Friday, 9 May 2014

பாலகுமாரன் எழுதிய வாழ்க்கை வரலாறுகள்புராணக் கதைகளை அப்படியே மூலத்தோடு படிப்பது  அல்லது அவைகளின் தமிழாக்கத்தை படிப்பது என்று நாம் படிக்கலாம். அந்த காலத்து வாய்மொழியாகக் கேட்ட கண்ணகியின் கதையை  சிலப்பதிகாரம்என்ற பெயரில் பாட்டுடைச் செய்யுளாக தந்தார் இளங்கோ அடிகள். ராம அவதாரத்தை காப்பியமாகத் தந்தான் கவிச் சக்கரவர்த்தி கம்பன். ”வெண்பாவிற்கு புகழேந்திஎன்று புகழப்பட்டவர்நள வெண்பாஇயற்றினார். அந்த காலத்து மக்களுக்கு அவர்கள் காலத்திய பாடல்கள் வடிவிலேயே தந்தனர்.

சினிமாவின் ஆதிக்கம் வந்தபோது புராணக் கதைகளை ரசிகர்களுக்குத் தகுந்தாற் போல திரைக் கதை வசனம் என்று அமைத்தார்கள்இதில் .பி. நாகராஜன் தந்த திரைக் காவியங்களான திருவிளையாடல், திருவருட் செல்வர், திருமால் பெருமை, சரஸ்வதி சபதம் ,ராஜராஜ சோழன் போன்றவற்றை உதாரணமாகச்  சொல்லலாம்.

எழுத்துச் சித்தர் எனப்படும் பாலகுமாரன் அவர்கள் சிலருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் படைத்துள்ளார். அவ்வையார், பட்டினத்தார், மாணிக்கவாசகர் போன்றவர்களது வாழ்க்கை வரலாற்றினை நாவலாக வடித்துள்ளார். அந்தக் கதைகள் அனைத்திலும் வரும் காட்சிகளைச் சொல்லும் விதம், உரையாடல்கள், தத்துவங்கள் நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன.

முதிர் கன்னி:

இந்த நூலில் அவ்வையார், விதுரர் பற்றிய கதைகள் நாவல் வடிவில் சொல்லப்பட்டுள்ளன.

முதல்கதைமுதிர்கன்னி”. இது முழுக்க முழுக்க அவ்வையார் பற்றியது. அவ்வையார் ஒருவரா அல்லது அந்த பெயரில் பலரா என்பது ஆராய்ச்சிக்குரியது. எழுத்தாளர் பாலகுமாரன் அவ்வையார் பற்றிய கதைகளை ஒருங்கிணைத்து ஒருவராகவே வரலாறு படைத்துள்ளார். சின்ன வயதில் நாம் கேட்ட அவ்வையார் கதைகளை இங்கு காணலாம். இளமையான அவ்வை விநாயகரின் அருளால் எவ்வாறு முதுமையான அவ்வையாராக மாறினார் என்று ஒரு கதை.

படிக்காத முட்டாளை காதலித்த பெண் வேறு ஒருவனின் வஞ்சகத்தால் காதலனை இழந்து வாழ்க்கையில் விரக்தியுற்று தூக்கிட்டுச் சாகிறாள். பின் பேயாய் உருவெடுத்து அவ்வூர் மக்களுக்கு தொல்லை தருகிறாள். அவ்வை அந்த பேய்க்கு அறிவுரை தந்து அப்புறப்படுத்துகிறார்.


           வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை

           கண்பார்க்கக் கையால் எழுதானைப் பெண்பாவி

           பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே

           எற்றோமற் றெற்றோமற் றெற்று.

இந்த கதையை தனது எளியநடையில் ஒரு சம்பவமாகச் சொல்லுகிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவருக்கும் அவ்வையார் மணமுடித்து வைக்கிறார். இதனையும் சுவையாச் சொல்லுகிறார்.


           பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
          
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
          
துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு
          
சங்கத் தமிழ் மூன்றும் தா
 

என்பது அவ்வையார் பாடல். இது போன்ற எளிமையான பாடல்களை கதை முழுக்க காணலாம்.

இரண்டாவது கதைகடவுள் வீடு”. இங்கு மகாபாரதத்தில் வரும் விதுரரின் கதை. “ எமனின் இருவேறு சக்திகள் விதுரராகவும், தர்ம புத்திரராகவும் பூமிக்கு வந்தனஎன்று கதையை சொல்லுகிறார் பாலகுமாரன். வியாசரின் அருளால் தாதிப் பெண் ஒருத்திக்கு மகனாகப் பிறந்தவர் விதுரர். கதையின் இடையே நீதிகள் சுவையாகச் சொல்லப் படுகின்றன.

இறப்பு என்று ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக இருக்கிறபோது இங்கார் பெருமை கொள்வதற்கு எதுவும் இல்லை” (பக்கம் 197)

என் வேலை நீதி சொல்வது. எந்த தவறு நடந்தாலும் வாய் திறந்து கண்டிப்பது. ஒழுக்கம் எது என்பதை திரும்ப மனிதனுக்கு சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். (பக்கம் 202)

கடவுள் தோன்றி விட்டார் என்பதன் அறிகுறி என்ன என்பதனை ஓரிடத்தில் சொல்லுகிறார். (பக்கம் 205)

கடவுள் ஏன் கடவுளாக வராது மனிதனாக வருகிறார்? என்பதற்கு விடை தருகிறார் (பக்கம் 210)


பேய்க் கரும்பு:

இந்த நூலிலும் இரண்டு கதைகள் பேசப்படுகின்றன. ”பேய்க் கரும்புஎன்ற தலைப்பில் பட்டினத்தார் மற்றும் விப்பரநாராயணர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள் சொல்லப் படுகின்றன.

பூம்புகாரில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றி பட்டினப்பாலை. சிலப்பதிகாரம், மற்றும் மணிமேகலை போன்ற இலக்கியங்கள் சொல்லுகின்றன. எழுத்தாளர் பாலகுமாரன் தனது நடையில் திருவெண்காடர் செய்த வியாபாரத்தைச் சொல்லுகிறார். அவருக்கு இறைவன் தந்த மகனாக வந்த மருதவாணன் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே  என்று அறிவுறுத்தி மறையபட்டினத்தார் என்ற துறவியாக மாறுகிறார். எழுத்தாளர் பாலகுமாரன் இந்த வரலாற்றினை அப்படியே ஒரு கதையாகச் சொல்லுகிறார்..

இடையிடையே பட்டினத்தார் பாடல்களை வைத்து தான் உணர்ந்த மெய்ஞானம் பற்றி சொல்லுகிறார். இவற்றை எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் தத்துவங்களாகவே கொள்ளலாம்.

பட்டினத்தார் வாழ்க்கையில் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வாக்கியம்தான் அவரைத் துறவியாக்கியது. அந்த வாக்கியத்திற்கு விளக்கம் தருகிறார். (பக்கங்கள் 118 121)

நாம் உயிரோடு இருப்போம் என்கிற போதுதான் கோபமும் ஆத்திரமும் போட்டியும் பொறாமையும். செத்துப் போய் விடுவோம் என்கிறபோது , உள்ளுக்குள் சட்டென்று ஒரு அமைதி வந்து விடுகிறது.” (பக்கம் 120)

பட்டினத்தாரைப் பற்றி சொல்லும்போது  கோயில் கோயிலாக சுற்றினாலும் கோயிலுக்குள் உள்ள ஈசனை நோக்கிப் பாடினாலும், பட்டினத்தாரின் கடவுள் கொள்கை வேறுவிதமாக இருந்தது. ஆகம விதிகளும், சாஸ்திர சம்பிரதாயங்களும் வெறும் சடங்குகளும் இறைவனைக் காட்டாது என்பதை அவர் மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னார் என்று கூறுகிறார் எழுத்தாளர் பாலகுமாரன் (பக்கம் 137)

மற்றொன்றுபொன்வட்டில்என்ற கதை. பெண்ணின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காதவர் விப்பரநாராயணர் அந்த பிரம்மச்சாரி ஒரு பெண்ணுக்கு அடிமையாகி அரங்கனை மறந்த  கதையை ஒரு குறுங் கதையாகச் சொல்லி இருக்கிறார். பிரம்மச்சரியம் என்றால் என்ன? காமம் என்றால் என்ன? அது எப்படி மனிதனை அலை கழிக்கிறது என்பதையும் (பக்கம் 243 244) பாலகுமாரன் விளக்குகிறார்.

இந்த கதையின் இடையே கமலக் கண்ணன் பூங்குழலி என்ற ஜோடியின் கதையையும் சுவையாகக் கொண்டு செல்கிறார்.

இந்த விப்பர நாராயணர்தான் தொண்டர்களுடைய அடிப்பொடியை  நெற்றியில் வைத்து தொண்டரடிப் பொடியாழ்வார் எனப் பெயர் பெற்றவர்.


குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கிக்

கடல்நிறக்கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு

உடல் எனக்கு உருகுமாலோ!  என் செய்கேன் உலகத்தீரே!


( இது போன்று இன்னும் பல நாவல்களை படைத்துள்ளார் எழுத்துச் சித்தர் எனப்படும் பாலகுமாரன் அவர்கள் )

(PICTURES THANKS TO “GOOGLE”)
34 comments:

 1. தெளிவாக எடுத்துச் சொல்லியும் ம்ஹீம்...

  விமர்சனம் அருமை... சித்தர் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 2. // “ நாம் உயிரோடு இருப்போம் என்கிற போதுதான் கோபமும் ஆத்திரமும் போட்டியும் பொறாமையும். செத்துப் போய் விடுவோம் என்கிறபோது , உள்ளுக்குள் சட்டென்று ஒரு அமைதி வந்து விடுகிறது.” //

  அடுத்த நிமிடத்தினை நினப்பதனால் தான் - இத்தனை அவலங்களும்!..

  வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
  செத்தாரைப் போலத் திரி..

  என்பது பட்டினத்தடிகளின் திருவாக்கு. இதைப் படித்து மனதின் உள்வாங்கியபோது என் வயது பதினெட்டு. இன்று வரை நிலை தடுமாறாத வாழ்வு.

  சிந்தனையைத் தூண்டி விடும் எழுத்துச் சித்தரைப் பற்றிய - நல்லதொரு பதிவு..

  அனைத்தும் குருநாதர் திருவருள்.. வாழ்க நலம்..

  ReplyDelete
 3. what/why is the meaning of குடதிசை & குணதிசை

  ReplyDelete
 4. நல்ல பதிவு. ஆரம்ப காலங்களில் இவரது பல புத்தகங்களை படித்ததுண்டு. இப்போது சில காலமாக படிக்கவில்லை. நீங்கள் சொன்ன இந்த இரண்டு புத்தகங்களும் படித்ததில்லை. படிக்க முயல்கிறேன்.

  ReplyDelete
 5. எழுத்துச் சித்தர் எனப்படும் பாலகுமாரன் அவர்கள்
  படைப்புகளை அருமையாக விமர்சித்ததற்கு பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 6. எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களில் நான் படித்தது ‘தாயுமானவன்’ என்ற நாவல் மட்டுமே. தங்கள் பதிவைப் படித்ததும் அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல்களை படிக்கவேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது.தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 7. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  //தெளிவாக எடுத்துச் சொல்லியும் ம்ஹீம்...விமர்சனம் அருமை... சித்தர் சிறப்புகளுக்கு நன்றி ஐயா... //

  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 8. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  // அடுத்த நிமிடத்தினை நினப்பதனால் தான் - இத்தனை அவலங்களும்!..

  வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
  செத்தாரைப் போலத் திரி..

  என்பது பட்டினத்தடிகளின் திருவாக்கு. இதைப் படித்து மனதின் உள்வாங்கியபோது என் வயது பதினெட்டு. இன்று வரை நிலை தடுமாறாத வாழ்வு. சிந்தனையைத் தூண்டி விடும் எழுத்துச் சித்தரைப் பற்றிய - நல்லதொரு பதிவு..

  அனைத்தும் குருநாதர் திருவருள்.. வாழ்க நலம்.. //

  பட்டினத்து அடிகளின் வாக்கோடு தனது கருத்துரையைச் சொன்ன சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி1

  ReplyDelete
 9. மறுமொழி > Strada Roseville said...

  Strada Roseville அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // what/why is the meaning of குடதிசை & குணதிசை //
  குடதிசை என்றால் மேற்கு; குணதிசை என்றால் கிழக்கு.

  மேலே பதிவில் சொன்ன பாடல் ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் கிடந்த கோலத்தினை சொல்கிறது. அதாவது ஸ்ரீரங்கநாதர், மேற்கில் தலையை வைத்து, கிழக்கு நோக்கி காலை நீட்டி, வடக்கு பக்கம் பின்புறம் காட்டி, தெற்கிலுள்ள இலங்கையை நோக்கி முகத்தை வைத்துக் கொண்டு , பாம்பு படுக்கையின் மீது துயில் கொள்கிறான் என்பது கருத்து!


  ReplyDelete
 10. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  // நல்ல பதிவு. ஆரம்ப காலங்களில் இவரது பல புத்தகங்களை படித்ததுண்டு. இப்போது சில காலமாக படிக்கவில்லை. நீங்கள் சொன்ன இந்த இரண்டு புத்தகங்களும் படித்ததில்லை. படிக்க முயல்கிறேன். //

  சகோதரர் வெங்கட் நாகராஞ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 11. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  //எழுத்துச் சித்தர் எனப்படும் பாலகுமாரன் அவர்கள்
  படைப்புகளை அருமையாக விமர்சித்ததற்கு பாராட்டுக்கள்.! //

  ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 12. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  // எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களில் நான் படித்தது ‘தாயுமானவன்’ என்ற நாவல் மட்டுமே. தங்கள் பதிவைப் படித்ததும் அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல்களை படிக்கவேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது.தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. //

  அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! பாலகுமாரன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் யாவும் தத்துவமயமாகவே இருப்பதைக் காணலாம். மரணத்தைப் பற்றிய தத்துவ விசாரணையோடு கற்பனை வளத்தோடு ஒரு நாவல் “சொர்க்கம் நடுவிலே”. நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.

  ReplyDelete
 13. எழுத்துச் சித்தர் என்றால் எழுத்தில் சித்து விளையாட்டுக்கள் நிகழ்த்துபவர் என்று கொள்ளலாமா. ?சித்தர்கள் எளிதில் நம்பமுடியாத செயல்கள் புரிபவர்கள் என்ற் கேள்வி. இவரது சில எழுத்துக்கள் படித்ததுண்டு. திருவண்ணாம்லையில் விசிறி சாமியார் என்பவரின் சீடர் என்றும் கேள்வி. அதன் பின்னர்தான் எழுத்துச் சித்தர் ஆனாரா. ?

  ReplyDelete
 14. எழுத்துச் சித்தர் எனப்படும் பாலகுமாரன் அவர்கள் படைப்புகளை அருமையாக விமர்சித்துள்ளீர்கள் ஐயா.

  நான் 2004 ம் ஆண்டு, 45 நாட்கள் துபாயில் தங்கும்படி நேர்ந்த போது, இவரின் நாவல் ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.

  நாவலின் தலைப்பு ஏனோ இப்போது என் நினைவுக்கு வர மறுக்கிறது.

  அதில் பெரும்பகுதி இராமயணத்தின் யுத்த காட்சிகளும், அனுமனின் பராக்கிரமங்களும் மிக அருமையாக வித்யாசமாக வர்ணிக்கப்பட்டிருந்தன. ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன்.

  பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 15. மறுமொழி >G.M Balasubramaniam said...

  அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // எழுத்துச் சித்தர் என்றால் எழுத்தில் சித்து விளையாட்டுக்கள் நிகழ்த்துபவர் என்று கொள்ளலாமா. ?சித்தர்கள் எளிதில் நம்பமுடியாத செயல்கள் புரிபவர்கள் என்ற் கேள்வி. இவரது சில எழுத்துக்கள் படித்ததுண்டு. திருவண்ணாம்லையில் விசிறி சாமியார் என்பவரின் சீடர் என்றும் கேள்வி. அதன் பின்னர்தான் எழுத்துச் சித்தர் ஆனாரா. ? //

  எனக்குத் தெரிந்து தற்கால தமிழ் இலக்கிய உலகில் இரண்டு பேரை சித்தர் பெயரிட்டு அழைத்தார்கள். ஒருவர் ”எழுத்துச்சித்தர் பாலகுமாரன்”.. இன்னொருவர் ”வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜான்.” இருவருமே பொருத்தமானவர்கள்தான்.

  நீங்கள் கேள்வி கேட்டவுடன் கூகிளிடம் சொன்னவுடன் கிடைத்த பதில் இது. நக்கீரன் இதழில் வந்த பேட்டி

  // வெகுஜன எழுத்தில் இயங்கிக்கொண்டே தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தர் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பாலகுமாரன், தமிழ் வெகுஜன திரைப்படங்களுக்கு வெற்றிகரமான உரையாடல் எழுத்தாளராகவும் இன்றளவும் இயங்கி வருபவர். ஒரு கட்டத்தில் குடும்ப, சமூகஎழுத்திலிருந்து பெரும்பான்மையாக விடுபட்டு, இந்து மதத்தின் அடிப்படையாகவிளங்கும் புராண, இதிகாச தொன்மங்கள், பாத்திரங்கள், சனாதன தத்துவங்கள்ஆகியவற்றை எளிமை செய்து வெகுஜன ஆன்மிக எழுத்தாக எழுத ஆரம்பித்த தாலும், திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த யோகி ராம்சுரத் குமாரின் சீடராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு ஆன்மிக வாழ்வு வாழ யத்தனிப்பதாலும் இப்போது எழுத்துச் சித்தர் பாலகுமாரன் என்ற அடைமொழி யோடு அழைக்கப்பட்டு வருகிறார். ( நன்றி : நக்கீரன்) //  ReplyDelete
 16. மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said...

  அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!

  // எழுத்துச் சித்தர் எனப்படும் பாலகுமாரன் அவர்கள் படைப்புகளை அருமையாக விமர்சித்துள்ளீர்கள் ஐயா. //

  நான் அவருடைய நூல்கள் இரண்டினை மட்டுமே இங்கு சொல்லியுள்ளேன். நான் படித்த அவருடைய மற்றைய நூல்களையும் சேர்த்து ஒரு பதிவினை எழுதலாம் என்று இருக்கிறேன்.

  // நான் 2004 ம் ஆண்டு, 45 நாட்கள் துபாயில் தங்கும்படி நேர்ந்த போது, இவரின் நாவல் ஒன்றினைப் படிக்க நேர்ந்தது. நாவலின் தலைப்பு ஏனோ இப்போது என் நினைவுக்கு வர மறுக்கிறது.
  அதில் பெரும்பகுதி இராமாயணத்தின் யுத்த காட்சிகளும், அனுமனின் பராக்கிரமங்களும் மிக அருமையாக வித்யாசமாக வர்ணிக்கப்பட்டிருந்தன. ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன்.//

  நானும் யோசித்துச் சொல்லுகிறேன் அய்யா!

  // பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!

  ReplyDelete
 17. எப்போதோ படித்தது! இப்போது எதும் நினைவில் இல்லை!

  ReplyDelete
 18. பாலகுமாரன் எழுத்துக்களை படிப்பதே அலாதி இன்பம்தான் ஐயா

  ReplyDelete
 19. படிக்கபடிக்கதோன்றுகிறதுத்
  தோன்றுகிறது

  ReplyDelete
 20. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  // எப்போதோ படித்தது! இப்போது எதும் நினைவில் இல்லை! //

  புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 21. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

  // பாலகுமாரன் எழுத்துக்களை படிப்பதே அலாதி இன்பம்தான் ஐயா //

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

  // படிக்க படிக்க தோன்றுகிறதுத் தோன்றுகிறது //

  கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 23. திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்து நடையே அலாதி தான். அவருடைய " உடையார் " நாவல் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள நாவல்களையும் படிக்க முயற்சிக்கிறேன். நன்றி தமிழ் சார் பகிர்விற்கு.

  ReplyDelete
 24. திரு பாலகுமாரன் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியுள்ளார் என்பதே உங்களின் இந்தப் பதிவு பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நானும் அவரது விசிறிதான்.
  உங்களின் நூல் மதிப்புரை வெகு சுவாரஸ்யம். இன்னும் நிறைய நூல்களைப் பற்றி எழுதுங்கள்.

  ReplyDelete
 25. பாலகுமாரனின் நாவல்கள் படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை படிக்கவில்லை.
  படிக்க ஆவல் கொண்டேன். அபாரமான எழுத்து நடை கொண்டவர் பாலகுமாரன்.
  எனது தொடக்கப் பதிவுகளில் அவரது நாவல்களில் வரும் கவிதைகளைப் பற்றி எழுதி இருந்தேன். நல்ல வரவேற்பும் கிடைத்த்து

  ReplyDelete
 26. பாலகுமாரன் அவர்களைப் பற்றிய தங்களின் பதிவு பன்முக நோக்கில் அவருடைய சாதனைகளை முன்வைக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் போன்ற நூல்களுடன் எங்கள் இல்ல நூலகத்தை அலங்கரிப்பன பாலகுமாரின் உடையார், கங்கைகொண்டசோழன், கடிகை, செப்புப்பட்டயம் ஆகிய நூல்களாகும். நல்ல பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 27. மறுமொழி > rajalakshmi paramasivam said...

  // திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்து நடையே அலாதி தான். அவருடைய " உடையார் " நாவல் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள நாவல்களையும் படிக்க முயற்சிக்கிறேன். நன்றி தமிழ் சார் பகிர்விற்கு. //

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! நான் இன்னும் “உடையார்” நாவலைப் படித்ததில்லை.

  ReplyDelete
 28. மறுமொழி > Ranjani Narayanan said...

  // திரு பாலகுமாரன் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியுள்ளார் என்பதே உங்களின் இந்தப் பதிவு பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நானும் அவரது விசிறிதான். உங்களின் நூல் மதிப்புரை வெகு சுவாரஸ்யம். இன்னும் நிறைய நூல்களைப் பற்றி எழுதுங்கள். //

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! நான் பாலகுமாரன் அவர்களது சமூக நாவல்களை விட அவரது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், பேட்டிகள், நூல்களை மட்டுமே படித்து இருக்கிறேன்.

  ReplyDelete
 29. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  // பாலகுமாரனின் நாவல்கள் படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை படிக்கவில்லை. படிக்க ஆவல் கொண்டேன். அபாரமான எழுத்து நடை கொண்டவர் பாலகுமாரன். எனது தொடக்கப் பதிவுகளில் அவரது நாவல்களில் வரும் கவிதைகளைப் பற்றி எழுதி இருந்தேன். நல்ல வரவேற்பும் கிடைத்த்து //

  சகோதரர் மூங்கில் காற்று டி என் முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அவருடைய “இரும்புக் குதிரைகள்” நாவலைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகம்தான் வரும். ஏனெனில் அதில் வந்த ஒரு கவிதையைப் பற்றி நீங்கள் பதிவில் எழுதியதாக ஞாபகம்.

  ReplyDelete
 30. மறுமொழி > Dr B Jambulingam said...

  // பாலகுமாரன் அவர்களைப் பற்றிய தங்களின் பதிவு பன்முக நோக்கில் அவருடைய சாதனைகளை முன்வைக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் போன்ற நூல்களுடன் எங்கள் இல்ல நூலகத்தை அலங்கரிப்பன பாலகுமாரின் உடையார், கங்கைகொண்டசோழன், கடிகை, செப்புப்பட்டயம் ஆகிய நூல்களாகும். நல்ல பகிர்விற்கு நன்றி. //

  அய்யா முனைவர் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!  ReplyDelete
 31. அருமையான விமர்சனம் தங்களின் விமர்சனத்தைப் பார்க்கும் எவருக்கும்
  இந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றே தோன்றும் !படைப்பாளிக்கும்
  அதைப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் ஐயா .

  ReplyDelete
 32. மறுமொழி . அம்பாளடியாள் வலைத்தளம் said...

  //அருமையான விமர்சனம் தங்களின் விமர்சனத்தைப் பார்க்கும் எவருக்கும் இந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றே தோன்றும் !படைப்பாளிக்கும் அதைப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .//

  சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!


  ReplyDelete