Tuesday 8 September 2015

என்ன எழுதுவது?



வலைப்பதிவில் எழுத உட்கார்ந்தால் (அதாங்க கம்யூட்டரில் டைப் செய்ய அமர்ந்தால்) பல சமயங்களில் என்ன எழுதுவது என்றே தோன்றவில்லை. எதையாவது கடமைக்கு தேமே என்று எழுதவும் மனம் ஒப்ப மறுக்கிறது. (நன்கு யோசித்து ஏதோ நம்மால் முடிந்த ஒரு கட்டுரையை வடிவமைத்தால் தாமதமில்லாமல்,  காபி – பேஸ்ட் நண்பர்கள் அதனையும் தமதாக்கிக் கொள்கின்றனர்.

வலைத்தளங்கள் மற்றும் அவற்றை உள்ளடக்கிய தமிழ்மணம் போன்ற திரட்டிகளை வாசிக்கும் ஒரு வாசகனாக மட்டும் இருந்த போது குழப்பம் ஏதும் வந்ததில்லை. இப்போதும் வாசிக்கும் போது, விரும்பும் எவற்றையும் ( அரசியல் ஆன்மீகம் என்று எதுவாயினும்) படித்து விட முடிகிறது. ஆனால் ஒரு வலைப்பதிவராக (BLOGGER) எழுதத் தொடங்கியவுடன் பின்னூட்டம் முதல் கட்டுரை எழுதுவது வரை எல்லாவற்றையும் யோசிக்க வேண்டி உள்ளது.

வலையுலகில் எழுதத் தொடங்கியவுடன், கல்லூரியில் நான் படித்தது தமிழ் இலக்கியம் என்பதால் அது பற்றியே எழுதுவதாக இருந்தது. ஆனால் இலக்கியம் மட்டுமே எழுதிக் கொண்டு இருந்தால் இங்கு குப்பை கொட்ட முடியாது என்பது அனுபவம் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே அனுபவம், அரசியல், சினிமா என்று எழுதத் தொடங்கினேன்.

அனுபவம், ஆன்மீகம்

எனது எழுத்துக்களில் வாசகர்கள் அதிகம் விரும்புவது அனுபவம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான கட்டுரைகள் மட்டுமே. இவைகளுக்கு பின்னூட்டங்களும் அதிகம் வரும். பார்வையாளர்கள் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும். ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற நம்பிக்கையுள்ள நான்,  ஆத்திகம் சம்பந்தமாக கடவுள் நம்பிக்கையோடு எழுதும்போது சில முகமூடிகள் வந்து கொடுக்கும் தொந்தரவுகள் சொல்ல முடியாது.

இலக்கியம், சினிமா:

இலக்கியம் மட்டுமே எழுதினால் அது புலியூர்க் கேசிகன் உரை போன்று செய்யுள் – உரைநடை என்று போய்விடும் என்பதால், சுவாரஸ்யத்திற்கு இலக்கியத்தோடு உலக நடப்பையும் குழைத்து எழுதினால் வாசகர்கள் விரும்பி வாசிக்கிறார்கள். அதிலும் பழைய தமிழ் இலக்கியத்தையும், பழைய தமிழ் சினிமாப் பாடல்களையும் கலந்து எழுதினால் மக்கள் மனதில் நிற்கிறது. முழுக்க முழுக்க சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களையும் வாசகர்கள் விரும்புகிறார்கள்; சினிமா பற்றிய கட்டுரைகளில் மற்றவர்களது படைப்புகளை காப்பி அடிப்பவர்களது சாயம் வெளுத்து விடும்; அவரது படைப்புகளே இப்படித்தான் என்று ஓரங் கட்டப்பட்டு விடும். எனவே சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் ரசித்தவற்றையே எனது அனுபவ வரிகளால் எழுதுகிறேன். 

அரசியல், ஜாதி, மதம்


நமது இந்தியாவில் ஜாதியின் அழுத்தம் அதிகம். பொதுவாக ஒரு மதத்தைப் பற்றிக் கூட எழுதி விடலாம்; ஆனால் எந்த ஜாதியைப் பற்றியும் மட்டும் எழுதிவிட முடியாது. கத்தி மீது நடப்பதைப் போன்றது இது. (பெருமாள் முருகன் எழுதிய ”மாதொரு பாகன்” நாவலின் மீதான சர்ச்சையை இங்கு நினைவில் கொள்ளலாம்) அதே போலத்தான் அரசியல் விமர்சனமும்.

நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் கிடையாது. ஒரு மாறுதலுக்காக அரசியல், ஜாதி, மதம் பற்றி சில கட்டுரைகளை சாதாரணமாகத்தான் எழுதினேன். இவைகளுக்கு பார்வையாளர்கள் அதிகம் வருகிறார்கள். ஆனால் வெளிப்படையாக கருத்துரை தருபவர்களும், எப்போதும் பின்னூட்டம் இடுபவர்களும் நின்று விட்டனர். இது மாதிரியான கட்டுரைகளில் அனானிகளுக்குத்தான் அதிகம் மறுமொழி எழுத வேண்டி இருக்கிறது. பொதுவில் இந்த தலைப்புகளில் என்னிடமிருந்து கட்டுரைகள் வருவதை நண்பர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஏனெனில் வலைத்தள வாசகர்கள் மத்தியில், இந்த  வலைப்பதிவர் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது (BRAND செய்து விடுகிறார்கள் ) 

பிறரது படைப்புகள்:


சிலர், மற்றவர்களுடைய படைப்புகளை அப்படியே தங்களது வலைத்தளத்தில் வெளியிட்டும், சில பகுதிகளை மட்டும் சொல்லியும் படைப்பாளிக்கு நன்றியும் சொல்லி தங்கள் கட்டுரைகளை வெளியிடுகின்றனர். இது ஒரு படைப்பாளியைப் பிரபலமாக்கும் மற்றும் அவரது எழுத்தினை பாராட்டும் செயல். இதில் தப்பேதும் இல்லை.

ஆனால், சிலர் வேறொரு தலைப்பிட்டு தன் பெயரில் வெளியிட்டுக் கொள்கிறார்கள். இன்னும் சிலர்  பத்திரிகைகளில் வெளிவந்தவற்றை அப்படியே வெளியிட்டு, நன்றி என்று பத்திரிகைகள் பெயரை மட்டும் போட்டுவிட்டு, அதன் படைப்பாளியின் பெயரைக் காட்டுவதே இல்லை.  அடுத்தவர் படைப்புகளை வெளியிடுங்கள்; அவற்றிலிருந்து மேற்கோள் காட்டுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. படைத்தவன் பெயரைச் சொல்வதிலும், பாராட்டுவதிலும் இவர்களுக்கு என்ன தயக்கம் என்றே புரியவில்லை. இதுமாதிரி எழுதுவதிலும் எனக்கு மனம் ஒப்பவில்லை.

எனவே அடிக்கடி எழுதா விட்டாலும், வலையுலகில் என்னை யாரும் மறந்துவிடக் கூடாது என்று நிலைநிறுத்திக் கொள்வதற்காகவாவது வலைப்பதிவர் என்ற முறையில், அவ்வப்போது (எனக்கு பிடித்தமான தலைப்புகளில்) எழுதலாம் என்று நினைக்கிறேன். வலைப்பதிவு நண்பர்களின் படைப்புகளை குறிப்பாக புதியவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பின்னூட்டங்களை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுவேன்..

                                        (ALL PICTURES COURTESY : GOOGLE IMAGES)




35 comments:

  1. காப்பி பேஸ்ட் செய்கிறவர்கள் செய்யட்டும் ஐயா
    அது போன்ற மனிதர்களை நாம் மாற்ற முடியாது,
    ஆனாலும் தங்களின் எழுத்துக்களை வாசிக்க,
    பெருமளவிலான வாசகர்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் ஐயா
    எனவே எங்களுக்காக தொடர்ந்து எழுதுங்கள்
    இடைவிடாமல் எழுதுங்கள்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்

      Delete
    2. ஆசிரியர் கரந்தையாரின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
    3. ஆசிரியர் கரந்தையாரின் அன்பான கருத்துரையை வழிமொழிந்த ஆசிரியர் எஸ்.மது (மகிழ்தரு) அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    ‘என்ன எழுதுவது?’ எல்லோரும் யோசிப்பதை தாங்கள் எழுதியிருக்கிறீர்கள். அனுபவம், ஆன்மீகம்,இலக்கியம், சினிமா,அரசியல், ஜாதி, மதம் ஆகிய பலவற்றிலும் பன்முகத் திறமையுடன் தொடர்ந்து தொய்வின்றி எழுதிவருகிறீர்கள். ஓய்விலும் ஓய்வின்றி உழைத்து வருவதைக்கண்டு பல நேரங்களில் வியந்து போயிருக்கிறேன். உடல்நிலையையும் பொருட்படுத்தாது பல இடங்களுக்குச் சென்று நமது வலையுலக நண்பர்களையும் பார்த்து வருகிறீர்கள். தங்களின் செயலைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

    வாழ்த்துகள். நன்றி.
    த.ம.2.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  3. ஆகா நீங்களும் தமிழ் இலக்கியப் புலியா ஆகா ... ஆகா
    வெகு நேர்த்தியாக இருக்கும் உங்கள் எழுத்தைப் பார்க்கும் பொழுதே நினைத்தேன் ...
    தொடருங்கள்
    ஆலோசனைகளுக்கு நன்றி
    தம +

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் எஸ்.மது (மகிழ்தரு) அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. மற்ற வலைப்பதிவர்களோடு ஒப்பிடுகையில் நான் இலக்கியத்தில் புலி இல்லை. வேண்டுமானால் புளி என்று வைத்துக் கொள்ளுங்கள்.

      Delete
  4. என்ன எழுதுவது என்ற கேள்வியைத் தலைப்பாகத் தாங்களே விடுத்து அதற்கான மறுமொழியாகக் கட்டுரையைத் தந்துள்ளீர்கள். நம் எழுத்தை அப்படியே படியாக்கி எழுதுபவர்களைப் பார்த்து கவலைப்படவேண்டியதில்லை. ஏனென்றால் அதனைத் தடுக்கமுடியாது. அவ்வாறு செய்பவர்கள் தாமாகத் திருந்தினால்தான் சரி. பார்த்தது, படித்தது, ரசித்தது என்ற நிலையில் நான் எழுதி வருகிறேன். நேரமும் ஒரு முக்கிய காரணியாகஅமைந்துவிடுகிறது. அடிப்படையில் தமிழ் இலக்கணம் அதிகம் தெரியாததால் சற்றுச் சிரமமாக உள்ளது. இருந்தாலும் எழுதுகிறேன். தாங்கள் பன்முக நோக்கில் எழுதிவருவதைப் பார்க்கிறேன். பல முறை வியந்துள்ளேன், தொடருங்கள். வாசிக்கிறோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் நீண்ட கருத்துரைக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி.

      Delete
  5. தொடர்ந்து வாசிக்கும் பதிவர் நண்பர்கள் அரசியல் பதிவுக்கு பின்னூட்டம் இட மாட்டார்கள் ஐயா... நானுமே அப்படித்தான். அனுபவப் பதிவுகள் எப்போதுமே சுவாரஸ்யம்... நீங்கள் எல்லா விதமாகவும் எழுதுவதால் பல்சுவைப் பதிவராக இருக்கிறீர்கள்....

    ReplyDelete
    Replies

    1. அன்பு சகோதரர் கார்த்திக் சரவணன் (ஸ்கூல் பையன்) அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. நீங்கள் விரும்புவதையே எழுதுங்கள். நிச்சயம் அதை படிப்பவர்கள்/ தங்கள் பதிவை தொடர்பவர்கள் நிச்சயம் விரும்புவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் அன்பான ஆலோசனைக்கு நன்றி.

      Delete
  7. மனதில் சிறிதாக சலிப்பு நுழைந்து கொண்டால் எனக்கும் இதே நிலை ஏற்படுவதுண்டு... அதை தீர்க்க தொழிற்நுட்பம் உட்பட ஏதேனும் ஒரு புதிய அல்லது சிரமமான முயற்சி செய்வேன்... ஆர்வம் தானாக வந்து விடும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் சொல்வது போல இதுவும் ஒருவகையில் சலிப்புதானோ என்னவோ?

      Delete
  8. பதிவர் வேலை ,கத்தி மேல் நடப்பது போலத்தான் :)

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் பகவான் ஜீயின் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும்போதே அவர் எடுத்துக்கொண்ட தலைப்புகளைப் (Subject) பார்க்கும்போதே தெரிந்து கொள்ளலாம்.

      Delete
  9. வலைப்பதிவு நண்பர்களின் படைப்புகளை குறிப்பாக புதியவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பின்னூட்டங்களை
    எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுவேன்..///

    ottu motha pathivil intha varikal nach sir.
    ungalukku ethu thondrukiratho athai eluthungal.
    tharppothu puthiyavarakalai ukkuvippavarkalin ennikkai kurainthathaaka ennukiren.
    ungalin intha muyarchiyaal avarkal
    sorvadaiyaamal elutha uthaviyathaaka irukkum sir.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திருப்பதி மஹேஷ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. பன்முகப் பதிவுகள் பல தங்கள் வலையில் படித்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். ஆதலால் தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி.

      Delete
  11. நானும் இதே நிலைதான்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யாவிற்கு நன்றி.ஒரு கட்டத்தில் வலைப்பதிவர் எல்லோருக்கும் இப்படி தோன்றும் என எண்ணுகிரேன் அய்யா. திரு V.G.K அவர்களும் ஒரு கட்டத்தில் வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்தி விட்டு , இப்போது மீண்டும் எழுதுகிறார்.

      Delete
  12. எழுத வந்த புதிதில் எனக்கும் இப்படியொருநிலை வந்தது...இன்று அபபடி இல்லை பதினோறு தடவை பெயிலாகி இருந்ததால். போனா போவுது என்று பணிரெண்டாவது தடவை என்னை பாசாக்கி விட்டார்கள் பதிவர்களான வாசகர்கள்...

    ReplyDelete
    Replies
    1. தோழரின் நகைச்சுவையான விமர்சனத்திற்கு நன்றி.

      Delete
  13. ஐயா தாங்கள் தமிழ் இலக்கியமா ஆஹா தெரிகின்றது தங்கள் பதிவுகளில்..

    எங்களுக்கும் பல சமயங்களில் தோன்றும் எண்ணம்தான். இருந்தாலும் நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்டபடி எழுதுங்கள் ஐயா! தொடருங்கள்..நாங்களும் தொடர்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதர/சகோதரியரே தமிழ் இலக்கியம்தான். நானும் ஒரு ஆசிரியனாக உங்களில் ஒருவனாக வந்திருக்க வேண்டியவன். வங்கி பக்கம் சென்று விட்டேன்.

      Delete
  14. உங்களின் வங்கிப் பணி அனுபவங்கள், தற்போதைய மாறிய நவீன தொழில் நுட்ப சூழல்கள், நீங்கள் கற்றதும் பெற்றதும் குறித்து எழுதலாமே?

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு வணக்கம். வலைப்பக்கமே உங்களைப் பார்க்க முடியவில்லை. பேஸ்புக்கில் மூழ்கி விட்டீர்களா? உங்கள் யோசனையும் நன்றாக இருக்கிறது. யோசிக்கிறேன்.

      Delete
  15. உங்களுக்குச் சரி என்று படுவதை எழுதுங்கள். எழுத்தில் உண்மை இருந்தால் நிச்சயம் நாலு பேர் படிப்பார்கள். நாம் நமக்காக எழுது கிறோம் உலகில் நாம் தனி இல்லை. நம்மைப்போலும் மக்கள் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்! மனதில் பட்டதை தைரியமாக எழுதுகின்றீர்கள்! தொடருங்கள் நன்றி!

    ReplyDelete
  17. நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete