’கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’
என்றார் ஔவையார். அன்றுமுதல் இன்று வரை எல்லோரும் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றும்,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழித்து விடுவோம் என்றும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
சொன்னபடி அரசியல்வாதிகள் பலரும் தங்கள், தங்கள் வீடுகளில் இருந்த வறுமையை ஒழித்து விட்டார்கள்
என்றே நினைக்கிறேன்.
சங்ககாலம் பொற்காலம் என்று சொல்லுவார்கள். ஆனால் சங்ககாலத்திலும்,
தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லாத வறுமை இருந்ததை அறிய முடிகிறது. இங்கு சங்ககால ’பத்துப்பாட்டு’
என்ற தொகுப்பில் இருக்கும், ’சிறுபாணாற்றுப்படை’ என்ற நூலிலிருந்து, அன்றைய வறுமையின்
ஒருகாட்சியைக் காணலாம் ( காட்சியைப் படம் பிடித்து காட்டுபவர் இடைக்கழி நாட்டு நல்லூர்
நத்தத்தனார் என்ற புலவர்.) சங்க இலக்கியங்களை ஊன்றிப் படிக்கும் எவரும், அவை ஒவ்வொன்றும்
நமது மனதில் உண்டாக்கும் நிழலோவியங்களை மறந்து விட முடியாது. படிப்பவரே ஒரு ஓவியராக
இருப்பின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ஓவியத்தை தூரிகை கொண்டு வரைந்து விடுவார்.
வீட்டின் நிலைமை:
அது ஒரு குடிசை வீடு. கழிகளால் ஆன கூரையால் அமைந்தது. அந்த கழிகளும்
கயிறு இற்றதால் விழுகின்ற நிலைமை. வீட்டின் சுவர்களோ கறையான் அரித்து மிகவும் பழைமையானவை.
இந்த நிலைமையில் அந்த வீட்டில் பலநாட்கள் சமையல் இல்லை. எனவே அடுப்பங்கரையில் நெருப்பே
மூட்டப்படாததால், அடுக்களையில் காளான் பூத்துக் கிடக்கிறது.
நாயின் நிலைமை:
அந்த வீட்டின் அடுக்களைப் பக்கம் ஒரு நாய். அப்போதுதான் அது ஒரு
குட்டியை ஈன்று இருக்கிறது. வீட்டில் நிலவிய வறுமை காரணமாக நாய்க்கு உண்ண எதுவும் கிடைக்கவில்லை.
குட்டி ஈன்ற அசதியில் வெளியே எங்கும் சென்று உணவு தேடவும் முடியாத நிலைமை. மேலும் குட்டியை
மட்டும் தனியே விட்டு விட்டுச் செல்லவும் பயம். எனவே அதுவும் பட்டினி. இந்த சூழ்நிலையில்,
வெறும் வயிற்றில் தனது குட்டிக்கு கொடுப்பதற்கு அதனிடம் மடிப்பால் கூட இல்லை. இதனை
அறியாத, கண்கூட விழிக்காத , அப்போதுதான் பிறந்த, வளைந்த காதுகளைக் கொண்ட, அந்த நாயின்
குட்டி , தனது தாயின் மடியை கவ்விக் கவ்வி இழுக்கிறது. பால் சுரக்க வில்லை. அந்த நாய்க்கோ
தனது குட்டிக்கு பால் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன், குட்டி படுத்தும்
பாட்டால் வேதனை தாங்காமல் குலைத்துக் கொண்டே இருக்கிறது.
பாணன் நிலைமை:
மேலே சொன்ன அந்த குடிசையில் இருந்தவன் ஒரு இசைக் கலைஞன். கிணைப்பறை
கொட்டுபவன். (பொருநன் என்றும் சொல்லுவாரகள்.) அவனுடைய மனைவியும் அவனுக்குத் துணையாக
சென்று இசைப்பவள். கைகளில் வளையல்கள் அணிந்து இருக்கிறாள். வேறு நகைகள் ஏதும் அவளிடம்
இல்லை. தற்போது வருவாய் ஏதும் இல்லை. வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாக , இடை மெலிந்து
காணப்படுகிறாள்.
வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை. உப்பு கூட இல்லை. எனவே, என்ன
செய்வது என்று யோசித்த அவள், வாசலில் விளைந்த குப்பைக் கீரையைப் பறிக்கின்றாள்., உப்பு
இல்லாமல் சமைக்கிறாள். வீட்டிற்கு வெளியில் இருந்து பார்ப்பவர்கள் தம்மை இகழ்ச்சியாக
எண்ணுவார்கள், பரிகாசம் செய்வார்கள் என்றெண்ணி
வாசற் கதவை அடைத்து வைக்கிறாள். பின்னர் தான், சமைத்த அந்த உப்பில்லாத குப்பைக் கீரை
உணவை கணவனோடு தானும் உண்கிறாள்.
பாடல் வரிகள்:
……………….. இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் (129-132)
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் (129-132)
காழ்சோர் முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட………… (133-140)
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட………… (133-140)
- - சிறுபாணாற்றுப்படை (இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்)
பாடலின் முடிவு:
நல்லியக்கோடன் என்றொரு வள்ளல். அவனைக் கண்டு, பரிசில்கள் பெற்று
வருகிறான் இன்னொரு பாணன். அவன் வழியிலே. மேலே சொன்ன, வறுமையின் பிடியில் சிக்கி உழன்ற
அந்த இசைக் கலைஞனை காண்கிறான். அவனிடம், .நல்லியக்கோடன் என்ற வள்ளலைக் கண்டு தன்னைப்
போலவே வறுமை நீங்குமாறு ஆற்றுப்படுத்தி விட்டுச் செல்கிறான்.
சிறுபாணாற்றுப்படையில் இருந்து ஒரு அருமையான பாடலையும் அதன் விளக்கத்தினையும் இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வறுமையைப் போக்குவோம் எனச் சொல்லும்/சொன்ன ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களது சொத்துகளை அதிகரித்துக் கொண்டது தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்....
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆமாம் அய்யா! ஆனால் அரசியல்வாதிகள் அடித்து, பிடித்து சேர்க்கும் அத்தனை சொத்துக்களும் பிற்பாடு பினாமிகள் கையில்தான் சென்று சேரும்.
Deleteவறுமை பற்றிய திருக்குறள் ஒன்று
ReplyDeleteசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
இன்றைய தேர்தல் களத்திலே எல்லா அணிகளும்
இதை நன்கு அறிந்துள்ளன.
சுப்பு தாத்தா.
சுப்புத் தாத்தா அவர்களுக்கு நன்றி. இன்றைய அரசியல்வாதிகளின் மூலதனமே, அடுத்தவர்களின் வறுமைதானே.
Deleteஐயா,
Deleteமறுபடியும் வருவதற்கு மன்னிக்கவேண்டும்.
இங்கு வறுமை பற்றி குறிப்பிடுவது படையினைச் சார்ந்தோர்
வறுமை பற்றி.
ஒரு அரசன் தனது படையினைச் சார்ந்தோரை சோராது காக்கவேண்டும் எனக் குறிப்பிடுவதே இக்குறள் .
நீங்கள் சொன்னதும் சரியே. இது நம் தலைவர்கள் அறியாதது இல்லை.
படை சார்ந்தோர் மட்டுமன்றி படையைப் பார்க்க வருவோர்க்கும்
பிரியாணி கிடைக்கும் காலம் இது.
சுப்பு தாத்தா.
சுப்பு தாத்தா அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. “ இன்றைய தேர்தல் களத்திலே “ என்று நீங்கள் குறிப்பிட்டதால், நானும் அவ்வாறே எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
சங்க இலக்கிய பாடல் மூலம் அழகான கருத்தை தற்காலத்துக்கு உகந்தாற்போல் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனக்கு எப்போதும், உற்சாகம் தரும் பின்னூட்டம் தந்து, என்னை எழுதத் தூண்டும் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.
Deleteவறுமையும் புலமையும் கூடப் பிறந்தவை என்பார்கள். இதற்கு ஏதாவது காரணம் இருக்கத் தான் செய்யும். வறுமையில் தான் புலமை கூர் தீட்டப்படும்; செல்வ வளமையில் செல்லம் சேர்ப்பதிலேயிஏ புத்தி நாட்டம் கொண்டு புலமை மழுகடிக்கப்படும் போலும்..
ReplyDelete//சங்ககாலம் பொற்காலம் என்று சொல்லுவார்கள். ஆனால் சங்ககாலத்திலும், தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லாத வறுமை இருந்ததை அறிய முடிகிறது.//
சங்ககால மன்னர் ஆட்சிகள் என்ன 'இஸத்தில்' (ism) உழன்றன என்பது ஆய்வுக்குரியது.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் யோசிக்க வைக்கும் கருத்துரைக்கு நன்றி. சங்ககால மன்னர்கள் ஆட்சியைப் பற்றிய முழு வரலாறு இன்னும் அறியப்படவில்லை. இன்றைக்கு தமிழக வரலாற்றில் இருக்கும் சங்ககால வரலாறு என்பது தமிழ் ஆர்வலர்களால் எழுதப்பட்ட, அதீத ஆர்வ வரலாறாகவே உள்ளது. குடிமக்கள் பற்றிய இன்னொரு பக்கம் சொல்லப்படவே இல்லை.
Delete// அன்றுமுதல் இன்று வரை எல்லோரும் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழித்து விடுவோம் என்றும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். சொன்னபடி அரசியல்வாதிகள் பலரும் தங்கள், தங்கள் வீடுகளில் இருந்த வறுமையை ஒழித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். //
ReplyDeleteதங்களின் இந்த நகைச்சுவை மிகவும் அருமை. :)
அன்புள்ள V.G.K. அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
Deleteசங்க இலக்கியங்களில் சில வறுமைக் காட்சிகளை ’வீட்டின் நிலைமை’ ‘நாயின் நிலைமை’ ’பாணன் நிலைமை’ என பாடலுடன் விளக்கிச்சொல்லியுள்ளது மிகவும் யோசிக்க வைக்கிறது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்புள்ள V.G.K. அவர்களின் இரண்டாம் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. இந்த கட்டுரை முன்பே எழுதி வைக்கப்பட்டது. எடிட் செய்து இன்னும் அதிக விவரங்களோடு வெளியிட்டு இருக்கலாம். ஒரே அலைச்சல். யோசித்து எழுத நேரமும் இல்லாமல் போய் விட்டது.
Deleteமிக அழகான சங்க இலக்கிய சிறுபாணாற்றுப்படைப் பாடலும் அதன் விளக்கமும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. திருவிளையாடலில் கூட கேள்வி பதிலில் வரும் ...பிரிக்க முடியாதது வறுமையும் புலமையும் என்று நினைவு
ReplyDeleteலக்ஷ்மியும் சரஸ்வதியும் சேர்ந்திருக்கமாட்டார்கள் என்று சொல்லுவதுண்டு அதனாலேயே கொலுவில்கூட லக்ஷ்மி சரஸ்வதிக்கிடையில் பிள்ளையாரை வைப்பார்கள்...
அருமையான பதிவு ஐயா
சகோதரர் ஆசிரியர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி. திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி ஏ.பி.நாகராஜனின் கற்பனைப் பாத்திரம்.
Delete” லக்ஷ்மியும் சரஸ்வதியும் சேர்ந்திருக்கமாட்டார்கள் “ என்ற புராண நம்பிக்கையை சொல்லி, கொலுவில் கூட அவர்கள் இருவரையும் சேர விடமாட்டார்கள் என்ற எனக்கு புதிதான ஒரு தகவலையும் தந்தமைக்கு நன்றி. ‘சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தில் ’கிளைமாக்ஸ்’ காட்சியில் லக்ஷ்மியும் சரஸ்வதியும் சேர்ந்து இருப்பது போல் ஒரு காட்சி வரும் என்று நினைக்கிறேன். ஏ.பி.நாகராஜனின் கற்பனை மிகுந்த கைவண்ணம்.
ஆமாம் தருமி கற்பனைப் பாத்திரம்தான். வசனம் நினைவுக்கு வந்ததால் ...
Deleteசரஸ்வதி சபதம் திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் ஆம் லக்ஷ்மியும் சரஸ்வதியும் சேர்ந்து இருப்பது போல்...அருமையான கற்பனை..
சரஸ்வதியும் லக்ஷ்மியும் சேர்ந்து இருக்க மாட்டார்கள் என்பது மக்களின் நம்பிக்கை அல்லது ஒரு சில அனுபவங்களைக் கொண்டுச் சொல்லப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது ஐயா..
காதின் தோட்டைக் கழட்டி எறிந்து கோழி துரத்திய சங்கப்பாடல் செல்வச் செழிப்புக் கூற வறுமை ஓவியத்தை இச்சிறுபாணாற்றுப்படை நேரில் நிறுத்தியது. மிக்கநன்றி
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வலைப்பக்கம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
Deleteநீங்கள் சொல்வது போல ஒருபக்கம் செழுமை; இன்னொரு பக்கம் வறுமை. அன்றிலிருந்து இன்றுவரை மாறா நிலைமை.
பத்துப்பாட்டில் உள்ள இன்னொரு பாடலான பட்டினப்பாலையில் வரும் காவிரிபூம் பட்டினத்துச் செல்வமகளிர் செல்வச் சிறப்பைக் காட்டும் வரிகளை நினைவு படுத்தியமைக்கு நன்றி.
அகல் நகர் வியன் முற்றத்துச்
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் ( பட்டினப்பாலை 20 – 25)
கரிகாற் பெருவளவன் காலத்தில் காவிரிப் பூம்பட்டினம் இருந்த செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் செய்த கற்பனை நயம் எனலாம்.
தற்போது பக்தி இலக்கியம் படித்து வருகிறேன். நிறைவுற்ற பின் சங்க இலக்கியம் படிக்கவுள்ளேன். தங்களது இப்பதிவு என் ஆர்வத்தை மேம்படுத்திவிட்டது. நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி. பக்தி இலக்கியம் படிப்பதற்கு முன்னர், மு.அருணாசலம் எழுதிய ’ தமிழ் இலக்கிய வரலாறு ‘ என்னும் தொகுதிகளில் பக்தி இலக்கியம் சம்பந்தப்பட்ட தொகுதியைப் படிக்கவும். மிகவும் உதவியாக இருக்கும்.
Delete>> சங்ககாலம் பொற்காலம் என்று சொல்லுவார்கள். ஆனால் சங்ககாலத்திலும், தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லாத வறுமை இருந்ததை அறியமுடிகிறது.<<
ReplyDeleteஇன்றைக்குப் போல தலைமுறைக்கும் நிரந்தர வறுமை என்றில்லாமல் -
அன்றைய சூழல் தற்காலிகமானதாகவே இருந்திருக்கும் என எண்ணுகின்றேன்..
ஆனாலிம் - காலகாலத்திற்கும் வறுமையின் நிலை இப்படியே தான் இருக்கும் போலிருக்கின்றது..
வாழ்வின் ஒருபுறம் வளமை எனில் மறுபுறம் வறுமை தானே!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வதைப் போல வறுமை என்பது தற்காலிக ஒன்றாகவே அன்று இருந்திருக்கலாம்.ஏனெனில் வறுமையைப் போக்கும் வள்ளல்களும் இருந்திருக்கிறார்கள்.
Deleteவறுமை என்பது மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழும் காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆண்டான் அடிமை முறைக்கூட இந்த நிலைத்து வாழும் காலத்திற்குப் பின் ஏற்பட்டவை என்றுதான் சொல்கிறார்கள். அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றிகள்!
ReplyDeleteத ம +1
பத்திரிக்கையாளர் S.P.S. அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteச் எல்வம் என்ற ஒன்று இருந்தால் அது இல்லாத வறுமை என்னும் நிலையும் இருந்திருக்க வேண்டும் அல்லவாஎல்லோருக்கும் செல்வச் செழிப்பில் இருந்த காலம்தான் நினைவுக்கு வரும் சங்ககாலப் பாடல்களை எடுத்தாள்பவரும் விதி விலக்கில்லையே. ஔவையாரின் கூற்று ஒன்றே போதும் வறுமை எக்காலத்துகும் உரியது என்று
ReplyDeleteஅய்யா ஜீஎம்பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இறைவன் படைப்பில் மேடு என்று இருந்தால் பள்ளம் என்ற ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது.
Deleteஉரையாடல் திசை மாறி விட்டதாகத் தோன்றுகிறது. சங்ககாலத்தில் புலவர்கள் வறுமையில் வாடினார்களா என்பதே கேள்வி.
ReplyDeleteஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
-- என்ற உயர்ந்த கொள்கையை கழிதின் யானையார் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.
சங்க இலக்கியம் முழுக்க ஆற்றுப்படுத்துதல் தான். 'நான் போனேன். அந்த மன்னன் கொடுத்தான்; நீயும் போ. உனக்கும் கொடுப்பான்' என்று வழிக்காட்டும் ஆற்றுப்படுத்தல்கள்.
பொன்னும் மணியும் பெற்றார்கள் என்று தெரிகிறது. மன்னர்கள் புகழ்ச்சிப் போதையில் வாரி வழங்கினார்களா தெரியவில்லை. இருந்தாலும் அதுவே
எஞ்ஞான்றும் மன்னர்களின் இயல்பாகத் தெரிகிறது.
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்.
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைக்கிழவோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிற வளனே..
-என்று தன் மனையாட்டியிடம் புலவர் பெருஞ்சித்திரனார் சொல்லும் பாடல் மூலம் தாம் பெற்றதையும் வாரி வழங்கினர் புலவர் பெருமக்கள் என்று உணரலாம். தாம் வறுமைப்பட்டாலும் அவர்களால் இன்னொருவர் வறுமையை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. இது இவ்வளவுக்கும் இடையில் தெரிகின்ற உண்மை.
புலமை பொருளுக்கு மேம்பட்டதாகத் தான் புலமை பெற்றோர் நினைக்கின்றனர். பொருள் தேவையெனின்னும் புலமையை விஞ்சிய ஒன்றாக பொருளை அவர்கள் நினைக்காததுவே அவர்கள் பொருள் ஈட்டுவதையே பொருட்டாகக் கொள்வதில்லையோ என்று தோன்றுகிறது.
நம் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர் சி.சு. செல்லப்பா இதற்கு தகுந்த உதாரணம்.
இன்னொன்று. இன்றும் கூட வறுமை தான் வறுமைக்கு எதிரான போராட்டங்களை நடத்த உந்து சக்தியாக இருக்கிறது.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. சங்ககாலத்தில் புலவர்கள் வறுமையில் வாடினார்களா என்ற கேள்விக்கு, வாடினார்கள் என்பதே எனது பதில். வறுமையை நல்குரவு என்ற பெயரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். திருவள்ளுவர் ‘நல்குரவு’ என்ற பெயரில் ஒரு அதிகாரமே படைத்து இருக்கிறார்.
Deleteஇன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. – திருக்குறள் – 1041
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும – திருக்குறள் – 1045
எனவே நீங்கள் சொல்லுவது போல, சங்ககாலத்தில் வறுமையை போக்கும் வள்ளல்களும், அவர்களிடத்தே புலவர்களை ஆற்றுப் படுத்தும் புலவர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனாலும், தன்னை நாடி வந்த எல்லோருக்குமே அந்த வள்ளல்கள் வாரி வாரி வழங்கி இருக்க முடியாது.
பத்துப்பாட்டு பாடத்தில் படித்தது.
ReplyDeleteமிக அழகாய் விவரித்து சொல்லி இருக்கிறீர்கள்.
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅந்த காலத்தில் பெரும்பாலான புலவர்களோடு உடன் பிறந்தது வறுமை போலும். பொற்காலம் என சொல்லப்பட்ட சங்ககாலத்திலும், வறுமை இருந்ததை, ’சிறுபாணாற்றுப்படை’ என்ற நூலிலிருந்து ஒரு பாடலை பகிர்ந்து அருமையாய் விளக்கியமைக்கு நன்றி. இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteசங்கபாடலையும், நடைமுறை யதார்த்தத்தையும் இணைத்த விதம் அருமை நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 7
தேவகோட்டை நண்பருக்கு நன்றி.
Deleteதவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் ஐயா
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு நன்றி. எனது தந்தையின் (வயது 90) உடல்நிலைமை காரணமாக என்னாலும், முன்புபோல் வலைப்பக்கம் தொடர்ந்து வர இயலவில்லை. செல்போன் வழியே பதிவுகளை படிக்க மட்டுமே நேரம் அமைந்து விடுகிறது.
Deleteஅருமை அண்ணா
ReplyDeleteநன்றி தம்பி!
Deleteபாடலின் கருத்து மிகவும் அருமை...பாடலின் பொருளை எளிமையாக்கி எடுத்துரைத்தமைக்கு நன்றி!!
ReplyDeleteஏதேட்சையாகப் பார்த்த பதிவு...மற்ற பதிவுகளையும் வாசித்து பின்னூட்டம் அளிக்கிறேன்.
சகோதரர் அருள்மொழிவர்மன் அவர்களுக்கு நன்றீ.
Deleteஅன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
ReplyDeleteதஞ்சையம்பதி நண்பர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
Deleteசிறுபாணாற்றுப்படையிலிருந்து வறுமையால் வாடும் பாணனின் நிலைமையைப் பாடல் அழகாக எடுத்துரைக்கிறது. நாயின் நிலைமையும் பரிதாபம்! பாடலின் கருத்தை எல்லோருக்கும் புரியும் படியாக விளக்கியமைக்கு நன்றி. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
Deleteகவிஞர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteஅழகிய தமிழ்ப்பகிர்வு. கவிதையாய் ஒரு கதை. அந்தக் காலத்தில் எல்லா புலவர்களும் மன்னர்களால் சிறப்பாக கவனிக்கப்படவேண்டிய பட்டிருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். வறுமையில் வாடுபவன் வீட்டு அடுப்பில் பூனை உறங்குவதாக உவமை சொல்வார்கள்.
ReplyDelete