Sunday, 22 November 2015

ஐநூறு, ஆயிரம் என்றால் நம்பர் வேண்டுமாம்எனக்கு இந்த நெட் பாங்கிங் & பாஸ்வேர்டு சமாச்சாரம் எல்லாம் தேவையில்லை என்பதால் இந்த கணக்குமுறையை வைத்துக் கொள்ளவில்லை. எனவே போன் பில் என்றாலும் மின்சார பில் என்றாலும்  நேரிடையாகவே சென்று பணம் கட்டுவது வழக்கம். மற்றும் கார்ப்பரேசன் சம்பந்தப்பட்ட கணக்குகளுக்கும் இதே வழக்கம்தான். எங்கே போனாலும், கியூவில் நிற்கவேண்டும் என்பதால், சொன்ன தேதிக்கு முன்னதாகவே கட்டி விடுவேன். அவ்வளவுதான்.

இப்போதெல்லாம் எந்த வங்கி ஏடிஎம் என்றாலும், பணம் எடுக்கப் போனால் ஆயிரம், ஐநூறு ரூபாய்களைத்தான் அள்ளி அள்ளித் தருகின்றன. ( நம்ம கணக்கில் இருந்துதான்.) பெட்ரோல் பங்காக இருந்தாலும், பழமுதிர்ச்சோலை அல்லது ஷாப்பிங் மால்களாக இருந்தாலும் சரி, அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் நாம் கொடுக்கும் ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சரி பார்த்து வாங்கிக் கொள்கிறார்கள். எந்த மறுப்பும் சொல்வதில்லை. சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள இன்னொரு ஊழியரிடம் அல்லது மானேஜரிடம் காட்டி கேட்டுக் கொள்கிறார்கள். சில இடங்களில் கள்ள நோட்டைக் கண்டறியும் மெஷின் (fake note detector) வைத்து இருக்கிறார்கள்.

அங்கே இப்படி:

எப்போதுமே இந்த அரசு ஊழியர்கள் தனி பாதையில்தான் போவார்கள் போல. சில மாதங்களுக்கு முன்பு போன் பில் கட்ட போயிருந்தேன். வழக்கம் போல ஏடிஎம்மில் வந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய்களை கொடுத்தேன். கூடவே போன் எண்கள் எழுதப்பட்ட தனித் தாள் வேறு. கொடுத்தவுடனேயே கவுண்டரில் இருந்த பெண் ஊழியருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது.

” சார் … நீங்கள் கொடுத்துள்ள பேப்பரில் நீங்கள் கொடுக்கும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் நம்பரையும் எழுத வேண்டும் “

“ என்னம்மா … திடீர் என்று “

“ சார் நாங்க இதனை எழுதிப் போட்டு ஒரு மாதமாகி விட்டது. அதோ பாருங்கள் அந்த அட்டையை “

“ என்னம்மா ஒரு பழக்கடையிலும் , பெட்ரோல் பங்கிலும் சர்வ சாதாரணமா வாங்கிக் கொள்கிறார்கள். நீங்கள் மட்டும், அதுவும் ஒரு அரசாங்க ஆபிஸில் இதுமாதிரி எழுதச் சொல்வதே தப்பு “

“ சார் அவுங்க வாங்கிப் போடுவாங்க. இங்கு எங்களால் முடியாது. கள்ள நோட்டு வந்தால் எங்களால் கையை விட்டு கட்ட முடியாது “

அவரிடம் மேற்கொண்டு வாக்குவாதம் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை; எனக்கும் விருப்பம் இல்லை. எனவே வேறு வழியில்லாது அவர்கள் சொன்னபடியே எழுதிக் கொடுத்துவிட்டு பணம் கட்டி வந்தேன்.

இங்கே அப்படி:

அங்கே அப்படி என்றால், இங்கே – இன்னொரு அலுவலகத்தில் ஏற்பட்ட அனுபவம் வேறு  மாதிரி. மின்சார பில் பணம் கட்ட போயிருந்தேன். அங்கே வேறு மாதிரி எழுதிப் போட்டு இருந்தார்கள். டெலிபோன் ஆபிஸிலாவது தனி சீட்டில் போன் நம்பரோடு, ரூபாய் நோட்டுகளின் நம்பரையும் எழுதச் சொன்னார்கள். இங்கு ஒவ்வொரு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களிலும் மின்சார இணைப்பு எண்ணை பென்சிலால் (பத்து இலக்கம்) எழுத வேண்டுமாம். ரூபாய் நோட்டுக்களில் எழுதக் கூடாது என்று நமது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா உத்தரவே போட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கவுண்டரில் கேட்டேன். அங்கும் ஒரு பெண்மணி ‘சார், நாங்கள் கலெக்‌ஷன் கட்டும் xxxx பாங்கியிலேயே கேட்டு விட்டோம். அப்படி பென்சிலால் நம்பர் எழுதுவதால் பிரச்சினை இல்லை என்று சொல்லி விட்டார்கள்.” என்று சொன்னார்.

பணம் கட்ட வரிசையில் நிற்கும் யாரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை. தெரிந்த ஒருவர் மட்டும் என்னிடம், “சார் அவர்கள் சொல்லுவது போல் செய்துவிட்டு போங்கள். இதில் என்ன சிரமம் உங்களுக்கு. இல்லையேல் நமக்குத்தான் தொந்தரவு. வீட்டில் வந்து நம்மிடம் அது இருக்கிறதா, இது இருக்கிறதா என்று ஆரம்பிப்பார்கள்” என்று சொன்னார்.. அவர் சொல்வதும் சரிதான். அங்கும் வேறு வழியில்லை. அந்த அம்மணி சொன்னபடியே எழுதிக் கொடுத்தேன். அவர் பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு, அங்கே இருந்த மெஷினில் (fake note detector) ஒருமுறை போட்டு செக்கப் செய்து கொண்டார்.
   
நானும் வங்கிப் பணியில் இருந்தவன் தான். ஆரம்பகாலத்தில் கேஷியராக பணிபுரிந்த போது கட்டு கட்டாக கைகளில் பணத்தை எண்ணியவன். அப்போது எங்களுக்கு எந்த (fake note detector) மெஷினும் தரப்படவில்லை. எல்லாம் ஒரு அனுபவம், மூத்தவர்கள் வழிகாட்டுதல் என்று ஒரு நம்பிக்கையின் பேரிலேயே பணத்தை வாங்கினோம்; கொடுத்தோம். இப்போது காலம் மாறிவிட்டது.

பத்திரிக்கை செய்தி:

/// டெல்லி: பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளில் எழுதினால் கள்ள நோட்டுகளுக்கும், உண்மையான நோட்டுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது என பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ரூபாய் நோட்டுகளில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் பொதுமக்களும், நிறுவனங்களும், நம்பர், பெயர் மற்றும் தகவல்களை எழுதுகின்றனர். கள்ள நோட்டுகளுக்கும், உண்மையான ரூபாய் நோட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அந்த வெள்ளை பகுதியில் உள்ள பாதுகாப்பு குறியீடு மூலமாகவே கண்டுபிடிக்க முடியும். அதில் எழுதிவிட்டால், வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. எனவே, பொதுமக்களும், நிறுவனங்களும் ரூபாய் நோட்டுகளில் இனி எழுத வேண்டாம் என ரிசர்வ் வங்கி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ///

(நன்றி: தமிழ் ஒன் இந்தியா – தேதி: ஜூலை,17,2015.


46 comments:

 1. இதுவரை இங்கு இது போல் இல்லை...

  ஒருவேளை ரிசர்வ் வங்கி தரப்பில் தந்த வேண்டுகோளின் நகல் கொடுத்தால் மாறுவார்களோ...?

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சிலர் மாறவே மாட்டார்கள்.


   Delete
 2. ஒவ்வொரு அலுவலகத்திலும் அவரவர்கள் வைத்ததே சட்டமாக உள்ளது. நம் வேலை நடக்க நாம் அவர்கள் சொல்வதுபோலத்தான் கேட்க வேண்டியும் உள்ளது.

  ONLINE PAYMENT தான் எப்போதும் நல்லது சார். நம் நேரமும் மிச்சம். இதுபோன்ற தேவையில்லாத தொல்லைகளும் தலைவலிகளும் நமக்கு இருக்கவே இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். அதிகாரி வீட்டு கோழி முட்டை அம்மியையும் உடைக்கும் என்பார்கள். ONLINE PAYMENT பற்றிய உங்களது யோசனை, யோசிக்க வேண்டிய ஒன்று.

   Delete
 3. அலுவலகங்களில் அவர்கள் சொவதுதான் விதி (rule).
  அதுதான் நம் விதி (fate).

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 4. நாம் அவர்கள் சொல்படி கேட்கத்தான் வேண்டியிருக்கிறது. .
  எல்லோரும் ஒரே முறையை பின்பற்றினால் நமக்கு சௌகர்யம் . இல்லையென்றால் திண்டாடித் தான் போகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி. எந்த முறையைப் பயன்படுத்தினாலும், அவர்கள் சவுகரியத்திற்கு மாற்றிக் கொள்ளுவார்கள்.

   Delete
 5. வணக்கம்
  ஐயா

  என்னசெய்வது ஐயா.. அவர்கள் வைப்பதுதான் சட்டம்..நாம என்னசெய்யமுடியும்... அழகிய விளக்கம் த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.

   Delete
 6. அரசு அலுவலகங்கள் தரும் தொந்தரவை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  நானும் அழிக்கப்படவேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் படித்து கருத்திடுங்கள்.

  http://senthilmsp.blogspot.com/2015/05/500-1000.html

  த ம 4

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட உங்களது பதிவை இப்போதுதான் படித்தேன். அதில் எனது கருத்துரையும் தந்துள்ளேன். (நேரம் இருக்கும் போது எனது “ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவு)” என்ற எனது பதிவினைப் படித்துப் பாருங்கள். http://tthamizhelango.blogspot.com/2013/06/101.html )

   Delete
 7. அட! என்ன சொல்வது என தெரியவில்லையே ஐயா1 நான் தான் ஊரு விட்டு ஊரு வந்து ரெம்ப வருடமானதே?

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி. இந்தியனாகப் பிறந்ததால் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற சில துன்பங்களிலிருந்து ( பிறவிப் பயன்) தங்களுக்கு விடுதலை என்று நினைக்கிறேன்.

   Delete
 8. இதைத்தான் அனுபவம் என்று சொல்கிறார்கள். நமக்கு வயதானது தெரியாமல் இருக்க இந்த மாதிரி அனுபவங்களை நாம் தேர்ந்தெடுத்த அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆம் அய்யா. நீங்கள் சொல்வது சரிதான். நம்முடைய நாட்டில் சீனியர் சிட்டிஸன்களுக்கென்றே சில தொந்தரவுகளை அரசாங்கம் வைத்து இருக்கிறது.

   Delete
 9. பல ஆண்டுகளாக மின்சாரத்துறையில் இவ்வாறு கேட்கிறார்கள். என்ன செய்வது? நமக்கும் இவ்வாறுதானே கைமாறி வருகிறது. நாமென்ன, இவ்வாறு வாங்கும்போது வங்கியின் பெயரையோ, வாங்கப்படுபவரின் பெயரையோ எழுதியா கேட்கிறோம்? வேதனையான செய்திதான்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 10. அலுவலகத்திற்கு ஒரு சட்டம் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. ஒவ்வொரு அலுவலகத்திற்கும் மட்டுமல்ல, ஒவ்வொரு அதிகாரியும் மாறும்போதும் ஒவ்வொரு சட்டம்.

   Delete

 11. ஊருக்கு ஒரு வழி என்றால் அரசு ஊழியர்களுக்கு ஒரு வழி. இவர்களை எந்த சட்டமும் விதியும் கட்டுப்படுத்தாது. எனவே இந்த தொல்லையைத் தவிர்க்க இணையமூலம் பணத்தை கட்டுவதே சாலச் சிறந்தது.

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இணையமூலம் பணத்தை கட்டுவது என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.

   Delete
 12. ஆம்..இங்கும் போன் பில் கட்டப்போகும்போது இந்த முறை இருந்தது...
  அரசு அலுவலகங்களே இப்படி எனில்..?

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 13. யாராவதுகேள்வி கேட்கத்தான் வேண்டும் விதி என்றால் அனுபவிக்க வேண்டியதுதான் ஏடிஎம் -இல் வரும் பணத்தில் கள்ள நோட்டு இருந்தால் யாரைக் கேட்க. இதுவரை இந்தப் பிரச்சனை வந்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்தியனாகப் பிறந்ததால் பெருமைப் பட்டுக் கொள்வதைப் போல, அதற்காக சில துன்பங்களையும் பட்டே ஆக வேண்டும்.

   Delete
 14. சிலர் ஐநூறு ரூபாய் நோட்டுக்களே வாங்கவும் மறுக்கிறார்கள்! இவர்களை என்ன செய்வது? ஆன்லைன் பேமெண்ட் பெட்டர் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி. ஆன்லைன் பேமெண்ட் பெட்டரா இல்லையா என்பதை அனுபவத்தில் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

   Delete


 15. இணையம் மூலமாக பணம் கட்டுவதில் எனக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன. கார்ட் அக்செப்ட் ஆகவில்லை என்று வரும். பணம் கழித்ததாய் நம் அலைபேசிக்கு மெசேஜ் வரும்.

  நேரில் சென்று கட்டும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே செலுத்தவேண்டிய தொகை இருந்தால் பணமாக வாங்க மாட்டார்கள். செக்காகக் கொடு என்பார்கள். இதில் நீங்கள் சொல்வது போல தொந்தரவுகள் வேறு! அவஸ்தைதான்!

  உங்கள் தளத்தில் ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் வைத்தால் என் போன்றோருக்கு வசதியாக இருக்குமே...

  தம +1  ReplyDelete
  Replies
  1. சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எனக்கு இணையம் மூலமாக பணம் கட்டுவதில் ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் கிடையாது. அதில் எனக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் அந்த கணக்கு முறையை வைத்துக் கொள்ளவில்லை.

   // உங்கள் தளத்தில் ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் வைத்தால் என் போன்றோருக்கு வசதியாக இருக்குமே... //

   நன்றி அய்யா! யோசனை செய்கிறேன்.

   Delete
 16. இப்படி அலைக்கழிப்பவர்களின் போக்கை ஏற்று அமைதியாக வருவது நல்லதல்ல.

  காரணம் வயதானவர்கள், விதவைகள், ஊனமுற்றோர், போன்றவர்களிடம் இவ்வாறு பேசும் சிலர்..., உண்மையாகவே தவறு செய்யும் சில திமிங்கலங்கள் வரும்போது மட்டும் ...................... தங்கள் தளத்தின் தரம் அறிந்ததால் புள்ளிகளோடு நிறுத்துகிறேன்,. அடுத்த முறை செல்லும்போது தயவு செய்து முன்னதாக தகவல் சொல்லுங்கள். தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. யாரையும் குற்றம் சொல்வதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல இது. அவர்கள் பயம் அவர்களுக்கு.

   Delete
 17. //நானும் வங்கிப் பணியில் இருந்தவன் தான். ஆரம்பகாலத்தில் கேஷியராக பணிபுரிந்த போது கட்டு கட்டாக கைகளில் பணத்தை எண்ணியவன். அப்போது எங்களுக்கு எந்த (fake note detector) மெஷினும் தரப்படவில்லை. எல்லாம் ஒரு அனுபவம், மூத்தவர்கள் வழிகாட்டுதல் என்று ஒரு நம்பிக்கையின் பேரிலேயே பணத்தை வாங்கினோம்; கொடுத்தோம். இப்போது காலம் மாறிவிட்டது.//

  இப்போது காலம் மட்டும் மாறவில்லை. மனிதர்களும் மிகவும் மாறிவிட்டார்கள். எவ்வளவு மெஷின்கள் வந்திருந்தும், எதற்கும் அலுத்துக்கொள்கிறார்கள், சோம்பல்படுகிறார்கள்.

  சமீபத்தில் தீபாவளி சமயம் நான் ஒரு மிகப்பெரிய வங்கிக்குச் சென்றேன். [தாங்கள் பணியாற்றிய வங்கியே தான்] மிகப்பெரியதொகையை நான் அன்று எடுக்க வேண்டியிருந்தது. தயவுசெய்து 1000 ரூபாய் நோட்டுக்களாகத் தாருங்கள் என என் கோரிக்கையை வைத்தேன். அப்போது நேரம் மதியம் 1 மணி இருக்கும்.

  அங்குள்ள Chief Cashier ஆன பெண்மணியிடம் என்னை அனுப்பி வைத்தார் Counter Cashier.

  அந்த Lady Chief Cash Officer அவர்களும் "நீங்கள் கேட்கும் அளவுக்கு 1000 ரூபாய் நோட்டுக்கள் இல்லை சார்", என என்னிடமே கதை விட்டார்கள்.

  அவர்கள் மனம் வைத்தால் CASH MAIN CHEST லிருந்து 1000 ரூபாய் நோட்டுக்களாக எனக்குத் தந்திருக்க முடியும் என்பது எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். இது அவர்களின் சோம்பேறித்தனம் மட்டுமே. Customer Satisfaction என்றால் என்னவென்றே கொஞ்சமும் யோசிக்காதவர்கள்.

  அன்று பிறரால் கெளண்டரில் கட்டிய பணத்தை வைத்தே எனக்குப் பணம் பட்டுவாடா செய்துவிட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோள் என்பதும் எனக்கும் தெரியும்.

  1970இல் பெரம்பலூர் ஸ்டேட் பேங்க்கில் நான் தற்காலிகமாக பணியாற்றிய போது CASH CHEST க்குள் போய் வந்தது உண்டு. அன்று புழக்கத்திலிருந்த மிகப்பெரிய நோட்டே 100 ரூபாய் மட்டுமே. அன்று பெரம்பலூர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் குக்கிராமம் மட்டுமே. திருச்சியிலிருந்து 2 மணி பஸ் பயணம். பயண பஸ் டிக்கெட் ரூ.1-50 மட்டுமே. அந்தக்குக்கிராம வங்கியின் தினசரி சராசரி செஸ்ட் பேலன்ஸ் 50 கோடிகளுக்கும் மேல் அப்போதே அதுவும் 1970ல்.

  அதுபோல சமீபத்தில் 1981 முதல் 2008 வரை சுமார் 28 வருடங்கள் என் அலுவலக வேலை விஷயமாக ஸ்டேட் பேங்க்கின் ஒரு பெரிய கிளைக்கு தினமும் பலமுறை செல்வதும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் கட்டுவதும் வாங்குவதுமாக பழக்கப்பட்டவன் நான்.

  என் மீதுள்ள நம்பிக்கை, நாணயம் + BHEL என்ற மிகப்பெரிய CUSTOMER நிறுவனத்தின் REPRESENTATIVE + அங்கு CASH OFFICER ஆக பொறுப்பில் இருப்பவர் என்ற மரியாதையில், அங்கும் ஓரு சிலமுறை நான் BULK CASH DRAWAL செய்யும்போது என்னை அவர்களின் CASH CHEST க்குள் அனுமதித்ததும் உண்டு. இதுபோன்ற SBI MAIN CASH CHEST க்குள் இல்லாத DENOMINATIONS களே இருக்க முடியாது, என்பது எனக்கும் மிக நன்றாகவே தெரியும்.

  சமீபத்தில் தீபாவளி சமயம் நான் சென்று மிகப்பெரிய தொகையை எடுத்து வந்தது, என் தற்போதைய வீட்டுக்கு கொஞ்சம் தூரத்தில் மட்டுமே உள்ள வங்கி. அங்கு இன்று பணியில் உள்ளவர்களுடன் எனக்கு அதிகமாகப் பழக்கமும் கிடையாது. சரி என்று அவர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டுக்களையே ஒரு பண்டில் (1000 எண்ணிக்கைகள் உள்ள கட்டு) வாங்கிக்கொண்டு வருமாறு நேர்ந்தது.

  அப்போது அந்த சீஃப் கேஷ் ஆபீஸர் லேடி ”அந்தக்கயிற்றைப் பிரித்து மெஷினில் ஒவ்வொரு செக்‌ஷனாக எண்ணித் தரட்டுமா சார்? .... மேலும் ஒரு 5 நிமிடங்கள் தான் ஆகும்” என என்னிடம் கேட்டார்கள்.

  நான் சொன்னேன் ”அது தானே முறை, இருப்பினும் தாங்கள் சிரமப்பட வேண்டாம், என்னிடம் அப்படியே அதைக் கொடுங்கோ; ஒரு ஸ்பாஞ்ச் டப்பியில் நீர் ஊற்றிக்கொடுங்கோ; நானே அந்தக்கயிற்றைப் பிரித்து, என் கை விரல்களாலேயே அதே ஐந்து நிமிடங்களில் உங்கள் எதிரே அமர்ந்து இங்கேயே எண்ணிக்கொண்டு, திரும்பவும் இதுபோல டைட் ஆகக் கட்டுப்போட்டுக்கொண்டு போகிறேன்” என்று சவால் விட்டேன்.

  அவர்களுக்கே வெட்கமாகப்போய் விட்டது. பிறகு ஒரு அட்டெண்டரை வரவழைத்து, அந்த சணல் கயிற்றை அவிழ்க்கச்சொல்லி, மெஷினில் பட படவென்று எண்ணிக்கொடுத்தார்கள். பிறகு அந்த அட்டெண்டரை விட்டு சணலால் மீண்டும் இறுக்கிக்கட்டச்சொல்லி, அதன் பின் என்னிடம் கொடுத்தார்கள்.

  நான் யார், என்னவாக இருந்தவன், எவ்வளவு கோடிக்கணக்கில் பணத்தை, கவுண்டிங் மெஷின் வராத காலக்கட்டத்தில், கைகளால் மட்டுமே ஒருமுறைக்கு இருமுறையாக எண்ணி, இதுபோல கட்டுப்போட்டு விட்டெறிந்தவன் என்பதை எல்லாம் சுருக்கமாக அவர்களுக்குச் சொல்லிவிட்டு, நன்றிகூறிவிடை பெற்றுக்கொண்டேன்.

  ஏதோ இவற்றையெல்லாம் யாரிடமாவது சொல்லணும் போல இருந்தது. உங்களின் இந்தப் பதிவினில் பின்னூட்டமாக அளித்து விட்டேன்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. அன்பார்ந்த V.G.K அவர்களுக்கு நன்றி. ஒரு பதிவாக எழுத வேண்டிய அனுபவத்தை ஒரு பின்னூட்டமாகவே தந்து விட்டீர்கள்.

   Delete
  2. இதுபோல் சிற்சில அனுபவங்களை திரு. வை. கோ. அவர்கள் சிறிய பதிவாக, அடிக்கடி வெளியிட ஆவன செய்வார் என நம்புகிறேன்.

   Delete
 18. தமிழ்நாட்டுக்குள் ஓர் மாவட்டத்தில் தலைமையகம் கொண்டுள்ள ஒரு வங்கியில் நூதனமான ஓர் ஏமாற்று வேலை நடந்து வருகிறது. ஃபிக்ஸட் டெபாஸிட் போட்டுள்ளவர்களுக்கு அவர்கள் அறிவிக்கும் வட்டிப்பணத்தைத் தருவது இல்லை.

  டெபாஸிட் தாரர்களை மேலும் குழப்பிவிட ரெளண்டாக இரண்டு வருடங்களுக்குக்கூட டெபாஸிட் பணத்தை வாங்கிக்கொள்ளாமல் அதிகபட்சம் 23 மாதங்களுக்கு மட்டுமே எனச்சொல்லி வாங்கிக்கொள்கிறார்கள்.

  ERP or SAP என்று சொல்லப்படும் உறுப்படாத ஒரு INTEREST CALCULATION METHOD இந்த வங்கியில் PROGRAMME செய்து வைத்துள்ளார்கள்.

  நான் போய் அந்த வங்கி மேலாளரிடம் பொறுமையாக இதனை எடுத்துச்சொல்லி, எனக்கு இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் புரிய வைக்க முயன்றேன்.

  அவர் அதனைப் புரிந்துகொள்ளாததுடன், அவர்களின் SYSTEM தவறே செய்ய வாய்ப்பில்லை என அடித்துச் சொல்லி என்னை அனுப்ப நினைத்தார். சாதாரண வட்டி FORMULA வான PNR/100 என்பதுகூடத் தெரியாதவர் எவ்வாறு அந்த Branch இன் Chief Manager ஆக ஆகியுள்ளார் என நான் வியந்தேன்.

  பிறகு வாளைவிட பேனாவுக்கு ஆற்றல் அதிகம் என்பதைப் பயன்படுத்தி, அவர்களின் தலைமை அலுவலகத்தின் குறை தீர்க்கும் பிரிவின் கவனத்திற்கு இந்த என் பிரச்சனை தெளிவாகவும், ஆதாரங்களுடனும் கொண்டு சென்றேன்.

  அடுத்த மூன்றாம் நாளே எனக்கு வர வேண்டிய பணத்தை (DIFFERENCE BETWEEN ACTUALLY PAYABLE TO ME AND PAID TO ME) அளித்து விட்டார்கள். நான் விழிப்புணர்வுடன், கணக்குப்போட்டு வைத்திருந்ததால் இதனை என்னால் பெற முடிந்தது.

  இதுபோல எத்தனை டெபாஸிட் தாரர்கள் இந்த வங்கியால் வஞ்சிக்கப்பட்டுள்ளார்களோ என நினைத்துப் பார்த்தேன்.

  இதைப்பற்றி தனிப்பதிவே விபரமாக உதாரணங்களுடன் எழுத வேண்டும் என நினைத்துள்ளேன்.

  இதுபோல ஒரு முறை அல்ல இருமுறை எனக்கு வர வேண்டிய பணத்தை CLAIM செய்து நான் இதுவரைப் பெற்றுக்கொண்டுள்ளேன். மொத்தத்தில் எங்கும் எதிலும் நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. அன்பார்ந்த V.G.K அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி.

   // ERP or SAP என்று சொல்லப்படும் உறுப்படாத ஒரு INTEREST CALCULATION METHOD இந்த வங்கியில் PROGRAMME செய்து வைத்துள்ளார்கள். //

   மேலே தாங்கள் குறிப்பிட்ட ப்ரோக்ராம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு, புரியும்படி ஒரு பதிவாக எழுதவும்.

   Delete
 19. அதுபோல வேறு ஒரு வங்கியில் எனக்கு பாதுகாப்புப் பெட்டகம் கொடுக்காமலேயே பல வருடங்களாகக் கடுக்காய் கொடுத்து வந்தார்கள்.

  நடுவில் எனக்கு நிச்சயம் பாதுகாப்புப் பெட்டகம் கொடுப்பதாக வாக்கு அளித்திருந்த இரண்டு சீஃப் மேனேஜர்கள் பிரமோஷனிலும் டிரான்ஸ்பரிலும் சென்று விட்டார்கள். புதிதாக வரும் ஒவ்வொருவரிடமும் நான் புதிதாக இதுவரை நடந்துள்ள கதைகளை விரிவாகச் சொல்ல வேண்டியதாகிப் போனது. பலன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்தேன்.

  அவர்களுடைய தலைமை அலுவலகத்திற்கும், நான் ஒரு உருக்கமான கடிதம் எழுதினேன். அடுத்த மூன்றாம் நாளே, என்னை அழைத்து பாதுகாப்புப் பெட்டகம் அளித்தார்கள். அது ஒரு பெரிய கதை.

  இதையும் ஓர் தனிப்பதிவாகவே நான் வெளியிட நினைத்திருந்தேன். ஏனோ சோம்பலில் அப்படியே விட்டுவிட்டேன்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. அன்பார்ந்த V.G.K அவர்களின் மூன்றாம் வருகைக்கு நன்றி. எல்லோருக்கும் இது நேர்வதுதான் அய்யா!. நான் பணியில் இருக்கும் போது கூட, பதிவு செய்து வைத்துக் கொண்டு சில மாதங்கள் கழித்துதான் லாக்கர் வசதி பெற்றேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

   Delete
 20. எண்கள் எழுதச் சொல்வது அதீத சாக்கிரதையைக் காட்டுகிறது!
  இவர்கள் திருந்த மாட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி.

   Delete
 21. licயில் தொடர்ந்து நடக்கிறது இந்த பிரச்சினை ,நிர்வாகம் ,கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் மெசினை ஊழியர்களுக்கு வழங்கினால் நல்லது :)

  ReplyDelete
  Replies
  1. பகவான்ஜீ, நிர்வாகத்தில் சாட்டையை எடுக்க வேண்டியவர்கள், சாட்டையை எடுத்தாலொழிய இது மாதிரியான விதிகளை மீறிய செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

   Delete
 22. பல இடங்களில் இப்படி நடக்கிறது. தில்லி போன்ற பெரு நகரங்களில் பணப்புழக்கமும் அதிகம். சோதனை செய்வதற்கு எந்திரங்கள் இருந்தாலும், பல ஊழியர்கள் அதை முழுவதும் நம்புவதில்லை. அவர்களுக்கு எப்போதும் தன் வழி தான் சிறந்தது என்ற எண்ணம்.

  நோட்டில் எதையும் எழுதக்கூடாது என்று சொன்னாலும் நம்மவர்கள் கேட்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

   Delete
 23. ஐயா நம்மூரில் எந்தச் சட்டத்தைத்தான் பின்பற்றியிருக்கின்றார்கள். ரிசர்வ் வங்கி சொல்லியுமே கேட்காதவர்கள்...ஹும் என்ன சொல்ல....வயதானவர்களுக்கு நிறைய சிரமங்கள்தான் ஐயா அதுவும் அரசு அலுவலகங்களில்.

  கீதா:மட்டுமல்ல ஏடிஎம்மில் பாண்டிச்சேரியில் பணம் எடுத்த போது 1000 ரூபாய் கள்ள நோட்டு வந்திருக்கிறது. அது முதலில் எனக்குத் தெரியவில்லை. நான் அந்த ரூபாயை வங்கியில் கொண்டு மகனுக்கு ஃபீஸ் கட்டுவதற்குச் சென்ற போது அவர்கள் அதைக் கள்ள நோட்டு என்று சொல்லி விட அதை நான் நல்ல காலம் எப்போதுமே ஏடிஎம்மில் ப்ரின்டட் ரிசிப்ட் வேண்டும் என்று பட்டனைப் ப்ரெஸ் செய்து எடுத்துக் கொள்வது வழக்கம் ஆதலால், அன்று அதை அந்த வங்கியில் காட்டி (அதே வங்கியின் ஏடிஎம் ஆனால் கார்டு வேறு வங்கியின் கார்டு) அவர்கள் பின்னர் எடுத்துக் கொண்டனர். இப்படித்தான் ஏடிஎம்மிலுமே கள்ள நோட்டுகள் வருவதுண்டு....

  நல்ல பதிவு ஐயா

  ReplyDelete