வலைப்பதிவு, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று இவை மூன்றிலும் எனக்கு
தொடர்பு இருந்தாலும் நான் முதலிடம் கொடுப்பது வலைத்தளத்திற்கு மட்டுமே. ஏனெனில் வலைத்தளத்தில்
பதியப்படும் முக்கியமான செய்திகள் அடங்கிய
ஒவ்வொரு பதிவும், ஒரு ஆவணமாகவே கூகிளில் பிற்காலம் அறிய வாய்ப்பு அதிகம். எனினும் கடந்து
மூன்றரை மாத காலமாக, எனது தந்தையின்(92) உடல்நிலையை முன்னிட்டு, அவர் அருகிலேயே இருந்து
கவனித்து வந்த படியினால், அடிக்கடி என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. (அப்பா கடந்த
08.07.17 அன்று இயற்கை எய்தினார்) எனினும்
ஒன்றிரண்டு குறுஞ் செய்திகளை அல்லது கருத்துரைகளை ஃபேஸ்புக்கில் எழுதி வந்தேன். அண்மையில்
நான் ஃபேஸ்புக்கில் காவிரி ஆறு பற்றிய எழுதிய, ஒன்றை வலைப்பக்கம் ஆவணமாக்கும் எண்ணத்தில்
மீண்டும் இங்கு விரிவாக்கம் செய்து வெளியிட்டுள்ளேன்.. (ஏற்கனவே அங்கு படித்தவர்கள்,
மறுபடியுமா என்று சினம் கொள்ளற்க. மன்னிக்கவும்)
தான் பொய்யாத காவிரி
ஆறு என்றால், வான் மழை பெய்தாலும் பெய்யா விட்டாலும், ஊற்று நீராலும்,
அதில் நீர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இவற்றை ’ஜீவநதிகள்’ என்று சொல்வர். இத்தகு
ஜீவநதிகளில் ஒன்றான காவிரியை,
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும் – (பட்டினப்பாலை ( 5 – 7 )
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும் – (பட்டினப்பாலை ( 5 – 7 )
என்று புகழ்ந்து பாடுகிறார் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும்
புலவர். அந்த காவிரி, இன்றைக்கும் கர்நாடக எல்லை வரை வற்றாத ஜீவநதியாகவே இருக்கிறது.
தான் பொய்க்கவில்லை. ஆனால் இந்திய மண்ணின் அரசியல் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் பொய்த்துப்
போய் விட்டது.
கல்லணை வேதனை:
கடந்த ஜூன் மாதம் 25.06.17 ஞாயிறு அன்று, ஒரு அவசர வேலையாக, தஞ்சை
மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள எனது அம்மா ஊருக்கு நான் மட்டும் சென்று வந்தேன்.
முன்பெல்லாம் அந்த ஊருக்கு போய் வருவது என்றால் திருச்சியிலிருந்து கல்லணை, கோயிலடி
வழியாகத்தான் செல்வது வழக்கம்.. அப்போது போகும்போதும், வரும்போதும் வழிந்தோடும் காவிரி
கண்கொள்ளா காட்சி. ஆனால் இப்போதெல்லாம் அந்த வழியாக இல்லாமல் திருச்சி, திருவெறும்பூர்,
செங்கிப்பட்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி என்று அடிக்கடி பயணம் இந்த தடவை திரும்பி
வரும்போது, கல்லணை வழியாக வந்தேன். இப்போது நான் கண்ட. கல்லணையும் காவிரியும் வறட்சியின்
பிடியில்; கண்கலங்க அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சில.
அம்மாமண்டபம் சோகம்:
அப்பா இறந்த பிறகு அப்பாவுக்கான காரியங்கள் முன்னிட்டு சென்ற வாரம்,
ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் செல்ல வேண்டி இருந்தது. அப்போதும் அங்கும் காவிரியின் துயரத்தைக்
காண முடிந்தது. அப்போது அங்கு எடுத்த படங்கள் இவை.
நதியின் பிழையன்று:
கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தான் எப்போதோ கேட்ட வரம் ஒன்றை, மன்னன்
தசரதனிடம் நினைவூட்டி, இராமன் மகுடம் சூட்டுவதை தடுத்து, இராமனிடமும் சொல்லுகிறாள்
அவனது சிற்றன்னை கைகேயி. இராமனும் ”எந்தையே
ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,உய்ந்தனன் அடியேன்” என்று கானகம் செல்லத் தயாராகிறான்.
செய்தி கேட்ட இலக்குவன் போர்க்கோலம் பூணுகிறான். இதனை அறிந்த இராமன், இலக்குவன் இருக்குமிடம்
சென்று அவன் கோபத்தை தணிக்கிறான். அப்போது இராமன் சொல்லுவதாக ஒரு பாடல்.
'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
( கம்பராமாயணம் – அயோத்தியா
காண்டம் – நகர் நீங்கு படலம்.129)
இந்த பாடலில் ஒரு நதியில், தண்ணீரே இல்லாமல் போவதற்கு காரணம் விதியின்
பிழை என்று விதி மேல் பழி சொல்லப்படுகிறது. ஆனால் நமது காவிரி கர்நாடகத்தில் கரைபுரண்டு
ஓடி, தமிழ்நாட்டிற்கு மட்டும் வராமல், வறண்டு போனதற்கு காரணம் இந்த அரசியல்வாதிகள்
அன்றி வேறு யாரைச் சொல்ல முடியும். எனினும்,
உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி (சிலப்பதிகாரம்)
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி (சிலப்பதிகாரம்)
என்றே வாழ்த்துவோம். நம்பிக்கையோடு
இருப்போம்.
உண்மைதான் ஐயா
ReplyDeleteநதியின் பிழையன்று மனிதன் பிழை
யார்மேல் குறை சொல்லி என்ன? மழை நீரை பாதுகாக்காதவர் குற்றமா? மணலைத் திருடுவோர் குற்றமா? விதியின் குற்றமா? இயற்கையின் பிழையா?
ReplyDeleteதுயரமான காட்சிகள்தான். இதுவும் (சீக்கிரம்) கடந்து போகட்டும்.
உங்கள் தந்தையின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteதலைப்பே சுடுகிறது.
ReplyDeleteவெளியில் வெயிலும் சுட்டுத் தள்ளுகிறது. நண்பருக்கு நன்றி.
Deleteவறண்டு கிடக்கும் காவிரி ஆறு - மனதில் வலி....
ReplyDeleteநதியின் பிழை அன்று - உண்மை. பொய்த்துப் போன மழை, இன்னமும் நடக்கும் மணல் கொள்ளை, நதி நீர் அரசியல் என எல்லாம் சேர்ந்து காவிரி ஆறு இப்படியாக காட்சி தருகிறது. காவிரி ஆறு இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால், அந்த நிலத்தையும் துண்டாக்கி விற்கும் காலம் வந்து விடும் என்று தோன்றுகிறது.
நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஏற்கனவே ஆற்றின் நடுவில் இருக்கும் படுகைகளையும், ஆற்றோரக் கரைகளையும் நிறையபேர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். நீங்கள் சொல்வது போல், விட்டால் காவிரியையும் பிளாட் போட்டு விற்று விடுவார்கள்.
Deleteகொடுமை. இந்த நிலையைப் பார்க் நேரும் நம் கண்கள் விதி வழியே தான் பாவம் செய்தவை.
ReplyDeleteமேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபாலையைக் கண்டது போல்
ReplyDeleteபரிதவுக்குது மனசு
பெருகி ஓடியதைக் கண்டு
இரசித்தவர்களுக்கே இந்த அவலம்
முழுமையாய்ப் புரியும்
கவிஞரின் ஆழமான கருத்தினுக்கு நன்றி.
Deleteulla nilamaiyai azagaga solli vitteergal....
ReplyDeleteமேடம் அவர்களுக்கு நன்றி.
Deleteஎன்ன சட்டம் போட்டு என்ன பயன் ?நாடுகள் கூட நதி நீரை சுமுகமாக பிரித்து கொள்ள முடிகிறது .மத்திய அரசு நமக்கு துரோகம் செய்கிறது !
ReplyDeleteதோழரின் கருத்துரைக்கு நன்றி. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைமைதான்.
Deleteவேதனையையும் வலியையும் வார்த்தைகலில் வந்திருக்கின்றன. உணர முடிகிறது.
ReplyDeleteகர்நாடகாவில் சுழித்துக் கொண்டு ஓடவில்லை காவிரி, சுணங்கிக் கொண்டு தான் ஓடுகிறது. இன்னும் எத்தனை நாளோ?
தமிழ் நாட்டை ஒட்டி வரும் பெருங்கடல் நதிகளுக்கும் நீர்தரச் செய்யலாம். அரசியலற்ற பொது நல நோக்கிருந்தால். கோடானு கோடிகள் ஊழலில் காணாமல் போகும் பொழுது காவிரி எங்கே? கண்ணீர் தான்.
’மூன்றாம் சுழி’ ஆசிரியர் அப்பாதுரை அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. சுழித்துக் கொண்டு ஓடினாலும், சுணங்கிக் கொண்டு ஓடினாலும் பகிர்ந்து கொள்ள மனம் வேண்டும் அய்யா.
Deleteஎதற்கு பகிர வேண்டும்? தனக்கு மிஞ்சி தானே தானமும் தர்மமும்? நாம் தமிழர் என்பதால் நமக்கு உரிமை வந்துவிடாது என்றே நினைக்கிறேன்.
Deleteசட்டங்கள் இல்லாத காலத்து பட்டினப்பாலை இன்றைக்கு ஒத்து வருமா? நதிகள் தேசியமென்ற சட்டம் இல்லையெனில் தர்மம் நியாயம் பற்றிப் பேசிப் பலனேயில்லை. அங்கே உருவாகும் காவிரி அவர்களுக்குத் தான் சொந்தம். நான் பார்த்த வரையில் அவர்களுக்கே போதாது போலிருக்கிறது.
ReplyDeleteநம் கையில் வெண்ணை இருக்கிறது. எனினும் அடுத்த வீட்டு நெய்க்கு அலையாய் அலைகிறோம்.
தங்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. ’நம் கையில் வெண்ணை இருக்கிறது’ என்று எதனைச் சொல்லுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை அய்யா.
Deleteகடல் நீர்.
Deleteஇந்திய மாநிலங்களில் அதிக கடல் பரப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று நம் தமிழகம். கடல்நீரில் மாநிலப் பிரிவுகள் கிடையாது என்பதும் வசதி. இருபது வருடங்கள் ஆகலாம் பணி முடிவுற, ஆனால் கடல் நீரை வைத்து நம் தண்ணீர் தட்டுபாடை நீக்க முடியம். அல்லது மிகப்பெரிய அளவிலே தணிக்கவும் முடியும். எதற்காக கை எந்த வேண்டும்?
காவிரி இனி கானல் நீர் என்பதை நாம் எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவு விரைவில் வேறு முயற்சிகளில் இறங்க முடியும். (தர்மகோல் முயற்சிகள் தவிர :-)
Deleteஅய்யா அப்பாதுரை அவர்களின் அன்பான மறு வருகைக்கு நன்றி.
Deleteதங்களின் தந்தையார் இயற்கை எய்தியதை அறிந்து வருந்துகின்றேன்..
ReplyDeleteகாலம் தங்களுக்கு ஆறுதலை அளிப்பதாக...
அருமையான ,அறியத் தக்க செய்தி த ம 4
ReplyDeleteபுலவர் அய்யாவிற்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
நதியை சொல்லி குற்றமில்லை மனிதன்தான்பிழை நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன் -
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநதியின் நிலைமை வருத்தம்தான். நாம் எல்லாரும் இதற்குக் காரணம் அல்லவா?
ReplyDeleteபக்தர்கள் என்ற பெயரில், இந்த ரவுடிகள் செய்யும் பிழைகள் மனதை உறுத்துகிறது.
ஆற்றிலே பழைய துணிகளை விட்டெறிந்து ஆற்றை அழிக்கவேண்டும் என்று யார் இவர்களுக்குச் சொன்னது? திருப்பதி புஷ்கரணியில், சபரிமலை தரிசனம் முடிந்து திரும்புபவர்கள், தங்கள் மாலைகளைக் கழற்றி புஷ்கரணியில் எறிந்துவிடுகின்றனர்.
காவிரியைப் பார்க்கும்போது ஒருபுறம் மகிழ்ச்சி. மணல் இன்னும் இருக்கிறதே. தாமிரவருணியில் மணலை அள்ளி ஆற்றையே அழித்துவிட்டனர்.
இது இயற்கையின் பிழை அல்ல. இன்னும் கொஞ்ச வருடங்களில் கர்னாடகாவிலிருந்து, அதிகமான தண்ணீர் மட்டும்தான், மழைக் காலங்களில் தமிழ்னாட்டுக்கு வந்துசேரும். அப்போது இன்னும் நிலைமை மோசமாகும்.
தங்கள் தந்தையார் மறைந்த செய்தி அறிந்தேன்.
நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete// ஆற்றிலே பழைய துணிகளை விட்டெறிந்து ஆற்றை அழிக்கவேண்டும் என்று யார் இவர்களுக்குச் சொன்னது? //
இங்கு உடனுக்குடன் கார்ப்பரேஷன் நிர்வாகம் அந்த பழைய துணிகளை அப்புறப்படுத்தி விடுகிறது. நீங்கள் சொல்வது போல இனி மழைக் காலத்தில் மட்டும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கும்.
வறண்ட ஆற்றை காண்பது வேதனையான விசயமே....
ReplyDeleteதமிழ் மணம் உங்கள் வாக்கு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்று சொல்கிறது ஒன்றும் புரியவில்லை மீண்டும் வருகிறேன்.
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. தமிழ்மணம் வாக்கு பற்றி யானறியேன் பராபரமே.
DeleteT.M. 6
Deleteநன்றி ஜீ
Deleteஅப்பாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்ண்ணா.
ReplyDeleteஅப்பாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்ண்ணா.
ReplyDeleteகாவிரியின் நிலை வருந்ததக்கது.. என்ன செய்தால் இந்நிலை மாறும்?!
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்தினுக்கு நன்றி. உங்கள் ஆதங்கம்தான் எல்லோருக்கும்.
Deleteஇளமையில் படித்து மனத்தில் தேங்கித் தங்கிய பழம் பாடல்களை நீங்கள் நினைவு படுத்தி மறுபடியும் அசை போட்டுப் பார்த்த பொழுது பெரும் மகிழ்ச்சி மனசில் குடி கொண்டது. நன்றி, நண்பரே!
ReplyDeleteமரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteதம 7 வது வாக்கு!
ReplyDeleteநன்றி அய்யா
Deleteதந்தையின் மறைவுக்கு அஞ்சலிகள்.
ReplyDeleteகடைசிகாலத்தில் உங்கள் பணிவிடை மிகவும் போற்றுதலுக்கு உரியது.
விதியின் பிழையோ, மனிதர்களின் பிழையோ இனி வரும் மழை நீரை சேமிப்போம்.
தண்ணீர் சிக்கனம், மழை வர என்ன செய்ய வேண்டும் என்பதை போர்க்கால அடிப்படையில் செய்தால் நலம்.
நடந்தாய் வாழி காவேரி.
மேடம் அவர்களுக்கு நன்றி. ‘மழைநீரை சேமிப்போம்; தண்ணீர் சிக்கனம்’ என்ற உங்கள் கருத்து முக்கியமானது.
Deleteஇன்னும் வரப்போகிற பல "விதிகள்" நாட்டை நாசமாகப் போகிறது...
ReplyDeleteநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. எத்தனை விதிகள் கொண்டு வந்தாலும், அவரவர் விதி அவனையன்றி யாருக்குத் தெரியும்.
Deleteநதிநீர் மட்டுமல்ல வான் நீரும் ( மழையும் ) பொய்த்து விடுகிறதே அப்பாதுரை கூறுவதில் எங்கோ உண்மை தெரிகிறது இருப்பதை விட்டுக் கிடைக்காதவற்றுக்கு ஏங்குவது சரியா
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அப்பாதுரை சொல்வதிலும் நீங்கள் சொல்வதிலும் உள்ள ( காவிரி உற்பத்தி ஆகும் கர்நாடகத்திற்கே சொந்தம் என்ற ) நியாயம் புரிகின்றது.. அதேசமயம் பல ஆண்டுகளாக, காவிரியில் தமிழ்நாட்டிற்கு இருந்து வரும் உரிமையை சிதைக்கும் வண்ணம் செயல்படுவது எப்படி சரியாகும். அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெய்வேலி அனல் மின்சாரத்தையும், கூடன்குளம் அணு மின்சாரத்தையும் மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பது சரியா? நீங்கள் தண்ணீர் தந்தால், நாங்கள் மின்சாரம் தருவோம் என்று பண்டமாற்று முறை இருந்தால் ஒருவேளை சரியாகுமோ என்னவோ?
Deleteகாவேரியைகண்டபோது கண்ணீர்தான் வருகிறது.
ReplyDeleteஉங்கள் தந்தையாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அரியலூரில் படித்துக்கொண்டு இருந்தபோது கல்லணைக்கு சுற்றலா சென்றபோது கரைபுரண்டு ஓடிய காவிரியை பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது தங்களது பதிவின் மூலம் வறண்டு கிடக்கும் காவிரியைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறேன். யாரைக் குற்றம் சொல்ல? நமது துரதிர்ஷ்டம் நமக்கு வாய்த்த அரசியல்வாதிகள்!
ReplyDeleteதியாகம் என்ற திரைப்படத்தில் வரும் “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ என்று தொடங்கும் பாடலில் ‘நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை,விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா’ என்று கவிஞர் வாலி அவர்கள் அப்படி எழுதியிருப்பார். ஸ்ரீரங்கத்தில் பிறந்தால் தானோ என்னவோ வறண்ட காவிரியைப் பார்த்து அவ்வாறு எழுதியிருக்கிறார் என எண்ணியிருந்தேன் அதற்கு மூலம் கம்பா இராமாயணம் என்பதை இன்று அறிந்தேன்.
மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். எனக்கும் உங்கள் கருத்துரை மூலம், வாலியின் பாடல் வரிகளின் (அடிக்கடி கேட்ட பாடலே என்றாலும்) மூலம் இந்த கம்பனின் பாடல் என்பதனை தெரிந்து கொண்டேன்.
ReplyDelete