Monday, 27 April 2015

பின்னூட்டம் எழுதுவது



கம்ப்யூட்ட்ர், இண்டர்நெட் என்று வீட்டிற்கு வந்தபோது எல்லாமே மகிழ்ச்சியான தருணங்கள்தாம். அதிலும் முதன்முதலில் தமிழில் வலைப்பதிவுகளையும்  வலைப் பதிவாளர்களையும் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட சந்தோஷம் சொல்லி மாளாது. அவர்களது வலைத்தளங்கள் சென்று நமது கருத்துரைகளையும், ஊக்கம் தரும் பின்னூட்டங்களையும் வெளியிடுவது, அவற்றிற்கு அவர்கள் தரும் மறுமொழிகளை படிப்பது என்பதும் ஒரு வித மகிழ்ச்சியே. அப்புறம் வலைத்தளம் தொடங்கி நானும் ஒரு ப்ளாக்கர் (BLOGGER) என்று சொல்லிக் கொண்டபோது ஏற்பட்ட சந்தோஷத்தை எப்படி சொல்வது?

விமர்சனம் என்பது

எந்த ஒன்றையும் அதனைப்பற்றி ஓரளவேனும் தெரிந்து கொண்ட பிறகே நமது கருத்தினை தெரிவித்தல் முறை. அதே போல ஒரு கட்டுரையையோ அல்லது புத்தகத்தைப் பற்றியோ, அதனைப் படித்த பின்னரே கருத்து தெரிவித்தால் நல்லது. இப்போதெல்லாம் வலையுலகில் உடனுக்குடன் பாராட்டுவதோடு, குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனாலும், சிலர் படிக்காமலேயே கருத்துரை சொல்வதில் கில்லாடிகள். அந்த கட்டுரையைப் பற்றி பொத்தாம் பொதுவாக ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் என்று விமர்சனம் தருகிறார்கள். இன்னும் சிலர் ரைட்டு என்றோ அல்லது சில ஸ்மைலிகளைப் போட்டோ முடித்து விடுவார்கள். இதற்குப் பதில் இவர்கள் தமது கருத்தினை சொல்லாமலே போய் விடுவது நல்லது .

அண்மையில் மறைந்தவர் பட்டாபட்டி ( http://pattapatti.blogspot.in ) என்ற பதிவர் இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துப் போய் தனது வலைத்தளத்தில் எழுதி வைத்திருந்த வரிகள் இவை.

கீழ்கண்ட பின்னுட்டங்களை, தயவு செய்து.. அன்புகூர்ந்து.... என்னுடைய பதிவில் போட்டுவிட்டு.. பிரச்சனைய சந்திக்கவேண்டாம்..

ஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
Present..
வடைபோச்சே....

கருத்துரையா? பின்னூட்டமா?

ஒரு வலைப்பதிவில் ஒரு கட்டுரையை வெளிவந்தவுடன் நமது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி சொல்வது கருத்துரைகள். (Comments) அவ்வாறன்றி அந்த கட்டுரையின் ஆசிரியருக்கு உற்சாகம் ஊட்டும் வண்ணம் எழுதுவது பின்னூட்டம் (Feedback). மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது இரண்டும் ஒன்று போலவே தோன்றும். ஆனால் வலையுலகில் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் என்றே சொல்கிறார்கள்.

   
முகமூடிகளும் அனானிகளும்

வலைப்பதிவில் பலபேர் தங்களது உண்மையான பெயரில் எழுதுவதில்லை. இந்த முகமூடிப் பதிவர்கள் (MASKED WRITER) எழுதுவதில் சுய கட்டுப்பாடு எதுவும் இல்லை. வானமே எல்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மற்றவர்கள் வலைத்தளம் வந்து இஷ்டத்திற்கு கருத்துரைகளும் தருவார்கள்; சிலர் வம்புக்கு நிற்பார்கள்.  இந்த முகமூடி பதிவர்களிலும் நன்கு சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் உண்டு. இவர்கள் தரும் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும். சிலர் தரும் பின்னூட்டங்கள் உற்சாகம் தருவதாயும் கருத்துக்கள் நிரம்பியதாகவும் இருக்கும். இவர்கள் என்னதான் சிறப்பாக எழுதினாலும், ஒருநாள் கூட,  நான்தான் அந்த பதிவை எழுதினேன் என்று வெளிப்படையாக, தங்கள் நண்பர்களிடம் கூட சொல்லிக் கொள்ள முடியாது. குந்திதேவி தன்னுடைய மகன் கர்ணனை வெளிப்படையாக , மகன் என்று சொல்லிக் கொள்ள முடியாது போன்ற நிலை. இதனால் என்ன பயன்? எனவே அவர்கள் தங்கள் பெயர் முதலான சுயவிரங்களைத் தந்து விட்டே எழுதலாம்.

அனானிகள் (ANONYMOUS) என்று ஒரு வகையினர். GOOGLE இல் கணக்கு இல்லாத இவர்களால், கருத்துரைகள் மட்டுமே தர இயலும். இவர்கள் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட முகமூடி பதிவர்கள் போன்றே இருக்கும். உற்சாகமான பின்னூட்டங்களையும், கருத்துரையின் முடிவில் பெயர் தருபவர்களும் உண்டு.

இன்னும் சிலர். இவர்களுக்கு GOOGLE இல் கணக்கு இருக்கும். BLOGGER என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு உலாவுவார்கள். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள,  தன்விவரங்கள் (PROFILE) போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. ABOUT ME என்று வெறுமனே இருக்கும். இந்த போலி ப்ளாக்கர்கள் சிலர் தேவையற்ற கருத்துரைகளைத் தந்து நம்முடன்  மல்லு கட்டுவார்கள். இவர்களோடு வாதம் செய்வது என்பது காற்றோடு சண்டை போடுவதற்கு சமானம்.

ஜாதி, மதம், அரசியல், ஆன்மீகம் அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் என்று எழுத ஆரம்பித்தால் போதும், இந்த முகமூடிகள், அனானிகள், போலிகள் வந்து குதித்து விடுவார்கள்.

அதிலும் சிலர் கழிப்பறை கிறுக்கல்கள் போன்று எழுதி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்வார்கள்.

மட்டுறுத்தல் (COMMENTS MODERATION):

எனவே பலரும் கருத்துரை பெட்டியில் (COMMENTS BOX) , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SETTINGS  வழியே மட்டுறுத்தல் (COMMENTS MODERATION) என்ற ஒன்றை அமைத்துக் கொள்கின்றனர். எனவே மட்டுறுத்தல்  என்பது சில வேண்டாத தொல்லைகளை தவிர்க்க ஒரு வகையில் துணையாக நிற்கிறது. அதேசமயம் இந்த முறையைக் கையாளுவதால் நாம் நமக்கு வரும் கருத்துரைகளை வெளியிடுவதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அல்லது அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கம்ப்யூட்டர் முன்னே உட்கார வேண்டி உள்ளது. வெளியூர் சென்று விட்டால் இவைகள் அப்படியே நிறைந்து விடுகின்றன.

WORD PRESS  இல் கருத்துரை எழுதுவது என்பதும் கிட்டத்தட்ட ஒருவகை COMMENTS MODERATION வகைதாம். மேலும் இதில் நமது மின்னஞ்சல், நமது பெயர், நமது வலைத்தளத்தின் பெயர் என்று எல்லாவற்றையும் கேட்கிறார்கள். அப்புறம் "Your email address will not be published"  என்றும் சொல்லுகிறார்கள். அவ்வளவு எளிதில் யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இதனாலேயே WORD PRESS  இல் எழுதும் நண்பர்களுக்கு அதிகம் பின்னூட்டங்கள் வருவதில்லை.

வலைப்பதிவில் அனைத்தையும் படிப்பதற்கே நேரம் இல்லாத போது , இவ்வளவு தொல்லைகளையும் தாங்கி வாசகர் அல்லது வலைப்பதிவர் பின்னூட்டம் எழுத பொறுமைதான் வேண்டும். கருத்துரை பெட்டியில் (Comment Box) சிலர் ( தான் ஒரு உஷார் பேர்வழி என்பது போல) ஏதேதோ தடைகள் வைக்கிறார்கள். அதிலும் சிலர் வைத்துள்ள Word verification மற்றும் நீங்கள் ரோபோட்டா என்ற கேள்வி போன்றவை, பெரிய தொல்லை.
அந்த பதிவுகள் பக்கம் கருத்துரை போடும் அளவுக்கு பலருக்கும் பொறுமை கிடையாது. எனவே நிறையபேர் அந்த பதிவிலிருந்து வேறு பதிவிற்கு தாவல் (Skip) செய்துவிடுகிறார்கள்.
COMMENTS MODERATION இல்லாத விடத்து, நமது பதிவினில் வெளியாகிவிட்ட சில வேண்டாத கருத்துரைகளை துணிந்து நீக்குதல் தவறில்லை.

இந்த தொல்லைகளை எல்லாம் தவிர்க்க, கூகிள் நிறுவனம், வலைப்பதிவினில் கருத்துரைப் பெட்டியுடன் (COMMENTS BOX), பேஸ்புக்கில் (FACEBOOK) உள்ளது போல் லைக் (LIKE ) பட்டனையும் வைத்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இதனை வைத்து வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கலாம்.
                                                                 
சிறப்புச் செய்தி:

மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் எல்லோருடைய வலைத் தளத்திற்கும் சென்று ஊக்கம் அளிப்பவர். தனது வலைத்தளத்திற்கு வந்த, பின்னூட்டங்கள் அனைத்தையும் தொகுத்து பன்னிரண்டு தொடராக வெளியிட்டு ஆவணப் படுத்தி உள்ளார். துவக்க பதிவு இது.

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-1 http://gopu1949.blogspot.in/2015/03/1.html


                                  ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )

52 comments:

 1. வணக்கம் நண்பரே சிறப்பானதொரு அலசலை கையிலெடுத்தமைக்கு முதலில் பாராட்டுகள்
  உண்மைதான் பலரும் படிக்காமலே கருத்துரை போடுவதை கவனித்து இருக்கிறேன்
  //போலி ப்ளாக்கர்கள் சிலர் தேவையற்ற கருத்துரைகளைத் தந்து நம்முடன் மல்லு கட்டுவார்கள். இவர்களோடு வாதம் செய்வது 80 காற்றோடு சண்டை போடுவதற்கு சமானம்//
  மிகச்சரியான வார்த்தை இதுவும் பல இடங்களில் நடந்து கொண்டு இருக்கிறது.
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. தக்க சமயத்தில் நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன். ஏறக்குறைய இதே கருத்துகளை நான் என் பாணாயில் கூறியிருப்பதைப் பார்க்கவும்.

  லிங்க்: http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_28.html

  பல சமயங்களில் நம் இருவரின் கருத்துகளும் ஒன்றாக இணைகின்றன.

  ReplyDelete
 3. திருத்தம்: பாணாயில் - பிணாயில் மாதிரி தொனிக்கிறது. பாணியில் என்று திருத்திப் படிக்கவும்.

  ReplyDelete
 4. வணக்கம்
  ஐயா
  தாங்கள் சொல்வது 100 வீதம் உண்மைதான்.. நாம் என்னதான் செய்முடியும்... இப்படியான போலி வலைப்பூவின் ஊடாக கருத்து போடுவது அதிகம்.நானும் பல இடங்களில் பார்த்திருக்கேன்.. அருமையாககருத்தை சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள் ஐயா த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. ஐயா,
  சுருக்கமான பின்னூட்டங்களை பற்றி குறிப்பிட்டிருட்டிரருந்தீர்கள். எழுதுவது என்பது ஒரு கலை. ஓரு பதிவை படித்தவுடன், பாராட்ட தோன்றும், எழுத வராது. அந்த நேரத்தில், சுருக்கமாக சிலர் தங்கள் பாராட்டை தெரிவிப்பார்கள் (நானும் அந்த சாதிதான்). அவர்களை சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 6. நல்ல பொருண்மை எடுத்து விவாதித்துள்ளீர்கள். இவை போன்றவை தவிர்க்கமுடியாதவையே. பழனி கந்தசாமி ஐயா அவர்களும் சற்றொப்ப தங்களின் கருத்தையொட்டிய பதிவை எழுதியுள்ளார். நேர்மறைக் கருத்துக்களை எடுத்துக்கொள்வோம். எதிர்மறைக் கருத்துக்களையும் தேவையற்றவைகளையும் நீக்கிவிடுவோம் அல்லது பெரிதுபடுத்தாமல் இருப்போம். ஒரு பதிவு எழுதுவது என்பதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. அவ்வாறு உள்ளவர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. தங்களின் ஆழ்ந்த விவாதத்திற்கு நன்றி.

  ReplyDelete
 7. பின்னூட்டம் என்பது பதிவர்களுக்கு ஊட்டம் தருவது. எனவே அந்த பின்னூட்டம் குறைகளை சுட்டிக்காட்டி நிறைகளை பாராட்டுவதாக இருக்கவேண்டும். நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல் பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதை விட பின்னூட்டம் தராமலேயே இருக்கலாம். முகமூடி பதிவர்கள் பற்றியும் அனானிகள் பற்றியும் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவர்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதபோது நாம் ஏன் அவர்களுக்கு விளம்பரம் தேடித்தரவேண்டும்.

  திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்ட புள்ளிவிவரத்தை படித்தேன். மிக அருமையாக தொகுத்து இருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 8. அநாகரீகமான கருத்துரைகளை தவிர்க்க வேண்டும். நமது எல்லாப் பதிவுகளும் நமது நண்ப்ர்களுக்கு பிடிக்கும் என்று சொல்லமுடியாது. அவ்வளவாக ரசிக்கப் படாத பதிவு என்றாலும் வந்ததற்காக மேலோட்டமாக நாகீர்கம் கருதி ஒரு பின்னூட்டம் இடப்படுகிறது. அதை குறையாக கருத வேண்டியதில்லை. பெரும்பாலான பின்னூட்டங்கள் வருகையை தெரிவிக்கவே . நமது பதிவை அவரும் படிக்க வருவார் அல்லது வர விரும்புகிறார் என்பதே நோக்கம். அதில் பெரிய தவறு ஏதும் இல்லை என்றே கருதுகிறேன்.. ஒருவர் நமக்கு தொடர்ந்து கருத்திடுகிறார். ஆனால் அவரது வலைபக்கத்திற்கு நாம் செல்வதே இல்லை என்றால் சில நாட்களில் அவர் நமது வலைப் பக்கத்துக்கு வருவதை தவிர்த்து விடுவார்.இது இயல்பாக நடப்பதுதான்.

  ReplyDelete
 9. கூகிள் நிறுவனம், வலைப்பதிவினில் கருத்துரைப் பெட்டியுடன் (COMMENTS BOX), பேஸ்புக்கில் (FACEBOOK) உள்ளது போல் லைக் (LIKE ) பட்டனையும் வைத்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இதனை வைத்து வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கலாம்.
  சிறந்த கருத்து ஐயா
  நமது வலைக்கு வருகை தரும் அனைவருக்கும் கருத்து சொல்ல நேரமிருப்பதில்லை
  அவசர உலகமாகிவிட்டதே.
  முரளிதரன் ஐயா அவர்களின் கருத்தினையும் ஏற்கிறேன் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
 10. டொய்ங்... டொய்ங்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html

  ReplyDelete
 11. தேவையான மிக நல்ல பதிவு.

  எனக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. பல நேரங்களில் பதிவை படித்து விட்டு பின்னோட்டம் இடாமல் போனதுண்டு. ஆனாலும் சில நேரம் நண்பர்கள் ஓரிரு வார்த்தைகளில் போடும் பின்னூட்டங்களையும் எற்றுகொள்ளதான் வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும் கூட.

  த ம 7

  ReplyDelete
 12. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 13. மறுமொழி > பழனி. கந்தசாமி said... ( 1, 2 , 3)

  அய்யா முனைவர் பழனி. கந்தசாமி அவர்களுக்கு வணக்கம்.

  // தக்க சமயத்தில் நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன். ஏறக்குறைய இதே கருத்துகளை நான் என் பாணியில் கூறியிருப்பதைப் பார்க்கவும். லிங்க்: http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_28.html
  பல சமயங்களில் நம் இருவரின் கருத்துகளும் ஒன்றாக இணைகின்றன. //

  நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் உள்ள பதிவினை காலையிலேயே படித்து விட்டேன்; எனது கருத்துரையையும் தந்துள்ளேன்.

  ஒரு பதிவினில் நாம் எழுதிய கருத்துரையில் எழுத்துப் பிழை அல்லது வேறு காரணத்திற்காக அந்தக் கருத்துரையை நீக்க கருதினால் (நமது பாஸ் வேர்டுடன்) நாமே நீக்கி விடலாம். Comments Moderation இருக்கும் பதிவுகளில் மட்டும் , அந்த பதிவர் அந்த கருத்துரையை வெளியிடுன்வரை காத்து இருக்க வேண்டும்.

  ReplyDelete
 14. மறுமொழி > ரூபன் said...

  கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். இல்லாத ஒரு வலைப்பூ வழியாக அவர்கள் கருத்துரை எழுதுவதில் தவறில்லை. ஆனால் தாறுமாறாக வேண்டுமென்றே சிலர் எழுதுவதுதான் மனதிற்கு சங்கடத்தை உண்டு பண்ணி விடுகிறது.

  கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 15. மறுமொழி > Sampath Kalyan said...

  அன்பு சகோதரர் சம்பத் கல்யாண் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // ஐயா, சுருக்கமான பின்னூட்டங்களை பற்றி குறிப்பிட்டிருட்டிரருந்தீர்கள். எழுதுவது என்பது ஒரு கலை. ஓரு பதிவை படித்தவுடன், பாராட்ட தோன்றும், எழுத வராது. அந்த நேரத்தில், சுருக்கமாக சிலர் தங்கள் பாராட்டை தெரிவிப்பார்கள் (நானும் அந்த சாதிதான்). அவர்களை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் //

  இந்த பதிவின் நோக்கம் கருத்துரை அல்லது பின்னூட்டம் என்றால் என்ன? யார் யார், எப்படி எப்படி எல்லாம் எழுதுவார்கள் என்ற ஒரு பார்வைதான். எனவே எந்த விமர்சகரையும் விமர்சனம் செய்யவில்லை.

  சுருக்கமான, அல்லது நீண்ட கருத்துரையாளர் யாராக இருந்தாலும், அவர் அந்த வலைப்பதிவருக்கு ஊக்கம் கொடுத்து உதவுகிறார் என்பதே உண்மை. ஆனாலும் நம்மை யாரும் இன்னாரென்று அறிந்து கொள்ள முடியாது என்ற தைரியத்தில் சிலர் மோசமாக எழுதும் போதுதான் பாதிப்பு வந்து விடுகிறது.

  ReplyDelete
 16. மறுமொழி > Dr B Jambulingam said...

  முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // நல்ல பொருண்மை எடுத்து விவாதித்துள்ளீர்கள். இவை போன்றவை தவிர்க்கமுடியாதவையே. பழனி கந்தசாமி ஐயா அவர்களும் சற்றொப்ப தங்களின் கருத்தையொட்டிய பதிவை எழுதியுள்ளார்.//

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அய்யா பனி கந்தசாமி அவர்கள் அநாமதேய கருத்துரைகள் பற்றிய அவரது அனுபவத்தினை, சற்று காட்டத்துடன் எழுதியுள்ளார்.

  // நேர்மறைக் கருத்துக்களை எடுத்துக்கொள்வோம். எதிர்மறைக் கருத்துக்களையும் தேவையற்றவைகளையும் நீக்கிவிடுவோம் அல்லது பெரிதுபடுத்தாமல் இருப்போம். //

  ஒரு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளரான தங்களின் அனுபவ வரிகளை அப்படியே எடுத்துக் கொள்கிறேன். இனி நான் எழுதும் பதிவுகளுக்கும் இவை வழி காட்டும்.

  // ஒரு பதிவு எழுதுவது என்பதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. அவ்வாறு உள்ளவர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. தங்களின் ஆழ்ந்த விவாதத்திற்கு நன்றி. //

  ஒரு பதிவு எழுதுவது என்பதில் எவ்வளவு சிரமம் இருக்கிறதோ அவ்வளவு சிரமம் ஒரு விமர்சகருக்கும் இருக்கிறது. எனவேதான் நிறையபேர் படிப்பதோடு அப்பால் நகர்ந்து விடுகிறார்கள். வலையுலகில், நண்பர்களுக்காக எழுதுவதான் அதிகம் உள்ளது அய்யா!

  ReplyDelete

 17. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா V.N.S அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

  // பின்னூட்டம் என்பது பதிவர்களுக்கு ஊட்டம் தருவது. எனவே அந்த பின்னூட்டம் குறைகளை சுட்டிக்காட்டி நிறைகளை பாராட்டுவதாக இருக்கவேண்டும். நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல் பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதை விட பின்னூட்டம் தராமலேயே இருக்கலாம். //

  அவர்கள் பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதில் தப்பில்லை. ஆனாலும் சில சமயம், சிலர் பதிவினைப் படிக்காமலேயே கருத்துரை தருவது வெளிப்படையாகவே தெரியும்போது வருத்தமாகவே படுகிறது.

  // முகமூடி பதிவர்கள் பற்றியும் அனானிகள் பற்றியும் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவர்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதபோது நாம் ஏன் அவர்களுக்கு விளம்பரம் தேடித்தரவேண்டும். //

  பின்னூட்டம் என்ற தலைப்பினில் ஒரு கட்டுரையாக தொகுக்கும்போது முகமூடி மற்றும் அனானிகளைப் பற்றியும் எழுத வேண்டிய சூழ்நிலை.

  // திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்ட புள்ளிவிவரத்தை படித்தேன். மிக அருமையாக தொகுத்து இருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!//

  பணி ஓய்வு பெற்று விட்டாலும், இன்னமும் இந்த வயதில் திரு V.G.K அவர்களுக்கு இருக்கும் எழுத்தார்வம் ஆச்சரியமான விஷயம்தான்.

  ReplyDelete
 18. அண்மையில் எண்ணங்கள் எழுத்தில் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். பதிவர்களுக்கு இருக்கும் குறைகள்பின்னூட்டங்களைப் பொறுத்தவரை எழுதி இருந்தேன் அனானிகளை முற்றும் ஒதுக்குவதே சிறந்தது.பின்னூட்ட வசதியையே நீக்கிப் பாருங்களேன் என்றும் ஒரு சஜெஸ்சன் இருந்தது

  ReplyDelete
 19. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  கல்வி அலுவலர், சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி!

  // அநாகரீகமான கருத்துரைகளை தவிர்க்க வேண்டும். நமது எல்லாப் பதிவுகளும் நமது நண்ப்ர்களுக்கு பிடிக்கும் என்று சொல்லமுடியாது. அவ்வளவாக ரசிக்கப் படாத பதிவு என்றாலும் வந்ததற்காக மேலோட்டமாக நாகீர்கம் கருதி ஒரு பின்னூட்டம் இடப்படுகிறது. அதை குறையாக கருத வேண்டியதில்லை. பெரும்பாலான பின்னூட்டங்கள் வருகையை தெரிவிக்கவே . நமது பதிவை அவரும் படிக்க வருவார் அல்லது வர விரும்புகிறார் என்பதே நோக்கம். அதில் பெரிய தவறு ஏதும் இல்லை என்றே கருதுகிறேன்.. //

  மேலே, அன்பு சகோதரர் சம்பத் கல்யாண் அவர்களின் கருத்துரைக்கு நான் தந்த, “ இந்த பதிவின் நோக்கம் கருத்துரை அல்லது பின்னூட்டம் என்றால் என்ன? யார் யார், எப்படி எப்படி எல்லாம் எழுதுவார்கள் என்ற ஒரு பார்வைதான். எனவே எந்த விமர்சகரையும் விமர்சனம் செய்யவில்லை.” – என்ற மறுமொழியையே இங்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.
  சுருக்கமான, அல்லது நீண்ட கருத்துரையாளர் என்ற பாகுபாடு இல்லை.



  // ஒருவர் நமக்கு தொடர்ந்து கருத்திடுகிறார். ஆனால் அவரது வலைபக்கத்திற்கு நாம் செல்வதே இல்லை என்றால் சில நாட்களில் அவர் நமது வலைப் பக்கத்துக்கு வருவதை தவிர்த்து விடுவார்.இது இயல்பாக நடப்பதுதான். //

  எனது கட்டுரையின் இறுதியில் விமர்சனம் செய்பவருக்கு உண்டான சங்கடங்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன்.

  ReplyDelete

 20. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. பலரும் கருத்துரை தருவதற்கு யோசிப்பதால், பேஸ்புக்கில் (FACEBOOK) உள்ளது போல் லைக் (LIKE ) பட்டனும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 21. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  ஏற்கனவே தங்களது இந்த பதிவினை படித்து இருக்கிறேன். மறுபடியும் சென்று பார்க்கிறேன். சகோதரருக்கு நன்றி

  ReplyDelete
 22. மறுமொழி > S.P. Senthil Kumar said...

  சகோதரர் S.P.செந்தில் குமார் அவர்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 23. லைக் போடுவது என்பதே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம்போல் ஆகிவிட்டது. லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். இப்போதே நிறையப்பேர் பதிவைப் படிக்காமலேயே கருத்துப் பதிகிறார்கள் என்பதற்காக வருத்தப்படும் நாம், லைக் போடும் வசதியை வலைத்தளத்திலும் வைத்துவிட்டால், படிக்காமலேயே -எழுதுபவர் நமக்கு வேண்டியவராக இருக்கும் பட்சத்தில்- லைக் போடுவதும், வேண்டாதவராக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிராகப் போட்டுச் செல்வதும் நடக்காதா என்ன?
  கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு?
  அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும்?

  ReplyDelete
 24. பின்னூட்டத்தில் இத்தனை வகைகளா?

  ReplyDelete
 25. மறுமொழி > G.M Balasubramaniam said...

  அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் வணக்கம்! ஆலோசனைகள் கொண்ட உங்கள் கருத்துரைக்கு நன்றி.

  // அண்மையில் எண்ணங்கள் எழுத்தில் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். பதிவர்களுக்கு இருக்கும் குறைகள் பின்னூட்டங்களைப் பொறுத்தவரை எழுதி இருந்தேன் அனானிகளை முற்றும் ஒதுக்குவதே சிறந்தது.பின்னூட்ட வசதியையே நீக்கிப் பாருங்களேன் என்றும் ஒரு சஜெஸ்சன் இருந்தது //

  தாங்கள் அண்மையில் எழுதிய ”சில எண்ணங்கள் எழுத்தில்” http://gmbat1649.blogspot.in/2015/04/blog-post.html என்ற பதிவினைப் படித்தும், எனது கருத்துரையையும் தந்து இருக்கிறேன். அதில் நான் எனது கருத்துரை இது.

  தி.தமிழ் இளங்கோ said...
  அய்யா! மனிதர்களை குறிப்பாக வலைப்பதிவர்களைப் பற்றி நன்றாகவே எடை போட்டு இருக்கிறீர்கள்.

  // எனக்குப் புரியாத விஷயங்களில் ஏன் பல பதிவர்கள் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள் என்பதும் ஒன்று. உண்மைப் பெயரை மறைத்து புனைப் பெயரிலும் புகைப்படங்களை வெளியிடத் தயங்குவதிலும் என்ன பலன் கிடைக்கிறது புரிவதில்லை. //

  எனக்கும் இதுதான் அய்யா சந்தேகம். நன்றாகவே எழுதுகிறார்கள். பின்னூட்டங்கள் தருகிறார்கள். ஆனால் அவர்கள் தளத்தில் சென்று பார்த்தோமானால் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் இருப்பதில்லை. புரியாத புதிர். இதனாலேயே தன்விவரம் (PROFILE) முழுமையாக இல்லாதவர்களுடைய வலைத்தளத்தில் உறுப்பினராக யோசனை செய்ய வேண்டி இருக்கிறது.
  April 17, 2015 at 5:48 PM

  ReplyDelete
 26. மறுமொழி > Amudhavan said...

  மரியாதைக்குரிய அய்யா அமுதவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வருகைக்கும், நீண்ட விரிவான கருத்துரைக்கும் நன்றி.

  // லைக் போடுவது என்பதே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம்போல் ஆகிவிட்டது. லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். இப்போதே நிறையப்பேர் பதிவைப் படிக்காமலேயே கருத்துப் பதிகிறார்கள் என்பதற்காக வருத்தப்படும் நாம், லைக் போடும் வசதியை வலைத்தளத்திலும் வைத்துவிட்டால், படிக்காமலேயே -எழுதுபவர் நமக்கு வேண்டியவராக இருக்கும் பட்சத்தில்- லைக் போடுவதும், வேண்டாதவராக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிராகப் போட்டுச் செல்வதும் நடக்காதா என்ன? கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு? அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும்? //

  உங்களுடைய இந்த கருத்துரையைப் படித்த பிறகுதான், வலைப் பதிவில் லைக் போடுவதன் ஆபத்தை உணர்ந்து கொண்டேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

  எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ”லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு? அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும்? ” - என்ற உங்களது கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 27. மறுமொழி > வர்மா said...

  // பின்னூட்டத்தில் இத்தனை வகைகளா? //

  சகோதரர் வர்மா அவர்களுக்கு நன்றி. பின்னூட்டத்தில் இத்தனை வகைகள் என்பதைவிட, பின்னூட்டம் இடும் மனிதர்கள் இத்தனை வகையினர் என்றே எடுத்துக் கொள்கிறேன். மனிதரில் இத்தனை நிறங்கள் – என்றே ஒரு படம் வந்தது.

  ReplyDelete
 28. பின்னூட்டங்கள் எந்த அளவிற்கு உற்சாகம் தருகின்றனவோ அந்த அளவிற்கு அனாமதேயர்களின் பின்னூட்டங்கள் வருத்தத்தை தருகின்றன. சில பதிவுகளுக்கு எந்த வகையில் கமெண்ட் செய்வது என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாக அருமை என்று பின்னூட்டம் இடும் வழக்கம் எனக்கும் உண்டு. சில சமயம் நிறைய பதிவுகளை வாசிப்பதாலும் சுருக்கமான பின்னூட்டங்கள் அளிப்பதுண்டு. சில பின்னூட்டங்கள் சுவாரஸ்யம் தருபவை. வை.கோ அய்யாவின் பின்னூட்டங்கள் அவர் பதிவை மிகவும் ரசித்து படித்து இருக்கிறார் என்று தோன்ற வைக்கும். சிறப்பான பதிவு! நன்றி!

  ReplyDelete
 29. பதிவு நாலு வரி ,பின்னூட்டமும் அதற்கு மறுமொழியும் நாற்பது வரி ...இதுதான் என் பாணி என்பது நீங்களும் அறிந்ததே ...பொத்தாம் பொதுவான பின்னூட்டங்கள் என் தளத்தில் வருவது குறைவு .பதிவுக்கு செலவிடும் நேரத்தை விட மறு மொழிக்கு அதிக நேரம் செலவழிக்கிறேன் என்பதால் ,என்னை யோசிக்க வைக்கும் விதமாக பின்னூட்டங்கள் வருவதை நான் ரசிக்கிறேன் .அதே நேரத்தில் ,நேற்று எனக்கு நீங்கள் போட்டிருக்கும் 'உங்கள் கற்பனைக்கு ஏது எல்லை? 'என்ற பொதுவான கருத்துகூட ,நகைச்சுவையாய் மறுமொழி கூற உதவி செய்வதால் ரசிக்கத்தான் செய்கிறேன் !
  பெயரில்லாக்கள் சமீப காலமாய் நிறைய வருகிறார்கள் ,வம்பு இழுக்கும் விதமாய் கருத்து சொல்வதை உடனே டெலிட் செய்து விடுகிறேன் :)

  ReplyDelete
 30. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

  சகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // பின்னூட்டங்கள் எந்த அளவிற்கு உற்சாகம் தருகின்றனவோ அந்த அளவிற்கு அனாமதேயர்களின் பின்னூட்டங்கள் வருத்தத்தை தருகின்றன. //

  அனானிகள் பொதுவாக எழுதி இருந்தால் வெளியிடுவேன். அப்படி இல்லாமல் ஏட்டிக்குப் போட்டியாகவும், சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அடுத்தவர்களை வம்புக்கு இழுத்தும் இருந்தால் நீக்கி விடுவேன்.

  // சில பதிவுகளுக்கு எந்த வகையில் கமெண்ட் செய்வது என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாக அருமை என்று பின்னூட்டம் இடும் வழக்கம் எனக்கும் உண்டு. சில சமயம் நிறைய பதிவுகளை வாசிப்பதாலும் சுருக்கமான பின்னூட்டங்கள் அளிப்பதுண்டு. சில பின்னூட்டங்கள் சுவாரஸ்யம் தருபவை. வை.கோ அய்யாவின் பின்னூட்டங்கள் அவர் பதிவை மிகவும் ரசித்து படித்து இருக்கிறார் என்று தோன்ற வைக்கும். சிறப்பான பதிவு! நன்றி! //

  சுருக்கமான கருத்துரை எழுதுவதில் தவறு ஏதும் இல்லை.

  ReplyDelete
 31. மறுமொழி > Bagawanjee KA said...

  வாருங்கள் கே.ஏ.பகவான்ஜீ. உங்களுடன் நிறைய பேச வேண்டும்.நான் நிறையபேருடைய (குறிப்பாக எனது வலைத்தளத்தில் உள்ள உறுப்பினர்களின் பதிவுகள் மற்றும் நான் உறுப்பினராக உள்ள மற்ற நண்பர்களது பதிவுகள்)
  அனைத்தையும், எனது டேஷ் போர்டில் வர வர படித்து விடுவேன். ஆனாலும் எல்லோருக்கும் என்னால் உடனுக்குடன் பின்னூட்டங்கள் எழுத முடிவதில்லை. இருந்தாலும் நண்பர்களை இழந்து விடக் கூடாது என்பதால் எப்படியும் அவர்களுக்கு ஒன்றிரண்டு பின்னூட்டங்களை எழுதி விடுவேன்.

  // பதிவு நாலு வரி ,பின்னூட்டமும் அதற்கு மறுமொழியும் நாற்பது வரி ...இதுதான் என் பாணி என்பது நீங்களும் அறிந்ததே ...பொத்தாம் பொதுவான பின்னூட்டங்கள் என் தளத்தில் வருவது குறைவு .பதிவுக்கு செலவிடும் நேரத்தை விட மறு மொழிக்கு அதிக நேரம் செலவழிக்கிறேன் என்பதால் ,என்னை யோசிக்க வைக்கும் விதமாக பின்னூட்டங்கள் வருவதை நான் ரசிக்கிறேன் .அதே நேரத்தில் ,நேற்று எனக்கு நீங்கள் போட்டிருக்கும் 'உங்கள் கற்பனைக்கு ஏது எல்லை? 'என்ற பொதுவான கருத்துகூட ,நகைச்சுவையாய் மறுமொழி கூற உதவி செய்வதால் ரசிக்கத்தான் செய்கிறேன் !//

  உங்கள் ஜோக்குகளை தொடர்ந்து ரசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவர். இருந்த போதிலும், பெண்களை அதிகமாக கிண்டலடிக்கும் போது என்னால் பின்னூட்டம் எழுத முடியாது போகிறது. மேலும் ஒரே மாதிரி சொற்களை திரும்பத் திரும்ப போட்டு உங்களுக்கு சலிப்பு உண்டாக்கவும் விரும்புவதில்லை.
  நகைச்சுவை என்பது கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு (உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியவில்லை?)

  // பெயரில்லாக்கள் சமீப காலமாய் நிறைய வருகிறார்கள் ,வம்பு இழுக்கும் விதமாய் கருத்து சொல்வதை உடனே டெலிட் செய்து விடுகிறேன் :) //

  தங்களைப் பற்றி வெளியே தெரியக் கூடாது என்பவர்கள் தங்கள் கருத்துக்கள் மட்டும் வெளியே வர வேண்டும் என்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. எனவே அனானிகள் கருத்துக்கள் நன்றாக இருந்தால் வெளியிடுங்கள். இல்லையெனில் துணிந்து (ஏற்கனவே வெளியாகி இருந்தாலும்) அவற்றை நீக்கி விடுங்கள்.

  ReplyDelete
 32. விரிவான பதிவும் பின்னூட்டங்களும் கண்டேன்! என்னைப் பொறுத்தவரை எதையும் படிக்காமல் பின்னூட்டம் இடுவதே ,குற்றம் கூறி எழுதுவதோ இதுவரை இல்லை!

  ReplyDelete
 33. ’பின்னூட்டம் எழுதுவது’ என்ற தலைப்பினில் தங்களுடைய தனிப்பாணியில் மிகவும் அருமையானதோர் அலசல் கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.

  இறுதியில் என் புகைப்படத்துடன், 12 பகுதிகளாகப் பிரித்து நான் வெளியிட்டுள்ள என்னுடைய சமீபத்திய தொடருக்கான இணைப்பினையும் கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  அன்புடன் VGK

  ReplyDelete
 34. வே.நடனசபாபதி said...

  //திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்ட புள்ளிவிவரத்தை படித்தேன். மிக அருமையாக தொகுத்து இருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!//

  Thank you very much, Sir. - VGK

  ReplyDelete
 35. // திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்ட புள்ளிவிவரத்தை படித்தேன். மிக அருமையாக தொகுத்து இருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!//

  - திரு. வே. நடனசபாபதி அவர்கள்.

  //பணி ஓய்வு பெற்று விட்டாலும், இன்னமும் இந்த வயதில் திரு V.G.K அவர்களுக்கு இருக்கும் எழுத்தார்வம் ஆச்சரியமான விஷயம்தான்.//

  - திரு. தி தமிழ் இளங்கோ அவர்கள்.

  இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  - அன்புடன் VGK

  ReplyDelete
 36. //வை.கோ அய்யாவின் பின்னூட்டங்கள் அவர் பதிவை மிகவும் ரசித்து படித்து இருக்கிறார் என்று தோன்ற வைக்கும். //

  - தளிர் திரு. சுரேஷ் அவர்கள்.

  தங்களின் புரிதலுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  - VGK

  ReplyDelete
 37. படிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை. படித்தால் பின்னூட்டம் இடாமல் வருவதும் இல்லை.

  தமிழ்மணம் வாக்களிக்கத் தவறுவதில்லை.

  ஓரிரு வாக்கியங்களில் பின்னூட்டம் இடுவதில் தவறில்லை. மாவுக்கேத்த பணியாரம். சில நண்பர்கள் நான்கு வரிகளில் கவிதை எழுதி பதிவிடுவது உண்டு. அதைப் பற்றி ஆராய, விவாதிக்க ஒன்றுமில்லை. அருமை என்கிற வார்த்தை போதும் அங்கு அவர்களை ஊக்குவிக்கவும், நான் படித்தேன் என்று காட்டிக் கொள்ளவும்.

  லைக் இடுவதும், பின்னூட்டம் தருவதும் நாம் அந்தப் பதிவைப் படித்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே.

  பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி விட்டு மாதக் கணக்கில் என்ன ஆனதோ என்று காத்திருக்கும் நிலை மாறி, உடனுக்குடன் பதிவு, உடனுக்குடன் பதில்கள் என்ற நிலை இன்று பதிவுலகினால்தான் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களை ஊக்குவிக்க லைக் இடுவதோ, ஓரிரு வார்த்தைகளிலாவது பின்னூட்டம் இடுவதோ தவறில்லை என்று கருதுகிறேன். முரளிதரன் சரியாகச் சொல்லி இருக்கிறார்.

  நாம் எழுதும் சப்ஜெக்டில் எல்லோரும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதைப் பற்றிப் பேச விரும்பாதவர்களும் இருக்கலாமே.. முயற்சியைப் பாராட்டி விட்டுச் செல்வோர் உண்டு. கருத்துகளை விட நட்பு பெரிது. மனவருத்தம் தரும் பின்னூட்டங்கள் இடுவதால் யாருக்கு என்ன பயன்?

  வைகோ ஸார் தனது பதிவில் இந்தப் பதிவு பற்றிக் கொடுத்துச் சுட்டி கொடுத்திருந்தார். வைகோ ஸாரின் பொறுமையும், முயற்சியும், திறமைகளும் பாராட்டப் படவேண்டியவை.

  ReplyDelete
 38. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். உடல் நலம் தளர்ந்த நிலையிலும், எனது வலைப்பக்கம் வந்து கருத்துரை தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 39. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2, 3, 4 )

  // ’பின்னூட்டம் எழுதுவது’ என்ற தலைப்பினில் தங்களுடைய தனிப்பாணியில் மிகவும் அருமையானதோர் அலசல் கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.//

  அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

  // இறுதியில் என் புகைப்படத்துடன், 12 பகுதிகளாகப் பிரித்து நான் வெளியிட்டுள்ள என்னுடைய சமீபத்திய தொடருக்கான இணைப்பினையும் கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.//

  இன்றைய வலையுலகில் என்னைப் போன்றவர்கள், உற்சாகமாக எழுதுவதற்கு நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த், உற்சாகமான கருத்துரைகளே (பின்னூட்டங்களே) எனில் மிகையாகாது.

  மற்றும் இந்த பதிவினில் கருத்துரை தந்த அய்யா V.N.S, தளிர் சுரேஷ் மற்றும் எனக்கும் நல்ல பதிலுரைகளை தந்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 40. மறுமொழி > ஸ்ரீராம். said...

  அன்புள்ள ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கம். ‘எங்கள் ப்ளாக்” என்ற உங்கள் ப்ளாக் வாசகர்களில் நானும் ஒருவன். உங்களது நீண்ட அன்பான கருத்துரைக்கு நன்றி.

  // படிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை. படித்தால் பின்னூட்டம் இடாமல் வருவதும் இல்லை. தமிழ்மணம் வாக்களிக்கத் தவறுவதில்லை.//

  நானும் முடிந்தவரை படித்த எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் தந்து விடவே முயலுகிறேன். சூழ்நிலை சில சமயம் அவ்வாறு முடிவதில்லை. ஆனாலும், பின்னூட்டம் இட்ட ஒவ்வொரு பதிவுக்கும், மறக்காமல் தமிழ்மணம் வாக்களிக்கத் தவறுவதில்லை.

  நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் அய்யா. உங்களுடைய கருத்தினில் உடன்படுகிறேன். இங்கு எனது பதிவின் நோக்கம், எப்படி எப்படி எல்லாம் பின்னூட்டங்கள் எழுதுகிறார்கள் என்ற (பள்ளி மாணவன் எழுதும் ஒரு பொதுவான கட்டுரை போன்ற ) ஒரு பார்வைதான்.

  இங்கே மரியாதைக்குரிய அய்யா அமுதவன் அவர்களது கருத்துரையையும் எனது மறுமொழியையும் மீண்டும் நினைவு கூர்கிறேன்.

  // Amudhavan said... :

  லைக் போடுவது என்பதே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம்போல் ஆகிவிட்டது. லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். இப்போதே நிறையப்பேர் பதிவைப் படிக்காமலேயே கருத்துப் பதிகிறார்கள் என்பதற்காக வருத்தப்படும் நாம், லைக் போடும் வசதியை வலைத்தளத்திலும் வைத்துவிட்டால், படிக்காமலேயே -எழுதுபவர் நமக்கு வேண்டியவராக இருக்கும் பட்சத்தில்- லைக் போடுவதும், வேண்டாதவராக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிராகப் போட்டுச் செல்வதும் நடக்காதா என்ன? கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு? அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும்? //

  // எனது மறுமொழி:

  உங்களுடைய இந்த கருத்துரையைப் படித்த பிறகுதான், வலைப் பதிவில் லைக் போடுவதன் ஆபத்தை உணர்ந்து கொண்டேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

  எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ”லைக் போடுவது ஃபேஸ்புக்கோடு நிற்கட்டும். கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிப்பதற்கும் எழுதுவதற்கும்தானே வலைப்பதிவு? அதில் எதற்கு லைக்கும் அன்லைக்கும்? ” - என்ற உங்களது கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். //

  Xxxxxxxx

  // வைகோ ஸார் தனது பதிவில் இந்தப் பதிவு பற்றிக் கொடுத்துச் சுட்டி கொடுத்திருந்தார். வைகோ ஸாரின் பொறுமையும், முயற்சியும், திறமைகளும் பாராட்டப் படவேண்டியவை.//

  திரு V.G.K அவர்களின் பெருந்தன்மை யாருக்கும் வராது. தமிழ் வலையுலகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா எதுவும் நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு.

  ReplyDelete
 41. //வைகோ ஸார் தனது பதிவில் இந்தப் பதிவு பற்றிக் கொடுத்துச் சுட்டி கொடுத்திருந்தார். வைகோ ஸாரின் பொறுமையும், முயற்சியும், திறமைகளும் பாராட்டப் படவேண்டியவை. //

  - ஸ்ரீராம்.

  :) ஆஹா, தன்யனானேன். மிக்க நன்றி. ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் !

  -=-=-=-=-

  //திரு V.G.K அவர்களின் பெருந்தன்மை யாருக்கும் வராது. தமிழ் வலையுலகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா எதுவும் நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு.//

  - திரு. தி. தமிழ் இளங்கோ

  :) மிக்க நன்றி, தமிழ் இளங்கோ சார். பதிவுலகில் தங்களைப்போன்ற ஒரு சில நண்பர்கள் எனக்குக் கிடைத்துள்ளதும், அவர்கள் என் உண்மையான நலம் விரும்பிகளாக இருந்து வருவதுமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதிகளாக நான் நினைத்து மகிழ்கிறேன். தனியாக எந்தவொரு பாராட்டு விழாவும் தேவையே இல்லை, அது நடைபெறவில்லையே என்ற ஏக்கமும் தங்களுக்கு வேண்டாம், ஐயா.

  எப்போதும்போல நாம் நல்ல நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் இருப்போம். அதுவே என்றும் நீடிக்கும் சந்தோஷம் அளிப்பவையாகும்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 42. பின்பட்ட்ற விளைகிறேன்..
  தம +

  ReplyDelete
 43. நல்லதொரு அலசல். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சார்.

  கருத்துரை தெரிவிக்காமல் படித்து விட்டு செல்பவர்களே அதிகம். அதற்காக வருத்தப்பட்டுக் கொள்ள முடியுமா? வலைப்பூ என்ற ஒன்றால் தான் இவ்வளவு பேரின் திறமை வெளிவருகிறது. பத்திரிக்கைகளுக்கு அனுப்பி காத்திருப்பதை விட சகஜமாக நட்புகளிடம் பகிர்ந்து கொள்வதை போன்று வசதி உள்ளது. தவறான பின்னூட்டங்களை comment moderation மூலம் நீக்கிவிட்டால் ஆச்சு.

  ReplyDelete

 44. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 45. சிறப்பான கட்டுரை.

  பல சமயங்களில் நேரக் குறைவு காரணமாக பின்னூட்டம் இடாமலும் செல்ல நேர்கிறது. அந்த நேரத்தில் நாம் வந்தோம், பதிவினைப் படித்தோம் என்பதைத் தெரிவிக்க ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் எழுதிச் செல்ல வேண்டியிருக்கிறது.

  சில நாட்கள் தொடர்ந்து வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. இப்போது கூட நான்கு நாட்களுக்கு மேலாகி விட்டது பதிவுகளைப் படிக்க - பாருங்களேன் உங்களது இப்பதிவினைக் கூட ஆறு நாட்கள் கழித்து படிக்க வேண்டியிருக்கிறதே! :)

  எது எப்படியோ, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்போம்.

  ReplyDelete
 46. மறுமொழி > Mathu S said...

  சகோதரர் ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 47. மறுமொழி > ADHI VENKAT said...


  // நல்லதொரு அலசல். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சார்.//

  சகோதரி அவர்களுக்கு நன்றி.

  // கருத்துரை தெரிவிக்காமல் படித்து விட்டு செல்பவர்களே அதிகம். அதற்காக வருத்தப்பட்டுக் கொள்ள முடியுமா? வலைப்பூ என்ற ஒன்றால் தான் இவ்வளவு பேரின் திறமை வெளிவருகிறது.//

  ஆமாம சகோதரி! பல புதிய வலைப்பதிவர்கள் ஆரம்பத்தில் எழுதியதைவிட இப்போது நன்றாகவே பலவகை யுத்திகளுடன் நன்றாகவே எழுதுகிறார்கள்.

  // பத்திரிக்கைகளுக்கு அனுப்பி காத்திருப்பதை விட சகஜமாக நட்புகளிடம் பகிர்ந்து கொள்வதை போன்று வசதி உள்ளது. தவறான பின்னூட்டங்களை comment moderation மூலம் நீக்கிவிட்டால் ஆச்சு. //

  நன்றாகவே சொன்னீர்கள். இப்போதெல்லாம் தவறான பின்னூட்டங்களை அனைவரும் வெறுத்து நீக்கி விடுகின்றனர்.

  ReplyDelete
 48. மறுமொழி > yathavan nambi said...

  புதுவை நண்பருக்கு நன்றி.

  ReplyDelete
 49. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  // சிறப்பான கட்டுரை. //

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

  // பல சமயங்களில் நேரக் குறைவு காரணமாக பின்னூட்டம் இடாமலும் செல்ல நேர்கிறது. அந்த நேரத்தில் நாம் வந்தோம், பதிவினைப் படித்தோம் என்பதைத் தெரிவிக்க ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் எழுதிச் செல்ல வேண்டியிருக்கிறது. //

  ஓரிரு சொற்களில் பின்னூட்டம் தருவதில் தப்பில்லை. நானும் இதனை விமர்சித்து எழுதவில்லை. பொதுவான ஒரு கருத்தையே சொன்னேன்.

  // சில நாட்கள் தொடர்ந்து வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. இப்போது கூட நான்கு நாட்களுக்கு மேலாகி விட்டது பதிவுகளைப் படிக்க - பாருங்களேன் உங்களது இப்பதிவினைக் கூட ஆறு நாட்கள் கழித்து படிக்க வேண்டியிருக்கிறதே! :) எது எப்படியோ, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்போம். //

  எல்லோருக்கும் உண்டான பொதுவான சூழ்நிலைதான் அய்யா. ’’எது எப்படியோ, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்போம்.” – என்ற தங்களது சிந்தனையை நானும் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன்.

  ReplyDelete
 50. என் அனுபவத்தில் வலையுலகில் எவரெல்லாம் வரிக்கு வரி படிப்பவர்கள், ஆழ்ந்த படித்தாலும் விமர்சனம் கொடுக்காமல் செல்பவர்கள், படிக்காமல் வருகை பதிவுக்காக வருபவர்கள், பெண்கள் எழுதும் பதிவுக்கு மட்டும் தவறாமல் ஆஜர் ஆகும் நபர்கள் என்று பலரையும் கவனித்துள்ளேன். வேர்ட்ப்ரஸ் குறித்து நீங்க சொன்னது முற்றிலும் உண்மை,

  ReplyDelete
 51. இந்தப்பதிவினை இன்று மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி.

  ReplyDelete