Monday 16 January 2012

எனது தாத்தாவிடம் இருந்த தாழம்பூ குடை

எனது சொந்த ஊர் திருமழபாடி(அதாவது அப்பா ஊர்). இது கொள்ளிடத்தின் வட கரையில். இதன் தென்கரையில் எனது அம்மாவின் ஊர். இது திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி பக்கம், கொள்ளிடம், காவிரி என்ற இரண்டு ஆறுகளுக்கும் இடையில் அமைந்துள்ள புதகிரி என்ற கிராமம். அப்பா ரெயில்வேயில் வேலை பார்த்தது, நாங்கள் குடும்பத்தோடு வசித்தது, நான் படித்தது எல்லாமே திருச்சியில்தான். நான் சிறுவனாக இருந்தபோது, பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவின் ஊருக்கு சென்று விடுவேன்.

அங்கு எனது தாத்தா ஒரு குடை வைத்து இருந்தார். தாழம்பூ குடை. நிறைய பேர் அதனை தாழங்குடை என்றே அழைத்தனர். அந்த குடை தாழம்பூ மடல்களால் செய்யப்பட்டது. தாழம்பூ வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த தாழம்பூ மடல்கள்,  பக்குவம் செய்யப்பட்டு வேயப்பட்டு, கைப்பிடி செருகப்பட்ட குடை. அது வெளுத்து இருக்கும். குடை பார்ப்பதற்கு கேரளா சாமிக் குடை போன்று இருக்கும். ஆனால் அந்த குடையைவிட இது சிறியது. இதனை மடக்க முடியாது. கேரளாவில் தாழங்குடைகள் அதிகம். பழைய - கறுப்பு வெள்ளை  படங்களில் இந்த குடையை பார்க்கலாம். என்னுடைய தாத்தா இந்த தாழங்குடையை அருகில் உள்ள  ஊரில் நடைபெறும் வார சந்தையில் வாங்கி வைத்து இருந்தார். அவர் எங்கு சென்றாலும், குறிப்பாக மழைக் காலங்களில் எடுத்துச் செல்வார். வயலுக்குச் செல்லும் போது களத்து மேட்டில் கட்டிலில் வைத்து விடுவார். பெரும்பாலும் அப்போது எல்லோர் வீட்டிலும் இந்த தாழம்பூ குடைதான். அதாவது தாழங்குடை.

சிறுவனான நான் அந்த ஊருக்குச் செல்லும்போது, தாத்தா வீட்டு திண்ணையில் இருக்கும் தாழங்குடையை எடுத்துக் கொள்வேன். அந்த குடையை சுழற்றியபடி கிராமத்து சிறுவர்களோடு விளையாடுவேன். சிறுவனாக இருந்தபடியினால் அது ரொம்பவும் கனக்கும். மழைக் காலங்களில் அதனை எடுத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது , குடையின் மீது பட்டு வழியும் மழைநீர் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். கொள்ளிட ஆற்று கரையில் மாடு மேய்க்கும் பெரியவர்கள் இந்த தாழங்குடையை பிடித்தபடி, வழி மாறி கொல்லைக் காட்டில் நுழையும் ஆடு மாடுகளை அதட்டிக் கொண்டு இங்கும்அங்கும் போவார்கள். சிலசமயம் கிராமத்து அக்கிரஹாரத்திலிருந்து வைதீக பிராமணர் யாரேனும் சட்டை போடாமல் இந்த தாழங்குடையை தலைக்கு மேலே ஒரு கையில் பிடித்துக் கொண்டு வருவார். அந்த காட்சி வாமன அவதாரம் எடுத்த,  ஓங்கி உலகளந்த பெருமாள்  தாழங்குடையோடு வருவது போன்று இருக்கும். மேற்கூண்டு இல்லாத மாட்டு வண்டியில் அந்த குடையோடு யார் போனாலும் வேடிக்கையாக இருக்கும். என்ன, பஸ்சில் மட்டும் அந்த குடையை எடுத்துச் செல்ல முடியாது.

 
இப்போது கால வெள்ளத்தில் அந்த தாழம்பூ குடை கிராமங்களில் இருந்து காணாமல் போய்விட்டது. முன்பு போல் கிராமங்களில் வாய்க்கால் வரப்பு ஓரத்தில் தாழம்பூ புதர்களை யாரும் வைப்பதில்லை. தாழம்பூ மணம் பாம்புகளை கவரும். எனவே, பாம்பு பயம் காரணமாக, நல்ல மணம் கமழும் அந்த தாழம்பூ புதர்களை கொளுத்தி விடுகின்றனர். தாழம்பூ குடைகளும் இப்போது கிடைப்பதில்லை. இருந்தாலும் கோயில்களில் இருந்து வரும் உற்சவர் ஊர்வலங்களில் இறைவன் மீது இருக்கும் சாமி குடைகளைப் பார்க்கும் போதெல்லாம் எனது தாத்தா வைத்து இருந்த தாழம்பூ குடைதான் நினைவுக்கு வருகிறது. தாத்தாவும் இப்போது நமக்கு சாமிதானே!

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரம் இருக்கும்! 
தரம் இருக்கும்!
அது தாமதித்தாலும்
நிரந்தரமாக மணம் கொடுக்கும்!
நல்ல மணம் கொடுக்கும்!           

 - பாடல்: வாலி (படம்: தாழம்பூ)

( Pictures thanks to Google )
 


15 comments:

  1. தாழம்பூ குடை பற்றீய தகவல் நிறைந்த பதிவு. குடைபுராணம் ஒன்று நானும் எழுதினேன் பதிவாக ஆனா இந்தக்குடையின் மணம் அதில் இல்லைதான்!

    ReplyDelete
  2. //ஷைலஜா said...//

    வணக்கம்!
    நீங்கள் உங்கள் குடை புராணத்தை பற்றி குறிப்பிட்டதால், தாங்கள் எழுதிய “குடை வள்ளல்கள்” ( நவம்பர்,09,2010) என்ற பதிவினை கூகிளில் தேடிச் சென்று படித்தேன். மடக்கிப் பிடிக்கும் குடையைக் கண்டு பிடித்த ஜோனாஸ் ஹான்வே முதற் கொண்டு ஏராளமான தகவல்களை வள்ளலாய் வழங்கியுள்ளீர்கள். இடையே இலக்கிய வரிகள். நீங்கள் அந்த கட்டுரையை எழுதிய காலத்தில் நான் தமிழ் மணம் வாசகராக மட்டுமே இருந்தேன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. நான் சிறுவனாக இருந்தபோது தாழங்குடை பார்த்தி ருக்கிறேன்.மறந்து(மறைந்து)போன ஒன்றை நினைவூட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  4. // சென்னை பித்தன் சொன்னது ...//
    வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தங்களது மேற்படி கருத்துரை மேலும் இரண்டு முறை எப்படியோ பதிவாகியுள்ளது. அந்த இரண்டையும் எடுத்து விட்டேன்.

    ReplyDelete
  5. தாழம்பூக் குடையின் மணம் என்னையும் சிறிது நேரம்
    பற்றிக் கொண்டு மயக்க நிலையில் வைத்திருந்தது
    மடக்க முடியாதது அதிக நெரிசலான இடங்களில்
    கொண்டு செல்லமுடியாது முதலான காலச் சூழலே
    தாழம்குடைகள் நம்மைவிட்டு பிரிந்து சென்றதற்கான
    காரணம் என நினைக்கிறேன்
    ஆயினும் அதன் நினைவுகள் இன்னமும்
    நம்முள் மணந்து கொண்டிருப்பதே அதன் சிறப்பு
    மனம் கவர்ந்த பதிவு.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. Ramani said...

    வணக்கம்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  7. எனது வெள்ளை கோபுரம் பதிவில் வைணவம்சார்ந்த நிகழ்வுகளை என்னை எழுதச்சொல்லி கேட்டிருந்தீர்கள்..கோபுரத்தில் அப்படிநடந்தது திருக்கோஷ்டியூரில் என நினைக்கிறேன் அல்லது தங்களுக்கு தெரிந்தால் அங்கே கூற முடியுமா நன்றி.

    ReplyDelete
  8. என்தாய் தந்தை வழி சொந்த ஊரும் புதகிரிதான் .
    நானும்கேள்விப் பட்டிருக்கிறேன் தாழம்பூ குடை பற்றி .

    ReplyDelete
  9. மறுமொழி > அபயாஅருணா said...

    // என்தாய் தந்தை வழி சொந்த ஊரும் புதகிரிதான் .
    நானும்கேள்விப் பட்டிருக்கிறேன் தாழம்பூ குடை பற்றி .//

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தங்கள் தாய் தந்தை வழி சொந்த ஊரும் புதகிரிதான் என்பதில் மிக்க மகிழ்ச்சி!

    வலைப்பதிவர் (தொடுவானம்) காளிதாஸ் முருகையா அவர்களது மனைவியின் ஊரும் புதகிரிதான். புதகிரியின் இயற்கை எழிலைச் சந்திக்க அவரது கீழே உள்ள பதிவுகளுக்குச் செல்லவும்.

    மண்ணின் மணம் ...வேரும்.. விழுதும்
    http://senbagadasan.blogspot.in/2012/06/blog-post.html

    கதை சொல்லும் கொள்ளிடம்
    http://senbagadasan.blogspot.in/2012/06/blog-post_21.html

    ReplyDelete
  10. நன்றி.அவற்றையும் பார்த்தேன்.
    .என் பெயரின் முதல் இனிஷியலே புதகிரி தான் .
    ஊர் மீது பாசம் உண்டு..
    வயதாகிவிட்டது .பழைய உறவினர்களில் ஓரிருவரே உள்ளனர்.
    மற்றவர்களுக்கு என் பெற்றோர் பெயர் சொல்லி என்னை அறிமுகப் படுத்தும் நிலை .
    ஊர் பாசத்தில்
    சும்மா புதகிரிஎன்று கூகிளில் போட்டு சில பதிவுகளைப் பார்த்தேன் .உங்கள் பதிவிற்கும் பதில் இட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இன்று மாலைதான் பார்த்தேன். தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

      Delete
  11. எங்க அப்பா வுக்கு திடீரென்று தாழங்குடை ஞாபகம் வந்து அதைப் பற்றி search பண்ண சொன்னார்! ஆனால் இப்போது அது கிடைப்பதில்லையா? எங்காவது கிடைக்குமென்றால் தகவல் கூறுங்கள்,அப்பாவிற்கு வாங்கி கொடுக்கவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நான் சிறுவனாக இருந்தபோது கிராமத்து சந்தையில் இந்த தாழம்பூ குடையைப் பார்த்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
      இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல்கள். கேரளாவில் இந்த தாழம்பூ குடையை ‘ஓலக்குடா’ (olakuda) என்ற பெயரில் விளிக்கிறார்கள். கேரள பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையின்போது அங்குள்ள கோயில் வாசல்களில் (குறிப்பாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வாசலில்) உள்ள கடைகளில் இந்த ஓலக்குடா கிடைக்கிறது. தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும் என்பதனை இங்குள்ள கேரள மக்களிடம் அல்லது கேரள கைவினைப் பொருட்கள் விற்பனை கடைகளில் (கைராளி) கேட்டால் சொல்வார்கள்.
      உங்களின் பார்வைக்காக தி இந்துவில் வந்த செய்திகள் பற்றிய இணையமுகவரிகள் கீழே.

      www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/banking-on-tradition/article5127288.ece

      www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/variety-rural-fare-at-irdp-fair/article3814788.ece

      Delete