Thursday, 26 September 2013

சிந்தையை அடக்கி சும்மா இருத்தல்



சிலபேர் சும்மாவே இருக்க மாட்டார்கள். எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சிலபேர் வேலையிலிருந்து ரிடையர்டு ஆனாலும் வேறு வேலை பார்க்க கிளம்பி விடுவார்கள். கேட்டால் வீட்டில் என்னால் சும்மா உட்கார்ந்து இருக்க முடியல சார் “ என்பார்கள். எம் ஆர் ராதாவைப் பற்றி பேசும்போது அவர் சொன்னதாக ஒரு டயாலக். “ ஒரு கலைஞன் சும்மாவே இருக்கக் கூடாது. தூங்கும்போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லை யென்றால் அவனை செத்து விட்டான் என்று தூக்கி புதைத்து விடுவார்கள்


இன்னும் சிலர் இருக்கிறார்கள். யானைப் பாகன்கள். அவர்களுக்கு யானையின் மொழி தெரியும். எவ்வளவு பெரிய யானையாக இருந்தாலும், மதம் பிடித்து இருந்தாலும் தம் வசமாக்கி விடுவார்கள். அவ்வளவு பெரிய யானை இந்த சின்ன மனிதன் சொல்வதைக் கேட்டு உட்கார் என்றால் உட்காரும். நில் என்றால் எழுந்து நிற்கும்.  தெருக்களில் சிலசமயம் சிலர் கரடியைக் காட்டி காசு வாங்க அதனை அழைத்து வருவார்கள் அப்போது அதன் வாயை இரும்பு தகட்டால் இறுக்கி வைத்து இருப்பார்கள்.  சர்க்கஸில் புலி, சிங்கம் இவைகளை ரிங் மாஸ்டர் ஆட்டி வைப்பார். எனவே சிங்கம்,புலி,கரடி வாயையும் கட்டலாம் எனத் தெரிகிறது.


நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் ரசவாதம் (ALCHEMY ) செய்வது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இரும்பு, தாமிரம், பித்தளை, வெள்ளி, காரியம் போன்ற உலோகங்களை பாதரசம் மற்றும் சில மூலிகைகளை சேர்த்து  தங்கமாக மாற்றும் கலை ரசவாதம் எனப்படும்.நம்நாட்டில் சில மூலிகைகள் இருக்கின்றனவாம். அவற்றை கசக்கிப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.  அந்த சாற்றோடு பாதரசம் மற்றும் சில உலோகத் துண்டுகளைப் போட்டு மண் சட்டியில் வைத்து காய்ச்சினால் அவை உருகி தங்கமாக மாறிவிடும். இதை அந்த காலத்து சித்தர்கள் செய்ததாக கதை உண்டு. இந்த டெக்னிக்கைச் சொல்லி இப்போது காசு பறிப்பவர்களும், ஏமாறுபவர்களும் இப்போதும் இருக்கிறார்கள். Alchemist  எனப்படும் ரசவாதம் செய்பவர்கள் பற்றி நிறைய கதைகள் உண்டு.

அப்போதெல்லாம் வாலிப வயோதிக அன்பர்களே! சேலம் சித்த டாக்டர்கள் வருகை! இன்னின்ன நாட்களில் இந்த இந்த விடுதிகளில் தங்குவார்கள். இளமையை மீண்டும் பெறலாம் “ என்று விளம்பரம் பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கும். எத்தனை பேர் இளமையைத் திரும்பப் பெற்றார்கள் என்று தெரியவில்லை. புறநானூற்றில் பிசிராந்தையார் இளமையின் ரகசியத்தை சொல்லுவார். எம்ஜிஆரும் என் டி ராமராவும் நல்ல உணவு நல்ல உடற்பயிற்சி செய்து இளமையாகவே வாழ்ந்தார்கள். இப்போது இளமையாக காட்டிக் கொள்ள தலைச் சாயம் பூசிக் கொள்கிறார்கள். இன்னும் நிறைய வழி முறைகள்.

விக்கிரமாதித்தன் கதைகளில் கூடு விட்டு கூடு பாயும் அதிசயங்களை அடிக்கடி காணலாம். பல தெலுங்கு படங்களிலும்,  டப்பிங் படங்களிலும் ரொம்பவும் சுவாரஸ்யமாக இந்தக் கதையச் சொல்லுவார்கள். நமக்கும் அப்படி கூடு விட்டு கூடு பாய ஆசைதான். உடலுக்கு எங்கே போவது. அப்படியே போனாலும் நமது உடம்பு என்ன ஆவது? நாம் நாமாகவே இருப்பதுதான் நல்லது. பைபிளில் இயேசுநாதர் கடல் மீது நடந்து கடும் புயலையும் மழையையும் நிறுத்தியதாகச் சொல்வார்கள். வடக்கே சிலபேர் தண்ணீரில் நடந்து காட்டுகிறேன் பேர்வழி என்று காமெடி செய்த செய்திகள் உண்டு. செய்ய முடியாதவற்றை கனவு கண்டு ஹாரிபாட்டர் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

ஆக மனிதனால் எல்லா விஷயங்களையும் செய்ய முடியும். யானையை தன் வசப்படுத்தலாம். கரடி, புலி வாயை கட்டலாம். சிங்கத்தின் முதுகின் மேல் சவாரி செய்யலாம். பாம்பை கையில் எடுத்து ஆட்டலாம். ரசவாதத்தினால் தங்கம் செய்து விற்கலாம். யாரும் காணாத நிலையினை அடையலாம். விண்ணவரை அடிமை ஆக்கலாம். எப்போதும் இளமையாகவே இருக்கலாம். கூடு விட்டு கூடு பாயலாம். தண்ணீரின் மேல் நடக்கலாம். நெருப்பின் மீது அமரலாம். தன்னிகரில்லாத சக்திகளை அடையலாம். ஆனாலும் மனிதனால் ஒன்று மட்டும் செய்ய முடியாது. அது சும்மா இருத்தல். அதாவது மனதை அடக்கி ஆண்டு பக்குவ நிலையில் சும்மா இருத்தல்.

மேலே சொன்ன கருத்துக்களை உள்ளடக்கி தாயுமானவர் ஒரு பாடலாக பாடி வைத்து இருக்கிறார். படித்துப் பாருங்கள்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
         
கரடி வெம்புலி வாயையும்
       
கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாங்
          
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
           
வேதித்து விற்றுண்ணலாம்
    
வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
        
விண்ணவரை  ஏவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
         
சரீரத்தி மும் புகுதலாம்
      
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
               
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
             
திறமரிது சத்தாகி யென்
        
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
                  
தேசோ மயானந்தமே.
                                               -      தாயுமானவர். (தேசோமயானந்தம், பாடல் எண்.8)


( தாயுமானவர் திருமறைக்காடு என்று சைவ இலக்கியங்கள் போற்றும் வேதாரண்யத்தில் பிறந்தவர். தமிழகத்தை நாயக்கர்கள் ஆண்டபோது, திருச்சிராப்பள்ளியில் விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக வேலை பார்த்தார். மட்டுவார்குழலி என்ற பெண்ணை திருமணம் செய்தவருக்கு இல்லறத்தில் நாட்டம் இல்லை. எனவே பட்டினத்தார் போன்று துறவறம் மேற்கொண்டு பல கோயில்களுக்குச் சென்று இலட்சுமிபுரம் (ராமநாதபுரம்) என்ற ஊரில் முக்தி அடைந்தார்.)

                            எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
                           
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
                                                                                                         (
பராபரக்கண்ணி - 221)



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )

29 comments:

  1. அருமையான பாடலை எளிமையான அருமையான
    விரிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான விளக்கம்..... பாடலை கருத்துடன் படித்து ரசித்தேன்...

    ReplyDelete
  3. பாடலும் விளக்கமும் அருமை ஐயா...

    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பதிவை வடித்த முறை அழகு .

    ReplyDelete
  5. சும்மா இருக்க முடியாதென்றுதான் "சிவனே" என்று இருக்கச் சொல்லுவார்கள். அழகான விளக்கங்கள். நன்றி.

    ReplyDelete


  6. தாயுமானவரின் அழகான பாடலை அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தாயுமானவரின் கீழ் கண்ட பாடலையும் வரும் பதிவுகளில் விளக்கக் வேண்டுகிறேன்.


    ‘’ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி
    ஆளினும் கடல்மீதினிலே
    ..............................................................................................

    பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூரண ஆனந்தமே.’’

    ReplyDelete
  7. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    // அருமையான பாடலை எளிமையான அருமையான
    விரிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //

    கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    /சிறப்பான விளக்கம்..... பாடலை கருத்துடன் படித்து ரசித்தேன் /
    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  9. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // பாடலும் விளக்கமும் அருமை ஐயா...மனமார்ந்த வாழ்த்துக்கள்... //
    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > அபயாஅருணா said...
    // பதிவை வடித்த முறை அழகு //

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  11. .
    மறுமொழி > Packirisamy N said...
    // சும்மா இருக்க முடியாதென்றுதான் "சிவனே" என்று இருக்கச் சொல்லுவார்கள். அழகான விளக்கங்கள். நன்றி. //

    சித்தம் போக்கு சிவன் போக்கு. எனவே சிவனே என்று இருந்தாலும் சும்மா இருத்தல் முடியாது. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  12. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    // தாயுமானவரின் அழகான பாடலை அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தாயுமானவரின் கீழ் கண்ட பாடலையும் வரும் பதிவுகளில் விளக்கக் வேண்டுகிறேன்.

    ‘’ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி
    ஆளினும் கடல்மீதினிலே
    ..............................................................................................

    பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூரண ஆனந்தமே.’’ //

    தாயுமான சுவாமிகள் பாடலை படித்து ஒன்றியமைக்கு நன்றி. எனக்கு தெரிந்த தமிழ் இலக்கிய அனுபவத்தில் நீங்கள் குறிப்பிட்ட பாடலைப் பற்றியும் விரைவில் எழுதுகிறேன். தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. மிகவும் அருமையான விஷயங்களை அற்புதமான உதாரணங்களுடன் பதிவாக்கித் தந்துள்ளீர்கள், ஐயா. மிக்க நன்றி.

    காலை எழுந்ததிலிருந்து சும்மாவே இல்லாமல் இருந்ததால் என் வருகையில் இவ்வளவு தாமதமாகிவிட்டது ஐயா.

    >>>>>

    ReplyDelete
  14. தாயுமானவர் பாடல் கொடுத்துள்ளது அருமை ஐயா.

    // எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே //

    சிறப்பான முடிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  15. இப்படி பலபேரை நானு சந்தித்திருக்கிறேன். சிலர் ஒரே நேரத்தில் பலவேலை செய்வார்கள். இவர்களைத்தான் restless person என்பார்கள். இத்தகைய குணம் பிள்ளைப்பருவத்திலேயே தெரிந்துவிடும். ஒரு இடத்துல இருக்க மாட்டேங்கறான் என் பையன் என்பார்கள். இவர்கள்தான் பெரியவர்கள் ஆனதும் பல வேலைக்காரர்கள் ஆகின்றனர்.

    ReplyDelete
  16. அருணகிரியாருக்கு முருகன் ‘சும்மா இரு’ ப்பது பற்றி உபதேசித்தாராம் சும்மா இருப்பதில் சுகமுண்டா.? சும்மா இருந்து பார்த்தால்தானே தெரியும். பதிவு பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. பாடலும் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  18. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2 )
    // மிகவும் அருமையான விஷயங்களை அற்புதமான உதாரணங்களுடன் பதிவாக்கித் தந்துள்ளீர்கள், ஐயா. மிக்க நன்றி.
    காலை எழுந்ததிலிருந்து சும்மாவே இல்லாமல் இருந்ததால் என் வருகையில் இவ்வளவு தாமதமாகிவிட்டது ஐயா. //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் சும்மா இருந்தாலும் உங்கள் மனசு சும்மா இருக்காது. அடுத்து வலைப்பதிவில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டுதான் இருக்குகம்.
    // சிறப்பான முடிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.//
    தங்கள் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    // இப்படி பலபேரை நானு சந்தித்திருக்கிறேன். சிலர் ஒரே நேரத்தில் பலவேலை செய்வார்கள். இவர்களைத்தான் restless person என்பார்கள். இத்தகைய குணம் பிள்ளைப்பருவத்திலேயே தெரிந்துவிடும். ஒரு இடத்துல இருக்க மாட்டேங்கறான் என் பையன் என்பார்கள். இவர்கள்தான் பெரியவர்கள் ஆனதும் பல வேலைக்காரர்கள் ஆகின்றனர். //

    மரியாதைக்குரிய டிபிஆர்.ஜோ அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்பவர்களை வடமொழியில் அஷ்டாவதனிகள் என்பார்கள்.

    ReplyDelete
  20. மறுமொழி > G.M Balasubramaniam said...
    // அருணகிரியாருக்கு முருகன் ‘சும்மா இரு’ ப்பது பற்றி உபதேசித்தாராம் சும்மா இருப்பதில் சுகமுண்டா.? சும்மா இருந்து பார்த்தால்தானே தெரியும். பதிவு பகிர்வுக்கு பாராட்டுக்கள். //

    GMB அய்யாவின் கருத்துரைக்கு நன்றி! அருணகிரியாரையும் எட்டிப் பார்த்து விட முடிவு செய்து விட்டேன். இதற்கு கிருபானந்த வாரியாரை நாட வேண்டும்.

    ReplyDelete
  21. மறுமொழி > மாதேவி said...
    // பாடலும் விளக்கமும் அருமை. //

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  22. ரசவாதமாய் மனதை சிந்திக்கத்தூண்டும்
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  23. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // ரசவாதமாய் மனதை சிந்திக்கத்தூண்டும்
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..! //

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  24. சும்மாயிருப்பது என்பது ரொம்பவும் கடினமான வேலைதான். தியானம் செய்ய கண்களை மூடியவுடன் மனது ஆடும் ஆட்டம் இருக்கிறதே....ஆஹா! அப்போது புரியும் சும்மா இருப்பது எத்தனை கடினம் என்று.
    தாயுமானவரின் பாடல் வரிகள் அற்புதம்!

    ReplyDelete
  25. பாடலைப்பற்றித்தான் எழுதப்போகிறீர்கள் என்றே தெரியாது..எளிமையான விளக்கத்தை முதலில் கொடுத்து பின்னர் பாடலைக்கூறியது அருமை..மாணவர்களிடத்திலும் இதைப்பின்பற்றலாம் போல..முதலில் சர்க்கரையைக் கொடுத்துப் பிறகு வேப்பிலை மருந்து கொடுப்பதுபோல் உள்ளது...

    ReplyDelete
  26. மறுமொழி > Ranjani Narayanan said...
    // சும்மாயிருப்பது என்பது ரொம்பவும் கடினமான வேலைதான். தியானம் செய்ய கண்களை மூடியவுடன் மனது ஆடும் ஆட்டம் இருக்கிறதே....ஆஹா! அப்போது புரியும் சும்மா இருப்பது எத்தனை கடினம் என்று. தாயுமானவரின் பாடல் வரிகள் அற்புதம்! //

    தியானத்தின் போது மனது போடும் ஆட்டம் பற்றி சொன்ன சகோதரி ரஞ்சனி நாராயணனுக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > kaliaperumalpuducherry said...
    // பாடலைப்பற்றித்தான் எழுதப்போகிறீர்கள் என்றே தெரியாது..எளிமையான விளக்கத்தை முதலில் கொடுத்து பின்னர் பாடலைக்கூறியது அருமை..மாணவர்களிடத்திலும் இதைப்பின்பற்றலாம் போல..முதலில் சர்க்கரையைக் கொடுத்துப் பிறகு வேப்பிலை மருந்து கொடுப்பதுபோல் உள்ளது... //
    சகோதரர் கலியபெருமாள், புதுச்சேரி அவர்களின் சர்க்கரையின் இனிப்பு போன்ற பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  28. தமிழ் இளங்கோ அவர்களுக்கு எண் நன்றி. இந்துஜா பாடலை தேடி கொண்டு இருந்தேன். என்னிடம் தாயுமானவர் புத்தகம் என்னிடம் உள்ளது. அதில் இந்த பாடலை தேடலாம் end👌 இருந்தேன். உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக அமைகிறது.

    ReplyDelete