Thursday, 1 December 2016

டெபிட்கார்டும் புரோட்டா கடையும் அகத்தியனும்



நவம்பர் 8, 2016 – செவ்வாய்க் கிழமை இந்தியர்கள் மறக்க முடியாத நாள். எப்போதுமே வெளிநாட்டு சுற்றுப் பயணத்திலேயே இருக்கும், மோடி அன்றைக்கு இந்தியாவிலேயே இருந்தார். ஏதோ ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடுவார் என்று சொன்னார்கள். அநேகமாக பாகிஸ்தான் மீது படையெடுப்பாக இருக்கும் என்றார்கள். ஆனால் அவர் சொந்த மக்கள் மீதே கரன்சி சர்ஜிக்கல் அட்டாக் ஒன்றை நடத்தினார். ஆம் அன்றுதான், வங்கிகள் தங்களுடைய அன்றைய பணிகளை முடித்துக் கொண்டவுடன்,  ” இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது “ என்று அறிவிப்பு செய்தார்.. இந்தியாவே அதிர்ந்தது. மக்கள் அல்லோல கல்லோல பட்டனர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது பர்மாவை விட்டு பதற்றத்துடன் வரிசை வரிசையாக வெளியேறிய இந்தியர்கள் போன்று, இங்கும் மக்கள் அலை அலையாக ஏ.டி.எம் அல்லது வங்கி என்று படையெடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்த குண்டு வீச்சு எப்போது என்னவாக இருக்கும் என்றே நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

என்னிடம் பேசிய BJP அபிமான நண்பர்கள் அனைவரும் ‘CASHLESS INDIA’ என்ற நவீன இந்தியாவிற்கு மோடி அழைத்துச் செல்கிறார் என்றார்கள். இனிமேல் எங்கும் பணமே தேவைப் படாது என்றும் சொன்னார்கள். ஒரு கார்டு இருந்தால் போதும் என்றார்கள். ஓட்டலுக்கு போனால், துணிக் கடைக்கு போனால், பெட்ரோல் பங்கிற்கு போனால் இனிமேல் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். அதுதான் கார்டு இருக்கிறதே. வேண்டிய செலவு செய்யலாம் என்றெல்லாம் சொன்னார்கள். 

என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவர் போனில் பேசும் போது “ இளங்கோ, இந்த கார்டு சிஸ்டத்தில் உனக்கு எனன கஷ்டம். இருக்கப் போகிறது?” என்று கேட்டார். ‘ அய்யா எனக்கு ஒன்னும் பெரிய கஷ்டமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு சிறிய தொகைக்காக, பலரும் ATM இற்கோ அல்லது வங்கிக்கோ சென்று மணிக் கணக்கில் Q வில் நிற்க வேண்டி இருக்கிறது..” என்றேன். அவர் உடனே “ஒருவாரத்தில் எல்லாம் சரியாகி விடும் “ என்றார். ஏற்கனவே ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பிற்காக ஒரு Q வரிசை, அப்புறம் புதிய ரேஷன் கார்டுக்காக ஒரு Q வரிசை என்று போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்றுவரை எதுவுமே சரியாகவில்லை. வாழ்நாள் முழுவதும் வரிசைகளில் நிற்பதிலேயே கழிந்துவிடும் போலிருக்கிறது.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில், ஒரு காரியமாக ஒரு நடுத்தரமான ஊர் போக வேண்டி இருந்தது. அந்த சுற்று வட்டார மக்களுக்கு அதுதான் செண்டர் பாயிண்ட். எனவே அங்கு வரும் மக்கள் சாப்பிட வேண்டும் என்றால் அங்குள்ள புரோட்டா கடைகளுக்குத்தான் செல்ல வேண்டும்.  நானும் அன்றைக்கு எனது உறவினருடன் ஒரு புரோட்டாக் கடைக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்தோம். அங்கெல்லாம் கையில காசு வாயிலே தோசை வியாபாரம்தான். இங்கெல்லாம் கார்டு சிஸ்டம் கொண்டு வந்து , கார்டை ஸ்வைப் செய்யச் சொன்னால் வியாபாரம் அம்பேல் தான். (எனவே, கட்டணக் கழிப்பிடம் முதற்கொண்டு எல்லா இடத்திலும், கார்டு முறையைக் கட்டாயப் படுத்தாமல் இருந்தால் சரி )

இன்றைய சூழ்நிலையில், எனக்கு கார்த்திக் ( முத்துராமன் மகன்) – சுவலட்சுமி நடித்த, 20 வருடங்களுக்கு முன்பு வந்த, கோகுலத்தில் சீதை’ என்ற படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. இந்த படத்தில் டைரக்டர் அகத்தியன், அப்போதே இந்த கார்டு சமாச்சார பிரச்சினை பற்றி நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். கார்த்திக் கிரிடிட் கார்டு வைத்து இருக்கும் பெரும் பணக்காரர். பஸ் பயணமே இன்னதென்று அறியாத, சொகுசுக் கார் வைத்து இருப்பவர். கதைப்படி அவர் சுவலட்சுமியைப் பின்தொடர்ந்து ஒரு பஸ்சில் ஏறி விடுவார். டிக்கெட் எடுக்க கண்டக்டரிடம் கார்டை நீட்டுவார். அவர் கார்டுக்கு எல்லாம் டிக்கெட் கிடையாது என்று சொல்ல, இருவருக்கும் இடையில் வாக்குவாதம். அந்த சமயம் பார்த்து சாலையில் ‘டிக்கெட் பரிசோதகர்’ பஸ்சை நிறுத்தி உள்ளே வருகிறார். கார்த்திக் அவரிடமும் கார்டை காட்டி நியாயம் பேசுகிறார். அவரும், கண்டக்டரும் சேர்ந்து கார்த்திக்கை பஸ்சை விட்டு இறக்கி விடுகிறார்கள். அந்த காட்சியைக் கீழே பார்க்கலாம்.



COURTESY: SEPL / YOUTUBE – https://www.youtube.com/watch?v=tpv5HdwNGpY
படம்: கோகுலத்தில் சீதை – 1996 இல் வெளிவந்தது. டைரக்டர் அகத்தியன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், டைரக்‌ஷன் என்று சிறப்பாக செய்து இருக்கிறார்.

37 comments:

  1. எதார்த்தத்தை விளக்கி சொன்னிர்கள். ஆனால் இப்போது தங்களுக்கு தேசத்துரோகி பட்டம் கொடுக்க தேஷ் பாக்கிஸ் (டவுசர் பாய்ஸ்)வரிசையில் வருவார்கள்.

    M. செய்யது
    துபாய்

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை சொன்ன M.செய்யது (துபாய்) அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. கோகுலத்தில் சீதை படத்தில் மிக இனிமையான பாடல் ஒன்று உண்டு. "கோகுலத்துக் கண்ணா.. கண்ணா.."

    நிலைமை விரைவில் சீராக பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ‘எங்கள் BLOG’ ஸ்ரீராம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. நிலைமை சீராக வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.

      Delete
  3. அனைத்தும் மாறும் என்று நம்புவோம்... நாட்கள் (வருடங்கள்) தான் அதிகமாகும்....

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி.காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்றே நம்புவோம்.

      Delete
  4. கோகுலத்தில் சீதை படத்தை என்னால் மறக்கவே முடியாது. அது ஒரு படம்தான் நான் வீடியோவில் முழுமையாகப் பார்த்தபடம். பெரும்பாலும் எந்தப் படத்தைப் போட்டாலும், 15-20 நிமிடத்தில் நான் தூங்கிவிடுவேன். ஹஸ்பண்டும் குழந்தைகளும்தான் முழுமையாகப் பார்ப்பார்கள்.

    இன்னும் சில வாரங்களில் சென்னைக்கு வருகிறேன்... நீங்கள் சொன்னபடி, பேருந்தில் டெபிட் கார்டு கேட்காமல் இருந்தால் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி. பஸ்சில் பயணிகளிடம் கார்டை ‘ஸ்வைப்’ பண்ணச் சொல்லும் அளவுக்கு வரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் பல ‘குடி’மகன்கள் கார்டை நீட்டுவார்கள்; ஆனால் கணக்கில் ஒன்றும் இருக்காது.

      Delete
  5. மிகச் சரியான தருணத்தில்
    மிகச் சரியான பதிவு
    ஆயினும் உங்கள் பதிவில்
    எது குறித்து எழுதினாலும்
    எப்போதும் இருக்கும்
    ஒரு தீர்க்கமான கருத்து இதில் இல்லாதது போல்
    எனக்கு ஒரு அபிப்பிராயம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ். ரமணி அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

      // எது குறித்து எழுதினாலும்
      எப்போதும் இருக்கும்
      ஒரு தீர்க்கமான கருத்து இதில் இல்லாதது போல்
      எனக்கு ஒரு அபிப்பிராயம் //

      என்று நீங்கள் சொன்னது சரிதான்.

      ஒரு வங்கி ஊழியனாக இருந்த அனுபவத்தில், கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் இந்த அரசு, 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிப்பு செய்ததில் குளறுபடி செய்து விட்டதாகவே நினைக்கிறேன். கருப்புப் பணம் ஒழிப்பு என்ற பெயரில் பண பரிவர்த்தனையைக் குறைப்பு செய்ததில் சரியான திட்டமிடல் இல்லை. பொதுமக்களை ரொம்பவே படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

      எனவே இந்த திட்டத்தைப் பற்றிய ஒரு முடிந்த முடிபாக என்னால் எழுத இயலவில்லை.

      Delete
  6. காட்சி, கருத்து அருமை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  7. உண்மைதான் ஐயா
    இந்தியப் பொருளாதார்மே பணப் பொருளாதாரம்தானே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. இனிமேல்தான் உங்களது வெற்றிவேல் முருகன் பக்கம் வர வேண்டும்.

      Delete
  8. சிறு வியாபாரிகள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர் , பெரிய சூப்பர் மார்கெட்டுகள் பாதிக்கப் பட்டுள்ளன ஆனால் அவ்வளவாக இல்லை

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல பெரிய சூப்பர் மார்கெட்டுகள் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை; காரணம், அவர்களது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டெபிட்/கிரிடிட் கார்டு ‘ஸ்வைப்’ செய்பவர்கள்.

      Delete
  9. நிலையை மிக நுணுக்கமாகப் பகிர்ந்தமைக்கு நன்றி. இயல்பு நிலை எப்போது திரும்புமோ..?

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மேலே சொன்னதைப் போல “நாட்கள் (வருடங்கள்) தான் அதிகமாகும்” ஆனால் இந்த அரசு கவுரவம் பார்க்காது 500 மற்றும் 100 ரூபாய் தாள்களை அதிக அளவில் விரைந்து புழக்கத்தில் விட்டால் நிலைமை சீக்கிரம் சீரடையலாம். ஏனெனில் புதிய 500 ரூபாய்கள், பழைய நோட்டுக்களைப் போலவே மீண்டும் பதுக்கப் படுகின்றன.

      Delete
  10. வணக்கம்
    நல்ல பதிவு

    தீர்க்கமாய் யோசிக்க விடாமல் டென்சன் செய்யும் அரசு இல்லையா இப்படித் தான் பதிவிட முடியும்

    கழிப்பறைக்கு கட்டணமே தவறு இதில் கார்டு வேறையா ..

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் எஸ்.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. காலையில் எழுந்தவுடன், இன்றைக்கு என்ன அதிரடி செய்தி, இன்றாவது வங்கியில், கணக்கில் உள்ள தேவைப் பட்ட பணம் எடுக்க முடியுமா என்றே நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கும் வேளையில், மோடியின் திட்டம் இன்னதுதான் என்று முடிந்த முடிபாக இல்லாத நிலையில், நான் மட்டும் தீர்க்கமாக என்னத்தைச் சொல்ல முடியும்? அதிலும் இந்த திட்டத்தில் உள்ள குளறுபடி பற்றி பேசினாலேயே ஏதோ தேசநலனுக்கு எதிரானவன் போல் பேசுகிறார்கள்.

      Delete
  11. நேற்று ஒரு இரண்டாயிரம் ரூபாய் எடுப்பதற்காக இரண்டு மூன்று மணி நேரம் நானும் என்னுடைய நண்பர் ஒருவருமாய் ஸ்கூட்டரில் அலைந்தோம். கிட்டத்தட்ட 99 சதவிகித ஏடிஎம்களில் No cash போர்டு தொங்கவிட்டு பாதி ஷட்டரை மூடி வைத்திருந்தார்கள். ஒரு பனிரெண்டு பதின்மூன்று ஏடிஎம்கள் அலைந்த பிற்பாடு ஒரேயொரு ஏடிஎம்மில் க்யூவைப் பார்த்து நின்றோம். நாற்பந்தைந்து நிமிடம் நின்ற பிறகும் ஒரு மூன்று பேரோ நான்கு பேரோதான் உள்ளே போய் வந்தார்கள்(இயந்திரம் ரொம்பவும் ஸ்லோவாம்)நாங்கள் உள்ளே போக எப்படியும் பகல் இரண்டு மணி ஆகும் என்று தெரிய வரிசையை விட்டு பணம் எதுவும் எடுக்காமலேயே வீட்டிற்குத் திரும்பி விட்டோம்.
    மக்களுக்கு நல்லது செய்வதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறதே தவிர, இப்படிப் படுத்தி எடுப்பதற்கு அல்ல. தன்னுடைய குடிமக்களை இந்த அளவு வாட்டி வதைக்கும் அரசு வேறு எதுவும் இல்லையென்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களைப் போலவே எல்லோரும், பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைவதைப் போல, ஒரு சிறிய தொகைக்காக ஒவ்வொரு ஏ.டி.எம்மாக அலையவேண்டி உள்ளது.

      ஒவ்வொரு நாளும் கோடிக் கணக்கில் பட்டுவாடா செய்த வங்கிகளுக்கு, ஒருநாளைக்கு இவ்வளவுதான் பணப் பட்டுவாடா (PAYMENTS) என்று மேலே இருந்தே ’கோர் பாங்கிங்’ சிஸ்டம் வழியே வரைப்படுத்தி விடுகிறார்கள். சில வங்கி கிளைகளுக்கு இரண்டு லட்சம் மட்டுமே என்றால் நிலைமை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

      இன்றைய நிலவரம். ஒரு வங்கி கிளையில் இந்த வாரத்திற்கு ஒரு கணக்கில் மொத்தமாக ரூ 24000/= எடுத்துக் கொள்ளலாம். அதிலும் 2000 ரூபாய் முழு தாள்கள் மட்டுமே. சில்லரை கிடைப்பதில்லை. அதிலும் இரண்டு அல்லது மூன்று என்று பலமுறை எடுத்தால், லிமிட் ரூ 20000/= மட்டுமே. ஏற்கனவே ஏ.டி.எம்மில் ரூ 2000/= எடுத்து இருந்தால், இதுவும் இந்த லிமிட்டிற்குள் வந்து விடும்.

      நீங்கள் குறிப்பிடுவதைப் போல “ தன்னுடைய குடிமக்களை இந்த அளவு வாட்டி வதைக்கும் அரசு வேறு எதுவும் இல்லை “

      ( அய்யா, நீங்கள் எழுதிய, ’என்றென்றும் சுஜாதா’ என்ற நூல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரண்டு புத்தகத் திருவிழாக்களிலும், ஆனந்தவிகடன் ஸ்டால்களில் இல்லை. விகடனுக்கே எழுதி வாங்கலாம் என்று இருக்கிறேன். இது ஒரு தகவலுக்காக மட்டுமே )

      Delete
  12. யாரையும் காயப்படுத்தாமல் மிக நாசூக்காக எழுதி பதிவிட்டது போல இருக்கிறது இருந்தாலும் சொல்ல மனதில் நினைத்ததை அழகாக சொல்லி சென்று இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. பத்திரிகை ரிப்போர்ட்டர் அல்லாத என்னைப் போன்றவர்கள் இப்படித்தான் எழுத முடியும்.( கடிதோச்சி மெல்ல எறிக - திருக்குறள் )

      Delete
  13. கறுப்பு பணத்தை ஒழிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை ஆனால் அதை திட்டமிடாமல் செயல்படுத்திதைதான் பலரும் வெறுக்கின்றனர் & விமர்சிக்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எல்லோருடைய பொதுவான கருத்தும் இதுதான்.

      Delete
  14. நல்ல பகிர்வு.

    கழிப்பறையில் டெபிட் கார்டு! :) வெளிநாட்டில்சில இடங்களில் இருப்பதாகப் படித்திருக்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின், கருத்தினுக்கும், தகவலுக்கும் நன்றி.

      Delete
  15. படிப்பறிவு குறைந்த நாட்டில் இது வெற்றி அடையாது :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களே, இந்த திட்டம் வெற்றி அடைவது இருக்கட்டும், அவரது கட்சிக்காரர்களே எல்லாம் உன்னால்தான் என்று மாற்றி யோசிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. COMMON MAN-- ஸ்ரீமான் பொதுஜனத்திற்கு-- ஏகப்பட்ட பெருமை. தேர்தல் சமயங்களில் தனிக்கவனம் பெறுவதில் கூட இல்லாத பெருமை இப்போது. எல்லாரும் அவன் நலனில் தான் எவ்வளவு அக்கறை கொள்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க பூரிக்கிறது அவன் நெஞ்சம். மத்தியில் ஆளும் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள், எல்லாம் உன் நன்மைக்காகத் தான் முழக்கமிடுகிறது.
    கள்ளப்பணம் கறுப்புப் பணத்தை ஒழித்து விட்டால் விலைவாசி குறையும்; ஏழைகளின் முதுகில் காலதிகாலம் ஏற்றி வைத்திருக்கும் பளுவை இறக்கத்தான் இத்தனை ஏற்பாடும், நடவடிக்கைகளும் என்கிறது. உன் எதிர்கால விடியலுக்காக இப்பொழுது நீ படும் சின்னச் சின்ன துன்பங்களைப் பொறுத்துக் கொள்' என்று
    எதிர்காலக் கனவை இப்பொழுதே மனதில் விதைக்கிறது. .. எதிர் கட்சிகளோ,
    'ஐயகோ! என்ன அநீதி இது?' என்று ஆர்ப்பரிக்கிறது. வங்கி வாசலில், ஏடிஎம் வாசலில், பெட்ரோல் பங்கில், சுங்கச் சாவடியில் சாதாரண மக்கள் கால் கடுக்க மணிக் கணக்கில் க்யூவில் நிற்கிறார்களே, இவர்கள் படும் துன்பத்தை கேட்பார் இல்லையா?' என்று கரிசனம் கொள்கின்றன.

    நாடாளுமன்ற நடவடிக்கைகள் கூட அவனுக்காக ஒத்தி வைக்கப்படுவதில் அவனுக்கு வருத்தம் தான். இருந்தாலும் நாம் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள் என்ற சுய மதிப்பீட்டில் எதுவும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருக்கிறான். சில மாதங்கள் போகட்டும், யார் சொல்வது நடக்கப் போகிறது என்று அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொள்வதிலும் இப்பொழுது ஆர்வம் கூடியிருக்கிறது... ஆக, சில மாதங்கள் போகட்டும்...

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இந்த பொதுஜனம் மீதான அக்கறை என்பதில், எல்லா அரசியல் கட்சிகளின் சுயநலமும் ஒளிந்தே இருக்கிறது என்பதில் ஐயமே இல்லை. இந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே நுரை தள்ளி விட்டது. இன்னும் சில மாதங்கள் என்றால்?

      Delete
  18. இந்தியா போன்ற நாட்டில், எல்லாப் பிரச்னைகளையும் ஏதோ ஒரு வழியில் திசை திருப்ப வாய்ப்புகள் உள்ள நாட்டில், ஒரு மாபெரும் மாற்றம் கனிந்த கனியாய் மடியில் விழுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதும் தாங்கள் அறிந்ததே. அந்த பொற்காலத்தில் யார் ஆட்சியில் இருந்து இப்பொழுது ஊன்றப்போகும் விதைக்கான பலனை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதும் இப்பொழுது தெரியாது. உதாரணத்திற்கு இந்திரா காந்தி அம்மையார் இந்த தேசத்தின் உயிர் நாடியான வங்கிகளை தேசியமயமாக்கியது இன்றைய பிரதமர் செயல்படுவதற்கு அருமையான களமாக, தளமாக இப்போது இருப்பது தெரிகிறது. அவர் விதைத்த விதை இவருக்கு பலன் தருகிறது. ஒரு பெரும் பொருளாதார மாற்றத்திற்காக இவர் விதைக்கும் விதை மரமாகி யார் காலத்தில் பூத்துக் குலுங்கப் போகிறதோ அறியோம்.

    ஆனால் மிகக் குறைந்த அளவில் வாழ்க்கையின் மலர்ச்சி கண்ணுக்குத் தென்பட்டு யதார்த்தமாய் கைக்குத் தட்டுப்பட்டாலே இப்பொழுது யாரின் சிரமங்களுக்காக வேதனைப்படுகிறோமோ அந்த பொதுஜனம் மிகவும் மகிழ்ச்சி கொள்வர். சின்ன சந்தோஷத்தையும் ஓட்டுப் பெட்டியில் பிரதிபலிக்கும் நெகிழ்ச்சி உள்ளம் கொண்டவர்கள் அவர்கள். அதனால் அதற்கான எந்த வாய்ப்பையும் இழக்க எந்த அரசியல் கட்சியும் தயாரில்லை. இத்தனை இடைஞ்சல்களையும் வென்று, அந்த பொதுஜனத்தின் அபிமானத்தை யார் பெறப் போகிறார்கள் என்பதையும் காலத்தின் கையில் விட்டு விடுங்கள்.

    அரசின் இப்போதைய நடவடிக்கைகள் முற்றிலும் நாட்டின் பொருள்ளாதார விஷயங்கள் சம்பந்தப்பட்டவை. அதனால் அவற்றை அந்தத் தலைப்பில் தான் விவாதித்து அதன் சாதக பாதகங்களை வெளிப்படுத்த வேண்டுமே தவிர நிச்சயம் இந்த முறை ஏற்புடையதல்ல. நாமும் அந்த பொதுஜனத்தில் ஒருவராகையால் வெற்றியடைவோருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி தீர்ப்பெழுதுவோம்.

    இப்பொழுதிய இந்த நடவடிக்கைகளின் சாதக பாதகங்கள் என்ன என்று பொருளார ரீதியான விவாதங்களை வரவேற்போம். அத்தகைய விவாதங்கள் கலங்கரை விளக்கு மாதிரி நமக்கு சரியான வழியைக் காட்டட்டும்.

    இதுவே நான் சொல்ல வந்தது. காலத்திற்கேற்பவான நல்ல ஒரு பதிவினை இட்டு என் கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பளித்த என் அருமை நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. (ஒரு திருமணத்தை முன்னிட்டு, நான் நேற்று (04.12.16) மயிலாடுதுறை சென்று விட்டதால் வலைப்பக்கம் உடனே வர இயலவில்லை.)

      Delete
  19. நல்ல பதிவு! கழிப்பறைக்குக் கார்டா! அப்படியெல்லாம் வந்தால்...கழிப்பறைக்குச் சில்லறைதானே தேவைப்படும்..

    நடைபாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகள் அதாவது கார்டு தேய்க்கும் வசதி இல்லாதவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்தான். ஆனால் பெரிய பெரிய சூப்பர்மார்க்கெட்டுகள் எந்தவிதபாதிப்பும் அடையவில்லை. காரணம் கார்டு மட்டுமில்லை. இப்போது சில கம்பெனிகளில், எல் ஐ சி போன்ற நிறுவனங்களில் வழங்கப்படும் உணவுக் கூப்பன்களும் காரணம். அவை இப்போதைய காஷ்லெஸ் சூழ்லுக்கு உதவுவதாக இருந்தாலும், அந்தக் கூப்பன்கள் எல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனம் அல்லது பன்னாட்டு நிறுவனத்திற்குத்தான் கமிஷன் செல்கிறது... கார்டு தேய்ப்பதில் கமிஷன்கள் போகிறதே...இதைப் பார்க்கும் போது அந்நியன் வசனம்தான் நினைவுக்குவருகிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஆசிரியர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

      Delete