நமது நாட்டில் போகாத ஊருக்கு வழி கேட்டால், வழி
சொல்ல நிறையபேர் வருவார்கள். பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு என்ன
விலை என்று சொல்லுகிறான் என்பார்கள். அடிக்கடி நம்நாட்டில் திருவள்ளுவரைப் பற்றி
எழுப்பப்படும் சர்ச்சைகளில் ஒன்று அவர் தாடி, மீசையுடன்தான் இருந்தாரா? இல்லையா
என்பது ஆகும். அண்மையில் ஒருவர் இந்த சர்ச்சையை கிளப்பியிருந்தார் எங்கள் வீட்டில்
நாங்கள் வாங்கும் செய்தித்தாள்களில் தினமலரும் ஒன்று. நேற்று (திருச்சி பதிப்பு
18,அக்டோபர்,2013) அதில் ஒரு செய்தி. அதாவது ராணிப்பேட்டை மோகனகுமார் என்பவர்
//
அவர் (திருவள்ளுவர்) நீண்ட தலைமுடி வளர்த்து கொண்டை போட்டுக் கொண்டு, தாடி
வளர்த்து வாழ்ந்திருக்க மாட்டார். அவர் தனது தலை முடியை சீவி வாரி,தமிழரின்
வீரத்துக்கு அடையாளமான முறுக்கு மீசையுடனேயே வாழ்ந்திருப்பார் //
என்று
சொல்லிவிட்டு ஒரு படமும் காட்டுகிறார். அதில் இருப்பவர் நாம் கம்பர் என்று
சொல்லும் படத்தில் இருப்பவருக்கு தம்பி போன்று இருக்கிறார். மேலும் இதுபற்றி தமிழக
முதலவர் ஜெயலலிதா அவர்களுக்கும் இவரது படத்தில் உள்ளது போல் வள்ளுவரை மாற்றச்
சொல்லி கடிதம் எழுதியுள்ளார்.
அரசு அங்கீகாரம்
பெற்ற வள்ளுவர் படம்:
இவர்தான்
திருவள்ளுவர் என்று தமிழக அரசு ஒரு படத்தினை அங்கீகாரம் செய்துள்ளது. இந்த
படத்தினை வரைந்தவர் ஓவியர் வேணுகோபால் சர்மா. இவர் ஒரு கற்பனையில் தான் கண்ட கேட்ட
செய்திகளின் அடிப்படையில் இப்படித்தான் வள்ளுவர் இருந்திருப்பார் என்ற யூகத்தில்
படம் வரைந்தார். இந்த படம் அங்கீகாரத்திலும் ஒரு
பின்னணி உண்டு.. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு விழாவில் ( 16,ஜனவரி,2011
) அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது :
//
நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது,
திருவள்ளுவர்
படத்தை சட்டசபையில் வைக்க
வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், "அந்த படத்தை நீங்களே
கொண்டுவாருங்கள்' என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால்,
அதிலும்
சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது.
அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா,
திருவள்ளுவர்
சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்.சட்டசபையில் இந்த படத்தை
வைக்கவேண்டுமென கேட்டபோது, தி.மு.க.,காரர்கள் இந்த படத்தை வைத்தால், நாங்கள் வைத்தது என அடிக்கடி கூறிக்கொள்வர் என நினைத்து, நாங்களே இந்த படத்தை
வைக்கிறோம் என பக்தவத்சலம் கூறினார் //
அப்போதைய காங்கிரஸ்
ஆட்சியில் வேணுகோபால் சர்மா வரைந்த இந்த திருவள்ளுவர் படம் தமிழக அரசால்
அங்கீகரிக்கப்பட்டது. இந்த படத்தினைத்தான் அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும்
ம்ற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும் வைக்க வேண்டும் என்று அரசு ஆணை
பிறப்பிக்கப்பட்டது. பின்னர் திமுக
ஆட்சிக்கு வந்ததும் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்ட திருக்குறளோடு இந்த வள்ளுவர்
படமும் வைக்கப்பட்டது.
வள்ளுவரை மாற்றிய
கருணாநிதி:
கலைஞர் கருணாநிதி
அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார். அங்கு
வள்ளுவர் சிலையை உட்கார்ந்த நிலையில்தான்
அமைத்தார். ஆனால் கன்னியா குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை நின்ற கோலத்தில்
அமைத்ததோடு வள்ளுவரையும் “ அய்யனே என் அய்யனே “ என்று பெயர் மாற்றம் செய்து துதி
செயதார்..மேலும் சிலையானது பெண் நளினத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என்றும்
சொன்னார்கள். ஆனாலும் வள்ளுவர் தாடி மீசைய்டன் தான் கன்னியாகுமரியில் இருக்கிறார்.
இப்படி கலைஞர் கருணாநிதி வள்ளுவர் உருவத்தை அமர்ந்த கோலத்திலிருந்து நின்ற
கோலத்திற்கு மாற்றம் செய்ததையும் வள்ளுவரை அய்யன் என்று மாற்றியதையும் எந்த தமிழ்
உணர்வாளர்களும் கண்டு கொள்ளாததோடு கண்டிக்கவும் இல்லை..
.
முடிவுரை:
ஏற்புடையதா என்றால் இல்லை. ஏனெனில் மயிலாப்பூரில் கிடைத்த திருவள்ளுவர் சிலையில் அவர் தாடி மீசையுடன்தான் காட்சி தருகிறார். வேணுகோபால் சர்மா மயிலாப்பூர்க்காரர். அவர் இந்த சிலையின் அடிப்படையில்தான் வள்ளுவரை தாடி மீசையுடன் வரைந்திருக்க வேண்டும்.
மேலும்
சான்றோர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்களின் படங்களை வரையும் போதும்
உருவச் சிலைகளை அமைக்கும் போதும் அவர்களது கடைசிகாலத்து பிம்பத்தையே மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள்.
திருவ்ள்ளுவர் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் ஆவார். எனவே வள்ளுவரை தாடி
மீசையுடன் இருக்கும் ஒரு குருவாகவே (ஆசானாகவே) காண்போம்.
கட்டுரை எழுத
உதவியவை:
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539
( ஐராவதம் மகாதேவன் )
வணக்கம்
ReplyDeleteஐயா
வள்ளுவர் பற்றிய ஆய்வு இன்னும் தொடரலாம்....... ஆட்சியாளர்கள் மாற்றம் ஏற்படும்போது வரலாற்றை மாற்றிவிடுவார்கள்..சிலநேரங்களில் குறளையும் மாற்றிவிடுவார்கள்..............நம்ம தமிழ் உணர்வாளர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்..ஐயா..ஆய்வு அருமை வாழ்த்துக்கள் ஐயா....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மை வெளிவரட்டும்
ReplyDeleteதெய்வப் புலவர் எப்படி இருந்திருந்தால் என்ன...? விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteவயது அனுபவம் முதலான குறியீடாகக் கூட
ReplyDeleteதாடி மீசையைக் கொள்ளலாம்தானே ?
மீசையற்ற தாடிக்கு வாய்ப்பில்லை
தாடியற்ற மீசை அறிவை விட
வீரத்தைக் கூட்டிக் காட்டும் என நினைக்கிறேன்
வள்ளுவர் என்றால் இவர்தான் என
மனதில் பதிந்து போயிற்று
இதிலும் அரசியல் நுழைந்தால்
அனைவருக்கும் எரிச்சல்தான் வரும்
மனம் கவர்ந்த பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
ReplyDeleteபழித்தது ஒழித்து விடின்.
எனினும், மனதில் பதிந்து விட்ட ஐயன் திருவள்ளுவர் - சித்திரத்தை அழிக்க முடியாது. சிந்தனையை அவர் காட்டிய நெறியில் செலுத்துவது நியாயம்!..
பெயர் அறியா புலவனுக்கு 'செம்புலப் பெயல் நீரார் 'என அழைப்பது ஒரு குறியீடுதான் .அதைப் போலவே திருவள்ளுவர் உருவமும் ஒரு குறியீடே ...அதில் கூலிங் கிளாஸ் மாட்டி .ஜீன்ஸ் பேண்ட் மாட்ட நினைப்பது அபத்தம் !
ReplyDeleteத.ம 4
நீங்கள் ஆராய தேர்ந்தெடுத்த மனிதன் ஒரு சாதனையாளர். வாழ்த்துக்கள் தொடருங்கள்.............
ReplyDeleteவள்ளுவர் கூறியதை பின்பற்றாமல், அதிலும் அரசியல் செய்து பெயர் வாங்கலாம், கொஞ்சம் காசு பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் நம்மூர் அரசியல்வாதிகள். எம்ஜியார் அன்னை சத்யா என்று பெயர் வைத்ததுபோல், இவர்கள், அவர்களுடைய தந்தையின் ஃபோட்டோவை மாடலாக வைக்காமல் விட்டார்களே என்று திருப்திபட வேண்டியதுதான். இப்போது மாற்றாமல் இருப்பார்கள் என்றும் உறுதியாகக் கூறமுடியாது.
ReplyDeleteமுந்தைய அரசு (தி.மு.க அல்ல) செய்ததை இப்போதைய அரசு மாற்ற வழி செய்துவிட்டார் ராணிப்பேட்டை திரு மோகன குமார் என நினைக்கிறேன். தமிழ் நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது போலவும் இதுதான் மிக முக்கிய பிரச்சினை போலவும் நம்மில் சிலருக்குத் தெரிவது ஆச்சரியமாக இருக்கிறது.
ReplyDeleteநான் கடைசியாப் பார்த்தப்ப தாடி, மீசை ஒண்ணும் இருக்கல.
ReplyDeleteமறுமொழி > 2008rupan said...
ReplyDeleteகவிஞர் அன்பு ரூபனின் கருத்துரைக்கும் தமிழ் உணர்வினுக்கும் நன்றி!
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDelete// உண்மை வெளிவரட்டும் //
கவிஞரின் வாக்கு பலிக்கட்டும்
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// தெய்வப் புலவர் எப்படி இருந்திருந்தால் என்ன...? விளக்கங்களுக்கு நன்றி ஐயா... //
சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி1
மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
ReplyDelete// வள்ளுவர் என்றால் இவர்தான் என மனதில் பதிந்து போயிற்று இதிலும் அரசியல் நுழைந்தால் அனைவருக்கும் எரிச்சல்தான் வரும் மனம் கவர்ந்த பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //
நன்றாகவே அழுத்தமாகச் சொன்ன கவிஞரின் குரலுக்கு நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDelete// மனதில் பதிந்து விட்ட ஐயன் திருவள்ளுவர் - சித்திரத்தை அழிக்க முடியாது. சிந்தனையை அவர் காட்டிய நெறியில் செலுத்துவது நியாயம்!.. //
தஞ்சையம்பதிக்காரர் நீங்கள் சொல்வது போல சிந்தனையை வள்ளுவர் காட்டிய நெறியில் செலுத்துவோம்.
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDelete// பெயர் அறியா புலவனுக்கு 'செம்புலப் பெயல் நீரார் 'என அழைப்பது ஒரு குறியீடுதான் .அதைப் போலவே திருவள்ளுவர் உருவமும் ஒரு குறியீடே ...அதில் கூலிங் கிளாஸ் மாட்டி .ஜீன்ஸ் பேண்ட் மாட்ட நினைப்பது அபத்தம் !//
சகோதரர் பகவன்ஜீ கே ஏ அவர்களின் மாடர்ன் உவமைக்கு நன்றி!
மறுமொழி > senthil kumar said...
ReplyDelete// நீங்கள் ஆராய தேர்ந்தெடுத்த மனிதன் ஒரு சாதனையாளர். வாழ்த்துக்கள் தொடருங்கள்............. //
தம்பி செந்தில் குமாருக்கு நன்றி!
மறுமொழி > Packirisamy N said...
ReplyDelete// வள்ளுவர் கூறியதை பின்பற்றாமல், அதிலும் அரசியல் செய்து பெயர் வாங்கலாம், கொஞ்சம் காசு பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் நம்மூர் அரசியல்வாதிகள். எம்ஜியார் அன்னை சத்யா என்று பெயர் வைத்ததுபோல், இவர்கள், அவர்களுடைய தந்தையின் ஃபோட்டோவை மாடலாக வைக்காமல் விட்டார்களே என்று திருப்திபட வேண்டியதுதான். இப்போது மாற்றாமல் இருப்பார்கள் என்றும் உறுதியாகக் கூறமுடியாது. //
அரசியல்வாதிகளின் மன அலைகளை அப்படியே படம் பிடித்துக் காட்டிய வரிகளைச் சொன்ன சகோதரர் பக்கிரிசாமி என் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// முந்தைய அரசு (தி.மு.க அல்ல) செய்ததை இப்போதைய அரசு மாற்ற வழி செய்துவிட்டார் ராணிப்பேட்டை திரு மோகன குமார் என நினைக்கிறேன். //
எடுத்துக் கொடுக்க ஆளிருந்து விட்டால் தொடுத்துக் கொள்வது எளிது என்று செயல்படுகிறார்கள்.
// தமிழ் நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது போலவும் இதுதான் மிக முக்கிய பிரச்சினை போலவும் நம்மில் சிலருக்குத் தெரிவது ஆச்சரியமாக இருக்கிறது. //
அரசியலே, கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியத் தூக்கி மணையில் வை கதைதான்.
அய்யாவின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அழியாப்புகழ் பெற்ற திருவள்ளுவரின் சிலையை வைத்து சர்ச்சையா ?
ReplyDeleteஎன்றே நினைக்கத்தோன்றுகிறது.
அரசியல் புகாமல் இருந்தால் நலமே.
நல்ல பகிர்வுங்க.
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDelete// நான் கடைசியாப் பார்த்தப்ப தாடி, மீசை ஒண்ணும் இருக்கல. //
நன்றாக நகைச்சுவையாக கருத்துரை தந்த மூத்த பதிவர் அய்யாவிற்கு நன்றி! போகிற போக்கைப் பார்த்தால் ” வள்ளுவர் கிராப்தான் வைத்து இருந்தார். அதன்படி மாற்றவும் “ என்று யாராவது ” திங்கட்கிழமை மனு” கொடுத்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை,
வள்ளுவர் குடும்பவாழ்க்கை தன் மனைவியுடன் வாழ்ந்தார். அவர்களிருவரும் எப்படி ஒரு தம்பதியினர் வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. வள்ளுவரும் வாசுகியும் போல வாழ்க என்ற மண வாழ்த்திலிருந்து இது தெளியப்படும். பொதுமறையாக எழுதப்பட்ட தன் பனுவலிலும் அவர் குடும்பவாழ்க்கையைச் சிற்ப்பித்து நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்று சினத்துடன் வலியுறுத்துகிறார். இப்படிப்பட்ட நபரை நீண்ட தாடி மீசை, சிகையுடன் உருவமைபபது அவரின் வ்ரலாற்றையே அல்லது எண்ணத்தையே சிதைப்பதாம். ஒரு முனிவரின் தோற்றம் ஒரு கிரஹஸ்தனுக்கென்றால், அவ்ர் காலத்தில் முனிவர்களல்லா அனைத்து மக்களும் இப்படித்தான் இருந்தார்கள் என்று படும். அப்படி தமிழ் மக்கள் எல்லாரும் முனிவர் தோற்றத்தோடு அலைந்தார்கள் அலலது வாழ்ந்தார்கள் எனறு சான்றுகள் உண்டா? ஆன்றோர் என்பதற்கு நீண்ட தாடியும் சிகையும் வேண்டுமென்பது நம் கட்டமைப்பு. எவ்வமைப்பிலும் சான்றோரும் ஆன்றோரும் இருக்க முடியும்.
ReplyDeleteஎல்லோரும் பார்த்து பழகியவொன்றை மாற்றுவது கடினம். எனவே விட்டுவிடலாமென்று சொல்லலாம். அதேவேளையில் என் மேலே உள்ளக் கருத்தைக்கொண்டோரை எள்ளி நகையாடுவது சிறுபிள்ளைத்தனம்.
இங்கே சில பின்னூட்டங்கள் அவரின் குறளைப்பாருங்கள்; அவற்றின் கருத்துக்களை ஏற்று வாழுங்கள்; பிமபத்தைப்பற்றிப் பிரச்சினையெதற்கென்கின்றன. கட்டுரை பிம்பத்தைப்பற்றித்தான் என்பதை மறந்தே விடுகிறார்கள். குற்டப்பாக்களின் கருத்தைப்பற்றி தமிழ் இளங்கோ சிலாகிக்கவில்லை.
இன்னொரு பின்னூட்டமோ, "வெறும் குறியீடுதானே பிம்பம் இதற்குப் போய் ஏன் அலட்டல்?" என்கிறது. அபாயகரமான கருத்து இது. பிம்பங்கள் அல்லது குறியீடுகள் ஒரு சமுக மககளை வசியப்படுத்தும் தன்மையன. பிராமண் ஜாதியினர் தாம் கருவிலேயே திருவுடையோம் என்ற கருத்தை நிலை நாட்டி வெற்றிகண்டனர். அதற்கு இப்படிப்பட்ட குறியீடுகளும் உதவின என்பது நினைவிற்கொள்க. ஒரு எடு கோள்தான் பல நச்சுக்கருத்துகள் சமூகத்தில் உலாவ விட முடியும் கவர்ச்சியான குறியீடுகளைப் பயனபடுத்து.
எனவே தான் வள்ளுவருக்குப் 'பூணுல்" போடப்பவில்லை. சிறார்கள் பள்ளிநூல்களிலும், எங்கெங்கும் காணுமிடங்களெல்லாம் பூணால் உடம்புடன் வ்ள்ளுவர் இருந்தால் என்ன மனதில் பதியும் எனப்தை அந்த பின்னூட்டக்காரர் கேட்டுக்கொள்ளட்டும்.
அரசியல் பண்ணுகிறார்கள் என அலட்சியமாக எழுதுகிறார்கள். அவர்கள்தான் குரல் கொடுக்கிறார்கள். நீங்களோ ஏமாற்றப்படுகிறீர்கள் எனப்தைக்கூட உணரா, அல்லது உணர விரும்பா சிந்தனையற்ற கருவிகள் எனப்தை மறவாதீர்.
அருமையானதோர் ஆய்வுக்கட்டுரை. பலவிஷயங்களை பல கோணங்களில் அறியவும் யோசிக்கவும் வைக்கிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமறுமொழி > Sasi Kala said...
ReplyDelete// அழியாப்புகழ் பெற்ற திருவள்ளுவரின் சிலையை வைத்து சர்ச்சையா ? என்றே நினைக்கத்தோன்றுகிறது. அரசியல் புகாமல் இருந்தால் நலமே. நல்ல பகிர்வுங்க. //
சகோதரி கவிஞர் தென்றல் சசிகலாவின் கருத்துரைக்கு நன்றி! உங்களது அரசியல் புகாமல் இருந்தால் நலமே. என்ற எண்ணம் வாழ்க.
மறுமொழி > Anonymous said... ( 1 )
ReplyDeleteபெயரிலியின் அன்பான வருகைக்கும் உணர்வு பூர்வமான விரிவான கருத்துரைக்கும் நன்றி! நமது தமிழ்நாட்டு வரலாற்றை எழுதப் புகுந்தால் மேனாட்டு வரலாற்றினைப் போல ஆதாரம் அவ்வளவாக இல்லை. அகழ்வாராய்ச்சி கல்வெட்டுக்கள் தவிர மற்றவைகள் இலக்கியங்களாக அல்லது செவிவழிச் செய்திகள், கதைகளாகவே இருக்கின்றன. எனவே வள்ளுவர் போன்ற பெருமக்களின் உருவங்கள் யூகத்தின் அடிப்படையில் வரையப்பட்டன. ராஜா ரவிவர்மாவின் கடவுளரின் ஓவியங்களை இங்கு நினைவில் கொள்ளலாம்.
// கட்டுரை பிம்பத்தைப்பற்றித்தான் என்பதை மறந்தே விடுகிறார்கள். குற்டப்பாக்களின் கருத்தைப்பற்றி தமிழ் இளங்கோ சிலாகிக்கவில்லை. //
சரியாகச் சொன்னீர்கள். இங்கு எனது கட்டுரையின் நோக்கம் மக்கள் மனதில் வள்ளுவர் இப்படித்தான் இருப்பார் என்று பதிந்து விட்ட ஒரு பிம்பத்தினை ( IMAGE ) அரசியல் செல்வாக்கால் கலைஞர் எப்படி மாற்றினார் மற்றும் சிலர் எவ்வாறு மாற்ற முயன்றனர், முயலுகின்றனர் என்பதை வெளிப்படுத்துவது மட்டுமே.
திருக்குறள் என்றாலே அதன்படி நட என்று பொதுவாக கருத்து சொல்வது வழக்கம். எனவே பதிவுலக நண்பர்கள் அப்படிச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
எனது பெயரில் அப்பா சூட்டிய தமிழ் இருந்தாலும், எனக்கும் தமிழ் உணர்வு இருந்தாலும், சிலர் தமிழ் தமிழன் என்ற முகமூடிகளைப் போட்டுக் கொண்டு செய்யும் அட்டகாசங்களைப் பார்க்கும்போது உண்மையில் மனது வெறுப்பாக இருக்கிறது.
// அரசியல் பண்ணுகிறார்கள் என அலட்சியமாக எழுதுகிறார்கள். அவர்கள்தான் குரல் கொடுக்கிறார்கள். நீங்களோ ஏமாற்றப்படுகிறீர்கள் எனப்தைக்கூட உணரா, அல்லது உணர விரும்பா சிந்தனையற்ற கருவிகள் எனப்தை மறவாதீர். //
வலைப் பதிவினில் கருத்து பரிமாற்றத்தில் யாரும் யாரையும் ஏமாற்ற இயலாது. விருப்பமிருந்தால் என் பதிவுக்கு வாருங்கள். கருத்துரை தாருங்கள். நானும் விருப்பமிருந்தால் உங்கள் பதிவுக்கு வருவேன். கருத்துரைகள் தருவேன் என்ற அளவில் மட்டுமே இங்கு கருத்துரை பரிமாற்றங்கள்.
நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete// அருமையானதோர் ஆய்வுக்கட்டுரை. பலவிஷயங்களை பல கோணங்களில் அறியவும் யோசிக்கவும் வைக்கிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். //
அன்பின் VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
பல்வேறு கருத்துக்கள் அறியவும் சிந்திக்கவும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவள்ளுவருக்கு எப்படியோ ஒரு உருவம் கொடுத்துவிட்டோம் அதனை மாற்றுவது எளிதல்ல.சிறப்பான முடிவுரை முடிவுரை
ReplyDeleteஅனானிமஸ் என்ற ஆங்கிலப்பதத்தின் தமிழாக்கம் பெயரிலி என்பது தவறு எனபது என் புரிதல். எல்லோரும் அப்படிச்சொல்கிறார்கள் சரி. நீங்களுமா? அனானிமஸ் என்றால் பெயர் சொல்ல விரும்பாதவன் என்றே தமிழாக்கம்.
ReplyDeleteபெயரிலி என்றால் பெயரே இல்லாதவன் என்றுதான் பொருள். எனக்குப்பெயருண்டு. என் பெயர் குலசேகரன். பெயரில்லா மாந்தர் உலகில் இல்லை.
உங்கள் கட்டுரை என்ன சொல்கிறது? பக்தவத்சலம் காலத்தில் சர்மா உருவாக்கிய பிம்பமே அங்கீகரிக்கபபட்டது. ஆனால் அப்பிம்பத்தை ஏற்று முன்மொழிந்தவர்கள் திமுக காரர்கள். உங்கள் கட்டுரையில் கருனாநிதி சொன்னதாக வருவது: //அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். // பின்னர் காங்கிரசு அதை ஏற்றுத் தாங்களாகவே செய்துவிட்டதாகக் காட்டிவிட்டது என்றும் கருநாநிதி சொன்னதாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆக, சர்மாவின் படம் கருநாநிதி போன்றவர்களின் முன்மொழிபே.
//சிலர் தமிழ் தமிழன் என்ற முகமூடிகளைப் போட்டுக் கொண்டு செய்யும் அட்டகாசங்களைப் பார்க்கும்போது உண்மையில் மனது வெறுப்பாக இருக்கிறது. //
அஃது உங்கள் கணிப்பு. எனக்கும்தான் தமிழ் மீது விருப்பபமுண்டு. நீங்கள் வெறுக்கும் அப்படி சிலரோ பலரோ இருந்தாலும் அவர்களால்தான் இன்னும் தமிழ் பிழைத்துக்கிடக்கிறது. எதிர்ப்பே இல்லையென்றால் இன்று நீங்கள் தமிழ் எழுதவே வெட்கப்படுவீர்கள். அந்நிலை வராமல் செய்ய உங்களாலோ என்னாலோ முடியாது. அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும். முடிந்தது.
. 'நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்" என்பது இங்கே பின்னூட்டமிட்ட நாலைந்து பேரைக்குறிப்பிடுவதாக எடுத்தல் தவறு நண்பரே. அது பொதுவாக அனைவரையும் குறிக்கும்.
என்ன ஏமாற்றம்? அதைப்பற்றி ஒரு சொல்கூட இல்லையே உங்கள் எதிர்வினையில்.
ஆம்...பிம்பங்கள் உதாசீனம் செய்யப்படவேண்டுமென்ற கருத்து அபாயகரமானது. ஏனெனில் பிம்பங்களை வைத்தே பிறர் நம்மை ஏமாற்ற முடியும் என்றொரு எடு கோள் காட்டியிருக்கிறேன். எல்லா சமூகங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
எனவேதான் பிம்பங்கள் என்றால் உஷார் என்று எச்சரிப்பதாக 'நீங்கள் ஏமாற்றபடுகிறீர்கள்' எனபதைப் பார்க்கவேண்டும். பூணூல் போட்டிருந்தால் என்னவாகிருக்கும் என்று சிந்தித்தீர்களா? அதாவது அதன் விளைவுகளை?
- KULASEKARAN
//வள்ளுவருக்கு எப்படியோ ஒரு உருவம் கொடுத்துவிட்டோம் அதனை மாற்றுவது எளிதல்ல.சிறப்பான முடிவுரை முடிவுரை//
ReplyDeleteநல்லவேளை இக்கருத்தை உலகம் ஏற்றிருந்தால் இன்னும் கற்காலத்திலேயே வாழ்ந்திருப்போம்.
அதாவது மாற்றுவது எளிதன்று என்ற கருத்து பொய்மை. எளிதன்று என்ற நினைப்பை உருவாக்கி வெற்றிகண்டோருக்கு நாமடிமைகள் எனபதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மீண்டும் படிக்கவும்.
பலபல மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. புதிய சிந்தனை வலுக்கிறது. பழையன கழிதல் நடக்கிறது. அப்புதிய சிந்தனை ஏன் வள்ளுவர் இப்படி முனிவர் வேடத்திலிருக்கிறார்? என்று கேட்கும். அப்போது மாற்றம் வரும்.
மழித்தலும் நீட்டலும் வேண்டாவுலகம் பழித்தது ஒழித்துவிடின் எனபவரை இப்படி படம் வரைவது அவரது கற்பித்தலுக்கு எதிரானது. இராணிப்பேட்டை மோகன்குமாரின் கருத்தே சரி. அவரது புதிய சிந்தனை நியாயமானது. போற்றுதலுக்குரியது.
கம்பரைப்போலவே வள்ளுவரும் கிரஹஸ்தனாக சித்தரிக்கப்பட வேண்டும். அதுவே உணமை-
KULASEKARAN
2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்ற ஊகங்களை ஆதாரமாக ஏற்பதற்கில்லை. தற்போதைய திருவள்ளுவர் படம் வந்த கதை தினமணியில் சில வருடங்களுக்கு முன்னர் படித்த ஞாபகம். ஒரு ஓவியர் மொகலாய மன்னர் படத்தை வரைந்து கொண்டிருந்தார். கையில் புகை பிடிக்கும் நீண்ட பைப்பை வைத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் மாதிரி படம். அங்கு வந்த பாரதிதாசன் அந்த புகை குழாயை எழுத்தாணியாக்கினார், மொகலாய மன்னன் தாடி பேஷாக பொருந்தியது, கால் கட்டை விரலை மட்டும் உயர்த்திய வண்ணம் வரையச் சொன்னார், [ஞானிகளுக்கு அப்படித்தான் இருக்குமாம்!!]. இது தாண்டா திருவள்ளுவர் என்றார். அந்தப் படம் தான் இன்றைக்கு நான்தான் திருவள்ளுவர்என்று சொல்லிக் கொண்டு அலைகிறது.
ReplyDeleteஅரசியல் ஆதாயம் ஒன்றே குறிக்கோளாக அலையும் அரசியல்வாதிகள் இந்த கற்பனை உருவத்துக்கு கொடுத்தமுக்கியத் துவத்தை அவர் விட்டுச் சென்ற வாழ்க்கை நெறிமுறைகளுக்குக் கொடுக்கவில்லை. கடவுள் இருக்கிறார் என்பதை மறுத்துவிட்டுப் போகட்டும், ஒழுக்க நெறிமுறைகளுக்காவது இவர்கள் மதிப்பு கொடுத்தார்களா?
திருவள்ளுவர் திருக்குறளில் கள்ளுண்ணாமை வேண்டும் என்கிறார், இவனுங்க ஊரைச் சுத்தி சாரயக்கடையை திறந்து விட்டானுங்க. பிறன்மனை நோக்காமை வேண்டும் என்கிறார், ஒரு குறிப்பிட்ட நபர் கண்ணதாசனுடன் இரவில் கோடம்பாக்கத்தில் தட்டாத வி........ரி வீடுகளே இல்லை. பொய் பேசக் கூடாது, வாயைத் திறந்தால் அத்தனையும் பொய், புனை சுருட்டு.
ஒரு மனிதனின் கருத்துக்களை காலடியில் போட்டு மிதித்துவிட்டு அவனுடைய கற்பனைச் சிலையை ஊர் ஊருக்கு வைப்பதும், அதை வைத்து அரசியல் செய்வதும் மானம் கெட்ட செயல். சிலை கல்லு கல்லை வணங்குபவன் முட்டாள், ஆனால் நாங்கள் ஊர் ஊருக்கு எங்க சிலையையும் வைப்போம், இன்னும் வேற சிலைகளையும் வைப்போம். விளங்கிடும்.............
மாதேவி said...
ReplyDelete// பல்வேறு கருத்துக்கள் அறியவும் சிந்திக்கவும். பகிர்வுக்கு நன்றி. //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > T.N.MURALIDHARAN said...
ReplyDelete// வள்ளுவருக்கு எப்படியோ ஒரு உருவம் கொடுத்துவிட்டோம் அதனை மாற்றுவது எளிதல்ல.சிறப்பான முடிவுரை முடிவுரை //
சகோதரரின் கருத்துக்கு நன்றி!
மறுமொழி > Anonymous said... ( 2, 3 )
ReplyDelete// அனானிமஸ் என்ற ஆங்கிலப்பதத்தின் தமிழாக்கம் பெயரிலி என்பது தவறு எனபது என் புரிதல். எல்லோரும் அப்படிச் சொல்கிறார்கள் சரி. நீங்களுமா? அனானிமஸ் என்றால் பெயர் சொல்ல விரும்பாதவன் என்றே தமிழாக்கம்.
பெயரிலி என்றால் பெயரே இல்லாதவன் என்றுதான் பொருள். எனக்குப்பெயருண்டு. என் பெயர் குலசேகரன். பெயரில்லா மாந்தர் உலகில் இல்லை. //
சகோதரர் குலசேகரன் அவர்களது வருகைக்கும் அறிமுகத்திற்கும் நன்றி! உங்கள் மூலம் அனானிமஸ் என்பதற்கு ” பெயர் சொல்ல விரும்பாதவன்” என்ற இன்னொரு பொருளை அறிந்து கொண்டேன். ஆரம்பத்திலேயே மற்றவர்களுடைய பதிவுகளில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டதைப் போல இங்கும் சொல்லி இருந்தால் பெயரிலி என்று அழைத்திருக்க மாட்டேன்.
நான் ஏற்கனவே உங்களுக்கான பதிவில்
// சரியாகச் சொன்னீர்கள். இங்கு எனது கட்டுரையின் நோக்கம் மக்கள் மனதில் வள்ளுவர் இப்படித்தான் இருப்பார் என்று பதிந்து விட்ட ஒரு பிம்பத்தினை ( IMAGE ) அரசியல் செல்வாக்கால் கலைஞர் எப்படி மாற்றினார் மற்றும் சிலர் எவ்வாறு மாற்ற முயன்றனர், முயலுகின்றனர் என்பதை வெளிப்படுத்துவது மட்டுமே.//
என்று சொல்லிவிட்டேன். Anonymous என்ற ஒரு வசதியை வைத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் நீங்கள் கேள்விகள் கேட்கலாம். நான் அவ்வாறு கேட்க முடியாது. நீங்கள் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி எழுதினால் நன்றாக இருக்கும். உங்களது நீண்டதொரு உணர்ச்சிகரமான கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > Jayadev Das said...
ReplyDeleteஅரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்று பொதுமக்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினீர்கள். ஒரு நீண்ட உரையை கருத்துரையாகத் தந்த சகோதரருக்கு நன்றி!
//2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்ற ஊகங்களை ஆதாரமாக ஏற்பதற்கில்லை//
ReplyDelete2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ்மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை சங்கப்பாடல்கள் மூலம் வரலாற்றறிஞர்கள் ஆராய்ந்து ஓரளவுக்குச் சொல்கிறார்கள். தமிழறிஞர்களும் அப்படி முடிவுகள் சொல்கிறார்கள். தமிழர்கள் கந்தர்வ மண்த்தையே கொண்டார்கள் என்பதை பல பாடல்கள் மூலம் நிரூபிக்கின்றார் இரா இராகவையங்கார். இவரைப்போல சிலப்பதிகாரத்தில் சொல்லப்ப்பட்ட்வை வைத்து காவிரிபூம்பட்டினத்தில் வாழ்க்கை எப்படியிருந்தது என்று சொல்கிறார்கள். இஃதெல்லாம் திரு தமிழ் இளங்கோவுக்குக் கண்டிப்பாகத்த் தெரியும்.
2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரை நாம் பார்க்கவில்லை. ஆனால் அவர் எழுதியத்தை வைத்து இவர் இப்படி இருக்க மாட்டார் என்பதை நாம் சொல்லலாம். அவர் எழுதியதற்கு மாறாக அவரைச்சித்தரிக்கும்போது நாம் கண்டிக்கலாம். அப்படிக்கண்டித்த ஒருவரை இராணிப்பேட்டை மோகன்குமாரை நாம் விமர்சனமல்லவா செய்கிறோம்!
//இந்த கற்பனை உருவத்துக்கு கொடுத்தமுக்கியத் துவத்தை அவர் விட்டுச் சென்ற வாழ்க்கை நெறிமுறைகளுக்குக் கொடுக்கவில்லை. கடவுள் இருக்கிறார் என்பதை மறுத்துவிட்டுப் போகட்டும், ஒழுக்க நெறிமுறைகளுக்காவது இவர்கள் மதிப்பு கொடுத்தார்களா?
//
இது பெரிய விவாதக்களத்தை உருவாக்கும். அதைத்தவிர்க்க, ஓரிரு வரிகள் உங்களுக்குச் சொல்லலாம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நீங்களும் நானும் வள்ளுவர் சொல்வதைப்போல வாழ்கிறோமா? ஆத்திகராகிய நீங்களும் நானும் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்துமே எவ்வளவு கெட்ட செயல்களைச் செய்து வாழ்கிறோம். அதாவது கோயிலுக்குப்போயவந்த பின் நாம் வாழ்வது வேறு; வள்ளுவரின் வாக்குகளைப்படிக்கத்தான் செய்கொறோமோ தவிர வாழ்க்கையில் கடைபிடிக்கவில்லை.
அரசியல்வாதிகள் மட்டுமே அப்படி என்று சொல்லிக்கொண்டு நாம் அயோக்கியர்களாகத்தான் வாழ்கிறோம்.
KULASEKARAN
நீங்கள் கேள்விகள் கேட்கலாம். நான் அவ்வாறு கேட்க முடியாது. நீங்கள் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி எழுதினால் நன்றாக இருக்கும். உங்களது நீண்டதொரு உணர்ச்சிகரமான கருத்துரைக்கு நன்றி!
ReplyDeleteநீங்களும் கேட்கலாம். விவாதக்களமாக இருக்கட்டுமே? ஏன் தடுக்கிறீர்கள்? 8 கோடிதமிழ்மக்களைப் பாதிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தை பதிவு செய்துவிட்டு மாற்றுக்கருத்தை வைப்போரை அவர் பதிவுகளில் எழுதட்டுமே என்றால் ஒன்று உங்கள் கருத்தே சரி என்கிறீர்கள்; அல்லது பாராட்டை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்!
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிற்ப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்ற் சமூக நீதி சொன்ன வள்ளுவர் பூணுல் போட்ட பிராமணானாக இருக்கட்டும். போலிச்சாமியார்களை கடிந்த வள்ளுவர் சாமியார் தோற்றத்தில் இருக்கட்டும். நல்ல கிரஹஸ்தன் என்று தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் (உண்மையா பொய்யா சார்?) ஒரு துறவியாக காட்சியளிக்கட்டும்.
எல்லாம் சுபம். விவாதக்களத்தை மூடிவிட்டால் இந்த சுகம் கிடைக்கட்டும்.
என் கருத்துக்கள் எதார்த்தையொட்டி அமைவன. உணர்ச்சிகளுக்கிடமில்லை. எனவேதான் நீங்கள் என்ன நினைத்தாலும் நான் எதார்த்தமென்றால் எழுதிவிடுகிறேன். உணர்ச்சிகளுக்கிடம் கொடுத்திருந்தால் உங்கள் கருத்தை ஆமோதித்திருப்பேன். KULASEKARAN
மறுமொழி > Anonymous said... ( 4 )
ReplyDeleteஅன்பு சகோதரர் குலசேகரன் அவர்களின் நான்காம் வருகைக்கு நன்றி!
// இஃதெல்லாம் திரு தமிழ் இளங்கோவுக்குக் கண்டிப்பாகத்த் தெரியும். //
வரையறைக்கு உட்பட்ட வலைப்பதிவில் எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு இருக்க முடியாது.
// இராணிப்பேட்டை மோகன்குமாரை நாம் விமர்சனமல்லவா செய்கிறோம்! //
நீங்கள் செய்யும் அதே விமர்சனத்தைதான் மற்றவர்களும் செய்கிறார்கள். விளைவுக்கு ஒரு எதிர் விளைவு. அவ்வளவே.
// வள்ளுவரின் வாக்குகளைப்படிக்கத்தான் செய்கொறோமோ தவிர வாழ்க்கையில் கடைபிடிக்கவில்லை. //
இதில் உங்களையும் நீங்களே சேர்த்துச் சொல்வதால் நான் வேறு என்ன பதில் சொல்வது?
மறுமொழி > Anonymous said... ( 5 )
ReplyDeleteஅன்பு சகோதரர் குலசேகரன் அவர்களின் ஐந்தாம் வருகைக்கு நன்றி!
// நீங்களும் கேட்கலாம். விவாதக்களமாக இருக்கட்டுமே? ஏன் தடுக்கிறீர்கள்?
8 கோடிதமிழ்மக்களைப் பாதிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தை பதிவு செய்துவிட்டு மாற்றுக்கருத்தை வைப்போரை அவர் பதிவுகளில் எழுதட்டுமே என்றால் ஒன்று உங்கள் கருத்தே சரி என்கிறீர்கள்; அல்லது பாராட்டை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்! //
என்னாது ? எனது பதிவு எட்டுகோடி தமிழ்மக்களை பாதிக்கிறதா? நல்ல ஜோக். எட்டுகோடி தமிழர்களில் எத்தனை பேருக்கு இப்படி இண்டர்நெட்டில் வலைத்தளம் ஒன்று என்று இருக்கிறது என்றோ வலைப்பதிவு எழுதலாம் என்றோ அல்லது அவைகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் படிக்கலாம் என்றோ தெரியும் என்று நினைக்கிறீர்கள்.
நான் பாராட்டை மட்டும் விரும்புவனாக இருந்திருந்தால் எனது வலைப்பதிவில் கருத்துரைப்பெட்டியில் Anonymous பகுதியை வைத்து இருக்க மாட்டேன். மேலும் பல நண்பர்கள் வைத்து இருக்கும் ஒப்புதலுக்குப் பின் கருத்துரை வெளியாக உதவும் COMMENTS MODERATION - ஐ நான் வைக்கவில்லை என்பதனையும் தெரிந்து இருப்பீர்கள்.என்று நினைக்கிறேன்.
நீங்கள் பதிவின் மையக் கருத்தை விட்டு விட்டு வேறு எங்கோ செல்வதாகத் தெரிகிறது. எனவேதான் உங்கள் கருத்துக்களை கொட்டுவதற்கு ஏன் அடுத்தவர்களது தளத்தை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் நீங்களே ஒரு பதிவு தொடங்கலாமே என்று சொன்னேன்..
// என் கருத்துக்கள் எதார்த்தையொட்டி அமைவன. உணர்ச்சிகளுக்கிடமில்லை. எனவேதான் நீங்கள் என்ன நினைத்தாலும் நான் எதார்த்தமென்றால் எழுதிவிடுகிறேன். உணர்ச்சிகளுக்கிடம் கொடுத்திருந்தால் உங்கள் கருத்தை ஆமோதித்திருப்பேன். KULASEKARAN //
” எதார்த்தவாதி வெகு ஜன விரோதி “ என்ற பழமொழி நினைவுக்கு வந்த்தது. எனது கருத்தை ஆமோதிக்க வேண்டும் என்றோ ஹிட்ஸ் அதிகம் வேண்டும் என்றோ எதனையும் எதிர்பார்த்து எழுதுவது இல்லை. தங்களின் ஆழ்ந்த விமர்சனத்திற்கு நன்றி!
தங்கள் பதிவு விவாத களமானது ஒருவகையில் நலமே! எல்லா வகையிலும் சிறந்து வாழ்ந்த தமிழன் தன் வரலாற்றை முறையாக தொகுக்காமல் செவிவழிச் செய்தியாகவே விட்டுச் சென்றது பெருங் குறையே! கண்டவர் விண்டிலர் ! விண்டவர்
ReplyDeleteகண்டிலர்! என்பது ஆண்டவனைப் பற்றி சொல்வது! அதுபோல , உருவம் எதுவென ஆயாமல் உள்ளம்(குறள்) சொல்வதை முடிந்த வரை செய்வோம்! எத்தனையோ இன்னும் விரிவாக எழுத வேண் டும் என்றாலும் தட்டச்சு செய்ய முதுமை இடந் தரவில்லை!
வாதப் பிரதிவாதங்களுடன் இப்பதிவு பொலிவு பெறுகிறது இளங்கோ சார்....! என் பங்குக்கு நானும் ஒரு கருத்தை வைக்கிறேன். ராமனையும் கிருஷ்ணனையும் கந்தனையும் யார் கண்டார்கள். ? இருந்தாலும் இவர் இப்படி என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களது உருவங்கள் மனதில் பதிந்து விட்டன. அதேபோல் வள்ளுவரின் உருவமும் பெரும்பாலான மக்களின் மனதில் படிந்து போயிருக்கும். பெரும்பான்மையோர் கழுதையைக் குதிரை என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.அது ஜனநாயக விதி. விவாதங்களில் உணர்ச்சி வசப் படக் கூடாது.நீங்களும் நானும் எப்படி கடவுள் உருவங்களை மாற்ற முடியாதோ அதேபோல் ............?.
ReplyDeleteநல்ல ஆய்வு கட்டுரை.
ReplyDelete// ” எதார்த்தவாதி வெகு ஜன விரோதி “ என்ற பழமொழி நினைவுக்கு வந்த்தது. எனது கருத்தை ஆமோதிக்க வேண்டும் என்றோ ஹிட்ஸ் அதிகம் வேண்டும் என்றோ எதனையும் எதிர்பார்த்து எழுதுவது இல்லை.//
எனக்கு இது நல்லா பிடிச்சிருக்கு.எதார்த்தவாதிகள் கும்பலோடு சேர்ந்து ஓ போடமாட்டார்கள்.
திருவள்ளுவர் எப்படி இருந்திருந்தாலும்
ReplyDeleteதமிழர்களின் கண்களுக்கு “அழகர்“ தான்.
அவர் இயற்கையில் மிகக்குள்ளமாக, மிகவும்
அவலட்சணமாக இருந்திருந்தால்.....?!!
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDelete// தங்கள் பதிவு விவாத களமானது ஒருவகையில் நலமே! எல்லா வகையிலும் சிறந்து வாழ்ந்த தமிழன் தன் வரலாற்றை முறையாக தொகுக்காமல் செவிவழிச் செய்தியாகவே விட்டுச் சென்றது பெருங் குறையே! //
புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!
// கண்டவர் விண்டிலர் ! விண்டவர் கண்டிலர்! என்பது ஆண்டவனைப் பற்றி சொல்வது! அதுபோல , உருவம் எதுவென ஆயாமல் உள்ளம்(குறள்) சொல்வதை முடிந்த வரை செய்வோம்! //
நானும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் நேசிப்பவன்.. பணியில் இருந்தபோது திருவள்ளுவர் படம் போட்ட விசிட்டிங் கார்டை அச்சடித்து வைத்து இருந்தேன்.
எங்கள் வீட்டு வராண்டா ஜன்னலில் திருக்குறள் எழுதிய பலகையை வைத்துள்ளேன். அந்த குறள்
வெள்ளத்து அனைய, மலர் நீட்டம்;-மாந்தர்தம்
உள்ளத்து அனையது, உயர்வு.
// எத்தனையோ இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்றாலும் தட்டச்சு செய்ய முதுமை இடந் தரவில்லை! //
அய்யா உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிவுகளுக்கு வரும் கருத்துரைகளுக்கு தனித்தனியே மறுமொழிகள் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டாம். மூத்த பதிவர் GMB அவர்களைப் போல ஒரு மறுமொழியிலேயே அனைதையும் தந்து விடுங்கள்.
மறுமொழி >G.M Balasubramaniam said...
ReplyDelete// வாதப் பிரதிவாதங்களுடன் இப்பதிவு பொலிவு பெறுகிறது இளங்கோ சார்....! //
இதற்கு காரணமான சகோதரர் குலசேகரனுக்கு நன்றி!
// என் பங்குக்கு நானும் ஒரு கருத்தை வைக்கிறேன். ராமனையும் கிருஷ்ணனையும் கந்தனையும் யார் கண்டார்கள். ? இருந்தாலும் இவர் இப்படி என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களது உருவங்கள் மனதில் பதிந்து விட்டன. அதேபோல் வள்ளுவரின் உருவமும் பெரும்பாலான மக்களின் மனதில் படிந்து போயிருக்கும். பெரும்பான்மையோர் கழுதையைக் குதிரை என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.அது ஜனநாயக விதி. //
மூத்த பதிவர் GMB அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!
// விவாதங்களில் உணர்ச்சி வசப் படக் கூடாது.நீங்களும் நானும் எப்படி கடவுள் உருவங்களை மாற்ற முடியாதோ அதேபோல்
............?. //
தங்களின் அறிவுரைக்கு நன்றி அய்யா! இதனை என்றும் மறவேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > வேகநரி said...
ReplyDeleteவேகநரியின் கருத்துரைக்கு நன்றி!
அருணா செல்வம் said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
தி.தமிழிளங்கோ சார்,
ReplyDeleteதிருவள்ளுவர் தோற்றம்,வாழ்விடம் குறித்து நீண்ட நாட்களாக விவாதம் உண்டு.
தற்பொதைய உருவம் என்பதே மிக சமீபத்தில் அதாவது 50 ஆண்டுகளுக்குள் உருவாக்கியதே, எனவே அது தவறாக இருந்தாலும் மக்கள் மனதில் பதிந்துவிட்டது மாற்றக்கூடாது என சிலர் சொல்வதெல்லாம் அபத்தமே, சரியான உருவம் என ஒன்றை மீண்டும் உருவாக்கி புழக்கத்தில் கொண்டு வருவதால் ஒன்னும் சுனாமி வந்துவிடாது :-))
வள்ளுவர் சமண சமயத்தினை தழுவியவர் என்ற கூற்றை தான் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள், அப்படி எனில் நீண்ட முடி, தாடி என்பதே அடிப்பட்டு விடுகிறது.
# வள்ளுவர்(ன்) என்ற ஒரு சாதிப்பிரிவு இன்றும் உண்டு , பொதுவாக பண்டாரம் ,கணியன் என்பார்கள், சொல்லப்போனால் இவர்கள் தான் தமிழ் வேதியர்கள், இவர்கள் ஜாதகம், காலம் கணிப்பது என்ற வேலைகளை செய்து வந்தார்கள், மேலும் திருமணம் போன்ற சடங்குகளையும் செய்பவர்கள், இவர்களும் பூணூல் எனப்படும் கயிறு அணிவார்கள் இப்படி கயிறு அணிவது ஆரிய பிராமண வழக்கம் என பிற்காலத்தில் அவாள் உருவாக்கியதாக இருக்க வேண்டும். வள்ளுவர் என்ற பெயரில் எந்த சந்தேகமும் இல்லை எனவே வள்ளுவன் குலத்தினை சேர்ந்த ஒரு தமிழ் வேதியர், அதாவது தமிழர்களுக்கு என்று இருந்த வேதங்களை பயின்றவர் ,ஆரிய வேதங்களை சொல்லவில்லை. ஆனால் சமண சமயத்தினை தழுவி இருக்கலாம்.
மேற்கண்ட கூற்றின் அடிப்படையில் அவரது உருவம் இருக்கலாம் என்றால், தாடி,மீசை இல்லாமல் , பூணூல் அணிந்து இருக்கும்.
# வள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்பதே அவருக்கு "பிராமண 'சாயம் பூசவே.
வந்தவாசி அருகே உள்ள பொன்னூர் ஹில்ஸ் என்ற ஊரில் வள்ளுவர் வசித்தார் எனவும்,சமண சமயமறபுப்படி அவர் பெயர் ஶ்ரீ குந்த குந்தர் என்கிற ஏலாசிரியார், எனவும்,அவருக்கு அங்குள்ள கோயிலில் சிலை ஒன்றும் உள்ளது, இதெல்லாம் வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்கு முன்னரே இருந்து இருப்பது.
அவூரிலும் வள்ளுவர் வாழ்ந்த ஊர் என்று போர்டு வச்சிருக்காங்க, இப்போ ஒரு ஆர்ச் கூட கட்டியிருக்காங்க. இதெல்லாம் பத்திரிக்கைகளிலும் வந்திருக்கு.
இப்போதைக்கு இதைப்படிங்க,
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023113.htm
எனவே பல காலமாக இருந்ததை தான் கலைஞர் காலத்தில் மாற்றியமைச்சு இருக்காங்க, எனவே மீண்டும் மாற்றியமைப்பதால் ஒன்னும் குழப்பம் வந்துடாது, அனா பைசாவை நயா பைசானு மாத்தலையா?
Mr.Kolasekaran,
ReplyDelete\\2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரை நாம் பார்க்கவில்லை. ஆனால் அவர் எழுதியத்தை வைத்து இவர் இப்படி இருக்க மாட்டார் என்பதை நாம் சொல்லலாம். \\ அவர் இப்படி இருக்க மாட்டார் என்பதை வைத்து இது தான் அவர் என்று ஒரு உருவத்தை கட்டுவதும் சரியல்ல.
\\இது பெரிய விவாதக்களத்தை உருவாக்கும். அதைத்தவிர்க்க, ஓரிரு வரிகள் உங்களுக்குச் சொல்லலாம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நீங்களும் நானும் வள்ளுவர் சொல்வதைப்போல வாழ்கிறோமா? ஆத்திகராகிய நீங்களும் நானும் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்துமே எவ்வளவு கெட்ட செயல்களைச் செய்து வாழ்கிறோம். அதாவது கோயிலுக்குப்போயவந்த பின் நாம் வாழ்வது வேறு; வள்ளுவரின் வாக்குகளைப்படிக்கத்தான் செய்கொறோமோ தவிர வாழ்க்கையில் கடைபிடிக்கவில்லை.
அரசியல்வாதிகள் மட்டுமே அப்படி என்று சொல்லிக்கொண்டு நாம் அயோக்கியர்களாகத்தான் வாழ்கிறோம். \\ ஒரு தனி மனிதன் சீர்கெட்டு போனால் அது அவனோடு போய்விடும், ஆனால் நாட்டை ஆளும் பீடத்தில் இருப்பவன் நாசகாரனாக இருந்தால் அது உங்கள் கணக்குப் படி 8 கோடி மக்களைப் பாதிக்கும். யாரும் 100% யோக்கியன் இல்லை அதனால் போன ஆட்சியில் இருந்தவனை குறை கூறக் கூடாது என்றால், நாட்டில் கொலை, கொள்ளை கற்பழிப்பு இன்னபிற குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றமற்றவர்களாகவே கருதப் பட வேண்டும், கோர்ட்டு, போலீஸ், கேஸ் எதுவும் கூடாது. அது சாத்தியமா? சாத்தியமில்லை, வாழ்வில் நெறிமுறைகள் நிச்சயம் தேவை. எனவே நீங்க வைப்பது வெற்று வாதம்.
வள்ளுவனை எதற்காக போற்றுகிறோம்? அவன் தந்த வாழ்கை நெறிக்குத்தானே? அதை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அவனுடைய கற்பனை சிலைக்கு பூஜை போட்டு எதற்கு பிரயோஜனம்? சாராயம் குடியை கெடுக்கும், மாணவர்களை கெடுக்கும், பெண்கள் தாலி அறுக்கும். இது நாட்டுக்கே கேடு, வருங்கால சந்திக்கு கேடு, தற்போது வாழ்பவர்களுக்கும் கேடு. இத்தனை தெரிந்தும் இதை ஏன் திறந்துவிட வேண்டும்? இந்த அயோக்கிய தனத்தை ஆதரிக்கும் உம்மை போன்றோரை என்ன சொல்வது?
வள்ளுவரின் பேர், ஊர், சாதி, சமயம், தோற்றம் எது பற்றியும் யாருக்குமே தெரியாது. திருக்குறளிலோ, பின்னாட்களில் எழுந்த உரைகளிலும் எதுவும் இல்லை. ஒரு சில கற்பனைக் கதைகள் தவிர. அவர் தமிழகத்தில் எங்கு வாழ்ந்தார் எனவும் உறுதி இல்லை. காஞ்சியில் பண்டு பல்கலைக் கழகமும், சமணப் பள்ளிகளும் இருந்தைமையால் காஞ்சியிலோ அல்லது மதுரையிலோ வாழ்ந்திருக்கலாம். அவ்வளவே. அவர் மீசை வைந்திருந்தாரா, மழித்திருந்தாரா என்பது எல்லாம் அவசியமா என்ன? அவர் சொன்ன வாழ்வியலைக் கற்றுப் பின்பற்றினாலே போதும். ஏன அனாவசிய கேலிக் கூத்து எல்லாம்.
ReplyDeleteமறுமொழி > வவ்வால் said...
ReplyDeleteவவ்வால்சாரின் நீண்டதொரு இலக்கிய விளக்கத்திற்கு நன்றி
// திருவள்ளுவர் தோற்றம்,வாழ்விடம் குறித்து நீண்ட நாட்களாக விவாதம் உண்டு. //
இலக்கியப் பொருள் என்றாலே அது விவாதத்திற்கு உரியதாகி விடுகிறது.
// தற்போதைய உருவம் என்பதே மிக சமீபத்தில் அதாவது 50 ஆண்டுகளுக்குள் உருவாக்கியதே, எனவே அது தவறாக இருந்தாலும் மக்கள் மனதில் பதிந்துவிட்டது மாற்றக்கூடாது என சிலர் சொல்வதெல்லாம் அபத்தமே, சரியான உருவம் என ஒன்றை மீண்டும் உருவாக்கி புழக்கத்தில் கொண்டு வருவதால் ஒன்னும் சுனாமி வந்துவிடாது :-)) //
கால வெள்ளத்தின் கடைசியில் மக்கள் மனதில் எது உள்ளதோ அது நிற்கும்.
வள்ளுவரின் சாதி, சமயம், அவர் வாழ்ந்த பொன்னூர் ஹில்ஸ்,. வள்ளுவ சாதியினர் என்ற தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி! சுற்றி வளைத்து டிரைவிங் செய்து கடைசியாக
// # வள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்பதே அவருக்கு "பிராமண 'சாயம் பூசவே. //
என்று வந்து விட்டீர்கள். தங்களது “பிராமண சாயம் “ என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதுவும் ஒரு கதைதான். பிராமணரும் பறையரும் அண்ணன் தம்பிகள் என்று கூட ஒரு கதை உண்டு. தர்மபுரி கலவரத்துக்கு காரணமாக எந்த பிராமணனை சொல்வது.?
// எனவே பல காலமாக இருந்ததை தான் கலைஞர் காலத்தில் மாற்றியமைச்சு இருக்காங்க, எனவே மீண்டும் மாற்றியமைப்பதால் ஒன்னும் குழப்பம் வந்துடாது, அனா பைசாவை நயா பைசானு மாத்தலையா? //
மக்கள் மனோபாவம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.
மாற்றினால் ஏன் மாற்றம் என்பார்கள். மாற்றாவிட்டால் ஏன் மாற்றவில்லை என்பார்கள்.
மறுமொழி > Jayadev Das said...
ReplyDeleteசகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களின் வருகைக்கு நன்றி! தயவு செய்து வார்த்தைகளில் கடுமையோ பதிவின் மையக் கருத்தை விட்டுச் செல்லுதலோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மறுமொழி > விவரணன் நீலவண்ணன் said...
ReplyDelete// வள்ளுவரின் பேர், ஊர், சாதி, சமயம், தோற்றம் எது பற்றியும் யாருக்குமே தெரியாது. திருக்குறளிலோ, பின்னாட்களில் எழுந்த உரைகளிலும் எதுவும் இல்லை. ஒரு சில கற்பனைக் கதைகள் தவிர. அவர் தமிழகத்தில் எங்கு வாழ்ந்தார் எனவும் உறுதி இல்லை. காஞ்சியில் பண்டு பல்கலைக் கழகமும், சமணப் பள்ளிகளும் இருந்தைமையால் காஞ்சியிலோ அல்லது மதுரையிலோ வாழ்ந்திருக்கலாம். அவ்வளவே. அவர் மீசை வைந்திருந்தாரா, மழித்திருந்தாரா என்பது எல்லாம் அவசியமா என்ன? அவர் சொன்ன வாழ்வியலைக் கற்றுப் பின்பற்றினாலே போதும். ஏன அனாவசிய கேலிக் கூத்து எல்லாம். //
தம்பி விவரணன் நீலவண்ணனின் விரிவான கருத்திற்கு நன்றி!
அத்தனையும் வாசித்தேன்.
ReplyDeleteநல்ல சிந்தனைக்குரிய பதிவு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ReplyDeleteமறுமொழி > kovaikkavi said...
// அத்தனையும் வாசித்தேன். நல்ல சிந்தனைக்குரிய பதிவு.
இனிய வாழ்த்து.//
சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
அவர் கூறியுள்ள வாழ்வியல் கலைகளை கற்று வாழ்வை உயர்த்துவோம் ஐயா...
ReplyDeleteமறுமொழி > வெற்றிவேல் said...
ReplyDelete// அவர் கூறியுள்ள வாழ்வியல் கலைகளை கற்று வாழ்வை உயர்த்துவோம் ஐயா.. //
தம்பி இரவின் புன்னகை வெற்றிவேலின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அறிவின் அடையாளமாகத்தான் தாடியும், மீசையும், அருள் ஒளி வீசும் கண்களும் வரையப்பட்டிருக்க வேண்டும்
ReplyDeleteஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
ReplyDelete