Thursday, 4 June 2015

விளம்பரமே இல்லாத விளம்பரப் பதிவுகள்



பல நண்பர்கள் ஏற்கனவே இதுபற்றி எழுதிய விஷயம்தான். இருந்தாலும் அந்த பதிவுகளில் அப்படி என்னதான் இருக்கிறது என்று போய் பார்த்தேன். எனக்கு தட்டுப்பட்ட ஒன்றிரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆசைதான். உதாரணத்திற்கு தமிழ்மணத்தில் வெளியாகும் பொக்கிஷம் மற்றும் வார்த்தை விருந்து போன்றவை. இன்னும் சில வலைத்தளங்களையும் சொல்லலாம்.

இந்த மாதிரியான பதிவுகளை என்ன காரணத்திற்காக யார் எழுதிறார்கள்? எதற்காக எழுதிறார்கள்? என்றே தெரியவில்லை. எழுதுபவரின் சுயவிவரம் (PROFILE) எங்குமே இருக்காது. சிலசமயம் பதிவின் வெளியே தமிழ்மணத்தின் முகப்பில் kamali , என்றும் உள்ளே Posted by hari என்றும் இருக்கும். சில பதிவுகளில் எழுதுபவர் பெயர் வெவ்வேறாக இருந்தாலும் போய்ச் சேருவது என்பது ஒரே பதிவிற்குத்தான். தமிழ்மணத்தில் அதிகம் ஹிட்ஸ் வாங்குவதற்காக அல்லது முதலிடம் வருவதற்காக அப்படிச் செய்கிறார்களா என்றால் அப்படி செய்வதாகவும் தெரியவில்லை.

பெரும்பாலும் பொதுநலம் சார்ந்த அல்லது உடல்நலக் குறிப்புகளையே பதிவுகளாகப் போடுகிறார்கள்

விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த பொது மக்கள்

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat”

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?

பென்டிரைவ் விலை இருமடங்காக வாய்ப்பு!

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலையை பற்றி தெரிந்து கொள்வோம்

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?”
“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

“1915களில் திருச்சி பெரிய கடை வீதியின் அரிய புகைப்படம்..

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!

ஒரு பதிவினில் 60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!! என்று ஒரு செய்தி. போய் பார்த்தால் அப்படி சொல்லும் டாக்டர் யார் என்பது பற்றிய குறிப்பே இல்லை..

சிலசமயம் கவர்ச்சியாக சினிமா செய்திகளைக் கொண்டு இருக்கும். சில நண்பர்கள் தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் என்று தமிழ் நாளிதழ்களின் வார மலர்களில் வந்தவற்றை அப்படியே COPY & PASTE முறையில் தங்கள் பதிவுகளில் பகிர்ந்து இருப்பார்கள். அவற்றை இந்த விளம்பர பதிவுகள் மறுபடியும் COPY & PASTE முறையில் வெளியிடுவதைக் காண முடிகிறது.

“ அருகிலுள்ள விளம்பரத்தை ஒரு க்ளிக்காவது அழுத்துங்கள் நண்பர்களே.. : - என்று கெஞ்சலாக கேட்டு இருப்பார்கள். சரி இதனால் என்னதான் ஆகப் போகிறது என்று, அவர்கள் சொல்லும் விளம்பரம் எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தால் எங்குமே இருக்காது. இதுவாவது பரவாயில்லை, ஒரு பதிவில் சரியான ஒரு விளம்பரத்தைக் கண்டுபிடித்துக்ளிக் செய்தால் மட்டுமே விளம்பரத்தை நீக்க முடியும். என்று கட்டம் கட்டி சொல்லி இருக்கிறார்கள்.கை வலிக்கும் வரை அந்த கட்டத்தை க்ளிக் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படி இல்லாத விளம்பரத்தைச் சொல்லி வரும் பதிவுகளை என்னவென்று சொல்வது.

இது மாதிரியான பதிவுகளை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளலாம். அப்படியே புறக்கணித்து விடலாம். இல்லை டைம் பாஸிங்கிற்காக என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் போய்ப் பார்க்கலாம். பாதகம் இல்லை. ஆனாலும் ரகசிய கேமரா போன்று, இதிலும் ஏதேனும் உள்குத்து விஷயங்கள் ஏதும் இவற்றில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். எவை எப்படி இருப்பினும் அவை நமது வலைத்தளத்தை பாதிக்காமல் இருந்தால் சரிதான்.