Sunday 11 January 2015

சீமைக் கருவை – தீமையா?




எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரின் ஆற்றங் கரை, குளக்கரை, கண்மாய், புறம்போக்கு நிலம் - என்று எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது சீமைக் கருவை எனப்படும் சீமைக் கருவேலம் (PROSOPIS JULIFLORA) மரங்கள்தாம். இது ஒரு வகை முள்மரம். ஆஸ்திரேலியாவிலிருந்து நமது இந்தியாவுக்கு இதன் விதைகள் கொண்டு வரப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

சீமைக் கருவை ஒழிப்பு:

இப்போது சீமைக் கருவேலமரம் ஒழிப்பு என்று குரல்கள் எழத் தொடங்கி உள்ளன. அதாவது சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுகிறது, தாவரங்களுக்கு பாதிப்பு, கால்நடைக்கு பாதிப்பு என்றெல்லாம் பட்டியல் இடுகின்றனர். குறிப்பாக பேஸ்புக் (FACEBOOK)போன்ற சமூக வலைத் தளங்களில் இவற்றைக் காணலாம். ஒருவர் பேஸ்புக்கில் எழுதி விட்டால் போதும். அந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை அல்லது நம்பகமானது என்றெல்லாம் யோசிப்பதில்லை. உடனே ஆளாளுக்கு ஒருவருக்கொருவர் நட்பு வட்டங்கள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

எனக்கு தெரிந்து இவர்கள் பரபரப்பாக சொல்வதைப் போல, சீமைக் கருவேல மரங்களால் அதிகம் பாதிப்பு இருப்பது போல தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் நாடு எப்போதோ சுடுகாடாக மாறி இருக்கும். யூக்லிப்ட்ஸ் (EUCALYPTUS) மரங்களையும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இப்போதோ பல இடங்களில், தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் யூக்லிப்ட்ஸ் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

எனவே எனது ”மாற்று சிந்தனை” கட்டுரை இது.

மரத்தின் பயன்பாடுகள்:

இன்று நாடு முழுக்க வீட்டுக்கு வீடு கழிப்பறை (TOILET ) கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு உண்டாகி இருக்கிறது. ஆனால், காலம் காலமாக பல கிராமங்களில் இன்றும் அவசரத்திற்கு என்று ஒதுங்குவது இந்த கருவ மரங்கள் அடர்ந்த காடுகளுக்குத் தான். வீட்டிற்கும் தோட்டங்களுக்கும் வேலியாக பயன்படுவதால் வேலிக்கருவை என்ற பெயரும் உண்டு.


இன்றும் பல வீடுகளில், உணவு விடுதிகளில் அடுப்பெரிக்க பெரிதும் பயன்படுவது சீமைக் கருவேல மரங்கள்தான். கிராமம் சென்றால், பல பெண்கள் இந்த மரத்தினை வெட்டி, இலைகள் மற்றும் முட்களை நீக்கி விட்டு, விறகிற்காக கட்டு கட்டாக சுமந்து வருவதைக் கணலாம். இந்த மரங்களை விறகுக்காக பயன்படுத்துவதால் தான் மற்ற மரங்கள் அடுப்புக்கு போகாமல் தப்பின. இதன் பிசின், கோந்து எனப்படும் பசை தயாரிக்க உதவுகிறது. எனக்கு தெரிந்து, கிராமத்தில் இருந்த எங்கள் உறவினர் ஒருவர் அவர் தோட்டத்தில் இருந்த கருவை மரங்களை விற்று, தன் வீட்டு திருமணம் ஒன்றை நடத்தினார்.அடுப்புக்கரி தயார் செய்வதற்கும், செங்கல் சூளையில் நெருப்பு மூட்டவும், இந்த மரம் பெரிதும் பயன்படுகிறது. எனவே வியாபார ரீதியாகவும் இந்த மரங்கள் கிராமப்புற மக்களுக்கு நல்ல வருமானம் தருகின்றன.


இதன் மஞ்சள் நிற விதைகளை கால்நடைகள் விரும்பித் தின்னுகின்றன. எனது சிறுவயதில், எனது தாத்தா வீட்டில், அவர் இந்த விதைகளைப் பறித்து மூட்டையாக வைத்து இருப்பார். எங்கள் தாத்தா வீட்டு பட்டியில் இருந்த ஆடுகளுக்கு நானே இந்த விதைகளை அள்ளி போட்டு இருக்கிறேன்.   

தி இந்து கட்டுரை:

தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன் அவர்களின் கட்டுரை ஒன்று  தி இந்து “ ( ஜூலை, 1, 2014) தமிழ் இதழில் வந்துள்ளது. அதில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:

// இயல் தாவரமோ, அயல் தாவரமோ முதலில் மண்ணரிப்பைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது, விறகைத் தருகிறது. இன்றைக்கும் சாதாரண மக்கள் தாவர எரிபொருளையே சார்ந்திருக்கிறார்கள். அயர்ன் செய்பவர்கள், டீக்கடைக்காரர்கள் சீமை கருவேலத்தின் மர கரியை நம்பித் தொழில் நடத்துகிறார்கள். தென் மாவட்டங்களில் சீமை கருவேல மரத்தில் இருந்து கரி தயாரிக்கும் தொழில் முக்கியமானது. ஆடு, மாடுக்குத் தீவனமாகவும் இந்தத் தாவரம் இருக்கிறது. பல்வேறு வகைகளில் பயன்தரும் இயற்கைவளம் இது.
இப்படிப் பல்வேறு பொருளாதார நலன்களைத் தரும் தாவரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால், சாதாரண மக்களுக்குப் பொருளாதாரரீதியில் பெரும் இழப்பு ஏற்படும். அதற்கு மாற்று ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதேநேரம் சீமை கருவேலத்தின் கண்மூடித்தனமான பரவலை முறையாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்தான்.
இப்படி அயல் தாவரங்களை எதிர்க்கும்போது, வேறு விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யூகலிப்டஸ் எனும் தைல மரம் இல்லையென்றால், காகிதத் தொழிற்சாலைகளால் நமது காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கும்? கிட்டத்தட்ட 20-30 சதவீதக் காடுகள் அழிந்து போயிருக்கும்.
மரம் வெட்டுவதையும் நடுவதையும் முறைப்படுத்தத் தாவர ஆணையம் போன்ற அமைப்பு தமிழகத்தில் தேவை. பூனாவில் இது போன்ற குழு இருக்கிறது. ஓர் இடத்தில் உள்ள மரத்தை வெட்டலாமா, கூடாதா என்பது பற்றி முடிவெடுப்பது மட்டுமில்லாமல், ஓரிடத்தில் எந்த மரத்தை நடுவது உகந்ததாக இருக்கும் என்றும் இந்தக் குழு ஆலோசனை வழங்கலாம். அதற்கான நிபுணத்துவம் கொண்டவர்களை உள்ளடக்கி, இந்தக் குழுவை உருவாக்கப்பட வேண்டும். //
( நன்றி : tamil.thehindu.com/general/environment/சீமை-கருவேலத்தை-ஒழிக்கத்தான்-வேண்டுமா-தாவரவியல்-பேராசிரியர்-நரசிம்மன்/article6164634.ece )

எனவே சீமைக் கருவையை ஒரு தீமையான மரம் என்று சொல்லுவதை விட, அதனை எப்படி பயன்படுத்தினால் நல்லது என்று யோசித்தால் சமூகநலனுக்கு நல்லது.

          (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")

 



42 comments:

  1. நீங்க மரமாகப் போறீங்க பதிவில், நம்ம நண்பர் ஆளுங்க அவர்கள் இதைப்பற்றி கருத்துரையில் தெரிவித்து இருந்தார்...

    தண்ணீர் சேகரிப்பை விட்டு விட்டு, மரங்களை குறை சொன்னால்...?

    பயன் இல்லாத மனிதர்கள் இருக்கலாம்... மரங்கள் இல்லவே இல்லை...

    ReplyDelete
  2. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2015/01/7.html

    முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete
  3. அருமையான மாற்று சிந்தனை” கட்டுரை இது. எதையுமே சொன்னவுடன் அப்படியே எடுத்துக்கொள்ளாமல் மாற்றி யோசிக்கணும் In other words, tangent thinking!
    தமிழ்மணம் +2

    ReplyDelete
  4. [[[எங்கள் தாத்தா வீட்டு பட்டியில் இருந்த ஆடுகளுக்கு நானே இந்த விதைகளை அள்ளி போட்டு இருக்கிறேன்]]
    அந்த ஆடுகள் இந்த விதைகளை விரும்பி சாப்பிட்டு இருக்கும்!
    எல்லாம் சரி அப்ப அந்த ஆடுகளை யார் விரும்பி சாப்பிட்டு இருப்பார்கள்?

    ஒரு ஜோக் தான். பிடிக்கவில்லை என்றால் நீக்கிவிடவும்!

    ReplyDelete
  5. //காலம் காலமாக பல கிராமங்களில் இன்றும் அவசரத்திற்கு என்று ஒதுங்குவது இந்த கருவ மரங்கள் அடர்ந்த காடுகளில் தான்.//

    // சீமை கருவேல மரத்தின் கண்மூடித்தனமான பரவலை முறையாக நிர்வகிக்க வேண்டியது அவசியம் தான்!..//

    மாற்றுச் சிந்தனை - சிந்திக்க வைக்கின்றது.

    ReplyDelete
  6. கிராமங்களில் விறகு தேவைக்கு இது பெரிதும் பயன்படுவது உண்மைதான்!

    ReplyDelete
  7. நம் ஊர்களில் காணப்படும் கருவை மரம் வேறு சீமை கருவை வேறு. சீமைக் கருவை விறகாக பயன்பட்டாலும் இது ஒரு ஆக்கிரமித்து ஊடுருவும் (Agressive Invader) தாவரம். இது நிலங்களை ஆக்கிரமித்து மற்ற பயிர்களை வளரவிடாமல் தடுத்துவிடுகிறது என்பதை மறுக்கமுடியாத உண்மை.

    // எனக்கு தெரிந்து இவர்கள் பரபரப்பாக சொல்வதைப் போல, சீமைக் கருவேல மரங்களால் அதிகம் பாதிப்பு இருப்பது போல தெரியவில்லை.//

    தயை செய்து இது குறித்த ஆய்வு ஆவணங்களை பார்க்கவும். 1870 ஆம் ஆண்டு இந்தியாவில் விறகிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது 1960 களில் அதிகமாக ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 52000 ஹெக்டரில் (ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்கள்) இது ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறதாம். இந்த தாவரத்தால் சூழல் மண்டலம் (Eco system) குறிப்பாக கடல் பகுதி சூழல் மண்டலம்( Marine Eco system) பாழ்படுவதாக அறிவியலார் தெரிவிக்கின்றனர். இது அடுப்பெரிக்க உதவுகிறது என்பது உண்மைதான். ஆனால் நெல் போன்ற தானியங்கள் விளைந்தால் தானே இதனுடைய விறகை உபயோகித்து சமைக்கலாம். இல்லாவிடில் இதை வைத்துக்கொண்டு என் செய்ய. (உங்களின் மாறுபட்ட சிந்தனைக்கு மாறுபட்ட கருத்து இது. தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்)

    ReplyDelete
  8. உண்மையில் நன்மை தீமை இரண்டையும் ஆய்ந்து முடிவுகள் மேற்கொள்ளப் படவேண்டியது அவசியம். ஒரேயடியாக அழிப்பதில் சுற்று சூழல் பாதிப்படையும் என்றுதான் நினைக்கிறேன்
    //பயன்படா மரங்கள் என்றும்
    .........மண்ணிலே முளைப்ப தில்லை
    மடிந்தபின்னும் மனிதருக் குதவும்
    ....... மரங்களுக் கிணையே இல்லை //
    என்று ஒரு கவிதையில் எழுதி இருந்தேன்

    ReplyDelete
  9. இதுவேகமாக வளரும் ஓர் தாவரமாக இருக்கிறது! மற்றபடி பயன் இல்லாமல் இல்லை! இந்த மரத்தைவிட தீமை அளிக்கும் எத்தனையோ விஷயங்கள் அரசு அனுமதியுடனேயே நாட்டில் நடக்கும் போது மரங்களை அழிப்பது என்பதை யோசிக்க வேண்டிய ஒன்றே! சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா
    விரிவான தகவல் அறியாத தகவலையும் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி தொடர்கிறேன் ஐயா.
    த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. நண்பர் நடன சாபாபதி கூறிய கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைதான். இருந்தாலும் என் அனுபவத்தைக் கூறுகிறேன். இந்த சீமைக் கருவேல் அதிகமாக வளரும் பகுதிகளான இராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டப் பகுதிகள் கரிசல் மண்வகையைச் சேர்ந்தவை. இங்கு மழைவளம் குறைவு. நிலத்தடி நீர் உவர்த்தன்மை கொண்டது. ஆங்காங்கே இருக்கும் குளம் குட்டைகளில் சேரும் நீரும் உவர்த்தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. இத்தகைய சூழ் நிலையில் எந்த பாசன விவசாயமும் செய்யமுடியாத ஒரு நிலை. அப்படி செய்தால் இரண்டு மூன்று வருடங்களில் அந்த நிலம் முழுவதுமாக உவர் நிலமாக மாறி புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை. மானாவாரி விவசாயம் ஓரளவிற்கு சாத்தியம். ஆனால் மழை போதுமான அளவிற்குப் பெய்வதில்லை. தவிர கடற்கரை ஓரங்களில் மணல்பாங்கான பூமிகள். இதிலும் பெரிய அளவில் விவசாயம் சாத்தியமில்லை.

    இத்தகைய பூமிகளில் சீமைக் கருவேல் நன்கு வளர்கிறது. இதை ஒரு விவசாயமாகவே அங்கு பயிரிட்டு வளர்க்கிறார்கள். இது அந்தப் பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது என்று சொல்லலாம். தமிழ் இளங்கோ சொல்லும் அனைத்து நன்மைகளும் உண்மையே.

    ReplyDelete
  12. நல்லதொரு விடயத்தை எடுத்து வைத்தமைக்கு முதலில் நண்பருக்கு நன்றி
    ஆண்டாண்டு காலமாக கருவேல மரத்தோடு ஒன்றி வாழ்ந்து வந்தவர்கள் நாம் இன்று திடீரென இதனால் ஆபத்து என்பதை ஏற்றுக்கொள்பவர்களிடம் நானொரு கேள்வியை முன் வைக்கிறேன்

    செல் போணை கண்டுபிடித்து இன்று மக்களின் அத்தியாவசிப் பொருளாக நம் வாழ்வோடு இணைத்து விட்டு இன்று அதனால் பல வவைகயான நோய்கள் உருவாகி வருகிறது என்றும் சொல்கிறார்களே... இதை ஏற்று செல்போண் உபயோகப்படுத்துவதை நிறுத்த தயாரா ?
    நான் தயார்..... 80தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  13. எந்தக் கருத்துக்குத்தான் மாற்றுக் கருத்துஇல்லை. ஆனால் வேளாண்மை டாடர் கந்தசாமி சொல்வது சரியென்றே படுகிறது. இன்னொரு பதிவர் அம்மரங்களை அழிக்க ஆதரவு திரட்டி வருகிறார்

    ReplyDelete
  14. மேலே வேளாண்மை டாக்டர் என்று இருந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  15. நல்லதொரு பதிவு. அவ்வப்போது இம் மரங்கள் தொடர்பாக ஆதரவுக்கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் வருவதுண்டு. தாங்கள் பயனுள்ள வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. மாற்றுச் சிந்தனை கொண்ட கட்டுரை நன்று.

    த.ம. +1

    ReplyDelete
  17. மிக நல்ல கட்டுரை ஐயா! இதைப்போலத்தான், வறண்ட பூமியை எதற்கும் உபயோகமற்றது என்று விட்டு விடுகின்றார்கள். ஆனால், அப்படிச் சொல்லிவிட்டு வளமான பூமியைக் சிமென்ட் காடுகளாக்குகின்றனர். பார்க்கப் போனால், வறண்ட பூமியிலும் அந்த மண்ணின் தன்மை கொண்டுஅதற்கு ஏற்றார் போல பயிர்கள் செடிகள், தாவரங்கள் வளர்த்து வளமான பூமியாக்கலாம். வேளாண்மைத் துறை மனது வைத்தால். இப்படிச் செய்யும் போது நாட்டின் வளமும், வருமானமும் பெருகும் வாய்ப்பு உள்ளது. பல குடும்பங்கள் வறுமைக் கோட்டைத் தாண்டி வர வாய்ப்புண்டு.

    நீங்கள் சொல்லி இருப்பது போல் கருவேலம் பல கிராம மக்களுக்கு சிறிதளவேனும் வருமானம் ஈட்டித் தருகின்றது எனலாம். எதையுமே நாம் உபயோகப்படுத்தும் வகையிலும் தரத்திலும் தான் உள்ளது. கத்தியைப் போலத்தான்.

    நல்ல பதிவு ஐயா!

    ReplyDelete
  18. இந்த மாதிரி மரங்கள் இருப்பதால்தான் நல்ல மரங்கள் வெட்டப்படாமல் தப்பிக்கின்றன என்ற கருத்தில் உண்மையில்லாமல் இல்லை.

    ReplyDelete
  19. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. மறுமொழி > ADHI VENKAT said...

    // இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்
    http://blogintamil.blogspot.in/2015/01/7.html
    முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.//

    சகோதரி அவர்களுக்கு வணக்கம். எனது வலைத் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கும், எனக்கு இந்த தகவலைத் தெரிவித்தமைக்கும் எனது மனமார்ந்த நன்றி. வெளியூர் பயணம். இப்போதுதான் வந்தேன். கால தாமதத்திற்கு இதுவே காரணம்.

    ReplyDelete
  21. மறுமொழி > நம்பள்கி said... ( 1, 2 )


    நம்பள்கி அவர்களது பாராட்டினுக்கு நன்றி.


    // [[[எங்கள் தாத்தா வீட்டு பட்டியில் இருந்த ஆடுகளுக்கு நானே இந்த விதைகளை அள்ளி போட்டு இருக்கிறேன்]]
    அந்த ஆடுகள் இந்த விதைகளை விரும்பி சாப்பிட்டு இருக்கும்!
    எல்லாம் சரி அப்ப அந்த ஆடுகளை யார் விரும்பி சாப்பிட்டு இருப்பார்கள்? //

    சந்தையில் மேயும் வெள்ளாடு, சந்தைக்கு வந்தால் சாப்பாடுதான்.


    // ஒரு ஜோக் தான். பிடிக்கவில்லை என்றால் நீக்கிவிடவும்! //

    நானும் இதனை ஒரு ஜோக்காகவே எடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  22. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர், தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  23. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    // நம் ஊர்களில் காணப்படும் கருவை மரம் வேறு சீமை கருவை வேறு.//

    ஆமாம் அய்யா. சிலசமயம் நமது மக்கள் இரண்டையும் ஒன்றாக பாவித்து குழப்புகிறார்கள். நமது நாட்டு கருவை என்பது கருவேல மரம். சீமைக கருவை என்பது வேறு.

    // சீமைக் கருவை விறகாக பயன்பட்டாலும் இது ஒரு ஆக்கிரமித்து ஊடுருவும் (Agressive Invader) தாவரம். இது நிலங்களை ஆக்கிரமித்து மற்ற பயிர்களை வளரவிடாமல் தடுத்துவிடுகிறது என்பதை மறுக்கமுடியாத உண்மை. //

    சீமைக கருவை பற்றிய தங்களது தகவல்களுக்கு நன்றி.

    // தயை செய்து இது குறித்த ஆய்வு ஆவணங்களை பார்க்கவும். 1870 ஆம் ஆண்டு இந்தியாவில் விறகிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது 1960 களில் அதிகமாக ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 52000 ஹெக்டரில் (ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்கள்) இது ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறதாம். இந்த தாவரத்தால் சூழல் மண்டலம் (Eco system) குறிப்பாக கடல் பகுதி சூழல் மண்டலம்( Marine Eco system) பாழ்படுவதாக அறிவியலார் தெரிவிக்கின்றனர்.//

    // இது அடுப்பெரிக்க உதவுகிறது என்பது உண்மைதான். ஆனால் நெல் போன்ற தானியங்கள் விளைந்தால் தானே இதனுடைய விறகை உபயோகித்து சமைக்கலாம். இல்லாவிடில் இதை வைத்துக்கொண்டு என் செய்ய.//

    சீமைக கருவை பற்றிய தங்களது தகவல்களுக்கு நன்றி.


    // (உங்களின் மாறுபட்ட சிந்தனைக்கு மாறுபட்ட கருத்து இது. தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்) //

    நான் சொன்னதே சரியென்று விவாதம் செய்ய மாட்டேன். எல்லாவற்றிற்கும் இருவேறு குணமும், அவற்றைப் பற்றிய இருவேறு அபிப்பிராயமும் இருப்பது கண்கூடு. உங்களது நயத்தக்க கருத்துரையை எப்போதும் வரவேற்கிறேன்.


    ReplyDelete
  25. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தங்கள் கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete
  26. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    // இதுவேகமாக வளரும் ஓர் தாவரமாக இருக்கிறது! மற்றபடி பயன் இல்லாமல் இல்லை! இந்த மரத்தைவிட தீமை அளிக்கும் எத்தனையோ விஷயங்கள் அரசு அனுமதியுடனேயே நாட்டில் நடக்கும் போது மரங்களை அழிப்பது என்பதை யோசிக்க வேண்டிய ஒன்றே! சிறப்பான பதிவு! நன்றி! //

    இன்றைய அரசியல் காட்சி ஒன்றினோடு, கருத்துரை தந்த சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி > ரூபன் said...

    அன்புக் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  28. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

    அய்யா பழனி. கந்தசாமி அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி. சீமைக் கருவேல மரம் பற்றிய தங்களது அனுபவ பகிர்வினுக்கும் மற்றும் அதிகப்படியான தகவல்கள் தந்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  29. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களது சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  30. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  31. மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said...

    கருத்துரை தந்த, இந்த வாரம் - வலைச்சரம் ஆசிரியர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  32. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை வேண்டுமே தவிர,
    மரங்களை குறை சொல்லுதல் சரி எனப் படவில்லை

    ReplyDelete
  33. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1 , 2 )

    // தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை வேண்டுமே தவிர, மரங்களை குறை சொல்லுதல் சரி எனப் படவில்லை //

    கருத்துரை தந்த சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  34. ஒரு நெகிழிப் பை அதைத் தூக்கி வீச நம்மால முடியல
    அதனால் உண்டகும் தீமைகள் ஏராளம்,மரத்தைக் குறை
    கூரிஎன்ன பயன்.

    ReplyDelete
  35. பழனி கந்தசாமி கூறிய கருத்துக்களை வழிமொழிகின்றேன்.

    ReplyDelete
  36. சீமைக் கருவேலம் பற்றிய பிரபல பதிவர் பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் பதிவும் தங்கள் மாற்று சிந்தனைக்கு வலு சேர்க்கிறது அதற்கான எனது பதிவில் இப்போதுதான் இணைத்துள்ளேன் நேரம் இருப்பின் வாசிக்கவும்

    ReplyDelete
  37. மறுமொழி > malathi k said...

    // ஒரு நெகிழிப் பை அதைத் தூக்கி வீச நம்மால முடியல
    அதனால் உண்டகும் தீமைகள் ஏராளம்,மரத்தைக் குறை
    கூரிஎன்ன பயன். //

    கருத்துரை தந்த சகோதரி ஆசிரியை K. மாலதி அவர்களுக்கு
    நன்றி. என்ன காரணமோ, உடன் மறுமொழி கொடுக்க முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  38. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // பழனி கந்தசாமி கூறிய கருத்துக்களை வழிமொழிகின்றேன். //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கும் உடன் மறுமொழி கொடுக்க இயலாமல் போயிற்று. மன்னிக்கவும்.

    ReplyDelete
  39. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // சீமைக் கருவேலம் பற்றிய பிரபல பதிவர் பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் பதிவும் தங்கள் மாற்று சிந்தனைக்கு வலு சேர்க்கிறது அதற்கான எனது பதிவில் இப்போதுதான் இணைத்துள்ளேன் நேரம் இருப்பின் வாசிக்கவும் //

    என்னுடைய தளம் வந்து தகவல் தெரிவித்த சகோதரருக்கு நன்றி. நீங்கள் இணைப்பு தந்த டெரர் கும்மி (கணேஷ் & பன்னிகுட்டி ராம்சாமி) பதிவினையும் படித்தேன். என்னைக் காட்டிலும் அவர்கள் சீமைக் கருவை பற்றி நிறைய தகவல்கள் தந்து இருக்கிறார்கள். அந்த பதிவினை எல்லோரும் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. தங்களின் பதிவை facebook -ல் பகிர்ந்துள்ளேன் கருவேல மரம் குறித்த உண்மைகளை/ மழைக்கான காரணங்களை கருவேல மர அழிப்புக்கான காரணங்களை இங்கே கூறியுள்ளேன் https://www.youtube.com/watch?v=vDWw1vcBM24&t=

    ReplyDelete