Monday, 30 April 2012

அபாயம்: சாலை ஓரக் கிணறுகள்அண்மையில் ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியிலிருந்து ஈரோட்டிற்கு பஸ்சில் சென்றேன். கரூரைத் தாண்டியதும் ஈரோடு முடிய சாலை ஓரம் சுற்றுச் சுவர் இல்லாத தரைமட்டக் கிணறுகள் வழி நெடுக ஆங்காங்கே இருப்பதைப் பார்த்தேன். நன்கு ஆழமாகவும்  தண்ணீரோடும் இருக்கின்றன சில இடங்களில் சாலை வளைந்து திரும்பும் திருப்பங்களிலும் உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி அவை இருப்பதே தெரியாது. பஸ்ஸில் செல்லும் போது எந்த நிமிடம் எந்த கிணற்றில் பாயுமோ என்ற அச்சத்திலேயே இருந்தேன். ஆனால் வழக்கமாக தினமும் அந்த வழியே பயணம் செய்வோர் அதனைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சேலம் நாமக்கல் பகுதியில் பஸ்சில் பயணம் செய்யும் போதும் இதே அனுபவம். சாலை ஓரம் தடுப்புச் சுவர் இல்லாத தரை மட்ட கிணறுகள் அதிகம் உள்ளன.. நாடு முழுக்க இந்த நிலைமைதான்

அந்த கிணறுகளின் உரிமையாளர்களோ அல்லது அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளோ இது குறித்து ஏதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவர்களை விடுங்கள். எதற்கெடுத்தாலும் கொடி பிடிக்கும் அரசியல் கட்சியினரோ அல்லது உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர்களோ கூட இதுபற்றி வாய் திறப்பதில்லை.

அண்மைய (28.04.12) செய்தி இது. வேலூர் மாவட்டம் வடகடப்பந்தாங்கல் ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவர் இல்லாத 80 அடி ஆழ் கிணற்றில் பாய்ந்து 7 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இது போல சாலை ஓரம்  சுற்றுச் சுவர் இல்லாத தரை மட்டக்  கிணறுகளில் வாகனங்கள் பாய்ந்து விபத்தில் சிக்குவது, உயிர்ப் பலி என்று அடிக்கடி செய்திகளாக வருகின்றன. இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டம் மல்லூரில் சாலை ஓரம் இருந்த சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றில் வாகனம் ஒன்று விழுந்து 13 பேர் பலி ஆனார்கள். அப்போது இருந்த ஆட்சியாளர்கள் உடனே சுற்றுச் சுவர் இல்லாத அனைத்து தரை மட்ட கிணறுகள் யாவற்றிலும் சுவர் கட்டும்படியும் கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு அத்தோடு சரி. நடைமுறைப் படுத்தவில்லை இன்னும் விபத்துக்கள் தொடர் கதையாகத்தான் உள்ளன.

தினமலர் பத்திரிக்கையில் இந்த அபாயகரமான் கிணறுகளைப் பற்றி செய்திக் கட்டுரைகளாக அடிக்கடி எழுதுகிறார்கள். தினமலரில் வந்த மூன்று படங்கள்.

                                         
                     ( படங்கள்: நன்றி தினமலர் (Google )

முன்பெல்லாம் சாலை ஓரம் அதிகம் மரங்கள் இருந்தன. பள்ளத்தில் பாயும் வாகனங்களை அந்த மரங்கள் ஓரளவு தடுத்து நிறுத்தின. இப்போதோ மரங்களே இல்லாத நால்வழிச் சாலைகள். சில இடங்களில் சாலை மிகவும் உயரத்தில் செல்கிறது. அருகே அதிக ஆழமும் தண்ணீரும் உள்ள சுற்றுச் சுவர் இல்லாத தரை மட்டக் கிணறுகள். அத்தோடு சரியாக மூடப்படாத பள்ளங்கள், தூர் நிரம்பிய கிணறுகள். இந்தச் சூழலில் நால்வழிச் சாலையில், அதிக பயணிகளோடு அதி வேகத்தில் செல்லும் பயணிகள் பேருந்துகள், கார்கள். எப்போது என்ன நடக்குமோ என்று நினைக்கவே .... பயமாகத்தான் உள்ளது. ஏற்கனவே நான்கு வழிச் சாலையில் அடிக்கடி அதிக விபத்துகள். இது போன்று சாலைகள் ஓரம் பலி வாங்கக் காத்திருக்கும் அபாயமான கிணறுகளை அப்புறப் படுத்தினால் நல்லது. எனவே சம்பந்தப் பட்டவர்கள் இது குறித்து  நடவடிக்கை எடுத்தால் நல்லது.  
    13 comments:

 1. மிக மிக அவசியமான விஷயத்தை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  அந்த வழியில் தினமும் சென்றுவருகிற சூழலில் இருப்பவர்கள்
  சரியாகப் போய்விடுகிறார்கள்
  புதிதாக அந்த வழியில் வருபவர்கள் அது குறித்து எந்த
  ஐடியாவும் இல்லாத காரணத்தால் அடிக்கடி இதுபோன்ற
  நிகழ்வுகள் நேர்கிறது என நினைக்கிறேன்
  சம்பத்தப் பட்ட கிணற்றின் உரிமையாளர் பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்
  அல்லது கிணற்றை மூட வேண்டும் என சம்பத்தப்பட்ட துறையினர்
  நோட்டீஸ் அனுப்பினாலே இந்த விஷயம் செட்டில்
  ஆகிவிடும் அரசு இலாகா அதிகாரிகள் யார் செய்வது என்கிற
  ஈகோ பிரச்சனையில் இது ஓடிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்
  பயனுள்ள பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டளித்துவிட்டேன்
  த.ம 1

  ReplyDelete
 3. கவிஞர் ரமணி அவர்களுக்கு வணக்கம்!

  //சம்பத்தப் பட்ட கிணற்றின் உரிமையாளர் பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் அல்லது கிணற்றை மூட வேண்டும் என சம்பத்தப்பட்ட துறையினர் நோட்டீஸ் அனுப்பினாலே இந்த விஷயம் செட்டில் ஆகிவிடும் அரசு இலாகா அதிகாரிகள் யார் செய்வது என்கிற ஈகோ பிரச்சனையில் இது ஓடிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் //

  தங்கள் கருத்தை வெளிப்படையாகச் சொன்னீர்கள்! நமது நாட்டில் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கதைதான் நிலவுகிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 4. //முன்பெல்லாம் சாலை ஓரம் அதிகம் மரங்கள் இருந்தன. பள்ளத்தில் பாயும் வாகனங்களை அந்த மரங்கள் ஓரளவு தடுத்து நிறுத்தின. இப்போதோ மரங்களே இல்லாத நால்வழிச் சாலைகள். சில இடங்களில் சாலை மிகவும் உயரத்தில் செல்கிறது. அருகே அதிக ஆழமும் தண்ணீரும் உள்ள சுற்றுச் சுவர் இல்லாத தரை மட்டக் கிணறுகள். அத்தோடு சரியாக மூடப்படாத பள்ளங்கள், தூர் நிரம்பிய கிணறுகள். //

  வணக்கம் ஐயா.

  ஆமாம் ஐயா. தாங்கள் சொல்லியுள்ளது அனைத்தும் உண்மை. மிகவும் பயமாகத்தான் உள்ளது, இன்றைய பயணங்கள்.

  படித்ததைத் பகிர்ந்துள்ளதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. ஏற்கனவே நான்கு வழிச் சாலையில் அடிக்கடி அதிக விபத்துகள். இது போன்று சாலைகள் ஓரம் பலி வாங்கக் காத்திருக்கும் அபாயமான கிணறுகளை அப்புறப் படுத்தினால் நல்லது. எனவே சம்பந்தப் பட்டவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.


  விழிப்புண்ர்வு தரும் பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 6. Reply to ….. // வை.கோபாலகிருஷ்ணன் said... //

  VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அதி வேக பயணத்தை தவிர்த்திடுவோம்.

  ReplyDelete
 7. Reply to … // இராஜராஜேஸ்வரி said...//

  சகோதரிக்கு வணக்கம்! // விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றி // என்று பாராட்டியமைக்கு நன்றி!

  ReplyDelete
 8. ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் பற்றிய செய்திகள் படிக்கும்போதெல்லாம் மனம் பதறுகிறது. சிறிதும் அலட்சியம் இன்றி கவனிக்கப் படவேண்டிய விஷயம் இது.

  ReplyDelete
 9. Reply to …. // T.N.MURALIDHARAN said... //
  வலைப் பதிவாளர், கவிஞர் டி.என்.முரளிதரன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 10. நானும் செய்தித் தாள் படித்த உடன் மிகவும் வருந்தினேன் . கவனிக்கப்பட வேண்டும் .

  ReplyDelete
 11. Reply to …… // சசிகலா said... //
  சகோதரி கவிஞர் சசிகலாவின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 12. சாலையோரக்கிணறுகள்,ஆழ்துளை கிணறு தோண்டுவதற்காக போடப்பட்ட போர்குழிகள்,பாதாளச்சாக்கடைக்காய் சாலையின் நடுவே தோண்டப்படுகிறப்படுகிற குழிகள்,,,, இன்னும்,இன்னுமான எது பற்றியும் அக்கறை கொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை.அவர்கள் என்னதான் செய்வார்கள் பாவம்,-------- குடிமகனை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கிறது.

  ReplyDelete
 13. Reply to …… // விமலன் said... //
  சமூக சிந்தனை கொண்ட வலைப் பதிவர் கவிஞர் விமலன் அவர்களுக்கு வணக்கம்!

  //இன்னும், இன்னுமான எது பற்றியும் அக்கறை கொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்கள் என்னதான் செய்வார்கள் பாவம், -------- குடிமகனை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கிறது.//

  தாங்கள் சொல்வதுபோல இன்னும் எத்தனை காலம்தான், நாம் அவர்களையே சொல்லிக் கொண்டு இருப்பது என்று தெரியவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete