Thursday 28 September 2017

ஆயுத பூஜை - நினைவுகள்



நான் பணிஓய்வு பெற்று விட்டேன். மனைவி மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். இன்று ( 28.09.17 ) மாலை ஆயுதபூஜையை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் கொடுத்த பொரி, பொட்டுக்கடலை பையையும் இன்னும் சிலவற்றையும் கொண்டு வந்தார். எனக்கு எனது பணிக்காலத்தில் நான் பணியாற்றிய வங்கிக் கிளைகளில் நடைபெற்ற பூஜைநாட்கள் நினைவுக்கு வந்தன.

எல்லாம் முதல்நாளேதான்.

நாளைக்கு ஆயுதபூஜை என்றால், முதல்நாளே, அதாவது இன்றைக்கே பெரும்பாலும் எல்லா அலுவலகங்களிலும் எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு அலுவலகத்தில் பூஜை செய்து விடுகிறார்கள். நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு சீனியரிடம் “ சார் .. நாளைக்குத் தானே ஆயுதபூஜை. நாம் இன்றைக்கே அந்த பூஜையை செய்வது சரிதானா?” – என்று கேட்டேன். அதற்கு அவர் “ நீ சொல்வது சரிதான் … ஆனால் நாளைக்கும் நாளை மறுநாளும் இரண்டு நாள் ஆபிஸ் லீவு .. பூஜைக்காக யாரும் மெனக்கெட்டு வரமாட்டார்கள். அதனால் எல்லா ஆபிசிலும் இன்று இப்படித்தான்” என்றார். இதற்கு சாத்திரத்தில் ஏதேனும் விதிவிலக்கு இருக்கிறதா என்று நான் கேட்கவில்லை. வந்தோமா வேலையைப் பார்த்தோமா என்று ஓடிக் கொண்டு இருந்த நேரம் அது. நானும் எல்லோருடனும் சேர்ந்து சாமியைக் கும்பிட்டு விட்டு, கொடுத்த கொண்டைக்கடலை, பொரி, பழம் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ட்ரெயினுக்கு நேரம் ஆயிற்று என்று அன்றைக்கு கிளம்பி விட்டேன்.

இதுவே நடைமுறை

ஆயுதபூஜை மட்டுமல்ல, அரசு அலுவலர்கள், அவரவர் அலுவலகங்களில் கொண்டாடும் பொங்கல், தீபாவளி போன்ற எல்லா பண்டிகைகளிலும் இதே நடைமுறைதான். எப்படியோ மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சரி. இதுவாவது பரவாயில்லை, முதலமைச்சர், அமைச்சர்கள், கலெக்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் சில தினங்களில், தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத எதிர்ப்பு என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த தினம் விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு முதல்நாளே உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும். நல்லவேளையாக இந்திய சுதந்திரதினத்தை அன்றைய தினத்தில் மட்டுமே கொடியேற்றி கொண்டாடுகிறார்கள். 

நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை

நவராத்திரிவிழா என்றாலே எங்கள் வங்கியில் அது பெண்கள் கொண்டாடும் விழாவாக மாறி விடும். அதிலும் நான் வேலை பார்த்த இரண்டு கிளைகள், பெண் ஊழியர்கள் அதிகம். எல்லோரும் அந்த ஒருவாரம் பட்டு உடுத்திதான் வருவார்கள். இன்னும் சிலர் தங்கள் வீட்டு குழந்தைகளையும் அழைத்து வருவார்கள். முதல்நாளே கொலு வைத்து விடுவார்கள். வேலை நேரம் முடிந்ததும் கொலு வைத்துள்ள இடத்தில் பூஜை செய்து எல்லோருக்கும் அன்றைக்கு என்று விஷேசமாக செய்யப்பட்ட கொண்டைக்கடலை அல்லது பொங்கல் என்று பிரசாதத்தை வழங்குவார்கள். இந்த பிரசாதத்தை செய்யும் பொறுப்பை வெளியில், ஊழியர்களில் யாருக்கேனும் தெரிந்த ஒரு சமையல் மாஸ்டரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

ஆயுதபூஜைக்கு விடுமுறை என்பதால். முதல்நாளே நவராத்திரி நிறைவு விழா, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்று ஒரேநாளில் முடிந்துவிடும். அன்று எல்லோருக்கும் பொரி பொட்டுக்கடலை பொட்டலங்கள் மற்றும் தொன்னையில் வைக்கப்பட்ட மசாலாவுடன் கூடிய கொண்டைக்கடலையும் வழங்கப்படும். எல்லாம் முடிந்தவுடன் அந்த கொலு பொம்மைகள் ஒரு கறுப்பு டிரங்கு பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு மூலைக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு விடும். இனிமேல் அது அடுத்த ஆண்டுதான் திறக்கப்படும்.

மதச்சார்பற்ற

எனக்குத் தெரிந்து ரொம்பகாலமாக இந்த ஆயுதபூஜை என்பது மதச்சார்பற்ற ஒன்றாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சியில் பெரும்பாலும் மோட்டார் மெக்கானிக்குகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் டிரைவர்கள், ரெயில்வே ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள்  என்று எல்லா உழைக்கும் வர்க்கத்தினரும் இதில் மதவேறுபாடு இல்லாது ஒன்றாகவே கொண்டாடுகிறார்கள். வருடா வருடம் ஒவ்வொரு கார் ஸ்டாண்டிலும் இன்னிசை கச்சேரி நடக்கும். சென்ற ஆண்டு இதேநேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையை முன்னிட்டு இந்த கச்சேரி கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டார்கள். இந்த ஆண்டு முதல் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.


40 comments:

  1. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாள் இல்லையா! அதனால் தான் மதச்சார்பற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோவை பக்கம் புது கணக்கு ஆரம்பிப்பார்கள் கடைகளில்.
    சேர்ந்து செய்யும் போது அயல் நாட்டில் பண்டிகைகள் விடுமுறை நாட்களில் கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மாட்டுப் பொங்கல் என்று மாடுகளின் உழைப்பை நன்றியறிதலோடு பார்த்தது போல, வாழ்வில் ஒன்றிணைந்து விட்ட கருவிகளை நினைக்கும் நாளாக ஆயுதபூஜை இருக்கிறது.

      Delete
  2. மதச்சார்பற்ற விழா போல தோன்றினாலும் ,ஹிந்துக்கள் மட்டுமே வணங்கக் கூடிய படங்களில் முன்னால்தானே படையலிட்டுக் கொண்டாடுகிறார்கள் ,வேற்று மதத்தினர் இதில் ஈடுபாடு பலருக்கும் இருக்க வாய்ப்பில்லை !வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வணங்கும் கடவுளின் படங்களை வைத்து கொண்டாடுகிறார்கள் என்றால் இதை மதச் சார்பற்ற விழா என்று சொல்லலாம் ,நான் பார்த்த வரையில் அப்படி எங்கும் நடக்கவில்லை :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // மதச்சார்பற்ற விழா போல தோன்றினாலும் ,ஹிந்துக்கள் மட்டுமே வணங்கக் கூடிய படங்களில் முன்னால்தானே படையலிட்டுக் கொண்டாடுகிறார்கள் ,வேற்று மதத்தினர் இதில் ஈடுபாடு பலருக்கும் இருக்க வாய்ப்பில்லை //

      நான் ஏற்கனவே மேலே மேடம் அவர்களுக்கு சொன்ன மறுமொழி போல, வாழ்வில் ஒன்றிணைந்து விட்ட கருவிகளை நினைக்கும் நாளாகவே ஆயுதபூஜை இருந்து வருகிறது.

      // வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வணங்கும் கடவுளின் படங்களை வைத்து கொண்டாடுகிறார்கள் என்றால் இதை மதச் சார்பற்ற விழா என்று சொல்லலாம் ,நான் பார்த்த வரையில் அப்படி எங்கும் நடக்கவில்லை :) //

      நான் வேலைக்கு சேருவதற்கு முன்பு, மாணவனாக இருந்த சமயத்தில், கடைத்தெருவில் ( அப்போது திருச்சி டவுனில் குடியிருந்தோம் ) இருந்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் வேலை பார்த்த அல்லது சொந்தமாக வைத்து இருந்த மெக்கானிக் ஷாப் அல்லது ஆட்டோ ஒர்க் ஷாப் எனப்படும் பட்டறைகளில் அவர்களும் ஆயுதபூஜை கொண்டாடுவதை பார்த்து இருக்கிறேன். இந்துக்களின் பட்டறைகளில் இந்துசாமி படங்கள், தீபம், ஆராதனை என்று இருக்கும்; ஆனால் இவர்களது பட்டறைகளில் இவர்கள் சமயம் சார்ந்த படங்கள் மட்டுமே. முஸ்லிம் நண்பர்கள் இதற்கென்று விஷேட தொழுகை நடத்துவதில்லை; ஆனால் கிறிஸ்தவர்கள் குறிப்பாக ஆர்.சிக்காரர்கள் தாங்கள் வைத்து இருக்கும் சாமிப்படங்களுக்கு செவ்வந்திமாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருப்பார்கள். பொதுவாக எல்லோருமே ஆயுதபூஜை அன்று பொரி பொட்டுக்கடலை நாட்டுச்சர்க்கரை கலந்து வைத்த பாக்கெட்டுகளை எல்லோருக்கும் தருவார்கள்.

      திருச்சியில், பொன்மலை ரெயில்வே ஒர்க்‌ஷாப், பெல் நிறுவனம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அனைத்திலுமே பாகுபாடின்றி ஆயுதபூஜையை கொண்டாடுவதாகவே தெரிகிறது. பெரும்பாலும் இந்துசாமி படங்களோடு தங்கள் சமயம் சார்ந்த படங்களை வைக்க அவர்களே விரும்புவதில்லை.

      ஆனாலும் ஒரு விஷயத்தை மறுப்பதற்கு இல்லை. டிசம்பர்.6 - பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர், தமிழ்நாட்டிலும் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. மதவாதிகள் எதிர்பார்ப்பது இதனைத்தான். ( மதசார்பற்ற … ,,, என்று எழுதத் தொடங்கின் நிறையவே பக்கங்கள் தேவைப்படும் )

      Delete
    2. இதில் தயங்கி எழுத வேண்டியதே இல்லை. ஒரு இந்து மதத்தில் பிறந்தவர் இயல்பாக முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ படங்களை, மற்றும் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டு. ஆனால் 80 சதவிகித முஸ்லீம் கிறிஸ்துவ மக்கள் இது போன்ற செயல்களை செய்யவும் மாட்டார்கள். ஆதரிக்கவும் மாட்டார்கள். என் திருப்பூர் 25 வருட அனுபவத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரே ஒரு முஸ்லீம் பையன் அலுவலகத்தில் நடக்கும் விழாக்களில் உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு எல்லாவற்றையும்வாங்கி சாப்பிட்டேன். ஆச்சரியப்பட்டேன். மாற்று மதம் என்று ஏன் குறிப்பிடுகின்றீர்கள். எந்த மதமோ அதனைப் பற்றி எழுதுங்கள். இது அந்த மதத்தில் உள்ள அத்தனை பேர்களின் தவறல்ல. எவர் மதக்கண்ணில் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு சென்று சேர வேண்டிய விசயம் அல்லவா?

      Delete
    3. மரியாதைக்குரைய எழுத்தாளர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி. தங்கள் எழுத்துக்களை எப்போதும் ஃபேஸ்புக் பக்கமே வாசித்த ஆதங்கத்தில், கொஞ்சம் வலைப்பக்கமும் எட்டிப் பாருங்கள் என்று அழைத்தேன். மற்றபடி ஏதும் இல்லை.

      // இதில் தயங்கி எழுத வேண்டியதே இல்லை. ஒரு இந்து மதத்தில் பிறந்தவர் இயல்பாக முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ படங்களை, மற்றும் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டு. ஆனால் 80 சதவிகித முஸ்லீம் கிறிஸ்துவ மக்கள் இது போன்ற செயல்களை செய்யவும் மாட்டார்கள். ஆதரிக்கவும் மாட்டார்கள் .//

      உங்கள் கருத்தினுக்கு உடன்படுகிறேன். அதே சமயம், நான் பார்த்த வகையில், இங்கு திருச்சி – தஞ்சை பகுதிகளில் அதுபோல் இல்லை. ஆனால், திருப்பூர் பக்கம் வேலைக்கு சென்று கிறிஸ்தவ ( அல்லேலுயா ) மதத்தில் சேர்ந்த எனது உறவினர்கள் சிலர், உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் கூட, சாப்பிடுவதில்லை. நாங்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

      // என் திருப்பூர் 25 வருட அனுபவத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரே ஒரு முஸ்லீம் பையன் அலுவலகத்தில் நடக்கும் விழாக்களில் உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு எல்லாவற்றையும்வாங்கி சாப்பிட்டேன். ஆச்சரியப்பட்டேன். //

      சாப்பிட்டேன் > சாப்பிட்டான் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

      // மாற்று மதம் என்று ஏன் குறிப்பிடுகின்றீர்கள். எந்த மதமோ அதனைப் பற்றி எழுதுங்கள். இது அந்த மதத்தில் உள்ள அத்தனை பேர்களின் தவறல்ல. எவர் மதக்கண்ணில் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு சென்று சேர வேண்டிய விசயம் அல்லவா? //

      இந்த தங்களது வலியுறுத்தலை மனதில் இருத்திக் கொண்டேன்.

      Delete
  3. இது ஒரு மத விழா என்றாலும் எல்லா மதத்தினரும் ஒன்று சேர்ந்து சிறப்பாக கொண்டாடும் விழாவாகவே நான் இந்தியாவில் இருந்தவரை நடந்து வ்ந்தது ஆனால் இப்போ எப்படி என்று தெரியவில்லை. எங்கள் அலுவலகத்தில் நாங்கள் கொண்டாடும் போது விழாவிற்கு தேவையானவைகளை வாங்கி வந்து அலுவலகத்தை அலங்கரித்து கொண்டாடுவோம் ..மலரும் நினைவுகளாக இந்த விழா இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மதுரைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // இது ஒரு மத விழா என்றாலும் …. … … //

      இது இப்போது இந்துமத திருவிழா போல் தோன்றினாலும், ஒரு காலத்தில் பண்டைக்கால இந்தியாவில் அந்தந்த இனக்குழுவினர் தங்கள் படைக் கருவிகளுக்கு செய்த பூஜையின் மறுவடிவமே எனலாம்.

      தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் ‘வாள் மங்கலம்’ என்பது அரசனின் வாளினை வாழ்த்துதலை சொல்லும். இந்த வாள் மங்கலம் பற்றிய ஒரு கட்டுரையை ஆயுதபூஜையோடு இணைத்து ஒரு பதிவை வெளியிடுவதாக இருந்தேன். இந்த வார ஆனந்த விகடனில் இதே பொருளில் `பயன்படு கருவிகளுக்குப் படையல்’ - பாரம்பர்யம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு! – என்று ஒரு கட்டுரை வெளியான படியினால்; நான் எனது பதிவை வெளியிடவில்லை.

      இப்போதும் தமிழ்நாட்டில் அவரவர் நண்பர்கள் மத்தியில் மதமாச்சரியம் இன்றி ஆயுதபூஜை கொண்டாடுவதைக் காண முடிகிறது.

      Delete
  4. எங்கள் அலுவலகத்திலும் அஃதே அஃதே!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் - ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. இவ்விழா மதச்சார்பற்றது என்று கூறுவது என்னால் ஏற்க முடியவில்லை. இறை நம்பிக்கை உள்ளவனாக இருந்தால்கூட அலுவலகங்களில் இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்பட்டு மனித நேரங்கள் வீணாவதை நான் எப்போதும் விரும்புவதில்லை. அலுவலக நேரத்தில் கோலம் போட்டுக்கொண்டும், பொருள்களை ஒதுங்க வைத்துக்கொண்டும், ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டும், அலுவலகரீதியாக வருபவர்களை மறுநாள் (மறுநாள் என்றால் விடுமுறைகள் முடிந்த பின்னர்)வரும்படி மிகவும் சாதாரணமாகக் கூறிக்கொண்டும் இருப்பதைக் கண்டுள்ளேன். இதுபோன்ற சமயங்களில் நண்பர்கள் என்னிடம் கோயில்களுக்குச் செல்கின்றீர்கள், இறை நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் ஆனால் பூசையில் கலந்துகொள்ளவோ, பூசைக்காகப் பணம் கொடுப்பதோ கிடையாது என்று கூறுவார்கள். இறை நம்பிக்கை என்ற பேரிலோ, மதச்சார்பற்ற நிலை என்ற பேரிலோ மனித உழைப்பின் நேரம் விரயமாக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. இது மாற்றுக் கருத்துதானே தவிர, எதிர்க்கருத்து அல்ல ஐயா.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. மேல்மட்டத்தில் அதாவது உயர் அதிகாரிகள் மத்தியில் இது மதம் சார்ந்த விழாவாக இருக்கலாம். ஆனால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பாட்டாளிகள் மத்தியில் இது மதசார்பற்ற ஒன்றாகவே காண முடிகிறது. அதிலும் டாஸ்மாக்கும் பிரியாணி கடைகளும் அதிகமான பிறகு இன்னொரு தீபாவளியாகவே சிலருக்கு நிறைவு பெறுகிறது.

      நான் பணிபுரிந்த இடங்களில், வேலை நேரம் முடிந்த பிறகுதான் இந்த ஆயுதபூஜையை மாலையில் செய்தார்கள். எனவே வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை.

      Delete
    2. முனைவர் ஐயாவின் கருத்தை அபப்டியே ஏற்கிறேன்...மட்டுமல்ல நல்ல விசயம், கருத்து. சகோ வங்கி, மற்றும் பல அலுவலகங்களில் வேலை நேரம் முடிந்த பிறகு என்றாலும் ஒரு சில இடங்களில் ஐயா சொல்லியிருப்பது போல் கோலம் அது இது என்று நேரம் விரயமாகிறது அன்றைய வேலைகள் எல்லாம் தொய்வாகிவிடுவதும் நடக்கிறது.

      என் மகன் கால்நடை மருத்துவன் அவனுக்கும் இதே கருத்துதான்...அவர்கள் க்ளினிக்கிலும் மதம் எல்லாம் கடந்தது என்றாலும் நோயாளிகள் எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதால் அவர்கள் அச்சமயம் பூஜை செய்தாலும், நோயாளிகள் வந்தால் உடனே எல்லோரும் நோயாளியைத்தான் கவனிக்க வேண்டும் என்று அவனது மருத்துவரும் சொல்லிவிடுவார்.

      கீதா

      Delete
    3. மேடம் அவர்களின் கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி. அன்றைய அலுவலகப் பணிகள் முடிந்த பிறகு ஆயுதபூஜையோ அல்லது மற்ற எந்த விழாவோ கொண்டாடினால் ஆட்சேபணை இருக்காது.

      Delete
  6. தாங்கள் சொல்வது சரியாயினும் இதுவும் ஒரு உழைப்பாளர் தினமாக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது கருத்து நண்பரே...
    காரணம் எல்லா மதத்தினரும் இதை நடத்துகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்தினுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல, இதுவும் என்று எடுத்துக் கொண்டாலும், உழைப்பாளர் தினம் என்றால் அந்த கம்பீரமான மேதினம் மட்டுமே.

      Delete
  7. அனைத்து மதத்தினரும் கொண்டாடும் விழாவாகக் கொண்டாடப்படுவதில் மகிழ்ச்சி ஐயா
    ஆனாலும் குறிப்பிட்ட விழா நாள் அன்று கொண்டாடாமல், அலுவல் நாளிலேயே, அலுவல் நேரத்திலேயே கொண்டாடுவது என்பது சரியா
    என்று தெரியவில்லை ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. இப்போது எல்லாவற்றிற்கும் தனித்தனியாக, அரசு ஆணை அல்லது கோர்ட் நடவடிக்கைதான் தேவைப்படும் சூழல் இருக்கிறது.

      Delete
    2. மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்கள் கீழே சொன்ன கருத்துரையையும் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  8. நீங்க சொன்னப்பொறவுதான் புரியுது ஆயுதபூஜை கொண்டாட்டத்துல மதம் கலக்கவில்லை...

    பகிர்வுக்கு நன்றிண்ணே

    ReplyDelete
  9. வங்கியில் ஆயுத பூசைக்கு முதல் நாள் மாலை கொண்டாடுவதன் காரணம் காசாளரிடம் உள்ள Single Lock எனப்படும் பணப்பெட்டி காப்பறையில் (Strong Room) வைத்தபிறகு விடுமுறை நாளில் அதை திறந்து பூஜை செய்யமுடியாது என்பதாலும், வங்கி ஊழியர்கள் ஆயுத பூசையன்று அவரவர்கள் தங்கள் வீட்டில் பூசை கொண்டாடுவார்கள் என்பதாலும்தான்.

    நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருந்தபோது எல்லா மதத்தினரும் சேர்ந்துதான் ஆயூத பூசையைக் கொண்டாடியிருக்கிறோம்.

    கேரளாவில் கோட்டயத்தில் பணிபுரிந்தபோது ஓணம் மற்றும் கிறிஸ்த்மஸ் விழாக்களை அந்த விழா வரும் வாரத்திற்கு வரும் முதல் சனியன்று எல்லா மதத்தினரும் கூடி கொண்டாடுவது வழக்கம். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்கம்.

    அலுவலகத்தில் இது போன்ற விழா கொண்டாடலாமா என்றால் காலங்காலமாக இவைகள் நடத்தப்படுவதால் யாரும் இதை பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. மற்ற மதத்தினரும் விரும்பினால் கேரளாவில் கொண்டாடுவதுபோல் கொண்டாடலாம்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களின் அன்பான, விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. பணிக்கால நாட்களில் ஆயுத பூஜை என்பதுஎன் நினைவலைகளைக் கிளறி விட்டது பின்னூட்டத்தில் எழுத முடியாத நீளமாதலால் தனி பதிவாக்குகிறேன் அவசியம் படியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அய்யா அவர்களுக்கு நன்றி. நீங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் பணி புரிந்தவர்; அப்போதும் மற்றும் விசாகப்பட்டணத்திலும் பணிபுரிந்த தங்கள் அனுபவப் பதிவுகளை வாசித்தது நினைவுக்கு வருகிறது. உங்களுடைய சுவையான ஆயுதபூஜைக் கால நினைவலைகளை படிக்க ஆர்வத்துடன் இருக்கிறேன்.

      Delete
  11. அன்பின் இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. முனைவர் ஜம்புலிங்கம் சார்... இந்தமாதிரி வித்தியாசமான சிந்தனைகளைப் படிக்க interestingஆகவும் learningஆகவும், இருக்கு. I appreciate your views.

    ReplyDelete
  13. ஆயுதபூஜை நினைவுகள் நல்லா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  14. அருமையான நினைவுகள் ஐயா...
    இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பரிவை சே.குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் வலைத்தளம் வரும் போதெல்லாம் tamil.10, tamil indli என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது. மறுபடியும் முயன்று பார்க்கிறேன்.

      Delete
  15. உண்மைதான் இளங்கோ த ம 6

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  16. சென்னையில் சில வங்கிகளில் கொலுவே வைத்திருக்கிறார்கள். அந்தந்த வங்கிகள் இருக்கும் லொகாலிட்டிக்குத் தகுந்த மாதிரி இதுவும் ஒரு'கஸ்டமர் ப்ரண்ட்லி' நிகழ்வாகப் போயிருப்பதையும் பார்க்கிறேன். கொலுவுக்கு பக்கத்தில் குங்குமம், சந்தனம் எல்லாம் இருக்கும். வாடிக்கையாளர்களில் சிலர் பவ்யமாக கொலுக்கு முன்னால் நின்று வணங்கி குங்குமம், சந்தனம் இவற்றை இட்டுக் கொண்டு, பூசிக் கொண்டு போவதையும் பார்த்திருக்கிறேன்.

    தொழிலாளர்களைப் பொறுத்த மட்டில் இந்த விழாவைக் கொண்டாடியே ஆக வேண்டும் என்று உணர்வுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஜீப், வேன் டிரைவர்கள் இலாகா வண்டியைத் தங்கள் வண்டி போலவே நினைப்பார்கள்.
    வண்டியை க்ளீன் பண்ணி, பூ, வாழைமரம் போன்றவற்றால் அலங்கரித்து சந்தன குங்கும் இட்டு, வண்டிக்கு முன்னால் பூசணிக்காய் சுற்றி உடைத்து..
    'என் வண்டிக்கு பூஜை வேண்டும்' அதிகாரிகளிடம் கண்டிப்பு காட்டி பணம் வாங்குவார்கள். அந்த வண்டியை உபயோகப்படுத்தும் அதிகாரிக்கு இல்லாத அக்கறை டிரைவர்களிடம் காணப்படும். 'நீ பாட்டுக்க வண்டிலே வருவே; போவே.. வண்டியை ஓட்டறவன் எனக்குத் தானே தெரியும்?" என்று உரிமையுடன் வண்டி பூஜைக்காக சண்டை போடுவார்கள். பூஜைக்கு பணம் ஒதுக்கி நிர்வாக செலவுகள் பில்லில் காட்டிக்கொள்ள அலுவலக சட்ட திட்டங்களிலும் இடமுண்டு.

    அன்றைக்குத் தான் அலுவலகம் தவறாமல் பெருக்கித் துடைத்து தூசி தட்டி பொட்டிட்டு காணப்படும். அன்று காலையிலிருந்தே இதற்கான வசூல்கள் அதிகாரிகளிடம் தொடங்கி விடும்.

    அலுவலர்களில் கொஞ்சம் ஆஸ்திகமாகத் தெரிபவர்கள் பூஜை செய்து, சூடம் சாம்பிராணி எல்லாம் காட்டுவார்கள். பொறி, கடலை பாக்கெட்டுகள் தவறாது எல்லோருக்கும் உண்டு. இதிலெல்லாம் உரிமை தூள் பறக்கும்.

    பல அலுவலகங்களில் ஒரு வருட சீட்டுப்பிடிப்பு முடிந்து அடுத்த வருட சீட்டுக்கு (Chit) ஆரம்ப நாளும் இதுவே.. ஒரு பக்கம் வருடச் சீட்டில் சேர்ந்தவர்களுக்கு போனஸாகத் தருகிற மாதிரி எவர்சில்வர் பாத்திரங்கள், பித்தளைப் பாத்திரங்கள் என்றெல்லாம் காணக் கிடைக்கும்.

    ஆயுதபூஜை தங்கள் தொழிலுக்கான பூஜை மாதிரி கொண்டாடுவதில் தொழிலாளர்கள் உற்சாகம் காட்டுவதைத் தான் நானும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும், அன்பான நீண்ட கருத்துரைக்கும் நன்றி.

      முன்பெல்லாம் வங்கி ஊழியர்களே ஆயுதபூஜை போன்றவற்றிற்கு தங்கள் கைக்காசைப் போட்டு கொண்டாடி வந்தார்கள். ஆனால் இப்போது பல வங்கிகளில் Cultural Programmes என்று மத வேறுபாடு இன்றி அனைத்து மத விழாக்களுக்கும் நிர்வாகம் சார்பில் செலவு செய்ய அனுமதி தருகிறார்கள்.

      Delete
  17. சகோ, என் மகன் வேலை செய்த க்ளினிக் இங்கு ஒரு முஸ்லிம் டாக்டரால் நடத்தப்படுகிறது என்றாலும் அங்கு பல மதத்தவர்களும் வேலை செய்கிறார்கள். அவரும் இது போன்ற பூஜைகளை நடத்த அனுமதி வழங்கி, அவரும் கலந்துகொள்வார். பிரசாதம் எடுத்துக் கொள்வார்....தீபம் தொட்டு வணங்குவார். தனிப்பட்ட முறையில் அவருக்கும் என் மகனுக்கும் இது போன்ற பூஜைகள் அது எந்த மதமானாலும் அலுவலக நேரத்தில் கொண்டாடி நேரம் விரயம் என்று நினைப்பவர்கள். அது போன்று அப்போது விலங்குகள் சிகிச்சைக்கு வரும் போது அவற்றைப் பார்க்க முடியாமல் என்றெல்லாம் இருப்பதை விரும்புவதில்லை. எனவே பூஜை கொண்டாடுவதை அங்கு வேலை செய்பவர்களின் மனதைப் புண்படச் செய்யக் கூடாது என்று அனுமதித்தாலும், அதே சமயம் அந்த சமயத்தில் இரு சர்ஜரி ஃபிக்ஸ் ஆகியிருந்தால் அதனை நடத்தவே செய்வார்கள். நோயாளிகளுக்கும் அவற்றைக் கொண்டு வரும் ஓனர்களுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். அந்தச் சமயத்தில் எல்லா ஊழியர்களும் அட்டென்ட் செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள்.

    ஆனால் பொதுவாக என் கணவர் வேலை செய்த அலுவலகங்களில் எலலாம் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்...நல்ல நினைவலைகள்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அந்த க்ளினிக்கை நடத்தும் டாக்டர் பாராட்டுக்குரியவர்.

      Delete
  18. மரியாதைக்குரிய, எழுத்தாளர் போன்ற வார்த்தைகள் வேண்டாங்க. உங்கள் வயது அனுபவம் போன்றவற்றை ஒப்பிடும் போதும் நான் சிறிய அளவு கூட இல்லை என்பது தங்களின் மேலான கவனத்திற்கு. மற்றபடி மதம் குறித்த எண்ணங்கள் இல்லை. எல்லா மதங்களிலும் சுயநலம், சந்தர்ப்பவாதிகள்,சுயநலவாதிகள் உண்டு. மற்றபடி எனக்கு இது விசேடங்களில் பெரிதான ஆர்வம் இல்லை. ஆனால் இதன் மூலம் மற்றொரு நல்ல விசயம் இருக்கின்றது. குழந்தைகள், குடும்பம் போன்றவற்றை மதப் பண்டிகைகள் ஒன்று சேர்க்கின்றது என்பதனை அனுபவ பூர்வமாக உணர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  19. நினைவுகள் அருமை. நான் சிறுவயதில் கொண்டக்கடலைக்கு அலைந்தது நினைவு வருகிறது ....

    ReplyDelete