Friday 4 May 2012

நான் ஜெய்சங்கர் ரசிகன் ஆனேன்



எம்ஜிஆர்,  சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த  படங்கள் வெள்ளித் திரையில் ஓடிக் கொண்டிருந்த நேரம். நானும் எனது நண்பர்களும் எம்ஜிஆர் ரசிகர்கள். விடுமுறை நாட்களில் எம்ஜிஆர்  படம் பார்க்கச் செல்லும் போது சிலசமயம் டிக்கட் கிடைக்காது. அப்போதெல்லாம் “ ஹவுஸ்புல் சர்வசாதாரணம். எனவே அதுமாதிரி சமயங்களில் பக்கத்தில் உள்ள தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்லுவோம். பெரும்பாலும் எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு அருகில் உள்ள தியேட்டர்களில் ஜெய்சங்கர் நடித்த திரைப் படங்களைத்தான் போடுவார்கள். அப்படி ஜெய்சங்கர் நடித்த படங்களைப் பார்த்தவகையில் எங்களுக்கு ஜெய்சங்கரும் பிடித்துப் போனார். இப்படியாக எனக்கு பிடித்த நடிகர்கள் வரிசையில் எம்ஜிஆருக்கு அடுத்து ஜெய்சங்கர். நானும் ஜெய்சங்கர் ரசிகன் ஆனேன்.அவர் நடித்த படங்களைப் பார்ப்பதோடு சரி. ஏனெனில் அப்போது எனக்கு படிப்புதான் முக்கியம்.
 

பெரும்பாலும் ஜெய்சங்கர் நடித்த படங்கள், எம்ஜிஆர் படங்கள் போன்றே சண்டை காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். அப்போது ஆங்கிலத்தில் வெற்றி கண்ட ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தமிழக ரசிகர்களை கவர்ந்து இழுக்கத் தொடங்கின. அப்போது ஆங்கிலப் படங்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப் படவில்லை. இருந்தாலும் ஆங்கிலத்தில் வந்த ஜேம்ஸ் பாண்டிற்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர். பார்த்தார்கள், பட அதிபர்கள். ஜெய்சங்கரை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வைத்தனர். கதைக்கேற்ற அருமையான சண்டைக் காட்சிகள் அமைக்கப் பட்டன. படங்கள் நல்ல வெற்றியையும் வசூலையும் தந்தன. தமிழ் நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர் பெற்ற  இவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்தனர். அந்த வகையில் வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர், நீலகிரி எக்ஸ்பிரஸ், இரு வல்லவர்கள்,  என்ற படங்களைச் சொல்லலாம். திருச்சியில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு ரசிகர் மன்றங்கள் இருந்தன.கிராமப்புற டூரிங் தியேட்டர்களிலும் ஜெய்சங்கர் படங்கள் நல்ல வசூலைத் தந்தன.

ஒருமுறை திருச்சி ராஜா தியேட்டரில் “ பட்டணத்தில் பூதம் “ என்ற ஜெய்சங்கர் நடித்த படத்தை திரையிட்டு இருந்தார்கள். தியேட்டர் முன்பு ஒருவர் கோஷம் போட்டபடி, கையில் அட்டைத் தட்டியுடன் மறியல் செய்து கொண்டிருந்தார். அவரை போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். அவர் மறியல் செய்ததற்கு காரணம், அந்த படத்தில் கே ஆர் விஜயா நீச்சல் உடையில் ரொம்பவும் கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் என்பதுதான். அந்த படத்திற்குப் பிறகு கே.ஆர்.விஜயா அது மாதிரியான காட்சிகளில் நடிக்கவில்லை. குடும்பப் பாங்கான் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். பின்னாளில் அம்மன் வேடத்தில் நடித்து , அம்மன் புகழ் பெற்றவர் கே ஆர் விஜயா என்பது இங்கு. குறிப்பிடத் தக்கது. 

ஜோசப் தளியத் என்ற இயக்குநர் தனது படத்தில் நடிக்க நடிகர்களை தேடிக் கொண்டிருந்தார். அவருக்கு இசை அமைப்பாளர் டி.ஆர். பாப்பா அவர்கள் சங்கர் என்ற சென்னை புதுக் கல்லூரியில் பயின்ற பட்டதாரி இளைஞரை அறிமுகம் செய்தார். அந்த இளைஞரின் பெயரை இயக்குநர் ஜோசப் தளியத்,  ஜெய்சங்கர் என்று மாற்றி தனது “இரவும் பகலும்படத்தில் கதாநாயகன் வேடம் தந்தார். முதல் படமே ஜெய்சங்கருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நிறைய படங்கள். அத்தோடு குடும்ப படங்களிலும் நிறைய நடித்துள்ளார். “குழந்தையும் தெய்வமும், பூவா தலையாபோன்ற   நல்ல குடும்பக் கதை படங்கள். ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த  யார் நீ?என்ற திகில் படத்தில் ஜெயலலிதா கதாநாயகி.

ஜெய்சங்கர் நடித்த படங்களில் பல பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் இனிமையானவை. சில பாடல்கள்............ 

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
-         பாடல்: கண்ணதாசன் படம்: இரவும் பகலும

உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா - உள்ளத்தை
ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்து விடு
                                - பாடல்: கண்ணதாசன் படம்: இரவும் பகலும்

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
- பாடல்: கண்ணதாசன் படம்: வல்லவன் ஒருவன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?  - என்
மக ராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
        - பாடல்: கண்ணதாசன் படம்: இரு வல்லவர்கள்

நடிகர் ஜெய்சங்கர்  நல்ல துடிப்பாக, இளைஞனாக இருந்தபோது படவுலகில் நுழைந்தார். நல்ல ஆக்‌ஷன் படங்களில் நடித்தார்.(பிறப்பு: ஜூலை 12, 1938  இறப்பு: ஜூன் 3, 2000). அவர் இறந்த செய்தி கேட்டபோது நான் ரொம்பவும் வருத்தப் பட்டேன்.



                                                                                                                      



 

13 comments:

  1. இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
    நான் கேட்டதை தருவாய் இன்றாவது// அருமையான பாடல் வரிகள் என்றும் இனிப்பவை அடிக்கடி இது போன்று பதிவைத் தாருங்கள் மலரட்டும் நினைவுகள் .

    ReplyDelete
  2. இரண்டு இமயங்களுக்கு நடுவில் முன்பு எஸ்.எஸ் ஆரும் ஜெமினியும்
    பின்னாளில் ரவிச்சந்திரன் அவர்களும் ஜெய் சங்கர் அவர்களும்
    வெற்றிப் படங்களைத் தந்தது ஆச்சரியமான விஷயம்தான்
    ஜெய்சங்கருக்கு மார்டன் தியேட்டர்ஸ் படங்கள் கிடைத்தது கூட
    ஒரு வரப் பிரசாதமே
    பழைய நினைவுகளை கிளறிச் சென்ற அருமையான பதிவு
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Reply to …… // சசிகலா said...//
    சகோதரி கவிஞர் சசிகலாவின் வருகைக்கும் “அடிக்கடி இது போன்று பதிவைத் தாருங்கள் மலரட்டும் நினைவுகள் “ என்று பாராட்டியமைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. Reply to …… // Ramani said... //
    கவிஞர் ரமணி அவர்களுக்கு தாங்கள் சொன்னது போல
    // ஜெய்சங்கருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் கிடைத்தது கூட ஒரு வரப் பிரசாதமே //
    என்பதுவும் ஒரு காரணம்தான். தங்கள் கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் வாக்களிப்பிற்கும் நன்றி!

    ReplyDelete
  5. ஜெய்... ஒரு காலத்தில் மிகமிக பிசியாக நடித்து வாரம் ஒரு படம் வெளியாகி ’வெள்ளிக் கிழமை நடிகர்’ என்று அடைமொழிகூடக் கொடுத்தார்கள். என்னுடைய அபிமான நடிகர் அவர், அவரின் சுறுசுறுப்பான சண்டைக் காட்சிகளுக்காகவே ஓடி ஓடிப் பார்ப்பேன் நான் சிறுவனாக இருந்தபோது. என்ன ஒரு கொடுமை... கர்ணன் படங்களைப் பார்க்க மட்டும் வீட்டில் விட மாட்டார்கள் - சின்னப்பையன் கெட்டு விடுவேன் எனறு. பின்னால் பார்த்த போது எத்தனை எத்தனை சாகசங்கள். மறக்க முடியாத பாடல்களோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்கு ந்ன்றிகள் பல...

    ReplyDelete
  6. சினிமா உலகில் தன் வாரிசுகளை அடாவடியாகவும்,(பாரதிராஜா இளையராஜா எஸ்பி பிபோன்றோர்) 'பெருந்தன்மையாகவும்"(சிவகுமார் போன்றோர்) நுழைத்து காசு பார்க்கும் மனிதர்கள் மத்தியில் தன் மகன்கள் சினிமா உலகில் வரவே கூடாது என்று சத்தியம் வாங்கி மேலும் சமூகத்திற்கு தொண்டு செய்ய சொன்ன ஒரே நடிகன் ஜெய் ஷங்கர் தான். மிக மிக அருமையான நல்ல மனிதர். ஜென்டில் மேன் என்பதற்கு சரியான உதாரணம் இவர்.இன்றைக்கு தன் வாரிசுகளை திரை துறையில் நுழைத்து எனக்கு சினிமாவே பிடிக்காது என்று 'கம்பராமாயணம்"பாடும் நடிகர்களை பார்க்கும் போது ஜெய் ஷங்கர் எவ்வளவு நியாயமானவராக இருந்தார் என்று தெரிகிறது. இவரை போன்ற நடிகர்கள் ரொம்பவும் அரிதானவர்கள். உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. Reply to ….. krishy said... // அருமையான பதிவு . மே தின வாழ்த்துகள்.
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள்.//
    தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் புதிய திரட்டியின் அறிமுகத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  8. Reply to …. …. // கணேஷ் said... //
    மின்னல் வரிகள் கணேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! எம்ஜிஆர் ரசிகரான நீங்கள், என்னைப் போல் ஜெய்சங்கர் அபிமானியும் கூட என்பதில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  9. Reply to …. // காரிகன் said... //
    காரிகன் அவர்களே நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே! ஜெய்சங்கர் அவர்கள் ஒரு ஜென்ட்டில் மேனாகத்தான் வாழ்ந்தார். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  10. நல்ல ஒரு நடிகரைப் பற்றி நல்ல ஒரு பதிவு!

    ReplyDelete
  11. நான்கு சுவர்கள், அன்பளிப்பு, நில் கவனி காதலி, நூற்றுக்கு நூறு - இவரது படங்களில் எனக்குப் பிடித்தவை.

    ReplyDelete
  12. Reply to … … // கே. பி. ஜனா... said... //

    எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு வணக்கம். நடிகர் ஜெய்சங்கரை நல்ல நடிகர் என்று நீங்கள் பாராட்டியது உண்மையானதுதான். தாங்கள் குறிப்பிட்டது போல் நிறைய படங்கள். அவர் நடித்த படங்களின் பட்டியலைப் பதிவில் போட்டால் பக்கத்தை நிரப்புவது போலாகிவிடும் என்பதால் போடவில்லை. தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete