Monday, 24 October 2016

ஹார்லிக்ஸ் நினைவுகள்



இது ஒரு விளம்பரக் கட்டுரை கிடையாது என்பதனை முன்னதாகவே சொல்லி விடுகிறேன். எனது சிறுவயது மலரும் நினைவுகளில் ஹார்லிக்ஸும் (HORLICKS) ஒன்று. இன்று எத்தனை பேர், சிறு வயதிலிருந்து இன்னும் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் இப்போதும் எனக்கு விருப்பப்பட்ட போதெல்லாம் பாலில் சேர்த்தோ அல்லது சுடு தண்ணீரில் கலந்தோ அல்லது அப்படியே வெறுமனே ஆகவோ ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறேன்.

டாக்டர்களின் சிபாரிசு:

ஒருசமயம் ஹார்லிக்ஸ் என்பது டாக்டர் சீட்டு இருந்தால்தான் மருந்துக் கடைகளில் வாங்க முடியும் என்ற நிலைமை இருந்தது. அன்றைய டாகடர்களும் ஹார்லிக்ஸை சிபாரிசு செய்தார்கள். அப்போது இருந்த டிமாண்டைப் பார்த்த, பர்மாபஜார் வியாபாரிகள் கப்பலில் கொண்டு வரப்பட்ட பெரிய, சிறிய ஹார்லிக்ஸ் பாட்டில்களை தங்கள் கடைகளில் விற்றனர். இந்த பர்மா பஜார் பாட்டில்களில் சிலவற்றில் மேல்நாட்டு வாட்சுகள் இருந்ததாகக் கூட கதைகள் உண்டு. அந்த காலத்து, எங்களது உறவினர் ஒருவர் கண்டியிலிருந்து வந்த போது, அலாரம் டைம்பீஸ், சிலோன் டீ ஆகியவற்றுடன் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலையும் கொண்டு வந்ததாக நினைவு. அப்புறம் மிலிட்டரி கேண்டீன்களில் விற்றார்கள். தாராளமாக கிடைக்கத் தொடங்கியவுடன் இப்போது மெடிக்கல் ஷாப்புகளில் மட்டுமன்றி மளிகைக்கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஹார்லிக்ஸ் கிடைக்கிறது.

சின்ன வயதினிலே:

நான் அப்போது ஆரம்ப பள்ளிச் சிறுவன். அப்போது நாங்கள் குடியிருந்த பகுதியில், சிந்தாமணி கடைவீதியில் இருந்த ‘டேவிட் மளிகை ஸ்டோர்’ என்ற கடையில்தான் மாதாந்திர மளிகை சாமான்கள் வாங்குவது வழக்கம். அந்த பட்டியலில் எனக்காக மால்ட்டேட் மில்க் – ஹார்லிக்ஸ் பாட்டில் ஒன்றும் இருக்கும். எனது அம்மா ஹார்லிக்சை பாலில் சேர்த்தும், பால் இல்லாமல் போனால் சுடுதண்ணீரிலும் கலந்து தருவார்கள். இப்போது போல் அப்போது கடைகளில், பால் தாராளமாக கிடைக்காது. ஹார்லிக்சை கடையில் வாங்கி, வீட்டுக்கு வந்தவுடன் முதலில் இரண்டு ஸ்பூன் வெறுமனே அப்படியே வாயில் போட்டு சுவைப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. இப்போதும் அப்படியேதான் (இப்போதுள்ள ஹார்லிக்ஸில் பழைய அடர்த்தி, சுவை இல்லை)

ஒட்டகப் பால்:

நான் படித்த ஆரம்பப்பள்ளி, ஹோலிகிராஸ் என்ற கிறிஸ்தவ மெஷினரியால் நடத்தப்படுவது. (இன்றும் அந்த பள்ளி இருக்கிறது) ஒருநாள், நான் படித்த இந்த பள்ளிக்கு அருகில் இருந்த சில கடைகளில் ஒட்டகப் பால் என்று இறுகிப்போன ஹார்லிக்ஸ் கட்டிகளை விற்றார்கள். வாங்கித் தின்றவர்களில் நானும் ஒருவன். இதனை அறிந்ததும், பள்ளி தலைமை ஆசிரியை ( இவர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரீ), காலை இறை வணக்கத்தின் போது “ யாரும் ஒட்டகப்பால் என்று வெளியில் வாங்கி சாப்பிடாதீர்கள். அது கெட்டுப் போன ஹார்லிக்ஸ். வயிற்றுக்கு கெடுதல். பக்கத்தில் உள்ள ஒரு குடோனிலிருந்து தூக்கி எறியப்பட்ட அவற்றை, பாட்டில்களை உடைத்து சிலர் விற்கிறார்கள், அவற்றில் கண்ணாடித் துண்டுகளும் இருக்கும், வயிற்றை கிழித்து விடும் ” என்று எச்சரித்தார்கள்.

ஹார்லிக்ஸ் பாட்டில்கள்:

இந்த காலியான ஹார்லிக்ஸ் பாட்டில்கள் பற்றி சொல்வதென்றால், அந்த காலத்து வீட்டுத் தயாரிப்புகளீல் ஒன்றான ஊறுகாய் பற்றியும் சொல்ல வேண்டி வரும். ஏனெனில் காலியான ஹார்லிக்ஸ் பாட்டில்கள் நல்லெண்ணெய், கடலெண்ணெய் வாங்குவதற்கு பயன்பட்டதோடு, ஊறுகாய் போட்டு வைப்பதற்கும், விற்பதற்கும் பயன்பட்டன. இப்போது முன்புபோல கண்ணாடி பாட்டிலில் ஹார்லிக்ஸ் வருவது இல்லை. பைபர் க்ளாஸ் பாட்டில்களில் வருகின்றன.  
     
தியேட்டர்களில் விளம்பரம்:

டெலிவிஷன் வருவதற்கு முன்னர் அப்போதெல்லாம் தியேட்டர்களில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அல்லது இடைவேளையில் பீடி, சிகரெட் விளம்பரங்களோடு அழகிய மேனிக்கு லக்ஸ் மற்றும் ஹார்லிக்ஸ், வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரப் படங்களையும் போடுவார்கள். விளம்பரத்தின் கடைசியில் கரகரத்த குரலோடு பீகாரில் வெள்ளம் என்றோ அல்லது வறட்சி என்றோ ஒரு ரீல் ஓட்டுவார்கள். ஹார்லிக்ஸ் விளம்பரங்களில் ஒரு டாக்டர், ஒரு வக்கீல் (”இந்த காலத்திலே எதையுமே நம்ப முடியாது), ஒரு இல்லத்தரசி, ஒரு சிறுவன் ( ‘அப்படியே சாப்பிடுவேன்’) என்ற விளம்பரம்தான் எனக்கு பிடித்தமானது.

ஹார்லிக்ஸ் வரலாறு:

(படங்கள் மேலே ஹார்லிக்ஸ் நிறுவனர்கள் வில்லியம் ஹார்லிக் (William Horlick) மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக் (James Horlick)

இதுநாள் வரை ஹார்லிக்சை சுவைத்துதான் பழக்கமே ஒழிய, அதன் வரலாறு தெரியாது. இந்த கட்டுரைக்காக இப்போதுதான் படித்து தெரிந்து கொண்டேன். இங்கே அந்த வரலாற்றை சொல்லப் போனால் கட்டுரை நீண்டு விடும். எனவே நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள கட்டுரைகளை நண்பர்கள் படிக்கவும். 

 
40 years....and now: How Horlicks grew up with the times http://www.rediff.com/business/report/pix-40-yearsand-now-how-horlicks-grew-up-with-the-times/20141002.htm
                                                                                                                                                                  
 
                        (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)



33 comments:

  1. ஹார்லிக்ஸ் பற்றிய தங்கள் பாணி வரலாற்றுக்கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது.

    அந்த நாள் முதல் இந்த நாள் வரை மக்களின் பயன்பாட்டில் ‘ஹார்லிக்ஸ்’ தனக்கென்று ஓர் தனி இடத்தினைப் பெற்றுள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

    வித்யாசமான புதுமையான பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ளம் கொண்ட மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  2. எனக்கும் சிறு வயதில் ஹார்லிக்ஸ் குடித்த நினைவுகள் வந்து விட்டது நண்பரே
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. எனக்கும் ஹார்லிக்ஸ் பிடிக்கும். அது ஒன்று தான் ஸ்பூனில் எடுத்து வாய்க்குப் போனவுடனேயே லேசான கெட்டிதட்டிப் போய்விடும். நாவில் உருட்டிச் சாப்பிடுவதற்கு சாக்லெட் மாதிரி இருக்கும். நீங்கள் சொல்கிற மாதிரி இப்பொழுதெல்லாம் முந்தைய அந்தத் தரம் இல்லை.

    எனக்குப் பிடித்ததாலோ என்னவோ, இப்பொழுது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகித்சை பெறும் உறவினர், நண்பர் யாரைப் பார்க்கப் போனாலும், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கிப் போகிறேன்.

    ஜேம்ஸ் ஹார்லிக் அவன் தம்பி வில்லியம் ஹார்லிக் -- ஆக இரண்டு ஹார்லிக்குகள் சேர்ந்து தயாரித்த பொருளானதால் ஹார்லிக்ஸ் என்று பெயர் பூண்டதாகச் சொல்வார்கள். எந்த அளவுக்கு இது உண்மையோ தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. இப்பொழுது தான் பார்த்தேன். நான் நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியைப் படிக்காமல் கொடுத்த தகவல். இப்பொழுது ஹார்லிக்ஸ் பெயர்க் காரணம் அது தான் என்று நிச்சயமாகிறது.

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் ஜீவி அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி.

      Delete
  5. ji being from madurai you must be aware of the GREAT HORLICKS STORY
    in which ALAGIRI KARUNANIDHI....was involved during election campaign....
    you recollect that ji

    ReplyDelete
    Replies
    1. நட் சந்தர் அவகளின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. ஓ...நீங்கள் ஹார்லிக்ஸ் பேபியா?

    ReplyDelete
    Replies
    1. அமுல் பேபி போல, ஹார்லிக்ஸ் பேபி - இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. மதுரைத்தமிழனின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. ஹார்லிக்ஸ் என்பதுஅதன் நிறுவனரின் பெயர் என்பதை தங்களால்தான் அறிந்து கொண்டேன்
    மலரும் நினைவுகள் அருமை ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இந்த கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் விக்கிபீடியாவில் படித்த பிறகுதான் ஹார்லிக்ஸ் பெயர்க்காரணம் தெரிய வந்தது. ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. தங்கள் கட்டுரை எனது பால்ய நினைவுகளையும் தூண்டிவிட்டது. நானும் ஹாலிக்ஸை அப்படியே சாப்பிடும் ரகம்தான். பகிர்வுக்கும் பழைய நினைவுக்கும் நன்றி நண்பரே!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. harlicks குடித்த தெம்புடன் .த ம 1

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. அன்பின் ஜீவி அவர்கள் சொல்வதையே வழிமொழிகின்றேன்..

    ஹார்லிக்ஸ்(ஓரளவுக்குத்தான்)பிடிக்கும்.

    ஸ்பூனில் எடுத்து வாய்க்குள் போட்டதுமே ஓரளவுக்குக் கெட்டியாகி விடும்.
    சமயத்தில் கைதவறி கழுத்தில் கொட்டிக் கொண்டதும் உண்டு..)
    நடு நாவில் உருட்டி உருட்டி சுவைக்க - அதெல்லாம் சுவையான நிமிடங்கள்..

    ஹார்லிக்ஸில் இருந்து நாங்கள் விடுபட்டு எத்தனையோ வருடங்களாகின்றன..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் இன்னும் ஹார்லிக்ஸ்தான். எனது உடம்பிற்கு ஒத்து போகிறது.

      Delete
  11. நல்ல நினைவுகள்.

    ஹார்லிக்ஸ் ஜீவி சார் சொல்வது போல் நோயாளிகளை பார்க்க போகும் போது கண்டிப்பாய் வாங்கி போவோம். எங்கள் வீட்டில் சிறுவயதில் எங்களுக்கு ஓவல்டின், எங்கள் பாட்டிக்கு ஹார்லிக்ஸ்.
    பால் இல்லாத போது வரும் விருந்தினருக்கு ஹார்லிக்ஸ்.
    இப்போது பெண்களுக்கு என்று விற்கும் ஹார்லிக்ஸை வாங்கி விட்டு காலி செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது நன்றாக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஓவல்டின், போர்ன்விட்டா எல்லாம் ஒரே சுவைதான். போர்ன்விட்டா கொஞ்சம் மொறுமொறு வென்று இருக்கும். என்னதான் விதம் விதமா ஹார்லிக்ஸ் வந்தாலும் அந்த பழையமால்ட்டேட் மில்க் – ஹார்லிக்ஸ் சுவையே தனிதான்.

      Delete
  12. நம்மூரில வருத்தம் பார்க்கப் போனால்
    போகும் வேளை மோட்டர்மா என ஹார்லிக்ஸ்
    கொண்டுபோய் கொடுப்பார்கள் - அந்த
    சத்தான மாவைப் பற்றிய வரலாறு அருமை!

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் இலங்கைத் தமிழை மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்.

      Delete
  13. இது பற்றிப்படிக்கும் போது அந்தக்கால ஓவல்டின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை . இப்போதும் ஹார்லிக்ஸ் அதிக சக்தி அளிக்குது

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கு ஓவல்டின் என்பது மலரும் உங்களது நினைவுகளில் ஒன்று. இதனைப் பற்றியும் எழுதலாமே. சென்றமாதம் எனது அப்பாவிற்கு (வயது 92) முடியாமல் போனது; திட பொருட்கள் எதனையும் சாப்பிட முடியவில்லை ஹார்லிக்ஸ் கொடுத்துதான் தெம்பை வரவழைத்தோம். இப்போது பழையபடி சாப்பிடுகிறார்.

      Delete
  14. நீங்கள் சொல்வதுபோல் ஹார்லிக்ஸின் சுவை முன் போல் இல்லை. நானும் தங்களைப்போல பாலில் கலக்குமுன் வெறுமனே அப்படியே வாயில் போட்டு சுவைப்பதுண்டு. ஹார்லிக்ஸ் பற்றி எழுதி பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  15. ஹார்லிக்ஸ் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். தங்களது பதிவு இளமைக்காலத்தை நினைவுபடுத்தியது. யாருக்கும் தெரியாமல் இரண்டு கரண்டி எடுத்து வாயில் போட்டுக்கொண்டு திருட்டுத்தனமாக வாயைத் துடைத்துக் கொண்டு வெளியே வருவேன். இப்போது ஹார்லிக்ஸ் அவ்வளவு சுகையாக இல்லை. அக்காலகட்டத்தில் பெரும்பாலானோர் வீட்டில் அடுப்பங்கரையில் மளிகைச்சாமான்களைப் போட்டுவைக்க தீர்ந்துபோன ஹார்லிக்ஸ் பாட்டிலைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  17. இப்பதிவை வாசித்ததும் என்னுடைய சிறு வயதில் ஹார்லிக்ஸிற்காக ஏங்கிய நாட்கள் நினைவிற்கு வருகிறது. பாலில் கலந்து குடிப்பதைவிட அப்படியே சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும். ஆனால் இன்று வரும் பாக்கெட்டில் அன்றைய சுவையில்லாதது வருத்தமே!!

    ReplyDelete
  18. ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்ட அந்த நாட்கள் .... அப்படியே நினைவில் இருக்கின்றன.

    ReplyDelete
  19. ஹார்லிக்ஸ் நினைவுகள் ஒவ்வொருவருக்குள்ளும் பலவித நினைவலைகளை நிச்சயம் மீட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. ஹார்லிக்ஸ் என்பது நோயாளிகளுக்கானது என்றிருந்த காலத்தில் அதற்காக சுகமில்லாமல் போகவேண்டுமென நாங்கள் ஏங்கிய தருணங்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஒட்டகப்பால் என்று கெட்டுப்பான ஹார்லிக்ஸை அறியாப் பிள்ளைகளிடம் விற்ற அக்கிரமக்காரர்களை என்னவென்று சொல்வது.. நல்லவேளையாக சரியான தருணத்தில் எச்சரிக்கபட்டீர்கள்.. சுவையான அனுபவப்பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  20. என் நண்பன் ஒருவன் ரசம் சாதம் சாப்பிட்டாலே உடம்பு சரியில்லாதவன் போல உணர்வு வருவதாகச் சொல்வான். ஏனென்றால் உடம்பு சரியில்லாதபோது ரஸம் சாதம் மட்டும் சாப்பிடுவதால் அப்படித் தோன்றுமாம். அதே போலத்தான் ஹார்லிக்ஸும். நான் அதனால் இதன் எதிரிக்கட்சியான விவாவை சுவீகரித்துக் கொண்டேன்! இன்னமும் விவா சாப்பிடுகிறேன்!

    சுவையான பதிவு என்று இதைத் தாராளமாகச் சொல்லலாம்!

    ReplyDelete