Thursday, 9 November 2017

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பற்றிய பாடல்.ஆகஸ்ட் 15,1947 – இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், பிரிட்டிஷ் இந்தியாவில், நேற்று வரை இந்தியன், இந்திய சுதந்திரம் என்பதே பேச்சு எனது மூச்சு என்றேல்லாம் உணர்வுப் பூர்வமாக இருந்தவர்கள், இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டதும், நான் இந்து நீ முஸ்லிம் என்றும், நான் முஸ்லிம் நீ இந்து என்றும் மாறியே போனார்கள். ஒரு தாய் மக்களாக இருந்தவர்கள் ஒரு பொழுதிற்குள் இந்தியன் என்றும் பாகிஸ்தானி என்றும் பிரிந்து போனார்கள். நீ இந்தியாவிற்கு போய் விடு; நீ பாகிஸ்தானுக்குப் போய் விடு என்று பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடிழந்து, நாடிழந்து அகதிகள் ஆனார்கள்.

தேசப்பிரிவினைக்குப் பின்

அன்று நாடு இருந்த இருப்பில் இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி மகாத்மா காந்தி ‘நவகாளி யாத்திரை’ சென்றார். இன்றும் மத வெறியர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று நம்மிடையே மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் இல்லை; உண்மையான தேசபக்தர்களும் இல்லை. மக்களிடம் ஒற்றுமையும் இல்லை.

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவர் குல்தீப் நய்யார்.(Kuldip Nayar) ஒன்றுபட்ட பிரிட்டிஷ் இந்தியாவில், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் (Sialkot, Pakistan) பிறந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் டெல்லியில் குடியேறியவர். அவர் தன்னுடைய ‘ஸ்கூப்’ (Scoop) என்ற நூலில் ‘தேசப் பிரிவினையின் விளைவுகள்’ என்ற தலைப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

// நாடு பிரிக்கப்பட்டதற்குப் பின் பெரும் அளவில் மக்கள் இடம் பெயர்வதைப் பார்த்த முகமது அலி ஜின்னாவின் கடற்படை அதிகாரி அதிர்ந்து போனார். இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

யாரும் இதை விரும்பவும் இல்லை. ஆனால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதும் இந்துக்கள் இந்தியாவை நோக்கி வருவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த அதிகாரியின் உறவினர் கூடஎங்கோ மாட்டிக் கொண்டிருந்ததால், அவர் மிகவும் கவலையடைந்திருந்தார். ஏன் இந்த இடப்பெயர்ச்சி?

இதைத் தவிர்க்க முடியாதா? எவ்வளவு கொலைகள்? எத்தனை லட்சம் பேருக்கு இதனால் துயரம்? யாரைக் குறை சொல்வது? // (இந்நூல் பக்கம்.49)
… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … ……
தவறு யார் மீது இருந்தாலும் சரி, எல்லையின் இரு புறங்களிலும் அந்தச் சில வாரங்களில் நடந்த பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பல தலைமுறைகளுக்குச் சீரழித்தன. எல்லாக் கட்டங்களிலும் இந்த நாடுகள் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டன. ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டின் மீது இருந்த அச்சமும் அவநம்பிக்கையும் சாதாரண விஷயங்களையும் பூதாகரமாக்கின // இந்நூல் பக்கம்.51)

( ஸ்கூப்’ (Scoop), ஆசிரியர்: குல்தீப் நய்யார் ( தமிழாக்கம்: யது நந்தன், வெளியீடு: மதுரை பிரஸ், சென்னை - இந்தியாவின் சமககால வரலாற்றைப் படிக்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது)

நாஸ்திகன் - படப்பாடல்

I.S.ஜோஹர்(I.S.Johar) எழுதித் தயாரித்த, நாஸ்திக் (Nastik) என்ற திரைப்படம் 1954 இல் இந்தியில் வெளிவந்துள்ளது. இது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘நாஸ்திகன்’ என்ற பெயரில் 1955 இல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மக்கள் இடப்பெயர்ச்சி பற்றிய உருக்கமான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த பாடலில் உள்ள, மக்கள் கூட்டம் கூட்டமாக நடை பயணமாகவும், மாட்டு வண்டிகளிலும், ரெயிலிலும் இடம் பெயரும் காட்சிகள் மனதை நொறுக்கும்.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ‘நாஸ்திகன்’ படத்திற்கு, இந்த பாடலை எழுதியவர் கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம். பாடியவர்: திருச்சி லோகநாதன். இசை: C.ராமச்சந்திரா. இந்த பாடலை யூடியூப்பில் கேட்டு மனம் நொந்து போயிருக்கிறேன்.

பாடலைக் கண்டு கேட்டிட கீழே உள்ள திரையை சொடுக்கவும். 
நன்றி: Youtube ( cofiboardrajamohd & Kandasamy T S )

மா நிலம் மேல் சில மானிடரால்,
என்ன மாறுதல் பாரைய்யா
மா நிலம் மேல் சில மானிடரால்,
என்ன மாறுதல் பாரைய்யா
மனிதன் மாறியதேன் ஐயா,  
மனிதன் மாறியதேன் ஐயா

வானத்தின் நிலவில் ஆதவன் திசையில்
மாறுதல் ஏதைய்யா
மனிதன் மாறியதேன் ஐயா ,
மனிதன் மாறியதேன் ஐயா .

மண்ணில் பலவித பிரிவினையாலே ,
மனிதன் மிருகமாய் மாறுவதினாலே
என்னே கொடுமை எங்கும் இந்நாளே
ஈனர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அன்பையும் பண்பையும்
தன்னலத்தால் பலி ஆக்கிடும் பேதையாய்
மனிதன் மாறியதேன் ஐயா ,
மனிதன் மாறியதேன் ஐயா .     …. (மா நிலம் மேல் சில மானிடரால்) 

ஈஸ்வரன் அல்லா தாசர்கள் இன்றோ
பூசனை செய்வது  நாசத்தை அன்றோ
தேசம் சுடுகாடு ஆவது நன்றோ
தெய்வத்தின் பேரால் கொல்வதும் உண்டோ
நேசம் மறந்து ஆசை மிகுந்து  மோசடி புரிபவனாய்
மனிதன் மாறியதேன் ஐயா ,
மனிதன் மாறியதேன் ஐயா .  …. …. (மா நிலம் மேல் சில மானிடரால்) 

அன்பே ஆண்டவன் என்று நினைந்தால்
அனைவரும் ஓர் குலமாகவே வாழ்ந்தால்
தணலாய் இங்கே வீடுகள் விழுமா
தாயின் பிரிவால் சேய்கள் அழுமா
சாந்தி சாந்தி எனும் காந்தியின் குரலும்
ஓய்ந்திடச் செய்பவனாய்
மனிதன் மாறியதேன் ஐயா
மனிதன் மாறியதேன் ஐயா ….. …. (மா நிலம் மேல் சில மானிடரால்) 

29 comments:

 1. இதே பிரிவினையை ஒட்டி குல்சார் எழுதிய "ராவி நதிக்கரையினிலே" என்கிறபதற வைக்கும் சிறுகதையை சென்ற வருட தினமணி தீபாவளி மலரில் பிரசுரித்திருந்தார்கள். அதை எங்கள் ப்ளாக்கிலும் பகிர்ந்திருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள குல்சார் எழுதிய "ராவி நதிக்கரையினிலே" என்ற சிறுகதையைப் படித்து பார்க்கிறேன்.

   Delete
 2. //ன்றும் மத வெறியர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று நம்மிடையே காந்தியும், ஜவஹர்லால் நேருவும் இல்லை; உண்மையான தேசபக்தர்களும் இல்லை. மக்களிடம் ஒற்றுமையும் இல்லை.// வருத்தமாக இருக்கிறது...
  //அன்பே ஆண்டவன் என்று நினைந்தால்
  அனைவரும் ஓர் குலமாகவே வாழ்ந்தால்
  தணலாய் இங்கே வீடுகள் விழுமா
  தாயின் பிரிவால் சேய்கள் அழுமா// தீர்வு!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம். இந்த பதிவிலுள்ள கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் அவர்களது பாடல் வரிகளையே தீர்வாக சொல்லியது சிறப்பு. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

   Delete
 3. நான் பயீற்சியில் அம்பர்நாதில் இருந்த போது என்னுடன் பயிற்சியில் இருந்த ஒரு சர்தார்ஜி இப்படிப் பிரிவினையின் போது குடும்பத்தைப்பிரிய நேர்ந்தவர். பட்ட இன்னல்களைக் கதைகதையாய்க் கூறுவார் வெகு நாட்கள் தேடலுக்குப் பின் தனது உறவினர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்தார் பெங்களூரிலும் பாம்பே அருகே உல்லாஸ் நகரிலும் இம்மாதிரி இடம்பெயர்ந்தவர்களின் முகாம்கள் இருக்கின்றன சிந்தி காலனி என்று பெயர்

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து அகதிகள் மற்றும் அவர்களது வம்சாவளியினர் இப்போது எங்கு இருப்பார்கள் என்று யோசித்தபடியே இந்த பதிவினை எழுதினேன்.நீங்கள் அளித்த இந்த பின்னூட்டம் அதற்கு விடை தந்து விட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும், இதுபோல் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

   Delete
 4. அறியாத பல தகவல்கள் நண்பரே பாடல் நன்று

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. பாடல் மிக அருமை. இப்போதுதான் முதன் முதலாகக் கேட்கிறேன்.

  தேசப் பிரிவினை நிகழ்ச்சிகளைப் படிக்காமல் இருப்பதே நல்லது. அவ்வளவு துயரமான நிகழ்ச்சிகள். பாகிஸ்தான் பிறக்கக் காரணமான முகமது அலி ஜின்னாவுடன், அவருடைய வாரிசுகளே செல்லவில்லை, அவர்கள் பாம்பேயில் தங்கிவிட்டார்கள்.

  உங்கள் இடுகை சொல்லவரும் செய்தி புரிகிறது. பிரிவினை, அது மன பிரிவினையானாலும், அது விளைவிக்கும் செயல் கொடுமையானது.

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

   // பாகிஸ்தான் பிறக்கக் காரணமான முகமது அலி ஜின்னாவுடன், அவருடைய வாரிசுகளே செல்லவில்லை, அவர்கள் பாம்பேயில் தங்கிவிட்டார்கள். //

   என்ற செய்தி நான் அறியாத ஒன்று. மேலே குறிப்பிட்டுள்ள பாடலின் இந்தி மூலத்தைக் கண்டு கேட்டிட https://www.youtube.com/watch?v=1_5LLtxAB4I என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.

   Delete
 6. வணக்கம்
  ஐயா

  அறியாத தகவல்கள் ஐயா சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி பாடல் மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -த.ரூபன்-

  ReplyDelete
 7. சிந்திக்கவும் வருந்தவும் வைத்த பதிவு.//அன்பே ஆண்டவன் என்று நினைந்தால்
  அனைவரும் ஓர் குலமாகவே வாழ்ந்தால்
  தணலாய் இங்கே வீடுகள் விழுமா// ஒரு கணம் மனம் திடுக்கிட்டது.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 8. .கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியன் மணியன் அவர்களின் கருத்தாழம் மிக்க வரிகளை திருச்சி லோகநாதன் குரலில் கேட்டபோது, ஒன்றாக இருந்த நாம், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகி பிரிந்து இன்னும் சண்டை போட்டுக்கொண்டு இருக்க வேண்டியுள்ளதே என்பதை நினைக்கும்போது வருத்தம் ஏற்படுகிறது. இதுவரை கேட்காத பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.நேரம் கிடைக்கும்போது இந்த பாடலின் இந்தி மூலத்தை https://www.youtube.com/watch?v=1_5LLtxAB4I என்ற இணைய முகவரியில் காணுங்கள்.

   Delete
  2. இந்த பாடலின் இந்தி மூலத்தையும் கேட்டேன். அதுவும் உள்ளத்தை தொட்டது. பாடலுக்கான இணைப்பைத் தந்தமைக்கு நன்றி!

   Delete
 9. பாடல் முதல் முறையாக கேட்கிறேன். வடக்கில் இப்படி வந்த மக்களின் சந்ததிகளைத் தெரியும். அவர்கள் மூலம் பல சோகக் கதைகளைக் கேட்டதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   // வடக்கில் இப்படி வந்த மக்களின் சந்ததிகளைத் தெரியும். அவர்கள் மூலம் பல சோகக் கதைகளைக் கேட்டதுண்டு. //

   இந்த சோகக்கதைகளை, முடிந்தால் படங்களோடு உங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாமே?

   Delete
 10. இதுவரை அறிந்திராத, ஆனால் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி. பாடலைக் கேட்டேன். ஓர் அரிய வாய்ப்பினைத் தந்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 11. அறியாத தகவல் ! நன்றி இளங்கோ!

  ReplyDelete
 12. பிரிவினையின் போது அங்கிருந்து இந்தியா வந்த அகதிகள் பலரும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பார்க்கலாம். அவர்கள் சொல்லும் சோகக் கதைகள் கண்களில் ரத்தத்தை வரவழைக்கும். பலருக்குக் குடும்பம் அங்கே, அவர்கள் மட்டும் இங்கே! சில குடும்பங்களின் தலைவன் வந்திருக்க மாட்டான். கை, கால்கள் வெட்டப்பட்டு வந்தவர்கள் பலர்! பல லட்சம்(அப்போதைய நிலவரப்படி) பெறுமான சொத்துக்களை இழந்தவர்கள்! :( இந்தப் பாடலை ஹிந்தியிலே கேட்டிருக்கேன். கண்ணீர் வரும்! மனைவி அங்கே கணவன் இங்கே! கணவன் அங்கே , மனைவி, குழந்தைகள் இங்கே! இப்படிப்பலரையும் பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களின் இந்த கருத்துரையே நெஞ்சை கலங்க வைக்கிறது. அவர்கள் செய்த பாவம்தான் என்ன? விடைதான் தெரியவில்லை.

   Delete
 13. இதுவரை கேட்காத பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி! பிரிவினைக்கு வித்திட்டவர்கள்தான் இன்று அதிகம் கஷ்டத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறார்கள். வேதனையை மனதில் இழையோட செய்தன பாடல் வரிகள்...
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete