Monday, 16 July 2012

நானும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும்!


ஒரு மாலைப் பொழுது, சிறு வயதில் உயர்நிலைப்பள்ளிப் பருவத்தில் எனக்குத் தெரிந்த ஒருவரை (என்னை விட வயதில் பெரியவர்) பார்க்க அவர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றேன். அப்போது அவர் திருச்சி சிங்காரத் தோப்பில் இருந்த NCBH  எனப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் தற்காலிக ஊழியர். அப்போது அவர் கடையில் இல்லை. எதிரே நடக்கும் அவர்களது புத்தகக் கண்காட்சியில் இருப்பதாகச் சொன்னார்கள். இப்போது திருச்சி சிங்காரத் தோப்பில் இருக்கும் பர்மா பஜார் கடைகள் அப்போது கிடையாது. காலி இடத்தில் கொட்டகை போட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. உள்ளே சென்று அவரைப் பார்த்தேன். உட்காரச் சொன்னார்.


அவரிடம் பேசி விட்டு உள்ளே புத்தகங்களை பார்வையிட்டேன். சிறு வயது என்பதால் அங்கிருந்த சிறுவர் கதைகளைப் படிக்க ஆசை. அதிலும் அங்கு இருந்த வண்ணமயமான தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சோவியத் நாட்டு சிறுவர் கதைகளைப் பார்க்க பார்க்க ஆர்வம் உண்டாகியது. ஒன்றிரண்டு புத்தகங்களை அங்கேயே உட்கார்ந்து படித்தேன். அதுமுதல் தினமும் மாலை அங்கே சென்று எனது படிக்கும் ஆர்வத்தை தணித்துக் கொண்டேன். அங்கு இருந்த தோழர்களும் என்னை ஆரம்பத்தில் விசாரித்ததோடு சரி. நண்பர்கள் ஆகி விட்டனர். NCBH நிறுவனத்தார் ஒரு இடத்தில் புத்தகக் கண்காட்சி முடிந்த கையோடு உடனே வேறு ஒரு இடத்தில் தொடங்கி விடுவார்கள்.பெரும்பாலும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிகளில் நடத்துவார்கள். இப்படியாக எனது நண்பர் அங்கு வேலை செய்யும் வரை புத்தகம் வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது.

 
அவர்களிடம் தமிழாக்கம் செய்யப் பட்ட ருஷ்ய நூல்கள் அதிகம் இருக்கும். விலையும் ரொம்ப குறைவு. மற்ற பதிப்பகங்களின் நூல்களை அவ்வளவாக வைத்து இருக்க மாட்டார்கள். (ஜெயகாந்தன் நூல்களை வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையம் போன்றவைகள் விதிவிலக்கு). அப்போது சிறுவர் கதைகள், இலக்கியம்,  மார்க்ஸிம் கார்க்கி, டால்ஸ்டாய், மிக்கயீல் ஷோலகவ், பிரேம்சந்த், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்றவர்களது நூல்களையும், கம்யூனிசம் சம்பந்தப்பட்ட நூல்களையும் படித்தேன். ஆனாலும் அவர்கள் கட்சியில் சேரவில்லை. இப்படியாக எனது படிக்கும் பழக்கம் அதிகமானது. இப்போதும் ஒரு மணி நேரமாவது ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்தால்தான் அன்றைய தினம் திருப்தி அடைகிறது.

ஒருநாள் எனது நண்பர் வேலையிலிருந்து நின்றுவிட நான் அங்கு அதிகம் செல்லவில்லை.அதன் பின் கல்லூரி வாழ்க்கையின் போது எப்போதாவது செல்வேன். வங்கி வேலையில் சேர்ந்த பின்பு, அப்போது வாங்க முடியாத நூல்களை ஆசை தீர வாங்கினேன். மற்ற பதிப்பக, எழுத்தாளர்களின் நூல்களையும் வாங்கினேன். மீண்டும் மீண்டும் படித்தேன்.

சோவியத் ரஷ்யா உடைந்த பிறகு அவர்கள் புத்தக நிறுவனமும் தனியார் நிறுவனம் போல் மாறிவிட்டது. இப்போது மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களையும் வைத்து இருக்கிறார்கள். வழக்கம் போல புத்தகக் கண்காட்சி எல்லா ஊர்களிலும் நடத்துகிறார்கள். எந்த ஊர் சென்றாலும் பஸ்ஸை விட்டு இறங்கியதும் பஸ் ஸ்டாண்டில் தென்படுவது NCBH – இன் புத்தகக் கண்காட்சிதான். எல்லா இடத்திலும் புது ஆட்கள். நான் அங்கு புத்தகம் வாங்கச் செல்லும்போது நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். எனக்கு வாசிப்பு அனுபவத்தைத் தூண்டிய, முன்பு NCBH – இன் புத்தக கண்காட்சியில் வாசித்த அந்த நாட்கள் மறக்க இயலாத நாட்கள்.
 
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )












21 comments:

  1. நானும் கூட அம்புலிமாமா கண்ணன் நீங்களாக
    \கதைப் புத்தகங்கள் எனப் படித்தது
    நியூ செஞ்சுரி நிறுவனத்தாரின் புத்தகங்களைத்தான்
    அந்த வழவழப்பான தாள்களுடன் கூடிய
    புத்தகங்களும்,கதைகளுமே என்னிடம்
    வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது என்றால்
    அது மிகையாகாது
    பழைய நினைவுகளைக் கிளறிப் போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //இப்போது திருச்சி சிங்காரத் தோப்பில் இருக்கும் பர்மா பஜார் கடைகள் அப்போது கிடையாது. காலி இடத்தில் கொட்டகை போட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது.//

    மலரும் நினைவுகள் .... எனக்கும் கூட ;)))))

    ReplyDelete
  3. பதிவை படித்தவுடன் சிறு வயது ஞாபகம் வந்தது சார்... பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்... (த.ம. 2)

    ReplyDelete
  4. எல்லோர் மனதிலும் மறுபடி துளிர் விட வைத்த நினைவுகள் அழகுதான் .

    ReplyDelete
  5. Related links

    http://comicstamil.blogspot.in/2010/11/blog-post.html

    http://akotheeka.blogspot.in/2009/05/blog-post.html

    ReplyDelete
  6. அருமையான நினைவூட்டல் சார்! இப்பொழுது தான் மிகவும் ரசித்து புத்தகங்களுக்குள் மூழ்க ஆரம்பித்திருக்கிறேன்! விரும்பும் புத்தகங்களை வாங்கிட காலம் தேடிக்கொண்டிருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி Sir!

    ReplyDelete
  7. REPLY TO ….. // Ramani said... //

    //நானும் கூட அம்புலிமாமா கண்ணன் நீங்களாக \கதைப் புத்தகங்கள் எனப் படித்தது நியூ செஞ்சுரி நிறுவனத்தாரின் புத்தகங்களைத்தான் அந்த வழவழப்பான தாள்களுடன் கூடிய
    புத்தகங்களும்,கதைகளுமே என்னிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது//

    உண்மைதான். நகர்ப் புறங்களில் அடிக்கடி புத்தக கண்காட்சி நடத்தி மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதில் NCBH நிறுவனத்திற்கு அதிக பங்குண்டு. கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. REPLY TO ….. // வை.கோபாலகிருஷ்ணன் said... //
    VGK சார் என்ன இருந்தாலும் “மலரும் நினைவுகள்” என்றாலே உங்களைப் போல் எழுத வராது. திருச்சியைப் பற்றிய உங்கள் பதிவுகளே (ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா) சாட்சி. இப்பவும் நான் படித்த திருச்சி தேசியக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியைப் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் நீங்கள் அந்த பள்ளியைப் பற்றி எழுதிய (மீண்டும் பள்ளிக்குப் போகலாம்) என்ற தொடர் பதிவை மீண்டும் மீண்டும் படிபபதுண்டு. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. REPLY TO ….. திண்டுக்கல் தனபாலன் said...
    // பதிவை படித்தவுடன் சிறு வயது ஞாபகம் வந்தது சார்... //
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  10. REPLY TO …..// Sasi Kala said... //

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  11. REPLY TO …..// SIV said... //
    வருகைக்கு நன்றி! உங்கள் வலைப் பக்கம் விரைவில் வருகிறேன்

    ReplyDelete
  12. REPLY TO …..// யுவராணி தமிழரசன் said... //

    // அருமையான நினைவூட்டல் சார்! இப்பொழுது தான் மிகவும் ரசித்து புத்தகங்களுக்குள் மூழ்க ஆரம்பித்திருக்கிறேன்! விரும்பும் புத்தகங்களை வாங்கிட காலம் தேடிக்கொண்டிருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி Sir! //

    விரும்பும் புத்தங்களை வாங்கி வீட்டு நூலகத்தில் வைத்திடும் தங்கள் கனவு நிறைவேறட்டும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. //தி.தமிழ் இளங்கோ said...
    REPLY TO ….. // வை.கோபாலகிருஷ்ணன் said...//

    VGK சார் என்ன இருந்தாலும் “மலரும் நினைவுகள்” என்றாலே உங்களைப் போல் எழுத வராது. திருச்சியைப் பற்றிய உங்கள் பதிவுகளே (ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா) சாட்சி. இப்பவும் நான் படித்த திருச்சி தேசியக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியைப் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் நீங்கள் அந்த பள்ளியைப் பற்றி எழுதிய (மீண்டும் பள்ளிக்குப் போகலாம்) என்ற தொடர் பதிவை மீண்டும் மீண்டும் படிபபதுண்டு. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!//


    அன்புள்ள ஐயா, வணக்கம்.

    மிக்க நன்றி. தங்களின் இந்த பதிலே எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

    பெரியகடை வீதி செளக் ட்வுன்ஹால் பக்கம் அப்போதெல்லாம் நிறைய பழைய புத்தகக்கடைகள் இருந்தன.

    நானே படிக்கும் காலத்தில் ஒரு சில பாடப்புத்தகங்களைக் கூட அங்கு போய் பழைய விலைக்கு [பாதி விலைக்கு] வாங்கிய அனுபவம் உண்டு.

    இப்போது எல்லாமே மாறிப் போய் விட்டது. மாற்றங்கள் என்றும் மாறாதவை என்பது கண்கூடாகவே உணரமுடிகிறது..

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  14. REPLY TO ….. // வை.கோபாலகிருஷ்ணன் said... //
    எனக்காக மீண்டும் ஒருமுறை வந்து கருத்துரை சொன்ன VGK அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  15. இனிய பகிர்வு. நான் சிறுவனாக இருந்தபோது “சோவியத் நாடு” என்றொரு புத்தகம் வந்து கொண்டிருந்தது. அதில பல கதைகளைப் படித்து வியந்திருக்கிறேன். அந்த நினைவுகள் இப்போதும் நெஞ்சில் நீங்காது நிற்கின்றன.

    இந்த முறை திருச்சி வந்தபோது கூட திருச்சி பேருந்து நிலையத்தில் அவர்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது - சில புத்தகங்கள் வாங்கினேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? :)

    இனிய பகிர்வு. தொடர்கிறேன். இனி தொடர்ந்து வருவேன்.

    ReplyDelete
  16. REPLY TO ….. // வெங்கட் நாகராஜ் said... //
    // இனிய பகிர்வு. தொடர்கிறேன். இனி தொடர்ந்து வருவேன். //
    அன்பிற்கு நன்றி! உங்கள் பதிவுகளை தமிழ் மணத்தில படித்து இருக்கிறேன். ஒரு முறை மட்டும் உங்கள் பதிவில் கருத்துரை சொன்னதாக நினைவு. இனி தொடர்ந்து சந்திப்போம், பதிவுகள் உதவியில்.

    ReplyDelete
  17. புத்தக வாசிப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுசின் பங்களிப்பு அதிகம்.. நானும் அதில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  18. REPLY TO ….// ரிஷபன் said... //
    எனது எண்ணங்களுக்கு கருத்துரை சொன்ன எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > வழிப்போக்கன் said...

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete