நமது இந்தியாவின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், திடீரென்று
ஒருநாள் இரவு (08.11.2016) ” இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள்
செல்லாது” என்று . டீவியில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறார். அந்த நொடியில், இந்தியாவே
பரபரப்பாகி விட்டது. மோடியின் இந்த திட்டத்தை ஆதரித்தவர்களும் எதிர்த்தவர்களும் என்று
வழக்கம்போல இரு அணியாக பிரிந்து விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள்:
இந்த தடாலடி நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், நடுத்தர
ஏழை எளிய மக்களே. ஆனால் ” இந்த கஷ்டங்கள் எல்லாம் சில நாட்களில் சரியாகி விடும். நாட்டு
நலனுக்காக இதனை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் “ என்பது மோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள்
சொல்லும் வாதம்.
‘கரன்சி சர்ஜிக்கல் அட்டாக்’
என்ற தலைப்பில் ‘தினகரன்’ நாளிதழ் எழுதியுள்ள தலையங்கத்தில் உள்ள தகவல்கள் இவை.
// பிரதமரின் இந்த அதிரடி அறிவிப்பால்,
இந்தியா முழுவதும் மக்கள் பீதியிலும், அதிர்ச்சியிலும் உறைந்தனர். உடனே தங்களிடம் இருந்த
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஏடிஎம்மில் டிபாசிட் செய்ய குவிந்தனர். சாதாரண மக்கள், பாமரர்கள்,
ஏழைகள் தான் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது
என்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததால், ரூ.500 ஒற்றை நோட்டை வைத்துக்கொண்டிருந்தவர்கள்,
ஓட்டலில் உணவு சாப்பிடவோ, வேறு அத்தியாவசிய பொருட்கள் வாங்கவோ முடியாமல் திண்டாடினர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் தங்கள் பணத்தை எப்படி மாற்றுவது, தங்களுக்கு
தேவையான பொருட்களை எப்படி பெறுவது என்ற குழப்பத்திலும், பயத்திலும் நிம்மதி இழந்தனர்.
பெட்ரோல் பங்க், ரயில் நிலையம், விமான நிலையத்தில் ரூ.500, ரூ.1000 நவ.11 நள்ளிரவு வரை செல்லும் என்று அறிவித்திருந்தாலும் அங்கும் அவர்கள் நோட்டுகளை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். பாதி பெட்ரோல் பங்க்குகள் சில்லரை இல்லாததால் மூடிவிட்டனர். சில இடங்களில் ரூ.500க்கும் பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தினர். இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இவர்கள் ஒரு புறம் என்றால், ஏழைகள் கையில் சில்லரையாக இருந்தால் பாதுகாப்பது சிரமம் என்று ரூ.500 நோட்டாக மாற்றி வைத்திருந்தனர். அவர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிழப்பாகவே இருந்தது. தங்கள் அன்றாட தேவைக்கு அத்தியாவசிய பொருள் வாங்க தங்களது ஒற்றை நோட்டை மாற்ற படாதபாடு பட்டுவிட்டனர்.//
பெட்ரோல் பங்க், ரயில் நிலையம், விமான நிலையத்தில் ரூ.500, ரூ.1000 நவ.11 நள்ளிரவு வரை செல்லும் என்று அறிவித்திருந்தாலும் அங்கும் அவர்கள் நோட்டுகளை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். பாதி பெட்ரோல் பங்க்குகள் சில்லரை இல்லாததால் மூடிவிட்டனர். சில இடங்களில் ரூ.500க்கும் பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தினர். இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இவர்கள் ஒரு புறம் என்றால், ஏழைகள் கையில் சில்லரையாக இருந்தால் பாதுகாப்பது சிரமம் என்று ரூ.500 நோட்டாக மாற்றி வைத்திருந்தனர். அவர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிழப்பாகவே இருந்தது. தங்கள் அன்றாட தேவைக்கு அத்தியாவசிய பொருள் வாங்க தங்களது ஒற்றை நோட்டை மாற்ற படாதபாடு பட்டுவிட்டனர்.//
(நன்றி: தினகரன் 10.11.2016)
இது மாதிரியான மக்கள் பாதிப்புகள் இல்லாமல், இந்த திட்டத்தை நிறைவேற்ற
முடியாதா என்பது பலரது கேள்வி.
ஏற்கனவே உள்ள சட்டங்கள்:
ரூ 20000/= இற்கு மேலுள்ள பண பரிவர்த்தனைகள், காசோலை மூலமாகவே
நடைபெற வேண்டும் என்பது விதி. இதிலும் தொடர்ச்சியான பட்டுவாடா மற்றும் சரக்குகளை கையாளும்போது உண்டான
வாடகை அல்லது குத்தகை போன்றவற்றிற்கு ரூ35000/= வரை அனுமதி உண்டு.
// Section 40A(3)(a) of the
Income-tax Act, 1961 provides that any expenditure incurred in respect of which
payment is made in a sum exceeding Rs.20,000/- otherwise than by an account
payee cheque drawn on a bank or by an account payee bank draft, shall not be
allowed as a deduction.
However if payment is being made
for plying, hiring or leasing goods carriages then Limit for these section is
Rs 35000/-,instead Of 20000/- //
அண்மைக் காலமாக, வங்கியில் டெபாசிட் செய்வதில் அதிக கட்டுப்பாடுகள்
உள்ளன. மேலும் தங்கநகை வியாபாரம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பான் எண் ( PAN ) கட்டாயமாக்கப்
பட்டுள்ளது. சிறு வியாபாரிகளுக்கு TIN என்பது கட்டாயம். ஆனால் எத்தனைபேர் உண்மையான
விவரங்களை கொடுத்துள்ளனர் என்று தெரியாது. ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என்று
அறிவிப்பு வந்தவுடன், நள்ளிரவிலும் நகைக்கடைகளில் பலரும் குவிந்தனர் என்பது செய்தி.
இதில் இந்த வியாபாரிகளுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது யோசிக்க
வேண்டிய விஷயம்.
பொதுவாகவே, நமது இந்தியர்களுக்கு, பணத்தை கைநிறைய வாங்குவது, ஆசை
தீர அடுக்கி வைத்துப் பார்ப்பது என்பதில் அதீதமான ஆர்வம் அதிகம் இருப்பதை மறுக்க முடியாது. இன்னும், இந்த காலத்தில் ‘செக் மோசடி’ என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. மேலும் வருமானவரிச்
சட்டம் என்பது மக்களுக்கு கடுமையானதாக, சுமையாகவே உள்ளது; எளிதானதாக இல்லை. இதனாலும் மக்கள் நேரிடையான
பணபரிவர்த்தனைகளையே (CASH TRANSACTIONS) விரும்புகின்றனர். கறுப்புப் பணம் உண்டாக இதுவே
முக்கிய காரணம்.
மோடியின் அதிரடி:
என்னதான் சட்டங்கள் இருந்தாலும், நடைமுறைப் படுத்தும் முறையில்
நேர்மை, கண்டிப்பு இருந்தாலொழிய அவை சாத்தியம் இல்லை. மேலும் நமது நாட்டில் அரசியல்
குறுக்கீடு என்பது பற்றி சொல்ல வேண்டியது இல்லை. எனவே சட்டங்களை அமுல்படுத்துவதில் உள்ள
நடைமுறைச் சிக்கல்களை எண்ணி மோடி நிர்வாகம் இந்த அதிரடியில் இறங்கி இருக்கலாம்.
எனினும் எதிர்பார்த்தற்கு மாறாக நடுத்தர ஏழை எளிய மக்கள் அதிகம்
பாதிக்கப்பட்டனர். (Misfire) இவற்றைத் தவிர்க்க கள்ள நோட்டுகள் என்ற
காரணம் காட்டி இரண்டு மாதங்களுக்கு முன்னரே, ATM செண்டர்களில் 500 ரூபாய், 1000 ருபாய்
நோட்டுகளை வைப்பதை தடுத்து விட்டு, 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் வைத்து, ATM இல் பணம்
எடுப்பதை கட்டுப்படுத்தி இருக்கலாம். மேலும் கம்பெனி அல்லாத ஊழியர்களுக்கு (கட்டிட
தொழிலாளர்கள் போன்றவர்கள்) சம்பள பணமாக கொடுப்பவர்கள்
நூறு ரூபாயாக மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் சட்டம் போட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் இவ்வளவு நிலைமை வந்து இருக்காது.
பாதிக்கப் பட்ட, சாதாரண நடுத்தர வர்க்கத்தில் நானும் ஒருவன் என்பதனால், இன்னும் நிறைய எழுதலாம். இப்போதைக்கு இதுபோதும் என்று நினைக்கிறேன்.
தொடர்புடைய எனது முந்தைய
பதிவுகள்:
ரூ500 ரூ1000 நோட்டுகள் செல்லாது http://tthamizhelango.blogspot.com/2016/11/500-1000_9.html
ஐநூறு, ஆயிரம் என்றால் நம்பர் வேண்டுமாம் http://tthamizhelango.blogspot.com/2015/11/blog-post_22.html
ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவு) http://tthamizhelango.blogspot.com/2013/06/101.html
அரசாங்கம் எந்தவொரு அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனால் சிலர் மிகவும் பாதிக்கப் படுவார்கள்தான்.
ReplyDeleteஇருப்பினும் நம்மைப்போன்ற ஏழைபாழைகள் + நடுத்தர மக்களுக்கான இந்த பாதிப்பு ஓரிரு நாட்களுக்கு மட்டுமே இருந்துள்ளது. இப்போது ஓரளவுக்கு சகஜ நிலை திரும்பியுள்ளது. சாதாரண பொது ஜனங்கள் யாருக்கும் இதனால் ஒன்றும் பெரிய கஷ்டங்களோ, நஷ்டங்களோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார சீர் திருத்தங்களைக் கருத்தில் கொண்டு, இதனை அனைவரும் இப்போது வரவேற்றுத்தான் ஆக வேண்டும் என்பதே என் தாழ்மையான அபிப்ராயமாகும்.
தனக்குப் பல்வேறு எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்திருந்தும், இதில் மிகுந்த ஆர்வம் காட்டி துணிந்து இரவோடு இரவாக, இதனைப் பிடிவாதமாக நடைமுறைக்குக் கொண்டு வந்து அமுலாக்கம் செய்துள்ள பிரதமரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இதனால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நன்கு ஆராய்ந்து, முன்கூட்டியே திட்டமிட்டு, 2-3 நாட்களுக்குள் அனைத்துத் தரப்பினருக்கும் எந்தவொரு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வுகான, எல்லாவிதமான முன்னேற்பாடுகளையும் செய்துள்ளார்கள் என்பதையும் நாம் பாராட்டியே தீரவேண்டும்.
அனைவரையும் யோசிக்க வைக்கும் தங்களின் இந்தப்பகிர்வுக்கு என் நன்றிகள்.
கடைசிக்கு முன் உள்ள பத்தியில் (பாராவில்), கடைசியிலிருந்து எட்டாவது வார்த்தையில் ஓர் எழுத்துப்பிழையாகி விட்டது. அதனை மாற்றிப்படிக்கவும்.
Deleteதீர்வுகான = தீர்வு காண
அன்புள்ள V.G.K அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி. நான் எனது கருத்தினையும், மக்கள் படும் கஷ்டத்தினையும் சொன்னேன். நீங்கள் உங்கள் கருத்தினை சொன்னீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் இருவேறு கருத்து இருப்பது என்பது இயல்பானது. ’அபிப்பிராய பேதம்’ என்றும் சொல்லுவார்கள்.
Deleteஎன்னுடைய இப்போதைய கஷ்டம் இதுதான். மோடி அதிரடி நடவடிக்கையினை வெளியிட்ட அன்று, என்னிடம் இருந்த மொத்தப் பணமே நாலாயிரத்திற்கும் குறைவு. அவற்றில் ஐந்து ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். மூன்று நூறு ரூபாய்கள் மீதி 50 ரூபாய். 10 ரூபாய். இந்நிலையில் 10 ஆம் தேதி, எனது மனைவி, சென்னையில் உள்ள எங்கள் மகள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் அவர் அவரது வங்கிக் கணக்கிலிருந்து, வீட்டு செலவு, ஏனைய செலவுகளுக்காக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து வைத்து இருந்தார். எல்லாமே ஐநூறு ரூபாய் நோட்டுகள். வரும் ஞாயிறு வரை நானும், எனது மகனும் ஓட்டலில்தான் சாப்பிட வேண்டும். நல்லவேளையாக எனது மகனிடம் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன. இன்றுவரை மேலே சொன்ன செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஐநூறு ரூபாய் நோட்டுகள் ரூ 25000/= ஐ இதுவரை வங்கியில் டெபாசிட் செய்ய முடியவில்லை. இன்று்தான் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், ஒன்றரை மணிநேரம் கியூவில் நின்று நாலாயிரத்துக்கு நூறு ரூபாய் நோட்டுகள் வாங்க முடிந்தது. எனக்கு ஒரு மாதிரியான கஷ்டம் என்றால், மற்றவர்களுக்கு வேறு மாதிரி.
Dear Sir, தங்களின் அன்றைய நிலைமையை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். யாருக்குமே இது மிகவும் கஷ்டம்தான். நானும் இதனை அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.
Deleteநாம் உள்ளூரிலேயே இருக்கிறோம். ஒருவருக்கொருவர் பழகிய தெரிந்த நண்பர்களாகவும் இருக்கிறோம்.
தாங்கள் எனக்கு ஓர் ஃபோன் செய்து இதனைச் சொல்லியிருந்தீர்களானால், நிச்சயமாக உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அன்று செய்திருக்க முடியும். இதுபோன்ற கிரிடிக்கலான சமயத்தில் உதவாமல் அப்புறம் என்ன பெரிய நட்பு இருக்க முடியும்?
இனியாவது, தயக்கம் ஏதுமின்றி, என்னை தங்களின் கவனத்தில் வைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பிரியமுள்ள VGK
அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய அன்பான, ஆதரவான வார்த்தைகளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.
Delete//பொதுவாகவே, நமது இந்தியர்களுக்கு, பணத்தை கைநிறைய வாங்குவது, ஆசை தீர அடுக்கி வைத்துப் பார்ப்பது என்பதில் அதீதமான ஆர்வம் அதிகம் இருப்பதை மறுக்க முடியாது.//
ReplyDeleteஇது மறுக்க முடியாத உண்மைதான். சுபாவத்தில் நானேகூட அப்படித்தான்.
அவசர ஆத்திரத்திற்கு கை வசம் நம்மிடம் (ரெடி கேஷ் ஆக) பணம் இல்லாவிட்டால், ஒரு பிரயோசனமும் இல்லை.
வங்கிகளில் நம் பணம் எவ்வளவுதான் இருந்தாலும், அதெல்லாம் ஆபத்துக்கு ஒருபோதும் உதவாது. அவசர ஆத்திரத்திற்குப் பயன்படாது.
எப்போது போனாலும் வங்கிகளில் கூட்டம் + அங்கு பணி புரிவோரின் அலட்சியம் நம்மை வெறுப்பேற்றி வருவதாக உள்ளது.
மேலும் ATM போன்றவைகளில் பணம் நம் கைக்குக் கிடைக்கும் வரை மனம் ஒரே ’திக்-திக் .... பக்-பக்’ எனத் துடிக்கத்தான் செய்கிறது.
இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றில் தொழில்நுட்பங்களைப் புகுத்தி சரி செய்து வருகிறார்கள். அவையெல்லாம் நமக்குப் புரியவும் தெரியவும் நீண்ட நாட்கள் ஆகக்கூடும். அதற்குள் நம் வாழ்க்கையே முடிந்து போகும்.
அன்புள்ள V.G.K அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Delete"நம்மைப் போன்ற ஏழைபாழைகள்" மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களே நீங்கள் சொல்வது சரிதான். நாம் அனைவரும் பாலுக்கு சர்க்கரை இல்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் மாடி வீட்டு ஏழைகள்.
Deleteஇந்த பாதிப்பை நம்மைப்போன்றவர்கள்
ReplyDeleteசகித்தே ஆக வேண்டும்....
பல பண முதலைகள் இதனால்
ஒழிக்கப் படுவார்கள்...
நண்பர் அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமேலும் கம்பெனி அல்லாத ஊழியர்களுக்கு (கட்டிட தொழிலாளர்கள் போன்றவர்கள்) சம்பள பணமாக கொடுப்பவர்கள் நூறு ரூபாயாக மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் சட்டம் போட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் இவ்வளவு நிலைமை வந்து இருக்காது.//
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இது நடைமுறை சாத்தியமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. நான் படித்த ஒரு செய்தி. மும்பையில் வேற்று மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களுக்கு வங்கி கணக்கு இல்லாததால் தாங்கள் சேமித்த பணத்தை 500 மற்றும் ரூபாய் தாட்களாகவே மாற்றி வைத்துக்கொண்டு ஊருக்கு போகும்போது வீட்டிற்கு தரலாம் என்று இருந்தார்களாம். இப்போது என்ன செய்வது என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்களாம். என்னதான் நாம் நூறு ரூபாய் தாளாக கொடுத்தாலும் அவர்கள் சௌகரியத்திற்காக அதிக மதிப்புள்ள ரூபாய் தாட்களாக மாற்றுவதை தடுக்க இயலாது.
மும்பையில், பிற மாநிலத் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தைச் சொன்ன, அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.
Deleteகட்டுரையின் தலைப்பு மாறி விட்டதோ?.. உள்ளடகத்திற்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறதே?..
ReplyDeleteமரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கட்டுரையின் தலைபப்பு மாறி விடவில்லை. கறுப்புபணத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் அதனால் மக்கள் பட்ட கஷ்டங்களோடு,அரசு விதிமுறைகளை சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.
Deleteதகவலுக்கு நன்றி. டெபிட் கார்டுகள், காசோலைகள் பரிவர்த்தனை அதிகமாக புழக்கத்தில் வர வேண்டும். கார்டு மூலம் நகைகள், டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோய்கப் பொருட்கள், மருத்துவ பில் குடும்பத்துடன் வார இறுதி ஹோட்டல் விஜயங்கள், மற்றும் கேளிக்கை செலவுகள் எல்லாம் நடக்கிற மாதிரி நிலை வர வேண்டும். கார்டுகளை உபயோகிக்கும் பொழுது அதற்காக கூடுதல் கட்டணம் எதையும் யாரும் பெறக் கூடாது என்று கண்டிப்பான சட்டம் வர வேண்டும். வருமானத்தை வங்கியில் வைத்துக் கொண்டு செல்வு செய்தல் என்ற ஏற்பாடு மக்களுக்கும் தேசத்திற்கும் நன்மை பயக்கும்.
Deleteஇதெல்லாம் செய்தாலே வெகுஜன மக்களுக்கு விலை வாசி உயர்வு, அளவுக்கு அதிகமாக செலவு போன்ற பிரச்னைகளுக்கு விடிவு கிடைக்கும்.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி.
Deleteஇவ்வளவு கஷ்டப்படுத்தியதற்கு பலன் இருக்கும் என்றால் சந்தோஷப் படலாம் ,பார்ப்போம் :)
ReplyDeleteநண்பர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நிச்சயம் அரசாங்கத்திற்கு உரிய பலன் கிடைக்கும்.
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteஉலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
https://plus.google.com/u/0/communities/110989462720435185590
கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅய்யா... சொல்ல வந்ததை முழுமையாக சொல்லவில்லை என்பதையும் முடிவில் சொல்லி விட்டீர்கள்... தொடர்க... நன்றி...
ReplyDeleteநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இன்னும் சொல்லலாம். ஆனால் நண்பர்கள் மோடிக்கு எதிரான கருத்தாக எடுத்துக் கொள்வார்கள்.
Delete18-ம் தேதிவரை ஏடிஎம்மில் ரூ 2000/வரை எடுக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் நான் போன ஐந்தாறு ஏடிஎம்களில் பணமே இல்லை என்னும் அறி விப்பு. திட்டங்கள் சரியாக செயல் படுத்தப் பட வேண்டும் வயதானவர்கள் வங்கிகளில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. ப்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் G.M.B அய்யா அவர்களுக்கு நன்றி. இன்று இரவுதான் சில ATM களில் பணத்தை லோட் செய்துள்ளார்கள் மக்கள் கியூவில் நின்றார்கள்.
Delete//திட்டங்கள் சரியாக செயல் படுத்தப் பட வேண்டும்//
Deleteமிகவும் அத்தியாவசியம்
இந்தியா இங்கே தான் தவறு செய்கிறது.
பொதுவாகவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு ஸ்பெஷல் கவுன்டர்கள் பொதுத்துறை மற்றும் அரசுத்துறையில் வைக்கவேண்டும். எளியவர்கள் பெயரில் எத்தனை கட்டிட ownerகள் கொடுத்த பணம் வெள்ளையாகப் போகிறதோ
ReplyDeleteநண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதகவல்களுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteநண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
Deleteவிரிவான தகவல்கள் நன்றி அய்யா
ReplyDeleteதம +
ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி.
Deleteமேலே ரூ35000/= வரை அனுமதி உண்டு என்ற விதிவிலக்கில் விமானச்சேவை என்பதனை நீக்கியுள்ளேன்.
ReplyDeleteகடினமான அந்த நேரத்தை வெற்றிகரமாகக் கடந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். அதற்கான பலன் கிடைத்தால் சரிதான். இதனால் சாதாரண வியாபாரிகள் வீட்டில் வைத்திருக்கும் பணம் வங்கிக்கு சென்று சேரும் என்பதைத் தவிர பெரிய முதலைகளை இந்த நடவடிக்கை என்ன செய்ய முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. சில இடங்களில் பணத்தைத் தூக்கிப் போட்டுள்ளனர். சில இடங்களில் எரித்துள்ளனர்.
ReplyDeleteமுன்பு கையில் கட்டாகப் பணம் சம்பளமாக வாங்கிய மகிழ்ச்சியிலிருந்து விடுபட முடியாத நிறைய பேர்கள் இன்னும் வங்கியிலிருந்து மொத்தமாக பணத்தை டிரா செய்து செலவு செய்யும் பழக்கம் இன்னும் சிலரிடம்- நான் உட்பட - உள்ளது. அவர்களுக்கெல்லாம் அதிகப்படி கவலை,வேலை!
நண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வீட்டில் பணம் வைத்து இருந்தால், வீட்டில் ஆள் இல்லாத சமயம், திருடன் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கிறான் என்று, வங்கிக் கணக்கில் வைத்தால், அரசாங்கம் என்ன சட்டம் கொண்டு வருமோ என்று யோசிக்க வேண்டி உள்ளது.
Deleteஇந்த பொருளாதார களையெடுப்பில் சில சிரமங்கள் நமக்கு இருந்தாலும் அதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கு தெரிந்து மிக அதிக அளவில் பாதித்தவர்கள் திருமணம் போன்ற சுபகாரியங்களை வைத்திருப்பவர்கள்தான்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி!
நண்பர் எஸ்.பி.எஸ். அவர்களுக்கு? எதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள்? ஒரு ஐநூறூ ரூபாய் மட்டும் வைத்துக் கொண்டு, நூறு ரூபாயாக இல்லாத காரணத்தால், பலரும் பட்ட கஷ்டத்தைப் பார்த்த பின்னரும் இப்படி சொல்வது வேதனையாக உள்ளது. எவனோ கறுப்பு பணம் வைத்து இருப்பான். அவனைப் பிடிக்க வக்கில்லாமல் மற்றவர்களை படுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
Deleteஇன்றுதான் தங்களின் பதிவைக் கண்டேன். நோக்கம் சரிதான். சில முன்னெச்சரிக்கைகள் எடுத்திருந்தால் மக்கள் இவ்வளவு சிரமப்பட்டிருக்கமாட்டார்கள்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கறுப்புபணம் ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சாதாரண குடிமகனுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுக்க சரியாக திட்டமிடல் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம்.
Deleteஜனவரி 2017 முதல் இது வெற்றிகரமான மாற்றம் என்றால் மிகப் பெரிய மாறுதல்கள் குறிப்பாக விலைவாசியை (பல மடங்கு குறையும்) நாம் அனுபவிக்க முடியும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteநண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. முதலீட்டாளர், தொழிலாளர் என்று இருபக்க நியாயங்களையும் பார்க்கும் வாய்ப்பு பெற்ற உங்கள் கருத்துக் கணிப்பு சரியாகத்தான் இருக்கும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
கவிஞருக்கு நன்றி.
Delete