நேற்று முன்தினம் (21.04.16) மாலை, எப்போதும் போல், கணினித் தமிழ்ச்
சங்கத்தின் வாட்ஸ்அப் (Whatsapp) செய்திகளைப் பார்க்கலாம், என்று எனது செல்போனைத் திறந்த
போது ஒரு அதிர்ச்சியான செய்தி காத்து இருந்தது.
// அன்புக் கவிஞர் வைகறை காலமாகி விட்டார்… //
தகவலைத் தந்தவர் கவிஞர் மீரா செல்வகுமார்.. அவரைத் தொடர்ந்து நண்பர்கள்
பலரும் வாட்ஸ்அப்பில், கவிஞருக்கான தங்களது இரங்கலை பதிவு செய்து இருந்தனர். நான்,
// அதிர்ச்சியான செய்தி. நம்ப முடியவில்லை. அந்த சிரித்த முகத்தை
என்னால் மறக்க இயலாது. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கவிஞர் வைகறையின்
ஆன்மா அமைதி பெறட்டும் – கண்ணீருடன் தி.தமிழ் இளங்கோ //
என்று, எனது கண்ணீர் அஞ்சலியைப் பதிவு செய்தேன்.
நல்லடக்கம்:
அவரது சொந்த ஊரான அடைக்கலாபுரத்தில் (தூத்துக்குடி தாண்டி ஆறுமுகநேரி
அருகில்) வெள்ளிக்கிழமை (22.04.16) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் நடைபெறும், புதுக்கோட்டை
நண்பர்கள் காலை 7 மணிக்கு ஒரு வேனில் புறப்பட இருப்பதாக தகவல் தந்தார்கள். அவர்களோடு
செல்ல எனக்கு சாத்தியப் படாததால், நான் மட்டும் திருச்சியிலிருந்து (காலை 7 மணிக்கு
புறப்பட்டு) பஸ்சில் மதுரைக்கு சென்றேன்; மதுரையிலிருந்து, தூத்துக்குடி வழியாக மதியம்
2.45க்கு அடைக்கலாபுரம் சென்று சேர்ந்தேன். புதுக்கோட்டை நண்பர்கள் எனக்கு முன்னதாக
வந்து சென்று விட்டனர். ஊரினுள் நுழைந்ததும் கவிஞர் வைகறை என்று சொல்லிக் கேட்டால் யாருக்கும்
தெரியவில்லை. இறந்தவர் புதுக்கோட்டையில் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்று சொன்னதும்தான்
அவர்களுக்கு தெரிந்தது. வழி காட்டினார்கள்.
கவிஞரின் வீட்டின் வெளியே காம்பவுண்டிற்குள் அமைக்கப்பட்டு இருந்த
பந்தலில் அவரது உடல் சவப்பெட்டியில், பூமாலைகளின் நடுவே வைக்கப்பட்டு இருந்தது. அதே
சிரித்த அமைதியான முகம். அருகில் அவரது மனைவி கதறியபடியே இருந்தார். அவரது ஒரே மகன், உறவினர் ஒருவர்
மடியில் களைத்துப் போய் தூங்கிக் கொண்டு இருந்தான். எனக்கு மனது தாளவில்லை. கவிஞரின்
வீடு இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப் படவில்லை.அங்கு போன பின்புதான், கவிஞர் வைகறை
அவர்கள் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர் என்பதும் அவரது பெயர் ஜோசப் பென்சிஹர் என்பதும்
எனக்கு தெரிய வந்தது. உறவினர்களும், நண்பர்களும், அவரோடு பணி புரிந்தவர்களும் குழுமி
இருந்தனர்.
சரியாக மூன்று மணி அளவில், அந்த ஊர் பங்கு சாமியார் வந்து ஜெபம்
செய்த பின்பு கவிஞரின் உடலை, அவர்களின் பங்கு கோயிலான ‘அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்
வைத்து, பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் அவர்களது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட
அவ்வூர் கல்லறைத் தோட்டத்திலேயே அவரை நல்லடக்கம்
செய்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு, நான் நேற்று இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினேன்.
எப்படி இறந்தார்?
அடைக்கலாபுரத்திற்கு, திண்டுக்கல்லிலிருந்து கவிஞர் வைகறை அவர்களது
ஃபேஸ்புக் (facebook) நண்பர்கள் இருவர் வந்து இருந்தனர். அவர்களில் ஒருவர் சொன்ன தகவல்
இது. கவிஞர் வைகறை எப்போதுமே, தனது உடம்பிற்கு ஏதாவது என்றால் , தனக்கு இப்படி இருக்கிறது
என்று மெடிக்கல் ஷாப்பில் சொல்லி, மருந்து எடுத்துக் கொள்வாராம். டாக்டரிடம் செல்வதில்லை. ரொம்ப நாளாகவே அவருக்கு வயிற்றுவலி இருந்திருக்கிறது. எப்போதும் போல, அல்சர்தானே என்று
எண்ணி, இவர் மருந்தை மெடிகல் ஷாப்பில் வாங்கி சுயமருத்துவம் பார்த்து இருக்கிறார்.
வலி அதிகமாகவே கவிஞரை, புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டு, பின்னர்
மதுரைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். விதி விளையாடி விட்டது. 35 வயதிலேயே அவருக்கு மரணம்.
( நான் பணியில் இருந்தபோது, என்னோடு பணிபுரிந்த, யூனியன் தலைவர்
ஒருவரும் இப்படித்தான். தனக்கு அல்சர்தான் என்று நினைத்துக் கொண்டு, ஜெல் எனப்படும்
திரவ மருந்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தார். ஒருநாள் திடீரென்று வயிற்றுவலி அதிகமாக,
திருச்சியிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
PANCREAS என்றார்கள். இது நடந்து 15 வருஷம் இருக்கும்)
எனவே நண்பர்களே , டாக்டர் ஆலோசனையின்றி , சுயமருத்துவம் (Self
treatment ) எதுவும் செய்யாதீர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர்.
தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். சில ஆண்டுகள் தர்மபுரியில் வசித்து வந்தார்.
ஆசிரியப் பயிற்சி படிக்கும் போது நண்பர்களுடன் இணைந்து “வளர்பிறை” எனும் கையெழுத்து
இதழ் நடத்தினார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ‘நந்தலாலா.காம்’ எனும்
கவிதைகளுக்கான இணைய இதழையும் நடத்தி வருகிறார்.
இதுவரை வெளியாகியுள்ள நூல்கள்:-
ஒரிஜினல் தாஜ்மகால் (2008)
நிலாவை உடைத்த கல் (2012)
ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் (2014)
ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் (2014)
இதழாசிரியர்:- நந்தலாலா.காம்.
ஆன்மா அமைதி பெறட்டும்.
ஒருமுறை ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள் வீட்டில் , நண்பர்
தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் விருப்பத்திற்கு இணங்க வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி
நடைபெற்றது. நான் பெரும்பாலும், சங்கோஜப் பட்டுக் கொண்டு, எனது கேமராவில் என்னையே படம்
எடுக்கச் சொல்லி எடுத்துக் கொள்வதில்லை. அன்றும் அப்படித்தான். நான் மற்றவர்களைப் படம் எடுத்துக் கொண்டு இருந்தேன்.
இதனைக் கவனித்த, கவிஞர் வைகறை அவர்கள் “நீங்களும் அவர்களோடு போய் நில்லுங்கள். நான்
எடுக்கிறேன். நீங்களும் படத்தில் இருக்க வேண்டும். வரலாறு முக்கியம் நண்பரே! ” என்று
சொல்லி எனது கையில் இருந்த கேமராவை வாங்கி என்னையும் படம் எடுத்தார். இன்று அவரே வரலாறாகி
விட்டார்.
ஜோசப் பென்சிஹர் என்கிற கவிஞர் வைகறையின் ஆன்மா அமைதி பெறட்டும். ஆதரவற்ற அவருடைய குடும்பத்திற்கு ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும்.
புன் சிரிப்பு
ReplyDeleteமென்மையான பேச்சு
நண்பரின் பிரிவினை மனம் நம்ப மறுக்கிறது ஐயா
ஆம் அய்யா! அவருக்கே உரிய புன்சிரிப்பு. நம்மால் மறக்கத்தான் முடியாது.
Deleteகவிஞர் வைகறையின் மரணச் செய்தி முன்பே தெரியும் என்றாலும், தங்களின் பதிவின் மூலம் ஏகப்பட்ட தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பியது, அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த சுயமருத்துவம் போன்றவை விவரங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!
ReplyDeleteS.P.S அவர்களே, இப்போதுதான், அவரைப் பற்றிய மற்ற நண்பர்களது பதிவுகளைப் படித்து வருகிறேன்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகவிஞர் வைகறையின் ஆன்மா
ReplyDeleteஇறைவனிடம் இளைப்பாற
இறைவனிடம் பிரார்த்தனை
செய்வோமே....
ஆம் நண்பரே! அவரது ஆன்மா இளைப்பாற இறைவனிடம் பிரார்த்தனை
Deleteசெய்வோம்.
ஒரேயொருநாள் அவருடன் பேசிய மென்மையான வார்த்தைகளையே என்னால் இன்னும் மறக்க முடியவில்லை அவருடன் நெடுநாள் பழகிய புதுக்கோட்டை நண்பர்களும், அவரது குடும்பத்தினரும் எப்படி மறப்பார்கள் அவரது ஆன்மா சாந்தியடைட்டும்.
ReplyDeleteநண்பரே! உங்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, வலைப்பதிவர் திருவிழாவிலும், வீதி இலக்கிய கூட்டத்திலும் அவருடன் பேசி இருக்கிறேன்.
Deleteபாவலர் (கவிஞர்) எவரும்
ReplyDeleteசாவடைந்ததாய் வரலாறில்லை
வைகறை - நீ என்றும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!
ஓ! பாவலனே (கவிஞனே)!
வைகறை என்னும் பெயரில்
பாக்களால் அறிவை ஊட்டினாய்
படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!
கிட்ட நெருங்காமல் எட்டப் போய்
எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்
வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
துயர் பகிருகின்றோம்!
ஆம் கவிஞரே! வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
Deleteதுயர் பகிருவோம்.
மன்னிக்க வேண்டும் ....கூட வந்தவர்களுக்கு நேரமானால் சிக்கல் என்பதால் உடனே கிளம்ப வேண்டிய சூழ்நிலை... அடக்கம் வரை பார்க்க மனம் தாங்க முடியல...உங்கள் பதிவு மூலம் அறிகின்றேன்...இவரின் இழப்பை தாங்கமுடியாது தவிக்கின்றோம்.பதிவை நான் பகிர்ந்து கொள்கின்றேன்..முகநூலில் உங்கள் அனுமதியுடன் சார்.
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு, நீங்கள் செய்தது சரிதான். ஒருவேளை நான் உங்கள் குழுவினரோடு வந்து இருந்தாலும் கவிஞர் வைகறையின் நல்லடக்கம் வரை இருந்திராமல், நானும் உங்களோடு பயணப்பட்டு இருப்பேன். எல்லாம் நன்மைக்கே.
Deleteஃபேஸ் புக்கில்(தேவதா) பார்த்தேன். நண்பர்கள் வட்டத்தில்தாங்க முடியாத இழப்பு.
கவிஞர் வைகறை அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அருள இறைஞ்சுகின்றேன்.
ReplyDeleteகவிஞரின் ஆன்மா அமைதி அடைவதாக.
Deleteவைகறை அவர்களின் மரணம் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteஅவர் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் மனவலிமை, மன ஆறுதலை தர வேண்டும்.
கவிஞரின் குடும்பத்திற்கு நண்பர்கள் வட்டம்தான் வழி காட்ட வேண்டும்.
Deleteதங்கள் பதிவின் மூலம்தான் கவிஞர் வைகறை அவர்களின் மரணம்பற்றி அறிந்தேன். சிறிய வயதிலேயே மறைந்துவிட்ட அவரை நினைத்து வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்?
ReplyDeleteஅவரை நினைத்து அவர் குடும்பத்தார் மட்டுமே வருந்துவார்கள். மற்றவர்களை காலம் அவரை மறக்கடிக்கச் செய்து விடும்.
Deleteபதிவர் விழாவில் அவரைப் பார்த்தேன். சிரித்த முகம். ஓய்வின்றி அங்குமிங்கும் ஓடியாடி வேலை பார்த்தார். மறக்கவே முடியவில்லை. மனதை மிகவும் பாதித்த செய்தி. வாழ வேண்டிய வயதில் அநியாயமாய் ஒரு மரணம். இருந்திருந்தால் இன்னும் பல அற்புதமான கவிதைகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும். குடும்பத்தினர் எப்படி இந்த இழப்பைத் தாங்கிக்கொள்வார்களோ தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteபுதுக்கோட்டையில் அவர் ஆற்றிய இலக்கியப்பணி மதிக்கத்தக்கது.
Deleteநேரில் நீங்கள் சென்று பார்த்து எங்களுடன் பகிர்ந்ததைப் பார்த்தபோது மனதில் இன்னும் சுமை கூடியதுபோல இருந்தது. அவருடைய குடும்பத்தாருக்கு இச்சூழலை எதிர்கொள்ளும் போதிய மன தைரியத்தை இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅனைவரும் பிரார்த்திப்போம்.
Deleteதமிழ்மணம் பக்கத்தை சற்றுமுன் பார்த்துக்கொண்டிருந்தபோது, உங்கள் மற்றும் கில்லர்ஜி அவர்களின் வரிகளிலிருந்து சோகம் அறிந்தேன். புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் பார்க்க நேர்ந்தது. பேச வாய்ப்பு அமையவில்லை. நந்தலாலா.காம் பக்கங்களில் படித்திருக்கிறேன் கொஞ்சம்.
ReplyDeleteமரணம் பொதுவாகவே சோகம் எனினும், அகால மரணம் அயர்வைக் கூட்டுகிறது. கவிஞரின் ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கு ஆண்டவன் அருள் சேரட்டும். பிரார்த்திப்போம்.
கவிஞர் வைகறை எல்லோருடைய மனதையும் கவர்ந்தவர்.
Deleteமிகவும் வருத்தமான செய்தியாக உள்ளது. இளம் வயதில் இவர் இறந்துள்ளது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. கவிஞர் வைகறைக்கு கண்ணீர் அஞ்சலி!
ReplyDeleteஇந்த ஆண்டு 2016 பிறந்தது முதல் வலையுலகில் இதுபோன்ற பல துயரச் செய்திகளைக் கேட்டு வருவது எனக்கு மிக மிக வருத்தமாக உள்ளது.
சற்றும் முன் கிடைத்ததோர் அதிர்ச்சியான செய்தி. நம் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் அன்புத்தந்தையும் அந்தக்கால பிரபல சிறுகதை எழுத்தாளருமான ஹேமலதா பாலசுப்ரமணியன் என்னும் பாஹே நேற்று இறந்துவிட்டாராம். :(
கவிஞர் வைகறையின் இளம் வயது மரணம் அதிர்ச்சிதான். ஸ்ரீராம் அவர்களின் தந்தை மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கள்.
Deleteதாங்கள் நேரில் சென்று அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டது வியப்பாக உள்ளது. தங்களின் இந்த நல்லதொரு மனதையும், செயலையும் எண்ணி நான் மிகவும் பெருமைகொள்கிறேன். அவர் பற்றி தாங்கள் கூறியுள்ள செய்திகள் கண்கலங்க வைக்கின்றன.
ReplyDeleteதாங்கள் இவ்வாறு வெளியூர் சென்றிருப்பது தெரியாமல், வழக்கம்போல நான் தங்களுக்கு சில மெயில்கள் கொடுத்திருந்தேன். பதில் ஏதும் இல்லாதபோதே ‘ஒருவேளை தாங்கள் ஊரில் இல்லையோ’ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. இப்போதுதான் எனக்கு முழுவிபரங்களும் தெரியவருகிறது.
இந்தத்தங்களின் பதிவு மூலம் கவிஞர் வைகறை அவர்கள் பற்றி, மேலும் பல விஷயங்கள் அறிந்துகொள்ள முடிந்தது.
என்னால் முடிந்தவரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலந்து கொள்ள முயற்சி செய்வேன். ஊரிலிருந்து வந்தவுடன் உடம்பெல்லாம் ஒரே அசதி. இதனால்தான் உங்கள் வலைப்பக்கம் வர, கொஞ்சம் தாமதம்.
Deleteகவிஞர் வைகறையின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தங்களின் குறிப்புகளின் மூலமாகத் தான் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ஆற்றல் மிக்க அந்த இளைஞரின் மறைவு மிகவும் சோகமானது. இந்த துக்கத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை அந்த குடும்பத்திற்கு இறைவன் அருளட்டும்.
ReplyDeleteஇறைவன் அருள் புரிய வேண்டும்.
Deleteவார்த்தைகளை கண்ணீர் கழுவி எடுத்துப்போனதால்..வேறெதுவும் எழுத முடியவில்லை அய்யா....
ReplyDeleteகவிஞர் வைகறையின் இளம் வயது மறைவுச் செய்தியைக் கேட்டதிலிருந்து, அவர் தனது உடல்நலன் விஷயத்தில் எங்கே கோட்டை விட்டார் என்றே எனது மனம் சுழன்று நிற்கிறது.
Deleteவார்த்தைகளை கண்ணீர் கழுவி எடுத்துப்போனதால்..வேறெதுவும் எழுத முடியவில்லை அய்யா....
ReplyDeleteகடந்த மாதம் அவரை மதுரையில் சந்தித்தபோது கைகுலுக்கி என் வணக்கத்தைத் தெரிவித்தேன் !அவரா மறைந்து விட்டார் ,என்னால் நம்ப முடியவில்லை :(
ReplyDeleteஎன்னாலும் நம்ப முடியவில்லை நண்பரே.
Deleteசொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா. திறமை வாய்ந்த கவிஞர்...ஆழ்ந்த இரங்கல்கள். பிரார்த்தனைகள் அவரது குடும்பத்திற்கும்..
ReplyDeleteஆமாம் அய்யா! துக்கத்தை வார்த்தெடுக்க வார்த்தைகள் வரவில்லை.
Deleteகவிஞரைப் பற்றி ஏதும் அறிந்ததில்லை.. ஆயினும் மனம் மிகவும் கனக்கின்றது..
ReplyDeleteநேற்று தகவல் அறிந்ததும் - கில்லர்ஜி மற்றும் துளசிதரன் அவர்களுடைய பதிவில் மட்டுமே இரங்கல் சொல்ல முடிந்தது - இணைய பிரச்னையினால்..
இன்று தங்கள் பதிவினைப் படித்ததும் மிகவும் வருந்தினேன்..
>>> கவிஞர் வைகறையின் ஆன்மா அமைதி பெறட்டும். ஆதரவற்ற அவருடைய குடும்பத்திற்கு ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும்.<<<
தங்கள் வார்த்தைகளில் மனித நேயம் மிளிர்கின்றது..
முன்னெடுத்து ஆவன செய்க.. இயன்ற அளவில் உதவிட காத்திருக்கின்றேன்..
// முன்னெடுத்து ஆவன செய்க.. இயன்ற அளவில் உதவிட காத்திருக்கின்றேன்..//
Deleteபுதுக்கோட்டை நண்பர்கள் நிச்சயம் முன்னெடுப்பார்கள்.
அய்யா, என் மனதில் உள்ளதை உங்கள் கடைசி வரியில் சொல்லிவிட்டீர்கள்.. தம7
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteகண்ணீர் அஞ்சலி.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள். நண்பர் வைகறை எனக்கு முக நூலில் அறிமுகமாகி இருந்தார்.
ReplyDeleteநண்பர்கள் பதிவர்கள் , அடக்க நிகழ்வில் பங்கேற்பது பற்றி தகவல் தெரிவித்து இருந்தால் நானும் அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டு எனது அஞ்சலியை செலுத்தி இருந்திருப்பேன்.. நல்லதினத்துக்கு தகவல் சொல்லாத பதிவர்கள் கண்டிப்பாக துக்க தினத்துக்காவது தகவல் சொல்ல வேண்டும்...
ReplyDeleteதோழரே! எனக்கு, கவிஞர் வைகறையின் மறைவுச் செய்தி, கணினி தமிழ்ச் சங்கத்தின் வாட்ஸ்அப் செய்தி வழியேதான் தெரிய வந்தது. தமிழ்மணம் சென்று பார்த்தபோது, ஆசிரியர் S. மது அவர்கள் (மலர்த்தரு) இந்த செய்தியைப் பதிவாக வெளியிட்டு இருந்தார். அடுத்தநாள் காலை புறப்படும் போதுதான், செல்போனில் முழுவிவரம் கேட்டுக்கொண்டு உடனே புறப்பட்டு விட்டேன். அடைக்கலாபுரம் சென்றபிறகுதான் கவிஞரின் நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் தகவல் தெரிந்து வந்தார்கள் என்பது தெரிய வந்தது..
Delete