Tuesday 10 February 2015

திருமழபாடி குடமுழுக்கு (2015)



பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
                                                                                -  சுந்தரர் (தேவாரம்)



சொந்த ஊர் திருமழபாடி என்பதால், ஒரு மாதத்திற்கு முன்பே, ஊரிலிருந்து சொந்தக்காரர் ஒருவரும் மற்றும் கோயில் திருப்பணிக் கமிட்டியில் இருந்த ஒருவரும், அப்பா வீட்டிற்கு வந்து மகா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சென்றார்கள். எல்லோரும் குடும்பத்துடன் திருமழபாடிக்கு செல்ல வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மகனுக்கு அடுத்தநாள் கல்லூரித் தேர்வு என்பதால், எனது மகனும் மனைவியும் வரவில்லை. எனது அப்பா-அம்மா இருவராலும் வர இயலவில்லை. நான் மட்டும் குடமுழுக்கு நாள் அன்று (08.02.2015, ஞாயிற்றுக் கிழமை) காலையில் திருச்சியிலிருந்து கிளம்பி சென்று வந்தேன். நான் சென்ற நேரம் அப்போதுதான் விழா முடிந்து மக்கள் கலைந்து கொண்டு இருந்தார்கள். நான் திருமழபாடி கோயில் கோபுர தரிசனம் செய்து விட்டு, கோயிலுக்குள் செல்ல முயன்றேன். கோயிலுக்குள் உள்ளே நுழைய முடியவில்லை. ஒரே மக்கள் வெள்ளம். இன்னொருநாள் வந்து கொள்ளலாம் என்று திரும்பி விட்டேன். அப்போது நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.
                              
















குடமுழுக்கு செய்திகள்:

08.02.2015, ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற, திருமழபாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் பற்றி தமிழ் தினசரிகள் சிறப்பாக செய்திகள் வெளியிட்டு இருந்தன. தினமணியில் வந்த செய்தி இது.

அரியலூர் மாவட்டம், திருமழபாடி ஸ்ரீசுந்தராம்பிகை சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் திருப்பதிகங்கள் பாடி வழிபட்ட சிறப்பு வாய்ந்ததும், நந்திஎம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும்.

மேலும்,மார்க்கண்டேய முனிவருக்காகச் சிவபெருமான் கையில் மழுப்படையேந்தி திருநடனம் புரிந்த பெருமை உடையதும், சோமாஸ்கந்தரின் வடிவம் ஒரே கற்சிலையில் அமையப் பெற்றுள்ள சிறப்புடையதும் திருமழுவாடி என்று அழைக்கப்படும் திருமழபாடியில் உள்ள இச்சிறப்பு மிகு திருத்தலத்தில் நீர்மையன், வஜ்ரதம்பேஸ்வரர், மழுவாடி ஈசர், திருமழபாடி மகாதேவர் ஆகிய திருப்பெயர்களுடன் அருள்பாலிக்கும் அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலின் ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

தருமபுர ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம், 24-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் அதிபர் காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், மற்றும் திருமழபாடி ஸ்ரீஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள் மடாலயத் தலைவர் சிவானந்த சுவாமிகள் ஆகியோர் அருளாசியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில், அரியலூர், திருமழப்பாடி, திருமானூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
                           -  (நன்றி : தினமணி 09.02.2015)
       
வலைத்தளங்களில்:

தஞ்சையம்பதி என்ற வலைத்தளத்தில் சகோதரர் துரை செல்வராஜூ அவர்கள்  கும்பாபிஷேக தரிசனம் என்ற பதிவில்
திருமழபாடி குடமுழுக்கு சம்பந்தமாக படங்களுடன் அதிக விவரமாக எழுதியுள்ளார். அவருக்கு நன்றி.

திருமழபாடியைப் பற்றிய முந்தைய எனது வலைப்பதிவு ithu
நானும் எனது ஊரும் (தொடர் பதிவு) - திருமழபாடி

25 comments:

  1. திருமழபாடி உங்கள் ஊர் என்பது அறிந்து மகிழ்ந்தேன். கோயில் படங்கள் கண்டுகொண்டேன்.
    வேலைபழு நீண்டஇடைவெளியின் பின் வந்திருக்கின்றேன்.

    ReplyDelete
  2. படங்கள் சிறப்பாக இருக்கின்றன. உங்கள் பதிவிற்கும் சென்று உங்கள் ஊரைப்பற்றிய செய்திகளைப்படித்தேன். தகவல்கள் சுவாரசியமாக இருந்தன! தஞ்சையிலிருந்து அரியலூரை நெருங்கும்போது இடது பக்கம் திருமழபாடி என்று பெயரில் ஒரு சாலை பிரியும். அது தான் இந்த திருமழபாடியா? திருவாலம்பொழில் எங்கிருக்கிறது?

    ReplyDelete
  3. திருமழபாடி பற்றி கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் விரிவாக எழுதியிருப்பார். இப்போது தங்களின் பதிவு மூலம் மேலதிக தகவல்களை அறிந்தேன். படங்கள் அருமை. வாழ்த்துக்கள்! வங்கியில் என்னோடு பணி புரிந்த என் நண்பர் ஒருவர் கூட உங்கள் ஊரைச் சேர்ந்தவர் தான்.

    ReplyDelete
  4. விளக்கவுரைகளுடன் புகைப்படங்கள் அனைத்தும் அருமை கண் கொள்ளாக்காட்சி.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  5. கோபுர தரிஸனமே கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். தங்கள் பதிவின் படத்தினில் 8-9 கோபுரங்களை பளிச்சென தரிஸிக்க முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. படங்களெல்லாம் மிகவும் பளிச்சென்று கவர்ச்சியாக உள்ளன. அருமை. மிக அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பலூன் வியாபாரி, பஞ்சு மிட்டாய்க்காரர், பள்ளிக்கூடம், ஊர் பெயர்ப்பலகை, அதனடியில் தாங்கள் என அனைத்தும் அசத்தலாக உள்ளன. நேரில் தங்களுடன் திருமழபாடிக்கே புறப்பட்டு வந்ததுபோன்றதோர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. படங்கள் ஒவ்வொன்றும் அருமை ஐயா
    கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட ஓர் உணர்வு
    நன்றி ஐயா
    தம 2

    ReplyDelete
  8. மழபாடி ராஜாராம் என்ற பெயரில் ஒரு மூத்த எழுத்தாளர் இங்கு நம் திருச்சி வடக்கு ஆண்டார் தெருவில் வசித்து வருகிறார். மிகவும் எளிமையான நல்ல மனிதர். அவரும் திருமழபாடியைச் சேர்ந்தவரே. ஆனால் அவர் பதிவர் அல்ல. அவரிடம் கணினியும் கிடையாது. கணினியை உபயோகிக்கவும் தெரியாதவர்.

    திருச்சி அகில இந்திய வானொலி நிலயத்தில் நிறைய நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கு கொள்வார். பத்திரிகைகளுக்கு படைப்புகள் அனுப்புவார். ஓர் தொகுப்பு நூலும் பல வருடங்கள் முன்பு வெளியிட்டுள்ளார். என்னிடம் அவருக்கு ஓர் தனி பிரியம் உண்டு.

    திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தபோது அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த சங்க கூட்டங்களில் நான் முன்பு பலமுறை அவரை சந்தித்தது உண்டு.

    தொலைகாட்சியில் சில சமயம் இவரின் பேட்டிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அதில் ஒருமுறை திருமழபாடி கோயிலின் விசேஷங்களில் ஒன்றான ’நந்திக்கல்யாணம்’ பற்றி இவர் சிறப்பித்துப் பேச நான் கேட்டுள்ளேன்.

    என் பதிவு ஒன்றிலும் இவரைப்பற்றியும் இவர் வெளியிட்ட ’இமயங்கள் சரிவதில்லை’ என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தையும் காட்டியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html

    இவை தங்களின் தகவலுக்காக.

    அன்புடன் VGK

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா.

    நிகழ்வில் கலந்து கொண்டது போல உணர்வு படங்கள் எல்லாம் அழகு பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. மறுமொழி > மாதேவி said...

    // திருமழபாடி உங்கள் ஊர் என்பது அறிந்து மகிழ்ந்தேன். கோயில் படங்கள் கண்டுகொண்டேன். வேலைபழு நீண்டஇடைவெளியின் பின் வந்திருக்கின்றேன். //

    எனது ஊர் பற்றிய, எனது முந்தைய பதிவிலும் தாங்கள் கருத்துரை தந்து இருப்பதைக் கண்டேன். சகோதரி மாதேவி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    // படங்கள் சிறப்பாக இருக்கின்றன. உங்கள் பதிவிற்கும் சென்று உங்கள் ஊரைப்பற்றிய செய்திகளைப்படித்தேன். தகவல்கள் சுவாரசியமாக இருந்தன! //

    சகோதரி அவர்களின் பாராட்டுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // தஞ்சையிலிருந்து அரியலூரை நெருங்கும்போது இடது பக்கம் திருமழபாடி என்று பெயரில் ஒரு சாலை பிரியும். அது தான் இந்த திருமழபாடியா? திருவாலம்பொழில் எங்கிருக்கிறது? //

    தஞ்சையிலிருந்து திருவையாறு, விளாங்குடி தாண்டி, திருமானூர் கொள்ளிடம் பாலம் விட்டு இறங்கியவுடன் அரியலூர் செல்லும் சாலையில், கொள்ளிடக் கரையை ஒட்டி இடதுபுறம் பிரியும் (மேற்கு நோக்கி) செல்லும் சாலைதான் திருமழபாடி செல்லும் பாதை). தஞ்சையிலிருந்து காலையில் காரில் கிளம்பி, கோயில் சென்றுவிட்டு மாலைக்குள் திரும்பி விடலாம். தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருமழபாடிக்கு திருவையாறு, திருமானூர் வழியாக பஸ் வசதி உண்டு.

    திருவாலம்பொழில் - கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ள தலம். கண்டியூரிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம். (நன்றி: www.shaivam.org )

    ReplyDelete
  12. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // திருமழபாடி பற்றி கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் விரிவாக எழுதியிருப்பார். இப்போது தங்களின் பதிவு மூலம் மேலதிக தகவல்களை அறிந்தேன். படங்கள் அருமை. வாழ்த்துக்கள்! வங்கியில் என்னோடு பணி புரிந்த என் நண்பர் ஒருவர் கூட உங்கள் ஊரைச் சேர்ந்தவர் தான். //

    அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததில்லை. நீங்கள் குறிப்பிடும் பகுதியையாவது படித்த் பார்க்க வேண்டும். வங்கியில் உங்களோடு பணிபுரிந்த நண்பரின் ஊரும் பெயரும் தெரிந்தால் ஒருவேளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

    ReplyDelete
  13. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    // விளக்கவுரைகளுடன் புகைப்படங்கள் அனைத்தும் அருமை கண் கொள்ளாக்காட்சி. தமிழ் மணம் 1 //

    அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. நீங்களும் உங்கள் தேவகோட்டை பற்றி ஒரு பெரிய பதிவினை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  14. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  15. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 , 2, 3 )

    எனக்கு எப்போதும் ஊக்கம் தரும் கருத்துரைகள் தரும் அய்யா V.G.K அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.

    ஒருமுறை எழுத்தாளர் மழபாடி ராஜாராம் அவர்கள் உங்கள் இல்லம் வந்து இருந்தபோது, அவருடன் என்னை உங்களது செல்போனில் பேசச் சொன்னதும், அவருடன் பேசியதும் நினைவுக்கு வருகின்றன. திருச்சி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி ஒன்றில் என்னுடைய அப்பா, அவருடன் பேசி இருக்கிறார். அதனையும் மழபாடி ராஜாராம் அவர்கள் நினைவு கூர்ந்தார். அவரைப் பற்றிய உங்களது பதிவினையும் படித்துள்ளேன். மலரும் நினைவுகளைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி > ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.

    ReplyDelete
  17. அன்புடையீர்..
    திருமழபாடி கும்பாபிஷேக வைபவத்தினை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற தங்களுக்கு வணக்கம்..

    இயற்கையழகோடு இணைந்து திகழும் திருத்தலமாகிய திருமழபாடியில் நிகழ்ந்த கும்பாபிஷேக வைபவத்தினை அழகு ததும்பும் படங்களுடன் வெளியிட்டு

    தஞ்சையம்பதி தளத்தையும் சுட்டிக் காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  18. துல்லியமான படங்கள்... துரை செல்வராஜூ ஐயா அவர்கள் தளத்திலும் தலத்தின் சிறப்புகளை அறிந்தேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
  19. படங்கள் எடுப்பதற்கு முன் சற்று வித்தியாசமான கோணங்கள் என்ற நிலையில் அடுத்து வரும் படங்களில் முயற்சித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  20. மழபாடியின் மாணிக்கத்தைப் படமாகத் தரிசிக்கத் தந்த உங்களுக்கு நன்றி!
    அழகான நல்ல கோணங்களில் எடுக்கப்பட்ட படங்கள்.

    ReplyDelete
  21. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அன்று திருமழபாடியில் நடைபெற்ற குடமுழுக்கு மற்றும் கோயில் விழா பற்றிய செய்திகளை உங்கள் பதிவின் மூலம்தான் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete

  22. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    நன்றி சகோதரரே! இனிமேல்தான் வலையுலகம் பக்கம் நான் பழையபடி வரவேண்டும்.

    ReplyDelete
  23. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // படங்கள் எடுப்பதற்கு முன் சற்று வித்தியாசமான கோணங்கள் என்ற நிலையில் அடுத்து வரும் படங்களில் முயற்சித்துப் பாருங்களேன். //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சாதாரண பிலிம் கேமராவில் வித்தியாசமான படங்களை “விஷுவல்டேஸ்ட்” ஆக எடுத்ததுண்டு. மீண்டும் முயற்சி செய்கிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  24. மறுமொழி > யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    சகோதரர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  25. அருமையான படங்கள். நண்பர் துரை செல்வராஜூ அவர்களின் தளத்திலும் படங்கள், விழா/கோவில் பற்றிய தகவல்கள் படித்து ரசித்தேன்.

    எப்போதாவது செல்ல வேண்டும்! பார்க்கலாம்.

    ReplyDelete