Monday 23 February 2015

ஸ்ரீரங்கம் - வலைப் பதிவர்கள் சந்திப்பு (2015)


சென்ற திங்கட் கிழமை மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K (திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்) செல்போனில், பெங்களூரிலிருது திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் ஸ்ரீரங்கம் வரப்போவதாகவும், வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்று நடைபெறும் என்றும், நாள் இடம் நேரம் பின்னர் தெரிவிப்பதாகவும், அவசியம் வரவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். 

அன்றே மூத்த வலைப்பதிவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களும் என்னோடு தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார். இன்னொரு மூத்த வலைப்பதிவர் திருமதி ருக்குமணி சேஷசாயி அவர்கள் இல்லத்தில் (வடக்கு வாசல் , ஸ்ரீரங்கம்) 22.02.15 ஞாயிறு அன்று சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் சொன்னார். மேலும் V.G.K அவர்கள் “ நான் தங்களிடம் ஃபோனில் இப்போது பேசியபடி மிகச்சரியாக 3.45க்கு மேல் 4 மணிக்குள் என் இல்லத்திற்கு தாங்கள் வந்தால் போதும்.  நம் இருவரையுமே திருமதி. ராதாபாலு அவர்கள், தன் சொந்தக்காரில் அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். என்றும் தெரிவித்து இருந்தார். சொன்னபடி நான் திரு V.G.K அவர்களது இல்லத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றேன். திருமதி. ராதாபாலு அவர்கள் எங்கள் இருவரையும் அவருடைய காரில், பதிவர்கள் சந்திப்பு நிகழும் திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் இல்லம்”விக்னேஷ் அருணோதயா“ (ஸ்ரீரங்கம்) அழைத்துச் சென்றார்கள். பிறகு திரும்பி வரும்போதும் அப்படியே எங்கள் இருவரையும் V.G.K அவர்களது இல்லம் வரை கொண்டுவந்து விட்டார்கள். திருமதி. ராதாபாலு அவர்களுக்கு அநேக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கிய வட்டம்

அங்கே ஒரு நல்லதொரு இலக்கிய வட்ட சந்திப்பு திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களது இல்லத்தில் நடந்தது. அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள்
திருமதி. ரஞ்சனி நாராயணன் மற்றும் அவர் கணவர்
திருமதி. கீதா சாம்பசிவம்
திரு VGK  (வை.கோபாலகிருஷ்ணன்)
ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி
திரு. ரிஷபன்
திருமதி ராதாபாலு  
திருமதி. ஆதி வெங்கட் 
செல்வி. ரோஷ்ணி
தமிழ் இளங்கோ ஆகிய நான்
திரு மௌலி (அஷ்டாவதனி; வலைப்பதிவர் மாதங்கியின் தந்தை)

நூல்கள் அன்பளிப்பு:

இந்த இலக்கிய வட்டத்தில் மூன்று வலைப் பதிவர்கள், தாங்கள் எழுதிய நூல்களை அங்கு வந்திருந்த அனைவருக்கும் அன்புடன்  வழங்கினார்கள்.

திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் தான் எழுதிய “திருக்குறள் கதைகள் என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.


திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் தான் எழுதிய “விவேகானந்தர் மற்றும் “மலாலா ஆயுத எழுத்து ஆகிய நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

ஆரண்யநிவாஸ்  திரு. ராமமூர்த்தி அவர்கள் தான் எழுதிய ஆரண்ய நிவாஸ் என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

கலந்துரையாடல்:

நேற்றைய சந்திப்பினில், எனக்குத் தெரிந்த ஒரே வலைப் பதிவாளர் திரு V.G.K அவர்கள் மட்டுமே. எழுத்தாளர் ரிஷபனும் ஆரண்யநிவாஸ்  ராமமூர்த்தி அவர்களும் அவர்களுக்கே உரிய புன்முறுவலோடு நல்ல நகைச்சுவை கருத்துக்களை தங்களது உரையாடலில் சொல்லி கலகலத்தார்கள். இவர்களோடு ரஞ்சனி நாராயணனின் வீட்டுக்காரரும் சேர்ந்து கொண்டார். திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள தனது இல்லம் வந்த (வலைப் பதிவர்களை) விருந்தினர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகம் பேசாது, செயல்பட்டுக் கொண்டிருந்தார். மற்றைய சகோதரிகளும் எல்லோரும் நன்றாகவே வலையுலகைப் பற்றி அலசினார்கள்.


(படம் மேலே - இடமிருந்து வலம்) நிற்பவர்கள்: தி.தமிழ் இளங்கோ, மௌலி, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, V.G.K., அமர்ந்து இருப்பவர்கள்:அம்மா மடியில் ரோஷ்ணி, ஆதி.வெங்கட், ருக்மணி சேஷசாயி, நாராயணன், ரஞ்சனி, கீதா சாம்பசிவம், ராதாபாலு - (படம் உதவி:(நன்றியுடன்) திரு V.G.K )

பொதுவாகவே சில பெண் பதிவர்கள் வலையுலகம் வந்தும் சமையல்கட்டை விட்டு வெளியே வராமல், சமையல் செய்வதைப் பற்றியே எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாத்தனமாய் ஒரு கருத்தை அங்கே அடியேன் சொல்லி விட்டேன். உடனே, அங்கிருந்த சகோதரிகள் அனைவரும் அந்த கருத்தினை சுடச்சுட வறுத்து எடுத்து விட்டனர்.

அஷ்டாவதனி திரு மௌலி அவர்களின் நிகழ்ச்சிகளை, தனது இல்லத்தில் ஒருநாள் நடத்தப் போவதாகவும், இங்கு வந்திருந்த வலைப்பதிவர்கள் அனைவரும் தமது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் வரவேண்டும் என்றும் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்கள் அழைப்பு விடுத்தார். எனவே இன்னொரு வலைப்பதிவர் சந்திப்பினை திருவானைக்கோவிலில் இந்த ஆண்டே எதிர் பார்க்கலாம்.

கலந்துரையாடலுக்கு பின்னர் திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நல்ல டிபனும் காபியும் கொடுத்து உபசரித்தார். 

எழுத்தாளர் ரிஷபன் தனது புகைப்படம் வலைப்பதிவினில் வருவதை விரும்பாதவர் என்று V.G.K ஏற்கனவே தனது பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தார். மற்றவர்களும் எப்படி என்று எனக்கு தெரியாது. எனவே அவரிடம்  நீங்களே படங்கள் எடுத்து, உங்கள் பதிவினில் வெளியிடுங்கள்  என்று கேட்டுக் கொண்டு இருந்தேன். எனவே நான் அதிகம் படங்கள் ஏதும் எனது கேமராவில் எடுக்கவில்லை. அவரும் ஸ்ரீரங்கத்தில் நடந்த வலைப் பதிவர்கள் சந்திப்பு பற்றி, அழகிய படங்களுடன், அவருக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் தந்துள்ளார். இன்னும் அன்றைய வலைப்பதிவர் சந்திப்பினில் கலந்து கொண்ட மற்றவர்களும் அந்த இனிய நிகழ்வை பதிந்துள்ளனர். அவற்றைப் படிக்க கீழே உள்ள இணைய தளங்களில் (CLICK) சொடுக்கவும்.


பதிவர் மாநாடு ஸ்ரீரங்கத்தில்! (கீதா சாம்பசிவம்)

திருவரங்கத்து குட்டி பதிவர் மாநாடு!!  (ஆதி வெங்கட்)



ஸ்ரீரங்கம் பதிவர் மாநாடு! (ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி)



சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-3 (வை.கோபாலகிருஷ்ணன்)

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-4
(வை.கோபாலகிருஷ்ணன்)

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-5
(வை.கோபாலகிருஷ்ணன்)

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-6
(வை.கோபாலகிருஷ்ணன்)

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! நிறைவுப்பகுதி-7
(வை.கோபாலகிருஷ்ணன்)

 


59 comments:

  1. அன்புக்குரிய சக பதிவர்களை ஒன்றாகக் காணும்போது
    மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

    சந்திப்பு நிகழ்வுகளைத் தாங்கள் கூறிச் சென்ற விதம் அருமை..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    இப்படியான சந்திப்புக்கள் எக்காலத்திலும் மறக்க முடியாது... சந்திப்புஇனிதாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா. இப்படியான சந்திப்புக்கள் நடைபெறும்போது எழுத்தாளர்களை இன்னும் எழுத தூண்டும்... நிகழ்வு அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சக பதிவர்களை சந்தித்தல் என்றும் இனிமையானது தான்! புகைப்படம் மட்டும் சிறியதாய் அமைந்து விட்டது. அதை நீங்கள் சற்று பெரியதாய் வெளியிட்டிருந்தால் அனைவரையும் தெளிவாகப் பார்த்து ரசித்திருக்க முடியும்!

    ReplyDelete
  4. பதிவர்கள் திருச்சியில் ஒரு குட்டி மாநாடு போட்டு கலக்கி விட்டீர்கள் எல்லோர் பதிவையும் பார்த்தேன். . மிகவும் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நண்பர்களைச் சந்திப்பதே மகிழ்ச்சியானதுதான். அதிலும் முகம் தெரியாமலே நட்புக் கொள்ளும் வலைநண்பர்கள் சந்திப்பில் கூடுதல் ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். இந்தச் சந்திப்பை 10,15நாள் முன்னதாகவே திட்டமிட்டுத் தெரிவித்திருந்தால் புதுக்கோடடை மற்றும் தஞ்சை நண்பர்களும் சேர்ந்திருக்கலாமே எனும் ஏமாற்றம்தான் இப்போது எங்களிடம் மிஞ்சியிருக்கிறது.. அதை நீங்கள் எழுதிய விதமும் அழகு..
    “பொதுவாகவே சில பெண் பதிவர்கள் வலையுலகம் வந்தும் சமையல்கட்டை விட்டு வெளியே வராமல், சமையல் செய்வதைப் பற்றியே எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாத்தனமாய் ஒரு கருத்தை அங்கே அடியேன் சொல்லி விட்டேன். உடனே, அங்கிருந்த சகோதரிகள் அனைவரும் அந்த கருத்தினை சுடச்சுட வறுத்து எடுத்து விட்டனர்“ என்று சமையல் பாணியிலேயே படைத்திருப்பது சுவையாகவே உள்ளது. புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பை மீண்டும் புதுக்கோட்டையில் நடத்திடத் திட்டமிடுவோம்..குட்டி வலைப்பதிவர் மாநாட்டு நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி.

    ReplyDelete
  6. என்ன சார் இப்படி ஏமாத்திட்டீங்களே பதிவர் சந்திப்பு என்று ஒன்று இருந்து அதில் நீங்கள் கலந்து இருந்தால் உங்களிடம் இருந்து ஒரு தெளிவான படம் வரும் என்று நினைத்து வந்து ஏமாந்துவிட்டேன். ஒரு வேளை பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீங்கள் நெர்வஸாகி இப்படி எடுத்துவிட்டீர்களா என்ன?

    ReplyDelete
  7. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வணக்கம்.

    தங்களின் இந்தப்பதிவு மிகவும் அருமையாகவும், தெளிவாகவும், பெண்களால் சற்றே வறுத்தெடுத்த நகைச்சுவையுடனும் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. பிறர் .... குறிப்பாக திரு. ரிஷபன் சார் இதுபற்றி பதிவு எழுதியிருக்கிறார் என்பதே தங்களின் இந்தப்பதிவின் வாயிலாகவே என்னால் அறிய முடிந்தது. அதற்கு என் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  9. மிகச்சரியாகத் தாங்கள் குறித்த நேரத்திற்கு என் இல்லத்திற்கு வந்திருந்து, என்னுடன் சேர்ந்தே ஸ்ரீரங்கத்திற்கும் வருகை தந்து, என் கேமரா மூலம் நான் தோன்றும் சில படங்களை எடுத்துக்கொடுத்து உதவியதற்கும், சந்திப்பினில் எல்லோருடனும் கலகலப்புடன் பேசி, நிகழ்ச்சியினை சற்றே விறுவிறுப்பாக ஆக்கி உதவியதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  10. இனியதோர் சந்திப்பு - உங்கள் பதிவில் அனைத்து பதிவர்களின் சந்திப்பு பற்றிய பதிவுகளின் இணைப்பு - அருமை!

    ReplyDelete
  11. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    // அன்புக்குரிய சக பதிவர்களை ஒன்றாகக் காணும்போது
    மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. சந்திப்பு நிகழ்வுகளைத் தாங்கள் கூறிச் சென்ற விதம் அருமை..
    வாழ்க நலம்.. //

    சக பதிவர்களை, அதிலும் நம்முடைய பதிவுகளின் மூலம் அடிக்கடி உரையாடும் பதிவர்களைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியான நேரம்தான். பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  12. மறுமொழி > ரூபன் said...

    // வணக்கம் ஐயா. இப்படியான சந்திப்புக்கள் எக்காலத்திலும் மறக்க முடியாது... சந்திப்புஇனிதாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா. இப்படியான சந்திப்புக்கள் நடைபெறும்போது எழுத்தாளர்களை இன்னும் எழுத தூண்டும்... நிகழ்வு அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம1 //

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். ஆமாம் கவிஞரே. நீங்கள் சொல்வது போல இப்படியான சந்திப்புக்கள் எழுத்தாளர்களை இன்னும் எழுத தூண்டுகின்றன. இந்த ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் மாநாட்டிற்கு அவசியம் வரவும்.

    ReplyDelete
  13. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
    // சக பதிவர்களை சந்தித்தல் என்றும் இனிமையானது தான்! புகைப்படம் மட்டும் சிறியதாய் அமைந்து விட்டது. அதை நீங்கள் சற்று பெரியதாய் வெளியிட்டிருந்தால் அனைவரையும் தெளிவாகப் பார்த்து ரசித்திருக்க முடியும்! //

    இந்த படம் திரு V.G.K அவர்கள் மின்னஞ்சல் வழியே எனக்கு அனுப்பி வைத்த படம். நானும் படத்தில் இருக்கிறேன். படத்தினை எடுத்தது யார் என்று ஞாபகம் இல்லை. எடிட் செய்து பெரிதாகப் போட்டாலும் அப்படியேதான் தெரியும்.

    ReplyDelete
  14. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // பதிவர்கள் திருச்சியில் ஒரு குட்டி மாநாடு போட்டு கலக்கி விட்டீர்கள் எல்லோர் பதிவையும் பார்த்தேன். . மிகவும் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்...//

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  15. மறுமொழி > Muthu Nilavan said..

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எனது வலைத்தளம் வந்து, அன்பான கருத்துரை தந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
    .
    // நண்பர்களைச் சந்திப்பதே மகிழ்ச்சியானதுதான். அதிலும் முகம் தெரியாமலே நட்புக் கொள்ளும் வலைநண்பர்கள் சந்திப்பில் கூடுதல் ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். இந்தச் சந்திப்பை 10,15நாள் முன்னதாகவே திட்டமிட்டுத் தெரிவித்திருந்தால் புதுக்கோடடை மற்றும் தஞ்சை நண்பர்களும் சேர்ந்திருக்கலாமே எனும் ஏமாற்றம்தான் இப்போது எங்களிடம் மிஞ்சியிருக்கிறது.. அதை நீங்கள் எழுதிய விதமும் அழகு..//

    இது திட்டமிட்ட சந்திப்பு இல்லை. மூத்த வலைப்பதிவர் சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்கள் , ஸ்ரீரங்கத்திற்கு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றினுக்கு வரும்போது, திருச்சியிலுள்ள வலைப்பதிவர்களை சந்திக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். திரு V.G.K அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து எல்லோருக்கும் தகவல் தந்தார்.

    புதுக்கோட்டையில் தங்கள் தலைமையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் மாநாடு சிறப்பாக அமைந்திட வேண்டும்.

    ReplyDelete
  16. சகோதரர் மதுரைத் தமிழன் அவர்களுக்கு நன்றி.

    // என்ன சார் இப்படி ஏமாத்திட்டீங்களே பதிவர் சந்திப்பு என்று ஒன்று இருந்து அதில் நீங்கள் கலந்து இருந்தால் உங்களிடம் இருந்து ஒரு தெளிவான படம் வரும் என்று நினைத்து வந்து ஏமாந்துவிட்டேன். //

    இந்த படம் என்னால் எடுக்கப்பட்டது அல்ல. திரு V.G.K அவர்கள் மின்னஞ்சல் வழியே எனக்கு அனுப்பி வைத்த படம். எடிட் செய்து பெரிதாகப் போட்டாலும் அப்படியேதான் தெரியும். இனிமேல் பழையபடி எனது கேமராவை பதிவர் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன்.

    // ஒரு வேளை பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீங்கள் நெர்வஸாகி இப்படி எடுத்துவிட்டீர்களா என்ன? //

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. திரு V.G.K அவர்களுடன் நானும் இந்த படத்தில் இருக்கிறேன். இந்த படத்தினை எடுத்தது யார் என்று ஞாபகம் இல்லை.

    ReplyDelete
  17. நீங்கள் புகைப்படங்கள் எடுக்காதது குறித்து எனக்கு ஆச்சரியம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் அன்றைய கேள்விக்கு இப்போது உதித்த பதில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் கலக்குவார்கள், சமையல் உட்பட! பெண்கள் சமைக்கப் போகலைனா ஆண்கள் பாடும் திண்டாட்டம் தான். சமையல் கலைஞர்களை விடுங்க! மத்தவங்க பாடு? இப்போதும் ஒரு பெண்ணால் அது மனைவியோ, மகளோ, தாயோ, சகோதரியோ யாராக இருந்தாலும் அவர்களால் சமைத்துச் சாப்பிடுவதையே ஆண்கள் உள்ளூர விரும்புவார்கள்; விரும்புகின்றனர் என்பது என் தனிப்பட்ட கருத்து! :))))) எனக்குத் தனிப்பட்ட முறையில் பலரும் சொல்லும் கருத்துக்களை வைத்து எடுக்கப்பட்ட முடிவு இது.

    ReplyDelete
  19. அருமையானதொரு சந்திப்பு ஐயா
    இப்படி ஒவ்வொரு ஊரிலும் சிறு சிறு சந்திப்புகள் நடைபெற்றால்
    வலை பூ உலகம் மேலும் பொலிவு பெறும் என்று எண்ணுகின்றேன்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  20. //எழுத்தாளர் ரிஷபன் தனது புகைப்படம் வலைப்பதிவினில் வருவதை விரும்பாதவர் என்று V.G.K ஏற்கனவே தனது பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தார்.//

    உண்மைதான். எங்கள் சந்திப்பில் எடுத்த படங்களைப் போடமாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளேன்.

    ஆமாம்.... நாங்க சமையலைப்பற்றி மட்டும்தான் எழுதறோமா:-)))

    ReplyDelete
  21. இப்பதான் ரிஷபன் சாருடைய பதிவை படிச்சுட்டு வரேன்.
    அருமையான சந்திப்பு. அழகிய புகைபடங்கள். சுவாரசியமாக எழுதியிருக்கீங்க சார். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  22. ஐயா! அருமையான சந்திப்பு! ஒவ்வொருவரின் வலைத்தளத்தையும் கொடுத்து தெளிவாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்! அசத்திவிட்டீர்கள் ஐயா! சகோதரிகள் வறுத்தெடுத்துவிட்டார்களோ...தங்களை....ஹஹஹஹ்

    ReplyDelete
  23. வலைப்பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து அனைவரையும் ஒருசேர அழைத்து விவாதித்து, பின்னர் அவை தொடர்பான நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. தங்களை அன்று முதல் முறையாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார். அன்றைய மாலைப்பொழுது மனதிற்கு இதமாக இருந்தது. உங்கள் பாணியில் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.

    //இந்த படத்தினை எடுத்தது யார் என்று ஞாபகம் இல்லை.// - இந்த படத்தில் இல்லாத பதிவர் ஒருவரால் எடுக்கப்பட்ட படம் தான் இது.....:)))

    என்னுடைய கேமரா கொண்டு வராததால், செல்போனில் தான் எடுத்தோம். வை.கோ சாரே பகிரட்டும் என்பதால் நான் பகிரவில்லை. தங்கள் பதிவின் இணைப்பையும் என்னுடைய பதிவில் சேர்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  25. பிரபல பதிவர் மாதங்கியின் அப்பா மௌலி.. (இவரே பிரபலமாக்கும்.. அஷ்டாவதானி..)"
    இந்த அறிமுகம் தான், பதிவர்கள் சந்திப்பில் என்னுடைய முகமைக்கு ஒரு அங்கீகாரம் ...மேலும் இந்த சந்திப்பிற்கு வருகை தரும் சில பதிவர்களை நான் அறிவேன் என்றதால் -( மாதங்கி -சென்னை சென்றிருந்ததால்-வர இயலாததால் ) நான் மட்டும் கூட 'ஆர்வத்துடன் ' (?) ஆஜராகிவிட்டேன் !

    மற்றும் பொதுவாகவே ' பதிவர்கள் ' யாவரும் முதற்கண் ஏழுத்தாளர்கள் என்ற காரணத்தினால் அவர்களுடைய உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் ஆர்வத்திற்கு ஒரு முக்கிய காரணம் ; நான் சிறிதும் ஏமாறவில்லை !

    புகைப்பட session -க்கு பிறகு சில பதிவர்களின் சுய அறிமுகம் அதன் பிறகு திருமிகு.ருக்மணி சேஷசயீ அவர்களின் அன்பான உபசரிப்போடு , மிகவும் ருசியாான
    இட்லி-சட்னி,சாம்பார் ...ஆஹா நல்ல புஷ்டியான ஞாயிறு மாலை பொழுது ..இந்த வாய்ப்புக்காக எல்லா பதிவர்களுக்கும் நன்றி..நன்றி ..
    மாலி.

    ReplyDelete
  26. சந்திப்புகள் மகிழ்வூட்டும்
    மகிழ்வூட்டும் பதிவர்கள் சந்திக்கையில்
    சந்திப்புகள் பயன்தருமே!

    ReplyDelete
  27. திரு. மாலியை சந்தித்திருக்கிறேன். மனுஷன் அவர் திறமையைப் பற்றி ”மூச்” இந்தப் பதிவர் சந்திப்பு பற்றி பல வலைத் தளங்களிலும் படித்து வருகிறேன். எந்த வலைத் தளங்களென்று நீங்கள் குறிப்பிட்டுஇருப்பது உங்கள் பாணி.

    ReplyDelete
  28. சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  29. அனைவருக்கும் எமது வாழ்த்துகள் நண்பரே.....
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  30. பதிவு அருமை....
    காமிரா கண் ப்ளஸ் எழுத்தாளர் கை அல்லவா!

    ReplyDelete
  31. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, 3)

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நமது திருச்சியில் இத்தனை வலைப்பதிவர்களா? (இன்னும் இருப்பார்கள்) அத்தனை பேரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பினை எனக்குத் தந்த தங்களுக்கும் தங்களின் அன்பான கருத்துரைகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி

    // இனியதோர் சந்திப்பு - உங்கள் பதிவில் அனைத்து பதிவர்களின் சந்திப்பு பற்றிய பதிவுகளின் இணைப்பு - அருமை! //

    அன்றைய பதிவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உங்கள் மகள் ரோஷ்ணிக்கு இருக்கும் போட்டோக்கலை ஆர்வத்தை நேரிலேயே பார்த்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    கருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    // நீங்கள் புகைப்படங்கள் எடுக்காதது குறித்து எனக்கு ஆச்சரியம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... //

    அன்றையதினம் படம் ஏதும் நான் எடுக்காதது குறித்து எனக்குள் வருத்தம்தான். இந்த பதிவர் சந்திப்பில் நான் படம் ஏதும் எடுக்காததற்கான காரணத்தை இந்த பதிவின் இறுதியில் சொல்லி இருக்கிறேன்.

    ReplyDelete
  34. மறுமொழி > Geetha Sambasivam said...

    // அருமையாக எழுதி இருக்கிறீர்கள். //

    சகோதரி அவர்களது பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // உங்கள் அன்றைய கேள்விக்கு இப்போது உதித்த பதில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் கலக்குவார்கள், சமையல் உட்பட! பெண்கள் சமைக்கப் போகலைனா ஆண்கள் பாடும் திண்டாட்டம் தான். சமையல் கலைஞர்களை விடுங்க! மத்தவங்க பாடு? இப்போதும் ஒரு பெண்ணால் அது மனைவியோ, மகளோ, தாயோ, சகோதரியோ யாராக இருந்தாலும் அவர்களால் சமைத்துச் சாப்பிடுவதையே ஆண்கள் உள்ளூர விரும்புவார்கள்; விரும்புகின்றனர் என்பது என் தனிப்பட்ட கருத்து! :))))) எனக்குத் தனிப்பட்ட முறையில் பலரும் சொல்லும் கருத்துக்களை வைத்து எடுக்கப்பட்ட முடிவு இது. //

    கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று. உங்கள் கருத்தினை சிரம் சாய்த்து அப்படியே ஏற்றுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  35. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // இப்படி ஒவ்வொரு ஊரிலும் சிறு சிறு சந்திப்புகள் நடைபெற்றால் வலை பூ உலகம் மேலும் பொலிவு பெறும் என்று எண்ணுகின்றேன்//

    நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. இது போன்ற சிறு சிறு கலந்துரையாடல் சந்திப்புகள் சென்னை, கோவை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அவ்வப்போது நடைபெறுகின்றன. உங்கள் தஞ்சையிலும் நடைபெற வேண்டும் என்பது எனது ஆசை.

    ReplyDelete
  36. மறுமொழி > துளசி கோபால் said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ( //எழுத்தாளர் ரிஷபன் தனது புகைப்படம் வலைப்பதிவினில் வருவதை விரும்பாதவர் என்று V.G.K ஏற்கனவே தனது பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தார்.// - - உண்மைதான். எங்கள் சந்திப்பில் எடுத்த படங்களைப் போடமாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளேன். )

    அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் V.G.K அய்யாவை மட்டும்தான் தெரியும். ரிஷபன் போன்று மற்றவர்களும் போட்டோ எடுத்தால் என்ன நினைப்பார்களோ என்ற பயம். எனவே அன்றைய சந்திப்பினில் நான் எனது கேமராவில் புகைப்படம் எடுக்காததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனாலும், V.G.K அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருக்கு உதவியாக, அவரது கேமராவில் படம் எடுத்துக் கொடுத்தேன்.

    // ஆமாம்.... நாங்க சமையலைப்பற்றி மட்டும்தான் எழுதறோமா:-))) //

    அய்யோ! நீங்களும் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். சில பெண் பதிவர்கள் என்றுதான் குறிப்பிட்டேன். எல்லோரையும் அல்ல. அவர்கள் சமையலை மட்டும் அல்லாது, மற்ற தலைப்புகளிலும் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

    ReplyDelete
  37. மறுமொழி > RAMVI said...

    // இப்பதான் ரிஷபன் சாருடைய பதிவை படிச்சுட்டு வரேன்.
    அருமையான சந்திப்பு. அழகிய புகைபடங்கள். சுவாரசியமாக எழுதியிருக்கீங்க சார். நன்றி பகிர்வுக்கு. //

    சகோதரி மதுரகவி – RAMVI அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  38. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  39. மறுமொழி > Dr B Jambulingam said...

    முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இதுபோல் தஞ்சையிலும் வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற வேண்டும்.

    ReplyDelete
  40. மறுமொழி > ADHI VENKAT said...

    சகோதரி அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி. நானும் VGK அவர்களே இந்த சந்திப்பு பற்றி புகைப் படங்களுடன் எழுதினால்தான் சிறப்பு என்பதால் எனது கேமராவில் படம் எடுக்கவில்லை.

    ReplyDelete
  41. மறுமொழி > V Mawley said...

    திரு.மௌலி அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். உங்களை அன்றைய தினம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்து உங்களது அஷ்டாவதனம் நடைபெறப் போகும் நாளையும், இடத்தையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete

  42. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  43. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete

  44. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said..

    சகோதரருக்கு நன்றி.
    .

    ReplyDelete
  45. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    அன்பு நண்பருக்கு நன்றி. இன்று திருவையாறு பக்கம் உள்ள உறவினர் வீட்டில் ஒரு நிகழ்ச்சி. சென்று வந்ததும் உங்கள் வலைப் பக்கம் வருகிறேன்.

    ReplyDelete
  46. மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    ஆரண்ய நிவாஸ் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  47. பதிவர் சந்திப்பை அழகாய் தந்து விட்டீர்கள்.
    படங்கள் நன்றாக இருக்கிறது. ரிஷபன் சார் எடுத்ததாய் வை,கோ சார் குறிப்பிட்டு இருந்தார். பதிவர் சந்திப்பை பதிவாக்கியவர்கள் லிங் கொடுத்தது நல்ல செயல்.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. மூன்று நாட்களாக வேலைப்பளு காரணமாக தங்களது பதிவை பார்க்கவில்லை. திருச்சியில் ஒரு சிறிய ‘பதிவர் சந்திப்பு’ நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  49. அனைத்து பதிவர்களும் சந்தித்தது இனிமையாய் இருந்து இருக்கும்.
    பதிவர்களின் பதிவுகளையும் இணைத்தது அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. அறிமுகம் இல்லாத பதிவர்களாகிய நம்முடைய சந்திப்பை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். நினைக்கும்போதே இனிக்கும் அன்றைய மாலைப் பொழுது என்றும் மறக்காது.

    ReplyDelete
  51. வணக்கம் இளங்கோ ஸார்.
    ஒரு வாரம் ஆகியும் இன்னும் நான் அந்த சந்திப்பின் நினைவிலேயே இருக்கிறேன். தாமதமாக வருகை தருவதற்கு மன்னிக்கவும்.

    எழுத்துக்கள் மூலம் மட்டுமே சந்தித்து வந்த நாம் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து, நீங்கள் எனது அழைப்பை ஏற்று வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றி. மறுபடியும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டியது இந்த சந்திப்பு.

    ReplyDelete
  52. பதிவர்கள் சந்திப்பு படிக்க சுவையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  53. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete

  54. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி. சிலசமயம் வெளியூர்ப் பயணம், வேலைப்பளு காரணமாக வலைப்பக்கம் வருவது, கருத்துரை எழுதுவது போன்றவை தாமதம் ஆகிவிடுகின்றன.

    ReplyDelete
  55. மறுமொழி > R.Umayal Gayathri said... ( 1 , 2 )

    சகோதரி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  56. மறுமொழி > Radha Balu said...

    சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  57. மறுமொழி > Ranjani Narayanan said...

    // வணக்கம் இளங்கோ ஸார். ஒரு வாரம் ஆகியும் இன்னும் நான் அந்த சந்திப்பின் நினைவிலேயே இருக்கிறேன். தாமதமாக வருகை தருவதற்கு மன்னிக்கவும். //

    சகோதரி அவர்களுக்கு வணக்கம். வெளியூர்ப் பயணம், முதுகு வலி மற்றும் வேலைப்பளு காரணமாக நானும் சில நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை.

    // எழுத்துக்கள் மூலம் மட்டுமே சந்தித்து வந்த நாம் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து, நீங்கள் எனது அழைப்பை ஏற்று வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றி. மறுபடியும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டியது இந்த சந்திப்பு.//

    ஸ்ரீரங்கத்தில் அன்று நடந்த வலைப் பதிவர்கள் சந்திப்பு என்றும் மகிழ்வைத் தரும் நீங்காத நினைவுகள்.

    ReplyDelete
  58. மறுமொழி > கே. பி. ஜனா... said...

    எழுத்தாளர் கே. பி. ஜனா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete