Tuesday 3 February 2015

ஒப்பாரிப் பாடல்கள்



திருச்சி டவுன் கடைவீதி பக்கம் போய் ரொம்ப நாளாகி விட்டது. அண்மையில் டவுன் பக்கம் போயிருந்த போது, சத்திரம் பஸ் நிலையம் அருகே (நேஷனல் ஹைஸ்கூல் வாசலில்) சினிமா பாட்டு, வசன புஸ்தகங்கள் விற்கும் பெரியவரிடம் “ என்னங்க நான் போன மாசம் எடுத்து வைக்கச் சொன்ன ரத்தக்கண்ணீர் வசன புத்தகம் வந்ததா? “ என்று கேட்டேன். அவர் இல்லைஎன்றார். அவரிடம்தான், முன்பு சில பழைய சினிமா பாட்டு, வசன புஸ்தகங்கள் வாங்கினேன். சரி, வந்தததற்கு அவரிடம் வேறு ஏதாவது வாங்குவோம் என்று, அவரது  தரைக் கடையை ஒரு பார்வை பார்த்ததில் “நவீன ஒப்பாரி கோர்வைஎன்ற புத்தகம் தென்பட்டது. வாங்கினேன்.

ஒப்பாரி வைத்தல்:

ஒருவர் இறந்து போனால் அவரது நெருங்கிய உறவினர்கள், அவரது உடலைச் சுற்றி ஒப்பாரி வைத்து அழுவது வழக்கம். அதிலும் கிராமத்தில் வயதான பாட்டிமார்கள் அழும்போது தனக்குத் தெரிந்த அல்லது பழைய பாடல்களை ஒப்பாரியாக சத்தமிட்டு பாடுவார்கள். இன்னும் சிலர் அவர்களாகவே இட்டுக் கட்டி பாடுவதும் உண்டு. இப்படி பாடுபவர்களை உறவினர்களே பாடச் சொல்லி கேட்டுக் கொள்வார்கள். அதே போல இந்த பாடல்களை கூலிக்கு பாடுபவர்களும் உண்டு. அவர்கள் மார்பிலே அடித்துக் கொண்டு பாடுவார்கள். இவர்களை “கூலிக்கு மாரடிப்பவர்கள்?என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் இந்த வேலையை, கூட்டமாக வாழும் ஒருசில அரவாணிகள் செய்தார்கள். (இப்போது இந்த வழக்கம் அவ்வளவாக இல்லை; படிப்படியாக குறைந்து வருகிறது) ஆனாலும் அத்தனை பேருக்கும், சொல்லி வைத்தாற்போல மளமள என்று கண்ணீர் வருவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவே இருக்கும்.

கூலிக்கு மாரடிப்பதை பற்றி ஒரு கிராமப்புற கதை ஒன்று உண்டு. ஒரு இழவு வீடு. எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள். அந்த வீட்டில் பாகற்காய் பந்தல் ஒன்று இருக்கிறது. பந்தலில் பாவற்காய்கள். அங்கே கூலிக்கு மாரடித்து அழ வந்த, இரண்டு பெண்டுகளில் ஒருவள் அழுகையோடு அழுகையாக பாடும்போது,

பந்தலிலே பாவக்கா
பந்தலிலே பாவக்கா

என்று குறிப்பாக, இன்னொருத்திக்கு தெரிவிக்கிறாள்.. அவளும்,

போகையிலே பாத்துக்குவோம்
போகையிலே பாத்துக்குவோம்

என்று பதில் பாட்டு பாடுகிறாள். இதனைக் கேட்டதும், வீட்டுக்கார அம்மாள்,

அது விதைக்கல்லோ விட்டிருக்கு
அது விதைக்கல்லோ விட்டிருக்கு

என்று எதிர்பாட்டு பாடினாளாம். ( இந்த கதையை அறிஞர் அண்ணா அவர்கள் தனது கம்பரசம் என்ற நூலில் மேற்கோளாக கூறியுள்ளார். அதன் சுருக்கம்தான் இங்கே தரப்பட்டுள்ளது)

இன்னும் சில ஊர்களில், ரொம்பவும் வயதானவர்கள் இறந்தால், மைக் செட் கட்டி, இரவு நேரம் டியூப் லைட் வெளிச்சத்தில் விடியவிடியவும் காலையிலும்,  ஒப்பாரி வைப்பார்கள். இன்னும் சிலர், சவுண்ட் சர்வீஸ் வைத்து, கிராமபோன் (  ) இசைத்தட்டு மூலம் ஏழூருக்கும் கேட்க ஒலிபரப்பிய நாட்களும் நினைவுக்கு வருகின்றன.

நவீன ஒப்பாரி கோர்வை

அன்றைய காலகட்டத்தில், ரத்ன நாயக்கர் & சன்ஸ் மற்றும் ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, பஞ்ச தந்திரக் கதைகள், அல்லியரசாணி மாலை போன்ற கதை நூல்களை வாசித்து இருக்கிறேன். இன்றைக்கு அவை கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு சிலர் அந்த பழைய பாணியில் வெளியிடும் ஒருசில கதைகள், பாட்டு புஸ்தகங்கள் இன்றும் சாலையோர கடைகளில் கிடைக்கின்றன.

நான் இப்போது, வாங்கியது ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், சென்னை வெளியிட்ட “நவீன ஒப்பாரி கோர்வைஎன்ற நூலாகும். உள்ளடக்கமாக பஞ்ச கல்யாணி ஒப்பாரி, சிங்கப்பூர் ஒப்பாரி, நவரச ஒப்பாரி என்று நிறைய ஒப்பாரி பாடல்கள். (LAMENTATIONS)  தகப்பனாருக்குப் புலம்பல், தாயாருக்குப் புலம்பல், புருஷனுக்கு புலம்பல், அண்ணனுக்குப் புலம்பல் என்று நூல் முழுக்க புலம்பல் மயம்.

பாடல்களை எழுதியவர் பூர்வீகம் ஒன்றும் தெரியவில்லை. நூலின் இடையிடையே, ஜெகமெங்கும் புகழ்பெற்ற இன்பகான கீதமணி, திரிசிரபுரம் ஸ்ரீமான் ஆர்டி.தங்கமுத்து தாஸ் அவர்கள் இயற்றிய என்று பாடலாசிரியர் புகழ் பாடக் காணலாம். அவர் எழுதிய சில வரிகள் இங்கே.

தகப்பனாருக்கு புலம்பல் இது _

வண்ணமணி தந்திமரம்
என்னைப் பெற்ற அப்பா
வார்த்தை மிக பேசுமரம்
என்னை ஈன்றவர் துரை
மாண்டீர் என்று
எனக்கு வார்த்தை வந்து கேட்டவுடன்
என்னைக் கொண்ட வல்லவரை முன்னே விட்டு
வந்து சேரும் முன்னாலே
நீங்கள் பெற்ர பெரியமகள் நின்றழுதால்
பேசாது வன்னிமரம்
நடுமகள் நின்றழுதால்
நடுங்காது வன்னிமரம்
கடமகள் நின்றழுதால்
கலங்காது வன்னிமரம்
நீபெற்ற செல்வி நான்
வாய்க்கரிசி கொண்டு
சீயக்காயரப்புக் கொண்டு
சீயாளி மேளம் சிதம்பரத்து மாலை கொண்டு
சிகப்புநிற பட்டுக் கொண்டு
நான் தாங்கி அடியை வைத்து
தலைமீது கையை வைத்து
ஓங்கியழுது வந்தால்
உங்கள் வாசல்
உயர்ந்த மரம் ஓசையிடும்  (பக்கம்.10)


ஒப்பாரி இலக்கியம்:

எனது கல்லூரி நாட்களில், நாட்டுப்புற இலக்கிய வரிசையில், நாட்டுப்புற பாடல்களின் தொகுப்புகளை படித்து இருக்கிறேன். அவற்றுள் சிறந்த தொகுப்பாக நா.வானமாமலை தொகுத்த, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்வெளியிட்ட “தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற நூலினைச் சொல்லலாம். அந்த நூலின் இறுதியில் நிறைய ஒப்பாரிப் பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அதிலிருந்து ஒரு பாடல் இங்கே

ஆண்டுதோறும் மகளையும், மருமகனையும் அழைத்து மணைபோட்டு வரிசை கொடுத்து தந்தை வீட்டில் உபசாரம் செய்வது வழக்கம். தந்தை இறந்துவிட்டார். அடுத்த ஆண்டில் மாரியம்மன் திருவிழா வரும். ஆனால் அவளை அழைத்து அன்போடு பாராட்ட யார் இருப்பார்கள்?

          வாரம் ஒரு நாளு
         
வள்ளியம்மை திருநாளு
         
வள்ளியம்மை திருநாளில்
         
வரிசையிட ஒருவரில்லை
         
மாசம் ஒரு நாளு
         
மாரியம்மன் திருநாளு
         
மாரியம்மன் திருநாளில்
         
மாலையிட யாருமில்லை
         
மணைப்போட ஒருவரில்ல.

இலக்கிய நூல்களில்:

கம்பராமாயணத்தில் ஒருகாட்சி. இராவணனின் மகன் இந்திரஜித்தை, போரில் இலக்குவன் கொன்று அவனது தலையை இராமனின் காலடியில் சமர்ப்பிக்கிறான். இந்திரஜித்தின் தலையில்லாத முண்டம் போர்க்களத்தில் கிடக்கிறது. மகன் இறந்த செய்தி கேட்டு போர்க்களம் வந்த இராவணன் தனது மகன் இந்திரஜித்தின் உடலைக் கட்டிக் கொண்டு அழுகிறான். அப்போது  மகனே! எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம் நான் உனக்கு செய்யும் நிலைமையை அடைந்தேன். என்னை விட இழிந்தவர்கள் யாருமில்லைஎன்று புலம்புகிறான்.

'சினத்தொடும் கொற்றம் முற்ற,
      இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்;
      நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம்,
      ஏங்கி ஏங்கி, உனக்கு
நான் செய்வதானேன்! என்னின்
      யார் உலகத்து உள்ளார்?' 39

                    - கம்பராமாயணம் (யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்)

அரிச்சந்திரன் புராணத்தில் “சந்திரமதி புலம்பல்பெரிதாக பேசப்படும். வாய்மையையே வாழ்க்கை நெறியாகக் கொண்டவன் மன்னன் அரிச்சந்திரன். விதிவசத்தால் அவன் ஒரு பக்கமும் அவனது மனைவி சந்திரமதியும் மகன் தேவதாசன் வேறு ஒரு பக்கமும் பிரிகின்றனர். ஒருநாள் மகன் தேவதாசன் பாம்பு கடித்து மரணம் அடைகிறான். அப்போது சந்திரமதி, அவனது உடலை மடியில் வைத்துக் கொண்டு ஆற்றாது புலம்புகின்றாள். இந்த புலம்பலை கிராமப்புறக் கூத்துக்கள் நடைபெறுகையில், உருக்கமாகச் சொல்லுவார்கள். நல்லூர் (இராமநாதபுரம்) வீரகவிராயர் இயற்றிய அரிச்சந்திர புராணம்என்னும்  நூலில் சந்திரமதி புலம்பும் பாடல் இது.

நிறை யோசை பெற்ற பறையோசை யற்று
   
நிரையாய் நிறைந்த கழுகின்
சிறையோசை யற்ற செடியூ டிறக்க
   
விதியா ரிழைத்த செயலோ
மறையோ னிரக்க வளநாட னைத்தும்
   
வழுவா தளித்த வடிவேல்
இறையோ னளித்த மகனே உனக்கு
  
மிதுவோ விதித்த விதியே.

                        - அரிச்சந்திர புராணம் (பாடல் எண். 998)



44 comments:

  1. நண்பரே இதைப்படித்த்தும் எனக்கு ஓர் ஆச்சர்யம்தான் தோன்றுகிறது காரணம் சிறிது காலமாகவே இந்த ஒப்பாரிகளைக் குறித்து ஒரு பதிவு இடவேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருந்தேன்,
    ஏற்கனவே ஒருமுறை குரமுருபர்ர் அவர்களின் பாடலை எழுதி வைத்தேன் தாங்கள் அதனைக்குறித்து பதிவு இட்டீர்கள்.
    நம் இருவருக்கும் சில நேரங்களில் சதிந்தனை ஒரேபோல் அமைந்து விடுகிறது.... தொடரட்டும்
    அது சரி நம்ம வூட்டாண்டே பார்க்க முடியலையே இப்போ....

    ReplyDelete
  2. குமர குருபரர் என்று படிக்கவும்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. மிக நல்ல பதிவு! பலர் மறந்திருக்கும் ஒப்பாரி பாடல்கள் பற்றிய பதிவு. அதுவும் நகரங்களில் வாழ்க்கையாகிப் போனதால்...இன்னும் சில கிராமங்களில் ஒலிக்கின்றன. படங்களிலும் அவ்வப்போது வருகின்றன. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்கள் அனைத்தும் அழகான பாடல்கள். இவை நாட்டுப்புற இலக்கியத்தில் நீங்கள் சொன்னது போல் இடம் பெறுபவைதான்...இலக்கியத்திலிருந்து குறிப்பிடப்பட்டுள்ளவை பாடத்தில் படித்திருக்கின்றோம் ஐயா!

    விக்கிரமாதித்தன் கதை, பஞ்ச தந்திரக் கதைகள், இப்போதும் கிடைக்கின்றன சித்திர புத்தகங்களாக. பன்சதந்திரக் கதைகளும் ஆங்கிலத்தில் வருகின்றன. ஜடக் டேல்ஸ் என்று ஆங்கிலத்தில் இருக்கின்றது. அம்புலிமாமா வருகின்றதா தெரியவில்லை. அருமையான புத்தகம்.

    ReplyDelete
  4. வேடிக்கையான ஆனாலும் ஆங்காங்கே நடைபெறும் வாடிக்கையான விஷயங்கள் தான்.

    //அதே போல இந்த பாடல்களை கூலிக்கு பாடுபவர்களும் உண்டு.//

    இதை என் சிறுவயதில் முதன்முதலாகக் கேள்விப்பட்டபோது, இப்படியுமா செய்வார்கள் என நான் மிகவும் வியந்தது உண்டு.

    இந்தப்பதிவினில் ‘ஒப்பாரி’ என்ற அழுகையைப் படித்து அனைவரும் சிரிக்கும்படி மிகச்சிறப்பாக தங்களுக்கே உரித்தான நடையில் பிரமாதமாக எழுதியுள்ளீர்கள்.

    அறிஞர் அண்ணா அவர்கள் தனது ”கம்பரசம்” என்ற நூலில் மேற்கோளாக கூறியுள்ளதாக எழுதியுள்ள பாடல் வரிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

    பதிவுக்குப்பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete
  5. புத்தகக் கண்காட்சியில் நான் கூட இது மாதிரியோ, அல்லது இதே புத்தகத்தையோ பார்த்து, எடுத்து, லேசாகப் புரட்டிப் பார்த்தேன்.

    ஒப்பாரி நல்ல கான்செப்ட். அழ முடியாமல் இறுகிப் போனவர்களை அழ வைத்து இலக்கி உடல்நிலையைச் சீராக்க உதவும். அழாமல் அவஸ்தைப் பட்ட நண்பர் ஒருவரைப் பற்றி என் மாமா சொல்லி இருக்கிறார்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. மறுமொழி> KILLERGEE Devakottai said... ( 1 , 2 )

    அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // நம் இருவருக்கும் சில நேரங்களில் சிந்தனை ஒரேபோல் அமைந்து விடுகிறது.... தொடரட்டும் //

    பொதுவாகவே, நீங்களும் நானும், பதிவு எழுத கருப்பொருளாக, மக்களோடு இயைந்த விஷங்களைப் பற்றியே எண்ணுவதால் இருக்கலாம்.

    // அது சரி நம்ம வூட்டாண்டே பார்க்க முடியலையே இப்போ.... //

    உடல்நலக் குறைவு காரணமாக, உங்கள் ஊட்டாண்டே (வலைத்தளம்) மட்டுமல்ல, தெரு பக்கமே (வலையுலகம்) கடந்த பல நாட்களாக வர இயலவில்லை. படிப்பதோடு சரி . இறைவன் அருளால் மீண்டும் நிறைய எழுத வேண்டும்.

    ReplyDelete
  7. நாட்டுப்புற வழக்காறுகளில் காணப்படுபவைகளில் ஒப்பாரிப்பாடலுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. பல இடங்களில் நேரில் இப்பாடல்களை நான் கேட்டுள்ளேன். இவ்வாறு பாடுபவர்களுக்கு அதிகம் நெஞ்சு வலி வந்து பாதிப்பதைப் பார்த்துள்ளேன். துக்க வீட்டில் ஒப்பாரிப்பாடல்களைக் கேட்கும் நிலையில் சிலருக்கு மனச்சுமை குறையும், சிலருக்கு மனதில் சுமை கூடும். இந்த அனுபவத்தை நேரில் பார்த்துள்ளேன். ஒப்பாரிப்பாடல் மூலமாக தன்னுடன் இருந்த, வாழ்ந்த நபரைப் பற்றிய புகழ்ச்சிகளைக் காணும்போது இறந்தவர் குணத்தில் சற்று மாறுபட்டவராக இருந்தால்கூட அவர்மீது நமக்கு ஒரு நல்ல எண்ணத்தைத் தோற்றுவிக்கும். நல்ல பதிவு.

    ReplyDelete
  8. மறுமொழி> Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    // விக்கிரமாதித்தன் கதை, பஞ்ச தந்திரக் கதைகள், இப்போதும் கிடைக்கின்றன சித்திர புத்தகங்களாக. பன்சதந்திரக் கதைகளும் ஆங்கிலத்தில் வருகின்றன. ஜடக் டேல்ஸ் என்று ஆங்கிலத்தில் இருக்கின்றது. அம்புலிமாமா வருகின்றதா தெரியவில்லை. அருமையான புத்தகம். //
    இப்போது எல்லா பழங்கதைகளும் புதிய வடிவில், புதிய படங்களுடன் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். அம்புலிமாமா நின்றுவிட்டது; ஆனாலும் அவர்கள் தங்கள் பதிப்பகம் சார்பாக கதைப் புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர்.

    ReplyDelete
  9. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நேற்று இரவு தூங்குவதற்கு முன்னர், இந்த பதிவை வெளியிட்டு விட்டு சென்றேன். நீங்கள் நள்ளிரவுக்குப் பிறகும் விழித்திருந்து தங்களின் கருத்துரையை இங்கு தந்து இருப்பது, என் மீது தாங்கள் கொண்ட அன்பை வெளிக் காட்டுவதாகவே உள்ளது. தங்கள் பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  10. மறுமொழி> ஸ்ரீராம். said...

    அன்பு சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    // புத்தகக் கண்காட்சியில் நான் கூட இது மாதிரியோ, அல்லது இதே புத்தகத்தையோ பார்த்து, எடுத்து, லேசாகப் புரட்டிப் பார்த்தேன்.//

    இங்கே நான் குறிப்பிட்டு இருக்கும் புத்தகம் திரைப்பட பாட்டு புஸ்தகம் விற்பவர்களிடம் மட்டுமே கிடைக்கும். புத்தகக் கண்காட்சியில் நீங்கள் பார்த்த புத்தகம் வேறு பதிப்பகமாக இருக்கும். இன்னொருமுறை அந்த நூலைப் பார்த்தால் பெயரையும், பதிப்பகத்தையும் தெரிவிக்கவும்.

    // ஒப்பாரி நல்ல கான்செப்ட். அழ முடியாமல் இறுகிப் போனவர்களை அழ வைத்து இலக்கி உடல்நிலையைச் சீராக்க உதவும். அழாமல் அவஸ்தைப் பட்ட நண்பர் ஒருவரைப் பற்றி என் மாமா சொல்லி இருக்கிறார். நல்ல பகிர்வு. //

    ஒப்பாரி பற்றிய உளவியல் ரீதியான தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. மறுமொழி> சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

    முனைவர் B. ஜம்புலிங்கம் அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    // நாட்டுப்புற வழக்காறுகளில் காணப்படுபவைகளில் ஒப்பாரிப்பாடலுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. பல இடங்களில் நேரில் இப்பாடல்களை நான் கேட்டுள்ளேன். இவ்வாறு பாடுபவர்களுக்கு அதிகம் நெஞ்சு வலி வந்து பாதிப்பதைப் பார்த்துள்ளேன். துக்க வீட்டில் ஒப்பாரிப்பாடல்களைக் கேட்கும் நிலையில் சிலருக்கு மனச்சுமை குறையும், சிலருக்கு மனதில் சுமை கூடும். இந்த அனுபவத்தை நேரில் பார்த்துள்ளேன். ஒப்பாரிப்பாடல் மூலமாக தன்னுடன் இருந்த, வாழ்ந்த நபரைப் பற்றிய புகழ்ச்சிகளைக் காணும்போது இறந்தவர் குணத்தில் சற்று மாறுபட்டவராக இருந்தால்கூட அவர்மீது நமக்கு ஒரு நல்ல எண்ணத்தைத் தோற்றுவிக்கும். நல்ல பதிவு. //

    உங்கள் கருத்துரை மூலம் ஒப்பாரி பாடுபவர்களுக்கு வரும் நெஞ்சுவலி, மனச்சுமை குறைதல், இறந்தவர் கடுமையானவராக இருந்த போதும் இப்பாடல்கள் அவரைப் பற்றிய நல்ல குணத்தை மட்டும் சொல்லுதல் – ஆகிய புது கருத்துக்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி அய்யா.

    ReplyDelete
  12. மைக் செட் கட்டி ஒப்பாரி வைப்பது, இன்னும் சில கிராமங்களில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். மைக் செட்டை அருகில் பார்க்கவோ, அதில் பேசிப் பார்க்கவோ, சந்தர்ப்பமே கிடைக்காத கிராமத்துப் பெண்களுக்கு, அது மிகப்பெரிய வாய்ப்பு. தங்களுக்கு தெரிந்த ஒப்பாரிப் பாடல்களை, போட்டி போட்டுக்கொண்டு, மைக் செட்டில் பாடி ஒப்பாரி வைப்பது கூட நடக்கும். நகரங்களில் இப்போதெல்லாம், சாவு வீடுகளில் அழுவது, கவுரவக்குறைவானதாக, நாகரிகமற்ற செயலாக மாறிக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா.

    கிராமிய இசைகளில் இதுவும் ஒன்று புன்னகவராலி இராகத்தில் பாடப்படும் பாடல்...தாலாட்டு நீலாம்பாரிஇரகத்தில்பாடுவாகள் இந்த கலை அழியாமால் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதுவும் கிராமப்புறங்களில் சிறப்பாக ஒப்பாரிப்பாடலை பாடுவார்கள் நகரத்தில் இவை குறைவு என்றுதான் சொல்ல வேண்டும் கருத்து மிக்க பதிவு பகிர்வுக்கு நன்றி ஐயா.
    மனிதன் பிறக்கும் போது தாலாட்டு
    மனிதன் இறக்கும்போது ஒப்பாரி...த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. இப்பதிவை நீட்டித்து ஒரு பலகலைக்கழகத்தினரிடம் கொடுத்தால் உங்களுக்கு ஒரு M Phil கிடைக்கும். நூலாகவென்றால், முனைவர் பட்டம் பெறலாம் :-)

    ஒப்பாரிப்பாடல்கள் நம் பாரம்பரியங்களில் ஒன்று. தமிழகம் முழவதும் வியாபித்தது. இன்றும் கூட.

    மைக் செட் வைத்து ஊர் கேட்க ஒப்பாரிப்பாடல் பாடி, நீத்தாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக்கூறி நினைவு கூறல் - பலர் இங்கு சொன்னது போல - இன்றும் மதுரை தேனி மாவட்ட கிராமங்களில் நடைபெறுகிறது. நீங்கள் அதைப்பார்க்க வேண்டுமானால், தேனி மாவட்டத்தை நிலைக்கலனாக வைத்தெடுக்கப்பட்ட ''மதயானைக்கூட்டம்'' (மிக அருமையான திரைப்படம்), பார்க்கவும். அதில், இக்காட்சி நீண்ட நேரம் காட்டப்படும். படத்தில் இழவு வீட்டு நிகழ்வும் அதே வீட்டில் ஒரு திருமண நிகழ்வும் சிறப்புக்காட்சிகள்.

    ஒப்பாரிப்பாடலகள் இழவு வீட்டில் மட்டுமில்லாமல சில பிறவிடங்களிலும் பாடப்படும். பெரிய எழுத்து நல்லதங்காள் கதை ஒரு நீண்ட ஒப்பாரிப்பாடலே. பெரிய எழுத்துக்கதைகள் பொதுவாக முதியோர்கள் உரத்த குரலில் வாசிப்பதற்கே. ஒருவர் வாசிக்க பலர் கேட்பர். வாசிப்பவர் நல்லதங்காள் கதையை ஒப்பாரிப்பாடல் போலவே வாசிப்பார். மற்றவர்கள் கேட்டு துயரமெய்துவர்.

    ஒப்பாரிப்பாடலகள் கூட்டமாகப்பாடவே. பிறர் துயரங்களைத் தமதுபோலக் கருதி மனித நேயத்தை வளர்க்கும் பொருட்டே ஒப்பாரிப்பாடல் எழுதப்பட்டன எனலாம்.

    இழவு வீட்டு ஒப்பாரிப்பாடலுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது: நீத்தாரின் ஆன்மா ஒப்பாரிப்பாடலினால் அமைதி அடைகிறது. எனவே பெண்கள் கூடி நீத்தாரைப்பற்றி நினைவுகூர்ந்தும் அன்னாரின் இழப்பினால் எவ்வளவு தூரம் மனக்கஷடம் அடைகிறோம் என்பதை அன்னார் அறிவதாகவும் அதன் மூலம் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாகவும் நம்பிக்கை. கிட்டத்தட்ட திவசத்தின்போது காக்கை வருகையினால் அது தெரிவிக்கப்படுகிறது போல. திவசம் கடனுக்காகச் செய்யப்பட்டால் காக்கை வராது என்பது நம்பிக்கை.

    ReplyDelete
  15. இறந்த வீட்டில் ஒப்பாரிப் பாடல்கள் ஒரு மனப் பளுவைக் குறைக்கும் உத்தியாகவே தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் திரைப் படங்களில் ஒப்பாரி ஒரு நகைச் சுவைக் காட்சியாகவே கருதப்படுகிறது.வித்தியாசமான பதிவு.

    ReplyDelete
  16. அறிஞர் அண்ணா அவர்கள் ‘கம்ப ரச’த்தில் குறிப்பிட்டுள்ள ஒப்பாரி பாடலை பின்பு ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படத்தில் மனோரமா அவர்களும் மற்றவர்களும் பாடுவதுபோல் நகைச்சுவை காட்சியாக அமைத்திருப்பார்கள். பற்பல பாடல்களை மேற்கோள் காட்டி விரிவாக ஒப்பாரி பாடல்கள் பற்றி தகவல் தந்தமைக்கு நன்றி! உண்மையில் அவையும் இலக்கியமே. துரதிர்ஷ்டவசமாக அவைகள் கண்டு கொள்ளப்படவில்லை.

    ReplyDelete
  17. மனம் விட்டு அழுவது துக்கத்தைக் குறைக்கும் என்ற வகையில் ஒப்பாரி ஓர் முக்கியமான அங்கம் வகிக்கிறது சடங்குகளில்... நல்ல பதிவு.

    ReplyDelete
  18. துக்க வீடுகளில் ஒப்பாரி என்பது இன்று ஓய்ந்து விட்டது ஐயா
    பெரும்பாலும் அமைதியாகத்தான் அமர்ந்திருக்கிறார்கள்
    கிராமப் புறங்களில் மைக் கட்டி ஒப்பாரி வைப்பது, குறவன் குறத்தி நடனம் என
    பார்த்திருக்கின்றேன்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  19. ஒப்பாரி என்பதே இப்போது குறைந்து விட்டது... இல்லை என்றே சொல்லலாம்... அதற்கெனவே கை செட் வைத்து பாடல்கள்... நேரம் கிடைப்பின் ஒரு பதிவாகவே போட்டு விடலாம்...

    ReplyDelete
  20. மறுமொழி> ஆறுமுகம் அய்யாசாமி said...

    அன்பு ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் வருகைக்கும் அதிகப்படியான தகவல்கள் தந்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  21. மறுமொழி> ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்!

    // மனிதன் பிறக்கும் போது தாலாட்டு
    மனிதன் இறக்கும்போது ஒப்பாரி... //

    நல்லதொரு கருத்தைச் சொன்ன கவிஞருக்கு நன்றி.

    ReplyDelete
  22. மறுமொழி> Anonymous said... ( 1 )

    அனானிமஸ் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    // தேனி மாவட்டத்தை நிலைக்கலனாக வைத்தெடுக்கப்பட்ட ''மதயானைக்கூட்டம்'' (மிக அருமையான திரைப்படம்), பார்க்கவும். அதில், இக்காட்சி நீண்ட நேரம் காட்டப்படும். படத்தில் இழவு வீட்டு நிகழ்வும் அதே வீட்டில் ஒரு திருமண நிகழ்வும் சிறப்புக்காட்சிகள். //

    நீங்கள் குறிப்பிட்ட திரைப்படத்தை அவசியம் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

    // இழவு வீட்டு ஒப்பாரிப்பாடலுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது: நீத்தாரின் ஆன்மா ஒப்பாரிப்பாடலினால் அமைதி அடைகிறது. எனவே பெண்கள் கூடி நீத்தாரைப்பற்றி நினைவுகூர்ந்தும் அன்னாரின் இழப்பினால் எவ்வளவு தூரம் மனக்கஷடம் அடைகிறோம் என்பதை அன்னார் அறிவதாகவும் அதன் மூலம் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாகவும் நம்பிக்கை. கிட்டத்தட்ட திவசத்தின்போது காக்கை வருகையினால் அது தெரிவிக்கப்படுகிறது போல. திவசம் கடனுக்காகச் செய்யப்பட்டால் காக்கை வராது என்பது நம்பிக்கை. //

    ஒப்பாரிப்பாடலுக்கான சமயம் சார்ந்த, இன்னொரு காரணம் தெரிந்து கொண்டேன். நல்ல தகவல்கள் பல சொன்ன தாங்கள், தங்களது பெயரை மட்டுமாவது சொல்லி இருக்கலாம். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  23. மறுமொழி> G.M Balasubramaniam said...

    // இறந்த வீட்டில் ஒப்பாரிப் பாடல்கள் ஒரு மனப் பளுவைக் குறைக்கும் உத்தியாகவே தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் திரைப் படங்களில் ஒப்பாரி ஒரு நகைச் சுவைக் காட்சியாகவே கருதப்படுகிறது.வித்தியாசமான பதிவு. //

    தருமி என்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கி, புலவர் என்றாலே கோமாளி என்று ஆக்கியவர்கள் திரைப்பட நண்பர்கள். எனவே அவர்கள் இதனைச் செய்வது ஆச்சரியம் அல்ல. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  25. மறுமொழி> கே. பி. ஜனா... said...

    எழுத்தாளர் கே. பி. ஜனா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...

    அன்பு சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. //அவையும் இலக்கியமே. துரதிர்ஷ்டவசமாக அவைகள் கண்டு கொள்ளப்படவில்லை.//

    இன்றைக்கு நகர வாழ்க்கை மேலை நாட்டு வாழ்க்கையைத் தழுவிக்கொண்டிருக்கிறது. நகர வாழ்க்கை வெகுவேகமாக சிற்றூர்களுக்கும் போய்ச்சேர்கிறது. எனவே வளரும் தலைமுறை பாரமபரிய வாழ்க்கை முறைகளை ஏளனமாகப் பார்த்து தவிர்க்கிறது. ஒப்பாரிப்பாடலகளும் தாலாட்டுப்பாடல்களும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

    ஒப்பாரிப்பாடலகள் இலக்கியமாகா. காரணம் அவை மிகவும் எளிமையானவை. கூறப்படும் பொருட்களும் நேரடியாகச் சொல்லப்படுகின்றன. இலக்கிய சுவை நல்கும் பலவிடயங்கள் அவற்றில் இல்லை. சோகரசம் கூட எப்படி சொல்லப்படவேண்டுமோ அப்படிச்சொல்லும்போதே இலக்கிய தரமாகிறது.

    தாலாட்டுப்பாடலகள் பல இலக்கியத்தரத்தில் வந்துவிழும். பாடுபவர் கூட்டமாக இல்லை. ஓர் ஏழைத்தாய், தன் சிசுவைத்தாலாட்டுவாள். வெகுதூரம் பிழைப்பைத்தேடி, மீண்டுவருவேன் செல்வத்துடன் என்றவன் வரவேயில்லை. குழந்தையும் பிறந்து தந்தைமுகம் காணாமலிருக்க, அத்தாய் குழந்தையை தூங்கவைக்கும் பாடலாக வருவது தாலாட்டுப்பாடல். குழந்தையின் துர்பாக்கியம்; தன் துர்பாக்கியம். எனினும் ஒரு சிறு நம்பிக்கை. இவற்றை அத்தாயின் சோகமாக வெளிப்படும். படிப்போர் மனத்தை கப்பிக்கொள்ளும்.; சோகத்தினால் வரிகள் இலக்கியாமாகும். மீனவர்களின் தாலாட்டுப்பாடல்கள் ஏற்கனவே முனைவர் பட்டங்களுக்காக ஆராயப்பட்டுவிட்டன.

    திரைப்படங்களில் வரும் தாலாட்டுப்பாடலகள் இலக்கியத்தரத்தில் கொடிகட்டிப் பறப்பின. பாசமலர், கற்பகம், சித்தி - இன்னும் பல படங்களில் வரும் குழந்தையைத் தூக்க வைக்கும் தாலாட்டுபபாட்லகள் அவை. பாசமலரின் தாலாட்டுப்பாடல், தனக்குத் தாய் தந்தையாக இருந்து தன்னை ஆளாக்கிய தமையன் வரமுடியவில்லை. ஆனால் கல்ங்காதே மகளே அவர் ஒரு நாள் வருவார் எனச்சொல்லும் அப்பாடல் தமிழ்த்திரைப்படவரலாற்றில் அழிக்க முடியா இடக்த்தைப்பெற்றி ஓரிலக்கியப்பாடலென்றே சொல்லவேண்டும். மறுப்பார் எவருமே இருக்க முடியாது. பாசமலர் தாலாட்டைவிட எனக்குப்பிடித்தது சித்தியில் பத்மினி பாடும் தாலாட்டு. எங்கள் தலைவர் பாடும் அன்னிமிட்ட கை படத்தில் வரும் தாலாட்டும் அவரின் குரலிலேயே இலக்கியமாகிவிடும். தாயாக முடியாத பெண்ணொருத்தி பல குழந்தைகளைத் தூங்க வைக்கும் விசேசமான தாலாட்டு அது. எங்க மாமாவில் வரும் 'செல்லக்கிளிகளாம் பிள்ளைகள்.'என்ற பாடலும் உயர்ந்தது.

    ஒப்பாரிப்பாடலகளைத் திரைப்படம் நகைச்சுவைக்காக வைக்கும் காரணம் அவற்றில் இலக்கியத்தரமில்லாததனால். இலக்கியத்தரமிருக்கும் எதுவும் நகைச்சுவைக்காகப்பயனபடுத்தப்படுவதில்லை. நகைச்சுவை என்பது எங்கு ஒழுங்கமைப்புத் தாறுமாறாகிறதோ அங்கே எழும்பும். If a man dresses like a man, no humour. If he dresses like a woman, humor arsies due to disorder. Dag bites man, no news; if man bites it, news. If the characters invovled in this act are comical figures,, it is not news; but comedy. So you have to disturb the order in order to create humor, From order comes beauty and literature. From disorder comes humor.

    In oppaarippadalkaL (in English, it is called dirges), they do upset an order. How? ''

    A death should be moaned sincerely. It is order. But in dirges of our villages, it appears that they are insincere and play acting. Hence, it is used for humour in films. If the dirge is sung by one person, preferably the female loser, it will become sincere and literature. Literature requires order and sincerity.

    ReplyDelete
  28. உடல் நலம் சிறப்புற என் வாழ்த்துகள். யூ டியூப் ல் இந்தப் பாடல்கள் இருக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. NANUM ENTHA PADALKALAI THINAMUM DHEDI KONDULLEN.AANAL KIDAKKAVILLAI.ENNIDAM NIRAYA OPPARI PADALKAL ULLANA DEVAIPADUVORE 9486340310 NUMBERKKU AZHAIKKAVUM.OPPARI PADALGALKALAI AZHIYAMAL KAKKA VENDUM. BY KONGU SEKAR

      Delete
  29. மறுமொழி> Anonymous said... ( 2 )

    //அவையும் இலக்கியமே. துரதிர்ஷ்டவசமாக அவைகள் கண்டு கொள்ளப்படவில்லை.//

    அய்யா V.N.S (வே.நடனசபாபதி) அவர்களின் கருத்துரைக்கு நீண்ட விளக்கம் ஒன்றைத் தந்த அனானிமஸ் அவர்களுக்கு நன்றி.

    ஒருகாலத்தில் இலக்கியம் என்றால் இலக்கண சுத்தியோடு எழுதப்பப்பட்ட செய்யுள்களும், மரபுக் கவிதைகளுமே இலக்கியம் என்று பேசப்பட்டன. கீழ்த்தட்டு மக்களின் தாலாட்டுப் பாடல்கள், கும்மிப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் போன்றவை இலக்கியத் தரம் இல்லாதவை என்று இகழப்பட்டன. இன்று அவை நாட்டுப்புற இலக்கிய வரிசையில் வந்து விட்டன. அதே போல புதுக் கவிதைகளையும், திரை இசைப் பாடல்களையும் புறக்கணித்தவர்கள், இன்று அவைகளையும் இலக்கியமாக ஏற்றுக் கொண்டனர். காரணம் மக்கள் விரும்பியவை எழுத்து வடிவம் பெற்று நூல்களாக வெளிவந்தமைதான்.

    ReplyDelete
  30. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...

    // உடல் நலம் சிறப்புற என் வாழ்த்துகள். //

    நன்றி சகோதரரே. இப்போது தேவலாம்.( எனது சித்தப்பா வீட்டில் ஒரு பெரிய காரியம். ஒரு மாதத்திற்கு முன்னர் சின்னம்மா அவர்கள் தவறி விட்டார்கள். சடங்கு , சம்பிராதாயம் என்று ஒரே அலைச்சல். இதன் காரணமாக உடம்பு வலி மற்றும் முதுகு வலி)

    // யூ டியூப் ல் இந்தப் பாடல்கள் இருக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். //

    யூ டியூப் இல் இந்தப் பாடல்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் மணப்பாறையில் பணிபுரிந்தபோது, பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஒப்பாரி பாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்கள் (டேப் கேஸட்டுகள்) விற்கப்பட்டதை பார்த்து இருக்கிறேன். அவர்கள் ஒலிபரப்பியதை கேட்டும் இருக்கிறேன்.

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  31. மறுமொழி ( 2 ) > ஜோதிஜி திருப்பூர் said...

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு. யூ டியூப் இல் oppari songs, tamil oppari songs, oppari songs in tamil என்று ஏதேனும் ஒரு தலைப்பில், தேடினால் ஒப்பாரி பாடல்கள் வருகின்றன.

    ReplyDelete
  32. அய்யா வணக்கம்.
    தேவர் ஹால் அருகே உள்ள பழைய புத்தகக்கடையில் புத்தகங்கள் வாங்கிய சிறுபிள்ளை அனுபவம் எனக்கும் உண்டு.
    தங்களின் பதிவில்,
    கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட
    உடலு ளானையொப் பாரியி லாதவெம்
    அடலு ளானை யரத்துறை மேவிய
    சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.
    என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்தையும்,
    மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரியாங் கண்டதில்
    என்னும் திருக்குறளையும் நோக்க
    ஒப்பு யாரு என்பதுதான் ஒப்பாரி ஆயிருக்குமோ என்று தோன்றுகிறது அய்யா
    நன்றி.
    த ம கூடுதல் 1

    ReplyDelete
  33. மறுமொழி> ஊமைக்கனவுகள். said...

    ஊமைக்கனவுகள் – ஜோசப் விஜூ அவர்களுக்கு வணக்கம். தங்கள் வருகைக்கும் நல்ல கருத்துரைக்கும் நன்றி.

    // தேவர் ஹால் அருகே உள்ள பழைய புத்தகக்கடையில் புத்தகங்கள் வாங்கிய சிறுபிள்ளை அனுபவம் எனக்கும் உண்டு.//

    திருச்சியில், தேவர் ஹால் அருகே பழைய புத்தகக் கடைகள் ஏதும் இல்லை. நீங்கள் குறிப்பிடுவது டவுன்ஹால் என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் தேவாரம், திருக்குறளில் வரும் ”ஒப்பாரி” சொல்லாராய்ச்சி பற்றி இனிமேல்தான் ஒப்பு நோக்க வேண்டும்.

    ReplyDelete
  34. மிக நல்லபதிவு.
    ரசித்து வாசித்தேன்
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  35. நல்ல பதிவு. சிறு வயதில் பக்கத்து வீட்டில் இப்படி ஒப்பாரி பாடல்கள் கேட்டதுண்டு. இறந்த மனிதரைப் பற்றி பாடலாக அவர்களே இட்டுக்கட்டி பாடுவார்கள்.....

    ReplyDelete
  36. நல்ல பதிவு. ஒப்பாரிப்பாடல்கள் உணர்வுபூர்வமானவை. ஈழத்திலும் நிறைய ஒப்பாரிப் பாடல்கள் உண்டு, ஆனால் வெளிநாடுகளில் ஈழத்தமிழர்களின் இறப்புகளில் தேவாரம் மட்டும் தான் பாடுகிறார்கள், ஒப்பாரி முற்றாகவே இல்லாமல் போய்விட்டது. பலருக்கு ஒப்பாரி என்றால் என்னவென்றே தெரியாது.

    ReplyDelete
  37. அருமையான , கவனிக்கப்படவேண்டிய பதிவு அய்யா ! இலக்கியங்களில் உள்ள பாடல்களையும் கண்டுணர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி .தம +

    ReplyDelete
  38. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்.
    நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி> kovaikkavi said... .

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு நன்றி. உங்கள் கவிதைகளை தமிழ்மணத்தில் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் உங்கள் வலைத்தளம் வருகிறேன்.

    ReplyDelete
  40. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...

    // நல்ல பதிவு. சிறு வயதில் பக்கத்து வீட்டில் இப்படி ஒப்பாரி பாடல்கள் கேட்டதுண்டு. இறந்த மனிதரைப் பற்றி பாடலாக அவர்களே இட்டுக்கட்டி பாடுவார்கள்..... //

    நீங்கள் சொல்வது சரிதான். பெரும்பாலும், அந்த நேரத்தில் என்ன சொற்கள், என்ன வார்த்தைகள் பாடுபவரின் மனதில் உதிக்கின்றனவோ அவற்றையே ராகமாக இழுத்து ஒப்பாரி பாடுகின்றனர். கருத்துரை தந்த சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  41. மறுமொழி> viyasan said...

    // நல்ல பதிவு. ஒப்பாரிப்பாடல்கள் உணர்வுபூர்வமானவை. ஈழத்திலும் நிறைய ஒப்பாரிப் பாடல்கள் உண்டு, ஆனால் வெளிநாடுகளில் ஈழத்தமிழர்களின் இறப்புகளில் தேவாரம் மட்டும் தான் பாடுகிறார்கள், ஒப்பாரி முற்றாகவே இல்லாமல் போய்விட்டது. பலருக்கு ஒப்பாரி என்றால் என்னவென்றே தெரியாது. //

    அய்யா வியாசன் அவர்களுக்கு நன்றி. (உங்களுடைய அரசியல் விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவர்களில் நானும் ஒருவன்.) இலங்கைத் தமிழர்கள் இறப்புகளில் தேவாரம் பாடுவது போல, தமிழ்நாட்டில் சில இடங்களில், இறப்புகளில் திருவாசகம் பாடுவார்கள்.

    ReplyDelete

  42. மறுமொழி> megneash k thirumurugan said...

    சகோதரருக்கு நன்றி. இலக்கியங்களில் இருந்து இன்னும் நிறைய மேற்கோள்கள் காட்டலாம்தான். ஆனால் ஒரு வலைப்பதிவில் இதற்கு மேல் சொன்னால் ரசிக்க முடியாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டேன்.

    ReplyDelete
  43. மறுமொழி> Ranjani Narayanan said...

    // இன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன். நன்றி! //

    சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் அன்பான தகவலுக்கும், இன்றைய வலைச்சரத்தில் இந்தப் பதிவினை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி. இன்னும் இன்றைய வலைச்சரம் பார்க்கவில்லை. விரைவில் வருகிறேன். நன்றி.

    ReplyDelete