவாக எழுதுவதா வேண்டாமா என்ற யோசனை எழுந்தது. ஆனாலும் நண்பர்களுக்காகவும், பின்னாளில் சமயபுரத்தில் நடந்த நிகழ்வுகளை தொகுக்கப்போகும் ஆசிரியர்களுக்காகவும் எழுதினேன்.

      Delete
  13. வணக்கம்
    ஐயா
    நிகழ்வை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. பாராட்டிற்கு உரியவர்கள்
    பாராட்டுவோம்
    வாழ்த்துவோம்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள் அய்யா...

    ReplyDelete
  16. வருடா வருடம் இப்படி தொடர்ந்து அன்னதானம் செய்து வரும் உங்களது நண்பர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். சமயபுரத்தாளின் ஆசீர்வாதம் சிறப்புற கிடைக்கட்டும்.....

    ReplyDelete
  17. அன்புள்ள அய்யா,

    சமயபுரத்தில் நண்பர்களுடன் இணைந்து அன்னதானம் செய்ததை படங்களுடன் பயணத்தை விவரித்துக் கூறியது கண்டு வியந்தோம். தொடர்ந்து தொடருட்டும் அன்ன தானம்.

    தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்
    கூட இருந்தே குழி பறித்தாலும்
    கூட இருந்தே குழி பறித்தாலும்
    கொடுத்தது காத்து நிக்கும்...
    செய்த தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

    நன்றி.
    த.ம.10

    ReplyDelete
  18. தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.....நல்லதொரு செயல்! பாராட்டுகளும்....அந்த அம்மையின் அருளும் கிடைக்கப் பெற வாழ்த்துகள்! ஐயாஅ! புகைப்படங்கள் அனைத்தும் அருமை!!!

    ReplyDelete