அப்போது எனக்கு பள்ளி பருவம். வெளி உலகை கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கும்
நேரம். அப்போது ஒரு திருமணத்தை முன்னிட்டு
திருச்சியிலிருந்து பூதலூருக்கு ரெயிலில் சென்றோம். திருச்சி ரெயில்வே ஜங்ஷன். டிக்கெட்
கொடுக்கும் இடத்தில் ஒரு விளம்பரப் பலகை. முழுக்க கருநீல வண்ணத்தில் வெள்ளை
எழுத்துக்களில் “இந்த வார ஆனந்த விகடன் வாசித்து விட்டீர்களா?’ என்ற வாசகத்தோடு காணப்பட்டது. கூடவே சோடா பாட்டில் கண்ணாடி
போட்டுக் கொண்டு நீண்ட மூக்குடன் விகடன் தாத்தா. ரெயில் ஏறப் போகும்போதும்
பிளாட்பாரத்திலும் அதே விளம்பரம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள்
பூதலூர் சென்று ரெயிலை விட்டு இறங்கியதும்
ரெயில்வே ஸ்டேஷனிலும் இந்த விகடன் விளம்பர பலகையைப் பார்த்தேன். இந்த வாரம் அந்த
ஆனந்தவிகடனில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் என்று எப்போது பார்த்தாலும் நினைக்கும்படி விளம்பரம் செய்து இருந்தார்கள். இதுதான் எனது முதல் ஆனந்த விகடன் நினைவு. அதன் பிறகு பல ரெயில்வே நிலையங்களிலும் இந்த விளம்பரப் பலகைய பார்த்து இருக்கிறேன்.
நான் பள்ளி படித்த நாட்களில் வார இதழ்களை மாணவர்களுக்கு
தர மாட்டார்கள். கல்லூரி நாட்களிலும் நூலகங்களில் அந்த வார விகடனை ஊழியர்களும்
ஆசிரியர்களும் எடுத்துச் சென்று விடுவார்கள். இருக்கும் விகடனைப் படிப்பேன். அப்போது நான் பெரும்பாலும்
விகடனில் அதிகம் படிப்பது நகைச்சுவை துணுக்குகள், அரசியல் பேட்டிகள், கட்டுரைகள்தான்.
பிற்பாடு நான் வேலைக்கு சென்றதும் ஆபிஸ் ஊழியர்கள் தங்களுக்குள் நடத்தும் புத்தக
கிளப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.. புதிதாக வரும் அந்த வார ஆனந்த விகடனை
வீட்டுக்கு கொண்டு செல்வதில் உறுப்பினர்களிடையே
அதிக போட்டி இருக்கும். எனவே வாரம் தோறும்
இரண்டு விகடன்களை வாங்கும் வழக்கத்தை கொண்டு வந்தேன்.
விகடன் குழுமத்திலிருந்து ஜூனியர் விகடன் வந்த நேரம். புதுமையாகவும் மக்களின்
அன்றாட பிரச்சினைகளை அலசியும் கட்டுரைகளை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் நியூஸ்
பேப்பர் வடிவத்தில் வந்து பின்னர் இப்போதைய வடிவம் வந்தது. கடைகளில் வந்தவுடனேயே
தீர்ந்துவிடும். எனவே ஜூனியர் விகடன் வரும் நாளன்று முதல் ஆளாக போய் வாங்கி வந்து
படித்து விடுவேன். திருச்சிக்கு மாறுதலாகி வந்தேன். இங்கும் நண்பர்கள் புத்தக
கிளப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.. இங்கும் வாரம் தோறும் இரண்டு ஆனந்த
விகடனோடு ஜூனியர் விகடனையும் இரண்டாக வாங்கச் செய்தேன்.
நான் கையில் யாஷிகா FX-3 கேமராவை வைத்துக் கொண்டு இருந்த நேரம். ஜூனியர் விகடனில்
விஷுவல் டேஸ்ட் என்று ஒரு பகுதியைத் தொடங்கினார்கள். வாசகர்கள் அனுப்பும் புகைப்
படங்களை ஜூனியர் விகடனின் பின்பக்க அட்டையில் வெளியிட்டார்கள். நான் எனது
கேமராவில் எடுத்து அனுப்பிய வண்ண புகைப் படங்கள் இரண்டு அப்போதைய ஜூனியர் விகடனில்
வெளிவந்தன. அதற்கு சன்மானமும் தந்தார்கள்.
இப்போது விகடன் குழுமத்திலிருந்து பல நூல்கள் வெளியிடப் படுகின்றன. வாசிப்பு
பழக்கம் உள்ள நான் அவர்களது நூல்கள் பலவற்றை வாங்கியுள்ளேன். விலை குறைவாகவும்
நேர்த்தியான முறையிலும் அவை வெளியிடப்பட்டு வருகின்றன.
வாரா வாரம் ஆனந்த விகடனில் இணைப்பு இதழாக "என் விகடன்"
என்ற இணைப்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியே கொடுத்து வந்தார்கள். இப்போது தனி இதழ் கிடையாது. இணைய இதழாக
( http://en.vikatan.com ) மட்டுமே வந்தது. இதனையும் படித்து வந்தேன். இதிலும் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள். இனி “என் விகடன்” என்ற இணைய இதழ் “உங்க விகடன்” என்ற பெயரில் வரும் என்று அறிவிப்பு செய்து இருக்கிறார்கள்.
( http://en.vikatan.com ) மட்டுமே வந்தது. இதனையும் படித்து வந்தேன். இதிலும் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள். இனி “என் விகடன்” என்ற இணைய இதழ் “உங்க விகடன்” என்ற பெயரில் வரும் என்று அறிவிப்பு செய்து இருக்கிறார்கள்.
இப்போது ஆனந்த விகடனை எங்களோடு, எங்கள் வீட்டு பிள்ளைகளும் படித்து
வருகிறார்கள்.
(
PICTURES : THANKS TO “ GOOGLE ” )