’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’
– என்ற கதையாக, இருக்கிற பிரச்சினைகளை யெல்லாம் விட்டு விட்டு, இப்போது ’சசிகலா முதல்வர்
ஆகலாமா?” என்று இருபக்கமும் விவாதம் நடைபெறுகிறது. தற்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களின்
திடீர் தியானப் புரட்சியும், பேட்டிகளும் தமிழக அரசியலை, இன்னும் சூடாக்கி விட்டது.
சசிகலா நடராஜனுக்கு ஆதரவாக அப்போலோ புகழ் சி.ஆர் சரஸ்வதி, வளர்மதி போன்றவர்கள் தங்களுக்கு
கொடுக்கப்பட்ட பணியை செய்ய, டீவி காட்சிகளில் வந்து விட்டார்கள். பழ.நெடுமாறன், தோழர்
தா.பாண்டியன், போன்றவர்களும் தங்களது விசுவாசக் குரலை ஒலிக்கத் தொடங்கி விட்டார்கள்.
எதிர்க்கட்சி என்ற முறையில் ஸ்டாலின் போன்றவர்கள் தங்களது அரசியலை தொடங்கி விட்டார்கள்.
மக்களும் பணப் பிரச்சினை, ரேஷன் பிரச்சினை, ஆதார் குழப்பங்கள், பீட்டாவுக்கு தடை, மெரினா
தாக்குதல் போன்றவற்றை மறந்து விட்டு நாடகமேடைப் பக்கம் வேடிக்கை பார்க்க வந்து விட்டதில்,
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி கட்சியினருக்கு, அப்பாடா என்று ஒரு ஆசுவாச
பெருமூச்சு.
எங்கே தவறு?
இந்திய ஜனநாயக அரசியல் முறைப்படி, யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு
வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம், பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அடிப்படையில் அந்த கட்சியினரால்
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள்,, முதல்வரை
தேர்ந்தெடுக்கலாம் என்று அரசியல் சாசனம் சொல்வதால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட
சசிகலா முதல்வர் பதவி கோருகிறார். அவர் அந்த பதவிக்கு தகுதியானவரா இல்லையா என்பதற்கு
இங்கு எந்த அளவுகோலும் இல்லை.
சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போதே, பார்வையாளராக வந்த சசிகலாவை,
சபாநாயகர் ஆசனத்தில் உட்காரவைத்து விட்டு, ’நான் அப்படித்தான் செய்வேன்? உங்களால் என்ன
செய்ய முடியும்?” என்று மற்றவர்களை ஒரு பார்வை பார்த்தவர் ஜெயலலிதா.
ஓ.பி.எஸ்சின் கலகக்குரல்
நெடுநாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், மனதுக்குள் இருந்த மன அழுத்தத்தையும்
மெரினாவில் போட்டு உடைத்து விட்டார் ஓ.பி.எஸ். இக்கட்டான சமயங்களில் மட்டும், தேவைப்
படும்போது தன்னை பயன்படுத்திக் கொண்டதையும், இப்போது அவமானப்பட்டதையும் அவரால் தாங்கிக்
கொள்ள முடியாததன் வெளிப்பாடே அவருடைய காலங்கடந்த திடீர்க் கலகம். சூழ்ச்சி அரசியலில்
இதெல்லாம் சகஜம். தி.மு.கவை விட்டு எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது இருந்த நிலைமைதான் இப்போது
அ.தி.மு.கவிலும் உண்டாகி இருக்கிறது. ஆனால் ஒ.பி.எஸ் அவர்களை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட முடியாது.
வி.கே.சசிகலா என்ற சின்னம்மா தோற்றத்திலும் உடை அலங்காரத்திலும் தன்னை ஜெயலலிதாவாக
காட்டிக் கொள்வதை நிறையபேர் ரசிக்கவில்லை. அவர் சசிகலாவாகவே இருக்கட்டும். மெரினா புரட்சியில்,
பல்வேறு பிரச்சினைகளும் ‘ஜல்லிக்கட்டு’ என்ற மையப் புள்ளியில் குவிந்ததைப் போன்று,
சசிகலாவுக்கு எதிரான எல்லா எதிர்ப்புக் குரல்களும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில்
ஒன்று சேர்ந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதும்,
இரட்டை இலை யாருக்கு என்பதும் ஒரு பொதுத்தேர்தல் வந்தால்தான் தெரியும்.
கதைகளும் கற்பனைகளும்
நமது நாட்டில் மன்னர் ஆட்சியின்போது சாமான்யன் கேள்வி கேட்கமுடியாது,
அரசாள முடியாது. ஆனால் சாமான்யன் அரசனை கேள்வி கேட்பது போலவும், அரசன் சாதாரண மக்களிடம்
கருத்து கேட்பது போலவும் கதைகள் உண்டு. அரச வம்சத்தில் வாரிசு இல்லாத நிலையில். பட்டத்து
யானை கையில் ஒரு மாலையைக் கொடுத்து வீதிக்கு அனுப்புவார்களாம்: அந்த பட்டத்து யானை
யார் கழுத்தில் மாலை போடுகிறதோ, அவனை ராஜாவாக்கி விடுவார்களாம் இப்படியும் ஒரு கதை.
இதன் அடிப்படையில், கரிகால் சோழன் மன்னன் ஆனான் என்றும் ஒரு கதை உண்டு. (நிச்சயம் அந்த
யானையை சாதாரண மக்கள் இருக்கும் தெருக்களின் பக்கம் அழைத்து வந்து இருக்க மாட்டார்கள்
எனலாம்)
இதையெல்லாம் விட, மேலாக, காட்டுக்குப் போன ராமன் வரும்வரை, அவனுடைய
பாதுகைகளை அரியாசனத்தில் வைத்து பரதன் நாடாண்டதாக இராமாயணத்தில், ஒரு கதை உண்டு. இன்றும்
‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற கதாகலாட்சேபம் விமரிசையாகத்தான் சொல்லப் படுகிறது.
சரஸ்வதி சபதம்
சில புராணக் கதைகளையும், மக்கள் மத்தியில் நிலவிய சில நாடோடிக்
கதைகளையும், ஒன்றாகப் பிசைந்து, தனது கற்பனா சக்தியின் மூலம், புராண திரைப்படக் கதைகளை
தயாரித்து இயக்கி வெற்றி கண்டவர் A.P.நாகராஜன் அவர்கள். அந்தகாலத்து ஊர் திருவிழாக்களில்
இவரது புராணப்பட வசனங்களை, சவுண்ட் சர்வீஸ் அபிமானிகள் லவுட் ஸ்பீக்கரில் ஒலிபரப்பாமல்
இருக்க மாட்டார்கள்.
மேலே சொன்ன அம்சங்களோடு வெற்றிகண்ட ஒரு தமிழ்த் திரைப்படம்தான்
A.P.நாகராஜனின் ‘சரஸ்வதி சபதம்’. இந்த படத்தின் கதைப்படி, ”தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா,
இங்கு நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா” என்று பாடிவந்த பிச்சைக்காரப் பெண் ஒருத்தி,
யானை மாலை போட்டதால் பட்டத்து ராணி ஆகிறாள். பட்டத்து ராணி ஆனதும், அவள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்
இந்த கால அரசியலை நினைவூட்டும். நிறையபேருக்கு இந்த படமும், கதையும் அத்துப்படி என்பதால்
கதையை இங்கு விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. இந்த வேடத்தில் நடித்து இருப்பவர் நடிகை
கே.ஆர் .விஜயா அவர்கள்.
சட்ட திருத்தம் தேவை
எனவே, ஒரு பிரதமராகவோ அல்லது முதல் அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்
படும்போது அவர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று, (எம்.பி அல்லது எம்.எல்.ஏ - என்று)
தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருத்தல் அவசியம் என்று அரசியல் சட்ட திருத்தம் செய்யாதவரை,
இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.
இப்போது நடக்கும் அரசியல் செய்திகளைப் பார்க்கும்போது , சட்டசபையை
கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கு நல்லது என்று தோன்றுகிறது.