Wednesday, 23 May 2012

மூச்சுத் திணறல் குணமானது எப்படி?


மழை பெய்தாலோ அல்லது மார்கழி மாத இரவுப் பனியில் நனைந்தாலோ என்னால் அன்று இரவு சரியாகத் தூங்க முடியாது. காரணம் அப்போது எனக்கு ஏற்படும் மூச்சுத் திணறல்தான். காலையிலும் தடிமனோடு, கண்கள் சிவந்து பேசுவதற்கே சிரமமாக இருக்கும். சில நாட்களில் தொடர் தும்மலும் சேர்ந்து கொள்ளும். எப்போதாவது வீட்டை சுத்தம் செய்யும் போதும், புத்தக அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைக்கும் போதும் இதே நிலைமைதான். இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கை அறையை விட்டு வெளியே வந்து வாசலில் காற்றாட உட்கார்ந்து கொள்வேன். அப்போது எனக்கு வயது நாற்பத்தேழு  இருக்கும்.

இந்த மூச்சுத் திணறல் எனக்கு ஆரம்பத்தில் கிடையாது. சின்ன வயதில் மழையில் நனைந்தாலும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.  டாக்டரிடம் போனால் அவர் சளித் தொந்தரவுக்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பார். அல்லது எனக்கு “ ஈசினோபீலியா” வுக்கான அறிகுறி என்று சொல்லி சில மருந்துகளை மாற்றி எழுதித் தருவார். ஒருமுறை அவர் “உங்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளைவிட இன்ஹேலர் நல்லது “ - என்று அதை உபயோகித்துப் பார்க்கச் சொன்னார். என்வே மூச்சுத் திணறல் ஏற்படும் போதெல்லாம் வாயை திறந்து புஸ் புஸ் என்று இன்ஹேலரை அடித்துக் கொள்வேன். அந்த நேரத்திற்கு கொஞ்சம் தேவலாம் என்று இருக்கும். எல்லாம் கொஞ்சநாள்தான். தொடர்ச்சியாக பயன்படுத்த பயமாக இருந்தபடியினால் அதனை நிறுத்தி விட்டேன். 

நண்பர்கள் அனைவரும் எனக்காக டாக்டர்களாக மாறி வண்டி வண்டியாக அட்வைஸ் தந்தார்கள். கொதிக்கும் நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி முக்காடு போட்டு ஆவி பிடிக்கச் சொன்னார்கள். ஒன்றும் பலன் இல்லை. சிலர் டாக்டரை மாற்றிப் பார்க்கச் சொன்னார்கள். வேறு டாக்டர்களும் பழைய டாக்டர் செய்த மருத்துவமே செய்தார்கள். இதற்கென்று  இருக்கும் டாக்டர்களையும் சென்று பார்த்தேன். அந்த ஸ்பெஷலிஸ்டுகளின் வித்தைகளுக்கும் எனது மூச்சுத் திணறல் கட்டுப் படவில்லை. இன்னும் சிலர் மூக்கைப் பிடிக்கும் மூச்சுப் பயிற்சி  செய்ய சொன்னார்கள். ஏற்கனவே மூச்சு விட சிரமமாக இருக்கும்போது மூச்சைப் பிடித்தால் என்னவாகும்? வேர்த்து விறுவிறுத்ததுதான் மிச்சம்.

 
இந்த சமயத்தில் டாக்டர் கே.ஏ.மோகனதாஸ் என்பவர் எழுதிய ஒவ்வாமை (அலர்ஜி) என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதிலுள்ள கருத்துக்கள் எனக்கு ஒரு புதிய விடியலைத் தந்தன. இதனால் நான் தொந்தரவு அடைவதற்கு காரணம் ஒவ்வாமை ( ALLERGY )தான் என்று தெரிந்தது. ஆனால் எந்த பொருள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் பளீரென்று மின்னல் வேகத்தில் மனதில் ஒரு யோசனை தோன்றியது. எனக்கு மது அருந்தும் பழக்கமோ அல்லது புகைபிடித்தல் பழக்கமோ கிடையாது. ஆனால் மீசைக்கு மட்டும் டை அடிக்கும் பழக்கம் இருந்தது. எனது தலை நரைக்கவில்லை. ஆனால் மீசை மட்டும் நரைத்து விட்டது. எனவே இந்தியாவில் பிரபலமான ஒரு நல்ல கம்பெனி டையையே மீசைக்கு உபயோகித்து வந்தேன்.  மீசைக்கு அடிக்கும் டை ஒத்துக் கொள்ள வில்லையோ என்று தோன்றியது. எனவே மீசைக்கு டை அடிப்பதை நிறுத்திவிட முடிவு செய்தேன். அதேசமயம் மீசைக்கு டை இல்லாமல் வெளியே செல்லவும் கூச்சமாக இருந்தது. பல தடவை யோசித்து, நமக்கு வயதுக்கு வந்த பெண்ணும் பையனும் இருக்கும்போது இவையெல்லாம் தேவையா என்று மீசைக்கு டை அடிப்பதை நிறுத்தினேன். தலைமுடி இயல்பாகவே கருப்பாகவும் மீசை மட்டும் வெள்ளையாக இருக்க நண்பர்கள் கொஞ்ச நாள் விசாரித்தார்கள். அப்புறம் எல்லோருக்கும் எனது முகம் பழக்கமாகி விட்டது. மீசைக்கு டை அடிப்பதை நிறுத்தியதும் என்னை பீடித்து இருந்த அலர்ஜியும் மூச்சுத்திணறலும் போய்விட்டது.

இப்போது மழையில் நனைந்தாலும், வெயிலில் அலைந்து வேர்வை வந்தாலும், பனியில் திரிந்தாலும் , ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு மழையில் நனைந்தால் கூட ஒன்றும் ஆவதில்லை. தொடர் தும்மலோ, மூச்சுத் திணறலோ இப்போது கிடையாது. இது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். அவ்வளவுதான். மூச்சுத் திணறல் உள்ள அனைவருக்கும் இது அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது.

( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )16 comments:

 1. நல்ல அனுபவம், தேவையானதும் கூட, ஏன் எனில் தலைக்கு டை அடித்தாலும் ஒவ்வாமை வரும்னு கேள்விப்பட்டு இருக்கேன், ஆனால் எல்லாம் யூத்தாக மாற டை தான் அடிக்கிறாங்க.

  எனக்கு ஒரு டவுட்டு:

  தலை முடி தான் பொறக்கும் போதே இருப்பது வயதில் மூத்தது, மீசை வாலிபத்தில் முளைப்பது எனவே இளையது, ஆனால் எப்படி இளைய மீசை நரைத்து மூத்த தலை முடி நரைக்காமல் போச்சு :-))

  ReplyDelete
 2. அனைவருக்கும் தேவையான தகவல் கொண்ட
  அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. REPLY TO … வவ்வால் said...

  // எனக்கு ஒரு டவுட்டு: ……மீசை வாலிபத்தில் முளைப்பது எனவே இளையது, ஆனால் எப்படி இளைய மீசை நரைத்து மூத்த தலை முடி நரைக்காமல் போச்சு :-)) ….. //

  உங்கள் “ டவுட்டு “ நியாயமானது. அதில் உள்ள கிண்டலும் புரிகின்றது. அப்போது எனது மீசை முழுதும் நரைக்காமல் அங்கும் இங்குமாக நரைத்து இருந்தது. எனவே எல்லோரையும் போலவே, மீசை முழுதும் கறுப்பாகவே இருக்கட்டும் என்று மீசையில் டை அடிக்க வேண்டி இருந்தது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 4. REPLY TO … // Ramani said...//

  கவிஞர் ரமணி அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி!

  ReplyDelete
 5. பொதுவாக டை அடிப்பது பல்வேறு வகைப்
  பாதிப்புகளைத் தரும் என்று சொல்வார்கள்
  தங்கள் பதிவு அதற்குரிய சாட்சி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 6. மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி! அந்த புத்தகம் குறித்து கூடுதல் தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா

  ReplyDelete
 7. Reply to …. // புலவர் சா இராமாநுசம் said.. //

  புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 8. Reply to …… // தமிழ் மீரான் said..// மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி! அந்த புத்தகம் குறித்து கூடுதல் தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா //

  கவிஞர் தமிழ் மீரான் வருகைக்கு நன்றி! சுமார் பதினோரு வருடங்களுக்கு முன்னர், புத்தக கண்காட்சியில், அந்த புத்தகத்தை எனது வீட்டு நூலகத்திற்காக வாங்கினேன். படித்தேன். இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

  அந்த நூலின் விவரம்.
  நூலின் பெயர் : ஒவ்வாமை (அலர்ஜி)
  பக்கங்கள் : 176
  ஆசிரியர்: டாக்டர் கே.ஏ.மோகனதாஸ், 919, பெரியார் ஈ.வெ.ரா.சாலை, சென்னை – 600 084
  பதிப்பகம்: ஸ்ரீவாரு பதிப்பகம், 919, பெரியார் ஈ.வெ.ரா.சாலை, சென்னை – 600 084

  ReplyDelete
 9. Good article. I suffer from Dust Allergy which causes congestion and sinus infection. Now I'm getting allergy shots hoping that will cure my allergy someday. Lot of people think that they will catch cold from cold weather, rain or eating cold food. Cold comes from a virus or allergy not from those.I hope they all learn from this.

  ReplyDelete
 10. Reply to // …. Anonymous said... 24 May 2012 21:28 //
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

  ReplyDelete
 11. மூச்சுத் திணறல் குண்மானது நிம்மதி அளிக்கிறது...

  ReplyDelete
 12. அன்பின் தமிழ் இளங்கோ - ஒவ்வாமை - மூச்சுத்திணறலினால் அவதிப் பட்டதும் - நூலினைப் படித்து பின்பற்றி சுகமடைந்ததும் - உரையாக எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. அன்பின் தமிழ் இளங்கோ - தங்களின் மின்னஞ்சல் முகவ்ரி தர இயலுமா ? எனதுமுகவரி - cheenakay@gmail.com - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. REPLY TO… … இராஜராஜேஸ்வரி said...

  // மூச்சுத் திணறல் குண்மானது நிம்மதி அளிக்கிறது..//

  சகோதரியின் நல்லெண்ணத்திற்கு நன்றி! .


  ReplyDelete
 15. REPLY TO … …cheena (சீனா) said... ( 1 )

  அன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம்! ஒவ்வாமை யாருக்கும் இல்லாமை ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம்! எனது கட்டுரையை பாராட்டிய உங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 16. REPLY TO … … cheena (சீனா) said... ( 2 )
  அன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம்! எனது மின்னஞ்சல் முகவரியினை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்! அன்பிற்கு நன்றி!

  ReplyDelete