தமிழ்நாட்டில் ஜாதி என்பது அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.
நாளையும் இருக்கும். தமிழர்கள் இந்த ஜாதிகளுடனேதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அன்றும் கலப்பு திருமணங்கள் நடைபெற்றன. இன்றும் நடைபெறுகின்றன. நாளையும் நடைபெறும்.
ஆனால் இப்போது சமீப காலமாக தமிழ்நாட்டில் ஜாதிவெறி கொலைகள் எனப்படும் கவுரவக் கொலைகள்
பற்றிய செய்திகள் (இதில் என்ன கவுரவம் என்று தெரியவில்லை) அடிக்கடி வருகின்றன. ஆனால்
கலப்புமணம் செய்துகொண்டு நன்றாக இருக்கும் பலபேருடைய தகவல்கள் வெளிவருவதில்லை.
ஜாதியும் தொழிலும்:
வருணாசிரம அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தொழில் உண்டு. அவரவர்,
அவர்களது குலத்தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்பது இதன் சாராம்சம். ஆனால் எனது ஜாதி,
எனது ஜாதி என்று பேசும் ஜாதித் தலைவர்கள் உட்பட யாரும் அவரவர் ஜாதித் தொழில் செய்வதில்லை.
காலம் மாறிவிட்டது. வரவேற்க வேண்டிய மாற்றம்தான். உதாரணத்திற்கு முன்பெல்லாம் மருத்துவம்
பார்க்கும் தொழிலை நாவிதர்கள் எனப்பட்ட மருத்துவர் ஜாதியினர்தான் பார்த்தார்கள். இப்போது
மருத்துவர் எனப்படும் டாக்டர் தொழிலுக்கு எல்லா ஜாதியினரும் போட்டி போடுகின்றனர். அதேபோல
கட்டிடத் தொழில், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்களை குறிப்பிட்ட ஜாதியார் மட்டுமே செய்தனர்.
இப்போது இதற்கு என்ஜீனியர் படிப்பு, தொழில் என்று போட்டி. எனவே தங்கள் பெயருக்கு முன்னால்
என்ஜீனியர் மற்றும் டாக்டர் அல்லது மருத்துவர் என்று பட்டம் வைத்துக் கொள்கிறார்கள்.
அதேபோல சலவைத் தொழிலை அந்த காலத்தில் வண்ணார் எனப்படுபவர்களே செய்து வந்தனர். இந்த
காலத்தில் டிரை கிளீனர்ஸ் என்ற பெயரில் முதலீடு போடும் பிற சாதியினரே செய்வதைக் காணலாம்.
அதே போல செருப்புக் கடை முதலாளிகள். மற்றும் பல நகராட்சிகளில் குப்பை அள்ளும் ஒப்பந்தக்காரர்கள்.
எனக்கு தெரிந்தவர்கள்:
எனக்குத் தெரிந்து எனது உறவினர்களிலும் சரி , நண்பர்கள் வட்டாரத்திலும்
சரி வெவ்வேறு ஜாதியினைச் சேர்ந்தவர்கள் கலப்பு மணம் செய்துகொண்டு நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
சில பேரை மட்டும், சில சம்பவங்களைமட்டும் இங்கு பெயர் இல்லாது குறிப்பிடுகிறேன்.
எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பேராசிரியர். அவருடைய அம்மா வன்னியர்;
அப்பா ஆதிதிராவிடர். இருவரும் ஒரே கிராமம். இருவரும் காதலித்தார்கள். பெண் வீட்டில்
கடுமையான எதிர்ப்பு. வழக்கம் போல இரு சமூக மோதல்கள். மாறி மாறி பஞ்சாயத்து நடந்தது.
அந்த அம்மா உறுதியாக காதலன் பக்கமே நின்றார். (இந்த சம்பவம் நடந்தது சுமார் 65 வருடங்களுக்கு
முன்னால்) பேராசிரியரின் அப்பாவுக்கு ஒரு நண்பர். அவர் அதே ஊர்ப் பக்கம், தேவர் சமூகத்தைச்
சார்ந்தவர். அவர் தனது தாழ்த்தப்பட்ட நண்பருக்கு உறுதுணையாக நின்று திருமணத்தை நடத்தி
வைத்தார். உள்ளூரில் ஆதிதிராவிடர் தெருவில்தான் இருவரும் கடைசிவரை வாழ்ந்தனர். மூன்று
பெண்கள், மூன்று பையன்கள் (ஆதி திராவிடர் சான்றிதழ்) பையன்கள் நல்ல படிப்பு ; நல்ல
உத்தியோகம். ஆரம்பத்தில் இவர்களோடு பேசாது இருந்த தாய்மாமன்கள் (வன்னியர்) பின்னர்
இவர்கள் வீட்டு நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்ள ஆரம்பித்தனர். அண்மையில் பேராசிரியரின் அம்மா மறைந்தபோது , அந்த அம்மாவின்
வன்னிய உறவினர்களும் வந்து இருந்து செய்ய வேண்டிய சிறப்புகளை செய்தனர். நானும் சென்று
இருந்தேன்.
இன்னொருவர் பொதுத்துறையில் பணிபுரிந்தவர். திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்..
அவர் காதலித்த பெண் ஆதி திராவிடர். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோர்,
பின்னர் அவரது திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்களது ஒரே பையன் தனது அப்பாவழி
சொந்தக்கார பெண்ணை (சைவப் பிள்ளைமார்) திருமணம் செய்து கொண்டார். அவர்களது ஒரே பெண்
அம்மா ஜாதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பையனை மணம் செய்து கொண்டார்.
அடுத்து இன்னொருவர். ஸாப்ட்வேர் என்ஜீனியர். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவர் காதலித்தது ஒரு எஸ்சி பெண் (ஸாப்ட்வேர்). வீட்டில் வழக்கம் போல எதிர்ப்பு. பையனின்
பெரியம்மா மகள் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு பிரச்சினையாகி,
பின்னர் சமாதானம் ஆனவர்கள். அந்த பெரியம்மாவின்
முயற்சியில் இந்த தேவர் – எஸ்ஸி திருமணம் நடந்தது. இருபக்கமும் இருந்து கலந்து
கொண்டார்கள். நானும் சென்று இருந்தேன்.
இன்னொருவர் வங்கி மானேஜர். முத்துராஜா சமூகத்தைச் சார்ந்தவர். அவரது
பெண் (ஸாப்ட்வேர் துறை) காதலித்தது அய்யங்கார் பையனை. அவரும் ஸாப்ட்வேர். இருவர் வீட்டு
சம்மதத்தின் பேரில், அய்யங்கார் சமூக வழக்கப்படி திருமணம் நடந்தது. இதில் ஒரு வேடிக்கை
என்னவென்றால், மணமகள் மடிசார் புடவையில் இருந்தார். நான் இந்த திருமணத்திற்கும் சென்று
இருந்தேன்.
பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்த ஒரு பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்தவர். அவர் ராஜூ வகுப்பைச் சார்ந்த நாயுடு பையனைக் காதலித்தார். அவர் ஒரு பிசினஸ்மேன். இரண்டு பேருடைய பெற்றோரும் நண்பர்கள். எதிர்ப்பு
இல்லை. திருமணம் நடந்தது. நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
பிராமணரில் அய்யர், அய்யங்கார் என்று இரண்டு பிரிவினர். எனது நண்பர்
(அய்யர்) பொதுத்துறை வங்கியில் பணி புரிந்தவர். அவர் தனது பெண்ணின் விருப்பப்படி அவள்
காதலித்த அய்யங்கார் பையனுக்கே , அய்யங்கார் சமூக முறைப்படி திருமணம் நடத்தி வைத்தார்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் கலப்பு திருமணம் செய்து
கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பட்டியலை இங்கு வரிசையிட்டால் கட்டுரை நீண்டு
விடும்.
காரணம் என்ன?
இப்போது இருக்கும் சுதந்திரம் போல் பெண்களுக்கு அப்போது கிடையாது.
பள்ளிக்கூடம் செல்லும் பெண்கள் வயதுக்கு வந்தவுடனேயே பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள்.
பெற்றவர்கள் பார்த்து யாரைக் கட்டிக் கொள்ளச் சொல்கிறார்களோ அவர்களுக்குத்தான் கழுத்தை
நீட்ட வேண்டும். இப்போதோ இருபாலர் கல்வி (Co education), மேற்படிப்பு, கம்ப்யூட்டர்,
செல்போன், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று சமூக வலைதளாங்களைக் கையாளூதல், பெண்கள் வேலைக்குச்
செல்லுதல் என்று பெண்கள் விழிப்புணர்வு விஷயங்கள் அதிகம் வந்து விட்டன. எனவே பெண்கள்
ஜாதிக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதில்லை. காதல் திருமணம் குறிப்பாக கலப்புத் திருமணங்கள்
அதிகம் நடைபெறுகின்றன. அதி தீவிர ஜாதி மற்றும் மத உணர்வாளர்களுக்கும், ஆணாதிக்க உணர்வாளர்களுக்கும்
இதில் உடன்பாடில்லை. மேலும் பெண்ணுக்கும் தகப்பன் சொத்தில் பங்கு உண்டு என்ற இப்போதைய
சட்டம்தான், (பெண் தனக்கு அப்பன் சொத்தில் ஒன்றும் வேண்டாம் என்று சொன்னாலும் ) ஜாதீய
உணர்வாளர்களை அதிகம் கலவரப்படுத்துகிறது.
முன்பெல்லாம் இதுமாதிரி கலப்புமணம் நடந்தால் இது அவர்களுடைய தனிப்பட்ட
விவகாரம் அல்லது குடும்பப் பிரச்சினை என்று இருந்து விடுவார்கள். இப்போதோ அது தங்கள்
சொந்த ஜாதிப் பிரச்சினை என்று சிலர் கிளம்பி விடுகிறார்கள். சொந்த ஜாதிக்காரன் கஷ்டத்தில்
இருக்கும் போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்காதவர்கள் இந்த கலப்புமண விஷயத்தில், குறிப்பாக
ஆண் தாழ்த்தப்பட்டவர் என்றால் வந்து விடுகிறார்கள். இந்த ஊடகங்களும் விவாதம் என்ற பெயரில்
தமிழகத்தை ஒரு ஜாதிவெறிக் களமாகவே மாற்றி வருகின்றன. அதிலும் ஒரு மருத்துவர், தனது அரசியல்
லாபத்திற்காக தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் செய்ய ஆரம்பித்தவுடன் இந்த ஜாதிவெறி இன்னும் அதிகம்
தூண்டப்பட்டு வருகிறது..எல்லா ஜாதியிலும் தன் ஜாதி என்ற உணர்வு கொண்ட தீவிரவாதிகளும் உண்டு; மிதவாதிகளும் உண்டு.
இன்னும் தனது ஜாதியையே கண்டு கொள்ளாதவர்களும் உண்டு.
ஆம். சமீப காலங்களில்தான் இது வழக்கமாகி இருக்கிறது.
ReplyDeleteகருத்துரை தந்த ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
Deleteஜாதி என்ற ஒரு ஜாடியில் சிக்கிக்கொண்ட மீன்கள் தான் நம் சமூகம்.நீ இந்த ஜாதி நான் இந்த ஜாதி என்று ஓயாமல் சொல்லும் உதடுகள் ஏன் சொல்வதில் நான் மனித ஜாதி என்று.ஏன் இப்படிக்கூட சொல்லாலமே ஆண் ஜாதி பெண் ஜாதி என்று இல்லையே.
ReplyDeleteபள்ளியில் ஆரம்பித்து இன்று சமூகத்தில் ஆலமர விழுதாக வேர் ஊன்றிவிட்டது ஐயா.
மகாகவி கூறினாரே "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்பதன் பொருள் இன்றும் சிலருக்கு புரியவில்லை.
நல்ல பதிவு ஐயா.நன்றி.
உவமான உவமேயங்களோடு நல்லதொரு கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி.
Deleteவழக்கம்போல தங்கள் பாணியில் நல்லதொரு அலசலுடன் கூடிய பதிவு.
ReplyDeleteஇப்போது காலம் மிகவும் மாறி வருகிறது. ஆணோ பெண்ணோ அனைவரும் படித்து நல்ல வேலை வாய்ப்பில் இருக்கிறார்கள். பொருளாதார கஷ்டங்களும் முன்புபோல அவ்வளவாக இல்லை.
அதனால் பழமையையெல்லாம் பேசிக்கொண்டு இருக்காமல், வயதுக்கு வந்த ஆணோ பெண்ணோ, தாங்கள் விருப்பப்படும் நபரேயே தங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள, உறவினர்களும் சமூகமும் வழி வகுத்து உதவிட வேண்டும். தடை ஏதும் சொல்லக்கூடாது. யோசிக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புள்ள திரு V.G.K. அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete#அதிலும் ஒரு மருத்துவர்#
ReplyDeleteவரும் தேர்தல் அவருக்கு ஆப்பு வைக்கும் !
நண்பர் பகவான்ஜீ கே.ஏ அவர்களின் நறுக், சுருக் கருத்தினுக்கு நன்றி.
Deleteகலப்புத்திருமணம் செஞ்சுக்கிட்டு நல்லா இருப்பவர்களைச் சொன்னால் பத்ரிகை (அ) தர்மம் என்னாவது? சென்ஸேஷனல் நியூஸ் அவுங்களுக்கு வேண்டிக்கிடக்கே.... :-( 42 ஆண்டுகளுக்கு முன் கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் நாங்கள் என்பதால்.... ஜாதிக்கலவரம் தூண்டிவிடப்படும்போது மனம் பதைக்கிறது.
ReplyDeleteதுளசி டீச்சர் அவர்களின் அன்பான கருத்துரைக்கும், மகிழ்வான தகவலுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.
DeleteGood post with great examples. The present do not know their caste is the good sign of the society.
ReplyDeleteகருத்துரை தந்த வினோத் சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி.
Deleteஎன்றாலும் நீங்கள் கூறுவது போன்ற நிகழ்வுகள் மிகச் சிறுபான்மையே. arranged marriage எனப்படும் பெற்றோர் உறவினர் சம்மதத்துடன் நிகழும் திருமணங்களே அதிகம்.
ReplyDeleteசங்க காலத்தில் ஜாதிகள் இல்லை என்பது என் அறிவு.வேதங்களும் பிராமணர்களும் தமிழ் நாட்டில் ஊடுரிய பிண்பே ஜாதி என்பது பரம்பரையானது.அதுவரை ஒவ்வொருவரும் செய்யும் தொழிலால் அறியப்பட்டனரே தவிர ஜாதி என்ற முத்திரை குத்தப்படவில்லை. (அதாவது மருத்துவர் மகன் படைவீரன் ஆகலாம் என்பது போன்றவை. )
--
Jayakumar
கலப்புத் திருமணம் என்பது சிறுபான்மையான நிகழ்வுதான் என்றாலும், வயதுக்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, ஜாதீயத்தின் பெயரால் அவர்கள் வாழ்வில் மற்றவர்கள் குறுக்கிடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
Deleteநான் பொதுவாகத்தான் அன்றும், இன்றும் ஜாதி இருக்கிறது என்று இங்கு குறிப்பிட்டேன். சங்ககாலத்தில் ஜாதி இருந்ததா இல்லையா என்பது தனி விவாதம். இதுபற்றி பழைய பதிவொன்றில் எழுதி இருக்கிறேன்.
அன்பான நீண்ட கருத்துரை தந்த நண்பர் ஜே.கே என்ற ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
>>> எல்லா ஜாதியிலும் தன் ஜாதி என்ற உணர்வு கொண்ட தீவிரவாதிகளும் உண்டு; மிதவாதிகளும் உண்டு. இன்னும் தனது ஜாதியையே கண்டு கொள்ளாதவர்களும் உண்டு <<<
ReplyDeleteசிந்தித்து செயல்பட்டு வாழ்வில் முன்னேற வேண்டிய தருணம் இது..
வாழ்வதற்கே அன்றி வீழ்வதற்கல்ல - வாழ்க்கை!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநல்ல விளக்கமான சமுதாய விழிப்புணர்வு பதிவு இளங்கோ!
ReplyDeleteபுலவர் அய்யாவின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteபாவிகளுக்கு புரிவது சிரமம் ஐயா.....
ReplyDeleteசகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகலப்புத் திருமணம் செய்தால்
ReplyDeleteதூர இடம் போய்
நன்றே வாழ்ந்து காட்டினால்
மாற்றம் வரலாம்!
கவிஞர் யாழ்பாவாணன் சொல்லும் யோசனையும் நல்ல யோசனைதான். தங்கள் கருத்துரைக்கு நன்றி.
Deleteஒரு அடிப்படைச் செய்தி. மணமக்களில் ஒருவர் SC ஆக இருக்கும்போதுதான் பொதுவாகப் பிரச்சினை ஏற்படுகிறது. அப்படி இல்லாமல் இருந்தால் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமுனைவர் அவர்கள் சொல்வது சரிதான். ஆனாலும் படிப்பு,வேலை, பொருளாதார ரீதியாக தங்களை விட மேம்பட்டு இருந்தால் எஸ்.சியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிற பெற்றோர்களும் உண்டு. சுற்றி இருப்பவர்கள் அடிக்கும் வேப்பிலையில்தான் தடுமாறி உணர்ச்சி வசப்பட்டு கொலை அளவுக்கு போய் விடுகிறார்கள். இன்று சிறையில் இருக்கும் அந்த பெண்ணின் தகப்பன் எதை சாதித்து விட்டார்? - கருத்துரை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி!
Delete
ReplyDeleteபெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டிருந்த சாதிப்பட்டங்களை மறந்திருந்த நம்மவர்களில் பலர் இப்போது திரும்பவும் போட்டுக்கொள்ள ஆரம்பித்திருப்பதைப் பார்க்கும்போது என்ன சொல்ல! என்றைக்கு இந்த சாதி பித்து ஒழிகிறதோ அன்றுதான் தமிழர்களுக்கு விடிவு காலம் என்று எண்ணுகிறேன். வங்கியில் பணியில் இருக்கும்போது இது போன்ற கலப்புத் திருமணங்களையும் அதனால் ஏற்பட்ட சண்டைகளையும், பின்னர் அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறந்தபின் அவர்களது பெற்றோர்களுக்கு ஏற்பட்ட மனமாற்றங்களையும் கண்டிருக்கிறேன். எனவே சட்டங்களை விட காலம் தான் சரியான தீர்ப்பைத் தரும். அதுவரை ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்றார் அவ்வைப் பாட்டி சொன்னதை பாடிக் கொண்டு இருக்கவேண்டியது தான்.
அய்யா V.N.S. அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. தமிழர்களிடம் தமிழன் என்ற உணர்வை விட ஜாதீய உணர்வுதான் இன்று அதிகம் இருக்கிறது.
Deleteஇருமனம் கலந்தால் திருமணம் என்கிறார்கள் ஜாதி பார்த்துக் காதல் வருவதில்லை. சாதிகளுக்கு எதிர்ப்பு கூறும் பலரும் செயலில் வரும்போது தன் ஜாதியையே நாடுகின்றனர் சாதி என்பது பலரது ரத்தத்தில் ஊறிவிட்டது காதல் திருமணங்களே சாதியை ஒழிக்க சிறந்த வழி உணர்வுக்கும் அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில் வழக்கம் போல் உணர்வு வெல்வதே இத்தகைய கலவரங்களுக்குக் காரணம்
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி! .
Delete// உணர்வுக்கும் அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில் வழக்கம் போல் உணர்வு வெல்வதே இத்தகைய கலவரங்களுக்குக் காரணம் //
என்று அருமையாகச் சொன்னீர்கள்.
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
என்ற கண்ணதாசன் பாடல் வரிகளை (படம்: பாகப்பிரிவினை) இங்கு நினைத்துக் கொள்கிறேன்.
சாதி உணர்வை படிப்பு மாற்றும் என்ற எண்ணம் சில வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஆனால் இன்று ஆழமாகப் பார்த்தால் படித்தவர்களிடமும் மிக அதிக அளவில் சாதிப்பற்று ஊறிப்போய் இருக்கிறது. இங்கே நண்பர் ஒருவர் சொல்லியிருப்பதுபோல் விடுபட்டுப்போயிருந்த வழகத்தை மறுபடி கொண்டுவந்து பலபேர் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டத்தைப் போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இது எப்படி நீர்த்துப்போகுமோ பார்க்கவேண்டும்.
ReplyDeleteஎழுத்தாளர் அமுதவன் அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. "படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்" என்பது பாரதி வாக்கு.
Deleteஜாதி வெறி அடங்க
ReplyDeleteவேண்டும் என்றால்
கலப்புத்திருமணம்
வேண்டும் நண்பரே...
நண்பர் அஜய் சுனில்குமார் ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநல்லதொரு பதிவு.
ReplyDeleteகலப்புத் திருமணத்தின் மூலம் ஜாதியை அழிக்க முயற்சிக்கிறார்களே என்று ஜாதிகட்சியை சேர்ந்தவர் தமிழ்மணத்தில் புலம்பியிருக்கிறார்.
வேகநரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்களே, தமிழ்மணத்தில் புலம்பிய அவரை, ஒரு ஜாதிக்கட்சியைச் சேர்ந்தவர் என்று சொன்னபிறகு வேறு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
Deleteவணக்கம் நண்பரே
ReplyDeleteஅருமையாக அலசி உள்ளீர்கள் நடந்த உண்மைச் சம்பவங்களையும் இணைத்து முதலில் ஜாதிரீதியான அமைப்புகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க கூடாது ஆனால் வழங்கும் காரணமென்ன ? ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் இதை மக்களே உணர்ந்து ஒதுங்கினால் இனியாவது இவ்வகை கொலைகள் குறைய சாத்தியமுண்டு நடக்குமா ?
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை.
ReplyDeleteமேடம் அவர்களுக்கு நன்றி!
Deleteஎன்னத்த சொல்ல நாம் என்னதான் செய்தாலும் நம் கண்ணெதிரே எல்லாமே நடந்துகொண்டிருக்கிறது///வேதனை
ReplyDeleteசகோதரரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஐயா, அருமையாக அலசி ஆராய்ந்து எழுதியிருக்கின்றீர்கள்.
ReplyDeleteசமீபத்திய உடுமலைப்பேட்டை நிகழ்வு மிகவும் மனதைப் பாதித்த ஒன்று. என்னதான் நாம் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் முதலிலேயே சொல்லியிருப்பது போல் மாறப்போவதில்லை இனியும் இருக்கத்தான் போகின்றன சாதிகள்.
இங்கு சாதிக் கொலைகள் நடப்பது பார்த்தீர்கள் என்றால் பொதுவாக அதில் யாரேனும் ஒருவர் தாழ்த்தப்பட்டச் சாதி என்று சமூகத்தாரால் சொல்லப்படுபவர்களைக் குறி வைத்து என்றாலும் அவர் நல்ல அந்தஸ்தில், பொருளாதார ரீதியாக இருந்தால் இது போன்று நடப்பதில்லை. எனவே சாதியிலும் பொருளாதாரம் தான் முன்னிலையில் நிற்கின்றது.
படிப்பறிவு என்பதை விட நல்ல சிந்திக்கும் அறிவு இருந்தால் அது மேலோங்கி இருந்தால் இது போன்றவை நிகழாது ஆனால் அந்த அறிவை மழுங்கடிப்பது உணர்ச்சிகளின் கொந்தளிப்பு என்பதால்தான் கொலைகள் சண்டைகள் பிரச்சனைகள். அறிவார்ந்த சிந்தனைகள் நிரந்தரமானது. ஆனால், உணர்ச்சிகளின் விளிம்பில் எழும் சிந்தனைகள் அந்த நிமிடத்தில் எழுந்து வெறியாகிப் பின் அடங்குபவையே. அந்த நிமிடத்தில்தான் இது போன்ற கொலைகள். இன்னும் பல உள்ளன. பதிவு வெளிவர இருப்பதால் இங்கு நீட்டவில்லை ஐயா.
நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பது வேதனையே...
நண்பர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. செவ்வாய்க் கிரகத்தில் குடியேறினாலும் நமது ஆட்கள் அவரவர் ஜாதி என்ற மூட்டையுடன்தான் குடியேறுவார்கள். தங்களுடைய விரிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Deleteபடமே இல்லாத உங்கள் பதிவு...?
ReplyDeleteஆனால் நிறைய பாடம்...
கவிஞர் புதுக்கோட்டை மீரா செல்வகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.. சிலசமயம் படங்களே இல்லாத பதிவுகளும் எனக்கு அமைந்து விடும்.
Deleteஅருமையான பதிவு, பாராட்டுக்கள்..பலரின் நினைவில் மறைந்த கருத்தை விழிப்படையச் செய்துள்ளீர்கள்.
ReplyDeleteசாதி என்ற பெயரில் நிகழ்ந்த/நிகழும் இக்கொடூரங்கள் மறையும் காலம் வெகுதொலைவில் இல்லை. நான் கல்லூரியில் படித்த காலத்தில் (2001-2005), என்னுடன் பயின்ற நண்பர்களின் சாதியை இதுவரை நான் அறியேன், அதே நிலைப்பாடுதான் அவர்களிடமும். பள்ளியிலும் சரி, கல்லூரி விடுதியிலும் சரி நண்பனின் சாதியைப் பற்றிக் கேட்டதில்லை, கேட்க விருப்பப்பட்டதுமில்லை. கல்வியினால் இச்சமூகம் சிறப்படையும், அது சாதியை அழிக்கும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த சான்றாகும்.
இன்று கற்றவர்கள் பலரும் சாதிப் பேய் என்ற போர்வையினுள்ளனர் என்பதையும் நினைவு கூறவேண்டும்.
காதலும் கல்வியும் ஒன்றல்ல, எனினும் இக்காதலும் சாதியை ஒருநாள் அழிக்கும். சாதியினால் அழிந்த இன்றைய காதல், நாளை அந்தச் சாதியையே ஒழிக்கும்.
மதவெறியை பிரசவிக்கும் இன்றைய சாதிக்கட்சிகளும் நாளைய கல்விக் கடலில் அழியும்.
இன்றைய கலப்பு மணங்கள் நேற்றைய சாதியை அழித்து நாளைய சமூகத்தை ஒன்றிணைக்கும்! எனக்கு நம்பிக்கையுள்ளது.
சகோதரர் அருள்மொழிவர்மன் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி. நான் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்றவன். அன்றும் BC மற்றும் SC மாணவர் ஹாஸ்டல்கள் இருந்தன. இன்றைய தினம் மாணவர்களிடையே ஊடுருவி நிற்கும் ஜாதி வெறி, துவேஷம் அன்று இல்லை. ஒரே ஊராக இருந்தாலும் ஜாதி கடந்து மாணவர்களிடையே நட்பு நிலவியது., இதனால் கலப்பு மணங்கள் பெரிதாக பிரச்சினை ஆக்கப்பட்டதில்லை.
Delete