Wednesday, 16 October 2013

கருணைக் கொலையும் முதுமக்கள் தாழியும்



எங்கள் பகுதியில் இருக்கும் வயதான பாட்டி ஒருவர் ரொம்பவும் முடியாமல் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு  பார்க்கச் சென்றோம். அவருக்கு 80 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும். அவருக்கு இரண்டும் பெண்கள். மூத்த மகள் வீட்டில் இருந்தவர் இளைய மகள் வீட்டிற்கு வந்தபோது  இப்படி படுத்த படுக்கையாக ஆகி விட்டார். கிட்டத்தட்ட ஒருவருடமாக இதே நிலை. “கடவுள் அழைத்துக் கொண்டால் தேவலை “ என்று அந்த பாட்டியின் மகள் புலம்புகிறார். வேறு என்ன செய்ய முடியும்?

இப்போது பத்திரிகைகளில் அடிக்கடி நான் வாசிக்கும் விஷயம் கருணைக் கொலை என்பதாகும். அதாவது கடுமையான் நோயினாலோ அல்லது  அதிக முதுமையினாலோ அதிக வேதனையில் இருப்பவரை நஞ்சிட்டோ அல்லது  வேறு வழியிலோ இறக்கச் செய்தல். இதனை ஆங்கிலத்தில்
EUTHANASIA  என்று சொல்கிறார்கள். விலங்குகளை இவ்வாறு கொல்வதை ANIMAL EUTHANASIA   என்பார்கள். EUTHANASIA என்பதற்கு “நல்ல மரணம் என்று பொருள். இது கிரேக்க மொழிச் சொல்.

விலங்குகளுக்கு கருணைக் கொலை: ( ANIMAL EUTHANASIA)

காட்டில் நன்றாக இருக்கும் வரை  விலங்குகள் ஓடித் திரியும். அதிக நோய்வாய்ப் பட்டாலோ அல்லது முதுமையின் காரணமாகவோ உடல் தளர்வுறும்போது காட்டில் ஓரிடத்தில் விழுந்து விடுகின்றன. எழ முடியாத அவைகள் அவற்றை உண்ணும் பிராணிகளுக்கு உணவாகி விடுகின்றன. மரணம் அங்கே சர்வசாதாரணமாகி விடுகிறது.ஆனால் நாட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு மரணம் என்பது வளர்த்தவர்களை தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தில் தள்ளி விடுகிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர். கிறிஸ்தவ சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். அவர் பத்து வருடங்களுக்கும் மேலாக வளர்த்த சாம்சன் என்ற நாய்க்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அருகிலுள்ள பிராணிகள் நல மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார்கள். அவர்கள் அதனை பிழைக்காது,  இன்னும் ஒரு வாரத்தில் இறந்துவிடும் என்று சொல்லி விட்டார்கள். மேலும் நாய் முதுமை அடைந்து விட்டபடியினால் மரண அவஸ்தையால் ரொம்பவும் வேதனைப் படுவதால், அதற்கு அமைதியான மரணம் ஏற்பட கருணைக்கொலை செய்து விடலாம் என்றார்கள். நண்பரும் அவர்கள் வீட்டாரும்  அதற்கு முதலில் உடன்படவில்லை. பின்னர் சாம்சனின் அமைதியான மரணத்திற்காக ஒத்துக் கொண்டார்கள். ஊசி மருந்துமூலம் அந்த உயிர் கருணைக்கொலை செய்யப்பட்டது.



பந்தயக் குதிரைகள் பந்தயத்தின்போது தடுமாறி விழுந்து படு காயம் அடையும்போதும், நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படும்போதும் கருணையின்றி சுட்டுக் கொல்லப் படுகின்றன.  அண்மையில் இங்கிலாந்தின்  எலிசபெத் மகாராணி கலந்து கொண்ட அணிவகுப்பில் ஒரு குதிரை படுகாயம் அடைந்தது. அந்த குதிரை கருணைக் கொலை செய்யப்பட்டதாக செய்தி வந்தது.

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த கன்றுக்குட்டி ஒன்று தீராத நோயினால் துடித்தது. அது படும் வேதனையக் கண்ட காந்தி, அதனை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்யச் சொன்னதாக ஒரு தகவல் உண்டு.

மனிதர்களுக்கு கருணைக்கொலை ( EUTHANASIA )

தீராத நோயினால் அவதிப்படும் சிலர் நோயின் கொடுமை தாங்காது தற்கொலை செய்து கொள்கின்றனர். இன்னும் சிலர் டாக்டரிடம் தங்களை கருணைக் கொலை செய்துவிடுமாறு அழுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்த கருணைக் கொலைக்கு சட்டத்தில் இடம் இல்லை.

அண்மையில் ஈரோட்டில் தனது 75 வயது அக்கா முதுமையின் காரணமாக படும் துன்பத்தைக் காண சகியாத 70 வயது தம்பி அக்காளை கொலை செய்ததாக செய்தி வந்தது.

மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் ( KING EDWARD MEMORIAL HOSPITAL) நர்சாக பணியாற்றியவர் அருணா ஷான்பாக். (ARUNA  SHANBHAG ). இவரை 1973ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஒரு துப்புரவு தொழிலாளி சோகன்லால் பார்த வால்மீகி என்பவன் பலாத்காரம் செய்ததோடு, நாயைக் கட்டும் இரும்புச் சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். அதில் அருணா ஷான்பாக் கோமா நிலையை அடைந்தார். அப்போது அவருக்கு வயது 23. அன்றுமுதல் அவரை அவருடன் வேலை பார்த்த நர்சுகள் அதே ஆஸ்பத்திரியில் வைத்து 37 ஆண்டுகளுக்கும் மேலாக  பராமரித்தனர். அவர் நிலைமையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. (குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது.) இதனைக் கண்டு வேதனைப் பட்ட எழுத்தாளர் பிங்கி விரானி என்பவர், அருணாவை கருணைக் கொலை செய்திட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அருணாவை பராமரித்து வந்த KEM நர்சுகளுக்கு இதில் உடன்பாடு இல்லை.நீண்டகாலம் நடந்த இந்த வழக்கில் 2011 மார்ச் 7 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப் பட்டது. இந்த மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, கியான்சுதா மிஸ்ரா ஆகியோர்  மனுவை தள்ளுபடி செய்து

// நமது நாட்டில் `ஆக்டிவ் யுதானாசியா' என்கிற கருணை கொலை சட்ட விரோதமானதாகும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் `பேசிவ் யுதானாசியா'வுக்கு (ஒரு நோயாளி மருத்துவ சாதனங்களின் உதவியோடு உயிர் வாழ்கிறபோது, அவருடைய உயிர் பிரிவதற்காக அனுமதித்து, அந்த உயிர் காக்கும் சாதனங்களை விலக்கிக்கொள்வதுதான் `பேசிவ் யுதானாசியா') அனுமதி வழங்கப்படுகிறது.//


என்று தீர்ப்பு சொன்னார்கள். தீர்ப்பு சொன்ன அன்று கோமாவில் நினவில்லாமல் கிடந்த அருணா ஷான்பாக்கிற்கு வயது அறுபது. இந்த தீர்ப்பைக் கேட்டதும் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை நர்சுகள் வரவேற்றனர்.

சகோதரி அருணா ஷான்பாக். (ARUNA  SHANBHAG ). பற்றி சகோதரர் யெஸ் பாலபாரதி அவர்கள்  அருணா-வை கருணைக் கொலை செய்ய உதவுங்களபதிவர்களே.. (தேதி: 04.ஜனவரி.2010)” ன்ற பதிவை எழுதியுள்ளார்.. http://blog.balabharathi.net/?page_id=10  உருக்கமான கட்டுரை. 

முதுமக்கள்தாழி - கருணைக் கொலையின் அடையாளம்


பொதுவாக இறந்தவர்களை புதைத்தல் என்பது தமிழர் மரபு. உயிர் எப்போது போகும் என்று தெரியாத செயல் இழந்த நோயாளிகளையும் , நினைவில்லாத,  அதிக வய்துடைய முதுமக்களையும் பெரிய பானை போன்ற தாழியில் (JAR BURIAL ) வைத்து புதைத்தனர். இந்த தாழிகள் முதுமக்கள் தாழிகள் எனப்பட்டன. அவ்வாறு புதைக்கும்போது மண்பானையில் தண்ணீர் மற்றும் அரிசி, அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களையும் வைத்தனர். உண்மையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் செய்த கருணைக் கொலையின் அடையாளமே இந்த முதுமக்கள் தாழிகள் என்பது எனது கருத்து ஆகும். 

ஆரம்பகாலத்தில் தொல்பொருள் துறையினர் தமிழ்நாட்டில் அரிக்காமேடு, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது இந்த முதுமக்கள் தாழிகளை கண்டெடுத்தனர். இப்போது வீடு கட்ட, கிணறு தோண்ட, ஆறு கால்வாய்களை அகலப்படுத்த என்று  பொக்ளின் எந்திரம் மூலம் ஆழமாக தோண்டும்போது தமிழகத்தின் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன..

// விருத்தாசலம் அருகே, கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில், கிடைத்த பொருட்களில், சிந்து சமவெளி நாகரிக மக்களின் பெருங்கற்கால குறியீடுகள் உள்ளன. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த, தர்மநல்லூரில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., வரலாற்றுத் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தர்மநல்லூர், இலுப்பை தோப்பில், வீடு கட்ட மண் எடுத்தபோது, 20 அடி ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று இருப்பது தெரிந்தது வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், அங்கு சென்று, 180 செ.மீ., உயரம், 90 செ.மீ., அகலமுள்ள, முதுமக்கள் தாழியை, தோண்டி எடுத்தனர். தாழிக்குள், கருப்பு சிவப்பு நிறத்தில் நான்கு மண் பானைகள், சுடுமண் பொம்மைகள், 15 செ.மீ., இரும்பு வாள், சில்லு கருவிகள், மனிதனின் எலும்புக் கூடு ஆகியவை இருந்தன //

(நன்றி: தினமலர் www.dinamalar.com/news_detail.asp?id=792915  )

இங்கு எகிப்தில் உள்ள பிரமிடுகளில் அரசன், அரசி ஆகியோருடன்  அவர்களுடைய பணியாளர்கள் உயிரோடும் மற்ற பொருட்களோடும் அடக்கம் செய்யப்பட்ட வரலாற்றினை நினவில் கொள்ளுங்கள்.



கட்டுரை எழுத உதவி:


http://en.wikipedia.org/wiki/Aruna_Shanbaug_case   


PICTURES THANKS TO  “ GOOGLE “
 

47 comments:

  1. வணக்கம்
    ஐயா
    அழகாக 70 வயது பாட்டியின் கதையும் தமிழர்களின் பழைய கால தடயங்கள் பற்றிய பதிவின் அலசல் நன்று வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தகவலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. எனக்கு என்னமோ இது சரியாகப் படவில்லை ஐயா... பல தகவல் தொகுப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  4. மறுமொழி > 2008rupan said...

    // வணக்கம் ஐயா அழகாக 70 வயது பாட்டியின் கதையும் தமிழர்களின் பழைய கால தடயங்கள் பற்றிய பதிவின் அலசல் நன்று வாழ்த்துக்கள். //

    கவிஞர் ரூபனுக்கு வணக்கம்! ஒரு சிறு திருத்தம் அந்த பாட்டிக்கு வயது 80 அல்லது அதற்கு மேலும் இருக்கும். பதிவில் முதலில் பாட்டியின் வயது 70 என்று குறிப்பிட்டு விட்டேன். உங்கள் முதல் கருத்துரையைப் படித்ததும் நினைவுக்கு வந்து திருத்தி விட்டேன். நன்றி!

    ReplyDelete
  5. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
    // தகவலுக்கு மிக்க நன்றி! //

    புலவர் அய்யாவின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் said...
    // எனக்கு என்னமோ இது சரியாகப் படவில்லை ஐயா... பல தகவல் தொகுப்பிற்கு நன்றி... //

    நானும் உங்கள் பக்கம்தான். சுப்ரீம் கோர்ட்டும் கருணைக் கொலையை ஆதரிக்கவில்லை. ஒரு தகவலுக்காக பல செய்திகளின் அடிப்படையில் ஒப்பிட்டு எழுதினேன். கருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களூக்கு நன்றி!

    ReplyDelete
  7. தங்களின் எழுத்தாக்கம் நன்று. ஆயினும் மனம் நடுங்குகின்றது. காந்திஜி சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டோமா!.. ஒரு பாவமும் அறியாத மனிதர்களையே ஈவு இரக்கம் இன்றி பலவழிகளிலும் கொன்று குவித்தவன் வெள்ளையன்!.. அவனுக்கு உபயோகமாக இல்லை - அதனால் சுட்டுத் தள்ளி விட்டான். இவ்வளவு நாகரிகம் அடைந்த நாட்டில் - படுகாயமடைந்த குதிரையின் தலை எழுத்து அவ்வளவு தான்!..

    என் மனதில் தோன்றியதைச் சொன்னேன். ஆயினும் பல தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி!..

    ReplyDelete
  8. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    பல்வேறு தகவல்களை அழகாகத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

    சிலவற்றை கேட்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது.

    யோசிக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete

  9. // உண்மையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் செய்த கருணைக் கொலையின் அடையாளமே இந்த முதுமக்கள் தாழிகள் என்பது எனது கருத்து ஆகும். //

    ஆனால் இறந்தவர்களைத்தான் நம் முன்னோர்கள் முதுமக்கள் தாழிகளில் வைத்து புதைத்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    கருணைக்கொலை பற்றி அருமையான அலசல். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. similar way,we can keep mahindha&troups in calcium kiln.....

    ReplyDelete
  11. தகவல் பகிர்வுகளுக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  12. தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றிகள்..

    அபூர்வ அவதாரங்கள்
    http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_4.html
    பதிவில் 24 அவதாரங்களும் விவரிக்கப்பட்டுள்ளன,..
    பார்த்து கருத்துகளை தெரிவியுங்கள்.. நன்றிகள்..!

    ReplyDelete
  13. //ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் செய்த கருணைக் கொலையின் அடையாளமே இந்த முதுமக்கள் தாழிகள் என்பது எனது கருத்து ஆகும். // ஆதாரம் இல்லை தவறான கருத்து

    ReplyDelete
  14. கொங்கு சீமையின் முதுமக்கள் தாழி http://eniyavaikooral.blogspot.com/2013/06/blog-post_23.html

    ReplyDelete
  15. வயதான பின்பு அவர்கள் சாவுக்காக மட்டுமே காத்திருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் அவர்கள் ஆரோக்கியமற்று நடக்க முடியாத நிலையில் அவர்களின் கழிவுகளை மற்றொருவர் சுமக்க வேண்டிய நிலையில் இருப்பது அதைவிட கொடுமை. உறவுகளில் வெளி இடங்களிலும் நான் பார்த்துள்ளேன். நீங்கள் சொன்னது போல நானும் யோசித்துள்ளேன்.

    ஆனால்..........

    வளர்த்தவர்களை நாம் பேணி காக்கின்றோம். நம்முடைய சகிப்புத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை இது போன்ற சமயத்தில் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    இன்று கலைஞர் கட்சி தலைவர் பதவியில் இல்லாத பட்சத்தில் அவரின் நிலை எப்படியிருக்கும் என்று பலமுறை யோசித்ததுண்டு.

    ReplyDelete
  16. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // தங்களின் எழுத்தாக்கம் நன்று. ஆயினும் மனம் நடுங்குகின்றது. //

    சகோதரர் துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நானும் எழுதுவதற்கு முன் யோசித்தேன். ஆனாலும் சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால் எழுதினேன்.

    //காந்திஜி சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டோமா!.. //

    இந்த தகவல் சத்திய சோதனையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தோழர் ஜீவா பற்றிய வாழ்க்கை வரலாற்று குறிப்புகளில் உள்ளது.

    // ஒரு பாவமும் அறியாத மனிதர்களையே ஈவு இரக்கம் இன்றி பலவழிகளிலும் கொன்று குவித்தவன் வெள்ளையன்!.. அவனுக்கு உபயோகமாக இல்லை - அதனால் சுட்டுத் தள்ளி விட்டான். இவ்வளவு நாகரிகம் அடைந்த நாட்டில் - படுகாயமடைந்த குதிரையின் தலை எழுத்து அவ்வளவு தான்!..//

    இதில் வெள்ளைக்காரன் நம்மவன் என்ற பேதம் இல்லை. சென்னையில் குதிரை ரேஸ் நடந்த சமயம் இதுபோல் சில பந்தயக் குதிரைகள் சுடப்பட்ட செய்திகளை படித்து இருக்கிறேன்.

    // என் மனதில் தோன்றியதைச் சொன்னேன். ஆயினும் பல தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி!.. //

    தங்களின் வெளிப்படையான கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // அன்புள்ள ஐயா, வணக்கம்.பல்வேறு தகவல்களை அழகாகத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. சிலவற்றை கேட்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது.யோசிக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //

    அன்பின் VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // உண்மையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் செய்த கருணைக் கொலையின் அடையாளமே இந்த முதுமக்கள் தாழிகள் என்பது எனது கருத்து ஆகும். //

    ஆனால் இறந்தவர்களைத்தான் நம் முன்னோர்கள் முதுமக்கள் தாழிகளில் வைத்து புதைத்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    - - - x - - -
    அன்புள்ள அய்யா அவர்களின் வருகைக்கு நன்றி!
    நானும் உங்களைப் போலத்தான் நினைத்து இருந்தேன். நான் கல்லூரியில் பிஏ தமிழ் இலக்கியம் படிக்கும்போது எங்களுக்கு பாடமாக “தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்” என்ற பாடம் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பாடம் எடுத்த பேராசிரியர் நான் சொன்ன கருத்தைச் சொன்னார். மேலும் நூலகத்தில் நான் எடுத்து படித்த நூல் ஒன்றிலும் உயிரோடு வயதான மக்களை தாழியினுள் வைத்து புதைத்த செய்தி இருந்தது. (அந்த நூலின் பெயர் நினைவில் இல்லை, ஞாபகம் வந்ததும் தெரியப் படுத்துகிறேன் )

    மேலும் அந்த பெரிய மண்பானை “பிணத் தாழி“ என்று அழைக்கப்படாமல் “முதுமக்கள் தாழி” என்று அழைக்கப்பட்டதன் காரணத்தையும் காண்க. (காரணப் பெயர் ஆகும்.)

    //கருணைக் கொலை பற்றி அருமையான அலசல்.
    வாழ்த்துக்கள்! //

    தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > Anonymous said... ( 1 )

    // similar way,we can keep mahindha&troups in calcium kiln.. //

    பெயரிலியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... ( 1, 2 )

    // தகவல் பகிர்வுகளுக்கு நன்றிகள்..! //

    // தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றிகள்..//

    // அபூர்வ அவதாரங்கள்
    http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_4.html
    பதிவில் 24 அவதாரங்களும் விவரிக்கப்பட்டுள்ளன,.. பார்த்து கருத்துகளை தெரிவியுங்கள்.. நன்றிகள்..! //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட பதிவினை படித்துவிட்டு கருத்தினை எழுதுகிறேன்.

    ReplyDelete
  21. மறுமொழி > கலாகுமரன் said... ( 1 )

    //ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் செய்த கருணைக் கொலையின் அடையாளமே இந்த முதுமக்கள் தாழிகள் என்பது எனது கருத்து ஆகும். //

    ஆதாரம் இல்லை தவறான கருத்து

    - - - - x - - -

    சகோதரர் கலாகுமரன் (இனியவை கூறல்) அவர்களின் http://eniyavaikooral.blogspot.com வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ” ஆதாரம் இல்லை தவறான கருத்து “ இதுபோல் கேள்வி வரும் என்று எதிர்பார்த்ததுதான்..

    மரியாதைக்குரிய வே.நடனசபாபதி அவர்களுக்கு அளித்த கருத்தினையே இங்கும் மீண்டும் தருகிறேன்.

    /// அன்புள்ள அய்யா அவர்களின் வருகைக்கு நன்றி!
    நானும் உங்களைப் போலத்தான் நினைத்து இருந்தேன். நான் கல்லூரியில் பிஏ தமிழ் இலக்கியம் படிக்கும்போது எங்களுக்கு பாடமாக “தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்” என்ற பாடம் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பாடம் எடுத்த பேராசிரியர் நான் சொன்ன கருத்தைச் சொன்னார். மேலும் நூலகத்தில் நான் எடுத்து படித்த நூல் ஒன்றிலும் உயிரோடு வயதான மக்களை தாழியினுள் வைத்து புதைத்த செய்தி இருந்தது. (அந்த நூலின் பெயர் நினைவில் இல்லை, ஞாபகம் வந்ததும் தெரியப் படுத்துகிறேன் )

    மேலும் அந்த பெரிய மண்பானை “பிணத் தாழி“ என்று அழைக்கப்படாமல் “முதுமக்கள் தாழி” என்று அழைக்கப்பட்டதன் காரணத்தையும் காண்க. (காரணப் பெயர் ஆகும்.) // /

    மேலும், தமிழர்கள் தெற்கே நிகழ்ந்த கடல்கோளின் (அந்நாளைய சுனாமியின் ) போது இறந்த மூதாதையர்கள் நினைவாக இறந்தவர்களைப் புதைக்கும் போது, அவர்களது தலையை தெற்கு திசையில் இருக்குமாறு வைத்து (தெற்கு வடக்காக) புதைத்தனர். எரித்தல் என்பது பின்னாளில் வந்த பழக்கம்.

    ReplyDelete
  22. மறுமொழி > கலாகுமரன் said... ( 2 )

    // கொங்கு சீமையின் முதுமக்கள் தாழி http://eniyavaikooral.blogspot.com/2013/06/blog-post_23.html //

    நான் ஒரு பதிவினை வெளியிடுவதற்கு முன் ஒத்த பொருளுடைய மற்ற பதிவுகளையும் GOOGLE வழியே பார்த்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் மேலே நீங்கள் குறிப்பிட்ட உங்களுடைய பதிவினையும் நான் எனது பதிவினை வெளியிடுவதற்கு முன்னரே படித்து விட்டேன். அந்த பதிவில் ஜெயதேவ் தாஸ் என்பவர் சொன்ன கருத்துரையும் அதற்கான உங்களது மறுமொழியும் வருமாறு

    Jayadev Das June 24, 2013 at 1:00 AM
    வயதானவர்கள் 100 வயதுக்கும் மேலாகியும் சாகாதவர்களை இந்தர்க்குள் வைத்து கொஞ்சம் உணவும், ஒரு விளக்கும் வைத்து கொண்டு பொய் புதைத்து விடுவார்களாமே? உண்மையா?

    கலாகுமரன் June 24, 2013 at 10:20 AM
    அப்படி கேள்விப் பட்டதில்லை...நீடித்த ஆயுலோட இற‌ந்தவங்களை வழிவழியா வணங்குவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம். முன்னோர்களை போற்றுதல் தமிழர் வழக்கத்தில் ஒன்னு.

    எனவே முதுமக்கள் தாழியில், முடியாத முதுமக்களை உயிரோடு வைத்து புதைத்தார்கள் என்றும் இறந்தவர்களை வைத்து புதைத்தார்கள் என்றும் இருவேறு கருத்துக்கள் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    சகோதரர் கலாகுமரனின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. விரிவான தகவல்களுடன் ஆழமான அலசல்
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // வயதான பின்பு அவர்கள் சாவுக்காக மட்டுமே காத்திருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் அவர்கள் ஆரோக்கியமற்று நடக்க முடியாத நிலையில் அவர்களின் கழிவுகளை மற்றொருவர் சுமக்க வேண்டிய நிலையில் இருப்பது அதைவிட கொடுமை. உறவுகளில் வெளி இடங்களிலும் நான் பார்த்துள்ளேன். நீங்கள் சொன்னது போல நானும் யோசித்துள்ளேன்.//

    சகோதரர் ஜோதிஜியின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நமது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது, கொடுமையானது முதுமை. புத்தர் துறவியாக மாறுவதற்கு அவர் வீதியிலே கண்ட முதியவரும் ஒரு காரணம். நன்றாக இருக்கும்போதே மரணம் அடைந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    // ஆனால்..........வளர்த்தவர்களை நாம் பேணி காக்கின்றோம். நம்முடைய சகிப்புத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை இது போன்ற சமயத்தில் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.//

    அன்பெனும் பாசப்பிணைப்புதான் காரணம்.

    // இன்று கலைஞர் கட்சி தலைவர் பதவியில் இல்லாத பட்சத்தில் அவரின் நிலை எப்படியிருக்கும் என்று பலமுறை யோசித்ததுண்டு. //

    கலைஞரைப் பற்றி அவரது கட்சிக்காரர்களே கவலைப்படுவது கிடையாது.. குடும்பத்தாரும் கவலைப்படுவதில்லை. அவரை எதிர்க்கும் மற்றவர்கள்தான் கவலைப் படுகிறார்கள்.


    ReplyDelete
  25. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

    // விரிவான தகவல்களுடன் ஆழமான அலசல்
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள் //

    அன்பு கவிஞர் ரமணி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! சிலசமயம் கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லும்போது பதிவு விரிவாகப் போய்விடுகிறது.

    ReplyDelete
  26. இறந்த பிறகு தான் தாழிகளில் வைத்து இருப்பார்கள் என்பதே என் கருத்து ! இன்றும் எனது நண்பரின் பாட்டி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருக்கிறார்.வீட்டில் இறந்து விட்டால் நல்லது என்று அவர் காது பட பேசுகிறார்கள் .அவர் மன நிலைமை கொஞ்சம் எண்ணி பார்த்தால் இப்படி வாழ்வதை கட்டிலும் கருணை கொலை தேவலை என்று தான் தோன்றுகிறது .

    ReplyDelete
  27. கருணைக் கொலை பற்றிய பதிவு பல தகவல்களை கொண்டு இருக்கிறது. கருணைக் கொலையா? ..........வேண்டாம் என்று தான் தோன்றுகிறது. பல் விபரீதங்கள் விளையும் .

    ReplyDelete
  28. மறுமொழி > Srini Vasan said...

    // இறந்த பிறகு தான் தாழிகளில் வைத்து இருப்பார்கள் என்பதே என் கருத்து ! //

    எப்படி வேண்டுமானாலும் கருத இடம் உண்டு. மேலே மரியாதைக்குரிய வே.நடனசபாபதி அவர்களுக்கும், சகோதரர் கலாகுமரன் அவர்களுக்கும் அளித்த எனது மறுமொழிகளையே இங்கும் நினைவில் கொள்ளவும்.

    // இன்றும் எனது நண்பரின் பாட்டி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருக்கிறார்.வீட்டில் இறந்து விட்டால் நல்லது என்று அவர் காது பட பேசுகிறார்கள் .அவர் மன நிலைமை கொஞ்சம் எண்ணி பார்த்தால் இப்படி வாழ்வதை கட்டிலும் கருணை கொலை தேவலை என்று தான் தோன்றுகிறது . //

    எந்த நிலையிலும் கருணைக்கொலை என்பது வேண்டாம்.

    கருத்துரை தந்த சகோதரர் (நதியின் வழியில் ஒரு நாவாய்) ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete

  29. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // கருணைக் கொலை பற்றிய பதிவு பல தகவல்களை கொண்டு இருக்கிறது. கருணைக் கொலையா? ..........வேண்டாம் என்று தான் தோன்றுகிறது. பல் விபரீதங்கள் விளையும் . //

    கருணைக்கொலை வேண்டாம்! சகோதரியின் எண்ணமே எல்லோருக்கும் !

    ReplyDelete
  30. விலங்குகள் என்று வரும் பொழுது கருணைக் கொலையினை ஏற்றுக் கொள்ளும் மனம், மனிதர்கள் என்றுவரும் பொழுது ஏற்க மறுக்கிறது. வயதானவர் பிழைக்க மாட்டார் என்று சொல்பவர்கள் மருத்துவர்கள்தானே தவிர, கடவுள் அல்லவே. எதுவும் நடக்கலாமல்லவா?
    ஒரு செயலைச் செய்து விட்டு, காலம் முழுதும் வருந்திக் கொண்டே இருப்பதைவிட, அந்த துன்பத்தை எதிர்கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன்

    ReplyDelete
  31. //எந்த நிலையிலும் கருணைக்கொலை என்பது வேண்டாம்.//

    நான் கருணை முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பவன். ஒருவர் சிரமப்பட்டு மீளாத துன்பத்தில் உழல்வதைவிட, மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் கருணை முடிவுக்கு செல்வது நல்லது. நல்ல தகவல்களுடைய கட்டுரை. நன்றி

    ReplyDelete
  32. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    // விலங்குகள் என்று வரும் பொழுது கருணைக் கொலையினை ஏற்றுக் கொள்ளும் மனம், மனிதர்கள் என்றுவரும் பொழுது ஏற்க மறுக்கிறது. //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் சொல்வது சரிதான். மனித வாழ்க்கை முழுக்க முழுக்க மனம் சார்ந்தது.

    //வயதானவர் பிழைக்க மாட்டார் என்று சொல்பவர்கள் மருத்துவர்கள்தானே தவிர, கடவுள் அல்லவே. எதுவும் நடக்கலாமல்லவா? ஒரு செயலைச் செய்து விட்டு, காலம் முழுதும் வருந்திக் கொண்டே இருப்பதைவிட, அந்த துன்பத்தை எதிர்கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன் //

    எதுவும் நடக்கலாம் என்பதால் அந்த துன்பத்தை எதிர்கொள்வது என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வரவேண்டும்.

    ReplyDelete
  33. மறுமொழி > Packirisamy N said...

    // நான் கருணை முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பவன். ஒருவர் சிரமப்பட்டு மீளாத துன்பத்தில் உழல்வதைவிட, மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் கருணை முடிவுக்கு செல்வது நல்லது. //

    உங்கள் மாறுபட்ட சிந்தனையை சட்டென்று மறுத்து விட முடியாது. கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் யெஸ் பாலபாரதியின் கட்டுரையை அவசியம் படிக்கவும். அவரும் கருணை முடிவை ஆதரிக்கிறார்.

    // நல்ல தகவல்களுடைய கட்டுரை. நன்றி //

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  34. பலதரப்பட்ட தகவல்களை தொகுத்து தந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  35. இளங்கோ சார்,

    மிக அழாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்கிறீர்கள், நெருடலான அதே சமயம் வயிற்றில் கிலி ஏற்படுத்தும் விஷயத்தை கையாண்டிருக்கிறீர்கள்.

    முதுமக்கள் தாழி என்பது குறித்து எங்கள் அப்பா, பாட்டியிடம் கேட்டவரை, முன்னர் காலத்தில் மிக அதிக காலம் சாகாமல் இருப்பார்கள், அவர்களை பராமரிப்பது மிகவும் கடினமான செயல். அந்த நிலைக்கு வந்தாலும் மேலும் பல வருடங்களுக்கு அவர்கள் உயிரும் பிரியாது. இவர்களை ஒரு தாழி செய்து அதர்க்குள் உட்காரவைத்து, உணவு, விளக்கு இன்னும் சில பொருட்கள் வைத்து புதைத்து விடுவார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையா என்று என்னால் உறுதிப் படுத்த முடியவில்லை. பல இடங்களில் புதிதாக நிலத்தை சீர் செய்து விவசாயத்திற்குப் பயன்படுத்தும்போது, முதல் ஏர் உழுகையில் இந்த தாழிகள் கலப்பையில் முட்டும், ஆனால் அவை உடையாது, மிகவும் வலுவானதாக இருக்குமாம்.

    இரண்டு சந்தேகங்கள் வருகிறது. பராமரிக்க முடியாமல் கருணை கொலை செய்ய வேண்டுமானால் ஏன் அவ்வளவு வயது வரை காத்திருக்க வேண்டும். [இது இந்த கட்டுரையுடன் முரண்படுவது].

    புதைக்க வேண்டுமானால், அந்தப் பானையில் தண்ணீர் குவளை, உணவு தட்டு, விளக்கு போன்ற மற்ற பொருட்களை எதற்கு வைக்க வேண்டும்? [இது இந்த கட்டுரையுடன் ஒத்து போவது]

    எது உண்மையோ தெரியவில்லை. ஆனால் தாங்கள் பழைய நூல்களில் படித்தது உண்மையாக இருக்கக் கூடும்.

    ReplyDelete
  36. \\மேலும் அந்த பெரிய மண்பானை “பிணத் தாழி“ என்று அழைக்கப்படாமல் “முதுமக்கள் தாழி” என்று அழைக்கப்பட்டதன் காரணத்தையும் காண்க. (காரணப் பெயர் ஆகும்.)\\ இது யோசிக்க வேண்டிய விஷயம்!!

    ReplyDelete
  37. தெரியாத பல தகவல்களை தந்திருக்கீங்க.
    ஜெயதேவ் தாஸ் மாதிரி நானும் கிலியுடன் தான் படித்தேன். தமிழர்கள் பெரும்பாலும் வேண்டாத பெரியவங்களை அநியாயத்திற்கு உயிருடன் வைத்து புதைப்பதிற்கு முதுமக்கள்தாழியை தாராளமா பயன்படுத்தியிருப்பாங்க.கருணை கொலை இல்லாத தற்காலத்தில் வாழ்வதே ஒரு ஆறுதல்.

    ReplyDelete
  38. மறுமொழி > ADHI VENKAT said...
    // பலதரப்பட்ட தகவல்களை தொகுத்து தந்துள்ளீர்கள். நன்றி//

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > Jayadev Das said... ( 1, 2 )

    // இளங்கோ சார், மிக அழாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்கிறீர்கள், நெருடலான அதே சமயம் வயிற்றில் கிலி ஏற்படுத்தும் விஷயத்தை கையாண்டிருக்கிறீர்கள். //

    எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கு வந்து கருத்துரைகள் தந்த ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி > வேகநரி said...

    வேகநரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  41. தி.தமிழிளங்கோ சார்,

    கருணைக்கொலை, முதுமக்கள் என சமுகவியலும்,வரலாறும் கலந்து சுவையாக எழுதி உள்ளீர்கள்.

    முதுமக்கள் என இருப்பதால் வயதான மக்களை உயிருடன் புதைத்து இருக்கலாம் என்பது யூகத்தின் அடிப்படையாகவே இருக்க வேண்டும்.

    ஏன் எனில் முது என்பது முதல் என்ற சொல்லின் வேர்ச்சொல்.

    ஏன்சியன்ட் = பழமை,

    அதற்கு முன்னர் என சொல்ல புரோட்டோ என சேர்த்து புரோட்டோ ஏன்சியன்ட் என்பார்கள், திராவிட மொழிகளீன் காலத்துக்கு முந்தையதை புரோட்டோ திராவிடன் என்பார்கள்!, எனவே ரொம்ப காலத்தால் முன் வாழந்த மக்களின் ஈமத்தாழி என்பதை " புரோட்டோ ஏன்சியன்ட் பீப்பிள்" என ஆங்கிலத்தில் சொல்லியதை தமிழில் முதுமக்கள் என சொல்லி இருக்க வேண்டும். அல்லது ஏன்சியன்ட் பீபிள் என்பதை முதுமக்கள்! என மொழிப்பெயர்த்திருக்க வேண்டும்.

    ஏன் எனில் ஆங்கிலத்தில் மெடிவியல் ஏன்சியன்ட் பீப்பிள் பரியல் அர்ன்ஸ் என்றூதான் குறிப்பிடுகிறார்கள்!, எனவே சங்ககாலத்துக்கு முந்தைய பழமையான மக்கள் என்பதையே முதுமக்கள், தாழி எனக்குறீப்பிடுகிறார்கள்?

    முதுமொழி காஞ்சி என்ற நூல் உள்ளது, அது பழமொழிகளின் தொகுப்பு,எனவே முது என்பது பழமையே குறிக்கும்.

    எனவே முதுமக்கள் தாழி என்றால் சங்கக்காலத்துக்கு முந்தைய, அல்லது சங்கத்தினை விட பழைய காலத்து மக்கள் தாழி என காலத்தையே குறிக்கிறது.


    இறந்தவர்களைப்புதைக்கும் போது தானியம், சிலப்பொருட்கள் என கூட வைத்து புதைப்பது ஒரு சடங்கு.

    எகிப்திய பாரோக்களுடன் நிறைய தங்க ஆபரணங்கள்! பொருட்கள்,அடிமைகள் என சேர்த்து புதைத்து விடுவார்கள்! சொர்க்கத்தில் அவையெல்லாம் தேவைப்படும் என்ற நம்பிக்கை.

    ஹீ..ஹீ எம்சிஆரை புதைக்கும் போது கூலிங் கிளாஸ்!கைக்கடிகாரம் எல்லாம் கூட வச்சே புதைச்சாங்களாம்,இன்னிக்கும் சுற்றுலா வரும் பாமர மக்கள் அந்தக்கடியாரம் ஓடுற சத்தம் கேட்குதானு கல்லரையில காது வச்சுக்கேட்கிறாங்களாம் அவ்வ்!

    ReplyDelete
  42. மேலும் , விருத்தாச்சலம் என்ற ஊரின் இன்னொருப்பெயர் "திருமுதுக்குன்றம்",அதன் இன்னொரு பெயர் பழமலை, அங்கிருக்கும் சிவனின் பெயர் "பழமலை நாதர்" எனவே முது என்ர சொல் பழமையை குறிக்க என்றேகொள்ளலாம்.

    ReplyDelete
  43. மறுமொழி > வவ்வால் said... ( 1 )

    // தி.தமிழிளங்கோ சார், கருணைக்கொலை, முதுமக்கள் என சமுகவியலும்,வரலாறும் கலந்து சுவையாக எழுதி உள்ளீர்கள்.

    முதுமக்கள் என இருப்பதால் வயதான மக்களை உயிருடன் புதைத்து இருக்கலாம் என்பது யூகத்தின் அடிப்படையாகவே இருக்க வேண்டும்.//

    வவ்வால் சாரின் வருகைக்கும் விரிவான விளக்கமான கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  44. மறுமொழி > வவ்வால் said... ( 2 )
    // மேலும் , விருத்தாச்சலம் என்ற ஊரின் இன்னொருப்பெயர் "திருமுதுக்குன்றம்",அதன் இன்னொரு பெயர் பழமலை, அங்கிருக்கும் சிவனின் பெயர் "பழமலை நாதர்" எனவே முது என்ர சொல் பழமையை குறிக்க என்றேகொள்ளலாம். //

    வவ்வால் சாரின் ” ஊரும் பேரும்” விளக்கம் அருமை.

    ReplyDelete
  45. கருணைக் கொலை என்பது கொலை செய்யவும் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது இல்லையா.? முதுமக்கள் தாழி பற்றிய ஆராய்ச்சி உண்மைகள் ஏதும் இல்லையா.?

    ReplyDelete
  46. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // கருணைக் கொலை என்பது கொலை செய்யவும் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது இல்லையா.? //

    மூத்த பதிவர் அய்யா GMB அவர்களின் வருகைக்கு நன்றி!
    நீங்கள் சொன்னது உண்மையே. கருணைக் கொலைக்கு அனுமதி அளித்து சட்டமாக்கினால் நிச்சயம் துஷ்பிரயோகம் நடக்கும். பல கருணை நிலையங்கள் கருணைக்கொலை நிலையங்களாக மாறிவிடும்.

    //முதுமக்கள் தாழி பற்றிய ஆராய்ச்சி உண்மைகள் ஏதும் இல்லையா.? //

    உண்மையான ஆராய்ச்சிகள் நிறைய உண்டு. வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட வரையறையோடு நான் நிறுத்திக் கொள்வேன். ஏனெனில் நாம் கஷ்டப்பட்டு யோசித்து எழுதுவதை சிலர் திருடி விடுகிறார்கள்.

    ReplyDelete