பொங்கலும் பொதுத்தேர்தலும் ஒருசேர வந்து விட்டதாலோ என்னவோ, இப்போது
ஜல்லிக்கட்டு பிரமாதமாய் பேசப்படுகிறது. அதிலும் இந்த அரசியல்வாதிகள், ஏதோ தமிழர்கள்
அனைவரும் ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு பொங்கும் பூம்புனலாய் தமிழ், தமிழன் என்று
ஒற்றுமையாக இருப்பது போலவும் பேசி வருகின்றனர்.
தமிழர் பண்பாடு:
தமிழ்நாட்டில் இப்போது சிலர் எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழன் என்று
சாயம் பூசுகிறார்கள். அந்த வகையில் பழைய ஏறுதழுவல் என்பதுதான் இன்றைய ஜல்லிக்கட்டு
என்றும் , தமிழர் வீர விளையாட்டு என்பதால் அதை தடை செய்யக்கூடாது என்றும் பேசுகிறார்கள்.
உண்மையில் அன்றைய ஏறுதழுவல் என்பதற்கும் இன்றைய ஜல்லிக்கட்டுக்கும் நிறையவே வித்தியாசங்கள்.
அன்றைய ஏறு தழுவலில் ஒரு காளையை பட்டியிலிருந்து திறந்து விட்டவுடன்,
ஒரு வீரன்தான் அதன் மீது பாய்வான்; காளையின் திமிலை அழுத்திப் பிடித்து அடக்குவான்.
( மாட்டின் திமிலை அழுத்திப் பிடித்தால் அதன் மூர்க்க குணம் அடங்கிவிடும். எனது மாணவப்
பருவத்தில் நான், எங்கள் தாத்தா வீட்டு மாடுகளை தொழுவத்தில் கட்டும்போது, சில காளைகள்
நிற்காது; அப்போது அவற்றின் திமிலை அமுக்கச் சொல்வார்கள்; அமுக்கியதும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள்
வந்துவிடும்.) இன்றோ ஒரு மாட்டின்மீது பலரும் பாய்கின்றார்கள்.
அதிலும் இன்னொரு கதை. மாட்டை அடக்கும் வீரனுக்கு, அந்த மாட்டின்
சொந்தக்காரர் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்து விடுவாராம். சங்க இலக்கியங்களில்
சொல்லப்படாத கதை. வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா வந்தவுடன் இந்த கதைக்கு இன்னும் வலு
சேர்ந்தது என்பதே உண்மை. அந்த படத்தில் வரும் ஒரு வசனம் “ அடி வெள்ளையம்மா ஓங் காளைக்கு
வந்ததுடியம்மா ஆபத்து”
இன்னும் சிலர் ஜல்லிக்கட்டு காளைதான் ஒவ்வொரு ஊரிலும் இனவிருத்திக்காக
பயன்படுவது போல் எழுதுகின்றனர். உண்மையில் கோயிலுக்காக நேர்ந்து விடும் காளைகளே இனவிருத்திக்காக
பயன்படுகின்றன. இவற்றை கிராமங்களில் பொலிகாளைகள் என்பார்கள். இந்த கோயில் மாடுகளை யாரும்
கட்டிப் போட்டு வளர்ப்பது இல்லை.. அவை பாட்டுக்கு திரியும், மேயும். ஊர் மக்களும் அவற்றிற்கு
தீனி, கழுநீர் வைப்பார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கட்டிப்
போட்டே சீற்றத்துடன் வளர்ப்பார்கள். இவை ஜல்லிக்கட்டு முடிந்து பட்டியை விட்டு வெளியே வந்து விட்டாலும், மனிதர்கள்
மீது ஆக்ரோஷமாகவே இருக்கும். வழியில் தென்படுபவர்கள் மீது பாயவும் செய்யும். எனவே பொலிகாளை
எனப்படும் கோயில் காளையை ஜல்லிக்கட்டு காளையோடு ஒப்பிடக் கூடாது. மேலும் ஜல்லிக்கட்டு
காளையை இனவிருத்திக்கு விட்டால், அதன் முரட்டுத்தன்மை குறைந்துவிடும் என்ற நம்பிக்கையின்
காரணமாக, மாட்டின் உரிமையாளர் அவற்றை இணை சேர விடுவதில்லை என்பதே உண்மை.
தமிழர் பண்பாடு என்றால், சங்க இலக்கியத்தில், அகப்பாடல்களில் வரும்,
தமிழர்களின் ‘‘பரத்தையர் ஒழுக்கம்’ பற்றி என்னவென்று எடுத்துக் கொள்வது?
(ஏறுதழுவல் பற்றிய அதிக விவரங்களத் தெரிந்து கொள்ள, நமது அன்பிற்குரிய
ஆங்கில ஆசிரியர் திரு.ஜோசப் விஜூ அவர்கள் (ஊமைக் கனவுகள்) http://oomaikkanavugal.blogspot.com/2016/01/1.html
எழுதிய ’ஜல்லிக்கட்டு’ பற்றிய கட்டுரைகளில்
காணலாம்.)
ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள்:
பெரும்பாலும் இந்த ஜல்லிக்கட்டை நடத்துவதில் அந்த ஊர் பெருந்தனக்காரர்கள்
எனப்படும் பெரிய மனிதர்களும், பழைய ஜமீன்தார் முறையில் வாழ்க்கை நடத்துபவர்களும்தான்
ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்களோ அல்லது இவர்களது பிள்ளைகளோ யாரும் களத்தில்
நின்று மாடுபிடிக்கப் போவதில்லை. விலங்கு, மனிதன் போடும் சண்டையை ரசிக்கும் ஒருவித
குரூர ரசனையின் இன்னொரு வடிவம் எனலாம். ‘ஈகோ’ ( நீயா? நானா? என்ற ) உணர்வோடுதான் ஜல்லிக்கட்டுகள் நடக்கின்றன. மாடுபிடி வீரர்கள் அனைவரும்
சாதாரண பாமரர்களே. உயிரைப் பணயம் வைக்கும் இவர்களுக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
எங்கள் ஊர்ப்பக்கம் (சோழமண்டலம்) இந்த ஜல்லிக்கட்டில் ஜாதி மோதல்களோ, மாடுபிடி தகராறோ அதிகம் வந்ததில்லை. ஒருசில சின்ன தகராறுகள் பத்திரிகைகளில்
மாடுபிடி தகராறு என்ற பெயரில் செய்திகளாக வெளிவரும்.
நீதிமன்ற உத்தரவுகள்:
ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.
எங்கள் அம்மாச்சி ஊர் கோயில்காளை அந்தநாளில் பிரசித்தம். அதை ஜல்லிக்கட்டு நடைபெறும்
இடங்களுக்கு கொண்டு செல்வார்கள். எங்கள் சொந்தக்கார பையன்கள் இருவர் அந்த மாடு செல்லும்
ஊர்களுக்கெல்லாம் கூடவே செல்வார்கள்: படிப்பை இழந்து வாழ்க்கையை வீணடித்ததுதான் அவர்கள்
கண்டபலன்.
அப்போதெல்லாம் மாடு பிடிக்கப்போகும் இளைஞர்கள் மாடு முட்டி, குடல்
சரிந்து இறந்த செய்திகள் அடிக்கடி வரும். அதே போல
கை போனவர்கள், கால் போனவர்கள், கண்ணில் மாட்டின் கொம்பு குத்தி ஒரு கண் குருடானவர்கள்,
படாத இடத்தில் பட்டு ஆண்மை இழந்தவர்கள் பற்றியும் சொல்வார்கள். இதில் மாட்டு வேடிக்கை
பார்க்கப் போய் மாட்டிக் கொண்டவர்களே அதிகம். இவர்களுக்கு எந்தவிதமான இழப்பீட்டையும்
அரசாங்கமோ அல்லது மாட்டு வேடிக்கை நடத்தும் ஊர்க்காரர்களோ அன்று கொடுத்தது கிடையாது.
அப்புறம், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பல கட்டுப்பாடுகள்
விதிக்கப் பட்டன. இழப்பீடுகள் கொடுத்தல் போன்றவை நடைமுறைப் படுத்தப் பட்டன.
தடை வேண்டும்:
நடிகர் ராஜேஷ் – வடிவுக்கரசி - பாக்கியராஜ் நடித்த ஒருபடத்தின்
பெயர் ‘கன்னிப் பருவத்திலே’. இந்த படத்தில் ராஜேஷ் ஒரு மாடுபிடி வீரர். ஒரு காளையை
அடக்கும்போது, அந்தக்காளை அவரது உயிர்நிலையில் முட்டி விடுகிறது. இதனால் ஆண்மையை இழந்து
விடுகிறார். கல்யாணத்திற்குப் பிறகே இந்தக் குறைபாடு தெரிய வருகிறது. இந்த மனப்போராட்டமே
இந்த படத்தின் முக்கிய கரு. வில்லன் பாக்கியராஜ். அப்புறம் என்ன? விடையை யூடியூப்பில்
அல்லது வெள்ளித் திரையில் காண்க.
ஜல்லிக்கட்டால் உயிரிழந்த, காயமடைந்த குடும்பத்தினர் பற்றி யாரும்
கவலைப்படுவது கிடையாது. இந்த ஊடகங்கள் அவர்களை பேட்டி எடுப்பதுமில்லை. எனவே காளைகள்
மீதுள்ள இரக்கம், துன்புறுத்தக் கூடாது என்று சிலர் பேசினாலும், மனித உயிர்கள் மீதுள்ள
அக்கறையினால் ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடை வேண்டும்.
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள், ஒரு மாடுபிடி வீரனின் ஆர்வக் கோளாறையும், அந்த ஆர்வத்தால் மாடுபிடிக்கச் சென்று, மாடுமுட்டி ஜல்லிக்கட்டில் இறந்ததையும், அதன்பின்னர் அவன் குடும்பம் படும் அவலத்தினையும், கீழே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அவருடைய பதிவினில் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.
தடம்மாற்றிய பண்டிகை! – சிறுகதை http://manavaijamestamilpandit.blogspot.com/2016/01/blog-post_16.html
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
பிற்சேர்க்கை (16.01.16)
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள், ஒரு மாடுபிடி வீரனின் ஆர்வக் கோளாறையும், அந்த ஆர்வத்தால் மாடுபிடிக்கச் சென்று, மாடுமுட்டி ஜல்லிக்கட்டில் இறந்ததையும், அதன்பின்னர் அவன் குடும்பம் படும் அவலத்தினையும், கீழே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அவருடைய பதிவினில் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.
தடம்மாற்றிய பண்டிகை! – சிறுகதை http://manavaijamestamilpandit.blogspot.com/2016/01/blog-post_16.html
அன்பினும் இனிய நண்பரே
ReplyDeleteதங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
இணையில்லாத இன்பத் திருநாளாம்
"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
சகோதரர் யாதவன் நம்பி என்ற புதுவை வேலு அவர்களின் வாழ்த்தினுக்கு நன்றி.
Deleteதங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 2
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
Deleteயாராவது சொல்வார்களா என்று எதிர்பார்த்திருந்தேன் .
ReplyDelete"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
சுப்பு தாத்தா.
சுப்பு தாத்தா அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.
Deleteநானும் உங்கள் கட்சி. ஜல்லிக்கட்டு கூடாது தடை அமலில் தொடரவேண்டும்
ReplyDeleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஎந்த போட்டி எந்த விளையாட்டில் பாதிப்புகள் எல்லை. ஆங்காங்கே நடக்கும் ஒரு சில தவறுகள் மற்றும் பா திப்புகளையும் காரணம் காட்டி ஒட்டு மொத்த நிகழ்வையும் தடை செய்ய வேண்டுமென்றால் , விமானத்தை முதலில் தடை செய்ய வேண்டும். யாரிடம் எல்லாம் மாடு உள்ளதோ அவர்கள் எல்லாருமே சல்லிக்கட்டில் பங்கேற்ப்பார்கள். இதில் சாதி மதம் எல்லாம் புதியதாக பரப்பும் பிரித்தாளும் சூழ்ச்சி.
ReplyDeleteநண்பரே நீங்களூம், நானும், ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை பார்வையாளர்களே. மாடுபிடி வீரர்கள் இல்லை. எனவே நாமிருவரும் இந்த தலைப்பில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம். உண்மையான கருத்து எது என்பதனை மாடுபிடி வீரர்களிடம்தான் கேட்க வேண்டும்.
Delete// யாரிடம் எல்லாம் மாடு உள்ளதோ அவர்கள் எல்லாருமே சல்லிக்கட்டில் பங்கேற்ப்பார்கள். இதில் சாதி மதம் எல்லாம் புதியதாக பரப்பும் பிரித்தாளும் சூழ்ச்சி.//
நீங்கள் சொல்வது ‘மஞ்சு விரட்டு ’. அதில்தான் இப்படி எல்லோரும் பங்கேற்பார்கள். கட்டுரையில் ஜாதி மதம் பற்றிய பிரச்சினைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
ஆனாலும் உச்ச நீதி மன்றம் செய்தது தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக பழனி.கந்தசாமிக்குச் செய்த அநியாயம் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் இது வரையிலும் ஜல்லிக்கட்டைப் பார்த்து இல்லை. இந்த வருடம் அலங்காநல்லூருக்குப் போய் எப்படியும் ஜல்லிக்கட்டைப் பார்த்தே தீருவது என்று முடிவு செய்திருந்தேன். என் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட கொடுங்கோலர்கள் ஒழிக.
ReplyDeleteஆமாங்க, ஜல்லிக்கட்டுன்னா என்னாங்க, புல்லுக்கட்டு மாதிரியா?
முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தது கிடையாது. உறவினர்கள் ” பட்டணத்தில் படிக்கிற புள்ள நீ .. நீயெல்லாம் அங்கு வரக் கூடாது “ என்று தடுத்து விட்டார்கள். வேறொன்றும் இல்லை மாடுபிடியைப் பார்க்க, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருக்கும் கிராமத்து திண்ணைகளில் அல்லது தெருவோரம்தான் நிற்க வேண்டும்; பெரும்பாலும் மாடுகள் வரும் வேகத்தில் வேடிக்கைப் பார்ப்பவர்கள் மீதும் பாயும். வீட்டுக்கு ஒரே பையனான எனக்கு ஏதும் ஆகி விடக் கூடாதே என்ற பயம் அவர்களுக்கு.
Deleteஇப்போது யூடியூப்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நிறையவே இருக்கின்றன. பார்த்து விட்டு உங்கள் கருத்தினை பதிவாகப் போடவும்.
என்னாங்கோ நீங்க. இத்தனை வருஷம் விவசாயக் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுத்திட்டு இருந்திட்டு இப்போ ஜல்லின்னா என்னாங்குறீங்க. அப்போ மண் மணல் ஜல்லி பற்றி எல்லாம் சொல்லிக் கொடுக்கலை? அதுலே இருக்கிற ஜல்லியை எடுத்துக் வேட்டியில் கட்டினால் ஜல்லிக்கட்டு. அம்புட்டுதேன்.
Delete--
Jayakumar
தற்போது அனைத்திலும் அரசியல் வந்துவிட்ட நிலையில் மாற்றுக்கருத்துக் கூறுபவர்களைக்கூட வித்தியாசமான நோக்கில் பார்ப்போர் உள்ளனர். தங்களின் கருத்தை உரிய சான்றுகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteவிவரமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
சகோதரி அவர்களுக்கு நன்றி! எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Deleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!
Deleteஜல்லிக்கட்டு குறித்து எனக்கு எதுவும் தெரியாததால் கருத்து சொல்ல முடியவில்லை.
ReplyDeleteஉங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் ஐயா!
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது யூடியூப்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நிறையவே இருக்கின்றன. மேலும் இது தேர்தலுடன் ஜல்லிக்கட்டு சீசன். நிறையவே கட்டுரைகள் வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படுகின்றன.
Deleteமேலும் சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கு ஜல்லிக்கட்டு இல்லாத இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான உண்மையை தெளிவாக்கும் பதிவு.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை வேண்டும்.
வேகநரி அவர்களுக்கு எனது நன்றியும் உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்களும்.
Deleteநிரந்தர தடைதான் அமுலில் உள்ளது ,வோட்டுப் பொறுக்கி கட்சிகள்தான் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன !
ReplyDeleteசகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
அரசாங்கம் தடை கொண்டு வந்தாலும் இடையில் கிடக்கும் கட்சியின் வால்பிடிகள் விடாதுஐயா...
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! அரசியலில் இப்போது தன்னலமே அதிகம். பொதுமக்கள் நலன் அப்புறம்தான்.
Deleteதைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteசகோதரரின் வாழ்த்துரைக்கு எனது நன்றியும் உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்களும்.
Deleteஉங்கள் பாணியில் கட்டுரை அருமையாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteமுனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களின் கருத்துக்கள் மிகவும் யதார்த்தமாகவும் அவர் பாணியில் வழக்கம்போல் நகைச்சுவையாகவும் அமைந்துள்ளன.
பலரின் மாறுபட்ட கருத்துகள் மூலம் பல விஷயங்களை புதிதாக அறிந்துகொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி! முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பதனை அவர் பதிவுகளின் நடையிலேயே தெரிந்து கொள்ளலாம். (நானும் உங்களைப் போலவும், அவரைப் போலவும் நகைச்சுவையாக எழுத நினைத்தாலும், அந்தக் கால ‘வியாஸம்” போலவே முடிந்து விடுகிறது.
Deleteமாடு பிடிக்க ஒருவர் விரும்பிச்செல்லும்போதே அதன்
ReplyDeleteகுறை நிறைகளை அலசி ஆராய்ந்த பின்தான் செல்ல வேண்டும்.
ஆனாலும் ஒன்று இன்றைய அரசியல் கட்சிகள்இப் பிரச்சினையினை
ஓட்டு வேட்டைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன
வாழ்க தமிழ்நாடு
தம +1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
Deleteஜல்லிக்கட்டு பற்றி எதிர் கருத்து எதுவும் சொன்னாலே நம்மை தமிழின விரோதியாகப் பார்க்கும் இந்த திடீர் அரசியல் சூழலில் நீங்கள் உண்மையை தெளிவாக எழுதியிருப்பதற்கு பாராட்டுக்கள். மஞ்சு விரட்டு என்றழைக்கப்படும் பாரம்பரிய விளையாட்டிற்கும் தற்போதைய ஜல்லிக்கட்டு என்ற "வீர" விளையாட்டிற்கும் வித்தியாசங்கள் இருப்பதாக பலர் சொல்லக் கேள்வி.
ReplyDeleteதுணிச்சலான பதிவு. பாராட்டுக்கள்.
ஜல்லிக்கட்டு பற்றி எதிர் கருத்து எதுவும் சொன்னாலே நம்மை தமிழின விரோதியாகப் பாவிப்பார்கள் என்பது உண்மைதான். சிலர் கழுதை அறியுமா கற்பூரவாசனை என்று கேட்கிறார்கள்.
Deleteசகோதரர் காரிகன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவலைச்சித்தரின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஜல்லிக்கட்டு – தடை வேண்டும் என்று அதற்கு வலுவூட்டக்கூடிய பல கருத்துகளை நன்றாக எடுத்துச் சொன்னீர்கள்.
இதையொட்டி நான் எழுதிய சிறுகதை ‘தடம்மாற்றிய பண்டிகை’ பார்க்கவும்.
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/03/blog-post_20.html#more
நன்றி.
த.ம.8
அன்பு நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்! தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
Deleteமேலே தாங்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சிறுகதையைப் படித்தேன். ஒரு மாடுபிடி வீரனின் ஆர்வக் கோளாறையும், அந்த ஆர்வத்தால் மாடுபிடிக்கச் சென்று, ஜல்லிக்கட்டில் இறந்ததையும், அதன்பின்னர் அவன் குடும்பம் படும் அவலத்தினையும் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.
உங்களது இந்த மீள்பதிவை எனது பதிவினில் , மேலே பிற்சேர்க்கையாக இப்போது சுட்டியாக இணைத்துள்ளேன். நன்றி!
ReplyDeleteஐயா, அருமையான கட்டுரை, வலுவான வாதங்களை முன் வைத்திருக்கிறீர்கள். தமிழகத்தின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு கிடையாது. குறிப்பாக, காங்கேயத்திலோ, சுற்று வட்டாரத்திலோ, எங்கும் கிடையவே கிடையாது.
உள்நாட்டு மாட்டு இனங்களை மறுஉற்பத்தி செய்வதற்கான வழிமுறை என்றொரு புதிய கப்சா இப்போது கிளப்பி விடப்படுகிறது. இது, உண்மை நிலவரம் தெரியாத அரைகுறைகளின் உளறல்.
வர்க்கீஸ் குரியன் வெண்மைப்புரட்சியை தொடங்கிய காலத்திலேயே, உள்நாட்டு மாட்டு இனங்களுக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. காங்கேயம் காளை இனங்கள், பழைய கோட்டை பட்டக்காரர்களின் ஆதரவால் மட்டுமே, உயிர் பிழைத்திருக்கின்றன.
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் எவரும், காளைகளை அடக்க களத்தில் குதிப்பதில்லை என்பதே உண்மை. ‘தன்னுயிர் போனால், தன் குடும்பத்தை யார் காப்பார்’ என்ற யோசனை கூட இல்லாதவர்களே, காளை அடக்கப்புறப்படுகின்றனர். அவர்களை பலி கொடுக்கவும் துணியும் அரசியல்வாதிகளின் மடத்தனத்தை என்னவென்று சொல்வது?
அய்யா ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்களுடைய இந்த பின்னூட்டம் வழியே நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
Deleteஐயா
ReplyDeleteநீங்கள் எழுதியவை உங்களுக்கு நியாயமாகப் படலாம். ஆனால் மற்றவர்கள் கூறிடும் உரிமையிலோ அவர்கள் விளையாட்டிலோ அது நம்மை பாதிக்காதவரை அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுவது நியாயம் இல்லை. விளையாடுபவர்கள் உங்களை ஒன்றும் செய்யவில்லையே? நீங்கள் கூறும் நியாயம் எப்படி என்றால் ரோடில் பஸ் போகிறது. அதனால் விபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் சாகிறார்கள். ஆகவே பஸ் போகக் கூடாது என்பது போல் இருக்கிறது.
--
Jayakumar
நண்பர் JK (ஜெயக்குமார்) அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Delete// நீங்கள் எழுதியவை உங்களுக்கு நியாயமாகப் படலாம். ஆனால் மற்றவர்கள் கூறிடும் உரிமையிலோ அவர்கள் விளையாட்டிலோ அது நம்மை பாதிக்காதவரை அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுவது நியாயம் இல்லை.//
பொதுவில் வந்த ஒன்றைப் பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் எனும்போது, நம்மை பாதிக்காத வரை என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எவன் பெற்ற பிள்ளையோ திமிரில் வந்து மாடு மீது விழுகின்றான், நமக்கென்ன, வேடிக்கை பார்ப்போம் என்பது போலிருக்கிறது உங்கள் வார்த்தை.
மேலும் கட்டுரையில் சொல்லப்பட்ட ( அந்நாளைய ) பையன்கள் இருவருமே எனது நெருங்கிய உறவினர்கள். சினிமா மோகம் போன்று மாட்டு வேடிக்கை மோகம் கொண்டு அலைந்தவர்கள். இதில் ஒருவர் கல்யாணம் ஆகியும் மாட்டு வேடிக்கை பார்க்க கிளம்பி விடுவார். (இப்போது இருவருமே உயிரோடு இல்லை; தற்கொலை மரணங்கள். எனவே பாதிப்பு இல்லாமல் இல்லை. (உடனே அப்படியானால் சினிமாவைத் தடை செய்ய சொல்லுவீர்களா? என்று கேட்டு விடாதீர்கள்)
// விளையாடுபவர்கள் உங்களை ஒன்றும் செய்யவில்லையே? //
மாடுபிடி என்பது விளையாட்டல்ல. உயிரைப் பணயம் வைக்கும் மாடுபிடி வீரருக்கு இதனால் பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. மாடுபிடிக்கு சென்று விட்ட பிள்ளைகளைப் பற்றி, அவர்கள் பெற்றோர் பட்ட பாட்டை நானறிவேன்.
// நீங்கள் கூறும் நியாயம் எப்படி என்றால் ரோடில் பஸ் போகிறது. அதனால் விபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் சாகிறார்கள். ஆகவே பஸ் போகக் கூடாது என்பது போல் இருக்கிறது //
யாருமே இப்படி சொல்ல மாட்டார்கள். நீங்கள் நன்றாகவே கற்பனை செய்கிறீர்கள். ‘சாரி கொஞ்சம் ஓவர்’ என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது...
சரியாச் சொன்னழுர்கள் அய்யா....தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
ReplyDeleteதோழர் வலிப்போக்கன் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி!
Deleteஎனக்கும் ஜல்லிக்கட்டு பற்றி அபிப்ராய பேதங்கள் உண்டு. ஜல்லிக்கட்டின் உள்ளே புதைந்திருக்கும் அரசியலையும் ஓரளவு அறிவேன். அதனை வெளிப்படுத்த முடியாத அளவு பெரும் அரசியல் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதனை ஜல்லிக்கட்டை விரும்புபவர்கள் கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. காளைகளை வளர்ப்பவர்கள் மட்டுமல்ல, மாடு பிடி வீரர்களும் இதற்காகவே உருவாகிறார்கள், உருவாக்கப்படுகிறார்கள்!
ReplyDeleteஜல்லிக்கட்டை விடவும் WWF போன்ற மல்யுத்தங்களையும், குத்துச்சண்டைப் போட்டிகளையும் தடை செய்யவேண்டும் என்பதும் எனது விருப்பம்.
ஆனால் இப்போதைய தடை என்பது இரண்டொரு அரசியல் கட்சிகளும் சட்டத்துறையும் சேர்ந்துகொண்டு ஆடும் மிகப்பெரிய ஆட்டம்.
மரியாதைக்குரிய அய்யா அமுதவன் அவர்களுக்கு வணக்கம். தங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Deleteநான் ஆரம்பத்தில் இது தமிழர் வீர விளையாட்டு என்பதில் பெருமை உடையவனாகவே இருந்தேன். ஆனால் இதில் ஏற்படும் உயிர் இழப்பினையும், பாதிக்கப்பட்டவர்கள் பட்ட பாட்டினையும் பார்த்த பிறகு எனது கருத்தினை மாற்றிக் கொண்டேன். மேலும் இந்த விலங்கு - மனிதன் சண்டையில் ஒளிந்து இருக்கும் ஆதி மனிதனின் குரூர ரசனை , கிரேக்கத்தில் மன்னர்கள் சிங்கத்தையும் அடிமைகளையும் மோத விட்டு ரசித்த வரலாற்றை நினைவு படுத்துவதாக இருக்கிறது. எனவே எனது கருத்தினை எழுதியுள்ளேன்.
நான் பணியில் இருந்த போது, உணவு இடைவேளையின்போது, பலரும் WWF நிகழ்ச்சியைப் பற்றி, பேசும்போது, டீவியில் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று சொல்லக் கேட்டு இருக்கிறேன். காரணம் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பிள்ளைகள் அதேபோல முரட்டுத்தனமாகவே வளர்வதுதான். (டீவியில் காட்டப்படுவதாலேயே பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்பது எல்லோருடைய கருத்தும்)
அப்படியானால் குத்துசண்டை மல்யுத்தம் கத்திசண்டை கபடி ரக்பி போன்ற ஆபத்தான விளையாட்டுகளும் தடை செய்யப்படவேண்டும் அல்லவா?ஏன் கிரிகெட் விளையாட்டில் ஆஸ்திரேலிய வீரர் மரணமடையவில்லையா? தினம் தினம் செத்துப் பிழைக்கும் மீனவர்கள் இல்லையா? மரணம் எங்கு வேண்டுமானலம் எப்போது வேண்டுமானாலும். வரும். கோவில் நெரிசலிலும் வரும். மாடு முட்டியும் வரும். மரணம் காயமடைதல் போன்றவை வெறும் சாக்கு போக்குகள்.
ReplyDelete--
Jayakumar
நண்பர் JK (ஜெயக்குமார்) அவர்களின் அன்பான இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! உங்களின் இந்த வருகை எதிர்பார்த்ததுதான். மேலே DISTILL என்ற நண்பருக்கு சொன்ன
Delete// நண்பரே நீங்களூம், நானும், ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை பார்வையாளர்களே. மாடுபிடி வீரர்கள் இல்லை. எனவே நாமிருவரும் இந்த தலைப்பில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம். உண்மையான கருத்து எது என்பதனை மாடுபிடி வீரர்களிடம்தான் கேட்க வேண்டும்.//
என்ற் மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகின்றேன். மேலும் கூடுதலாக, இறந்து போன, காயம் அடைந்த மாடுபிடி வீரர்களின் குடும்பத்தாரிடமும் கேட்க வேண்டும். நான் ஏற்கனவே உங்களுக்குச் சொன்னது போல ’ உடனே அப்படியானால் சினிமாவைத் தடை செய்ய சொல்லுவீர்களா? என்று கேட்டு விடாதீர்கள்’ என்று சொன்னது போலவே கேட்டு விட்டீர்கள்.
மனிதன் தனது அடிப்படை தேவைகளான உண்ணும் உணவிற்காகவும், இருக்க இடத்திற்காகவும் ஆதியில் அலைந்தபோது கூட மரணம் நேர்ந்து இருக்கிறது. எனவே மரணம் மனித வாழ்வில் புதிதல்ல.
நீங்கள் சொல்லும் பல விளையாட்டுகளில் பல தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உண்டு.. இந்த ஜல்லிக்கட்டில் அவ்வாறு இல்லை. (தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று இருசக்கர வாகன ஓட்டிகளூக்கு கட்டாய ஹெல்மெட் சட்டம் உள்ளது) ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் வருவதற்கு முன்னர் உள்ளாடையாக வெறும் கோவணமும், வரிந்து கட்டிய வேட்டியும், ஒரு அரைக்கை சட்டையும் போட்டுத்தான் மாடு பிடித்தார்கள். இப்போது பனியன், ஜட்டி, டவுசர். ஜல்லிக்கட்டு என்று மாறியுள்ளது. மாடுகளை வளர்ப்பவர்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ இதுவரை ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி வீரர்களாக காட்டிக் கொண்டது கிடையாது. கல்வியும், விழிப்புணர்வும் இல்லாத வரையில் மாடுபிடி வீரர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். இவர்களை வேடிக்கைப் பார்க்கவும் தங்கள் கௌரவத்தைக் காட்டவும் ஆட்கள் இருப்பார்கள்.
மேலே அய்யா அமுதவன் அவர்களுக்கு நான் சொன்ன கருத்தினையும் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் இருவேறு கருத்துக்கள் உண்டு. அந்த வகையில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினைப் பொறுத்தது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. - (திருக்குறள் -423)
ஐயா
ReplyDeleteதங்கள் ஊரான திருச்சியில் நடக்கும் சங்கதி இது. ஆடிப்பெருக்கன்று சிறுவர்கள் காவேரி பாலத்தில் ஓடும் ரயிலின் கூரையில் நின்று ஆற்றில் குதித்து நீந்தும் ஒரு அபாயமான விளையாட்டையும் தடை செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு எற்படுத்துங்களேன்.
இதே போன்று ஹொகெனக்கல்லிலும் பார்வையாளர் கொடுக்கும் 10 20 ரூபாய்க்கு குதிக்கும் சிறுவர்களும் உண்டு.
--
Jayakumar
Deleteநீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் தடை செய்து விடலாம்தான். ஆனால் ஜே.கே என்ற மாடுபிடி வீரருக்கு தனது வீரத்தைக் காட்ட வேலை இல்லாமல் போய்விடுமோ என்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது..
http://www.bbc.com/tamil/india/2016/01/160116_jallikattu
ReplyDeleteநண்பர் பவன் கோபால் அவர்களின் சுட்டிக்கு நன்றி. ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்திதான் பேட்டியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டை நடத்தினால்தான் ஒரு குறிப்பிட்ட மாட்டினம் வாழ முடியும் என்பது விஞ்ஞான பூர்வமானதா என்று தெரியவில்லை.
Delete( குறிப்பு: நான் பீட்டா அல்லது இது போன்ற வேறு எந்த அமைப்பினையும் சாராதவன். ஒரு BLOGGER என்ற முறையில் எனது எண்ணங்களை எழுதியுள்ளேன். என்னைப் போலவே ஜல்லிக்கட்டிற்கு எதிரான கருத்துடையவர்களும் உண்டு என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது )
bbc தமிழ் கொம்ல் சொல்லபட்ட செய்தி பற்றி நீங்க இந்த பதிவிலேயே விளக்கம் அளித்திருக்கிறீர்கள்.
Delete//இன்னும் சிலர் ஜல்லிக்கட்டு காளைதான் ஒவ்வொரு ஊரிலும் இனவிருத்திக்காக பயன்படுவது போல் எழுதுகின்றனர்....//
தமிழனின் பாரம்பரிய வீரதீர விளையாட்டு என்றார்கள், மாட்டின் இனவிருத்திக்கு எதிரான அந்நிய சதி என்றார்கள், ஜல்லிக்கட்டை நடத்துபவர்கள் தமிழக பெரிய முதலாளிகள் என்பதால் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதில் அமெரிக்க முதலாளித்துவம் பீட்டாவின் சதி என்றார்கள், ஜல்லிக்கட்டை தடை செய்வதானால் சாதாரண மக்களின் அன்றாட போக்குவரத்து சேவை பஸ்சையும் தடை செய்ய வேண்டும் என்றார்கள்.
தமிழ் bbcசெய்திபடி ஒரு ஊரில் தமிழ் பெண்கள் ஜல்லிக்கட் இல்லை என்று அழுதாங்களாம். சிலருக்கு தீபாவளி என்றாலே டாஸ்மாக் தான். அது மாதிரியான ஒரு நிலைமை தான் இதுவும்.
அரசும் இவர்களுக்கு ஜல்லிக்கட்டு என்ற காட்டுமிராண்டிதனமான விளையாட்டுக்கு பதிலாக கால்பந்து, டெனிஸ், சைக்கிள் ஓட்டம், கிரிக்கட் என்று அறிமுகபடுத்தி பயிற்ச்சி கொடுத்து அவர்களை நன்றாக வாழவைக்க வேண்டும் வேண்டும்.
வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி..
Deleteஅருமையான பதிவு ஐயா! தங்களின் வாதங்கள் சரியே! எல்லாமே இங்கு அரசியலாகிப் போனது ஐயா.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி
ஆசிரியர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நான் முன்பே சொன்னது போல, எல்லாவற்றிற்கும் இருவேறு கருத்துக்கள் உண்டு. அந்த வகையில் ஜல்லிக்கட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. இங்கு நான் மாட்டைப் பற்றி பேசவில்லை. வீரம் என்ற பெயரில் மாயும் மனிதர்களைக் கருத்தில் கொண்டே எழுதியுள்ளேன்.
Deleteஇங்கு
ReplyDeleteவரலாற்றைப் பார்ப்பதா
வாழ்க்கையைப் பார்ப்பதா
தமிழர்
பண்பாட்டைப் பேணுவதா
தீர்ப்பை
எவர் எழுதுவது
கருத்துரை தந்த கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் வேறு எதனையும் நினைக்க வேண்டாம். ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர் மாடு முட்டியதால், உயிர் போகின்ற வேளையில் அவர் படும் வேதனைகளையும் , உயிர்போன பின்பு அவர் குடும்பத்தினர் அடையும் அவலத்தினையும் நினைத்தாலே போதும். இவற்றை எந்த ஊடகமும் சொல்வதில்லை.
DeleteWell said. Even I hate this cruel festival. The life of a human is important than everything.
ReplyDeleteதம்பி வினோத் சுப்ரமணியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய ஆங்கிலம் / தமிழ் கட்டுரைகள் உள்ள ’THE VOICE OF MY HEART’ என்ற வலைத்தளம் வந்து பார்த்தேன். வாழ்த்துக்கள்.
DeleteA balanced article with relevant reasoning unlike the reckless response of JK
ReplyDeleteபொன்மலை (பொன்மாலை?) பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteஇது தங்களின் தனிப்பட்ட கருத்து, என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
ReplyDeleteநான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் சென்று பார்த்ததில்லை.
ஆனால் ஒன்று கூற இயலும் - இதில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு விளையாட்டினால் விளையும் ஆபத்து தெரியாமலிருக்காது. இவ்விளையாட்டில் பங்குபெறும் வீரர்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. கார் மற்றும் மோட்டார் வண்டி பந்தயத்தில் வீரர்கள் உயிரிழப்பது இயல்பே. பந்தயத் தொகை வேண்டுமென்றால் இவற்றில் அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பந்தயங்களில் பங்குபெறும் வீரர்களுக்கு விளையாட்டின் நன்மை தீமை தெரிந்தேயிருக்கும்.
மதுவினால் ஏற்படும் உயிரிழப்பைப் பற்றி நீங்களும் நானும் ஏன் இந்த அரசும் நீதிமன்றமும் கவலைப்படுவதில்லை, அதற்குத் தடைவிதிக்கவுமில்லை. இதிலெல்லாம் அக்கறையில்லாமல் இருக்கும் நாம் இன்று கொடியுயர்த்தி ஜல்லிக்கட்டை மட்டும் எதிர்க்கின்றோம், நல்ல கொள்கை! மனித உயிரில்தான் நமக்கு எவ்வளவு அக்கறை.
மாடுகளைக் காப்பாற்றும் எண்ணமிருந்தால் மாட்டிறைச்சியை தடை செய்யலாம், மாடுவளர்ப்பை ஊக்குவிக்கலாம், அதுவும் இங்கு கிடையாது. மனித உயிர் முக்கியமென்று கருதினால் இங்கு நடக்கும் ஆயிரம் விஷயங்களை தடை செய்யவேண்டும்.
மதுவையும் கார்ப்பந்தயங்களையும் விரும்பியேற்கும் இச்சமுதாயமும் நீதிமன்றமும் ஏன் இந்த ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடைவிதித்துள்ளது?
நண்பர் அருள்மொழிவர்மன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். (தனிப்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இந்த பக்கம் வர இயலாமல் போய் விட்டது.)
Delete// இது தங்களின் தனிப்பட்ட கருத்து, என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.//
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டும் இல்லை, மற்றவர்களும் இதே கருத்தினை கொண்டு இருக்கிறார்கள் என்பது, மேலே சொல்லப்பட்டுள்ள மற்றவர்களின் கருத்துரை வழியே தெரிந்து கொள்ளலாம். மேலும் மாடுபிடி விழாவிற்குச் சென்று, வாழ்க்கையைத் தொலைத்த எனது உறவினர்கள் பற்றியும், இன்னும் சில எடுத்துக் காட்டுகளையும் மேலே சொல்லி இருக்கிறேன். மேலே உள்ள எனது மறுமொழிகளே இந்த கருத்துரைக்கும் பொருந்தும்.
உங்கள் பதிவுக்குப் பாராட்டுகள். என் கருத்தும் இதுவே! :)
ReplyDeleteமேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. எனது அனுபவத்திலும், எனது மனது பட்டதிலும் எழுதினேன்.
Deleteமதுரையில் இருந்த காலத்தில் அண்ணன் ஒருசமயம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்கப்போய், மாடு எதிர்த்து முட்ட வந்தவுடன் பயந்து ஓடிய மக்களால் அண்ணன் இருந்த இடத்தில் காலரி உடைஞ்சு போய் காலில் நல்ல அடியோடு திரும்பி வந்தார்.
ReplyDeleteமேடம் துளசி டீச்சருக்கு நன்றி.
Deleteதமிழர் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு நடத்தப்படும் இத்தகைய முரட்டு விளையாட்டுகளை வீரம் என்கின்ற போர்வையில் இளைஞர்கள் விளையாடுவது தேவையற்ற ஒன்று என்பதுதான் என்னுடைய கருத்தும். தமிழர் கலாச்சாரம் என்பவர்கள் விவசாயத்திற்கு மனிதர்களுக்கு உதவி செய்யும் காளைகளுக்கு மரியாதை செய்யவே மாட்டுப்பொங்கல் ஏற்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த மாட்டினை முரட்டுத்தனமாகக் கையாளுவதுதான் அவற்றிற்குக் காட்டும் நன்றியா? நான் மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்த அறுபத்து ஒன்பது வயது வரையிலும் ஒருநாளும் அருகில் உள்ள அலங்காநல்லூர் / பாலமேடு சென்று இந்த நிகழ்ச்சியைக் கண்டது இல்லை. அதன் மீது அப்படி ஒரு அலர்ஜி. திருப்பத்தூரில் மின்வாரியப் பொறியாளராக வேலை பார்த்தபோது கூட அருகில் உள்ள சிராவயல் (காரைக்குடி செல்லும் வழி) என்ற ஊரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாகச் சொல்லுவார்கள். பாதுகாப்பாக பெரிய வாகனத்தின் மீது அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு இருந்தபோதும்கூட அங்கு இருந்த மூன்று ஆண்டுகளிலும் ஒரு ஆண்டு கூட சென்று பார்க்கும் அளவுக்குத் துணிச்சல் வரவில்லை. அப்படி ஒரு அலர்ஜி.
ReplyDeleteபெரியவர் என்ஜீனியர் செல்வதுரை அவர்களுக்கு நன்றி.
Deleteநான் மஞ்சுவிரட்டு நிகழ்வில் தீவிரமாக கலந்துகொண்டு அடித்தொழுவில் நின்று ரசிப்பவன். எனக்கேற்ற காளைகள் வரும்போது அடக்கியும் இருக்கிறேன். இருந்தபோதும் மஞ்சுவிரட்டை ஆதரிப்பவன் அல்ல. எனது முதல் பரிசு சிறு கதை நூலில் மஞ்சுவிரட்டால் ஒரு குடும்பம் சீரழிந்ததை "பட்ட மரம் " கதையில் சொல்லியிருப்பேன். தங்களின் கட்டுரை மிகச் சிறப்பாக உண்மையை எடுத்துக்கூறுகிறது. எல்லோரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.
ReplyDeleteஅன்பு நண்பர் கவிஞர் ஆசிரியர் சோலச்சி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. உங்களுக்குள்ளும் ஒரு மாடுபிடி வீரன்; உங்கள் அனுபவங்களை எழுதவும். நீங்கள் எழுதிய ‘பட்டமரம்’ சிறுகதையை வாய்ப்பு கிடைக்கும் போது படித்துப் பார்க்க வேண்டும்.
Delete