"தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லனஎல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே"
மனம் தரும் தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லனஎல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே"
- அபிராமி அந்தாதி (69)
இந்து மதத்தில்
தம்பதியரில் ஆணுக்கு அறுபது வயது ஆகும்போது “அறுபதாம் கல்யாணம்” என்ற ஒரு சடங்கைச் செய்கிறார்கள். இந்த
கல்யாணத்தை திருக்கடையூரில் செய்வதை விஷேசமாக நினைக்கிறார்கள். திருக்கடையூரில்
உள்ள அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை - தரங்கம்பாடி
சாலையில் உள்ளது. இந்த கோயிலின் இறைவன் பெயர்:
அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர்.
அம்பாள் பெயர்: அபிராமி
திருக்கடையூர்
பயணம்:
நேற்று முந்தினம் (26.12.2013) வியாழக் கிழமை அதிகாலை 2
மணிக்கே நானும் எனது மனைவியும் எழுந்து காலைக் கடன்கள், குளியல் முடித்து விட்டு,
திருச்சி கே கே நகரில் 3 மணிக்கு ஆட்டோ
பிடித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்றோம். அங்கிருந்து தஞ்சாவூர்
சென்றோம். மார்கழி என்பதால் சரியான குளிர். அங்கு இருவரும் சூடாக டீ சாப்பிட்டோம்.
பின்னர் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் பிறகு கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை
என்று பஸ்களில் மாறி மாறி சென்றோம். மயிலாடுதுறைக்கு பழைய பஸ் நிலையத்திற்கு நாங்கள்
சென்றபோது காலை ஆறு மணி. திருக்கடையூரில் ஹோட்டல்களில் டிபன் எப்படி இருக்குமோ
என்பதால் மயிலாடுதுறையில் புது பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே மாரியம்மன் கோயிலுக்கு
அருகில் இருந்த ஸ்ரீ ஆரிய பவன் ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம். அங்கிருந்து நடைதூரம்தான் புது பஸ் நிலையம். அங்கிருந்து
பஸ்சில் புறப்பட்டு அரைமணி நேரத்தில் திருக்கடையூர் வந்தோம்.
கல்யாணமாம்
கல்யாணம்
:
திருக்கடையூரில்
கோயில் வாசலில் நிறைய வேன்கள், டாக்சிகள். வெளியூரிலிருந்து வந்தவர்கள். மார்கழி
என்பதால் நிறைய அய்யப்ப பக்தர்கள். அவர்களுக்கு இடையில் மாலையும் கழுத்துமாய்
அறுபதாம் கல்யாண மணமக்கள். நிறையபேர் அறுபது ஆனவர்களாகவே தெரியவில்லை.( காரணம்
நவீன மருத்துவம் மற்றும் உடல் - உடை அலங்காரம் போன்றவை ) கோயில் வாசலில் எங்கள் உறவினர்கள்
எங்கிருக்கிறார்கள் என்று செல்போனில் தெரிந்து கொண்டு கோயில் நுழைவு மண்டபம் சென்றோம்.
அவர்கள் புறப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து
கொண்டோம். மணமக்களுக்கு மாமன்கள் மாலைகள் சாற்றினர்.
படம் (மேலே) IMG
2048 கோயிலின் உள்ளே உள்ள தேவஸ்தான
அலுவலகம்
படம் (மேலே) IMG
2032 கோயிலின் உள்ளே கொடிக்கம்பம்.
படம் (மேலே) IMG
2047 கோயிலின் உள்ளே உள்ள நந்தி
படம் (மேலே) IMG
2033 கோயிலின் இரண்டாவது வாயில்
அங்குள்ள
கோபுரவாசலில் பசுமாடு ஒன்றை ஒருவர் ( மாட்டுக்கு சொந்தக்காரர் ) பிடித்துக் கொண்டு
இருந்தார். அங்கு வரும் மணமக்கள் ஒவ்வொருவரும் அந்த மாட்டிற்கு ” கோமாதாபூஜை” செய்து வாழைப் பழம் கொடுக்கின்றனர். மாட்டின்
சொந்தக்காரருக்கு ஒரு தொகை. ( கஜ பூஜையும் செய்வார்கள். நாங்கள் சென்றபோது கோயில் யானை இல்லை. அது இறந்து விட்டது.
இன்னும் கொஞ்ச நாளில் புதுயானை வந்துவிடும் என்றார்கள்) பின்னர் அங்கிருந்து உள்ளே
அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.
படம் (மேலே) IMG
2036 கோயிலில் உள்ள யாளி தூண்கள்
படம் (மேலே) IMG
2039 கோயிலில் உள்ள ஒரு சிலை
நான் கோயிலை
கேமராவில் படம் பிடிக்கும் அவசரத்தில் அவர்களை தொடர்ந்து செல்லாததால் அவர்களை
விட்டு விட்டேன். பின்னர் அந்த கும்பலில் அவர்களைக் கண்டு பிடிப்பதற்குள் போதும்
போதும் என்றாகி விட்டது. அவர்களை கள்ளவாரண பிள்ளையார் சன்னதியில் கண்டேன். சன்னதியில்
செல்போன், கேமரா அனுமதி இல்லை. பின்னர் அங்கிருந்து அபிராமி அம்பாள் சன்னதி.
சன்னதியின் வெளியே வந்தோம். நான்கு சுற்றுப் பிரகார மண்டபத்தில் ஆங்காங்கே
திருமணம் நடத்த தயாராக பூஜைப் பொருட்களோடு
ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, அங்கங்கே திருமணங்கள்
நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஒரே புகைமயம். ஒரு திருமணம் நடைபெற்று முடிந்ததும் அடுத்த
தம்பதிக்கு அந்த இடத்தை சினிமா செட்டிங்ஸ் போல ஒழுங்குபடுத்துகிறார்கள்.
படம் (மேலே) IMG
2049 அபிராமி அம்பாள் சன்னதி வாயில்
படம் (மேலே) IMG
2044 தயார்நிலையில் பூஜைப் பொருட்கள்
படம் (மேலே) IMG
2068 ஒரு காட்சி
எங்கள் உறவினரின்
அறுபதாம் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. மணமக்கள் திருக்கடையூரில் அணிந்த மாலையை
மார்க்கண்டேயர் கோயிலில்தான் கழட்ட வேண்டுமாம். எனவே அங்கிருந்து திருமணல்மேடு மார்க்கண்டேயர் கோயில்
சென்றோம்.
படம் (மேலே) IMG
2091 அறிவிப்பு பலகை.1
படம் (மேலே) IMG
2092 அறிவிப்பு பலகை.2
படம் (மேலே) IMG
2093 மார்க்கண்டேயர் கோயில் நுழைவு
கோபுரம்
பின்னர் அங்கிருந்து கிளம்பி தென்பாதி சீர்காழியில் உள்ள வசந்தபவனில்
சாப்பாடு. சென்னை உறவினர்கள் அவர்கள் வேனில் செல்ல, நாங்கள் இருவரும் சீர்காழி – கும்பகோணம் – தஞ்சாவூர் – திருச்சி என்று பஸ்களில் மாறி மாறி ஊர் வந்து சேர்ந்தோம்.
தலபுராணம்:
திருக்கடையூர்
என்ற இந்த திருத்தலத்தோடு இரண்டு புராணக்கதைகள் உள்ளன. எல்லோரும் அறிந்ததுதான்.
படம் (மேலே) IMG
2025 கோயிலின் இரண்டாவது வாயில்
கோபுரம்
படம் (மேலே) மேற்படி கோபுரம் மேல் உள்ள திருப்பாற்கடல் கடையும் காட்சி
சிற்பங்கள்
படம் (மேலே) மேற்படி கோபுரம் மேல் உள்ள சம்பந்தர் பல்லக்கில் செல்லும் காட்சி
சிற்பங்கள்
அமிர்தம் கடைந்த
கதை: அமுதம் எடுப்பதற்காக அசுரர்களும் தேவர்களும் , வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும்,
மந்திர மலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைகின்றனர். ஒரு காரியம்
தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய பிள்ளையார் வணக்கத்தை மறந்து விடுகின்றனர்.
எனவே அமுதம் எடுத்து வைக்கப்பட்ட குடத்தை பிள்ளையார் கடவூர் என்ற இந்த
திருக்கடையூரில் ஒளித்து வைக்கிறார். தேவர்கள் பிள்ளையாரை
வணங்கி அமுதம் உண்ணுகின்றனர். அந்த
குடம் லிங்கமாக மாறி விடுகிறது. எனவே இறைவன் பெயர் அமிர்தகடேஸ்வரர் (அமிர்தம் + கடம் (குடம்
)+ ஈஸ்வரர்)
மார்க்கண்டேயன்
கதை: திருக்கடையூருக்கு அருகில் உள்ள மிருகண்டு என்பவர்க்கு குழந்தையில்லை. அவர்
சிவனை வேண்ட, இறைவன் அருளால் அவர் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு
மார்க்கண்டேயன் என்று பெயர். அவனது விதிப்படி அவன் பதினாறு வயது வரைதாம் வாழ்வான்.
இதனால் ஒவ்வொரு
நாளும் சிவாலயங்கள் சென்று வழிபட்டு வந்தான். மார்க்கண்டேயன்
ஆயுள் முடிந்ததும் எமன் அவனது உயிரை எடுக்க பாசக் கயிற்றை வீசுகிறான். அப்போது
மார்க்கண்டேயன் திருக்கடையூர் ஈசனுக்கு பூசை செய்து கொண்டு இருக்கிறான்.
பாசக்கயிறு ஈசன் மீதும் விழுகிறது. இதனால் வெகுண்ட சிவன் எமனை காலால் எட்டி உதைக்க
அவன் மார்க்கண்டேயனை விட்டு ஓடுகிறான். இறைவன் என்றும் பதினாறு வயதினை
மார்க்கண்டேயனுக்கு தருகிறார். திருக்கடையூர்
அருகிலுள்ள திரு மணல்மேல் குடியில் மார்க்கண்டேயருக்கு கோயில் உண்டு.
இந்த இரண்டு
கதைகளிலும் ஆயுள்பலம் சம்பந்தப்பட்டு
இருப்பதால், இந்த கோவிலில் அறுபதாம் கல்யாணம் செய்கிறார்கள்.
சில செய்திகள்:
இந்த கோயிலில்
திருமணம் செய்ய வருபவர்கள் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை.
கோயிலில் திருமண
நிகழ்ச்சிகளை கேமரா, வீடியோ எடுக்கலாம். இறைவன் சன்னதியில் மட்டும் கூடாது.
கோயிலுக்கு வெளியே
தங்குவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. சுத்தமான கட்டணக் கழிப்பிடங்கள் உள்ளன.
இங்கு எல்லாமே
வியாபாரம்தான். எனவே இதற்கென்று இருக்கும் புரோக்கர்களிடம் பணத்தைக் கொடுத்து
விட்டால் எல்லாமே வரிசைக் கிரமமாக நடந்து விடும். அலைய வேண்டியதில்லை.
பெரும்பாலும் காலை
முகூர்த்தங்கள்தான். சூரிய உதயம் முதல் பகல் 12 மணி வரை வெளியூரிலிருந்து வரும்
கல்யாண கும்பல் அதிகமாக இருப்பதால்,
கோயிலில் உள்ள கடவுள்களை சரியாக தரிசனம் செய்ய முடிவதில்லை. பிற்பகல்
மற்றும் மாலை வேளை கோயிலில் கும்பலும், இரைச்சலும் குறைவு. நிதானமாக வழிபடலாம்.
மூத்த
வலைப்பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் அறுபதாம் கல்யாணம் பற்றி தனது பதிவு ஒன்றில் தரும் தகவல்கள்.
அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் ’சஷ்டியப்த பூர்த்தி’போன்ற ஒருசில விழாக்களைப்பற்றி அடியேன் கேள்விப்பட்டுள்ள ஒருசில
சிறப்புச் செய்திகளைத் தங்கள் தகவலுக்காக இங்கு
பகிர்ந்து கொள்கிறேன்:
1] 59 வயதுகள் பூர்த்தியாகி 60ல் அடியெடுத்து வைக்கும்
நாளில் செய்துகொள்வது “உக்ரஹ சாந்தி” என்றதொரு ஹோமம்.
அடுத்த
ஓராண்டு அரோக்யத்துடன் இருந்து
சஷ்டியப்த பூர்த்தி நல்லபடியாக நடக்க எண்ணி,
சிறப்பு வழிபாடுகளுடன் வேண்டிக்கொண்டு செய்யும் ஓர் விசேஷ ஹோமம்
இது.
பிறந்து 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் [பிறந்த அதே தமிழ் வருஷம், அதே தமிழ் மாதம், அதே ஜன்ம நக்ஷத்திரம் சேரும் நன்னாளில்] செய்துகொள்ளும் விசேஷ பூஜைகளும் ஹோமங்களுமே, சஷ்டியப்த பூர்த்தி எனப்படுவது.
ஒரு
மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்தெந்த
கிரஹங்கள் எந்தெந்த ராசியில் உள்ளனவோ, அதே ராசிகளில் அதே கிரஹங்கள் மீண்டும் வந்து அமர்வது என்பது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடிய அபூர்வமானதோர் நிகழ்வாகும்.
இதுபோன்ற
அபூர்வமான கிரஹ அமைப்புகள் தான் சஷ்டியப்த பூர்த்தி நன்னாளின் தனிச்சிறப்பாகும்.
பிறந்த
ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில், ஒரே ஒருமுறை மட்டும் தான் இத்தகைய அபூர்வ நிகழ்வினை மீண்டும் சந்திப்பதற்க்கான வாய்ப்பு அமையும். [அதுவும்
பிராப்தம் இருந்தால் மட்டுமே]
{குழந்தை பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகத்தின் இராசிக்கட்டங்களில் இந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில்
அன்று அமைந்திருந்தன என்பது தெளிவாகக்
குறிப்பிடப்பட்டிருக்கும். அதே கிரஹங்கள் மீண்டும் அதே ராசிகளில் அப்படியே அமர்ந்திருப்பது, இந்த சஷ்டியப்தபூர்த்தி என்று கொண்டாடிடும் நாளில் மட்டுமே தான். }
மீண்டும்
ஒருமுறை இந்த நிகழ்வினைச்
சந்திக்கும் வாய்ப்பினைப் பெற விரும்பினால்,
120 ஆண்டுகளுக்கு
மேல் அவர் இந்த பூமியில் வாழ வேண்டியிருக்கும். ;)))))
(நன்றி!:வை கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html)
நேர்முக வர்ணனையாக அருமையான காட்சிகள்..
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
வணக்கம்
ReplyDeleteஐயா.
பதிவு சிறப்பாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்க மாமாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு சென்று வந்தோம். எங்கு காணினும் மூத்த மணமக்கள்.
ReplyDeleteவிளக்கமான பதிவுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான படங்களுடன், மார்க்கண்டேயன் கதையுடன் பகிர்வு மிகவும் சிறப்பு ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணம் பற்றி அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குத்தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாகத்தான் எல்லோரும் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பு அவரவர்கள் வீட்டிலேயே நடத்துவார்கள். மேலும் அறுபதாம் ஆண்டில் கல்யாணம் நடத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்போதெல்லாம் சராசரி ஆயுட்காலம் 55 தான் என்பதால் 60 வயது தாண்டியவர்கள் குறைவு என்பதால் அந்த வயதை அடைந்தவர்கள் அந்த நிகழ்வை திருமணவிழாவாக கொண்டாடினார்கள்.
ReplyDeleteஇப்போதெல்லாம் Event Managers என்று நகர்புறத்தில் இருப்பதுபோல் திருக்கடையூரிலும் Event Managers இருக்கிறார்கள்! அவர்கள் வேறு யாருமல்ல அங்குள்ள சாஸ்திரிகள்தான். முன்பே சொல்லிவிட்டால் தங்கும் இடம், உணவு வசதி, பூஜை போன்ற ஏற்பாடுகளை அவர்களே செய்துவிடுகிறார்கள்.
நாங்களும் 60 ஆம் கல்யாணத்தில் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது ஐயா. படங்களும் அருமை,
ReplyDelete//குழந்தை பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகத்தின் இராசிக்கட்டங்களில் இந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில் அன்று அமைந்திருந்தன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே கிரஹங்கள் மீண்டும் அதே ராசிகளில் அப்படியே அமர்ந்திருப்பது, இந்த சஷ்டியப்தபூர்த்தி என்று கொண்டாடிடும் நாளில் மட்டுமே தான்//
இதுவரை அறியாத புதிய செய்தி ஐயா இது. நன்றி
த.ம.4
ReplyDeleteவெளியூரிலிருந்து வரும் கல்யாண கும்பல் அதிகமாக இருப்பதால், கோயிலில் உள்ள கடவுள்களை சரியாக தரிசனம் செய்ய முடிவதில்லை.//
ReplyDeleteஉண்மைதான்.. ஏதோ இவர்கள் கோயிலையே விலைக்கு வாங்கி விட்ட மாதிரி நடந்து கொள்வார்கள்.. இவர்களை வழி நடத்தும் சாஸ்திரிகளும் அதே மாதிரி தான்!..
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பி - கேட்டபோது, அவர் பார்த்த பார்வையும் .. - கையில் ஒரு அலைபேசியை வைத்துக் கொண்டு அவர் காட்டிய அலம்பலும் .. இன்னும் மறக்க முடியவில்லை!..
துரை சார், சொல்வது போல் எனக்கும் சீர்காழிக்கு அருகிலுள்ள திருகோலக்கா திருத்தலத்திற்கு சென்ற போது ஏற்பட்டது. திருகோலக்கா அருமையான கோவில் ஆனால் அங்கு வரும் பக்தர்கள் மிகவும் குறைவு. ஸ்தல புராணம் கேட்டதற்கு தான் அத்தனை அலட்டல். அப்புறம் எப்படி யார் வருவார்கள் சொல்லுங்கள்.
ReplyDeleteதமிழ் சார், உங்கள் நேர்முக வர்ணனை அருமை. நாங்களும் திருமணத்தில் கலந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது. நன்றி
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete//நேர்முக வர்ணனையாக அருமையான காட்சிகள்..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..! //
ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > Rupan com said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > ராஜி said...
ReplyDelete// எங்க மாமாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு சென்று வந்தோம். எங்கு காணினும் மூத்த மணமக்கள். //
“ மூத்த மணமக்கள் ‘ – நல்ல சொல்லாடல். சகோதரி ராஜி அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDelete// விளக்கமான பதிவுக்கு நன்றி //
கவிஞர் கவியாழியின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// அருமையான படங்களுடன், மார்க்கண்டேயன் கதையுடன் பகிர்வு மிகவும் சிறப்பு ஐயா...வாழ்த்துக்கள்... //
அன்புள்ள திண்டுக்கல் தனபாலன் அவர்களே உடலும் உள்ளமும் நலமா? தங்கள் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணம் பற்றி அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குத்தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாகத்தான் எல்லோரும் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பு அவரவர்கள் வீட்டிலேயே நடத்துவார்கள்.//
அய்யா வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி! ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வதுபோல் அப்போதெல்லாம் வீட்டிலேயே நடத்துவார்கள். இப்போது எல்லோரும் திருக்கடையூர் நோக்கி படையெடுக்க காரணம் பக்தி இதழ்கள், டீவி சேனல்கள்., இணையதளங்கள் ஆகியவைகளில் வரும் தகவல்கள்தான்.
// மேலும் அறுபதாம் ஆண்டில் கல்யாணம் நடத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்போதெல்லாம் சராசரி ஆயுட்காலம் 55 தான் என்பதால் 60 வயது தாண்டியவர்கள் குறைவு என்பதால் அந்த வயதை அடைந்தவர்கள் அந்த நிகழ்வை திருமணவிழாவாக கொண்டாடினார்கள். //
அப்போதைய சராசரி ஆயுட்காலம் பற்றி விரிவாகச் சொன்னீர்கள்.
// இப்போதெல்லாம் Event Managers என்று நகர்புறத்தில் இருப்பதுபோல் திருக்கடையூரிலும் Event Managers இருக்கிறார்கள்! அவர்கள் வேறு யாருமல்ல அங்குள்ள சாஸ்திரிகள்தான். முன்பே சொல்லிவிட்டால் தங்கும் இடம், உணவு வசதி, பூஜை போன்ற ஏற்பாடுகளை அவர்களே செய்துவிடுகிறார்கள். //
திருக்கடையூர் Event Managers – நல்ல விளக்கம் சொன்னீர்கள். அவர்கள் உதவி இல்லாவிடில், நாம் நாள் முழுக்க திருக்கடையூரிலேயே உட்கார்ந்து இருக்க வேண்டி இருக்கும். எனவே அவர்ள் தொழில் பற்றி குறையாகச் சொல்ல முடியாது.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 0
ReplyDelete// நாங்களும் 60 ஆம் கல்யாணத்தில் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது ஐயா. படங்களும் அருமை,//
சகோதரர் கரந்தை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!
[ //குழந்தை பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகத்தின் இராசிக்கட்டங்களில் இந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில் அன்று அமைந்திருந்தன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே கிரஹங்கள் மீண்டும் அதே ராசிகளில் அப்படியே அமர்ந்திருப்பது, இந்த சஷ்டியப்தபூர்த்தி என்று கொண்டாடிடும் நாளில் மட்டுமே தான்//
இதுவரை அறியாத புதிய செய்தி ஐயா இது. நன்றி ]
மேற்படி தகவலைத் தந்தவர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவருக்கு எனது நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDelete{ வெளியூரிலிருந்து வரும் கல்யாண கும்பல் அதிகமாக இருப்பதால், கோயிலில் உள்ள கடவுள்களை சரியாக தரிசனம் செய்ய முடிவதில்லை.//
உண்மைதான்.. ஏதோ இவர்கள் கோயிலையே விலைக்கு வாங்கி விட்ட மாதிரி நடந்து கொள்வார்கள்.. இவர்களை வழி நடத்தும் சாஸ்திரிகளும் அதே மாதிரி தான்!.. ]
மேலே மூத்த பதிவர் அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துக்கு கருத்தாக நான் சொன்னதையே இங்கும் சொல்ல் விரும்புகிறேன்.
// ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பி - கேட்டபோது, அவர் பார்த்த பார்வையும் .. - கையில் ஒரு அலைபேசியை வைத்துக் கொண்டு அவர் காட்டிய அலம்பலும் .. இன்னும் மறக்க முடியவில்லை!.. //
சன்னதியில் கேமராவுடன் நிற்கும் என்னையும் ஒருவர் அதட்டினார்.
மறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDelete// துரை சார், சொல்வது போல் எனக்கும் சீர்காழிக்கு அருகிலுள்ள திருகோலக்கா திருத்தலத்திற்கு சென்ற போது ஏற்பட்டது. திருகோலக்கா அருமையான கோவில் ஆனால் அங்கு வரும் பக்தர்கள் மிகவும் குறைவு. ஸ்தல புராணம் கேட்டதற்கு தான் அத்தனை அலட்டல். அப்புறம் எப்படி யார் வருவார்கள் சொல்லுங்கள்.//
ஒவ்வொரு இடத்திலும் சிலபேர் இப்படித்தான் அலப்பறை செய்து நம்மை நோகடித்து விடுவார்கள்.
// தமிழ் சார், உங்கள் நேர்முக வர்ணனை அருமை. நாங்களும் திருமணத்தில் கலந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது. நன்றி //
சகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி!
அன்புள்ள ஐயா, வணக்கம் ஐயா.
ReplyDeleteநான் இதுவரை திருக்கடையூர் நேரில் சென்றது இல்லை. ஆனால் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். இன்று தங்களின் பதிவு + படங்கள் மூலம் நேரில் தங்களுடனேயே சென்று வந்தது போல ஓர் திருப்தியும், உடல் அசதியும் ஏற்பட்டதை உணர்ந்தேன், ஐயா.
அந்த அளவுக்கு அசத்தலான பதிவாகக் கொடுத்து அசத்தி விட்டீர்கள் ஐயா. ;)))))
>>>>>
//இங்கு எல்லாமே வியாபாரம்தான். எனவே இதற்கென்று இருக்கும் புரோக்கர்களிடம் பணத்தைக் கொடுத்து விட்டால் எல்லாமே வரிசைக் கிரமமாக நடந்து விடும். அலைய வேண்டியதில்லை.//
ReplyDeleteஆம் ஐயா, உண்மைதான் ஐயா. இன்று எங்கும் எதிலும் இப்படித்தான் வியாபாரமாக மாறிவிட்டது ஐயா. இனி இதை யாரும் மாற்றிட முடியாது என்பதும் உண்மைதான் ஐயா.
இருப்பினும் யாருக்கும் எதற்கும் அலையப் பொறுமையோ, சரீரத்தில் தெம்போ, மனதினில் தைர்யமோ இல்லாமல் உள்ளதால், இதுபோல Total Contract + Package என செல்ல நேரிட்டு விடுகிறது.
இன்றும் அந்தக்கும்பல்களில் போய் மாட்டாமல், தனியாக தன் இருப்பிடத்திலோ, இல்லத்திலோ, திருமண மண்டபங்களிலோ இந்த சஷ்டியப்த பூர்த்தி விழாவினை மிகவும் சிரத்தையாக செய்துகொள்பவர்கள் நிறையவே [Majority] உள்ளனர், ஐயா.
வேறு வழியே இல்லாதவர்கள், ஏதும் விபரம் அறியாதவர்கள் மட்டுமே, அங்கு சென்று செய்து கொள்கிறார்கள். அவரவர்கள் செளகர்யம் + நம்பிக்கை + வசதி வாய்ப்புகளைப் பொறுத்த விஷயம் இது.
>>>>>
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html)
ReplyDeleteஆஹா, எனது மேற்படி பதிவினிலிருந்து, எனக்குத்தெரிந்த ஒருசில விஷயங்களை நான் பதிவிட்டதிலிருந்து, தாங்கள் இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது, மீண்டும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, ஐயா. மிக்க நன்றி, ஐயா.
படங்களும், பதிவும் மிக அருமை. பாராட்டுக்கள், ஐயா.
அருமையான படங்கள். சமீபத்தில் அங்கே ஒரு நண்பரின் 60-ஆம் கல்யாணம் நடந்தது. என்னால் செல்ல முடியாத நிலை. இப்போது உங்கள் பதிவு மூலம் அங்கே சென்று வந்த உணர்வு.
ReplyDeleteஒரு பதினிரண்டு வருஷத்திற்கு முன்பு
ReplyDeleteஇந்த கோவிலுக்கு எனது 60 வது பிறந்த நாளன்று சென்ற
நினைவும் அந்த கோவிலின் பிராகாரங்களை சுற்றி வந்ததும் நினைவு இருக்கிறது.
ஒரு அர்ச்சனை செய்ததாக நினைவு இருக்கிறது. மற்ற படி எதுவும் செய்யவில்லை. இப்பொழுது 70 வயது முடிந்தபோது கூட என் ஆத்மார்த்த நண்பர்கள் எதோ பீமா ரதம் சாந்தி செய்யவேண்டும். அதுவும் ஒரு கல்யாணம். என்றார்கள். எனக்கு இந்த லௌகீக சம்பிரதாயங்கள் ஈர்க்கவில்லை.
60 70ு வயது என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு மைல் கல் தான் என்று தோன்றியது.
இந்த பிறந்த நாட்களில் சில சம்பிரதாயங்களை செய்து தான் தீர வேண்டும் என்ற நிர்பந்தம் என் மனதில் இல்லை.
அதனால் இந்த திருமண வைபவங்களை செய்து கொள்ளும் என் நன்பர்களை வாழ்த்தவோ சென்று வயதாற உண்ணவோ தயங்குவது இல்லை. நண்பர்களை சந்திப்பதற்கு இந்த வைபவங்கள் நல்ல வாய்ப்பு தருகின்றன.
உங்கள் பதிவு மூலம் திரும்பவும் திருக்கடையூர் சென்ற அனுபவம் ஏற்படுகிறது.
நன்றி. வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
இன்று எங்கும் எதிலும் இப்படித்தான் வியாபாரமாக மாறிவிட்டது ஐயா. இனி இதை யாரும் மாற்றிட முடியாது என்பதும் உண்மைதான் ஐயா. //
ReplyDeleteஎங்கும் எதிலும் ...
என்பதில் இல்லாத துறை இல்லை.
ஆனால், அங்கு செல்வதும் சென்றாலும் மனதுக்கு என்ன பிடித்தமோ அதைச் செய்வதும் செய்யாது இருப்பதும் நம் கைகளில் இல்லை மனதில் தானே இருக்கிறது.
சும்மா இரு என்று இருந்துவிட்டால் என்ன ?
சுப்பு தாத்தா.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1 )
ReplyDelete// அன்புள்ள ஐயா, வணக்கம் ஐயா. நான் இதுவரை திருக்கடையூர் நேரில் சென்றது இல்லை. ஆனால் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். இன்று தங்களின் பதிவு + படங்கள் மூலம் நேரில் தங்களுடனேயே சென்று வந்தது போல ஓர் திருப்தியும், உடல் அசதியும் ஏற்பட்டதை உணர்ந்தேன், ஐயா.
அந்த அளவுக்கு அசத்தலான பதிவாகக் கொடுத்து அசத்தி விட்டீர்கள் ஐயா. ;))))) //
அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்களின் மேலான விரிவான கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )
ReplyDelete// ஆம் ஐயா, உண்மைதான் ஐயா. இன்று எங்கும் எதிலும் இப்படித்தான் வியாபாரமாக மாறிவிட்டது ஐயா. இனி இதை யாரும் மாற்றிட முடியாது என்பதும் உண்மைதான் ஐயா. இருப்பினும் யாருக்கும் எதற்கும் அலையப் பொறுமையோ, சரீரத்தில் தெம்போ, மனதினில் தைர்யமோ இல்லாமல் உள்ளதால், இதுபோல Total Contract + Package என செல்ல நேரிட்டு விடுகிறது. //
வியாபாரமாக இருந்தாலும், எல்லா காரியங்களையும் வரிசைக்கிரமமாக செய்து விடுகிறார்கள். தெரியாத ஊரில் ஒவ்வொரிடமும் நாமே பேசி , ஒவ்வொரு பொருளுக்கும் இடத்திற்கும் அலைந்து நேரத்தை வீணாக்குவதை விட, ஒரு MARRIAGE CONTRACTOR - இடம் கொடுத்துவிடுவது நமக்கு மேல் என்றுதான் தோன்றுகிறது.
// இன்றும் அந்தக்கும்பல்களில் போய் மாட்டாமல், தனியாக தன் இருப்பிடத்திலோ, இல்லத்திலோ, திருமண மண்டபங்களிலோ இந்த சஷ்டியப்த பூர்த்தி விழாவினை மிகவும் சிரத்தையாக செய்துகொள்பவர்கள் நிறையவே [Majority] உள்ளனர், ஐயா. //
ஆமாம் ஐயா! இன்றும் தன் இருப்பிடத்திலோ, இல்லத்திலோ, திருமண மண்டபங்களிலோ அறுபதாம் கல்யாணத்தை நடத்துபவர்களும் உள்ளனர்.
// வேறு வழியே இல்லாதவர்கள், ஏதும் விபரம் அறியாதவர்கள் மட்டுமே, அங்கு சென்று செய்து கொள்கிறார்கள். அவரவர்கள் செளகர்யம் + நம்பிக்கை + வசதி வாய்ப்புகளைப் பொறுத்த விஷயம் இது. //
திருக்கடையூர் சென்று வருவது ஒருவிதத்தில் உற்சாகமாகத்தான் இருந்தது
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )
ReplyDelete// http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html)
ஆஹா, எனது மேற்படி பதிவினிலிருந்து, எனக்குத்தெரிந்த ஒருசில விஷயங்களை நான் பதிவிட்டதிலிருந்து, தாங்கள் இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது, மீண்டும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, ஐயா. மிக்க நன்றி, ஐயா. //
// படங்களும், பதிவும் மிக அருமை. பாராட்டுக்கள், ஐயா.//
அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. கட்டுரையை டைப் செய்யும்போது உங்களுடைய கட்டுரை ஞாபகம் வந்தது. அதனால்தான் உங்களிடம் செல் போனில் தொடர்பு கொண்டேன். நன்றி! நன்றி!
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// அருமையான படங்கள். சமீபத்தில் அங்கே ஒரு நண்பரின் 60-ஆம் கல்யாணம் நடந்தது. என்னால் செல்ல முடியாத நிலை. இப்போது உங்கள் பதிவு மூலம் அங்கே சென்று வந்த உணர்வு. //
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி! என்ன இருந்தாலும் பயணக் கட்டுரைகளை சலிப்பில்லாமல், படங்களோடு மற்றவர்களைக் கவரும் வண்ணம் எழுதும் உங்களைப் போல வராது. பயணக்கட்டுரைகள் எழுதுவதில் இன்னொரு பிலோஇருதயநாத் நீங்கள்!
மறுமொழி > sury Siva said... ( 1 )
ReplyDeleteசூரி சிவா என்கிற சுப்பு தாத்தா அவர்களின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி!
// ஒரு பதினிரண்டு வருஷத்திற்கு முன்பு இந்த கோவிலுக்கு எனது 60 வது பிறந்த நாளன்று சென்ற நினைவும் அந்த கோவிலின் பிராகாரங்களை சுற்றி வந்ததும் நினைவு இருக்கிறது. ஒரு அர்ச்சனை செய்ததாக நினைவு இருக்கிறது. மற்ற படி எதுவும் செய்யவில்லை//
உங்களது மலரும் நினைவுகளுக்கு நன்றி! இப்போது ஒரு அர்ச்சனையோடு அறுபதாம் கல்யாணம் நிறைவு பெறுவதில்லை!
.// இப்பொழுது 70 வயது முடிந்தபோது கூட என் ஆத்மார்த்த நண்பர்கள் எதோ பீமா ரதம் சாந்தி செய்யவேண்டும். அதுவும் ஒரு கல்யாணம். என்றார்கள். எனக்கு இந்த லௌகீக சம்பிரதாயங்கள் ஈர்க்கவில்லை. 60 70ு வயது என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு மைல் கல் தான் என்று தோன்றியது. //
60, 70 வயதுகளில் ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
// இந்த பிறந்த நாட்களில் சில சம்பிரதாயங்களை செய்து தான் தீர வேண்டும் என்ற நிர்பந்தம் என் மனதில் இல்லை. அதனால் இந்த திருமண வைபவங்களை செய்து கொள்ளும் என் நன்பர்களை வாழ்த்தவோ சென்று வயதாற உண்ணவோ தயங்குவது இல்லை. நண்பர்களை சந்திப்பதற்கு இந்த வைபவங்கள் நல்ல வாய்ப்பு தருகின்றன.//
ஆமாம் அய்யா! இந்த திருமண வைபவங்கள் நண்பர்களை சந்திப்பதற்கு நல்ல வாய்ப்பு தருகின்றன
// உங்கள் பதிவு மூலம் திரும்பவும் திருக்கடையூர் சென்ற அனுபவம் ஏற்படுகிறது. நன்றி. வாழ்த்துக்கள். //
சுப்பு தாத்தாவிற்கு நன்றி!
மறுமொழி > sury Siva said... ( 2 )
ReplyDelete// எங்கும் எதிலும் ...என்பதில் இல்லாத துறை இல்லை.
ஆனால், அங்கு செல்வதும் சென்றாலும் மனதுக்கு என்ன பிடித்தமோ அதைச் செய்வதும் செய்யாது இருப்பதும் நம் கைகளில் இல்லை மனதில் தானே இருக்கிறது. சும்மா இரு என்று இருந்துவிட்டால் என்ன ? //
சுப்பு தாத்தா சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான். வியாபாரமாக இருந்தாலும், அதனைச் செய்வதும் செய்யாது இருப்பதும் நம் மனதில்தான் இருக்கிறது.. தங்களின் அனுபவப் பூர்வமான கருத்துரைக்கு நன்றி!
சிறந்த தல வரலாறும் அருமையான பயணப் பதிவும் ஐயா!
ReplyDeleteமிக அழகாக உங்கள் பயணத்தை விபரித்துகொண்டு போனீர்கள் கூடவே எங்களையும் அழைத்துகொண்டு...
சிறப்பான எழுத்துநடையில் மனக் கண்களிலும் சில காட்சிகளைக் காட்டினீர்கள்..
படங்களும் பதிவும் உளம் நிறைத்தன. அருமை!
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!
அருள்மிகு அபிராமி அம்மை உடனுறை அமிர்தகடேசர்
ReplyDeleteஇந்தக் கோயிலின் பெயர் உண்மையில் திருக்கடையூர் அல்ல திருக்கடவூர். ஆனால் அது பேச்சு வழக்கில் மருவி திருக்கடையூர் ஆகி விட்டது. இலங்கைச் சைவர்களுக்கு திருக்கடவூர் கோயிலின் வரலாறு தான் தெரியும் ஆனால் திருக்கடையூர் தெரியாது. சில வருடங்களுக்கு முன்னால் திருக்கடவூர் கோயிலையும் குறித்துக் கொண்டு போய், திருக்கடையூருக்குப் போன பின்பும்,திருக்கடவூருக்குப் போகுமாறு கேட்டுக் கார் டிரைவரைக் குழப்பி விட்டோம். அவருக்கு திருக்கடவூர் எங்கிருக்கிறதென்றே தெரியவில்லை. :)
.
இப்பெயர் வந்தமைக்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன:
திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதகடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று ஆயிற்று என்பர். இயமவாதனையைக் கடத்தற்கு உதவும் ஊர் என்றும் கூறுவர். திருக்கடவூர் பேச்சு வழக்கில் மருவி திருக்கடையூர் ஆகியவுடன், சிலர் இங்குதான் பாற்கடலைக் கடைந்ததால் வந்த பெயர் என்று நியாயம் கற்பித்து விட்டார்கள்.
இரண்டாவது, மார்க்கண்டேயருக்காக காலனைக் கடந்த (உதைத்த) தலம். வீரட்டான தலங்களில் ஒன்றாகிய திருக்கடவூர் - இயமனை உதைத்தருளியது. இது மார்க்கண்டரைக் காக்கும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்தருளிய வீரம் நிகழ்ந்த தலமாதல் பற்றி வீரட்டானம் எனப்பெயர்பெற்றது. இச்செய்தியைக் ``கரிதரு காலனைச் சாடினானும்``, ``மார்க்கண்டர்க்காக அன்று காலனை உதைப்பர்போலும் கடவூர் வீரட்டனாரே``, ``கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு`` என முறையே காணப்பெறும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் இவர்களின் தேவார அடிகளால் அறியலாம். அதற்கு ஏற்பக் கால சங்காரமூர்த்தி தனியே எழுந்தருளியிருக்கின்றார். அவர் சந்நிதிக்கு எதிரில் அருள் பெற்ற இயமனது உருவமும் இருக்கின்றது.
பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்திலும் (அருச்சனைப்படலம்.),
``கறுவிவீழ் காலன் மார்பிற் சேவடிக் கமலம் சாத்திச்
சிறுவனுக் காயு ளீந்த சேவகப் பெருமான் மேய
அறைபுனற் பழனமன்ன மூதூர்``
எனக் கூறப்பெற்றுள்ளது.
இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு:
இவ்வூர் முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில் உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டுக் கடவூர் என்றும்; முதற் குலோத்துங்கசோழன் காலத்தில் இராஜநாராயணவளநாட்டு அம்பர் நாட்டுக் கடவூர் என்றும்; மூன்றாங் குலோத்துங்கசோழன் காலத்தில் சயங்கொண்ட சோழவளநாட்டு அம்பர் நாட்டுக் கடவூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளன.
அறுபதைக் கடந்தும் இன்னும்
ReplyDeleteதிருக்கடையூர் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை
படங்களுடன் தங்கள் அருமையான பதிவின் முலம்
திருக்கடையூரைத் தரிசித்தேன்
அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்க்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
tha.ma 8
ReplyDeleteதங்களின் நேரடி வர்ணனையும், புராண கதைகளையும் படித்து அறிந்து கொண்டேன்.. நேரில் சென்ற உணர்வைத் தந்தது..
ReplyDelete\\படம் (மேலே) IMG 2048 கோயிலின் உள்ளே உள்ள தேவஸ்தான அலுவலகம் \\புதுசா நல்ல கேமாரா வாங்கியிருக்கீங்க போலத் தோணுது!! படங்கள் தெளிவாக வந்துள்ளன!! ஆனா \\IMG 2047\\ மாதிரி சமாச்சாரங்களை நீக்கி விடலாமே!! இந்த நம்பர்களைப் பார்த்ததும், தர்மதுரை படத்தில் ரஜினி பேன்ட், சர்ட், கூலிங் கிளாஸ், தொப்பி எல்லாவற்றையும் புதுசா வாங்குவார், ஆனால் அதிலிருக்கும் price Tag-களை எதையும் பிரிக்காமல் அப்படியே தொங்கவிட்டுக் கொண்டு சென்னை வரைக்கும் போவார், அந்த சீன் ஞாபகத்துக்கு வருகிறது!!
ReplyDeleteவெகு நாட்களுக்குப் பின் தமிழ்மணம் பக்கம் வந்தபோது கண்டேன் கட்டுரையை. நன்று! நன்று! வாழ்க.
ReplyDeleteதிருக்கடையூரைத் தரிசித்தேன். நன்றி. படங்களும், பதிவும் மிக அருமை.
ReplyDeleteமறுமொழி > இளமதி said...
ReplyDeleteசகோதரி கவிஞர் இளமதி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > viyasan said...
ReplyDeleteசகோதரர் வியாசன் அவர்களின் அன்பான விரிவான கருத்துரைக்கும் விளக்கத்திற்கும் நன்றி! நான் திருக்கடவூர் அல்லது திருக்கடையூர் என்றே எழுத விரும்பினேன். ஆனால் இங்கு கடவூர் என்ற பெயர் குழப்பத்தை தரும் என்பதால், நடைமுறையிலும் பேச்சு வழக்கிலும் உள்ள திருக்கடையூர் பெயரையே எழுதும்படி ஆயிற்று.
// இப் பெயர் வந்தமைக்கு இரண்டு கதைகள் சொல்லப் படுகின்றன://
இந்த இரண்டு கதைகளும் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்தவை என்பதாலும், அவற்றை இங்கு சொன்னால் பதிவு நீண்டுவிடும் என்பதாலும் சுருக்கமாகச் சொல்ல வேண்டியதாயிற்று. தங்களின் கருத்துரையில் இதனை விளக்கமாகச் சொன்னமைக்கு நன்றி!
மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
ReplyDelete// அறுபதைக் கடந்தும் இன்னும் திருக்கடையூர் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை படங்களுடன் தங்கள் அருமையான பதிவின் முலம் திருக்கடையூரைத் தரிசித்தேன் அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //
கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!
// தங்களுக்கும் தங்க்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் //
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி!
மறுமொழி > ADHI VENKAT said...
ReplyDelete// தங்களின் நேரடி வர்ணனையும், புராண கதைகளையும் படித்து அறிந்து கொண்டேன்.. நேரில் சென்ற உணர்வைத் தந்தது.. //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! பயணக் கட்டுரைகளை உங்கள் வீட்டுக்காரரைப் போல என்னால் எழுத இயலாது. அவர் இன்னொரு பிலோ இருதயநாத்.
மறுமொழி > Jayadev Das said...
ReplyDelete[ \\படம் (மேலே) IMG 2048 கோயிலின் உள்ளே உள்ள தேவஸ்தான அலுவலகம் \\புதுசா நல்ல கேமாரா வாங்கியிருக்கீங்க போலத் தோணுது!! படங்கள் தெளிவாக வந்துள்ளன!! ஆனா \\IMG 2047\\ மாதிரி சமாச்சாரங்களை நீக்கி விடலாமே!! ]
சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களின் அன்பான ஆலோசனைக்கு நன்றி! எனது பொழுது போக்குகளில் போட்டோகிராபியும் ஒன்று! நானும் ஒரு போட்டோகிராபர். இப்போதுள்ள கேமரா வாங்கி இரண்டு வருடங்களுக்கும் மேல் இருக்கும். மேலும் நான் வாங்கிய கேமராக்களில் இது நான்காவது என்று நினைக்கிறேன்.
கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும்வரை நிகழ்ச்சிகளை கோர்வைப் படுத்தி எழுத இந்த IMG வரிசை எண்கள் உதவியாய் இருந்தன. மேலும் அந்த எண்கள் இருப்பதால் இந்த பதிவுக்கு இடைஞ்சல் இருப்பதாகத் தெரியவில்லை.
// இந்த நம்பர்களைப் பார்த்ததும், தர்மதுரை படத்தில் ரஜினி பேன்ட், சர்ட், கூலிங் கிளாஸ், தொப்பி எல்லாவற்றையும் புதுசா வாங்குவார், ஆனால் அதிலிருக்கும் price Tag-களை எதையும் பிரிக்காமல் அப்படியே தொங்கவிட்டுக் கொண்டு சென்னை வரைக்கும் போவார், அந்த சீன் ஞாபகத்துக்கு வருகிறது!! //
ரஜினிகாந்த் திரைப்பட நகைச்சுவை காட்சியை நீங்கள் ரசித்ததுபோல் நானும் ரசித்து இருக்கிறேன். அந்த காட்சிக்கும் இங்குள்ள IMG எண்களுக்கும் பொருத்தம் இருப்பதாகத் தெரிய வில்லை.
மறுமொழி > JAYAN said..
ReplyDelete.
//வெகு நாட்களுக்குப் பின் தமிழ்மணம் பக்கம் வந்தபோது கண்டேன் கட்டுரையை. நன்று! நன்று! வாழ்க. //
சகோதரர் ஜெயன் அவர்களுக்கு நன்றி! மீண்டும் வருக! அடிக்கடி வருக!
மறுமொழி > மாதேவி said...
ReplyDelete// திருக்கடையூரைத் தரிசித்தேன். நன்றி. படங்களும், பதிவும் மிக அருமை. //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மீண்டும் ஒருமுறை திருக்கடையூர் சென்று வந்ததுபோல் இருந்தது. எங்கள் ஊர் திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. அரிகரன்கூடல் என்ற கிராமம்.
ReplyDeleteஅபிராமி அந்தாதி எழுதியவருடைய சந்ததியினருக்கு வருடாவருடம் நெல் கொடுப்பது அரசனின கட்டளையாம். எங்கள் ஊர் பெரியவர் அவர் தலைமுறை வரை நெல் வாங்க வருவார்கள் என்று கூறினார்.
திருக்கடையூர் பக்கத்தில் அண்ணன் பெருமாள் கோயில், மார்க்கண்டேயன் கதைபோல கதைகொண்ட பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் அழகான கோயில்.
அடுத்தமுறை செல்லும்பொழுது மறக்காமல் செல்லுங்கள். எங்கள் ஊரைச் சுற்றி கோயில்கள் அதிகம். நன்றி.
http://sriannanperumal.org/
ReplyDeleteமறுமொழி > Packirisamy N said...
// மீண்டும் ஒருமுறை திருக்கடையூர் சென்று வந்ததுபோல் இருந்தது. //
சகோதரர் என் பக்கிரிசாமி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// எங்கள் ஊர் திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. அரிகரன்கூடல் என்ற கிராமம். அபிராமி அந்தாதி எழுதியவருடைய சந்ததியினருக்கு வருடாவருடம் நெல் கொடுப்பது அரசனின கட்டளையாம். எங்கள் ஊர் பெரியவர் அவர் தலைமுறை வரை நெல் வாங்க வருவார்கள் என்று கூறினார். திருக்கடையூர் பக்கத்தில் அண்ணன் பெருமாள் கோயில், மார்க்கண்டேயன் கதைபோல கதைகொண்ட பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் அழகான கோயில். //
தகவலுக்கு நன்றி! முன்பே உங்கள் ஊர் அரிகரன்கூடல் மற்றும் பெருமாள் கோயில் பற்றி அறிந்து இருந்தால், திருக்கடையூர் சென்ற கையோடு அப்படியே அந்த பெருமாள் கோயிலுக்கும் சென்று இருப்போம்.
// அடுத்தமுறை செல்லும்பொழுது மறக்காமல் செல்லுங்கள். எங்கள் ஊரைச் சுற்றி கோயில்கள் அதிகம். நன்றி. //
பெருமாள் பள்ளி கொண்டு இருக்கும் அண்ணன் பெருமாள் கோயிலுக்கு என்று ஒருநாள் சென்று வர வேண்டியதுதான்.
என் மகன்களும் என்னிடம் வளர்ந்த என் மச்சினனும் எங்கள் 60-ஆம் ஆண்டு நிறைவு விழாவை திருக்கடையூரில் கொண்டாட விருப்பினார்கள் ( ஆயுள் கூடும் என்ற நம்பிக்கை )என் பேரனும் பேத்தியும் அவர்களது தாத்தா பாட்டி கல்யாணத்தைக் கண்டு ரசித்ததே எங்கள் நினைவில் இருக்கிறது.
ReplyDeleteமறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் G.M.B -அவர்களின் அனுபவ பகிர்வுக்கு நன்றி!