நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த நேரம். அரசு பள்ளி ஹாஸ்டலில்
தங்கி படித்து வந்த எனது நண்பன் ஒருவனைக் காண சென்று இருந்தேன். அவனிடம் பேசிக் கொண்டு
இருந்தபோது, இடையில் கழிவறை செல்ல வேண்டி இருந்தது. அங்கே சுவற்றில் முதன்முதலாக சில
கிறுக்கல்களைக் காண முடிந்தது. பெரும்பாலும் ஒரே ஆபாசம். சிலவற்றை அழித்து இருந்தார்கள்.
வார்டனை மறைமுகமாக திட்டியும், நடிகர் நடிகைகளைப் பற்றியும் கிறுக்கி இருந்தார்கள்.
அங்கிருந்து வந்தவுடன் நண்பனிடம் இதுபற்றி கேட்டேன். ”இதெல்லாம் இங்கு சகஜம்; வார்டனால்
ஒன்றும் செய்ய முடியவில்லை; இப்போது யாரும் கண்டு கொள்வதில்லை” என்றான்.
கவிதை ஒன்று:
ஆசிரியர் மதுரை சரவணன் அவர்கள் மாணவர்களின் இந்த கிறுக்கல்கள் பற்றி
http://veeluthukal.blogspot.in/2012/02/blog-post.html
என்ற தனது பதிவினில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்.
கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
இன்னும் மாறாமல் அதே
விதம்..
எத்தனை முறை வெள்ளையடித்தாலும்
கழிப்பறை சுவர்கள்
ஏதோ ஒரு மாணவனின்
மனக்குமுறலுக்கான
கிறுக்கலுக்காக
காத்துக்கிடக்கின்றன….
கல்லூரிக்கு சென்ற போதும் அங்கும் இப்படித்தான். கழிவறைகளில் ஆபாச
கிறுக்கல்கள். பேராசிரியர்கள் – பேராசிரியைகள், நடிகர்-நடிகைகள், அரசியல்வாதிகள் என்று
இஷ்டத்திற்கு அவர்களைப் பற்றி எழுதி இருப்பதைக் காணமுடிந்தது.
கழிவறைக் கிறுக்கல்கள்
(Latrinalia)
இந்த கிறுக்கல்களை பொதுவாக பொதுக் கழிவறைகளில் அல்லது பொது குளியல்
அறைகளில் மட்டுமே காணலாம். இவ்வாறு எழுதுவதை கழிவறைக் கிறுக்கல்கள் (Latrinalia) என்று
சொல்கிறார்கள். உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்வதைப் போல, மனதில் உண்டாகும்
அரிப்பை போக்கிக் கொள்ள அல்லது தன்னுடைய இயலாமைக்கு வடிகாலாக சிலர் எழுதும் கிறுக்கல்கள்தான்
இவை. சிலரின் மனக்குமுறல்களாகவும் இருக்கும். சிலரின் குறுங்கவிதைகளையும் இங்கே காணலாம்.
பெரும்பாலும் அவசரம் அவசரமாக சாக்பீசாலோ, கரித்துண்டினாலோ, அல்லது ஸ்கெட்ச் பென்சிலாலோ
எழுதப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS என இவற்றை சொல்லலாம். சிலசமயம் சிறிய படங்களாகவும்
இருக்கலாம். எழுதுபவரின் மனநிலையைப் பொறுத்தது.
லட்சுமிகாந்தன்:
இதே பாணியில்தான் அந்நாளில் சினிமா நடிகர் நடிகைகளின் அந்தரங்கத்தைப்
பற்றி பொய்யாகவும், இருப்பதை மிகைப் படுத்தி எழுதியும் ஒரு பத்திரிகை வந்தது. பத்திரிகையின்
பெயர் ‘இந்துநேசன்’. இதனை மஞ்சள் பத்திரிகை என்று சொன்னார்கள். இதன் ஆசிரியர் லட்சுமிகாந்தன்.
இதற்கும் வாசகர் கூட்டம் இருந்தது. பத்திரிகையை வாங்கியதும் மறைத்து வைத்துக் கொள்வார்கள்;
மறைத்தே படிப்பார்கள். ஒருநாள் இந்த லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தமிழ் சினிமா
பிரபலங்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அந்நாளில் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’
என்று பிரபலமாக பேசப்பட்டது.
பொது இடங்களில்:
தினமலர் தரும் செய்தி இது:
திருச்சி: திருச்சி
கலெக்டர் அலுவலக கழிவறை கதவுகளில் ஆபாச படங்கள், வாசகங்களை சிலர் கிறுக்கி வைத்துள்ளதால்,
அங்கு செல்பவர்கள் முகத்தை சுளிக்கும் நிலை உள்ளது. … … … இந்த கழிவறை கதவுகளின் உள்புறம்
சிலர், ஆபாச படங்கள் வரைந்தும், வாசகங்கள் எழுதியும் வைத்துள்ளனர். முகம் சுளிக்க வைக்கும்
இந்த செயல், கழிவறை செல்வோருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.ஆர்.ஓ., அலுவலகம்
அருகே உள்ள ஆண்கள் கழிவறை கதவுகளில், ஆபாச படங்கள், வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும்,
மொபைல்ஃபோன் எண்களை எழுதி வைத்து, அதன் கீழ் பெண்களின் பெயரை எழுதி வைத்துள்ளனர். இதுபோன்ற
செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசு
அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். - (நன்றி: தினமலர்
– 27 பிப்ரவரி 2012)
இப்போதும் ஒவ்வொரு ஊர் பஸ் ஸ்டாண்டிலும், பொதுக் கழிவறைகளில் (கட்டணக்
கழிப்பிடங்களிலும்) இந்த மாதிரியான கிறுக்கல்களைக் காண முடியாவிட்டாலும் சிறுசிறு பிட்டு
நோட்டீசுகளை ஒட்டி இருப்பதைக் காணலாம். எல்லாம் மூல பவுத்திரம், எரனியா, ஆண்மைக்குறைவு
சிகிச்சை பற்றியவை. டாக்டரின் பெயர், செல்போன் எண்களோடு இருக்கும். இவர்கள் உண்மையிலேயே
டாக்டர்கள்தானா என்று சொல்ல முடியாது. இது ஒருவகை உளவியல் தந்திரம். காசு பார்க்கும்
யுக்தி எனலாம்.
( PICTURE COURTESY: GOOGLE IMAGES)
