அடுத்தமாதம் ( 11.10.2015 ஞாயிறு) அன்று புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும்,
வலைப்பதிவர்கள் சந்திப்பில் ”கையேடு” ஒன்றை வெளியிட இருக்கிறார்கள். இதில் வலைப்பதிவர்கள்
பற்றிய தகவல்கள் இருக்கும் .எனவே வலைப்பதிவர்கள் அனைவரும் தம்மைப் பற்றிய விவரங்களை bloggersmeet2015205@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.09.2015 இற்குள்
அனுப்பி வைக்கும்படி விழாக்குழுவினர் கேட்டு இருந்தனர். இதுகுறித்து ஆசிரியர் நா.முத்துநிலவன்,
திண்டுக்கல் தனபாலன், அரும்புகள் மலரட்டும் அ.பாண்டியன், தேன்மதுரத்தமிழ் கிரேஸ்,
‘தென்றல்’ கீதா, தில்லையகத்து துளசிதரன், தமிழ்வாசி பிரகாஷ், மதுரை சித்தையன் சிவகுமார்,
ஞா.கலையரசி (ஊஞ்சல்), எஸ்.மது (மலர்த்தரு) , மைதிலி கஸ்தூரி ரெங்கன் (மகிழ்நிறை) மற்றும்
நான் என்று பல பதிவர்கள் தனிப்பட்ட முறையில் பதிவுகள் எழுதி இருந்தோம்.
ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு நமது வலைப்பதிவர்கள் பலரும் தங்களைப்
பற்றிய விவரங்களை அனுப்பவில்லை என்று தெரிய வருகிறது. சகோதரி கீதா அவர்கள் தனது “ தூக்கமா?
கலக்கமா? ஏன் தாமதம் “ - http://velunatchiyar.blogspot.com/2015/09/thukkamaa.html
என்ற பதிவினில்
/// ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் உள்ள தமிழ் வலைப்பதிவர்களில்
130 வலைப்பதிவர்கள் வருகையும்,கையேட்டிற்காக 38 வலைப்பூ முகவரிகளும் மட்டுமே பதிவாகி
உள்ளன. ///
என்று தனது ஆதங்கத்தை சொல்லி
இருந்தார்.
இதுபற்றி யோசித்துப் பார்த்ததில், புனைபெயரிலும் சொந்தப் பெயரிலும்
வலைப்பதிவை தொடர்ந்து எழுதி வரும் பல வலைப்பதிவர்களுக்கு தாங்கள் இன்னார் என்று வெளிப்படுத்திக்
கொள்வதில் ஆர்வம் இல்லை எனும்போது எப்படி அவர்கள் தம்மைப் பற்றிய விவரங்களை கையேட்டில்
வர சம்மதிப்பார்கள்? என்றே எண்ண வேண்டியுள்ளது. முன்பு ஒருமுறை எனது பதிவினில் நான் எழுதிய வரிகள் இவை.(கீழே).
வலைப்பதிவில்
பலபேர் தங்களது உண்மையான பெயரில் எழுதுவதில்லை. இந்த முகமூடிப் பதிவர்கள் (MASKED WRITER) எழுதுவதில் சுய கட்டுப்பாடு எதுவும் இல்லை.
வானமே எல்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மற்றவர்கள் வலைத்தளம் வந்து
இஷ்டத்திற்கு கருத்துரைகளும் தருவார்கள்; சிலர் வம்புக்கு நிற்பார்கள். இந்த முகமூடி பதிவர்களிலும் நன்கு சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் உண்டு. இவர்கள்
தரும் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும். சிலர் தரும் பின்னூட்டங்கள் உற்சாகம்
தருவதாயும் கருத்துக்கள் நிரம்பியதாகவும் இருக்கும்.
எனவே தன்விவரம் (PROFILE) தெரிவிக்க விரும்பாதவர்கள் , தாங்கள்
தெரிவிக்க விரும்பும் விவரத்தை மட்டும் கையேட்டில் வெளியிடலாம். வேண்டாம் என்றால் தேவையில்லை.
அல்லது இப்போது அவர்கள் தமது வலைத்தளத்தில் உள்ள தன்விவரம் (PROFILE) மட்டும் தந்தால்
போதும் என்பது எனது கருத்து. எனவே இந்த ஒரு
காரணத்திற்காக மட்டும் அவர்கள் புதுக்கோட்டைக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. அவர்களும்
வந்திருந்து விழாவை சிறப்புறச் செய்ய வேண்டும்.
( PICTURE COURTESY: GOOGLE IMAGES)
