Thursday 26 January 2012

காவிரிக் கரையில் உள்ள திருச்சியில் குடிநீர்ப் பிரச்சினை


காவிரி ஆறே கரை புரண்டு ஓடினாலும், காவிரிக் கரையில் இருக்கும் திருச்சி மக்களுக்கு மட்டும் குடிக்க  தண்ணீர் சரிவர கிடைக்காது. திருச்சி நகரத்தின் நிலைமை அப்படித்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சியின் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் இன்னும் குடங்களை வைத்துக் கொண்டு குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது.

             ( படம்: திருச்சி காவிரிப் பாலம் ( கூகிளுக்கு நன்றி! )

தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி என்னும் திருச்சி காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு அமைதியான நகரம். வட கரையில் ஸ்ரீரங்கம் இருக்கிறது. ஒரு காலத்தில் திருச்சி நகராட்சியாக இருந்தபோது மக்களுக்கு குடிநீரை காலை மாலை இரண்டு வேளையும் தந்தார்கள். நகரம் வளர வளர மாநகராட்சி ஆன பின்னர் ஏதேனும் ஒரு வேளை தந்தார்கள். இப்போது சில மணி நேரங்கள் மட்டுமே வழங்கப் படுகிறது. கருணாநிதி நகர், அய்யப்ப நகர், எடமலைபட்டி புதூர், ஏர்போர்ட், கிராப்பட்டி, அரியமங்கலம், பொன்மலைபட்டி போன்ற புறநகர்ப் பகுதிகளில் காவிரிநீர் சரியாக வருவதில்லை.  பல வீடுகளில் உள்ள குழாய்களில் காற்றுதான் வருகிறது. இன்னும் சில இடங்களில் மோட்டார் வைத்து வருகின்ற தண்ணீரும் உறிஞ்சப்படுவதாகச் சொல்கிறார்கள்.. 

குடிநீர் பிரச்சினையைப் பயன்படுத்தி திருச்சியின் பல இடங்களில் மினரல் தண்ணீர் வியாபாரம் படு ஜோராக உள்ளது. திருச்சியில் பல அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத நிறுவனங்கள் மினரல் தண்ணீரைத்தான் குடிக்க விலைக்கு வாங்குகிறார்கள். அந்த மினரல் தண்ணீரும் பூச்சி மருந்து வாடையினால் குடிப்பதற்கே யோசிக்கும் நிலைமையில் உள்ளது இன்னும் சில இடங்களில் தண்ணீர் எடுத்து விற்பவர்கள் பிளாஸ்டிக் குடம் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள்.


இங்கு இவ்வாறு திருச்சி மக்கள் குடிநீருக்காக அல்லாடிக் கொண்டு இருக்கும்போது, திருச்சி காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பிற மாவட்ட மக்களுக்கு “ ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் “ என்ற பெயரில் கொண்டு செல்லப் படுகிறது. இந்த திட்டம் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப் படுகிறது. மேலும் செல்லும் வழியில் சில இடங்களில் இந்த குழாயிலிருந்து திருட்டுத்தனமாகவும் தண்ணீர் எடுக்கிறார்கள். அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் என்பது போல திருச்சி அரசியல்வாதிகள், அடுத்தவர்களுக்கு த்ண்ணீரை தானம் செய்து விட்டு திருச்சி மக்களை தாகத்தில் விட்டு விட்டார்கள். புறநகர் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் கட்டினாலும் தரப் போவது காவிரிநீர் கிடையாது. போர்வெல் தண்ணீரும் காவிரி தண்ணீரும் கலந்த ஒன்றுதான். சுத்தமான காவிரி தண்ணீர் இல்லை..


யார் ஆட்சியில் இருந்தாலும், திருச்சியில் உள்ள அதிகாரிகளுக்கும், வி.ஐ.பிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லாரிகள் மூலம் நல்ல காவிரி தண்ணீர் தாராளமாக வழங்கப்படுகிறது. திருச்சி பொதுமக்கள்தான் பாவம் ! வரியையும் கட்டிவிட்டு, ஓட்டுப் போட்ட பாவத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளாலும் குடிநீருக்காக எப்போதுமே அலையவிடப் படுகிறார்கள்.









5 comments:

  1. welcome ... i'm too trichian


    http://sivaparkavi.wordpress.com/
    sivaparkavi

    ReplyDelete
  2. வணக்கம்! நல்வரவு சொன்ன சிவ பார்கவிக்கு நன்றி! திருச்சி என்று சொன்னதில் மகிழ்ச்சி!

    ReplyDelete
  3. காவிரிக்கரைக்கே இந்தக் கதி என்றால்
    நாங்கள் எல்லாம் வைகைக்காரர்கள்
    எதிர்காலத்தில் என்ன பாடு படப் போகிறோமோ
    தலைப்பும் பதிவும் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //Ramani said... //

    வணக்கம்! ரமணி சார்! என்ன பண்ணுவது! சென்னைக்கே நல்ல திட்டங்களை தீட்டுபவர்கள் திருச்சிக்கும் கொஞ்சம் செய்தால் நல்லது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கிற்கும் நன்றி!

    ReplyDelete