Wednesday, 7 December 2016

ஜெயலலிதா - கண்ணீர் அஞ்சலி!



                              
                                  (செல்வி ஜெ.ஜெயலலிதா 24.02.1948 – 05.12.2016)

                         நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
                         பெருமை உடைத்துஇவ் வுலகு. _ (திருக்குறள்.336)

(இதன் பொருள்; நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் பெருமை கொண்டது இந்த உலகம்)

அவர் நலமாக திரும்பி வந்து விடுவார் என்றே, எல்லோரும் நம்பிக்கையோடு இருந்த வேளையில், ஜெயலலிதாவின் எதிர்பாராத மரணம் நடந்தே விட்டது. சாகக் கூடியா வயதா என்றால், இன்றைய காலச் சூழலில், மருத்துவ விஞ்ஞானமும் மனிதனின் சராசரி வயதும் அதிகரித்துள்ள நிலையில், அவரைவிட மூத்தவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும்போது, தனது 68 ஆவது வயதில், அவருடைய மரணம் என்பது துரதிர்ஷ்ட வசமானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், - ஆகிய மொழிகளை பேசக்கூடிய திறமை பெற்றவர். இந்திய பிரதமர் பதவிக்கான போட்டியாளர்களில் இவரது பெயரும் உண்டு. பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என்று எல்லாம் இருந்தும் – அவர் மகிழ்ச்சி இல்லாதவராகவே, மன அழுத்தம் மிகுந்தவராகவே, அரசியல் சூழ்நிலைக் கைதியாகவே வாழ்ந்து இறந்து போயிருக்கிறார். நோய் முற்றிய கடைசி நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாலும், ஆரம்பத்திலும் கடைசியிலும், உடம்புக்கு என்ன மாதிரியான வேதனையில் இவர் இருந்தார் என்பது, வெளி உலகுக்கு கடைசிவரை தெரியாமலேயே போய்விட்டது.

உண்மையில் அவரை நேசிப்பவர்களாக இருந்து இருந்தால் அவரை அந்தச் சூழ்நிலையில், மன அழுத்தத்தில் இருந்து விடுவித்து இருப்பார்கள். அவரும் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வாய்ப்புகள் இருந்து இருக்கக் கூடும். ஆனால் பலரும், அவரது செல்வாக்கை வைத்து, அவரை வைத்து அரசியல் பண்ண வேண்டும், அதிகாரத்தை அடைய வேண்டும், பணம் பண்ண வேண்டும், பிழைப்பு நடக்க வேண்டும் என்றே நடந்து கொண்டார்கள். அவர் உயிரோடு இருந்தபோது, பாக்கெட்டில் ‘அம்மா’வின் படத்தை, வெளியே தெரியும்படி வைத்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழுது பதவி ஏற்றவர்கள், அவர் இறந்தபோது ஏனோ குமுறக்கூட இல்லை. 

எனது மாணவப் பருவத்தில், நான், அந் நாளைய எம்ஜிஆர் ரசிகன். அவரது படங்களைப் பார்ப்பதோடு சரி. மற்றபடி,சினிமா ரசனையை, எனது படிப்பிற்கு இடையூறாக வைத்துக் கொண்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா பல படங்களில் நடித்து இருந்தாலும், அவரை எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக என்னால் பார்க்க இயலவில்லை. காரணம் ஜெயலலிதா ஒரு குழந்தை முகம் கொண்டவராகவே எனக்கு தோன்றினார். இருப்பினும் அவர் எம்.ஜி.ஆரோடு நடித்த ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், எங்கள் தங்கம், என் அண்ணன், ஆகிய படங்களும், ஜெய்சங்கரோடு நடித்த ’யார் நீ’ என்ற படமும், ரவிச்சந்திரனோடு நடித்த குமரிப்பெண் என்ற படமும் எனக்கு பிடிக்கும். (ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஜெயலலிதாவை டைரக்டரும் தயாரிப்பாளரும் ஆன பந்துலு ஒப்பந்தம் செய்தபோது, ஒரு சின்ன பெண்ணுடன் நான் எப்படி நடிப்பது என்று எம்.ஜி.ஆர் முதலில் மறுத்ததாக ஒரு தகவல் உண்டு) 
 
அரசியலில் ஜெயலலிதா அடி எடுத்து வைப்பதற்கு முன்னர், அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல நட்பிலேயே இருந்தார். திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்த, தி.மு.க மாநாடு ஒன்றில்,காவிரி தந்த கலைச்செல்வி’ என்ற நாட்டிய நாடகத்திற்காக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் வந்து இருந்த போது, அவரை மேடையிலிருந்து தொலைவிலிருந்து பார்த்ததாக நினைவு.. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ‘எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் கருணாநிதி எதிர்ப்பு அரசியலுக்கு ஒத்து வராததால் அவரை ஓரம் கட்டி விட்டார்கள். அதனால் கருணாநிதி எதிர்ப்பாளர்கள் ஜெயலலிதாவைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை. இவரும் கடைசிவரை இந்த கோதாவிலேயே இருந்தார். ஆரம்பத்தில் தி.மு.க அனுதாபியாக, கலைஞரை ஆதரித்த எனக்கு. ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கு எதிர்ப்பு காட்ட ஜெயலலிதா போன்றவர்கள் தேவைதான் என்று மனம் மாறியதும் உண்மை.

எது எப்படி இருப்பினும் இனியாவது அவர் அமைதியாக உறங்கட்டும். தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.


                                       (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)



15 comments:

  1. அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.

    ReplyDelete
  2. தங்களின் தனிப்பாணியில் நன்கு அலசி எழுதியுள்ளீர்கள்.

    தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை நானும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.

    ReplyDelete
  3. எது எப்படி இருப்பினும் இனியாவது அவர் அமைதியாக உறங்கட்டும். தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்//.

    ReplyDelete
  4. இந்தத் துயர நிகழ்வுக்கு என் இரங்கல்களும்.

    ReplyDelete
  5. ஜெயலலிதா ஆன்மா அமைதி பெறட்டும்.

    ReplyDelete
  6. என்றும் அவரது புகழ் நிலைத்திருக்கும்..

    ReplyDelete
  7. #அவர் இறந்தபோது ஏனோ குமுறக்கூட இல்லை#
    என் எண்ணவோட்டமும் இதுதான் !

    ReplyDelete
  8. 'நல்லா எழுதியிருக்கீங்க. மாற்றம் என்பது மானிதத் தத்துவம்.

    பொதுவா நமக்கு இந்த இரண்டு கட்சிகளும் தகுந்த தலைமையில் இருந்தால் போதும்.

    ஜெ. புகழ் என்றும் நிலைத்திருக்கும். மக்களின், இயற்கையின் ஆதரவுதான் இறக்கும்போதும் பெரிய நிலையில் இருக்கும் வாய்ப்பை (இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி, தமிழக அரசாட்சி) வழங்கியிருக்கிறது.

    ReplyDelete
  9. என் டி டி வி நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதாவின் மறைவையே காலம் கடந்துதான் சொன்னார்கள் என்றும் நள்ளிரவில் ஒரு coup நடந்ததாகவும் செய்தி இருந்தது அவர் ஒரு மாஃபியா கும்பலில் சிக்கி இருந்தார் என்பது விளங்குகிறது அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக டெஹெல்காவின் செய்தியும் உண்டு.இருந்த பிக்கல்களிலிருந்து தப்பித்துக் கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது

    ReplyDelete
  10. நல்ல அலசல்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  11. அரசியலில் ஆட்டிப்படைக்கும் சக்தியாய் இருந்தார்

    ReplyDelete