Saturday, 19 March 2016

இறைவன் இருக்கின்றானா?



நான் சிறுவயதில், அதாவது பள்ளிப்பருவத்தில், ரொம்பவும் கடவுள் பக்தி உள்ளவன். பள்ளிக்குச் செல்லும்போது, வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு, நெற்றியில் திருநீறு இல்லாமல் சென்றதில்லை.   அப்புறம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, கம்யூனிசத்தோடு நாத்திகமும் பேசியது ஒரு காலம். (இருபத்தைந்து வயதில் கம்யூனிசம் பேசாதவனும், அதற்கு மேலேயும் பேசிக்கொண்டிருப்பவனும் பரிசீலிக்கப் பட வேண்டியவர்கள் என்று சிலர் சொல்லுவார்கள்.) அப்புறம் குடும்பஸ்தனாக மாறி , வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், புயல்கள் காரணமாக கடவுள் நம்பிக்கை வந்தது ஒரு பெரிய கதை. இருந்தாலும் சிலசமயம் நாட்டில் நடக்கும் சில அநியாயங்களைப் பார்க்கும் போதும், அப்பாவி மக்கள் கஷ்ட நிலையில் இருப்பதும், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று வாழும் வலியவர்கள் நன்றாக இருப்பதைக் காணும்போதும் “இறைவன் இருக்கின்றானா?” என்ற கேள்வி மனதில் சிலசமயம் எழத்தான் செய்கிறது.
     
கடவுள் மீது நம்பிக்கையும் கோபமும்:

நாம் ஒருவரை நம்புகிறோம். அவர் நமது நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொண்டால் என்ன சொல்கிறோம்..” ரொம்ப நம்பிக்கையா இருந்தேனுங்க. அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கலை” இதுபோலத்தான் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட தீவிர ஆத்திகர்கள் கூட சிலசமயம் மனம் வெறுத்து “ கடவுள்னு ஒன்னு இருக்கான்னே தெரியவில்லை” என்று மனம் வெறுத்துச் சொல்வதையும் கேட்க முடிகிறது. காரணம் கடவுள் சர்வ சக்தி உள்ளவர்; நியாயவான்; தீயவர்களை தண்டிப்பார் என்ற பெரிய நம்பிக்கை காலங்காலமாக எல்லோருடைய மனதிலும் இருப்பதுதான்.

அண்மையில் ஒரு பதிவர்கூட, தனது உறவினர் இறந்த சோகத்தில் மனம் வெறுத்து - 

// சில வருடங்களுக்கு முன்பு வரை, நானும் ஒரு தெய்வ வழிபாட்டு நெறியினைப் பின்பற்றுபவனாகவே இருந்துள்ளேன். ஆனாலும் நாளடைவில், என் மனவோட்டம் மெல்ல மெல்ல மாறத்தான் தொடங்கியது. காரணம் நான் படித்த புத்தகங்கள், கண்ட காட்சிகள், எதிர்கொண்ட இன்னல்கள், சந்தித்த அனுபவங்கள் பொது நலனை முன் வைத்தும், சுய நலனை முன் வைத்தும், நான் கண்ட காட்சிகள் என்னுள் மாற்றத்தை உருவாக்கின.//

என்று ஆதங்கப்பட்டு எழுதியதோடு ‘கடவுள் கைவிட்டார்’ என்றும் வருத்தப்பட்டு இருந்தார். ஒரு சகோதரி தனது கணவர் இறந்த சோகத்தினாலும், கணவரது நெருங்கிய உறவினர்களே செய்த துரோகத்தினாலும் ‘ இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்? “ என்று தனது வலைப்பதிவினில் ஆற்றாது சொல்லி இருந்தார்.

இலக்கியத்தில்:

இன்று நாட்டில் நடக்கும் கொலை,கொள்ளை, அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் இவற்றைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் “இறைவன் இருக்கின்றானா” என்ற கேள்வி  எழுவது இயல்பான ஒன்றுதான்.
அன்றைய சங்ககாலத்தில் ஒருபுலவர் கண்ட காட்சி , (ஒரு வீட்டில் மணப்பறை முழக்கம்; இன்னொரு வீட்டில் பிணப்பறை முழக்கம்) படைத்தவனையே பண்பு இல்லாதவன் என்று ஏசும் அளவுக்கு அவரது மனம் வெறுத்து இருக்கிறது. இதோ பாடல்.
                                                                                                                                                            
ஓரில் நெய்தல் கறங்க,ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!

(பாடியவர்: பக்குடுக்கை நண்கணியார்
புறநானூறு,  பாடல் வரிசை எண்-194)

‘ஆதி பகவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன்” என்றேல்லாம் சொன்ன வள்ளுவருக்கே, படைத்த அந்த கடவுள் மீதே கோபம் வந்து, அவன் அலைந்து திரிய வேண்டும் என்று சாபம் கொடுக்கிறார். அவர் சொன்ன குறள் இது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (திருக்குறள் – 1062)

(மு.வ உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.)

என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்:

எல்லோருக்கும் இயேசு யார் என்று தெரியும். ஆனாலும் அவரை இன்னார் என்று காட்டிக் கொடுக்க சாட்சி ஒருவன் தேவைப் பட்டான். இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்து முப்பது வெள்ளிக் காசுகளுக்காக விலை போனான். இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். பின்னர் பல்வேறு அவமரியாதை மற்றும் ஆக்கினைகளுக்குப் பிறகு இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அன்றைய பிற்பகல் பூமியெங்கும் ஒரு அடர் இருள் உண்டாயிற்று. இயேசு: ஏலீ! ஏலீ! லெமா சபக்தானி, (Eli, Eli, lema sabachthani?) என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் (அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் My God, my God, why have you forsaken me?) என்று அர்த்தம் சொல்லுகிறார்கள்) பின்னர் மறுபடியும் மகா சப்தமிட்டு இயேசு ஆவியை விடுகிறார். – இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார்.

பிற்பகல் நேரம் பெருகிய வானம்
இருநா ழிகைகள் இருளில் ஆழ்ந்தது!
கண்ணீர் சிந்திக் கலங்கிய வாறு
சிலுவையின் அருகே தேவ அன்னை
மரியா ளோடும் மற்றொரு பெண்ணும்
அருளப் பர்எனும் அன்புச் சீடரும்
நின்றார் அவரை நேரில் நோக்கி,
இயேசு பெருமான் இருவரை விளித்து
"
அம்மா அவருன் அன்பின் மைந்தன்
அருளப் பாஅவர் அன்னை உனக்கு"
என்றே அவரை அன்பில் இணைத்தார்!
மூன்று மணிக்கு மோகன மன்னன்
தோன்றிய தேதோ சொல்லை உயர்த்திச்
சத்தம் இட்டார் தாரணி ஒடுங்க!
"
இறைவா! இறைவா! என்னை ஏனோ
கைவிட் டாயே! கைவிட் டாயே!"
என்றார் உடனே இருந்த சிலபேர்
"
எலியாஸ் தன்னை இவன்அழைக் கின்றான்'
என்றே அவரை ஏளனம் செய்தார்!
மரண நேரம் வந்ததென் றெண்ணி
வேதன் கூற்றை விளக்கிடு மாறு,
"
தாகம் எனக்கெ"னச் சாற்றினார் இயேசு!
ஆத்மதா கத்தை அவர்சொன் னாரென
அறியா திருந்த ஐந்தறி மாக்கள்
கடலில் எடுத்த காளான் தன்னைக்
காடியில் தோய்த்துக் கட்டையில் நீட்டினர்!
அதையும் பெற்ற அன்பின் மைந்தன்,
"
எல்லாம் முடிந்தது!" என்று நவின்றார்!
எல்லாம் என்ற சொல்லின் பொருளை
நல்லோர் யாவரும் நன்றே அறிவார்!
'
தந்தை எனக்குத் தந்ததோர் கடமை
இந்த உலகில்நான் ஏற்றதோர் கடமை
எல்லாம் முடிந்தது' எனமனம் நிறைந்தார்!

கவிஞர் கண்ணதாசன், இயேசு காவியம், (பக்கங்கள் 367 – 368)

ஒரு சினிமா பாடல்:

அவன் பித்தனா? – 1966 இல் வெளிவந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் & விஜயகுமாரி நடித்த தமிழ்ப்படம். அதில் ஒரு பாடல். ஆண்,  "இறைவன் இருக்கின்றானா?" என்று கேட்கிறான். பெண், "மனிதன் இருக்கின்றானா?"  என்று கேட்கிறாள். இருவரது கேள்விகளிலும் நியாயங்கள் இருக்கின்றன.

ஆண் குரல்:
இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை 

பெண் குரல்:
மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

பாடலை முழுவதும் யூடியூப்பில் கண்டு கேட்டிட கீழே உள்ள இணைய முகவரியை சொடுக்குங்கள்:
 
இறைவன் இருக்கின்றான்:

விடை தெரியா கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் சில காரண காரியங்களை வைத்து (ஒவ்வொரு கிரகமும் அதனதன் வட்டப் பாதையில் சுற்றுதல், இந்த பூமியின் செயல்பாடு, மற்றும் பூமியில் உள்ள உயிர்களின் வாழ்க்கை சுழற்சி முறை போன்றவற்றை வைத்து பார்க்கும் போது) நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதனை உணர முடிகிறது. அந்த சக்திக்கு அவரவர் அவரவர் மதத்தில் ஒரு பெயரை வைத்து வணங்குகின்றனர் என்பதாகக் கொள்ளலாம். திருவள்ளுவர் பொதுப்பெயரில் தமிழில் ‘இறைவன், என்று சொல்லுகிறார்.

65 comments:

  1. இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதைப் பற்றி சிந்திப்பதை விடுத்து, அவ்வாறான விவாதத்தை உண்டாக்கும் அறிவினையும், சிந்தனையையும் எழுப்புமளவு நம்மிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றும் நாம் கொள்வோமே.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்ற போதிலும் மூட நம்பிக்கைகள் உடையவன் அல்லன்.

      Delete
  2. மிகவும் சிரமமான, ஆழமான பிரச்சினை. விடை காணுவது அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் கருத்து அப்படியே ஏற்புடைத்து. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். இருந்தாலும் கடவுள் உண்டா இல்லையா என்ற விவாதங்களில் அவ்வளவாக தீவிரம் காட்டுவதில்லை. ஏனெனில் இவற்றில் கேள்விகள்தான் மிஞ்சும். நீங்கள் குறிப்பிட்டதைப் போல அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது.

      Delete
  3. வழக்கம்போல் தங்களின் தனிப்பாணியில் அனைவரையும் யோசிக்க வைக்கும் அருமையான பகிர்வு.

    இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை கவிஞர் கண்ணதாசன் சொல்வதையும், அவன் பித்தனா? சினிமாப்படப் பாடலையும், திருக்குறளையும், இலக்கியத்தில் பக்குடுக்கை நண்கணியாரின் புறநானூறு பாடலையும் எடுத்துக்காட்டாக இங்கு சொல்லியுள்ளது மேலும் தங்களின் தனிச்சிறப்பாகும்.

    பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    ReplyDelete
    Replies
    1. திரு V.G.K. அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எனக்குப் பிடித்தமான பழைய தமிழ் சினிமா பாடல்களில் இதுவும் ஒன்று.

      Delete
  4. அய்யா, தங்களின் விரிவான ஆய்வு கண்டு மகிழ்ந்தேன். ஆனால் என் கேள்விகள் இரண்டு. (1)”நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதனை உணர முடிகிறது” மனிதனை விஞ்சிய சக்திகள் உண்டு. அவற்றை மனிதன் தன் இயல்பிற்குத் திருப்பியோ, இயைந்தோ வாழ்ந்து வளர்ந்து வருகிறான். இது மனிதகுலப் பரிணாம வளர்ச்சியில் காணக்கூடியதே. (2) மனிதனை இறைவன் படைக்கவில்லை, மாறாக, வாழ்ந்த சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு, சூலத்தோடும் புலித்தோலோடும் சிவனையும், சிலுவையோடு ஏசுவையும், வேலோடு முருகனையும், உருவமில்லாமலே அல்லாவையும் அவரவர் கற்பனையில் படைத்தவன் மனிதனே! இது இயக்கவியல் பொருள்முதல்வாத வரலாறு.
    அவசரத்திலும், ஆத்திரத்திலும் நாத்திகரானவர் ஆண்டவனுடன் கோவித்துக் கொள்பவரே தவிர அறிவியல் பார்வைகொண்டு மறுப்பவர் அல்லர். எனவே அவர் சொற்களை விட்டுவிடுங்கள்.
    அன்புடன் உங்களை நான் வேண்டுவது - தமிழ்மொழிபெயர்ப்பு நூல்களில் வேறு எந்த நூலும் பெறாத மொழிபெயர்ப்பில் பெருமைக்குரிய25பதிப்புகளுக்கு மேல் கண்ட “வால்காவிலிருந்து கங்கை வரை” நூலை அவசியம் படிக்க வேண்டும். இன்றும் எல்லா நூலகங்களிலும் கிடைக்கிறது. என்சிபிஎச் கடைகளில் கிடைக்கும். ஆசிரியர் வங்க மொழி அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயன். இது எனது வேண்டுகோள்

    ReplyDelete
    Replies
    1. நான் நூறுசதவீத நாத்திகன், தேவையான இடங்களில் சொல்லத் தயங்கியதில்லை, தேவையில்லாமல் சொல்வதுமில்லை. விவாதித்ததில் என் கருத்தை வைக்கும்போது சொல்வதில் தவறில்லை என்பதால் சொன்னே்ன. மற்றபடி, யாரையும் வற்புறுத்தி முன்நிறுத்துபவனுமல்லன். இறைவனை நம்பாத பல அயோக்கியர்களையும் பார்த்திருக்கிறேன், இறைவனை நம்பும் பல நல்லோரையும் பார்த்திருக்கிறேன். எனவே அவரவர் வாழ்வியல் பின்னணியே தெளிவு தருமன்றி வெறும் பிரச்சாரம் ஒருபோதும் வெற்றிதராது என்பது என் கருத்து. சிந்திப்போர் தெளிவு பெறலாம்.

      Delete
    2. அன்புள்ள ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.! கடவுள் நம்பிக்கை விஷயத்தில் வரிக்கு வரி உங்களோடு விவாதித்து உங்களுடனான எனது நட்பை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. மேலே முனைவர் அய்யா பழனி.கந்தசாமி அவர்கள் குறிப்பிடதைப் போல, ” மிகவும் சிரமமான, ஆழமான பிரச்சினை. விடை காணுவது அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது.”.

      அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களது ’“வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை (தமிழாக்கம்) இரண்டு முறை படித்துள்ளேன். NCBH உடனான எனது அனுபவங்களை ”நானும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும்!” என்ற தலைப்பில் http://tthamizhelango.blogspot.com/2012/07/blog-post_16.html ஒரு பதிவுகூட எழுதி உள்ளேன்.

      Delete
    3. அன்புள்ள ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு மீண்டும் வணக்கம்.! ஒரு காலத்தில் நாத்திகம் பேசுவோரை தவறாக, விரோதியாகப் பார்த்த காலமும் உண்டு. இன்று எல்லாம் மாறி விட்டது. நீங்கள் ஒரு நாத்திகராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. மனித நேயப் பண்பாளர் நீங்கள்.

      தீவிர நாத்திகம் பேசிய நானே இன்று கடவுள் நம்பிக்கை உள்ளவனாக எப்படி மாறினேன் என்பதில் எனக்கே ஆச்சரியம்தான். என்றும் போல உங்களுடையதான எனது நட்பை தொடரவே விரும்புகிறேன்.

      Delete
    4. நட்பிற்கும் கொள்கைக்கும் என்ன வந்தது அய்யா? நிச்சயமாக நாம் தொடர்ந்து நண்பர்களாகவெ இருப்போம். பெரியாரும் ராஜாஜியும் நண்பர்களாக இருக்கவில்லையா என்ன? அடுத்தவரை மதிப்பது வெறும் ஆத்திக நாத்திகத்தால் அல்லவே? நாம் பெரிதும் மதிக்கும் வள்ளுவரும், பாரதியும் இன்ன பல அறிஞர்களும் ஆத்திகர்கள் தான்! அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றனவே? அதே போல நாத்திகர்களிடமும் கற்றுக்கொள்ள வேண்டியவை இருக்கின்றன என்பதே நான் நினைக்கும் ஜனநாயகம். தங்களின் அன்பான பதிலுக்கு நன்றி அய்யா.

      Delete
    5. அன்புள்ள ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களின் அன்பான மறு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  5. இருப்பதாக சொல்பவர்கள் செய்யும் முட்டாள்தனமான செயல்களை பார்த்தால் ,இல்லையென்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது :)

    ReplyDelete
    Replies
    1. இருப்பதாக சொல்பவர்கள் செய்யும் கொடூங்கள்,துரோகங்கள் இவற்றையும் சேர்த்துக்குங்க பகவான்ஜீ :)

      Delete
    2. அதுவும்தான் ,நான் சுருக்கமாய் சொன்னேன் !
      அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்றால் ,இந்த கெட்டவைகள் நடப்பதும் அவன் செயலால்தானே ?இப்படி மனித குலத்துக்கு இம்சை செய்யும் மெகா கிறுக்கன் எப்படி இருக்கக்கூடும் ?

      Delete
    3. நண்பர் பகவான்ஜீ அவர்களே ஆத்திகர், நாத்திகர் இருவருமே மனிதர்கள்தாம். இருவேறு கொள்கைகள் கொண்ட இருவருமே செய்யும் நல்லது, கெட்டது என்ற செயல்கள் ஒன்றுதான். மேலே ஆசிரியர் முத்துநிலவன் அவர்கள் சொன்ன ”இறைவனை நம்பாத பல அயோக்கியர்களையும் பார்த்திருக்கிறேன், இறைவனை நம்பும் பல நல்லோரையும் பார்த்திருக்கிறேன்” என்ற கருத்துரையை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
    4. நண்பர் பகவான்ஜீ அவர்களே கடவுள் என்பதே மனிதனின் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த சித்தாந்தம்தானே. எனவே நம்புகிறவர்களுக்கு அவன் நடராஜன் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

      Delete
  6. நமது சகோதரி தனது உயிர்துணையை பறி கொடுத்த துன்பத்தில் இறைவா ஏன் என்னை கைவிட்டீர்?படிக்க வேதனையாக உள்ளது.
    கண்ணதாசனை பற்றி நான் அறிந்தது இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், அல்லாஹ்வே எல்லாவற்றிலும் பெரியவன் என்றும் காவியம் எழுதியிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. வேகநரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு இஸ்லாமியர் நடத்திய பத்திரிகையில், அந்த நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்குரானுக்கு விளக்கவுரை எழுதத் தொடங்கினார். சிலர் அதை விரும்பவில்லை; கண்டனம் தெரிவித்தார்கள். கண்ணதாசனும் ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு மேற்கொண்டு எழுதுவதை நிறுத்தி விட்டார். (மேலும் அதிக விவரங்களுக்கு : கவியரசு கண்ணதாசன் கதை, ஆசிரியர்:: வணங்காமுடி, பக்கம் – 377)

      Delete
    2. கண்ணதாசன் ஒரு இஸ்லாமியர் நடத்திய பத்திரிகையில் எழுதியது...
      இதுவரை தெரியாத தகவல் தெரியபடுத்தியதற்கு நன்றி.
      நாட்டில் பல மத குருமார்கள், பல மதத்தை சேர்ந்தவர்கள் இருக்க,
      நம்பள்கி அவர்களின் ஹிந்து மத குருமார்களை மட்டுமே குறிவைத்து போட்டு தாக்கும் அவரின் ஒருவளி பாதை தாக்குதலை பற்றி அவரிடம் எடுத்துரைத்த உங்க துணிவுக்கும் நேர்மைக்கும் ஒரு சலூட்.

      Delete
    3. வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நம்பள்கி அவர்கள் ஹிந்து மத குருமார்களின் புரட்டுக்களைப் பற்றி எழுதுவதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர் . எந்த விஷயம் பற்றி எழுதினாலும் ஒரு கொக்கி போட்டு, காரணம் பிராமணர்கள்தான் என்று முடிப்பதில்தான் எனக்கு உடன்பாடில்லை. எனவே இது சரியா என்று கேட்டு இருந்தேன்.

      Delete
  7. இறைவன்தான் மனிதனைப் படைத்தான் என்றே வைத்துக் கொள்வோம்.மனிதனின் ஒவ்வொரு அசைவும் செயலும், அவன் வாழ்வியல் நலனும்,வாழ்வியல் துயரங்களும் இறைவனால் கட்டுப் படுத்தப் படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். ஒரு சிறு சிந்தனை.
    ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில்,ஒரு குறிப்பிட்ட நொடியில் நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது,அதே நேரத்தில் அம்பானி வீட்டிலும் ஒரு குழந்தை பிறக்கிறது.
    இரண்டு குழந்தைகளின் எதிர்காலமும் ஒன்றாக இருக்குமா
    ஒரு வேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் இலட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் நாள்தோறும் பெருகிக் கொண்டே இருக்கிறார்களே,ஏன் இந்த நிலை?
    கடவுளின் பக்தர்கள் என பெருமை பேசிக் கொள்பவர்கள்,நாள்தோறும் கோயிலுக்குச் செல்பவர்கள், வாரம் தவறாமல் விரதம் இருப்பவர்கள் இவர்களின் பலர் நானறிந்த வரையில், மனிதனுக்கு உரிய உயர் குணங்கள் ஏதுமில்லாமல், கொசு பார்த்தலையும், வேலையே பார்க்காமல் சம்பளம் வாங்குவதையும், உழைப்பவர்களைப் பற்றி புறம் பேசுபவர்களாகவுமே இருக்கிறார்களே ஏன்?
    இவர்கள் என்றேனும் மாறுவார்களா?
    யாருக்கும் தெரியாது

    நம்மைப் பொறுத்தவரை நேர்மையாய் இருப்போம்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் கரந்தையாரே!

      Delete
    2. அன்புள்ள ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி. உங்கள் கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

      ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த புதிதில் ”மகத்துப் பெண் ஜகத்தை ஆள்வாள்” என்று சிலர் ‘ஜால்ரா’ தட்டினார்கள். நானும் எனது நண்பர்களிடம் அரசியல் பற்றி பேசும்போது, அப்படியானால் மகத்தில் பிறந்த மற்ற பெண்கள் எப்போது ஆட்சிக்கு வருவார்கள் என்று கேட்டு இருக்கிறேன்.

      Delete
  8. இறைவன் இருக்கிறாரா என்ற கேள்விக்கு கவிஞர் கண்ணதாசனின் வரிகளை ‘கடன்’ வாங்கி சொல்லலாமென நினைக்கிறேன்.

    “தெய்வம் என்றால் அது தெய்வம் - அது சிலை என்றால் வெறும் சிலை தான்
    உண்டென்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை.”
    அருமையான பாடல்களை பகிர்ந்து கேள்விக்கு விடை அளித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வரிகள் அய்யா. மேற்கோள் காட்டிய அய்யா V.N.S. அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. Replies
    1. எனது தவற்றினைச் சுட்டிக் காட்டிய சகோதரர் அவர்களுக்கு நன்றி. மேலே பதிவினில் ’அன்றைய நள்ளிரவில்’ என்று நான் தவறாக எழுதியதை ‘அன்றைய பிற்பகல்’ என்று திருத்தி விட்டேன். (நீங்கள் ஏன் உங்களது கருத்துரையை நீக்கி விட்டீர்கள் என்று தெரியவில்லை.)

      Delete
    2. அன்பின் அண்ணா..

      இவ்விதமாக சொல்லும் போது -
      எழுத்துப் பிழைகளையெல்லாம்
      எண்ணிக் கொண்டிருப்பதா - என்று
      வேறு விதமாக ஆகி விடுகின்றது..

      பொருட்பிழை ஆகாது என்றதால் தான் குறித்தேன்..

      தங்கள் மனதை நானறிவேன்..

      என்றும் அன்புடன்
      துரை செல்வராஜூ.,

      Delete
    3. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களே, எனது பதிவினில் எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, ஒற்றுப் பிழை என எதுவாக இருந்தாலும் சுட்டிக் காட்டலாம். இதுவே எனது வலைத்தளத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும், உங்கள் கருத்துரையைக் கண்டவுன், பிழைதிருத்தம் செய்து விட்டு, வந்து மறுமொழி தந்து கொள்ளலாம் என்றெண்ணி மார்க்கெட் சென்று விட்டேன். வந்து பார்ப்பதற்குள் நீங்கள் எடுத்து விட்டீர்கள்.

      Delete
  10. என் தேவனே!.. என் தேவனே!.. ஏன் என்னைக் கைவிட்டீர்!..

    இறைமகனே கண்ணீர் உகுத்துக் கதறியிருக்கும்போது -
    நாமெல்லாம் எம்மாத்திரம்!..

    ReplyDelete
    Replies
    1. உருக்கமாச் சொன்ன சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜு அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. இறைவனை இயக்குவது மனிதன்!
    மனிதன் என்று சொல்வதை விட ஐயர்கள் என்று சொல்வோம்!

    ஏன் இறைவன் தானாக இயங்க முடியாது? முடியாது! எப்படி சொல்கிறேன்?

    கல்லில் நாம் இறைவனை செதுக்கியவுடன், ஐயர்கள் வந்து ப்ரோகிதம் செய்து சிலைக்கு பவர் கொடுத்தால் தான் அது கடவுளாகும்; இதை நான் சொல்லவில்லை...ஆன்மீகவாதிகள், அறிஞர்கள் சொன்னது!--அவர்கள் கூறியதைத்தான் நானும் கூறுகிறேன்.

    அதே மாதிரி, பன்னிரண்டு வருடம் கழித்து கடவுளின் பவர் போகும் பொது, மறுபடியும், நாம் குடமுழுக்கு செய்து, ஐயர்கள் அந்த சிலைகளின் காதில் மந்திரம் ஓதினால் மட்டும்--மந்திரம் ஓதினால் மட்டுமே-கடவுளக்கு பவர் வரும். இதை[யும்] நான் சொல்லவில்லை...ஆன்மீகவாதிகள், அறிஞர்கள் சொன்னது!--அவர்கள் கூறியதைத்தான் நானும் கூறுகிறேன்.

    அப்ப, நாம் ஏன் கடவுளைக் கும்ம்பிடவேண்டும் என்ற கேள்வி எழுந்த போது, நான் கடவுளைக் கும்பிடாமல், கடவுளை உண்டாக்கிய, கடவுளுக்கு பவர் கொடுத்த பண்டிட்ககளை தான் கும்பிடுகிறேன்! நம்ம வீட்டிலே அந்த சகவாசம் கீது!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உலகில் எல்லா இடத்திலும் மத குருமார்கள்தான் கடவுள், கோயில் சம்பந்தப்பட்ட காரியங்களை கவனிக்கிறார்கள்.யூத குருமார்கள் கிறிஸ்தவ குருக்கள், புத்த பிக்குகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அது போல இங்கு பிராமணர்கள்.நம்புவதும் நம்பாததும் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது.

      நீங்கள் எந்த விஷயம் ஆனாலும் எல்லாவற்றிற்கும் காரணம் பிராமணர்கள்தான் என்று முடிக்கிறீர்கள். இது சரியா?

      Delete
    2. [[[உங்கள் எந்த விஷயம் ஆனாலும் எல்லாவற்றிற்கும் காரணம் பிராமணர்கள்தான் என்று முடிக்கிறீர்கள். இது சரியா?]]

      உங்கள் வாதம் மேலோட்டாமாக பார்த்தல் சரி! ஆழ்ந்து படித்தால் நான் சொல்வது தான் சரி! உதாரணமா, பிராமனர்கள் அவர்கள் என்ன செய்கிறர்கள் என்று அவர்களுக்கு தெரியும்; புத்திசாலிகள். ஆனால், பிராமணர் அல்லாதர்களுக்கு பிராமணர் வாக்கே வேதவாக்கு. பிராமனர்கள் செய்யும் விதண்டா வாதத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறரர்கள். analyze செய்வது சுத்தமாக இல்லை.

      ராஜாஜி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஆங்கிலேயரே ஆளட்டும் என்றார். ராஜாஜி மது விலக்கை கொண்டு வரவில்லை; அப்படி ஊரை ஏமாற்றினார். பாரதி நல்ல கவிஞன்; ஆனால், சுதந்திரப் போராட்ட தியாகி இல்லை. வெள்ளைய அரசின் காலைப் பிடித்தது மன்னிப்பு கேட்டார். சரியான சுய ஜாதிப் பிரியர். இதை எல்லாம் ஆதாரத்துடன் எழுதி உள்ளேன். சாவர்க்கார் மன்னிப்பு கடிதம் எழுதி வெள்ளையனுக்கு அடி பணிகிறேன் என்று எழுதிக் கொடுத்தவர். வாஜ்பாயும் வெள்ளையனே ஆளட்டும் என்று ஜால்ரா போட்டார். R.S.S --உம அப்படியே. இதை எழுதினால், இந்த so-called சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு "பாரத ரத்னா" கொடுத்தது எந்த விதத்தில் நியாyயம், உண்மையான தியாகி, வ. உ. சிக்கு ஏன் கொடுக்கவில்லை என்று "உண்மையை ஆதாரத்துடன்" கேட்டால்...அழகாக விவாதத்தை திருப்பி..."உனக்கு பிராமண துவேஷம்" என்று என் மீது குற்றச்சாட்டு. இந்த திசை திருப்பலுக்கு பிராமணர் அல்லாதார் முழு ஆதரவு!

      இப்ப கூட நீங்கள் நேரடியாக எனக்கு பதில் சொல்லவில்லை. உங்களை அறியாமல் கிருத்துவர்களியும் மற்றவர்களையும் துணைக்கு இழுக்கிறீர்கள். இது அவா செய்யும் விவாதம். நம் மதத்தை கேள்வி கேட்டால், "நீ கிருத்துவன்" என்று விவாதத்தை திசை திருப்பி உள்ளார்கள். இல்லை முஸ்லிம் என்று சொல்வார்கள். பதில் சொல்லவே மாட்டார்கள்--புத்திசாலிகள்

      என் கேள்வி....கல்லுக்கு மந்திரம் சொன்னால் தான் கடவுள்---குடமுழுக்கு செய்து மந்திரம் ஓதா விட்டால் கடவுள் இல்லை--அது கல் தான். இதற்க்கு உங்கள் நேரடியான பதில் என்ன. அதுவும் பிராமணன் செய்தால் தான் கடவுளாகும்--என்னைப் பொறுத்தவரையில் கடவுள் இருக்கோ இல்லையே...அனால், ஒரு மனிதன் கல்லை கடவுள்ளக்கிறான் என்றால், நான் அவனையே கும்பிடுவேன்! மூலம் இருக்க கடவுள் ஏன்?

      வேறு விதமாக ஏன் விவாதத்தை வைக்கிறேன்...நம்ம வீட்டில் (இந்து மதத்தில்) குப்பை இருக்கு வாருங்கள் சுத்தம் செய்யலாம் என்றால், நீங்கள் எதிர்த்த வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் குப்பை இருக்கு என்று சொல்கிறீர்கள். அதனால், இது ஒகே என்கிறீர்கள்...இது சரியா?

      Delete
    3. நம்பள்கி அவர்களின் மறு வருகைக்கு நன்றி. நான் எந்த மதத்தினரையும் இங்கு இழுத்து பேசவில்லை. உங்களிடம் நிறைய விஷய தானங்கள் இருக்கின்றன.. எனவே உங்களுடைய கருத்துக்கள் யாவும் ஒரே திசையில் மட்டுமே போவதால் என்ன பயன் என்ற ஆதங்கத்தின் பேரிலேயே சொன்னேன். மற்றபடி ஒன்றுமில்லை.

      Delete
    4. எனக்கு உங்களைப் பற்றி தெரியும்! நம் அப்பவி பிராமணர் அல்லாத மக்கள் இப்படி ஊடங்கங்கள் பேச்சை நம்பி ஏமாறுகிரார்களே என்ற ஏக்கமும் ஆதங்கமும் ஆதங்கம் தான் நான் அவர்களை விமர்சிக்க வேண்டியுள்ளது? எப்படித்தான் நம் மக்கள் அறியாமையை போக்குவது. ராஜாஜி மடு விலக்கு கொண்டு வரவில்லை என்று ஆதரபூர்வமாக அரசாங்க ஆணைகளை வைத்தே நிரூபித்து உள்ளேன். இருந்தாலும், சோ அவர்கள் இன்னும் ராஜாஜி தான் மது விலக்கு கொண்டுவந்தார் என்று எழுதிக் கொண்டு இருக்கிறார். அந்த உண்மையை சொன்னால் (அவாளுக்கு உண்மைதெரியும்) பிராமணர் அல்லதா மக்கள் பிராமண துவேஷம் என்கிறார்கள். அதவாது அவர்கள் டூப்பு அடித்தாலும், தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டினால் பிராமண துவேஷம் என்று குறை கூறுவது சரியா? இது தான் என் ஏக்கமும் ஆதங்கமும்.

      Delete
    5. உண்மையை யாராவது எடுத்து சொல்லணும்; பூனைக்கு மணி யாராவது மணி கட்டியே தான் ஆகனும்; அந்த வேலையை நான் செய்கிறேன். உண்மையை கூற நாம் ஏன் தயங்க வேண்டும்!

      Delete
  12. Replies
    1. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  13. கடவுளின் வேலை அநியாயங்களை அடக்கவேண்டும் . கஷ்டங்களைத் தீர்க்கவேண்டும் என்பது நம் நினைப்பு .அதாவது our definition of God.அந்த வகையில் பார்த்தால் ..சில சமயங்களில் கடவுள் இருப்பது போலவும் சில சமயங்களில் கடவுள் இல்லாதது போலவும் தோன்றும்.

    ReplyDelete
  14. இறைவன் - தனது மகனைக் கை விட்டாலும்

    தந்தை எனக்குத் தந்ததோர் கடமை..
    இந்த உலகில் நான் ஏற்றதோர் கடமை
    எல்லாம் முடிந்தது.. என்ற மன நிறைவில்
    மண்ணைத் துறந்து விண்ணேற்றமானார்..

    ஒருவேளை - நம்மை அந்த இறைவன்
    கை விடாமல் இருந்தாலும்,

    நாமும் நமது கடமையை
    நல்ல விதமாகச் செய்தோம்
    என்ற மன நிறைவுடன்
    மண்ணைத் துறந்து செல்வோமா?..

    கஷ்டம் நஷ்டம் - பிணி மூப்பு சாக்காடு
    இவற்றைக் கொண்டா இறையை அளப்பது?..

    வறுமையில் துடித்த ஏழையின் அப்பம் தானே
    இறையின் பசியைத் தீர்க்கின்றது...

    உடல் நலமும் பொருள் பலமும் கொண்டவர்
    இல்லங்களில் இறை நுழைந்ததேயில்லை..

    ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு -
    உள்ளம் புண்பட்டுக் கிடந்த ஏதிலியின்
    கண்ணீரை அல்லவோ
    இறை காணிக்கையாக கொண்டது..

    இறை இவ்வுலகிற்கு இறங்கி வந்து
    கடமை முடித்த நிறைவுடன்
    தண்ணீரில் தன்னைக் கரைத்துக் கொண்டது..

    வேடன் விடுத்த கணையால் புண்பட்டு
    விருப்புடன் இங்கிருந்து
    விடை பெற்றுக் கொண்டது

    நாடாண்ட அரசன் நலிவுற்று
    சுடுகாடு ஆளச் சென்றது கதையாகவே
    இருந்தாலும் கருத்தில் கொள்ளத்தானே!..

    அதைக் கருத்தில் கொண்ட
    ஒரு ஆத்மா மகாத்மா ஆனதும்
    மறந்திடப்போமோ?..

    மரணம் என்பது சாதாரணம்..
    சாதா ரணம் - அதைக்
    காலம் விரைவாக ஆற்றும்..

    வறுமையில் வேண்டும் செம்மை..
    பெருக்கத்தில் வேண்டும் பணிவு!..

    நிலையில் திரியாது அடங்கினால்
    இறையை அறியலாம் என்பது திருக்குறள்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் ஆழ்ந்த சிந்தனை வரிகளுக்கு நன்றி.

      Delete
  15. கடவுள் மதம் நம்பிக்கைகள் என்னும் பொருளில் நிறையவே எழுதி இருக்கிறேன். அண்மையில் எழுதிய பதிவு ”நாம் படைத்த கடவுள்கள். பதிவுகளில் பதிவது அவரவருக்குத் தோன்றிய எண்ணங்களைபதிவுலகில் கருதுக்களைச் சொன்னாலும் தவறாகவே மதிக்கப் படுகிறோம் என்னைப் பொறித்த வரை கடவுள் என்பது ஒரு கான்செப்ட். அதை அறிவு பூர்வமாகவும் அணுகலாம் உணர்வு பூர்வமாகவும் அணுகலாம் சரி எது தவறு எது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B. அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. நல்ல பகிர்வு ஐயா. பல மேற்கோள்களைக் காட்டி இருப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  17. சிந்திக்க வைக்கும்
    சிறந்த அலசல் பதிவு
    கண்ணதாசனைப் போல
    இன்னொருவர்
    இவ்வுலகிற்கு இனி வரமாட்டாரே!

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  18. மனிதன் தன்னைப்பற்றி உண்ரும்போது கடவுள் தென்படுகிறார். உணராதபோது இல்லை.

    அதாவது மனிதன் தான் ஒரு கோடானுகோடிக்கணக்கான ஜீவராசிகளில் ஒன்றேயொன்று மட்டுமே. தனக்கு ஆறறிவு இருக்கிறது எனப்து மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்குமே தெரியாதத்தால், இவன் அவர்களுள் ஒன்று.

    இப்படித்தன்னை உண்ரும்போது, பின்னர் இவ்வாழ்க்கை வெறும் உடல் ஜீவிதமாகி பின்னர் மண்ணாகிப்போவதுதானே என்ற விரக்தி வரும்ப்போது அவனின் ஆறறிவால் கடவுள் அவசிய்மாகிறார்.

    க்டவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியைவிட அவசியமா இல்லையா என்ற கேள்வியே முன்வைக்கப்பட வேண்டுமெபதும் ஒரு தத்துவ வாதம். செய்தவர் நாத்திகவாதியான வால்டேர்.

    கடவுள் பற்றி நிறைய வகைவகையான தத்துவவாதங்கள் உள. ஒவ்வொன்றையும் விவரிக்க இங்கியலாது. கடவுள் உண்டா இல்லையா என்று தத்துவ வழி நிரூபித்தவர்கள் பலர். தோமசு அக்குவினாசு ஒருவர்.

    முடிந்தால் தேடிப்படித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கடவுள் உண்டு என்று நிரூபித்தவர்கள் என்று வாசிக்கவும். Please go outside Tamil intellectuals or the so called anmeeka vaathikal. Don't consult atheists.

      Delete
    2. இப்போதைக்கு இவை என்ற கோட்பாடுடைய மலரன்பன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. இறைவன் உண்டு இல்லை என்னும் முடிவற்ற விவாதத்துக்குள்ளும் தனிநபர் சார்ந்த நம்பிக்கைக்குள்ளும் நுழைய விருப்பமில்லை.. எனினும் இப்பதிவில் தாங்கள் மேற்கோளிட்டுள்ள இலக்கியஞ்சார்ந்த பகிர்வுகளை பெரிதும் ரசித்தேன். மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  20. சிக்கலான பிரச்சினை இறைவனை வணங்காதோர் எப்படி வேண்டுமானாலும் வாழட்டும் ஆனால் இறைவனை வணங்குபவர் அப்பழுக்கற்றவராக வாழ வேண்டும் என்பது எனது கருத்து நண்பரே
    தமிழ் மணம் ஆறு மனமே ஆறு

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. என்ன இருந்தாலும் ”இறைவனை வணங்காதோர் எப்படி வேண்டுமானாலும் வாழட்டும்” என்று நீங்கள் சொல்லி இருக்க வேண்டியதில்லை. நாத்திகரான பெரியார் ‘கடவுளை மற; மனிதனை நினை” என்றுதான் சொல்லி இருக்கிறார்.

      Delete
    2. நண்பரே இதன் அர்த்தம் அவருக்கு படைத்தவனின் பயம் இல்லை ஆகவே இப்படிக் குறிப்பிட்டேன் ஆனால் ? நம்புவர் இறைவனுக்கு பயந்து வாழ வேண்டுமல்லவா ?

      Delete
    3. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. சிலசமயம் சொன்னவரின் கருத்து ஒன்றாக இருந்தாலும், எடுத்துக் கொள்ளுபவரின் கருத்து வேறொன்றாக எண்ணும்படி சொல்லப்பட்ட முறையானது தொனித்து விடுகிறது. தவறுக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

      Delete
  21. மிகவும் பாராட்டும்படியான பதிவும், பல பண்பாளர்களின் கருத்துள்ள, நாகரீகமான விவாதங்களும், அற்புதம் ஐயா. அனைவருக்கும் என் வாழ்த்துக்களும், நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  22. எல்லா இடத்திலிருந்தும் எடுத்துக் காட்டி அசத்தி விட்டீர்கள். தசாவதாரத்தில் கமல் சொல்வார் "கடவுள் இல்லையென்று சொல்லவில்லை. இருந்திருக்கலாம் என்று சொல்கிறேன்"

    ReplyDelete
    Replies
    1. ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கும், நடிகர் கமல் சொன்னதை இங்கு குறிப்பிட்டமைக்கும் நன்றி.

      Delete
  23. மிக ஆழ்ந்த பல எடுட்துக்காட்டுகளுடன் அட்டகாசமான கட்டுரை. இராமகிருஷ்ணபரமஹம்சரின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது..."ஓ மனிதனே பகலில் வானில் நட்சத்திரங்களைக் காண முடியவில்லை என்பதால் வானில் நட்சத்திரங்கள் இல்லை என முடியுமா சூரிய ஒளியினால் தெரியவில்லை. அதைப் போல கடவுளை அறிய முடியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்லலமுடியுமா" என்று

    ஆனால் இருப்பதும் இல்லாததும் அவரவர் தனிப்பட்டக் கருத்து. நம்புபவர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்லார் நம்பாதவர்கள் அனைவரும் கெட்டவர்களும் அல்லர்...இது முடிவற்ற விவாதம். அவரவர்க்கு...நல்ல பாடல்க்ளுடன் அருமையான கட்டுரை..

    ReplyDelete
  24. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயமாகவே நான் நினைக்கிறேன்.

    ReplyDelete