Monday, 30 December 2013

வாக்கிங் ஸ்டிக் மனிதர்கள்



என்னுடைய அப்பா திருச்சி பொன்மலை ரெயில்வேயில் DY CONTROLLER OF STORES ஆக பணிபுரிந்தவர். சுமார் இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது 60 ஆவது வயதில் பணி ஓய்வு பெற்றார். அப்போதெல்லாம் திருச்சியில் ரெயில்வே ஊழியர்கள், சக ஊழியர் பணி ஓய்வு பெறும் நாளன்று அவருக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக்கையும் பரிசாகத் தருவார்கள். என்னுடைய அப்பாவிற்கும் அதே போல அவரோடு பணிபுரிந்த ஊழியர்கள் வாக்கிங் ஸ்டிக்கை நினவுப்பரிசுகளில் ஒன்றாகத் தந்தார்கள். அவர் அந்த வாக்கிங் ஸ்டிக்கை வாங்கிய நாளிலிருந்து ஒருநாள் கூடப் பயன்படுத்தியது கிடையாது. இப்போது அவருக்கு சர்டிபிகேட் பிரகாரம் வயது 88 (கிராமத்து உறவினர்கள் கணக்குப்படி அவருக்கு 90 வரும் ) இன்றும் அவர் எந்த வாக்கிங் ஸ்டிக்கையும்  பயன்படுத்தாமல் நன்றாகவே இருக்கிறார்.

வாக்கிங் ஸ்டிக:

நான் சிறுவனாக இருந்தபோது பல முதியவர்கள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நகரத் தெருக்களில் நடந்து போவதைப் பார்த்து இருக்கிறேன். திருச்சி செயிண்ட் லூர்து மாதா ஆலயத்தில் ஒரு வெளிநாட்டு பாதிரியார் இருந்தார். நல்ல உயரம். அவர் கையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன்தான் நடப்பார். அதேபோல ஓய்வு பெற்ற பல அரசு ஊழியர்கள் மின்சார பில்லிற்கு பணம் கட்ட வரும்போதும், ஓய்வூதியம் பெற தெப்பக்குளம் போஸ்டாபிசிற்கு வரும்போதும், டவுன்ஹால் தாலுகா அலுவலகம் வரும்போதும் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி வருவதைப் பார்த்து இருக்கிறேன். கிராமங்களில் வாக்கிங் ஸ்டிக்கிற்குப் பதிலாக கைத்தடி வைத்து இருப்பார்கள். அவ்வையார் போன்று கோலூன்றி  நடப்பார்கள். அறுபது வயது ஆகிவிட்டாலே வயதாகி விட்டது என்ற எண்ணம் அப்போது மக்களிடம் பரவலாக இருந்தது.

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகளில் வரும் அப்புசாமி தாத்தா வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் கேரக்டர். அப்போதைய பல அரசியல் தலைவர்கள் பலரது படங்களை வாக்கிங் ஸ்டிக்கோடு காணலாம்.

வாக்கிங் ஸ்டிக் எங்கே?

முன்புபோல் இப்போது வாக்கிங் ஸ்டிக்கோடு வரும்  மனிதர்களை அதிகம் காண முடிவதில்லை. கிராமத்திலும் அவ்வாறே. தடியூன்றிய மனிதர்களைக் காண்பது அரிது. அறுபது வயதானாலும், எழுபது வயதானலும் எல்லோரும் நன்றாகவே நடக்கிறார்கள். முதுமை என்ற உணர்வே வருவது இல்லை.

சராசரி வயது அதிகரிப்பு: 

அண்மையில் நான்    திருக்கடையூர்: அறுபதாம் கல்யாணம்  http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_28.html ) என்று ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவினில்  

// திருக்கடையூரில் கோயில் வாசலில் நிறைய வேன்கள், டாக்சிகள். வெளியூரிலிருந்து வந்தவர்கள். மார்கழி என்பதால் நிறைய அய்யப்ப பகதர்கள். அவர்களுக்கு இடையில் மாலையும் கழுத்துமாய் அறுபதாம் கல்யாண மணமக்கள். நிறையபேர் அறுபது ஆனவர்களாகவே தெரியவில்லை.( காரணம் நவீன மருத்துவம் மற்றும் உடல் - உடை அலங்காரம் போன்றவை ) //

என்று எழுதினேன். அதற்கு கருத்துரை தந்த மூத்த வலைப்பதிவர் நினைத்துப் பார்க்கிறேன்திரு வே நடனசபாபதி அய்யா அவர்கள்

// எனக்குத்தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாகத்தான் எல்லோரும் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பு அவரவர்கள் வீட்டிலேயே நடத்துவார்கள். மேலும் அறுபதாம் ஆண்டில் கல்யாணம் நடத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்போதெல்லாம் சராசரி ஆயுட்காலம் 55 தான் என்பதால் 60 வயது தாண்டியவர்கள் குறைவு என்பதால் அந்த வயதை அடைந்தவர்கள் அந்த நிகழ்வை திருமணவிழாவாக கொண்டாடினார்கள்.//

என்று சராசரி வயதைப் பற்றி சொன்னார். அவர் சொன்னதுபோல் இப்போது ஒரு இந்தியனின் சராசரி வயது உயர்ந்து உள்ளது. இந்தியர்களின் சராசரி ஆயுள் 65.8 வயது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நவீன மருத்துவ முறைகள் வந்து விட்டபடியினால் அறுபது அல்லது எழுபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. யாரும் வாக்கிங் ஸ்டிக்கை நாடுவதில்லை. கிராமங்களில் கூட தடியூன்றிய முதியவர்களைக் காண முடிவதில்லை. நலவாழ்வுத் துறையின் வளர்ச்சியும், ஊட்டச்சத்து உணவுகளும் இந்தியர்களின் ஆயுள் அதிகரிக்க காரணம் என்று சொல்லுகிறார்கள்.

நோயற்ற வாழ்வே: 

எனவே இன்றைய நவீன யுகத்தில் வயதானாலும், மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நோய்களைக் கட்டுப்படுத்தலாம். எனபதனைக் கருத்தில் கொள்ளுங்கள். அனைவரும் ஆரோக்கிய வழியினை நாடுங்கள்


HEALTH  IS  WEALTH  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

                                                                                   



                                                                                     

50 comments:

  1. நலவாழ்வுத் துறையின் வளர்ச்சி மேலும் வரும் ஆண்டில் வளரட்டும்...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. வாக்கிங் ஸ்டிக் பற்றி சிறப்பான பகிர்வு....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாக்கிங் ஸ்டிக் என்றதும்...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ..எனக்கும் வந்தது !
    +1

    ReplyDelete
  4. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்
    உளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.
    சிறப்பாக உள்ளது பதிவு வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நீங்கள் கூறுவது சரிதான். தற்போதைய மேம்படுத்தப்பட்ட மருத்துவம் மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டியது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தோடு வாழ உதவி செய்வதால் கைத்தடியை யாரும் நாடுவதில்லை.

    தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. பழைய நினைவுகள்...

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  8. வாக்கிங் ஸ்டிக் இருந்தா வழியில் நாய் நெருங்காது, பாதுகாப்பு!!

    ReplyDelete
  9. வாக்கிங் ஸ்டிக் கையில் வைத்திருப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு தான்.

    இருப்பினும் ஓரளவு வயதானவர்கள் அதை கையில் வைத்திருப்பது பலவிதத்தில் நன்மையாக இருக்கக்கூடும். பாதுகாப்பாகவும் இருக்கும். மேடு பள்ளங்களில் கால் இடறி, தடுக்கி விழாமல் இருக்கலாம். குரங்கு, நாய், மாடு போன்ற விலங்குகளின் தாக்குதலிலிருந்து ஓரளவு தப்ப முடியும். அது ஒருவித Moral Support கொடுக்கக்கூடும்.

    விஞ்ஞான மருத்துவ முன்னேற்றங்களால் மனிதனின் சராசரி ஆயுள் கூடியுள்ளது என்பதும் மகிழ்ச்சியான விஷயம் தான். நல்லதொரு பதிவு + பகிர்வு.

    எங்கள் சமுதாய திருமணங்களில், மாப்பிள்ளைப்பையன் காசியாத்திரை செல்வதாக ஓர் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது இந்த கைத்தடியுடன் தான் புறப்பட்டுச் செல்லுவார்.

    பிறகு பெண்ணின் தகப்பனார் ஓடிப்போய் அவரை சமாதானப்படுத்தி, “ஐயா என் மகளை உமக்குக் கன்னிகா தானம் செய்து தருகிறேன். அவளுடன் ஜாலியாகக் குடும்பம் நடத்தி, புத்ர பெளத்ரர்களை உண்டாக்கி வம்சத்தை விருத்தி செய்து கொள்ளுங்கள்.

    அனாவஸ்யமாக இப்போது காசிக்கெல்லாம் போக வேண்டாம்” என 2 தேங்காய்களை அவரின் கையில் கொடுத்து கேட்டுக்கொள்வார்.

    அதன் பிறகே மாலை மாற்றி, ஊஞ்சல் நடந்து, அக்னி சாக்ஷியாக திருமணம் நடத்துவார்கள். அந்த காசியாத்திரை என்றதோர் டிராமா நிகழ்ச்சிக்கு மட்டும், இந்த வாக்கிங் ஸ்டிக் என்பது இன்றும் பயன்பட்டு வருகிறது. ;)))))

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஐயா.

    ReplyDelete
  10. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    // நலவாழ்வுத் துறையின் வளர்ச்சி மேலும் வரும் ஆண்டில் வளரட்டும்... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி!

    // இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா... //

    நன்றி அய்யா! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  11. மறுமொழி> ADHI VENKAT said...

    // வாக்கிங் ஸ்டிக் பற்றி சிறப்பான பகிர்வு....தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். //

    நன்றி சகோதரி ! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  12. மறுமொழி> Bagawanjee KA said...

    // வாக்கிங் ஸ்டிக் என்றதும்...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ..எனக்கும் வந்தது ! +1 //

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    // தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா //

    நன்றி அய்யா! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  14. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
    அருமையான சுவரசியமான பதிவு .நானும் அறிந்திருக்கேன் முற்காலத்தில் 60 வயது வந்தாலே தடியுடன் தான் நடக்க வேண்டும் என்ற நிலையென்று. அதனால் தான்அறுபதாம் கல்யாணம் என்று கொண்டாடி மகிழும் நிலையும் தோன்றியிருக்கலாம்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புது வருட வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. மறுமொழி> Rupan com said...

    // வணக்கம் ஐயா. சிறப்பாக உள்ளது பதிவு வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் //

    வலைப் பதிவுலகில், எல்லோரையும் ஊக்கப்படுத்தி வாழ்த்தும், கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி! ! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


    ReplyDelete
  16. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    // நீங்கள் கூறுவது சரிதான். தற்போதைய மேம்படுத்தப்பட்ட மருத்துவம் மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டியது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தோடு வாழ உதவி செய்வதால் கைத்தடியை யாரும் நாடுவதில்லை. //

    அய்யா வே நடனசபாபதி அவர்களுக்கு நன்றி! சொல்லப் போனால், தாங்கள் எனது முந்தைய பதிவில் அளித்த, உங்களுடைய கருதுரைதான் இந்தக் கட்டுரை எழுத தூண்டியது.

    // தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! //

    நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  17. மறுமொழி> ஸ்கூல் பையன் said...

    // பழைய நினைவுகள்... புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா... //

    நன்றி அய்யா! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  18. மறுமொழி> Jayadev Das said...

    // வாக்கிங் ஸ்டிக் இருந்தா வழியில் நாய் நெருங்காது, பாதுகாப்பு!! //

    அன்புச் சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    // வாக்கிங் ஸ்டிக் கையில் வைத்திருப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு தான். //

    அன்பு VGK அவர்களின் வருகைக்கு நன்றி!

    // இருப்பினும் ஓரளவு வயதானவர்கள் அதை கையில் வைத்திருப்பது பலவிதத்தில் நன்மையாக இருக்கக்கூடும். பாதுகாப்பாகவும் இருக்கும். மேடு பள்ளங்களில் கால் இடறி, தடுக்கி விழாமல் இருக்கலாம். குரங்கு, நாய், மாடு போன்ற விலங்குகளின் தாக்குதலிலிருந்து ஓரளவு தப்ப முடியும். அது ஒருவித Moral Support கொடுக்கக்கூடும். //

    வாக்கின் ஸ்டிக்கின் பயன்களை விரிவாகச் சொன்னீர்கள்!

    // விஞ்ஞான மருத்துவ முன்னேற்றங்களால் மனிதனின் சராசரி ஆயுள் கூடியுள்ளது என்பதும் மகிழ்ச்சியான விஷயம் தான். நல்லதொரு பதிவு + பகிர்வு. //

    ஆமாம் அய்யா! நவீன மருத்துவத்திற்கு நன்றி!

    ஒரு சமுதாய திருமணத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றை விரிவாகச் சொன்னமைக்கு நன்றி! எனது, சின்ன வயதில், தெரிந்தவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பார்த்து ரசித்த காட்சி! அப்போதெல்லாம் பெய்யாத மழைக்கு குடை பிடித்துக் கொண்டு, பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் எல்லோருக்கும் ஒரே சிரிப்பு! சந்தோஷம்தான்!

    // தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஐயா. //

    நன்றி அய்யா! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


    ReplyDelete
  20. வாக்கிங் ஸ்டிக் குறித்த பதிவு
    வெகுசுவாரஸ்யம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. மறுமொழி > வேகநரி said... // நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அருமையான சுவரசியமான பதிவு .நானும் அறிந்திருக்கேன் முற்காலத்தில் 60 வயது வந்தாலே தடியுடன் தான் நடக்க வேண்டும் என்ற நிலையென்று. அதனால் தான் அறுபதாம் கல்யாணம் என்று கொண்டாடி மகிழும் நிலையும் தோன்றியிருக்கலாம்.//

    அன்புள்ள வேகநரி அவர்களுக்கு நன்றி! என்னால் சட்டென்று சொல்ல முடியாத முக்கியமான விளக்கத்தினை, வாசகர்களுக்கு தந்ததற்கு நன்றி!

    // உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புது வருட வாழ்த்துகள். //

    நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  22. மறுமொழி> Ramani S said... ( 1 , 2 )

    // வாக்கிங் ஸ்டிக் குறித்த பதிவு வெகு சுவாரஸ்யம் //

    கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் //

    நன்றி கவிஞர் அய்யா! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  23. உண்மை தான்..
    நோயற்ற வாழ்தான் - குறைவற்ற செல்வம்

    அனைவருக்கும் உளம் நிறைந்த
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. பெரும்பாலோருக்கு வாக்கிங் ஸ்டிக் என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகவே உள்ளது. அதன் உதவியுடன் நடப்பவர்கள் வெகு சிலரே. நீங்கள் சொல்வது போல இப்போதெல்லாம் எண்பது வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் வாக்கிங் செல்லும் பலரை பார்க்க முடிகிறது. திமுக தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் அன்பழகனைப் பல முறை பார்த்து வியந்திருக்கிறேன். இந்த வயதிலும் நின்றுக்கொண்டே பேசுகிறார்! இன்றைய இந்திய அரசியல்வாதிகளில் முதிர்ந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் பலர் உள்ளனர். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. வாக்கிங் ஸ்டிக் நல்ல moral support தரும் என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போ வயதிற்கும், தோற்றத்திற்கும் சம்பந்தமே இருப்பதில்லை தான். அது தன்னம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். வரவேற்கப்பட வேண்டியதே.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // அனைவருக்கும் உளம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! //

    நன்றி அய்யா! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  27. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    // பெரும்பாலோருக்கு வாக்கிங் ஸ்டிக் என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகவே உள்ளது. //

    ஆமாம் அய்யா! தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    // இன்றைய இந்திய அரசியல்வாதிகளில் முதிர்ந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் பலர் உள்ளனர். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். //

    மீண்டும் நன்றி! அய்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // வாக்கிங் ஸ்டிக் நல்ல moral support தரும் என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல வயதிற்கும், தோற்றத்திற்கும் சம்பந்தமே இருப்பதில்லை தான். அது தன்னம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். வரவேற்கப்பட வேண்டியதே. //

    சகோதரி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு நன்றி!

    // உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். //

    நன்றி! அம்மா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!



    ReplyDelete
  29. நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தையாருக்கு ஒரு வெள்ளிப் பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக் வாங்கிக் கொடுத்து அவர் ஸ்டைலாக நடப்பதைப்பார்க்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. . அதற்கு வாய்ப்பே இருக்கவில்லை. அப்போதெல்லாம் வாக்கிங் ஸ்டிக் ஒரு ஸ்டைலுக்கு என்றுதான் தோன்றும். பகிர்வுக்கு நன்றி. எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!.

    ReplyDelete
  31. இப்போதெல்லாம் பல முதியவர்கள் கைத்தடி வைத்துக்கொள்ள விரும்புவதும் இல்லை.....

    நல்ல பகிர்வு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. முன்பெல்லாம் அறுபது வயதை நெருங்கிவிட்டாலேயே வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டிருந்ததும், இப்போதெல்லாம் எண்பது, தொண்ணூறு வயதானவர்கள்கூட எந்த ஸ்டிக்கும் இல்லாமலும் புழங்குவதும் ஒரு வகையான ஆச்சரியமே. இதற்கு நவீன மருத்துவ முறைகளின் பங்களிப்புதான் காரணம் என்பதைவிட அன்றைய காலத்தில் இங்கே பரவலாய் இருந்த வெள்ளைக்காரர்களின் பழக்கவழக்கங்களின் தொற்றும் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில், பெரும்பாலான நம்மவர்கள் நல்ல உடல் நலத்துடனேயே இருந்தார்கள். இருந்தும் குறிப்பிட்ட வயது ஆகிவிட்டது என்றவுடன் வாக்கிங்ஸ்டிக்கை நாடிவிடுவார்கள். அது அந்தக் காலத்தில் ஒரு சிம்பலின் அடையாளம் என்பதும் உண்மைதான்.
    இப்போது பெரும்பாலோருக்கு வயோதிகத் தோற்றம் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை. இதற்கு நடை உடை பாவனைகளும், தலைக்குப் போட்டுக்கொள்ளும் சாயமும் பெருமளவு காரணம். இப்படித் தோற்றமளிப்பதால் மனோரீதியாக தாங்கள் இன்னமும் இளையவர்களாகவே இருக்கிறோம் என்று நம்புகிறார்கள். அந்த மனோநிலை ஒரு மிகப்பெரிய காரணம்.
    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. மேலேயுள்ள பின்னூட்டம் நான் எழுதியதுதான். set upஐ மாற்றாததால் வேறு பெயரில் பதிந்துவிட்டது. நான் எழுதிய பின்னூட்டமாகவே கொள்ளவும். நன்றி.

    ReplyDelete
  34. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தையாருக்கு ஒரு வெள்ளிப் பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக் வாங்கிக் கொடுத்து அவர் ஸ்டைலாக நடப்பதைப்பார்க்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. .அதற்கு வாய்ப்பே இருக்கவில்லை. அப்போதெல்லாம் வாக்கிங் ஸ்டிக் ஒரு ஸ்டைலுக்கு என்றுதான் தோன்றும். பகிர்வுக்கு நன்றி. எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். //

    மூத்த வலைப்பதிவர் G.M.B -அவர்களின் அனுபவ பகிர்வுக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. மறுமொழி > மாதேவி said...

    // உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!.//

    சகோதரி மாதேவியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // இப்போதெல்லாம் பல முதியவர்கள் கைத்தடி வைத்துக்கொள்ள விரும்புவதும் இல்லை..... நல்ல பகிர்வு.//

    // உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். //

    தங்களின் கருத்துரைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  37. இப்போதெல்லாம் வாகிங் ஸ்டிக் தேவைப்படுவதில்லை, வயதானாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பதெல்லாம் சரி என்றாலும், சிலர் இடுப்பு எலும்பு வளைந்து போய் பாதியாக மடங்கி விடுகிறார்கள். முதலில் சின்னதாகக் கூன் போட ஆரம்பித்து போகப்போக நிமிர்ந்து நிற்கமுடியாத நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.
    இப்படி இருப்பவர்கள் வாகிங் ஸ்டிக் பயன்படுத்தினால் நல்லதோ என்று தோன்றுகிறது. இது என்னுடைய எண்ணம்தான்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. மறுமொழி > Amudhavan said...

    // மேலேயுள்ள பின்னூட்டம் நான் எழுதியதுதான். set upஐ மாற்றாததால் வேறு பெயரில் பதிந்துவிட்டது. நான் எழுதிய பின்னூட்டமாகவே கொள்ளவும். நன்றி. //

    அன்புள்ள அமுதவன் அவர்களுக்கு வணக்கம்! எனக்கும் இதே மாதிரி அனுபவம் உண்டு! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் M.Theresa Jennifer Jennifer said... என்ற Settings மூலம் அதற்குண்டான Password கொடுத்து, ஒரு சொல்லை கருத்துரையாகப் (நன்றி என்று கூட இருக்கலாம்) பதியவும். அதன் பின்னர் எனது பதிவில் M.Theresa Jennifer Jennifer என்ற பெயரில் உள்ள இரண்டு Comments களின் கீழே குப்பைக் கூடை படம் வரும். அவற்றை க்ளிக் செய்து இரண்டு Comments களையும் நீக்கவும். பின்னர் உங்கள் பெயரில் சொல்ல வேண்டிய கருத்துரையைச் சொல்லவும். ( நானே நீக்கி விடுவேன். இருந்தாலும் இப்படி ஒரு முறை இருப்பது உங்களுக்குத் தெரிந்தால் நல்லது என்பதற்காகச் சொன்னேன் )


    ReplyDelete
  39. எங்கள் குடும்பத்தின் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. மறுமொழி > Ranjani Narayanan said...

    // இப்போதெல்லாம் வாகிங் ஸ்டிக் தேவைப்படுவதில்லை, வயதானாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பதெல்லாம் சரி என்றாலும், சிலர் இடுப்பு எலும்பு வளைந்து போய் பாதியாக மடங்கி விடுகிறார்கள். முதலில் சின்னதாகக் கூன் போட ஆரம்பித்து போகப்போக நிமிர்ந்து நிற்கமுடியாத நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இப்படி இருப்பவர்கள் வாகிங் ஸ்டிக் பயன்படுத்தினால் நல்லதோ என்று தோன்றுகிறது. இது என்னுடைய எண்ணம்தான். //

    சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நன்றி! தாங்கள் சொல்வது சரிதான். வலுவிழந்த முதுகெலும்பிற்கு வாகிங் ஸ்டிக் என்பது ஒரு சப்போர்ட்தான். உடம்பின் மொத்த பாரமும் அந்த தடியின் மீது சாத்தப்படுகிறது. எனவே கொஞ்சம் ரிலாக்ஸ் தான்.

    // இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! //

    நன்றி சகோதரி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!


    ReplyDelete
  41. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // எங்கள் குடும்பத்தின் இனிய வாழ்த்துகள். //

    நன்றி! அய்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. வாழ்க வளமுடன்!.. வளர்க நலமுடன்!..
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete

  43. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  44. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  45. மறுமொழி > கி. பாரதிதாசன் கவிஞர் said...

    மரியாதைக்குரிய கவிஞர் கி. பாரதிதாசன், தலைவர், கம்பன் கழகம், பிரான்சு அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  46. இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    எனது கணனிப் பிரச்சனையால் தாமதமாக கருத்திட நேர்ந்தது.
    பதிவு சிறப்பு இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  47. மறுமொழி > kovaikkavi said...

    // இனிய புத்தாண்டு நல்வாழ்த்து. எனது கணனிப் பிரச்சனையால் தாமதமாக கருத்திட நேர்ந்தது. பதிவு சிறப்பு இனிய வாழ்த்து. //

    கவிஞர் சகோதரி! வேதா. இலங்காதிலகம். ! அவர்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  48. அருமையான பதிவு.
    வாக்கிங்ஸ்டிக் தேவை படுபவர்கள் பயன் படுத்தினால் நல்லது.
    அவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு பயன்படுத்தாமல் இருந்தால் எங்காவது விழுந்து அடிபட்டு அவர்களுககுதான் கஷ்டம்.

    ReplyDelete
  49. மறுமொழி . கோமதி அரசு said...

    // அருமையான பதிவு. வாக்கிங்ஸ்டிக் தேவை படுபவர்கள் பயன் படுத்தினால் நல்லது. அவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு பயன்படுத்தாமல் இருந்தால் எங்காவது விழுந்து அடிபட்டு அவர்களுககுதான் கஷ்டம். //

    சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி! நீங்கள் சொல்வது போல, வெட்கப்பட்டுக் கொண்டே நிறையபேர் வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்துவதில்லை.

    ReplyDelete