தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ள திருவையாறு மற்றும் அதன் பக்கம் உள்ள சிவத் தலங்களையெல்லாம் பாடிவிட்டு இரவு திருவாலம்பொழில் என்ற தலத்தில் தங்குகிறார். அப்போது அவர் கனவில் தோன்றிய சிவன் “மழபாடியை மறந்தனையோ” என்று வினவ, மறுநாள் காலை, சுந்தரர் ”உன்னை அல்லால் வேறு யாரை நினைக்கேன்” என்று திருமழபாடி சென்று பாடித் துதித்தார்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
- சுந்தரர் ( தேவாரம் )
மேலே சொன்ன புகழ் பெற்ற தேவாரம் பாடப் பெற்ற திருமழபாடி எனது சொந்த ஊர்.(அதாவது அப்பா ஊர்).இதுஅப்போதைய பிரிக்கப்படாத திருச்சி மாவட்டத்தில், இப்போது அரியலூர்மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் உள்ளது. இதன தென்கரையில் வைத்தியனாதன் பேட்டை என்ற ஊர். இது திருவையாறு பக்கம். நாங்கள் விவசாயக் குடும்பம். அப்பா ரெயில்வேயில் வேலை பார்த்தது, நாங்கள் குடும்பத்தோடு வசித்தது, நான் படித்தது எல்லாமே திருச்சியில்தான். அப்பாய், தாத்தா ( அப்பாவின் பெற்றோர் ) இருந்தவரை பள்ளி மாணவனாக இருந்த சமயம் சொந்த ஊரான திருமழபாடி அடிக்கடி செல்வேன். இப்போது ஏதாவது காரியம் இருந்தால் மட்டும் சென்று வருவேன். ஊர்ப் பெயரையும் சேர்த்துதான் எனது தந்தை தனது பெயரை எழுதுவார்.
கொள்ளிடம் என்று ஆறு அழைக்கப் பட்டாலும் அதன் பெயர் இலக்கியங்களில் காவிரிதான். கொள்ளிடத்திற்கே உரிய தெளிந்த ஊற்று நீர் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். அதில் குதித்து விளையாடிய நாட்கள் பசுமையானவை. மேலும் மழைக் காலங்களிலும், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களிலும், திருமழபாடிக்கும் எதிரில் உள்ள வைத்தியனாதன் பேட்டைக்கும் பரிசல் விடுவார்கள். பரிசலில் செல்லும்போது யாரையும் நிற்க விடமாட்டார்கள். மற்ற நாட்களில் ஆற்றை நடந்துதான் கடக்க வேண்டும். அப்போதுஆற்றில் முதலைகள் கிடையாது. வைத்தியனாதன் பேட்டையில் கோரைப்பாய் பின்னும் தொழில் அன்று சிறப்பாக இருந்தது. திருமழபாடியில் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான் நெல், கரும்பு சாகுபடி அதிகம். அப்போதெல்லாம் ஊரில் மூலைக்கு மூலை வெல்லம் காய்ச்சும் தொழில் நடந்தது. ஊர் முழுக்க வெல்லப் பாகு மணம்தான். இப்போது சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பைத் தந்து விடுகிறார்கள்.
அப்போது திருச்சியிலிருந்து திருமழபாடிக்கு டி.வி.எஸ் பஸ்தான். கண்டக்டர்கள் ரொம்ப கண்டிப்பு. நிர்வாகம் அரசு ஆணைப்படி எத்தனை பேருக்கு பஸ்ஸில் அனுமதி சொல்லி இருக்கிறதோ அத்தனை பேரைத் தான் எண்ணி ஏற்றிக் கொள்வார்கள். ஸ்டாண்டிங் எல்லாம் கிடையாது. பேருந்து நிறுத்த இடத்தில் மட்டும்தான் பஸ்ஸை நிறுத்துவார்கள். இப்போது “ பாரப்பா பழனியப்பா.... காரு வண்டி பறக்குதப்பா ” என்று நிறைய வாகனங்கள்.
மழவர்கள் எனப்பட்டோர் பாடி வீடு அமைத்து தங்கி இருந்த படியினால் மழபாடி என்று பெயர். சிவனின் திருத்தலம் உள்ள ஊர் ஆனபடியினால் திருமழபாடி என்று ஆனது. சத்ரபதி சிவாஜி தஞ்சைக்கு செல்லும் போது ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், திருமழபாடி கோயிலில் தங்கியிருந்தார். வெள்ளம் வடிந்த பின்னர்தான் சென்றார். தஞ்சையை ஆண்ட ஏகோஜி ( சிவாஜியின் தம்பி) என்னும் மராட்டிய தளபதி திருமழபாடியில் முகாமிட்டு இருந்தபோது அவரது மனைவி பெற்றெடுத்த குழந்தைதான் சரபோஜி. ( பின்னாளில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் )
தேவாரம் பாடிய மூவரும் பாடிய சைவத் திருத்தலம் திருமழபாடி. நந்தீஸ்வரர் கல்யாணம், மாசி மகம் தேரோட்டம் இரண்டும் முக்கியமான திருவிழாக்கள். நந்தீஸ்வரர் கல்யாணத்தன்று இரவு நேரம் கோயிலுக்கு எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றின் மணல் வெளியில் திடீர்க் கடைகள் தோன்றி பெட்ரோமாக்ஸ் விளக்குகள், தீப்பந்த விளக்குகள், கோயில் வாசலில் மின்சார விளக்குகள் முதலான வெளிச்சத்தில் மக்கள் கூட்டத்தின் இரைச்சலில் வியாபாரம் நடக்கும். சிலப்பதிகாரம் சொன்ன இந்திர விழாதான் எனக்கு ஞாபகம் வரும். அன்றைய நாட்களில் ஊரே விழாக்கோலம் பூண்டு மகிழ்ச்சியாக இருக்கும். அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து மக்கள் அதிகம் வருவார்கள்.
திருச்சி, பெரம்பலூர் வழியாக வருபவர்கள் லால்குடி, புள்ளம்பாடி வழியாக
திருமழபாடியை வந்தடையலாம். அரியலூர் வழியாகவும், திருவையாறு வழியாக வருபவர்கள் திருமானூர் வந்தும் திருமழபாடி வரலாம்.
சொந்த ஊர் என்ற முறையில் திருமழபாடியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இது போதும். விரிப்பின் பெருகும். வரலாறு , மற்றும் கோயில் பற்றி தனியே ஒரு பதிவு போட வேண்டும். அவ்வளவு செய்திகள். நானும் எனது ஊரும் ( தொடர் பதிவு) என்ற தலைப்பில் சகோதரி தென்றல் சசிகலா அவர்கள் // அனைவருக்கும் தனது சொந்த ஊரைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். அதற்காகவே நான் இப்போது தொடர் பதிவு சார்பாக அழைக்கிறேன். // என்று அழைத்து இருந்தார்கள். அதன் தொடர்ச்சியே இந்த பதிவு. அவர்களுக்கு எனது நன்றி. புகைப் படங்கள் எடுப்பதற்காக நேற்று ( 01.03.2012 ) காலை திருமழபாடி சென்று வந்தேன். படங்கள் Canon Power Shot A800 கேமராவால் எடுக்கப் பட்டவை.
இன்னின்னார்கள் தான் என்றில்லாமல், வலைப் பதிவு திரட்டிகளில் அடிக்கடி வந்து போகும், அனைத்து வலைப் பதிவர்களையும் அவரவர் ஊரைப் பற்றி எழுதுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
.
நல்ல இசையைக் கேட்டால் ஏற்படும் மகிழ்வு உங்களின் சொந்த ஊர்ப் பதிவைப் படித்ததில் கிடைத்தது இளங்கோ. அருமை. சுந்தரர் பாடிய தேவாரப் பாடல் தெரியும் என்றாலும் உங்கள் ஊரோடு சம்பந்தப்பட்டதை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. அனைவரையும் அவரவர் ஊரைப் பற்றி எழுத அழைத்த உங்கள் ஐடியா அபாரம்!
ReplyDeleteReply to கணேஷ் said...
ReplyDeleteவணக்கம்! எழுத்துலக அனுபவம் உள்ள மின்னல் வரிகள் கணேஷ் அவர்களே, நீங்களும் உங்கள் ஊரைப் பற்றி எழுதவும். தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
படங்களுடன் விரிவாக ஊர் பற்றிய தங்கள் பதிவு
ReplyDeleteமிக மிக அருமை.
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Reply to // Ramani said...//
ReplyDeleteகவிஞர் ரமணி அவர்களுக்கு வணக்கம்! நீங்களும் உங்கள் ஊரைப் பற்றி கவிதை ஓவியம் ஒன்று தீட்ட வேண்டும். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
தி.த.இளங்கோ,
ReplyDeleteவணக்கம்,
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வருமா? ஊர் வரலாற்றை ,நினைவுகளை அருமையாக தொகுத்து எழுதி இருக்கீங்க.மேலும் பதிவுக்காகவே ஊருக்கு சென்று புகைப்படங்களை எடுத்தது எதையும் சிரத்தையுடன் செய்ய நினைக்கும் பண்பினைக்காட்டுகிறது. படங்களும் தொழில்முறை புகைப்படங்களுக்கு நிகராக நன்றாக உள்ளது.
Reply to //...வவ்வால் said... //
ReplyDeleteவவ்வால் அவர்களுக்கு வணக்கம்! ஆரம்ப காலத்தில் நான் வலைப் பதிவை தொடங்கிய நேரம், ஹிட்ஸ்களைப் பற்றிக் கவலைப் படாமல் என்னை எழுத உற்சாகப் படுத்தியவர் நீங்கள். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
ஒவ்வொரு படமும் ஊரின் அழகை சொல்லி சொல்லி அனைவரையும் உங்கள் ஊருக்கு அழைக்கும் விதம் அருமையான பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி .
ReplyDeleteமழபாடி பற்றி அறிந்து கொண்டேன்.சிறப்பான படங்கள்.நன்றி.
ReplyDeleteReply to //...சசிகலா said... //
ReplyDeleteவணக்கம்! இந்த கட்டுரை எழுதுவதற்குக் காரணமான சகோதரி கவிஞர் சசிகலா ( தென்றல் ) அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Reply to //....சென்னை பித்தன் said..//
ReplyDeleteவணக்கம்! மூத்த வலைப் பதிவாளர் சென்னை பித்தன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!
இந்தப் பாடல் சிறு வயதில் பல நாள் பாடும் பாடல். மழபாடியுள் மாணிக்கமே என்பதை அப்போது புரிந்து கொள்ளாததை இப்போது திரு மழபாடி என்று தெரிந்ததும் சிலிர்க்கிறது. நல்ல புண்ணிய தளத்தை சொந்த ஊராகக் கொண்டுள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள். என் ஊர் நாகர்கோவில்.
ReplyDeleteஎன்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்திருக்கிற சுய முன்னேற்றத் தொடர் இது.
'அன்புடன் ஒரு நிமிடம்'
முதல் பகுதி.
'எண்ணிச் சிந்திடுவோம்...'
அன்புடன் தாங்கள் சொல்லும் அபிப்பிராயம் அறிந்தால் மகிழ்வேன். அதற்கு என் நன்றி!
http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html
Reply to //…கே. பி. ஜனா... said...//
ReplyDeleteஎழுத்தாளர் கே. பி. ஜனா அவர்களுக்கு வணக்கம்! உங்களையும் என்னையும் இணைத்த சுந்தரர் தேவாரத்திற்கு நன்றி! பழம் பெருமை மிக்க உங்கள் நாகர்கோயிலைப் பற்றி நீங்களும் வலையில் எழுதலாம். விரைவில் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அருமையான ஊரைப்பற்றி மலர்ந்த நினைவுகள் மகிழ்ச்சிதந்தன்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteReply to…. // இராஜராஜேஸ்வரி said...//
ReplyDeleteவணக்கம்! சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Tha.ma1
ReplyDeleteஐயா, வணக்கம். திருமழபாடியா தங்கள் ஊர். மிக்க மகிழ்ச்சி. நந்திக்கு கல்யாணம் பிரபலமாக ஆண்டுதோறும் நடைபெறும் என்று கேள்விப் பட்டுள்ளேன்.
ReplyDeleteமழபாடி ராஜாராம் என்ற புனைப்பெயர் கொண்ட உங்கள் ஊரைச்சேர்ந்த மூத்த எழுத்தாளர் ஒருவர் உள்ளார்.
தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் தற்சமயம் வசிப்பது திருச்சி டவுன் வடக்கு ஆண்டார் தெருவினில்.
அவரைப்பற்றியும், அவர் எழுதி வெளியிட்ட ஒரே சிறுகதைத் தொகுப்பு நூலான “இமயங்கள் சரிவதில்லை” என்பது பற்றியும் என் பதிவு ஒன்றில் கூட நான் வெளியிட்டுள்ளேன்.
அதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html
திருமழபாடி பற்றிய தங்களின் இந்தப்பதிவு அருமை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
//இன்னின்னார்கள் தான் என்றில்லாமல், வலைப் பதிவு திரட்டிகளில் அடிக்கடி வந்து போகும், அனைத்து வலைப் பதிவர்களையும் அவரவர் ஊரைப் பற்றி எழுதுமாறு அன்புடன் அழைக்கிறேன்.//
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
நம் ஊராம் திருச்சியைப்பற்றி மேலே உள்ள இணைப்பில் நான் ஏதோ எழுதியுள்ளேன்.
முடிந்தால் பார்வையிடுங்கள் ஐயா.
தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
ஐயா நான் திருமழபாடியை சேர்ந்தவன் . நமது ஊர் மக்களை ஒன்றிணைக்கும் பொருட்டு முக நூலில் " திருமழபாடி என்ற முகவரியில் இணையலாமே
ReplyDeletehttp://www.facebook.com/mazhavaifoundation.thirumazhapadi?fref=ts
ReplyDeleteமறுமொழி> tamilcomputer said... (1, 2 )
ReplyDelete//ஐயா நான் திருமழபாடியை சேர்ந்தவன் . நமது ஊர் மக்களை ஒன்றிணைக்கும் பொருட்டு முக நூலில் " திருமழபாடி என்ற முகவரியில் இணையலாமே //
நீங்களும் எனது ஊர் என்பதில் மிக்க மகிழ்ச்சி! சில காரணங்களை முன்னிட்டு FACE BOOK இல் இருந்த எனது கணக்கை ஏற்கனவே முடித்து விட்டேன். தங்கள் அன்பிற்கு நன்றி!
திருமழபாடி அழகிய வர்ணனைகளுடன் எங்கள் மனதில் குடி கொண்டுள்ளது.
ReplyDeleteஅன்றைய கால இனிய காட்சிகள் உங்கள் விபரிப்பின் ஊடே படிக்கும்போது கண்முன் விரிந்து சென்றன.
அருமையான பகிர்வு.
மறுமொழி > மாதேவி said...
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் கருத்துரை சொன்னமைக்கும் நன்றி!