Sunday, 23 October 2016

2000 ரூபாய் நோட்டுஇன்று (23.10.16) காலை இண்டர்நெட்டைத் திறந்து செய்திகளைப் பார்த்தால், அம்மாவின் செய்திகளை எல்லாம் (அவதூறு, கைது என்று செய்திகள் வந்தவுடன் நிறையபேர் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்) பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு பரபரப்பு செய்தி. அந்த செய்தி இதுதான். ’ விரைவில் வருகிறது 2000 ரூபாய் நோட்டு – அச்சடிப்பு தீவிரம்”

செய்தியும் பின்னணியும்:

பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் நாங்கள் உள்ளூரில் கறுப்பு பணத்தை ஒழிப்போம், வெளிநாடுகளில், குறிப்பாக ஸ்விஸ் வங்கியில் மறைத்து வைத்து இருக்கும் கணக்கில் காட்டாத பணத்தை வெளிக் கொணருவோம் என்று சொல்லி வருகிறார்கள். காலக் கெடுவெல்லாம் வைத்து பார்த்தார்கள்.. ம்ஹூம் … எதிர்பார்த்த விளைவு இல்லை. 

இப்போது புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகளில் ரூ1000 தான் அதிகப்பட்ச மதிப்பு உள்ளது. கறுப்பு பணம் பேச்சு வந்தவுடன், வழக்கம் போல இந்த ஆயிரம் ரூபாயை செல்லாது என்று அறிவித்து விடுமோ? என்ற பயமும், கேள்வியும் பலரது மனதில் உண்டு. இப்படியான நேரத்தில்  2000 ரூபாய் நோட்டு வெளிவரப் போகிறது என்ற செய்தி பத்திரிகைகள் வழியாக கசிய விட்டு இருப்பது, மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஒன் இந்தியா – தமிழ்(இணையம்) வெளியிட்டுள்ள செய்தி இது (கீழே)

// ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி 2,000 ரூபாய் நோட்டுக்கள் மைசூரு கரன்சி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த நோட்டுக்களை விரைவில் புழக்கத்துக்கு விட ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புழக்கத்தில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.//        

தினகரன் (இணையம்) வெளியிட்டுள்ள செய்தி இது (கீழே)

// மும்பை: ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது.  தற்போது அதிகபட்ச மதிப்பாக ஆயிரம் ரூபாய் நோட்டும், இதற்கு அடுத்து 500 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் உள்ளது. கருப்பு பண புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

இதற்கேற்ப, ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு புழக்கத்தை தடுக்க வேண்டும், இவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2,000 நோட்டை வெளியிட உள்ளது. மைசூருவில் உள்ள அச்சகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் புழக்கத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. //

இதே செய்தியை தி இந்து, தினமணி ஆகிய செய்திப் பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன.

செய்தியின் எதிரொலி:

இப்போது புழக்கத்தில் இருக்கும், ரிசர்வ் வங்கி அறிவிக்காத நிலையிலும், பொதுமக்கள் மத்தியில் 50 பைசா நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். இந்த ஐம்பது பைசாவால் ஏற்படும் கடுமையான வாக்கு வாதங்களை பேருந்துகளிலும், பெட்டிக் கடைகளிலும், பெரிய கடைகளிலும் காண முடிகிறது. நல்ல நாளிலேயே நமது மக்கள் தில்லைநாயகமாக இருப்பார்கள். இப்போது இப்படி ஒரு செய்தி கசிய விடப்பட்டுள்ளது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை. 

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்:

ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவு) http://tthamizhelango.blogspot.com/2013/06/101.html  

ஐநூறு, ஆயிரம் என்றால் நம்பர் வேண்டுமாம் http://tthamizhelango.blogspot.com/2015/11/blog-post_22.html  

14 comments:

 1. ஒவ்வொருவரிடமும் உள்ள ஒரு 1000 ரூபாய் நோட்டினை, வங்கிகளில் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டு பெற்றுக்கொண்டு செல்லலாம் என அறிவித்தால், பாமரர் முதல் பணக்காரர்கள் வரை அனைவருமே இதனை வரவேற்பார்கள், என நினைக்கிறேன். :)

  பகிர்வுக்கும், தகவல்களுக்கும் நன்றிகள்.

  மேலும் மேலும் அதிக மதிப்பு வாய்ந்த நோட்டுக்கள் அச்சடிப்பதால், பணத்தின் மதிப்பு குறைவதுபோல ஒரு பிரமை ஏற்படுகிறது.

  நாட்டில் ஏதோ நடந்துட்டுப்போகட்டும். எல்லோரும் நன்றாக இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் அன்பான V.G.K அவர்களின் நகைச்சுவை கலந்த கருத்துரைக்கு நன்றி.

   Delete
 2. அரசியலில் இதுவெல்லாம் சகஜமய்யா.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களுக்கு நன்றி. நமது நாட்டில் எல்லாவற்றிலுமே அரசியல்தான்.

   Delete
 3. அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்கலுக்குத்தானே ஐயா வழிவகுக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. இப்படி பதுக்கியவர்கள் மூட்டை மூட்டையாக பணத்தை எரித்ததையும், கட்டு கட்டாக பணத்தை வெட்டி ஆற்றில் போட்டதையும் செய்தியாக வந்ததை நாம் அனைவரும் படித்து இருக்கலாம்.

   Delete
 4. ஐயாயிரம் ரூபாய் நோட்டை வெளியிடலாமே ,பதுக்கி வைக்க எளிதாக இருக்குமே :)

  ReplyDelete
  Replies
  1. சொல்ல முடியாது. அம்பானிகள், அதானிகள் மட்டும் பயன்படுத்தலாம் என்று ஐந்தாயிரம், பத்தாயிரம் நோட்டுகள் மீண்டும் வந்தாலும் வரலாம். யார் கண்டது. பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

   Delete
 5. மதிப்பு கூடுதலான நோட்டுகள் வெளியிடுவது கருப்பு பணத்தையே அதிகமாக்கும். நான்கூட இது சம்பந்தமாக ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். "அழிக்கப்படவேண்டிய 500, 1000 ரூபாய்கள் நோட்டுகள்" நேரம் கிடைத்தால் வாசித்துப் பார்க்கவும்.

  http://senthilmsp.blogspot.com/2015/05/500-1000.html

  அருமையான பதிவு!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட உங்களுடைய பதிவினை அப்போதே படித்து விட்டேன்; பின்னூட்டமும் எழுதியுள்ளேன்.

   Delete
 6. இன்றைக்கு இருக்கின்ற விலைவாசியில் ஒரு பொருளை வாங்க பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தரவேண்டியுள்ளது. பொதுமக்களின் இந்த ‘கஷ்டத்தை’ போக்க அரசு 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கிறது போலும்.( இந்த செய்தி உண்மையா எனத் தெரியவில்லை) திரு பகவான்ஜி அவர்கள் சொன்னது போல விரைவில் 5000 ரூபாய் நோட்டுகள் வரலாம்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. மற்ற நாடுகளில் Cash transaction என்பது குறைவு. ஆனால் நம் நாட்டில் இதனைத்தான் மக்கள் நம்புகிறார்கள்; விரும்புகிறார்கள். இதுவே நம்நாட்டில் பணப்புழக்கத்திற்கு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.

   Delete
 7. இன்று 2000 உரூபா தாள் - அது
  அன்று 500 உரூபாவிற்கு வேண்டியதை வேண்ட உதவாதே!
  ஓ! பணப் பெறுமதி இறக்கமோ!

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete